பழநி - 0143. கனமாய் எழுந்து





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கனமாய் எழுந்து (பழநி)

முருகா!
மாதர் ஆசையில் உழன்று, மதி கெட்டு, நிதி கெட்டு அழியாமல்,
சேம நிதியாகிய உனையே புகழ்வேன்.

தனனா தனந்தனத் தனனா தனந்தனத்
     தனனா தனந்தனத் ...... தனதான


கனமா யெழுந்துவெற் பெனவே யுயர்ந்துகற்
     புரமா ரணந்துளுத் ......      திடுமானார்

கனிவா யுகந்துசிக் கெனவே யணைந்துகைப்
     பொருளே யிழந்துவிட் ......      டயர்வாயே

மனமே தளர்ந்துவிக் கலுமே யெழுந்துமட்
     டறவே யுலந்துசுக் ......          கதுபோலே

வசமே யழிந்துவுக் கிடுநோய் துறந்துவைப்
     பெனவே நினைந்துனைப் ......    புகழ்வேனோ

புனவே டர்தந்தபொற் குறமா துஇன்புறப்
     புணர்கா தல்கொண்டஅக் ......    கிழவோனே

புனலே ழுமங்கவெற் பொடுசூர் சிரங்கள்பொட்
     டெழவே லெறிந்தவுக் ......      கிரவீரா

தினமே வுகுங்குமப் புயவா சகிண்கிணிச்
     சிறுகீ தசெம்பதத் ......       தருளாளா

சிவலோ கசங்கரிக் கிறைபால பைங்கயத்
     திருவா வினன்குடிப் ......        பெருமாளே.


பதம் பிரித்தல்


கனமாய் எழுந்து, வெற்பு எனவே உயர்ந்து, கற்-
     புர, மாரணம் துளுத் ......         திடு மானார்,

கனிவாய் உகந்து, சிக்கு எனவே அணைந்து, கைப்
     பொருளே இழந்து விட்டு ......     அயர்வாயே,

மனமே தளர்ந்து, விக்கலுமே எழுந்து, மட்டு
     அறவே உலந்து சுக்கு ......       அதுபோலே,

வசமே அழிந்து, உக்கிடு நோய் துறந்து, வைப்பு
     எனவே நினைந்து உனைப் ...... புகழ்வேனோ?

புன வேடர் தந்த பொன் குறமாது இன்புறப்
     புணர் காதல் கொண்ட அக் ...... கிழவோனே!

புனல் ஏழும் மங்க, வெற்பொடு சூர் சிரங்கள் பொட்டு
     எழ வேல் எறிந்த உக்- ...... கிர வீரா!

தினமேவு குங்குமப் புயவாச! கிண்கிணிச்
     சிறு கீத செம்பதத்து ......        அருளாளா

சிவலோக சங்கரிக்கு இறை பால! பைங்கயத்
     திருவாவினன்குடிப் ......         பெருமாளே.


பதவுரை

      புனவேடர் தந்த --- தினைப்புனைத்தில் உள்ள வேடர்கள் கொடுத்த,

     குறமாது இன்பு உற --- வள்ளியம்மை இன்பமடையுமாறு,

     புணர் காதல் கொண்ட --- அவரைச் சேர்வதற்குக் காதல் கொண்ட,

     அக் கிழவோனே --- அந்தக் கிழ வடிவம் பூண்டவரே!

      புனல் ஏழும் மங்க --- எழு கடல்களும் வற்றும்படியும்,

     வெற்பொடு சூர் சிரங்கள் பொட்டு எழ --- மலையோடு சூரபன்மனுடைய தலைகள் பொடிபடுமாறும்,

     வேல் எறிந்த --- வேலாயுதத்தை விடுத்தருளிய,

     உக்கிர வீரா --- ஊக்கமுடைய வீரரே!

      தின மேவு குங்குமம் --- நாள்தோறும் விரும்பக்கூடிய குங்குமப் பூ முதலிய வாசனகைள் பூசப்பெற்ற,

     புயவாச --- தோள்களில் மணம் கொண்டவரே!

     கிண்கிணி சிறு கீத --- கிண்கிணிகளில் மெல்லிய இசையுடன் கூடிய,

     செம்பதத்து அருளாளா --- செவ்விய திருவடிகளையுடைய திருவருள் தலைவரே!

      சிவலோக சங்கரிக்கு இறைபால --- சிவலோகத்தில் உள்ள உமாதேவியின் பதியாகிய சிவபெருமானுடைய திருக்குமாரரே!

      பைங்கய --- பசிய நிலைகளையுடைய,

     திருவாவினன்குடி --- திருவாவினன்குடியில் எழுந்தருளியுள்ள

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

      கனமாய் எழுந்து வெற்பு எனவே உயர்ந்து --- கனத்துடன் எழுந்து மலைபோல் உயாந்து,

     கற்புர --- பச்சைக் கர்ப்பூரம் முதலியன பூசப்பட்டு,

     மாரணம் துளுத்திடு மானோர் --- மரணத்தைத் தரும் மந்திர வித்தை கொண்டது போலச் செழிப்புடன் வளர்ந்துள்ள, தனங்களையுடைய பொது மாதர்களின்,

     கனிவாய் உகந்து --- கொவ்வைப் பழம் போல் சிவந்துள்ள  வாயை மகிழ்ந்து,

     சிக்கெனவே அணைந்து --- விடாது உறுதியாகத் தழுவி,

     கைப்பொருளே இழந்துவிட்டு --- கையிலுள்ள பணத்தை இழந்துவிட்டு

     அயர்வாயே --- தளர்ச்சியுற்று,

     மனமே தளர்ந்து --- மனம் வாடி,

     விக்கலுமே எழுந்து --- விக்கல் கொண்டு,

     மட்டு அறவே உலர்ந்து --- அளவின்றி உடல் உலர்ந்து,

     சுக்கு அது போலே --- சுக்குப் போலாகி,

     வசமே அழிந்து உக்கிடு நோய் துறந்து --- என் வசம் அழிந்து மெலிகின்ற ஆசை நோயை அகற்றி,

     வைப்பு எனவே நினைந்து --- தேவரீரைச் சேமநிதி என்று கருதி,

     உன்னை புகழ்வேனோ --- உம்மை அடியேன் புகழ மாட்டேனோ?

பொழிப்புரை


         தினைப்புனத்தில் வாழ்கின்ற வேடர்கள் தந்த வள்ளியம்மை இன்புறுமாறு தழுவுவதற்குக் காதல் கொண்ட கிழ வடிவு பூண்டவரே!

         ஏழு கடல்கள் வற்றவும் மலைகளும் சூரன் தலையும் தூளாகவும் வேலாயுதத்தை விடுத்தருளிய ஊக்கமுடைய வீரமூர்த்தியே! தினமும் விரும்புகின்ற குங்குமப்பூ முதலிய வாசனையுடைய திருப்புயத்தை உடையவரே!

         சிறு சதங்கைகளின் மெல்லிய இசையுடன் கூடிய செம்மையான திருவடி உடைய அருளாளரே!

         சிவலோகத்தில் உள்ள பார்வதி தேவியின் பதியாகிய சிவபெருமானுடைய திருக்குமாரரே!

         பசுமை தங்கிய குளங்கள் சூழ்ந்த திருவாவினன்குடியில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!

         கனமாக எழுந்து மலைபோல் உயர்ந்து பச்சைக்கர்ப்பூரம் பூசப்பெற்று, மரணத்தைச் செய்யும் மந்திரை வித்தையை யொத்து மயக்கும் கொங்கைகளை உடைய பொதுமாதர்களின், கொவ்வைக்கனி போன்ற வாயை மகிழ்ந்து உறுதியாக விடாது தழுவி, கைப்பணம் முழுவதும் இழந்து வாடி மனம் தளர்ந்து விக்கலுற்று, அளவின்றி சுக்குபோல் உலர்ந்து, நிலை கலங்கி, அழிகின்ற ஆசை நோயைக் களைந்து, நீரே சேம நிதி என்று நினைந்து, உம்மை அடியேன் புகழ மாட்டேனோ?


விரிவுரை

கனமாய் எழுந்து...............மானார் ---

ஆடவர் மனத்தை ஈர்த்து ஆசைக்கு அடிமையாக்குமாறு பருத்தும் உயர்ந்தும் உள்ள தனங்களை உடைய பொதுமாதர். மரணம்-மரணத்தைத் தரும் மந்திரவித்தை.

சிக்கெனவே அணைந்து ---

அருள் நாட்டம் உள்ளவர்கள் இறைவன் திருவடியைச் சிக்கெனப் பிடித்து உய்வார்கள்.

    சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே”    ---  திருவாசகம்

இருள் நாட்டமுடைய காமுகர்கள் மாதர்களை அங்ஙனம் சிக்கெனப் பற்றி அழிந்து கெடுவார்கள். அருள் கெடுவதுடன் பொருளும் கெட்டுப் பரதவிப்பார்கள்.

மனமே தளர்ந்து விக்கலுமே எழுந்து ---

உடல் தளர்ந்ததோடு உள்ளமும் தளர்ந்து, விக்கலை உற்று சுக்கு போல் உலர்ந்து, அறிவற்று பொறியற்று மெலிந்து நலிந்து கெடுவார்கள். அந்தோ! என்னே பேதைமை! சகல கேடுகளுக்கும் மூலகாரணம் பெண்ணாசை.

பாவமும் பழியும் நல்கும் பல்வகைப் புகழ் அறங்கள்
யாவையும் அழிக்கும் எய்தும் இன்னலும் அதனால் எய்தும்
நோவும் நன்மரபுஞ் செய்யும் நோன்புநல் ஒழுக்க மேன்மை
சாவும் எண்ணுறாமல் நிற்கும் தயங்குபுன் காமம் என்பார்.

வைப்பு எனவே நினைந்து உனைப் புகழ்வேனா? ---

இறைவன், எய்ப்பினில் வைப்பு. இளைத்தபோது உதவும் சேமநிதி. எடுக்க எடுக்கக் குறையாது உதவும் உலவாக்கிழி. வேண்டுவன எல்லாம் தரும் சிந்தாமணி. இறைவனை அடைந்தோர் குறைவிலா நிறைவு பெறுவர். தருணத்தில் உதவும் தயாநிதியாகப் பரம கருணாநிதியைப் புகழ்தல் வேண்டும். அவனைப் புகழ்ந்தவர்கள், உலகில் பொன்றாத புகழைப் பெறுவார்கள். அவர்கள் பூதவுடல் மாய்ந்தும், மாயாதவர்களாகிய நிலமிசை நீடு வாழ்வார்கள்.

"வைத்த நிதியே" மணியே என்று வருந்தி, தம்
சித்தம் நைந்து, சிவனே என்பார் சிந்தையார்,
கொத்துஆர் சந்தும் குரவும் வாரிக் கொணர்ந்து உந்து
முத்தாறு உடைய முதல்வர் கோயில் முதுகுன்றே.      --- திருஞானசம்பந்தர்.

"வைத்த பொருள்" நமக்குஆம் என்று சொல்லி மனத்து அடைத்து,
சித்தம் ஒருக்கி, சிவாயநம என்று இருக்கின் அல்லால்,
மொய்த்த கதிர்மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர்
அத்தன் அருள்பெறல் ஆமோ? அறிவு இலாப் பேதைநெஞ்சே. --- அப்பர்.

பல் அடியார் பணிக்குப் பரிவானை,
         பாடி ஆடும் பத்தர்க்கு அன்பு உடையானை,
செல் அடியே நெருங்கித் திறம்பாது
         சேர்ந்தவர்க்கே சித்தி முத்தி செய்வானை,
"நல் அடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை"
         நான்உறு குறை அறிந்து அருள் புரிவானை.
வல் அடியார் மனத்து இச்சை உளானை,
         வலிவலம் தனில் வந்துகண் டேனே.          --- சுந்தரர்.

"காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க"....    --- திருவாசகம்.

தனித்துணை நீ நிற்க, யான் தருக்கித் தலையால் நடந்த
வினைத்துணை யேனை விடுதிகண்டாய், வினையேனுடைய
மனத்துணை யே,என்தன் வாழ்முதலே, எனக்கு "எய்ப்பில் வைப்பே!"
தினைத்துணை யேனும் பொறேன், துயர்ஆக்கையின் திண்வலையே.
                                                                         --- திருவாசகம்.

"உற்ற இடத்தில் உதவநமக்கு
     உடையோர் வைத்த வைப்பு" அதனை,
கற்ற மனத்தில் புகும் கருணைக்
     கனியை விடைமேல் காட்டுவிக்கும்,
அற்றம் அடைந்த நெஞ்சே! நீ
     அஞ்சேல், என்மேல் ஆணைகண்டாய்,
செற்றம் அகற்றித் திறல்அளிக்கும்,
     சிவாயநம என்று இடு நீறே.                 --- திருவருட்பா.

உலக வாழ்க்கையின் உழலும் என் நெஞ்சம்
     ஒன்று கோடியாய் சென்று சென்று உலைந்தே,
கலக மாயையில் கவிழ்க்கின்றது, எளியேன்
     கலுழ்கின்றேன், செயக்கடவது ஒன்று அறியேன்
"இலகும் அன்பர் தம் எய்ப்பினில் வைப்பே"
     இன்ப வெள்ளமே, என்னுடை உயிரே,
திலகமே, திரு ஒற்றி எம் உறவே,
     செல்வமே, பரசிவ பரம்பொருளே.         --- திருவருட்பா.


கிழவோனே:-

கிழவன்-உரியவன். வள்ளிக்கு உரியவன். வள்ளிப்பிராட்டியை எம்பெருமான் கிழவடிவு காட்டிச் சென்று மழவடிவுடன் மணந்தான்.

 மறவர் பொருப்பில் ஒருத்தி பொருட்டு,அந்நாள் இள
வடிவம் முழுக்க நரைத்த விருத்த வேதியன்.      ---  பூதவேதாள வகுப்பு.

அருளாளா:-

இறைவனுடைய அருள் அகில உலகங்களை ஆளுகின்றது. இறைவன் அவ்வருளை ஆளுகின்றனன்: அதனால் அப்பரமனை அருளாளன் என்று ஆன்றோர் புகழ்வர்.

    பித்தா பிறைசூடி பெருமாளே அருளாளா”    --- தேவாரம்

                                             கருத்துரை

         வள்ளிமணவாளா! சூரனை வென்ற வீரா! அருளாளா! ஆவினன்குடி அப்பா! மாதராசை நீங்கி நின்னை அடியேன் புகழ்வேன்.


No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...