அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
பொற் பதத்தினை
(திருத்தணிகை)
திருத்தணிகை வேலா!
பிறவித் துன்பத்தை அகற்றி,
முத்தி நலம் அருளும் நாள்
என்று வரும்?
தத்த
தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த
தத்த தத்த தத்த தத்த ...... தனதான
பொற்ப
தத்தி னைத்து தித்து நற்ப தத்தி லுற்ற பத்தர்
பொற்பு ரைத்து நெக்கு ருக்க ...... அறியாதே
புத்த
கப்பி தற்றை விட்டு வித்த கத்து னைத்து திக்க
புத்தி யிற்க லக்க மற்று ...... நினையாதே
முற்ப
டத்த லத்து தித்து பிற்ப டைத்த கிர்த்ய முற்றி
முற்க டைத்த வித்து நித்த ...... முழல்வேனை
முட்ட
விக்க டைப்பி றப்பி னுட்கி டப்ப தைத்த விர்த்து
முத்தி சற்றெ னக்க ளிப்ப ...... தொருநாளே
வெற்ப
ளித்த தற்ப ரைக்கி டப்பு றத்தை யுற்ற ளித்த
வித்த கத்தர் பெற்ற கொற்ற ...... மயில்வீரா
வித்தை
தத்வ முத்த மிழ்ச்சொ லத்த சத்தம் வித்த ரிக்கு
மெய்த்தி ருத்த ணிப்பொ ருப்பி ......
லுறைவோனே
கற்ப
கப்பு னக்கு றத்தி கச்ச டர்த்த சித்ர முற்ற
கற்பு ரத்தி ருத்த னத்தி ...... லணைவோனே
கைத்த
ரக்கர் கொத்து கச்சி னத்து வஜ்ர னுக்க மைத்த
கைத்தொ ழுத்த றித்து விட்ட ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
பொன்
பதத்தினைத் துதித்து, நல் பதத்தில் உற்ற
பத்தர்,
பொற்பு உரைத்து, நெக்கு உருக்க ...... அறியாதே,
புத்தகப்
பிதற்றை விட்டு, வித்தகத்து உனைத் துதிக்க,
புத்தியில் கலக்கம் அற்று ...... நினையாதே,
முற்படத்
தலத்து உதித்து, பின் படைத்த அகிர்த்யம்
முற்றி,
முன் கடைத் தவித்து நித்தம் ...... உழல்வேனை,
முட்ட
இக் கடைப் பிறப்பின் உள் கிடப்பதைத் தவிர்த்து,
முத்தி சற்று, எனக்கு அளிப்பது
...... ஒரு நாளே?
வெற்பு
அளித்த தற்பரைக்கு, இடப் புறத்தை உற்று அளித்த
வித்தகத்தர் பெற்ற கொற்ற ...... மயில்வீரா!
வித்தை
தத்வ முத்தமிழ்ச் சொல் அத்த சத்தம் வித்தரிக்கும்
மெய்த் திருத்தணிப் பொருப்பில் ...... உறைவோனே!
கற்பகப்
புனக் குறத்தி கச்சு அடர்த்த, சித்ரம் உற்ற
கற்புரத் திருத் தனத்தில் ...... அணைவோனே!
கைத்து
அரக்கர் கொத்து உக சினத்து, வஜ்ரனுக்கு அமைத்த
கைத் தொழு தறித்து விட்ட ...... பெருமாளே.
பதவுரை
வெற்பு அளித்த தற்பரைக்கு --- இமயமலை
போற்றி வளர்த்த உமாதேவிக்கு,
இடப்புறத்தை உற்று அளித்த --- இடப்பாகத்தை
அன்பு வைத்து அளித்த,
வித்தக அத்தர் பெற்ற --- ஞான முதல்வராகிய
சிவபெருமான் பெற்றருளிய,
கொற்ற மயில்வீரா --- வெற்றியுடைய மயில்
வீரரே!
வித்தை தத்வம் --- கல்வியும், உண்மையும்,
முத்தமிழ் சொல் அத்தம் --- மூன்று தமிழின்
சொல்லும், பொருளும்,
சத்தம் வித்தரிக்கும் --- ஓசைகளுடன்
நீடித்திருக்கின்ற,
மெய் திருத்தணி பொருப்பில் உறைவோனே ---
மெய்ம்மை விளங்கும் திருத்தணிகை மலைமீது எழுந்தருளியிருப்பவரே!
கற்பக புன குறத்தி --- கற்பகம் போன்ற
தருக்கள் நிறைந்த தினைப் புனத்தில் வாழ்ந்த வள்ளியம்மையின்,
கச்சு அடர்த்த சித்ரம் உற்ற --- கச்சு
நெருங்கிய அழகிய,
கற்புர திரு தனத்தில் அணைவோனே --- பச்சைக்
கற்பூரம் அணிந்துள்ள அழகு மிக்க தனங்களில் அணைபவரே!
கைத்து அரக்கர் கொத்து உக --- வெறுப்பு
கொண்ட அரக்கர்களின் கூட்டம் அழியுமாறு,
சினத்து --- கோபித்து,
வஜ்ரனுக்கு அமைத்த --- வஜ்ராயுதனாகிய
இந்திரனுக்கு அவர்கள் இட்ட,
கை தொழு தறித்து விட்ட --- கை விலங்கை
முறித்து எறிந்த,
பெருமாளே --- பெருமையில் சிறந்தவரே!
பொன் பதத்தினை துதித்து --- தேவரீருடைய
அழகிய திருவடிகளை வணங்கித் துதித்து,
நல் பதத்தில் உற்ற பத்தர் --- நல்ல பதவியை
அடைந்த அன்பர்களுடைய,
பொற்பு உரைத்து --- பெருமையைக் கூறி,
நெக்கு உருக்க அறியாதே --- உள்ளம் நெகிழ்ந்து
உருக அறியாமலும்,
புத்தக பிதற்றை விட்டு --- புத்தகங்களைக்
கற்றுப் பிதற்றலை விட்டு,
வித்தகத்து உனை துதிக்க --- ஞானத்தால்
தேவரீரைத் துதிசெய்ய,
புத்தியில் கலக்கம் அற்று நினையாதே ---
கலக்கம் இல்லாத பக்தியுடன் உம்மை நினையாமலும்,
முன்பட தலத்து உதித்து --- பூமியில்
முற்பட்டு பிறந்து,
பின் படைத்த அகிர்த்யம் முற்றி --- பின்னர் நான்
செய்யும் கூடாத செயல்கள் நிரம்பி,
முன் கடை தவித்து நித்தம் உழல்வேனை ---
பிறருடைய முன் வாசல்களில் நின்று தவித்து தினந்தோறும் அலைகின்ற அடியேனை,
முட்ட --- அடியோடு,
இ கடை பிறப்பினுள் கிடப்பதை தவிர்த்து ---
இந்த இழிவான பிறப்பினுள் விழுந்து கிடப்பதை மாற்றி,
முத்தி சற்று எனக்கு அளிப்பது ஒரு நாளே ---
முத்தி நலம் அடியேனுக்குச் சிறிது அளித்து அருளும் ஒரு நன்னாள் எனக்குக்
கிடைக்குமோ?
பொழிப்புரை
மலையரையன் மகளாகிய பார்வதியம்மைக்கு
இடப்பாகத்தை அன்புடன் அளித்த ஞானமூர்த்தியாகிய சிவபெருமான் பெற்றருளிய வெற்றி
மயில் வீரரே!
வித்தையும், உண்மையும், முத்தமிழும், சொல்லோசையும், பொருளொசையும் நீடித்து, என்றுமுள்ள திருத்தணியம்பதியில்
எழுந்தருளி இருப்பவரே!
கற்பகம் போன்ற தருக்கள் நிறைந்த
தினைப்புனத்தில் வாழ்ந்த வள்ளிநாயகியின், கச்சு
நெருங்கிய அழகுள்ள-பச்சைக் கற்பூரம் பூசிய, அழகிய தனங்களில் அணைபவரே!
பகைத்த அசுரர்களின் கூட்டத்தை அழித்து
வஜ்ரபாணியான இந்திரனுடைய கைவிலங்கை ஒடித்து எறிந்து அருளிய பெருமையின் மிகுந்தவரே!
அழகிய உமது பாதங்களைத் துதிசெய்து நல்ல
பதவியை அடைந்த அடியார்களின் பெருமையைக் கூறி உள்ளம் நெகிழ்ந்து உருக அறியாமலும், புத்தகத்தைப் படித்து அவற்றினைப்
பிதற்றுவதை விடுத்து ஞானத்தால் தேவரீரைத் துதிக்க, கலக்கமற்ற புத்தியுடன் நினையாமலும், பூமியில் முற்படப் பிறந்து, பின்னர் பலப்பல தீயசெயல்களைச் செய்து
பிறருடைய வாசலின் முன் நின்று தவித்து தினமும் அலைகின்ற அடியேனை, அடியோடு இந்த இழிவான பிறப்பினுள்
விழுந்து கிடப்பதினின்றும் மாற்றி,
முத்தியின்பத்தைச்
சிறிது அடியேனுக்கு அளித்தருளும் ஒரு நன்னாள் கிடைக்குமோ?
விரிவுரை
பொற்
பதத்தினைத் துதித்து ---
உத்தமமான
அடியார்கள், முருகப் பெருமானுடைய
சரணாரவிந்தங்களைச் சதா துதி செய்வார்கள். அத் திருவடியே பிறவிப் பெருங்கடலுக்கு
ஓடமாக நின்று நம்மை முத்திக் கரை சேர்ப்பது. ஆதலால் அன்பர்கள் அனைவரும் காலையில்
எழுந்தவுடன் "சீர்பாத வகுப்பு" என்ற பாடலை தினந்தோறும் பாராயணம் புரிவது
நலம்.
நற்பதத்தில்
உற்ற பத்தர் ---
முருகன்
பதத்தைத் துதித்த அடியார்கள் மேலான பதத்தை அடைவார்கள்.
மால், அயன், இந்திரன் முதலிய தேவர்கள் யாவரும்
முருகன் திருவடியை அர்ச்சித்தமையால் மேலான பதவியைப் பெற்றார்கள்.
பத்தர்
பொற்பு உரைத்து நெக்கு உருக அறியாதே ---
இத்தகைய
மேலான முருகனுடைய அடியார்களின் பெருமைகளை இனிது எடுத்துக் கூறி உள்ளம் கசிந்து
உருக வேண்டும். அடியார் பத்தி எளிதில் இறைவனருளைக் கூட்டி வைக்கும். கன்றின்
துணைகொண்டு பசுவிடம் போய் பால் கறந்து கொள்வது போல் அடியாரின், அருளைக் கொண்டே ஆண்டவனது அருளை எளிதிற்
பெறமுடியும்.
புத்தகப்
பிதற்றை விட்டு ---
சிலர்
புத்தகங்களைப் படித்து, அதன் பயனைப் பெறாமல்
அதைப் பிதற்றிக் கொண்டே திரிவார்கள்.
“கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்”
என்பார் மணிவாசகர்.
உண்பதற்கு
வாழை இலை உதவுகின்றது. உண்ட பின் வாழை இலையை எடுத்து எறிந்து விடுகிறோம். அதுபோல்
இறைவனை அடைவதற்குக் கல்வி துணை செய்கின்றது. அடைந்த பின் கல்வியை விட்டுவிட
வேண்டும்.
"கற்பனவும்
இனி அமையும்" என்னும் மணிவாசகக் கருத்தை எண்ணுக.
வித்தகத்து
உனைத் துதிக்க ---
வித்தகம்-ஞானம்.
இறைவனை ஞானத்தால் வணங்கித் துதி செய்ய வேண்டும்.
ஞானத்
தால்தொழு வார்சில ஞானிகள்
ஞானத்
தால்தொழு வேன்உனை நான்அலேன்
ஞானத்
தால்தொழு வார்கள் தொழக்கண்டு
ஞானத்
தாய்உனை நானும் தொழுவனே. --- அப்பர்.
புத்தியில்
கலக்கம் அற்று நினையாதே ---
ஞானத்தால்
இறைவனைத் துதிக்கின்றவரது புத்தி கலக்க மின்றித் தெளிவடையும்.
கலங்கிய
புத்தி இன்பத்தைத் துன்பமாகவும்,
துன்பத்தை
இன்பமாகவும் மயங்கியறியும்.
முற்படத்
தலத்து உதித்து ---
வினையின்
காரணத்தால் முற்பட்டு இப்பூதலத்தில் ஆன்மா வந்து பிறக்கின்றது.
பின் படைத்த
அகிர்த்யம் முற்றி ---
அகிர்த்தியம் - தீய செயல்கள்
அகிர்த்தியம் - தீய செயல்கள்
பிறந்த பின்
பல தீச்செயல்களை ஆன்மாக்கள் செய்கின்றார்கள்.
அகிர்த்யம்
---
நற்செயல்
இல்லாதது.
முற்கடைத்
தவித்து நித்தம் உழல்வேனோ ---
பிறருடைய
வாசல்களின் முன் சென்று, அவர்களைப் பாடியும், அவர்களுடன் கூடியும், அவர்களது தயவை நாடியும், தயவு கிடைக்காதபோது வாடியும் மாந்தர்
அழிகின்றார்கள்.
முட்ட
இக் கடைப் பிறப்பினுள் கிடப்பதைத் தவிர்த்து ---
முட்ட - முழுவதும்.
இந்த இழிந்த பிறவிப் பெருங்கடலில் விழுந்து யுகயுகாந்த காலமாகத் தவிக்கின்ற இந்தச்
சீவனை, இப்பிறவிப்
படுகுழியிலிருந்து எடுத்துக் காப்பாற்ற வேண்டும்.
முத்தி
சற்று எனக்கு அளிப்பது ஒருநாளே ---
முத்தி-பந்தத்தினின்றும்
விடுபடுவது; அந்த முத்தி இன்பம்
அடியேனுக்குச் சிறிதேனும் அளிக்கின்ற ஒரு நாள் கிடைக்குமோ?
வெற்பு
அளித்த தற்பரைக்கு இடப்புறத்தை உற்று அளித்த வித்தகத்தர் ---
இம்மை
நலம் விரும்புவோர் சக்தியை வழிபடுவார்கள்; பரத்தை விரும்புவோர் சிவபெருமானை
வழிபடுவார்கள்.
பிருங்கி
என்ற முனிவர் இம்மை நலத்தை விரும்பாதவர். வீடுபேறு என்ற பரத்தையே விரும்புபவர்.
அவர் கயிலாயத்தை அடைந்த
போதெல்லாம், உமாதேவியாரை வலம்
வராமல், சிவபெருமானை மட்டுமே
வலம் வந்து வழிபடுவார்.
உமாதேவியார்
சிவபெருமானுடன் நெருங்கி யமர்ந்திருந்தார். பிருங்கி முனிவர் வண்டுருவங் கொண்டு
இடையில் நுழைந்து சென்றார்.
இதனால்
அம்மை வருந்தி, “நான் இடப்பாகம்
பெறுவேன்” என்று கூறி, கேதாரம் என்ற
திருத்தலஞ் சென்று தவம் புரிந்து,
இடப்பாகத்தைப்
பெற்றார்கள்.
தன்னை
நீக்கியே சூழ்வுறுந் தவம் உடைப் பிருங்கி
உன்னி
நாடிய மறைகளின் முடிவினை உணரா
என்னை ஆள் உடையான் இடம் சேர்வன் என்று இயமக்
கன்னி
பூசனை செய்த கேதாரம் முன் கண்டான். --- கந்தபுராணம்.
வித்தை
தத்வ முத்தமிழ்ச் சொல் அத்த சத்தம் வித்தரிக்கும் மெய்த் திருத்தணி ---
திருத்தணியம்பதியில், அநேக வித்தைகளும், வித்தைகளின் உண்மைகளும், முத்தமிழ் முழக்கங்களும், சொல்லோசையும், பொருளோசையும், சதா இடையறாது நீடித்திருக்கின்றன.
வஜ்ரனுக்கு
அமைத்த கைத்தொழுத் தறித்துவிட்ட ---
வஜ்ராயுதனாகிய
இந்திரன் முதலியோர்களைக் கையிலும்,
காலிலும்
சூரபன்மன் விலங்கு பூட்டி வருத்தினான். எம்பெருமான் அவ்விலங்கைத் தறித்து
ஆட்கொண்டார்.
கருத்துரை
தணிகையாண்டவனே!
முத்திநலம் தந்தருள்வீர்.
No comments:
Post a Comment