அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
மலை முலைச்சியர்
(திருத்தணிகை)
திருத்தணிகை வேலா!
அடியேன் நற்கதி பெற அருள்
தனன
தத்தன தனன தத்தன
தனன தத்தன ...... தனதான
மலைமு
லைச்சியர் கயல்வி ழிச்சியர்
மதிமு கத்திய ...... ரழகான
மயில்ந
டைச்சியர் குயில்மொ ழிச்சியர்
மனது ருக்கிக ...... ளணைமீதே
கலைநெ
கிழ்த்தியே உறவ ணைத்திடு
கலவி யிற்றுவள் ...... பிணிதீராக்
கசட
னைக்குண அசட னைப்புகல்
கதியில் வைப்பது ...... மொருநாளே
குலகி
ரிக்குல முருவ விட்டமர்
குலவு சித்திர ...... முனைவேலா
குறவர்
பெற்றிடு சிறுமி யைப்புணர்
குமர சற்குண ...... மயில்வீரா
தலம
திற்புக லமர ருற்றிடர்
தனைய கற்றிய ...... அருளாளா
தருநி
ரைத்தெழு பொழில்மி குத்திடு
தணிம லைக்குயர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
மலை
முலைச்சியர், கயல் விழிச்சியர்,
மதி முகத்தியர், ...... அழகான
மயில்
நடைச்சியர், குயில் மொழிச்சியர்,
மனது உருக்கிகள், ...... அணைமீதே
கலை
நெகிழ்த்தியே, உற அணைத்திடு
கலவியில் துவள் ...... பிணி தீராக்
கசடனை, குண அசடனை, புகல்
கதியில் வைப்பதும் ...... ஒருநாளே?
குல
கிரிக் குலம் உருவ விட்டு, அமர்
குலவு சித்திர ...... முனைவேலா!
குறவர்
பெற்றிடு சிறுமியைப் புணர்
குமர! சற்குண ...... மயில்வீரா!
தலம்
அதில் புகல் அமரர் உற்ற இடர்
தனை அகற்றிய ...... அருளாளா!
தரு
நிரைத்து எழு பொழில் மிகுத்திடு
தணி மலைக்கு உயர் ...... பெருமாளே.
பதவுரை
குலகிரி குலம் உருவ விட்டு --- சிறந்த
கிரவுஞ்சமலைக் கூட்டத்தில் உருவச் செலுத்தி,
அமர் குலவு சித்திர முனை வேலா --- போர்
புரிந்த அழகிய கூரிய
வேலாயுதரே!
குறவர் பெற்றிடு சிறுமியை புணர் குமர
--- குறவர்கள் பெற்ற சிறுமியாகிய வள்ளியம்மையைத் தழுவுகின்ற குமாரக் கடவுளே,
சற்குண மயில் வீரா --- உத்தம
குணத்தையுடைய மயில் மீது வரும்
வீரரே!
தலம் அதில் புகழ் --- உலகத்தில்
போற்றப்படும்,
அமரர் உற்ற இடர் தனை --- தேவர்களுக்கு வந்த
துன்பத்தை,
அகற்றிய அருள் ஆளா --- நீக்கிய அருளை ஆளுகின்றவரே!
தரு நிரைத்து எழு --- மரங்கள் வரிசையாய்
வளர்ந்து ஓங்கும்,
பொழில் மிகுத்திடு --- சோலைகள்
மிகுதியாகவுள்ள,
தணி மலைக்கு உயர் --- திருத்தணிகை மலையில்
மேம்பட்டுள்ள,
பெருமாளே -- பெருமையின் மிகுந்தவரே!
மலை முலைச்சியர் --- மலைபோன்ற கொங்கையை
உடையவர்,
கயல் விழிச்சியர் --- கயல்மீன் போன்ற கண்ணினை
உடையவர்;
மதி முகத்தியர் --- சந்திரனைப் போன்ற முகத்தினை
உடையவர்;
அழகான மயில் நடைச்சியர் --- அழகிய மயில்
போன்ற நடையினை உடையவர்;
குயில் மொழிச்சியர் --- குயில் போன்ற சொல்லினை
உடையவர்;
மனது உருக்கிகள் --- மனத்தை உருக்குபவர்;
அணை மீதே --- படுக்கையின் மீது,
கலை நெகிழ்த்தியே --- உடையைத் தளர்த்தி,
உறவு அணைத்திடு --- உறவுடன் அணைக்கின்ற,
கலவியில் துவள் --- கலவியின்பத்தில்
துவளுகின்ற,
பிணிதீரா --- நோய் நீங்காத;
கசடனை --- குற்றமுள்ளவனை,
குண அசடனை --- குணமில்லாத கீழ்மகனை,
புகல் கதியில் வைப்பதும் ஒரு நாளே --- புகழப்
பெறுகின்ற நற்கதியில் சேர்த்து வைக்கும் ஒரு நாள் உண்டாகுமோ?
பொழிப்புரை
சிறந்த கிரவுஞ்ச மலைக் கூட்டத்தில்
உருவச் செலுத்திப் போர் செய்த அழகும் கூர்மையும் பொருந்திய வேலாயுதக் கடவுளே!
குறவர்கள் பெற்ற சிறுமியாகிய
வள்ளிபிராட்டியைத் தழுவுகின்ற குமாரக் கடவுளே!
உத்தம குணம் பொருந்திய மயில் வீரரே!
உலகத்திற் போற்றப்படுகின்ற தேவர்களுக்கு உற்ற
துன்பத்தைப் போக்கிய அருளாளரே!
மரங்கள் வரிசையாய் வளர்ந்தோங்கும் சோலைகள்
உயர்ந்துள்ள திருத்தணி மலையில் மேம்பட்டு விளங்கும் பெருமையின் மிகுந்தவரே!
மலைபோன்ற தனத்தினர்; கயல்மீன் போன்ற கண்ணினர்; சந்திரனைப் போன்ற முகத்தினர்; அழகிய மயில் போன்ற நடையினர்; குயில் போன்ற மொழியினர்; மனத்தை உருக்குபவர் ஆகிய பொது
மாதர்களின் படுக்கையின் மீது உடையைத் தளர்த்தி, உறவுடன் தழுவுகின்ற கலவியின்பத்தில்
தளர்ச்சியடைந்து நோய் நீங்காத கசடனை, குணமில்லாத
மூடனை, பெரியோர்கள்
புகழ்கின்ற நற்கதியில் சேர்க்கும் நாள் ஒன்று உண்டாகுமோ?
விரிவுரை
கதியில்
வைப்பதும் ஒரு நாளே ---
“மாதர் வயப்பட்டு
அடியேன் அவமே அழியாமல் பரகதியில் வைத்து ஆட்கொள்ளும் நாள் ஒன்று உண்டாகுமோ?” என்று சுவாமிகள் முறையிடுகின்றார்.
குலகிரிக்
குலம் உருவ---
குலம்-சிறப்பு.
குலம்-கூட்டம் மாயையிற் சிறந்த கிரவுஞ்ச மலை பலபுருவங்கள் தாங்கி நிற்க, அக்கூட்டத்தை வேல்விட்டு முருகவேள்
அழித்தருளினார்.
“குலகிரி குத்துப்பட
ஒத்துப் பொரவல பெருமாளே” --- (முத்தைத்தரு)
திருப்புகழ்.
சித்திர
முனை வேலா ---
சித்திரம்-அழகு; முனை-கூர்மை. வேல் என்பது ஞானம். கூர்மை
ஞானத்தின் இலக்கணம்.
குறவர்
பெற்றிடு சிறுமி ---
வள்ளி-இச்சா
சக்தி. திருமாலுடைய கண்ணில் பிறந்த சுந்தரவல்லி முருகனுடைய கட்டளையின்படி, மான் வயிற்றில் தோன்றி, நம்பிராசனால் வளர்க்கப்பட்டு முருகனை மணந்து
கொண்டார். இம்மை நலம் முழுவதும் தருகின்ற அருட்சக்தி வள்ளிபிராட்டியார்.
அருளாளா
---
அருளை ஆளுகின்றவர் அருளாளர்.
“பித்தா பிறை சூடீ
பெருமானே அருளாளா” --- சுந்தரர் தேவாரம்.
கருத்துரை
திருத்தணிகைக் குமரா! நற்கதி தந்து
அருள் செய்வீர்.
No comments:
Post a Comment