திருத்தணிகை - 0304. முகத்தை மினுக்கிகள்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

முகத்தை மினுக்கிகள் (திருத்தணிகை)

திருத்தணிகை வேலா!
அமுதான திருப்புகழைப் பாடி, பிரம லிபி அழிய,
உண்மை ஞானத்தை உணர்த்தி அருள்


தனத்தன தத்தன தனதன தனதன
     தனத்தன தத்தன தனதன தனதன
     தனத்தன தத்தன தனதன தனதன ...... தனதான


முகத்தைமி னுக்கிக ளசடிகள் கபடிகள்
     விழித்தும ருட்டிகள் கெருவிகள் திருடிகள்
     மொழிக்குள்ம யக்கிகள் வகைதனில் நகைதனில் ....விதமாக

முழித்தும யற்கொளு மறிவிலி நெறியிலி
     புழுக்குட லைப்பொரு ளெனமிக எணியவர்
          முயக்கம டுத்துழி தருமடி யவனிடர் ......      ஒழிவாக

மிகுத்தழ கைப்பெறு மறுமுக சரவண
     புயத்திள கிக்கமழ் நறைமலர் தொடைமிக
     விசைக்கொடு மைப்பெறு மரகத கலபியும் ...... வடிவேலும்

வெளிப்படெ னக்கினி யிரவொடு பகலற
     திருப்பதி யப்புக ழமுதியல் கவிசொலி
     விதித்தனெ ழுத்தினை தரவரு மொருபொரு ......ளருளாயோ

புகைத்தழ லைக்கொடு திரிபுர மெரிபட
     நகைத்தவ ருக்கிட முறைபவள் வலைமகள்
     பொருப்பிலி மக்கிரி பதிபெறு மிமையவ ......   ளபிராமி

பொதுற்றுதி மித்திமி நடமிடு பகிரதி
     எழுத்தறி ருத்திரி பகவதி கவுரிகை
     பொருட்பய னுக்குரை யடுகிய சமைபவள் ...... அமுதாகச்

செகத்தைய கட்டிடு நெடியவர் கடையவள்
     அறத்தைவ ளர்த்திடு பரசிவை குலவதி
     திறத்தமி ழைத்தரு பழையவ ளருளிய ...... சிறியோனே

செருக்கும ரக்கர்கள் பொடிபட வடிவுள
     கரத்தில யிற்கொடு பொருதிமை யவர்பணி
     திருத்தணி பொற்பதி தனில்மயில் நடவிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


முகத்தை மினுக்கிகள், சடிகள், கபடிகள்,
     விழித்து மருட்டிகள், கெருவிகள், திருடிகள்,
     மொழிக்குள் மயக்கிகள், வகைதனில் நகைதனில் .....விதமாக

முழித்து மயல் கொளும் அறிவிலி, நெறி இலி,
     புழுக் குடலைப் பொருள் என மிக எணி, அவர்
          முயக்கம் அடுத்து உழிதரும், அடியவன் இடர் ...... ஒழிவாக,

மிகுத்த அழகைப் பெறும் அறுமுக! சரவண!
     புயத்து இளகிக் கமழ் நறை மலர் தொடை,மிக
     விசைக் கொடுமைப் பெறு மரகத கலபியும், ...... வடிவேலும்,

வெளிப்பட, னக்கு இனி இரவொடு பகல் அற,
     திருப் பதிய, புகழ் அமுது இயல் கவி சொலி,
     விதித்தன் எழுத்து இனை தர, வரும் ஒரு பொருள் ...... அருளாயோ?

புகைத் தழலைக் கொடு திரிபுரம் எரிபட
     நகைத்தவருக்கு, இடம் உறைபவள், வலைமகள்,
     பொருப்பில் இமக்கிரி பதி பெறும் இமையவள்,...... அபிராமி,

பொது உற்று, திமித்திமி நடம்இடு பகிரதி,
     எழுத்து அறி உருத்திரி, பகவதி, கவுரி, கை
     பொருள் பயனுக்கு உரை அடுகிய சமைபவள், .....அமுதாகச்

செகத்தை அகட்டு இடு நெடியவர் கடையவள்,
     அறத்தை வளர்த்திடு பரசிவை, குலவதி,
     திறத் தமிழைத் தரு பழையவள் அருளிய ...... சிறியோனே!

செருக்கும் அரக்கர்கள் பொடிபட, வடிவுஉள
     கரத்தில் அயில்கொடு பொருது, மையவர் பணி
     திருத்தணி பொற்பதி தனில்மயில் நடவிய ...... பெருமாளே.


பதவுரை

      புகை தழலைக் கொடு --- புகையுடன் கூடிய நெருப்பினால்,

     திரிபுரம் எரிபட --- முப்புரங்கள் எரிது அழியுமாறு,

     நகைத்தவருக்கு இடம் உறைபவள் --- சிரித்தருளிய சிவபெருமானுடைய இடப்பாகத்தில் வீற்றிருப்பவளும்,

     வலைமகள் --- வலைஞருக்கு மகளாகத் தோன்றினவரும்,

     பொருப்பில் --- மலைகளுள்,

     இமகிரி பதி பெறும் --- இமய மலைக்கு அரசன் பெற்ற,

     இமையவள் --- இமய வல்லியும்,

     அபிராமி --- பேரழகியும்,

     பொது உற்று --- அம்பலத்தில் அமைந்து,

     திமித்திமி நடம் இடு --- திமித்திமி என்று நடனஞ் செய்கின்றவரும்,

     பகிரதி --- தேவியும்,

     எழுத்து அறி ருத்திரி --- எழுத்திலக்கணங்களை அறிந்துள்ள உருத்திரியும்,

     பகவதி --- ஆறு குணங்களையுடையவளும்,

     கவுரி --- பொன்னிறம் படைத்தவளும்,

     கை பொருள் பயனுக்கு உரை அடுகிய சமைபவள் --- ஒழுங்காகப் பொருளின் பயனாகச் சொல்லுக்குப் பொருந்தியிருப்பவளும்,

     அமுது ஆக --- அமுதம் போல்,

     செகத்தை அகட்டு இடும் நெடியவர் கடையவள் --- உலகத்தை வயிற்றில் அடக்கிய நெடியவராம் திருமாலின் தங்கையும்,

     அறத்தை வளர்த்திடு பரசிவை --- தருமத்தை வளர்த்த பரசிவையும்,

     குலவதி --- சிறந்தவளும்,

     திற தமிழை தரு பழையவள் --- ஆற்றலுடைய தமிழைத் தந்த பழையவளும் ஆகிய உமை,

     அருளிய சிறியோனே --- பெற்றருளிய சிறிய பெருந்தகையே!

      செருக்கும் அரக்கர்கள் பொடிபட --- கர்வங்கொண்ட அசுரர்கள் தூளாகியழியும்படி,

     வடிவு உள கரத்தில் --- அழகிய திருக்கரத்தில்,

     அயில் கொடு பொருது --- வேல் கொண்டு போர் செய்து,

     இமையவர் பணி --- தேவர்கள் பணிகின்ற,

     திருத்தணி பொன் பதி தனில் --- திருத்தணி என்ற அழகிய திருத்தலத்தில்,

     மயில் நடவிய பெருமாளே --- மயிலின் மீது நடித்தருளிய பெருமையிற் சிறந்தவரே!

      முகத்தை மினுக்கிகள் --- முகத்தை மினுக்குபவர்கள்,

     அசடிகள் --- மூடர்கள்,

     கபடிகள் --- வஞ்சகிகள்,

     விழித்து மருட்டிகள் --- கண்ணை விழித்து மயக்குபவர்கள்,

     கெருவிகள் --- கருவம் பிடித்தவர்கள்,

     திருடிகள் --- களவு செய்பவர்கள்,

     மொழிக்கு உள் மயக்கிகள் --- இனிய மொழி கொண்டு மயக்குபவர்களாகிய பொது மாதர்களின்,

     வகை தனில் --- உபாயத்திலும்,

     நகை தனில் --- புன்னகையிலும்,

     விதமாக முழித்து --- ஒரு விதமாக முழித்து,

     மயல் கொளும் அறிவு இலி --- மோக மயக்கங்கொண்ட அறிவில்லாதவனும்,

     நெறி இலி --- ஒழுக்கம் இல்லாதவனும்,

     புழு குடலை பொருள் என மிக எணி --- புழுநிறை குடலுடன் கூடிய இந்தவுடலைப் பொருளாக மிகவும் நினைத்து,

     அவர் முயக்கம் அடுத்து --- அம்மாதர்களின் கலவியை விரும்பி,

     உழிதரும் --- சுழலுகின்றவனுமாகிய,

     அடியவன் இடர் ஒழிவு ஆக --- அடியேனுடைய துன்பந் தீரும் பொருட்டு,

     மிகுந்த அழகை பெறும் --- மிகுந்த அழகுடன் விளங்கும்,

     அறுமுக --- ஆறுமுகக்கடவுளே!

     சரவண --- சரவணமூர்த்தியே!

     புயத்து இளகி கமழ் --- திருத்தோளில் நெகிழ்வுற்று மணம் வீசுகின்ற,

     நறை மலர் --- தேன் துளிக்கின்ற பூமாலையும்,

     மிக விசை கொடுமை பெறு --- மிகுந்த வேகமும் கடுமையும் கொண்ட,

     மரகத கலபியும் --- பச்சை மயிலும்,

     வடிவேலும் -- கூரிய வேலாயுதமும்,

     வெளிப்பட --- வெளிப்பட்டு,

     எனக்கு இனி --- அடியேன் முன் தோன்ற,

     இரவொடு பகல் அற --- மறப்பும் நினைப்பும் அற்றுப்போக,

     திரு புதிய --- தெய்வத்தன்மை பொருந்த,

     புகழ் அமுது இயல் கவி சொலி --- உமது திருப்புகழை அமுது போன்ற பாடல்களாகச் சொல்லி,

     விதித்தன் எழுத்து இனை தர --- பிரமன் எழுதிய எழுத்து மெலிந்து அழிதர,

     வரும் ஒரு பொருள் அருளாயோ --- மேம்பட்டு விளங்கும் ஒப்பற்ற பொருளை அடியேனுக்கு உபதேசித்தருள்வீராக.

பொழிப்புரை

         புகையுடன் கூடிய நெருப்பினால் திரிபுரம் எரிபட்டு அழியச் சிரித்தருளிய சிவபெருமானுடைய இடப்பாகத்தில் இருப்பவளும், பரதவர்களிடம் புதல்வியாக வந்தவளும், மலைகளுள் இமயமலைக்கரசன் பெற்ற இமயவல்லியும், பேரழகனான உரு வாய்ந்தவளும், அம்பலத்தில் திமித்திமியென்று நடனஞ்செய்யும் தேவியும், எழுத்து இலக்கணங்களை அறிந்த பகவதியும், கௌரியும், ஒழுங்கான பொருளின் பயனாகவும் சொல்லாகவும் இருப்பவளும், அமுது போல் பூமியை வயிற்றில் அடக்கிய நெடியவராம் நாராயணரது தங்கையும், முப்பத்திரண்டு அறங்களையும் வளர்த்த பரசிவையும், சிறந்தவளும், ஆற்றல் மிக்க தமிழைத் தந்த பழையவளுமாகிய பார்வதியம்மை பெற்ற சிறிய பெருந்தகையே!

     செருக்குடைய அசுரர்கள் அழிந்து பொடிபடுமாறு அழகிய திருக்கரத்தில் வேல் கொண்டு போர் செய்து, தேவர்கள் பணிய, திருத்தணிகையம்பதியில் மயில்மீது நடித்தருளிய பெருமிதம் உடையவரே!

         (தினந்தோறும்) முகத்தை மினுக்கிகள்; மூடர்கள்; வஞ்சகர்கள்; விழித்துப் பார்த்து மயக்குபவர்கள்; கர்வம் கொண்டவர்கள்; திருடிகள்; இன்சொல்லால் மயக்குபவர்களாகிய பொது மகளிரின் உபாயத்தாலும், புன்னகையாலும், ஒரு விதமாக முழித்து, மோகங் கொண்ட அறிவில்லாதவனும், ஒழுக்கமில்லாதவனும், புழுக்குடலுடன் கூடிய இந்த உடம்பைப் பொருள் என்று எண்ணினவனுமாகிய அடியேன், அம்மகளிரைத் தழுவும் பொருட்டு அவர்களிடம் உழலுகின்ற எனது இடர் தீர,

     மிகுந்த அழகிய ஆறுமுகக் கடவுளே! சரவணபவா! உமது திருப்புயங்களில் நெகிழ்வுற்று மணம் வீசும் தேன் நிறைந்த பூமாலையும், கடிய வேகமுள்ள பச்சை மயிலும், கூரிய வேலும், வெளிப்பட்டு அடியேன் முன்தோன்ற, நினைப்பும் மறப்பும் அற்றுப்போக, தெய்வத்தன்மை என்பால் பொருந்த, உமது திருப்புகழை அமுதம் போல் பாடி, பிரமனுடைய எழுத்து மெலிந்து அழிய ஒப்பற்ற உண்மைப் பொருளை அடியேனுக்கு உபதேசித்தருள்வீராக.
  
விரிவுரை
  
அடியவர் இடர் ஒழிவாக ---

இப்பாடலின் ஆறு வரிகளில் விலைமகளிரின் நிலைமைகளைக் கூறி, அம்மாதர் வசப்பட்டு அடியேன் உழலாவண்ணம் எம்பெருமானே என்னை ஆண்டருளும் என்று சுவாமிகள் வேண்டுகிறார்.

மிகுத்த அழகைப் பெறும் அறுமுக ---

அழகின் நிலைக்களம் முருகப் பெருமான் அழகு- அழகுத் தெய்வம் முருகன்.

      முழுது மழகிய குமர கிரிகுமரி யுடனுருகு
    முக்கட் சிவன் பெருஞ் சத்புத்ர   ---(விழையுமனி) திருப்புகழ்.

சரவண ----

சரம்-தருப்பை. வனம்-காடு. தருப்பை வனத்தில் ஒளியுருவாக வெளிப்பட்டவர்.

மிகவிசைக் கொடுமைப்பெறு மரகதமயில் ---

மிக விசை கொடுமை பெறு. முருகனுடைய மயில் மிகுந்த வேகத்துடன் கூடியது. மயிலின் வேகத்தை அலங்காரத்தில் கூறுகின்றார்.

குசைநெகிழா வெற்றி வேலோன் அவுணர் குடர் குழம்பக்
கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின் கொத்து
அசைபாடு கால்பட்டு அசைந்தது மேரு; அடியிட எண்
திசை வரை தூள்பட்ட; அத்தூளின் வாரி திடர்பட்டதே.

வெளிப்பட எனக்கினி ---

கடப்பமலர் மாலையும், மயிலும் வேலும் எனக்கு முன்னே தோன்றி காட்சி தரவேண்டும்.

இரவு பகலற ---

இரவு-கேவலம். தத்துவங்கள் தொழிற்பாடின்றி ஆணவ மலத்துடன் மாத்திரம் கூடியிருக்கும் ஆன்மாவின் நிலை.

பகல்-சகலம். ஆன்மா தத்துவங்களுடன் கூடிய விடயங்களை நுகரும் நிலை.

இந்த இரண்டும் அற்ற இடமே இன்ப நிலை.

அந்திபகல் அற்ற நினைவு அருள்வாயே”       --- (ஐங்கரனை) திருப்புகழ்

இராப்பகலற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே”         --- கந்தர்(அலங்காரம்)

திருப் பதிய ---

திரு-தெய்வத்தன்மை. மனிதத்தன்மை நீங்கி தெய்வத்தன்மை பதிய.

புகழ் அமுதியல் கவிசொலி ----

திருப்புகழ் அமுதம்போல் அழியா நிலையை அருளவல்லது.

      அமிர்தகவித் தொடைபாட அடிமைதனக் கருள்வாயே”
                                                                          --- (புமியதனிற்) திருப்புகழ்

      எம்அருணகிரிநாதர் ஓது பதினாறாயிரந் திருப்புகழ் அமுதமே”
                                             --- திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ்

விதித்தன் எழுத்து இனை தர ---

விதித்தன்-விதிக்கின்ற பிரமன். முருகனைவணங்குகின்ற அடியார்க்கு பிரமன் தலையில் எழுதிய எழுத்து மெலிந்து வலிமை குன்றிவிடும்.

ஒரு பொருள் அருளாயோ ---

ஒப்பற்ற உபதேசப் பொருளை எனக்கு உபதேசித்தருள் செய்வீராக.

வலை மகள் ---

உமாதேவியார் பாண்டி நாட்டில் கீழ்க்கடல் ஓரத்தில் புன்னை மர நிழலில் ஒரு குழந்தையாக அவதரித்தருளினார். பரதவ குல பதியாகிய அரசன் எடுத்து வளர்த்தான். திரு நந்திதேவர் கடலின் மீனாகப் பிறந்து மக்களுக்கு இடர் விளைவித்தார். “இந்த மீனைப் பிடிப்பவனுக்கு என் புதல்வியைத் தருவேன்” என்று பரதவர்பதி பகர்ந்தான். சிவபெருமான் வலைஞனாக வடிவு கொண்டு சென்று வலைவீசி மீன் பிடித்து அருளினார். பரதவர் கோமான் அதிசயமுற்று தன் புதல்வியைக் கல்யாணஞ் செய்து கொடுத்தருளினார்.

பொது உற்று ---

பொது உற்று. பொது-அம்பலம். அம்பலத்தில் எம்பிரானுடன் எம்பிராட்டி நடனம் புரிகின்றாள்.

பொருட்பயனுக் குரையடுகிய சமைபவள் ---

சொல்லும் பொருளும் போல் சிவத்துடன் பொருந்தியிருப்பவர் உமாதேவியார்.

செகத்தை யகத்திடு நெடியவர் ---

உகாந்த காலத்தில் உலகமெல்லாம் ஒடுங்கி திருமால் திருவயிற்றில் அடங்கியிருக்கும் உலகம் மீள அவருடைய உதரத்திலிருந்து வெளிப்படும்.

உலகம் உண்டு உமிழ்ந்த பெருமாள் என அவரை ஆன்றோர் புகழ்வார்கள்.

அறத்தை வளர்த்திடு பரசிவை ---

காஞ்சிபுரத்தில் காமாட்சி இருநாழி நெல்லைக் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் வளர்த்தருளினார்.

ஐயன் அளந்த படி இரு நாழி கொண்டு அண்டம் எல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம் பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உந்தன் மெய்யருளே--- அபிராமி அந்தாதி.
 
இச்சை அந்தரி பார்வதி மோகினி
     தத்தை பொன்கவின் ஆலிலை போல்வயி
          றிற்ப சுங்கிளி யானமி னூலிடை ...... யபிராமி
எக்கு லங்குடி லோடுல கியாவையும்
     இல்ப திந்துஇரு நாழிநெ லால்அறம்
          எப்பொ தும்பகிர் வாள்கும ராஎன ...... வுருகேனோ..
                                                                  --- பச்சைஒண்கிரி (திருப்புகழ்).

திறத்தமிழைத் தரு பழையவள் ---

திறம்-ஆற்றல். தமிழ் மிகுந்த ஆற்றலுடையது.

      தென்னன் தமிழொடு பிறந்து, பழ மதுரையில் வளர்ந்த கொடி
           சப்பாணி கொட்டி யருளே”
          
நறைபழுத்த துறைத்தீந் தமிழின் ஒழுகும்நறும் சுவையே”
                                                               --- மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்

கருத்துரை

         திருத்தணியில் நடிக்குஞ் சிவகாமி குமரா! அடியேனுக்கு ஞானப்பொருளை உபதேசித்தருள்வீர்.


No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...