அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
மருக்குலம் மேவும்
(திருத்தணிகை)
திருத்தணிகை வேலா!
அடியார் திருக்கூட்டத்துள்
சேர்த்து அருள்.
தனத்தன
தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் ...... தனதான
மருக்குல
மேவுங் குழற்கனி வாய்வெண்
மதிப்பிள வாகும் ...... நுதலார்தம்
மயக்கினி
லேநண் புறப்படு வேனுன்
மலர்க்கழல் பாடுந் ...... திறநாடாத்
தருக்கனு
தாரந் துணுக்கிலி லோபன்
சமத்தறி யாவன் ...... பிலிமூகன்
தலத்தினி
லேவந் துறப்பணி யாதன்
தனக்கினி யார்தஞ் ...... சபைதாராய்
குருக்குல
ராஜன் தனக்கொரு தூதன்
குறட்பெல மாயன் ...... நவநீதங்
குறித்தயில்
நேயன் திருப்பயில் மார்பன்
குணத்ரய நாதன் ...... மருகோனே
திருக்குள
நாளும் பலத்திசை மூசும்
சிறப்பது றாஎண் ...... டிசையோடும்
திரைக்கடல்
சூழும் புவிக்குயி ராகுந்
திருத்தணி மேவும் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
மருக்குலம்
மேவும் குழல், கனி வாய், வெண்
மதிப் பிளவு ஆகும் ...... நுதலார் தம்,
மயக்கினிலே
நண்பு உறப்படு வேன்,உன்
மலர்க்கழல் பாடும் ...... திறம் நாடாத்
தருக்கன், உதாரம் துணுக்கு இலி, லோபன்,
சமத்து அறியா அன்பு ...... இலி, மூகன்,
தலத்தினிலே
வந்து உறப்பணி யாதன்,
தனக்கு இனியார் தம் ...... சபைதாராய்.
குருக்குல
ராஜன் தனக்கு ஒரு தூதன்,
குறள் பெல மாயன், ...... நவநீதம்
குறித்து
அயில் நேயன், திருப் பயில்
மார்பன்,
குணத்ரய நாதன் ...... மருகோனே!
திருக்குளம்
நாளும் பலத் திசை மூசும்
சிறப்பது உறா, எண் ...... திசையோடும்
திரைக்கடல்
சூழும் புவிக்கு உயிர் ஆகும்
திருத்தணி மேவும் ...... பெருமாளே.
பதவுரை
குருகுல ராஜன் தனக்கு --- குருகுலத்து
மன்னராகிய தருமருக்கு,
ஒரு தூதன் --- ஒப்பற்ற தூதுவராகச் சென்றவரும்,
குறள் --- வாமனரும்,
பெல மாயன் --- வலிமை மிகுந்த மாயரும்,
நவநீதம் குறித்து அயில் நேயன் --- வெண்ணெய்யை
நாடிச் சென்று உண்ட அன்பரும்,
திரு பயில் மார்பன் --- இலக்குமி தேவி வாழ்கின்ற திருமார்பரும்,
குணத்ரய நாதன் --- முக்குணங்கட்குத் தலைவரும்
ஆகிய திருமாலின்,
மருகோனே --- திருமருகரே!
திரு குளம் --- குமார தீர்த்தம் என்கிற
சரவணப் பொய்கை,
நாளும் பல திசை மூசும் --- நாள் தோறும் பல
திசைகளிலிருந்து வருகின்ற அடியார்கள் நெருங்கி நீராடுகின்ற,
சிறப்பு அது உறா --- சிறப்பினைப் பெற்றதும்,
எண் திசையோடும் --- எட்டு திசைகளிலும்,
திரை கடல் சூழும் புவிக்கு உயிர் ஆகும் ---
அலைகள் வாசும் கடலால் சூழப்பட்டுள்ள இந்த உலகத்திற்கு உயிர் நிலைத் தானமுமாகிய,
திருத்தணி மேவும் --- திருத்தணிகையம்பதியில்
எழுந்தருளியுள்ள,
பெருமாளே --- பெருமையில் மிகுந்தவரே!
மரு குல மேவும் குழல் --- வாசனைக்
கூட்டம் பொருந்திய கூந்தலையும்,
கனிவாய் --- கொவ்வைக்கனி போன்ற வாயையும்,
வெண்மதி பிளவு ஆகும் நுதலார் தம் --- வெண்
பிறை மதியைப் பிளந்த பிளவைப் போன்ற நெற்றி்யையும் உடைய மாதர்களின்,
மயக்கினிலே --- மோக மயக்கத்தினில்,
நண்பு உறப்படுவேன் --- நட்பு கொண்ட அடியேன்,
உன் மலர் கழல் பாடும் திறம் நாடா ---
தேவரீரது மலரடியைப் பாடுகின்ற வழிவகையை நாடாத,
தருக்கன் --- ஆணவம் பிடித்தவன்,
உதாரம் துணுக்கு இலி --- கொடைக்குணமும்
அச்சமும் இல்லாதவன்,
உலோபன் --- கஞ்சத்தனம் படைத்தவன்,
சமத்து அறியா --- திறமையில்லாதவன்,
அன்பு இலி --- அன்பு இல்லாதவன்,
மூகன் --- உமது நாமத்தைக் கூறாத ஊமையன்,
தலத்தினிலே வந்து உற பணியாதன் --- உமது
திருத்தலங்களில் சென்று உள்ளம் பொருந்தப் பணியாதவன்,
தனக்கு --- இத்தகைய சிறியனுக்கு,
இனியார் தம் சபை தாராய் --- தேவரீருக்கு
இனியராக விளங்கும் அடியார்களின் கூட்டத்தில் சேரும் பெரும் பேற்றினை அருள்
புரிவீராக.
பொழிப்புரை
குருகுல வேந்தராகிய தருமருக்கு
தூதுவராய்ச் சென்றவரும், மாவலியின் பால்
குள்ளமாகச் சென்றவரும், வலிமை மிகுந்த
மாயவரும், வெண்ணெயை விரும்பிச் சென்று
உண்ட நேசரும் திருமகள் உறைகின்ற திருமார்பினரும் முக்குணத்தின் தலைவரும் ஆகிய
நாராயணரது திருமருகரே!
நாள்தோறும் பல திசைகளிலிருந்து அடியார்கள்
வந்து நீராடுகின்ற குமார தீர்த்தம் என்ற சரவணப் பொய்கையின் சிறப்புடையதும், எட்டுத் திசைகளிலும் அலைகடல் சூழ்ந்த
இப்பூதலத்துக்கு உயிர் நாடியாக விளங்குவதுமாகிய திருத்தணிகை மலை மீது
எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!
வாசனைக் கூட்டம் நிறைந்த கூந்தலும், கொவ்வைக் கனி போன்ற வாயும், வெண்பிறையின் பிளவு போன்ற நெற்றியும் உடைய
மாதர்களின் மயக்கத்திலே விருப்பங்கொண்டவனும், உமது மலரடியைப் பாடும் வழிகளை
நாடாதவனும், ஆணவங் கொண்டவனும், தரும குணமும் அச்சமும் இல்லாதவனும், உலோபியும், திறமையில்லாதவனும், அன்பில்லாதவனும், உமது திருநாமத்தைக் கூறாத ஊமையனும், உமது திருத்தலங்கலில் வந்து உள்ளம்
பொருந்தப் பணியாதவனுமாகிய அடியே உமக்கு இனியராக விளங்கும் அடியார்களின்
திருக்கூட்டத்தில் சேரும் பெருவாழ்வைத் தந்தருளுவீர்.
விரிவுரை
மருக்குல
மேவும் குழல்
---
பெண்கள்
கூந்தலில் வாசனை நிறைந்த தைலங்கள்,
நறுமலர்கள்
இவைகளைச் சேர்ப்பார்கள். அதனால் அக்கூந்தல் நறுமணங் கமழும்.
கனிவாய் ---
கொவ்வைக்
கனிபோல் அதரம் சிவந்திருக்கும். அது அழகை அதிகரிக்கச் செய்யும்.
வெண்
மதிப்பிளவாகும் நுதல் ---
பிறைச்
சந்திரனை இரண்டாகப் பிளந்தால், அப்பிளவை எப்படி
யிருக்குமோ அப்படியிருக்கும் அம்மாதர்களின் நெற்றி.
மயக்கினிலே
நண்புறப்படுவேன் ---
அம்மாதர்களின்
துன்பமாகிய இன்பத்தில் மனம் வைத்து மயக்கத்திலேயே நாட்டமுற்று மனிதர் உழலுவர்.
விளக்கில் விழும் விட்டிலைப் போன்றவர்கள்.
மலர்க்கழல்
பாடுந் திறம் நாடா ---
இறைவனுடைய
திருவடிகளை நினைத்து உள்ளம் உருகி வாயாரப் பாடினால் ஆன்மா ஈடேறும். பாடும் பணியே
மேலானது “அளப்பில கீதஞ் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளுமாறே” என்கின்றார்
அப்பரடிகள்.
தருக்கன்
---
தருக்கு-நான்
என்னும் அகங்காரம்; நான் பேசுகின்றேன்; நான் நடாத்துகின்றேன்; நான் சமர்த்தன் என்று எண்ணித் தலைக்
கனம் உற்று உலாவுவோர்.
உதாரந்
துணுக்கிலி
---
உதாரம்-தாராள
குணம். துணுக்கு-அச்சம்.
தாராளமாக
வறியவர்க்கு வழங்க வேண்டும். செய்யத் தக்க காரியங்களைச் செய்வதில் அச்சம் இருத்தல்
வேண்டும்.
அஞ்சுவது அஞ்சாமை பேதமை, அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். --- திருக்குறள்.
லோபன் ---
லோபகுணம்
மிகமிகக் கொடியது. ஒரு மனிதனிடம் ஆயிரம் நற்குணங்கள் இருந்து, ஒரு உலோபகுணம் இருப்பின் அந்த ஆயிரம்
நற்குணங்களையும் மறைத்து உலோப குணமே வெளிப்பட்டுத் தோன்றி உலகம் பழிக்குமாறு
செய்யும். பல தீய குணங்கள் ஒருவன்பால் இருப்பினும், அள்ளி வழங்கும் வள்ளன்மையிருப்பின் அத்
தீய குணங்களை யெல்லாம் மறைத்து அவனை உலகம் மதிக்கத் துதிக்கச் செய்யும்.
உளப்பரும்
பிணிப்புறா உலோபம் ஒன்றுபோல்
அளப்பரும்
குணங்களை அழிக்கு மாறுபோல்
கிளப்பரும்
கொடுமையை அரக்கி கேடிலா
வளப்பரு
மருதவைப்பு அதனை மாற்றினாள். -கம்பர்.
இது
இராமரை நோக்கி விஸ்வாமித்திரர் கூறுகின்ற கவி. “இராமா! உலோபமாகிய ஒரு தீய குணம்
அநேக நற்குணங்களை அழித்துவிடுவது போல்,தாடகையாகிய
ஒருத்தி இவ்வனத்தில் பல வனங்களையும் அழித்துப் பாலைவனமாக்கி விட்டாள்.”
கர்ணனிடம்
தீய குணங்கள் அளவிலாதவையிருந்தன. அத்தனை தீய குணங்களையும், கொடைக்குணம் மறைத்து, அவனை உலகம் மதிக்குமாறு செய்துவிட்டது.
சமத்தறியா
அன்பிலி
---
சமத்து-சாமர்த்தியம்.
சிறிய முதல் வைத்து பெரிய லாபத்தைப் பெற்றவனைப் பார்த்து சாமர்த்தியசாலி என்று
உலகம் உரைக்கும். மூலதனமே இல்லாமல் வியாபாரம், செய்து முன்னுக்கு வந்தவனைப் பார்த்தும்
உலகர், “ஆ! இவன் பெரிய
சமர்த்தன்: என்று வியந்து கூறுவர்.
நாம்
இறைவனுடைய திருவடியில் ஒரு உத்தரணி தீர்த்தமும் ஒரு வில்வமும் இட்டால் இறைவன்
அளவற்ற செல்வமும் அழிவற்ற நலன்களையும் அருளுவான் இட்டது சிறிய பொருள். பெற்றது
பெரிய பொருள். இதுதானே உண்மையில் சாமர்த்தியம்?
இத்தகைய
சமர்த்து இல்லாதவன் என்கின்றார். இறைவனுடைய திருவடியில் இடையறாத அன்பு இருக்க
வேண்டும். அன்பு வைத்தால் அருள் பெறலாம்.
மூகன் ---
மூகம்-ஊமை; பஜனை புரியும் போதும், விரிவுரை புரியும் இடத்தும் இறைவனுடைய
நாமத்தை அடியார்கள் கூறும்போது சிலர் பேசாமல் அவனது நாமத்தைச் சொல்லாமல் ஊமை போல்
இருப்பார்கள். அவர்கள் வாக்கு படைத்த பயனைப் பெறாத பாவிகள்.
உறப்பணியாதான் ---
உற-மனம்
வாக்கு காயம் என்ற மூன்று கரணங்களும் பொருந்த இறைவனைப் பணிதல் வேண்டும்.
‘பணியாதவன்’ என்பது இடைக்குறையாகப் பணியாதன் என வந்தது.
இனியார்
தம் சபை தாராய் ---
அடியார்களது
சபையில் சேர்ந்துவிட்டால் முத்தி தானே வந்து கிட்டும். குருட்டுப் பசு மந்தையில்
சேர்ந்தால் தானே ஊர் வந்து சேர்ந்துவிடும்.
“தரையினாழ்த்திரையேழே போலெழு
பிறவி மாக்கட லூடே நானூறு
சவலை தீர்த்துன தாளே சூடியுன் அடியார்வாழ்
சபையினேற்றியின் ஞானாபோதமும்
அருளியாட்கொளு மாறே தானது
தமிய னேறகும னேநீ மேவுவ தொருநாளே”
--- (நிருதரார்க்கொரு)
திருப்புகழ்
குருக்குல
நாதன் தனக்கொரு தூதன் ---
குருகுல
மன்னராகிய தருமருக்காக, கண்ணபிரான்
கருணையுடன் பரம மூடனாகிய துரியோதனனிடம் தூது சென்றார்.
குறள் ---
மாவலியின்
பால் மூவடி மண் தானங் கேட்க நெடிய மால் குறிய வாமனனாகச் சென்றார். யாசகங் கேட்பவன்
குறுகிவிடுவான் என்ற குறிப்பை இது உணர்த்துகின்றது.
குணத்ரயநாதன் ---
சத்துவம், ராஜசம், தாமசம் என்ற முக்குணங்களுக்கும் அதிபன்.
திருக்குள
நாளும் பலத்திசை மூசும் சிறப்பதுறா ---
திருத்தணியில்
சரவணப் பொய்கை என்று வழங்குகின்ற குமார தீர்த்தத்தில் முழுகியவுடனே எத்தகைய
துயர்களும் நீங்கும்.
“எத்துயர்த் திரளும் அத்தினத் தகற்றும்
சரவணப் பொய்கைத் தடம்புனல துளைந்து
மென்மலர்க் குன்றம் மீமிசை
யிவர்ந்து” ---
தணிகையாற்றுப்படை.
எக்காலத்தும்
மகா புனிதமாக -இணையில்லாத மகிமையுடையதாக விளங்குகின்ற தீர்த்தம் அக்குமார
தீர்த்தம். அதில் முழுகி, மலைமீது மெல்ல ஏறும்
அடியார்களது வினைகள் தணியும். வினைகளைத் தணிக்க வல்ல தலம். ஆதலால் தணிகையெனப்
பட்டது.
திரைக்கடல்
சூழும் புவிக்கு உயிராகும் திருத்தணி ---
கடல்
சூழ்ந்த இப்பூதலத்துக்கு உயிர் நாடியாக விளங்குவது இத்தலம் என்று அருணகிரியார்
கூறுகின்றார். அதனால் இத்தலத்தின் பெருமை அளவிடற்கரியது. உடம்பு உயிரின்றி
இயங்காது. உயிரில்லாத உடம்பு ஒன்றுக்கும் பயன்படாது. அது போல் இவ்வுலகுக்கு உயிர்
திருத்தணியாகும். உலகை உயிர் போல் உய்விக்கின்ற அருமைத் திருத்தலம் தணிகை.
கருத்துரை
திருமால் மருகரே! திருத்தணி நாயகரே!
அடியேனை அடியார் திருக்கூட்டத்தில் சேர்த்து அருள் புரிவீராக.
No comments:
Post a Comment