திருத்தணிகை - 0306. முடித்த குழலினர்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

முடித்த குழலினர் (திருத்தணிகை)

திருத்தணிகை வேலா!
அடியேன் நினைத்தபோது எழுந்தருளி வந்து திருவடியை அருள்

தனத்த தனதன தனத்த தனதன
     தனத்த தனதன ...... தனதான


முடித்த குழலினர் வடித்த மொழியினர்
     முகத்தி லிலகிய ...... விழியாலும்

முலைக்கி ரிகள்மிசை யசைத்த துகிலினும்
     இளைத்த இடையினு ...... மயலாகிப்

படுத்த அணைதனி லணைத்த அவரொடு
     படிக்கு ளநுதின ...... முழலாதே

பருத்த மயில்மிசை நினைத்த பொழுதுன
     பதத்து மலரிணை ...... யருள்வாயே

துடித்து தசமுகன் முடித்த லைகள்விழ
     தொடுத்த சரம்விடு ...... ரகுராமன்

துகைத்தி வுலகையொ ரடிக்கு ளளவிடு
     துலக்க அரிதிரு ...... மருகோனே

தடத்து ளுறைகயல் வயற்கு ளெதிர்படு
     தழைத்த கதலிக ...... ளவைசாயத்

தருக்கு மெழிலுறு திருத்த ணிகையினில்
     தழைத்த சரவண ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


முடித்த குழலினர், வடித்த மொழியினர்,
     முகத்தில் இலகிய ...... விழியாலும்,

முலைக் கிரிகள் மிசை அசைத்த துகிலினும்,
     இளைத்த இடையினும் ...... மயல்ஆகி,

படுத்த அணை தனில் அணைத்த அவரொடு,
     படிக்குள் அநுதினம் ...... உழலாதே,

பருத்த மயில் மிசை நினைத்த பொழுது,
     பதத்து மலர்இணை ...... அருள்வாயே.

துடித்து தசமுகன் முடித் தலைகள் விழ
     தொடுத்த சரம் விடு ...... ரகுராமன்,

துகைத்து இ உலகை ஒர் அடிக்குள் அளவிடு
     துலக்க அரி திரு ...... மருகோனே!

தடத்துள் உறைகயல் வயற்குள் எதிர்படு
     தழைத்த கதலிகள் ...... அவைசாயத்

தருக்கும் எழில்உறு திருத்த ணிகையினில்
     தழைத்த சரவண ...... பெருமாளே.


பதவுரை


      தசமுகன் முடித் தலைகள் --- இராவணனுடைய முடியுடன் கூடிய தலைகள்,

     துடித்து விழ --- துடி துடித்து அற்று விழுமாறு,

     சரம் தொடுத்து விடு --- கணையை வில்லில் தொடுத்து விட்ட,

     ரகுராமன் --- ரகு குலத்தில் உதித்த ராமரும்,

     துகைத்து --- காலால் மிதித்து,

     இவ் உலகை ஒரு அடிக்குள் அளவு இடு --- இந்த உலகை ஓரடியால் அளந்து,

     துலக்க --- விளங்கும்படி காட்டிய,

     அரி திரு மருகோனே --- திருமாலின் திருமருகரே!

      தடத்து உள் உறை கயல் --- குளத்தில் வசிக்கின்ற கயல் மீன்கள்,

     வயற்குள் எதிர்படு --- வயல்களில் காணப்படுகின்ற,

     தழைத்த கதலிகள் அவை சாய --- வளமையாகவுள்ள வாழை மரங்கள் சாயும்படித் தாக்கி,

     தருக்கும் எழில் உறு --- களிக்கின்ற அழகுடைய,

     திருத்தணிகையில் --- திருத்தணிகை என்ற திருத்தலத்தில்,

     தழைத்த சரவண --- மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கின்ற சரவண மூர்த்தியே!

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

      முடித்த குழலினர் --- முடித்த கூந்தலையுடையவர்கள்,

     வடித்த மொழியினர் --- தேனை வடிகட்டியது போன்ற இனிய சொற்களையுடையவர் ஆகிய மாதர்களின்,

     முகத்தில் இலகிய விழியாலும் --- முகத்தில் விளங்குகின்ற கண்களாலும்,

     முலை கிரிகள்மிசை --- முலையாகிய மலைகள் மீது,

     அசைத்த துகிலும் --- அசைகின்ற ஆடையாலும்,

     இளைத்த இடையிலும் --- மெலிந்த இடையினாலும்,

     மயல் ஆகி --- அடியேன் மோகங் கொண்டவனாகி,

     படுத்த அணைதனில் --- படுத்த படுக்கையில்,

     அணைத்த அவரொடு --- தழுவிய அம்மாதர்களுடன்,

     படிக்கு உள் அநுதினம் --- உலகில் தினந்தோறும்,

     உழலாதே --- திரியாதவாறு,

     பருத்த மயில் மிசை --- பருமையுள்ள மயிலின் மீது,

     நினைத்த பொழுது --- அடியேன் நினைத்த அப்பொழுதிலேயே,

     உன பதத்து மலர் இணை அருள்வாயே -- உமது இரு பாதமலர்களைத் தந்தருளுவீராக.

பொழிப்புரை


         இராவணனுடைய முடியுடைய பத்து தலைகளும் துடித்து விழும்படி வில்லில் கணைகளைத் தொடுத்து விட்ட இரகுராமரும், காலால் இப்பூமியை மிதித்து, ஓரடியால் உலகை அளந்து விளக்கங் காட்டிய திருமாலுமாகிய நாராயணரது திருமகரே!

     குளத்தில் வாழ்கின்ற கயல் மீன்கள் வயலில் தழைத்துள்ள வாழை மரங்கள் சாயும்படிச் செய்து மகிழ்கின்ற அழகிய திருத்தணிகையம்பதியில் மகிழ்கின்ற சரவணரே!

     பெருமிதம் உடையவரே!

         முடித்த கூந்தலையுடையவரும், வடித்த தேன் போன்ற மொழியினருமாகிய பெண்களின் முகத்தில் விளங்கும் கண்களாலும், முலைகளாகிய மலைகள் மீது அசைகின்ற ஆடையாலும், மெலிந்த இட்சையாலும், அடியேன் மயக்கங்கொண்டு, படுத்த படுக்கையில் தழுவுகின்ற அப்பொது மகளிருடன் நாள்தோறும் திரியாமல், பருத்த மயிலின்மீது, அடியேன் நினைத்த அப்பொழுதே எழுந்தருளி வந்து உமது பாத மலர்கள் இரண்டையும் தந்தருளுவீராக.

விரிவுரை

முடித்த குழலினர் ---

மகளிர் ஐந்து விதமாகக் கூந்தலை முடிப்பார்கள். கூந்தலை முடிக்கும் வண்ணத்தால் இளைஞர்கள் மயங்குவர்.

      கூந்தல்மா முகிலை குலைத்து உடன் முடிப்பார்” --- வில்லிபாரதம்.

      கொண்டையிலா தார சோபையில் மருளாதே"           
                                                       --- (கொம்பனையார்) திருப்புகழ்.

வடித்த மொழியினர் ---

வடிகட்டிய தேன்போல் இனிக்கப் பேசுவார்கள்.

   தெட்டிலே வலிய மடமாதர் வாய் வெட்டிலே,
        சிற்றிடையிலே, நடையிலே,
      சேல்ஒத்த விழியிலே, பால்ஒத்த மொழியிலே,
        சிறுபிறை நுதல் கீற்றிலே,
  பொட்டிலே, அவர்கட்டு பட்டிலே, புனை கந்த
        பொடியிலே, அடியிலே, மேல்
      பூரித்த முலையிலே, நிற்கின்ற நிலையிலே,
        புந்திதனை நுழைய விட்டு,
 நெட்டிலே அலையாமல், அறிவிலே, பொறையிலே,
        நின் அடியர் கூட்டத்திலே,
      நிலைபெற்ற அன்பிலே, மலைவற்ற மெய்ஞ்ஞான
        ஞேயத்திலே, உன் இருதாள்
 மட்டிலே, மனதுசெல, நினது அருளும் அருள்வையோ?
        வளமருவு தேவை அரசே!
      வரை ராசனுக்கு இருகண் மணியாய் உதித்த மலை
        வளர்காத லிப்பெண்உமையே.                         --- தாயுமானார்.

உழலாதே ---

உலக இன்பம் தினைத்துணையாயது. இந்த இன்பத்தைக் கருதி ஆன்மாக்கள் அலைந்து உலைந்து அழிகின்றன.

இறைவனுடைய திருவடியில் ஊறுகின்ற பேரின்பம் அளவிடற்கரியது; தெவிட்டாதது.

பருத்த மயில் மிசை ---

மயில் உலகமெல்லாம் நிழல்படுமாறு தோகையை விரித்து ஆடும்.

பாம்பன் அடிகளாருக்கு விண்ணெல்லாம் ஒளி வீசுமாறு மயில் ஆடி வந்து காட்சி அளித்தது. அப்படிக் காட்சியளித்த நாள் மார்கழி அமாவசை கழிந்து பிரதமை. இந்நாள் மயூர வாகன சேவனம் என்று இன்றும் சென்னைக்கு அண்மையில் உள்ள திருவான்மியூர் மயூரபுரத்தில் கொண்டாடப் பெறுகின்றது.

                                                      கராசலங்கள்
எட்டும் குலகிரியெட்டும் விட்டோ எட்டாத வெளி
மட்டும் புதைய விரிக்குங்கலாப மயூரத்தானே”     --- கந்தர் அலங்காரம்.

நினைத்த பொழுது உன பதத்து மலரிணை அருள்வாயே ---

அடியேன் நினைத்த அப்பொழுதே மயில்மிசை வந்து முருகா! உனது இரு சரணாரவிந்தங்களைத் தந்தருள்வாய்” என்று சுவாமிகள் வேண்டுகின்றார்.

இவ்வாறு அப்பெருந்தகையார் நினைத்தபோதெல்லாம் எம்பெருமான் வந்து அவருக்குக் காட்சி தருகின்றான். இந்த அருட்டிறத்தை அவரே கூறுகின்றார்.

       எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர்நிற்பனே”
                                                                                          --- கந்தர் அலங்காரம்.

துடித்து தசமுகன் முடித்தலைகள் விழ தொடுத்த சரம்விடு ரகுராமன் ---

இராமர் ஒரு சொல், ஒரு இல், ஒரு கணை உடையவர். “ஒகமாட ஒகபாண ஒக பத்னி விருதுடு” என்பார் தியாகப் பிரம்மம்.

இராவணனுடைய பத்துத் தலைகளும் பனம்பழங்களைப் போல் துடித்து அறுந்து விழ ஒரு கணை விடுத்தருளினார்.

    முனைச் சங்கு ஓலிடு நீல மகோததி
            அடைத்து, அஞ்சாத இராவணன் நீள்பல
    முடிக்கு அன்று ஓர் கணை ஏவும் இராகவன் மருகோனே”   --- (அனிச்சங்) திருப்புகழ்

உலகை ஒர்அடிக்குள் அளவிடு அரி ---

      ........................................................படிமாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான்                              --- கந்தரலங்காரம்.


திருமால் வாமனாவதாரம் செய்து, மாவலிபால் மூவடி மண் கேட்டு வாங்கி, ஓரடியாக இம் மண்ணுலகத்தையும், மற்றோர் அடியாக விண்ணுலகத்தையும் அளந்து, மூன்றாவது அடியாக மாவலியின் சென்னியிலும் வைத்து அளந்தனர்.

திருமாலுக்கு நெடியோன் என்று ஒரு பேர். நெடியோனாகிய திருமால், மாவலிபால் குறியவனாகச் சென்றனர்.  அதற்குக் காரணம் யாது?  ஒருவரிடம் சென்று ஒரு பொருளை யாசிக்கின்ற போது, எண் சாண் உடம்பு ஒரு சாணாகக் குறுகி விடும் என்ற இரவச்சத்தை இது உணர்த்துகின்றது. 

ஒருவனுக்கு இரவினும் இழிவும், ஈதலினும் உயர்வும் இல்லை.

மாவலிபால் மூவடு கேட்டு திருமால் சேவடி நீட்டி உலகளந்த திறத்தினை அடிகள் கந்தரலங்காரத்தில் கூறும் அழகினையும் ஈண்டு சிந்தித்தற்குரியது.

தாவடி ஓட்டு மயிலிலும், தேவர் தலையிலும், என்
பாவடி ஏட்டிலும் பட்டதுஅன்றோ, படி மாவலிபால்
மூவடி கேட்டு அன்று மூதண்டகூட முகடு முட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன்தன் சிற்றடியே.

வாமனாவதார வரலாறு

பிரகலாதருடைய புதல்வன் விரோசனன்.  விரோசனனுடைய புதல்வன் மாவலி.  சிறந்த வலிமை உடையவன் ஆதலின், மாவலி எனப்பட்டான்.  அவனுடைய அமைச்சன் சுக்கிரன்.  மாவலி தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றி, வாள்வலியும், தோள்வலியும் மிக்கு மூவுலகங்களையும் தன்வசப் படுத்தி ஆண்டனன்.  அதனால் சிறிது செருக்குற்று, இந்திராதி இமையவர்கட்கு இடுக்கண் புரிந்து, அவர்களது குன்றாத வளங்களையும் கைப்பற்றிக் கொண்டான்.  தேவர் கோமானும் பாற்கடலினை அணுகி, அங்கு பாம்பணையில் பள்ளிகொண்டு இருக்கும் பரந்தாமனிடம் முறையிட்டனர்.  காசிபரும், அதிதி தேவியும் நெடிது காலம் சற்புத்திரனை வேண்டித் தவம் புரிந்தனர்.  தேவர் குறை தீர்க்கவும், காசிபருக்கு அருளவும் வேண்டி, திருமால் அதிதி தேவியின் திருவயிற்றில் கருவாகி, சிறிய வடிவுடன் (குறளாகி) அவதரித்தனர்.

காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்
வாலறிவற்கு அதிதிக்கு ஒரு மகவாய்,
நீல நிறத்து நெடுந்தகை வந்துஓர்
ஆல்அமர் வித்தின் அரும்குறள் ஆனான்.

மாவலி ஒரு சிறந்த வேள்வியைச் செய்யலானான்.  அவ் வேள்விச் சாலைக்கு வந்த இரவலர் அனைவருக்கும் வேண்டியவற்றை வழங்குவேன் என்று அறக் கொடி உயர்த்தினான்.  திரள் திரளாகப் பலப்பல இரவலர் வந்து, பொன்னையும் பொருளையும் பசுக்களையும் ஆனைகளையும் பரிசில்களாக வாங்கிக் கொண்டு சென்றனர்.  மாவலி வந்து கேட்டோர் அனைவருக்கும் வாரி வாரி வழங்கினான்.

அத் தருணத்தில், வாமனர் முச்சிப்புல் முடிந்த முப்புரி நூலும், வேதம் நவின்ற நாவும் ஆக, சிறிய வடிவுடன் சென்றனர்.  வந்தவரை மாவலி எதிர்கொண்டு அழைத்து வழிபட்டு, "என்ன வேண்டும்" என்று வினவினான்.  வாமனர், "மாவலியே! உனது கொடைத் திறத்தைப் பலர் புகழ்ந்து கூறக் கேட்டு, செவியும் சிந்தையும் குளிர்வுற்றேன்.  மிக்க மகிழ்ச்சி உறுகின்றேன்.  நின்னைப் போல் வழங்குபவர் விண்ணிலும் மண்ணிலும் இல்லை.  என் கால்களில் அளந்து கொள்ள மூவடி மண் வேண்டும்" என்று இரந்தனர்.

அருகிலிருந்த வெள்ளிபகவான், "மாவலியே! மாயவன் மாயம் செய்ய குறள் வடிவுடன் வந்துளான்.  அண்டமும் முற்றும் அகண்டமும் உண்டவனே இவ் மாமனன்.  ஆதலினால், இவன் ஏற்பதைத் தருவது நன்றன்று" என்று தடுத்தனன்.

மாவலி, "சுக்கிரபகவானே! உலகமெல்லாம் உண்ட திருமாலுடைய கரம் தாழ்ந்து, என் கரம் உயர்ந்து தருவதினும் உயர்ந்தது ஒன்று உண்டோ கொள்ளுதல் தீது. கொடுப்பது நன்று.  இறந்தவர்கள் எல்லாம் இறந்தவர்கல் ஆகார்.   ஒழியாது கையேந்தி இரந்து திரிபவரே இறந்தவராம்.  இறந்தவராயினும் ஏற்றவருக்கு இட்டவரே இருந்தவர் ஆகும்”.

மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கண் மாயாது
ஏந்திய கைகொடு இரந்தவர் எந்தாய்,
வீய்ந்தவர் என்பவர் வீய்ந்தவரேனும்
ஈய்ந்தவர் அல்லது இருந்தவர் யாரே.

எடுத்துஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னே
தடுப்பது நினக்கு அழகிதோ, தகைவுஇல் வெள்ளி,
கொடுப்பது விலக்கு கொடியோய், உனது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்.

"கொடுப்பதைத் தடுப்பவனது சுற்றம் உடுக்க உடையும் உண்ண உணவும் இன்றி தவிப்பர்.  ஆதலின், யான் ஈந்துவப்பேன்" என்று மாவலி வாமனரது கரத்தில் நீர் வார்த்து, "மூவடி மண் தந்தேன்" என்றான்.

உடனே வாமனமூர்த்தி தக்கார்க்கு ஈந்த தானத்தின் பயன் உயர்வதுபோல், அண்ட கோளகையை முடி தீண்ட திரிவிக்ரம வடிவம் கொண்டார்.  மண்ணுலகையெல்லாம் ஓரடியாகவும், விண்ணுலகையெல்லாம் ஓரடியாகவும் அளந்தார்.  "மூன்றாவது அடிக்கு அடியேன் சென்னியே இடம்" என்று பணிந்தனன் மாவலி.  வேதத்தில் விளையாடும் அப் பெருமானுடைய திருவடி மாவலியின் சென்னியில் வைத்து பாதலத்தில் வாழவைத்தது.  அடுத்த மந்வந்தரத்தில் இந்திரன் ஆகும பதமும் மாவலி பெற்றனன்.

கயல் வயற்குளெதிர்படு தழைத்த கதலிகள் அவைசாயச் செருக்கும்---

வயலின் அருகில் ஓங்கியுள்ள வாழைகள் நிழல் கொடுத்து பயிர்களின் வளர்ச்சிக்கு ஊறு செய்வதனால், வயல்களில் வாழும் கயல் மீன்கள் அவ்வாழையைச் சாயுமாறு செய்து மகிழ்கின்றன.

       சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயற்பொழில்”  --- கந்தர் அலங்காரம்.


கருத்துரை


         தணிகேசா! அடியேன் நினைத்தபோது உனது பதமலர் தந்தருள்வீர்.


No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...