திருத்தணிகை - 0305. முகிலும் இரவியும்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

முகிலும் இரவியும் (திருத்தணிகை)

திருத்தணிகை வேலா!
கீழோரைப் பாடும் அவலம் நீங்கவும்,
உன் திருவடியை அடையவும்,
அடியவரின் மேலான தவநெறியை அருள்.

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான


முகிலு மிரவியு முழுகதிர் தரளமு
     முடுகு சிலைகொடு கணைவிடு மதனனு
          முடிய வொருபொரு ளுதவிய புதல்வனு ......மெனநாடி

முதிய கனனென தெய்வதரு நிகரென
     முதலை மடுவினி லதவிய புயலென
          முகமு மறுமுக முடையவ னிவனென ..வறியோரைச்

சகல பதவியு முடையவ ரிவரென
     தனிய தநுவல விஜயவ னிவனென
          தபனன் வலம்வரு கிரிதனை நிகரென ...... இசைபாடிச்

சயில பகலவ ரிடைதொறு நடைசெயு
     மிரவு தவிரவெ யிருபத மடையவெ
          சவித அடியவர் தவமதில் வரவருள் ...... புரிவாயே

அகில புவனமு மடைவினி லுதவிய
     இமய கிரிமயில் குலவரை தநுவென
          அதிகை வருபுர நொடியினி லெரிசெய்த ...... அபிராமி 

அமரு மிடனன லெனுமொரு வடிவுடை
     யவனி லுரையவன் முதுதமி ழுடையவ
          னரியொ டயனுல கரியவ னடநவில் .....சிவன்வாழ்வே

திகிரி நிசிசரர் தடமுடி பொடிபட
     திரைக ளெறிகடல் சுவறிட களமிசை
          திரடு குறடுகள் புரள்வெகு குருதிகள் ...... பெருகாறாச்

சிகர கிரிநெரி படபடை பொருதருள்
     திமிர தினகர குருபர இளமயில்
          சிவணி வருமொரு தணிகையில் நிலைதிகழ் ......பெருமாளே.


பதம் பிரித்தல்


முகிலும், இரவியும், முழு கதிர் தரளமும்,
     முடுகு சிலைகொடு, கணைவிடு மதனனும்
          முடிய, ஒரு பொருள் உதவிய புதல்வனும் ....எனநாடி

முதிய கனன் என, தெய்வ தரு நிகர் என,
     முதலை மடுவினில் அதவிய புயல் என,
          முகமும் அறுமுகம் உடையவன் இவன் என,......வறியோரைச்

சகல பதவியும் உடையவர் இவர் என,
     தனிய தநு வல விஜயவன் இவன் என,
          தபனன் வலம்வரு கிரிதனை நிகர் என, ...... இசைபாடிச்

சயில பகலவர் இடைதொறு நடைசெயும்
     இரவு தவிரவெ, இருபதம் அடையவெ,
          சவித அடியவர் தவம் அதில் வர,அருள் ......புரிவாயே!

அகில புவனமும் அடைவினில் உதவிய
     இமய கிரி மயில், குலவரை தநு என
          அதிகை வரு புரம் நொடியினில் எரிசெய்த ...... அபிராமி

அமரும் இடன், அனல் எனும் ஒரு வடி உடை-
     யவன், இல் உரையவன், முதுதமிழ் உடையவன்,
          அரியொடு அயன் உலகு அரியவன், நடம்நவில் .....சிவன்வாழ்வே!

திகிரி நிசிசரர் தடமுடி பொடிபட,
     திரைகள் எறிகடல் சுவறிட, களமிசை
          திரடு குறடுகள் புரள் வெகு குருதிகள் ...பெருகு ஆறாச்

சிகர கிரி நெரிபட, படை பொருது அருள்
     திமிர தினகர! குருபர! இளமயில்
          சிவணி வரும் ஒரு தணிகையில் நிலைதிகழ் ...... பெருமாளே.
    
பதவுரை


      அகில புவனமும் அடைவினில் உதவிய --- எல்லா புவனங்களையும் முறைப்படி தந்த,

     இமயகிரி மயில் --- இமய மலையில் வளர்ந்த மயிலாகிய உமாதேவி,

     குலவரை தநு என --- சிறந்த மலையாம் மேருகிரியை வில்லாகக் கொண்டு,

     அதிகை வரு --- திருவதிகை என்ற திருத்தலத்தில் எழுந்தருளி,

     புரம் நொடியினில் எரி செய்த --- முப்புரத்தை ஒரு நொடிப் பொழுதில் எரித்தவரும்,

     அபிராமி -- பேரழகி,

     அமரும் இடன் --- இடப் பாகத்தில் பொருந்தியவரும்,

     அனல் எனும் ஒரு வடிவுடையவன் --- நெருப்பு என்னும் ஒப்பற்ற வுருவத்தினனும்,

     இல் உரையவன் --- வாக்குக்கு எட்டாதவனும்,

     முது தமிழுடையவன் --- பழந்தமிழுக்கு உரியவனும்,

     அரியொடு அயன் --- திருமாலுடன், பிரம்மாவும்,

     உலகு அரியவன் --- உலகத்தோரும் அறிய அரியவனும்,

     நடநவில் சிவன் --- திருநடனம் புரிகின்றவருமாகிய சிவபெருமானுடைய,

     வாழ்வே --- வாழ்வாக விளங்கும் குமாரரே!

      திகிரி நிசிசரர் --- சக்ராயுதத்துடன் வந்த அசுரர்களின்,

     தடமுடி பொடி பட --- பெரிய முடிகள் பொடியாகவும்,

     திரைகள் எறிகடல் சுவறிட --- அலைகள் வீசும் கடல்வற்றிப் போகவும்,

     களமிசை திரடு குறடுகள் புரள் வெகு குருதிகள் --- போர்க்களத்தில் மேடான உயர் நிலங்களிலும் புரண்டெழுந்த மிகுந்த உதிரவெள்ளம்,

     பெருகு ஆறா --- பெருகி ஆறாக ஓடும் படியும்,

     சிகர கிரி நெரிபட --- சிகரங்களையுடைய கிரவுஞ்சமலை நெறிபட்டு அழியவும்,

     படை பொருது அருள் --- வேற்படையால் போர் செய்தருளிய,

     திமிர தினகர --- அஞ்ஞான இருளை யகற்றும் ஞான சூரியனே!

     குருபர --- குருமூர்த்தியே!

      இள மயில் சிவணி வரும் --- இளமையான மயிலில் பொருந்தி வருகின்ற,

     ஒரு தணிகையில் நிலை திகழ் --- ஒப்பற்ற திருத்தணிகை மலையில் நிலைபெற்று விளங்கும்,

     பெருமாளே --- பெருமையில் மிகுந்தவரே!

      முகிலும் --- கொடையில் மேகம் என்றும்,

     இரவியும் --- புகழ் ஒளியில் சூரியன் என்றும்,

     முழுகதிர் தரளமும் --- அழகில் பேரொளி வீசும் முத்து என்றும்,

     முடுகு சிலை கொடு கணி விடு மதனும் --- வேகமாக வில்லெடுத்துக் கணிபொழிகின்ற மன்மதன் (அழகில்) என்றும்,

     முடிய ஒரு பொருள் உதவிய புதல்வனும் என --- தன் இளமை நலம் முழுவதும் வழங்கிய பூரு என்றும்,

     நாடி --- விரும்பிச் சென்று,

     முதிய கனன் என --- பழமையான கர்ணன் என்றும்,

     தெய்வ தரு நிகர் என --- தெய்வத் தருவாகிய கற்பகத்தை ஒப்பானவன் என்றும்,

     முதலை மடுவினில் அதவிய புயல் என --- மடுவில் முதலையைச் சங்கரித்த நீலவண்ணராகிய நாராயணர் என்றும்,

     முகமும் அறுமுகம் உடையவன் இவன் என --- முகமும் ஆறுமுகங்கொண்ட முருகன் என்றும்,

     வறியோரை --- தரித்திரனைப் பார்த்து,

     சகல பதவியும் உடையவர் இவர் என --- சகல சம்பத்தும் உடையவர் இவர் என்றும்,

     தனிய தநுவல விஜயவன் இவன் என --- ஒப்பற்ற வில்லாளியாகிய அர்ச்சுனன் இவன் என்றும்,

     தபனன் வலம் வரு கிரிதனை நிகர் என --- சூரியன் வலம் வருகின்ற பொன் மேரு மலையை நிகரானவன் என்றும்,

     இசை பாடி --- இசைப் பாடல்களைப் பாடி,

     சயில பகலவர் இடைதோறும் நடை செயும் --- கற்பிளவை யொத்த கடினமுள்ளவர்கள் இடங்கள் தோறும் சென்று நடந்து திரியும்,

     இரவு தவிரவே --- பிச்சை எடுக்குந் தொழில் நீங்கவும்,

     இருபதம் அடையவே ---  உமது இருபாதங்களை அடையவும்,

     சவித அடியவர் --- இதமுடன் கூடிய அடியார்களின்,

     தவம் அதில் வர --- தவமாகிய நிலை எனக்கு உண்டாக,
    
     அருள் புரிவாயே --- அருள் செய்வீராக.


பொழிப்புரை


         எல்லா உலகங்களையும் முறைப்படி ஈன்றவரும், இமயமலையில் வளர்ந்த மயில் போன்றவரும், மேருமலையை வில்லாக ஏந்தி திருவதிகையில் திரிபுரத்தை எரித்தவரும், அபிராமியுமாகிய உமை அம்மையை ஒருபுறத்தில் தரித்தவரும், நெருப்பான மேனியரும், உரைக்கு எட்டாதவரும், பழந்தமிழை உடையவரும், மாலும் அயனும் உலகோரும் அறிய ஒண்ணாதவரும் ஆகிய நடராசப் பெருமானுடைய திருக்குமாரரே!

     சக்ராயுதத்துடன் வந்த அசுரர்களின் முடிகள் பொடிபட்டழியவும், அலைகளுடன் கூடிய கடல் வற்றிப் போகவும், போர்க்களத்தில் மேடான உயர் நிலங்களில் புரண்டோடிய உதிர வெள்ளம் ஆறாகப் பெருகவும், சிகரத்தையுடைய கிரவுஞ்ச மலை நெரியவும், வேற்படை கொண்டு போர் செய்தருளிய அஞ்ஞான இருளை அகற்றும் ஞான சூரியரே!

     குருபரமூர்த்தியே!

     இளமையான மயிலில் பொருந்தியவரும், ஒப்பற்ற திருத்தணிகை மலையில் நிலையாக வீற்றிருக்கும் பெருமிதம் உடையவரே!

         கொடையில் மேகம் என்றும், புகழ் ஒளியில் சூரியன் என்றும் பேரொளி வீசும் முத்து என்றும், அழகில் வேகமாக வில்லைக் கொண்டு கணைபொழியும் மன்மதன் என்றும், தன் இளமை முழுதும் ஈந்த புதல்வனான பூரு என்றும், பழைய கர்ணன் என்றும், தெய்வத்தருவாகிய கற்பகத்திற்குச் சமமானவன் என்றும், ஆறுமுகனுடைய முருகவேள் என்றும், பரம தரித்திரனை சகல சம்பத்துக்களும் உடையவன் என்றும், நிகரில்லாத வில்லாளியான விசயன் என்றும், சூரியன் வலம் வரும் பொன் மேருகிரி என்றும், இசைப் பாடல்களைப் பாடி, கல்லில் பிளவு போன்ற கன்னெஞ்சர்களின் இடந்தொறும் என்று திரிகின்ற பிச்சையெடுக்கும் தொழில் நீங்கவும், உமது இருபாத மலர்களையடையவும், இனிய அடியவர்களின் தவநிலையைப் பெறவும் அருள் புரிவீராக.

 
விரிவுரை

முகிலும் ---

இத்திருப்புகழில் தமிழ்ப் புலவர்கள், காமதேனுவின் பாலைக் கமரில் சொரிந்தது போல், செந்தமிழ்க் கவிகளைப் பரம லோபிகளான மூடர்களைப் பாடிப் பரதவிக்கும் தன்மையை வன்மையாகக் கண்டிகின்றார்.

கைம்மாறு கருதாமல் மழை பொழியும் இயல்புடையது மேகம். தனவந்தர்களை ‘மேகம் போன்றவனே’ என்று புகழ்வர்.

புகழ் வீசுவதில் சூரியனுக்கு நிகரானவன் என்று கூறுவர்.

முழுகதிர் தரளமும் ---

சிறந்த ஒளி வீசுகின்ற முத்தே” என்று கூறுவர்.

முடுகு சிலைகொடு கணை விடுமதனும் ---

மன்மதன் ஆண் பென் இருபாலர் மீதும் கரும்பு வில்லை வளைத்து சுரும்பு நாணை மாட்டி, மலர்ப் பாணங்களை விட வல்லவன், இத்தகைய “மன்மதனுக்கு நிகரானவனே” என்று கூறுவர்.

முடிய ஒருபொருள் உதவிய புதல்வனும் ---

யயாதி என்ற மன்னனுக்குச் சுக்கிரர் கிழப் பருவம் வரக்கடவது என்று சபித்தார். பின்னே கருணை புரிந்து "உன் மக்களில் ஒருவனிடம் தந்து அவன் இளமையைப் பெற்று இன்புறுவாய்" என்று வரமீந்தார்.

யயாதியின் மக்களாகிய யது, துர்வசு, துருஷ்யு, அனு என்ற நான்கு புதல்வர்களும் தங்கள் இளமையைக் கொடுக்க மறுத்துவிட்டார்கள்.

பூரு என்ற கடைசி மகன் அவருடைய முதுமையைப் பெற்றுக்கொண்டு, தனது இளமையை யீந்தான். ஆயிரம் ஆண்டுகள் அவன் முதுமையுடன் துன்புற்றான்.

அன்றி, தன் தந்தையின் பொருட்டு, அரசையும், திருமணத்தையும் தியாகஞ் செய்த பீஷ்மரையும் குறிக்கும்.

முதிய கனன் என ---

"கர்ணன்" என்ற சொல் "கனன்" என வந்தது. கர்ணன் இடை ஏழு வள்ளல்களில் ஒருவன். வரையாது வழங்கியவன். தன் உடம்புடன் பிறந்ததும், உயிருக்கு உறுதி செய்வதுமான கவச குண்டலங்களை, இந்திரன் வேதியனாக வந்து யாசிக்க, சூரிய பகவான் தடுத்தும் கொடுத்து உவந்தான்.

தலை வள்ளல்கள் எழுவர் --- சகரன், காரி, நளன், துந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன்.

இடை ஏழு வள்ளல்கள் --- அந்திமான், சிசுபாலன், அக்குரன், வக்கிரன், சந்திமான், கன்னன், சந்தன்.

கடை ஏழு வள்ளல்கள் --- பாரி, எழிலி, நள்ளி, ஆய், மலையன், ஓரி, பேகன்.

முதலை மடுவினில் அதவிய ---

கஜேந்திரம் என்ற யானையை முதலை பற்றிக்கொண்டது. பல காலம் போர் புரிந்து யானை இளைத்துவிட்டது. அதனால் செயல் இழந்து ஆதிமூலமே என்று அழைத்து நம்பிக்கையோடு தும்பிக்கையைத் தூக்கிக் கதறியது.

திருமால் கருடன்மீது வந்து சக்கரத்தால் முதலையைக் கொன்று யானைக்கு அருள் புரிந்தார்.

அத்தகைய நாராயணருக்கு நிகரானவனே யென்று புகழ்ந்து கூறுவர்.

அறுமுகன் இவன் என ---

கேவலம் ஒரு மனிதனைப் பார்த்து “நீ ஆறுமுகக் கடவுள் போன்றவன்” என்று கூறுவர்.

வறியோரைச் சகல பதவியும் உடையவர் இவர் என ---

ஒரு காசும் இல்லாத பரம தரித்திரனைப் பார்த்து, “நீ எல்லாச் செல்வங்களும் உடையவன்” என்று புகழ்வர்.

இரட்டையர் என்ற புலவர்கள் மாறிமாறிப் பாடுவார்கள். ஒருவர்,

       குன்றும் வனமும் குறுகி வழி நடந்து
    சென்று திரிவ தென்றுந் தீராதோ”


என்று பாட,
                                                                               .........ஒன்றும்
    கொடாதனைச் சங்கென்றுங் கோவென்றுஞ் சொன்னால்
    இடாதோ அதுவே இது”

என்று மற்றொருவர் கூறினார்.

தனிய தநுவல விஜயவன் இவனென ---

வலிமையேயில்லாத ஒருவனை நீ வில்லில் விஜயன் போன்றவன் என்று கூறுவர்.

இப்படிக் கூறுகின்ற வழக்கம் 9-ஆம் நூற்றாண்டிலேயே இருந்தது போலும்

      மிடுக்கில்லாதானை வீமனே விறல்
         விஜயனே வில்லுக்கு இவனென்று
   கொடுக்கிலாதானைப் பாரியே யென்று
         கூறினுங் கொடுப்பாரிலை”                --- சுந்தரர்.
  
தபனன் வலம்வரு கிரிதனை நிகரென ---

சூரியன் வலம் வருகின்ற மலை பொன்மேருகிரி. அது பொற்குவியலுக்கு உறைவிடமானது. அதற்கு நிகரானவனே என்று கூறுவர்.

சயில பகலவர் இடைதொறு நடைசெயும் இரவு தவிரவெ ---

சயில பகலவர்-கற்பிளவையொத்தகடின சித்தம் உள்ளவர்கள். நம்பால் பலகாலும் இவன் நடக்கின்றானே என்று இரக்கப்படாமல் சீறி விழுவர்.

இரவு-இரத்தல் தொழில். இரந்தவரே இறந்தவராவார்.


சவித அடியவர் ---

இதம்-இனிமை. ச-உடன். இனிமையுடன் கூடிய அடியார்கள்.

       அகில புவனமு முதவு மலைமகள்”   --- பூதவேதாள வகுப்பு

அதிகை வரு புர நொடியினில் எரி செய்த ---

திரு அதிகை என்பது அட்டவீ ரட்டானங்களில் ஒன்று. இது திரிபுரம் எரித்த வீரம் உடைய தலம்.

இலுரையவன் ---

இல் உரையவன். உரைக்கு எட்டாதவன்; வாக்கும் மனமும் கடந்தவன் இறைவன்.

       மாற்றமனங் கழிய நின்ற மறையோனே”   - திருவாசகம்.


கருத்துரை

         திருத்தணிகேசா! மனிதரைப் பாடுந் துயரற அடியவர் பெறும் தவநிலை தந்தருள்வீர்.





No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...