அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
தலைமயிர் கொக்கு
(பழமுதிர்சோலை)
சோலைமலை முருகா!
திருப்புகழைச் சொல் பிழை வராமல் கற்று,
உனது திருவடியைத் தொழுது,
பிறவி அறுக்க அருள்.
தனதன
தத்தத் தனதன தத்தத்
தனதன தத்தத் தனதன தத்தத்
தனதன தத்தத் தனதன தத்தத் ...... தனதானா
தலைமயிர் கொக்குக் கொக்கந ரைத்துக்
கலகலெ னப்பற் கட்டது விட்டுத்
தளர்நடை பட்டுத் தத்தடி யிட்டுத்
...... தடுமாறித்
தடிகொடு
தத்திக் கக்கல்பெ ருத்திட்
டசனமும் விக்கிச் சத்தியெ டுத்துச்
சளியுமி குத்துப் பித்தமு முற்றிப்
...... பலகாலும்
திலதயி
லத்திட் டொக்கவெ ரிக்கத்
திரிபலை சுக்குத் திப்பிலி யிட்டுத்
தெளியவ டித்துற் றுய்த்துடல் செத்திட்
......டுயிர்போமுன்
திகழ்புகழ்
கற்றுச் சொற்கள்ப யிற்றித்
திருவடி யைப்பற் றித்தொழு துற்றுச்
செனனம றுக்கைக் குப்பர முத்திக் ......
கருள்தாராய்
கலணைவி
சித்துப் பக்கரை யிட்டுப்
புரவிசெ லுத்திக் கைக்கொடு வெற்பைக்
கடுகுந டத்தித் திட்டென எட்டிப் ...... பொருசூரன்
கனபடை
கெட்டுத் தட்டற விட்டுத்
திரைகட லுக்குட் புக்கிட எற்றிக்
களிமயி லைச்சித் ரத்தில்ந டத்திப்
...... பொருகோவே
குலிசன்ம
கட்குத் தப்பியு மற்றக்
குறவர்ம கட்குச் சித்தமும் வைத்துக்
குளிர்தினை மெத்தத் தத்துபு னத்திற்
...... றிரிவோனே
கொடியபொ
ருப்பைக் குத்திமு றித்துச்
சமரம்வி ளைத்துத் தற்பர முற்றுக்
குலகிரி யிற்புக் குற்றுறை யுக்ரப் ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
தலைமயிர் கொக்குக்கு ஒக்க நரைத்து,
கலகல எனப்பல் கட்டது விட்டு,
தளர்நடை பட்டு, தத்து அடி இட்டு, ...... தடுமாறி,
தடிகொடு
தத்தி, கக்கல் பெருத்திட்டு,
அசனமும் விக்கி, சத்தி எடுத்து,
சளியும் மிகுத்து, பித்தமும் முற்றி, ...... பலகாலும்
தில
தயிலத்து இட்டு, ஒக்க எரிக்க,
திரிபலை சுக்குத் திப்பிலி இட்டு,
தெளிய வடித்து, உற்று உய்த்து உடல் செத்திட்டு ......உயிர்போமுன்
திகழ்
புகழ் கற்றுச் சொற்கள் பயிற்றி,
திருவடியைப் பற்றித் தொழுது உற்றுச்
செனனம் அறுக்கைக்கு, பர முத்திக்கு ......அருள்தாராய்.
கலணை
விசித்து, பக்கரை இட்டு,
புரவி செலுத்தி, கைக்கொடு வெற்பைக்
கடுகு நடத்தித் திட்டு என எட்டிப்
...... பொருசூரன்
கனபடை
கெட்டுத் தட்டற விட்டு,
திரைகடலுக்குள் புக்கிட, எற்றிக்
களி மயிலைச் சித்ரத்தில் நடத்திப்
...... பொருகோவே!
குலிசன்
மகட்குத் தப்பியும், மற்றக்
குறவர் மகட்குச் சித்தமும் வைத்து,
குளிர்தினை மெத்தத் தத்து புனத்தில்
...... திரிவோனே!
கொடிய பொருப்பைக் குத்தி முறித்து,
சமரம் விளைத்துத் தற்பரம் உற்றுக்
குலகிரியிற் புக்கு உற்றுஉறை உக்ரப்
...... பெருமாளே.
பதவுரை
கலணை விசித்து --- சேணத்தைக் கட்டி,
பக்கரை இட்டு --- அங்கவடி இட்டு,
புரவி செலுத்தி --- குதிரைகளைச் செலுத்தியும்,
கைகொடு வெற்பை --- தும்பிக்கையுடன் கொடிய
மலைபோன்ற யானைகளை,
கடுக நடத்தி --- வேகமாக நடத்தியும்,
திட்டென எட்டி பொரு சூரன் --- திடீர் என்று
நெருங்கிய வந்து போர் செய்த சூரபன்மனுடைய,
கனபடை கெட்டு தட்டு அறவிட்டு --- பெரியபடை
அழிந்து நிலைகுலையும்,
திரை கடலுக்கு உள் புக்கிட ஏற்றி --- சூரன்
அலை கடலுக்குள் புகுமாறு அவனை மோதியும்,
களி மயிலை --- மகிழ்ச்சி கொண்ட மயிலை,
சித்ரத்தில் நடத்தி பொரு கோவே --- அழகாக
நடத்திப் போர் புரிந்த தலைவரே!
குலிசன் மகட்குத் தப்பியும் --- குலிசாயுதம்
கொண்ட இந்திரன் புதல்வியாகிய தெய்வயானைக்குத் தெரியாமல் சென்று,
மற்று அக் குறவர் மகட்கு
சித்தமும் வைத்து --- வள்ளி நாயகி மீது உள்ளத்தை வைத்து,
குளிர்தினை மெத்த தத்து புனத்தில் திரிவோனே
--- குளிர்ந்த தினைகள் மிகவும் பரவியுள்ள தினைப்புனத்தில் திரிந்தவேர!
கொடிய பொருப்பை குத்தி முறித்து --- பொல்லாத
கிரவுஞ்சமலையை வேலால் குத்தி அழித்து,
சமரம் விளைத்து --- போர் புரிந்து,
தற்பரம் உற்று --- மேம்பட்ட உமது நீதியை
விளக்கி,
குலகிரியில் புக்கு உற்று உறை --- சோலைமலையில்
புகுந்து வீற்றிருக்கின்ற,
உக்ர பெருமாளே --- வீரம் பெருந்திய பெருமையில்
சிறந்தவரே!
தலை மயி்ர் --- தலையிரானது,
கொக்குக்கு ஒக்க நரைத்து --- கொக்குபோலவே
வெளுத்தும்,
கல கல என பல் கட்டது விட்டு --- கல கல என்று
பல்வரிசைகளின் கட்டு விட்டும்,
தளர் நடை பட்டு --- நடை தளர்வுற்றும்,
தத்து அடி இட்டு --- தத்தி தத்தி அடிவைத்து
நடத்தும்,
தடுமாறி --- தடுமாற்றத்தை அடைந்தும்,
தடி கொடு தத்தி --- தடியை ஊன்றி தாண்டியும்,
கக்கல் பெருதிட்டு --- ஒக்காளம் மிகுந்து,
அசனமும் விக்கி --- உணவு உண்ண முடியாமல்
விக்கல் எடுத்தும்,
சத்தி எடுத்து --- வாந்தியாகியும்,
சளியும் மிகுந்து --- சளி அதிகப்பட்டு,
பலகாலும் பித்தமும் முற்றி --- பல நேரங்களில்
பித்தம் அதிகமாகியும்,
தில
தயிலத்து இட்டு --- எண்ணெயிலிட்டு,
ஒக்க எரிக்க --- எரித்தல்போல் உடம்பு
எரிச்சல் உண்டாக,
திரி பலை --- தான்றிக்காய், கடுக்காய், நெல்லிக்காய் இந்த மூன்றையும்,
சுக்கு திப்பிலி இட்டு --- சுக்கையும்
திப்பிலியையும் சேர்த்துக் கஷாயஞ் செய்து,
தெளிய வடித்து உற்று --- தெளிய வைத்து
வடிகட்டி,
துய்த்து --- அதனைப் பருகி,
உடல் செத்து இட்டு உயிர் போம் முன் --- உடல்
மடிந்து உயிர் போவதற்கு முன்னர்,
திகழ் புகழ் கற்று சொற்கள் பயிற்றி --- அத்திருப்புகழின்
சொற்களை நிரம்பப் பயின்றும்,
திருவடியை பற்றி --- தேவரீருடைய திருவடியைப்
பற்றியும்,
தொழுது உற்று --- தொழுது உம்மை அடைந்து,
செனனம் அறுக்கைக்கு --- பிறப்பை ஒழிக்கும் வண்ணம்,
பர முத்திக்கு அருள் தாராய் --- பரமுத்தியை அடையத்
திருவருள் புரிவீராக.
பொழிப்புரை
சேணம் கட்டி, அங்கவடி இட்டு குதிரைகளைச் செலுத்தியும், துதிக்கை கொண்ட மலை போன்ற கொடிய யானைகளை
வேகமாக நடாத்தியும், திடீர் என்று
நெருங்கி வந்து போர் புரிந்த சூரனுடைய பெரியபடை அழிந்து நிலைகுலையவும், சூரன் அலைகடலுக்குட் புகும்படி அவனைத்
தாக்கியும், களிப்பு மிகுந்த
மயிலை அழகுடன் நடாத்திப் போர்புரிந்த தலைவரே!
இந்திரன் மகளாகிய தேவசேனைக்குத் தெரியாமல், வள்ளி மீது மனம் வைத்து குளிர்ந்த
தினைகள் மிகவும் பரந்துள்ள புனத்தில் திரிந்தவரே!
கொடிய கிரவுஞ்ச மலையை வேலினால்
குத்தியழித்துப் போர் புரிந்து மேம்பட்ட நிலையை விளக்கியவரே!
சோலை மலையில் எழுந்தருளிய வீரம் பொருந்திய
பெருமிதமுடையவரே!
தலை மயிர் கொக்குபோல் நரைத்தும், கல கல என்று பல் கட்டுவிடவும், தத்தித்தத்தித் தளர் நடையிட்டு நடந்து
தடுமாற்றத்துடன் தடியூன்றி நடந்தும், ஒக்காளம்
மிகுந்து உணவும் விலக்கி வாந்தி யெடுத்தும், சளி மிகுந்தும், பித்தம் பலகாலும் மேலிட்டும், எண்ணெயிலிட்டதுபோல் உடல்
எரிச்சலுண்டாகியும், தான்றிக்காய்
நெல்லிக்காய் கடுக்காய் சுக்கு திப்பிலி இவைகளை இட்டுக் கஷாயஞ் செய்து, தெளிந்த பின் வடிகட்டிப் பருகியும், உடல் மடிந்து உயிர் போவதற்குமுன், உமது திருப்புகழைக் கற்று, அதன் சொற்களைப் பயின்று, திருவடியைப் பற்றித் தொழுது, உம்மைச் சேர்ந்து, பிறப்பு ஒழியுமாறு பரமுத்தி பெற அருள் புரிவீர்.
விரிவுரை
தலைமயிர்
கொக்குக்கு ஒக்க நரைத்து ---
எண்பத்து
நான்கு நூறாயிர யோனி பேதங்களில் எந்த உயிர்க்கும் நரை கிடையாது; பன்றி, யானை, காக்கை முதலியவைகட்கு உரோமம்
நரைப்பதில்லை.
உயர்ந்த
பிறப்பு என்று கருதப்படுகின்ற மனிதனுக்கு மட்டும் நரையுண்டு. ஏன்? நரைப்பதின் காரணம் யாது? இது இறைவன் நமக்குத் தரும் வக்கீல்
நோட்டீஸ். மற்ற பிராணிகள் உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டும் வந்தவை. மனிதன்
பிறவாமையைப் பெற வந்தவன். ஏன் பிறந்தோம் என்பதை மறந்திருந்தவனுக்கு இறைவன்
செய்யும் எச்சரிக்கை நரையென வுணர்க. நரை யுண்டானவுடனே ஆசாபாசங்களையகற்றி தவநெறியில்
நாட்டம் உண்டாக வேண்டும். காதின் அருகில்ஒரு நரையைக் கண்ட மாத்திரத்தில தயரதர்தவம்
மேற்கொள்ள முயன்றார் என்கிறது இராமாயணம். ஒரு ரோமம் நரைத்தவுடன் ஒரு பொருளில் உள்ள
பற்றையாவது விடவேண்டும்.
பல்
கட்டு அது விட்டு ---
பற்கள்
இடையிலே முளைக்கின்றன. இடையிலேயே உதிர்ந்து விடுகின்றன.
சத்தி
எடுத்து ---
சத்தி-வாந்தி.
முதுமையால் வாந்தியும் விக்கலும் வந்து துன்புறுத்தும்.
தில
தயிலத்து இட்டு ஒக்க எரிக்க ---
கொதிக்கின்ற
எண்ணெயில் இட்டது போல் உடம்பில் எரிச்சல் உண்டாகும். இது ஒரு நோய்.
திரிபலை
---
திரிபலை-தான்றிக்காய், நெல்லிக்காய், கடுக்காய், இந்த மூன்றுஞ் சேர்ந்தது, இது வைத்திய பரிபாஷை.
திகழ்
புகழ் கற்று ---
முருகனுடைய
புகழைக் கற்றவர்க்கு இருள்சேர் இருவினையுஞ் சேரா.
கால
பயம் தீரும்; சீல நலம் சேரும்; சித்தி எலாம் எய்தும்.
“திருப்புகழை கற்பார்க்குச்
சித்தியெட்டும் எளிதாமே”
--- தணிகைச்சந்நிதிமுறை
செனனம்
அறுக்கைக்குப் பர முத்திக்கு அருள்தாராய் ---
பதமுத்தியினும்
சிறந்தது பரமுத்தி. அது பெற்றார் பிறவியைப் பெறார்.
கலணை
விசித்துப் பக்கரை இட்டு ---
கல்லணை-குதிரையின்
மீது இருக்கின்ற சேணம். பக்கரை-அங்கவடி.
“பக்கரை விசித்ரமணி
பொற்கலணை இட்டநடை
பட்சி எனும் உக்ர துரகம்” --- திருப்புகழ்
கைகொடு
வெற்பை ---
வெற்பு-மலை.
இது இங்கு உவமஆகு யெராக யானையைக் குறிக்கின்றது. தும்பிக்கையுங் கொடுமையும் உடைய
மலைபோன்ற யானைகள்.
களி
மயிலைச் சித்திரத்தில் நடத்தி ---
இங்கே
சூரபன்மனுடன் போர் புரியும்போதே முருகன் மயிலில் ஆரோகணித்திருந்தார் என்று
அருணகிரியார் கூறுகின்றார்.
சூரபன்மன்
சக்கரவாகப் பறவை உருவெடுத்துப் போர் புரிய வந்தபோது இந்திரன் மயிலாகி வந்து
முருகவேளைத் தாங்கினான்.
முருகவேளைத்
தாங்கும்பேறு பெற்றோமே என்று மகிழ்ந்தான் இந்திரன். அதனால் “களி மயில்” என்றார்.
“பன்னிரு நாட்டத்து அண்ணல்
படர்சிறை மயூரமாகி
முன்னுறு மகவான் தன்மேல் மொய்ம்புடன்
புக்குவைகி” --- கந்தபுராணம்
குலிசன்
மகட்குத் தப்பியும் ---
இங்கே
முருகவேள் வள்ளியை மணக்கும் பொருட்டுப் புறப்பட்ட போது தெய்வயானையம்மைக்குத்
தெரியாமல் போனார் என்று வருகின்றது. அது வஞ்சனையன்று. தெரிந்தால் தெய்வயானையம்மை
சினங்கொள்வார் என்பதுமன்று? வேறு ஏன்? கூறுதும்.
திருமாலின்
கண்மணிகளில் பிறந்த பெண்மணிகள் அமுதவல்லியும் சுந்தரவல்லியும். இவ்விருவரும்
வாழ்க்கையில் பிரியாதிருக்க வேண்டும் என்று கருதி தவஞ்செய்து, முருகனை “எங்கள் இருவரையும் மணந்தருள
வேண்டும்” என்று வரம் இரந்தார்கள்.
பெருமான்
அவர்களை துரைமகளாகவும், குறமகளாகவும்
பிறக்குமாறு பணிந்தருளினார். அதன்படி அமுதவல்லி தானே மகவாகத் தோன்றி ஐராவத
யானையால் வளர்க்கப்பட்டு திருப்பரங்குன்றத்தில் திருமுருகனை மணந்துகொண்டார்.
இளையாள்
சுந்தரவல்லி வள்ளி மலையில் மான் வயிற்றில் பிறந்து வளர்ந்தாள். முருகன் இதை
முன்னமே தெய்வயானைக்கு அறிவித்தால் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியுண்டாகும். ஆதலால்
முருகன் தெய்வயானையம்மை யுணராதவண்ணம் சென்று வள்ளியை மணந்துகொண்டு சென்றார். இதைக்
கண்ட தெய்வயானையம்மை, முன்பிரிந்த தங்கையை
மீளவும் சந்தித்ததற்குப் பெரும் மகிழ்ச்சியைத் தரும் பொருட்டு முருகன் அவருக்குத்
தெரியாமல் சென்று வள்ளியை மணந்தார் என வுணர்க.
புனத்தில்
திரிவோனே ---
முருகப்
பெருமான் வேதமுடிவில் விளையாடும் பாத கமலங்களை வைத்து தினைப்புனத்தின் அருகில்
திரிந்தருளினார். தினைப்புனம் என்ன புண்ணியஞ் செய்ததோ?
“சுனையோடு அருவித்
தினையோடு பசுந்
தினையோடு இதணோடு திரிந்தவனே” --- கந்தரநுபூதி
கருத்துரை
பழமுதிர்
சோலைப் பரமனே! பரமுத்தி யருள்புரிவாய்.
No comments:
Post a Comment