ஈ என்று நான் ஒருவர்




       வள்ளல்பெருமான் என வழங்கப்படும், இராமலிங்க சுவாமிகள், சென்னையில் ஏழுகிணறுப் பகுதியில், விராசாமிப் பிள்ளைத் தெருவில் வாழ்ந்திருந்த காலத்தில், கந்தகோட்டம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள, முருகப் பெருமானை வழிபட்டுப் பாடியது "தெய்வமணி மாலை" என்னும் 31 பாடல்களைக் கொண்டது.
சுவாமிகள் தமது ஒன்பதாம் வயதில், இறையருள் நிரம்பப் பெற்றுப் பாடியது.

அதில் வரும் ஒரு பாடலைக் காண்போம்....

ஈ என்று நான் ஒருவர் இடம் நின்று கேளாத
இயல்பும், என்னிடம் ஒருவர் ஈது
இடு என்ற போது அவர்க்கு இ(ல்)லை என்று சொல்லாமல்
இடுகின்ற திறமும், இறையாம்

நீ என்றும் எ)ன்)னை விடா நிலையும், நான் என்றும் உள்
நி(ன்)னை விடா நெறியும், அயலார்
நிதி ஒன்றும் நயவாத மனமும், மெய்ந்நிலை நின்று
நெகிழாத திடமும், உலகில்

சீ என்று, பேய் என்று, நாய் என்று பிறர் தமைத்
தீங்கு சொல்லாத தெளிவும்,
திரம் ஒன்று வாய்மையும், தூய்மையும் தந்து, நின்
திருவடிக்கு ஆள் ஆக்குவாய்,

தாய்ஒன்று சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே!
தண்முகத் துய்யமணி, உள்முகச் சைவமணி,
சண்முகத் தெய்வ மணியே.

இதன் பொருள் ---

தாய்ஒன்று சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே --- எல்லோருக்கும் தாய் போன்று விளங்கும் சென்னையில் கந்த கோட்டத்துள், அருள்  ஓங்க விளங்கும் கந்தவேளே!

தண்முகத் துய்யமணி --- சினமே இல்லாத குளிர்ந்த முகத்துடன் உள்ள தூய மணியைப் போல்பவரே!

உள்முகச் சைவமணி, --- உள்முகத்துள்ளே  அன்பு நிறைந்த மணியே!


சண்முகத் தெய்வமணியே --- ஆறு திருமுகங்களை உடைய, தெய்வங்களில் சிறந்தவரே!

ஈ என்று நான் ஒருவர் இடம் நின்று கேளாத இயல்பும், --- நான்  ஒருவரிடம் போய் நின்று எனக்கு வேண்டியதைத் தருவாயாக யாசகம் கேட்டுப் பெறாத இயல்பும்,

என்னிடம் ஒருவர் ஈது இடு என்ற போது அவர்க்கு இ(ல்)லை என்று சொல்லாமல் இடுகின்ற திறமும் ---என்னிடம் ஒருவர் வந்து என்னிடம் உள்ள ஒரு பொருளைச் சுட்டி, இதைத் தருவாயாக என்று கேட்டால், அவருக்கு இல்லை என்று சொல்லாமல் இடுகின்ற  மன உறுதியும்,

நீ என்றும் எ)ன்)னை விடா நிலையும்  ---  (முருகப் பெருமானே!) நீ என்னை என்றும் கைவிட்டிடாத நிலையும்,

நான் என்றும் உள் நி(ன்)னை விடா நெறியும் --- நான் என்றும் என் நெஞ்சத்தின் உள்ளே உனது  நினைவை விடாது பற்றி வழிபாடு செய்கின்ற நெறியும்,

அயலார் நிதி ஒன்றும் நயவாத மனமும் --- அடுத்தவர்கள் வசம் உள்ள பொருளை விரும்பாத மனமும்,

மெய்ந்நிலை நின்று நெகிழாத திடமும் --- உண்மை நிலையில் இருந்து தளராமல் ஒழுகுகின்ற உள்ளத் திடமும்,

உலகில், சீ என்று, பேய் என்று, நாய் என்று பிறர் தமைத் தீங்கு சொல்லாத தெளிவும் ---  எக்காரணம் கொண்டும், எந்த நிலையிலும் மற்றவர்களை சீ என்றும் , பேய் என்றும், நாய் என்றும் தீங்கு சொல்லாமல் வாழும் தெளிவும்,

திரம் ஒன்று --- நிலைபேறும், உறுதியும் உள்ளத்தில் கொண்டு,

வாய்மையும், தூய்மையும் தந்து --- உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவதால் உண்டாகும் மனத் தூய்மையும் அடியேனுக்கு அருள் புரிந்து,

நின் திருவடிக்கு ஆள் ஆக்குவாய் --- உனது திருவடிக்கு நான் ஆளாகும்படி அருள் செய்வாய்.

விளக்கம் ---

"ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே,
தா என் கிளவி ஒப்போன் கூற்றே,
கொடு என கிளவி உயர்ந்தோன் கூற்றே"

என்பது தொல்காப்பியம்.

"ஈ தா கொடு எனும் மூன்றும் முறையே
இழிந்தோன், ஒப்போன், மிக்கோன் இப்புரை"

என்பது நன்னூல்.

இவ்விரு நூல்களின் கருத்துப்படி, இழிந்த நிலையில் உள்ள ஒருவன், மற்றொருவனிடம் சென்று இரப்பது "ஈ" என்பதாகும். இது பொருள் இல்லாது இரப்பதாகும். பொருள் இல்லாத நிலையை இது காட்டும். பொருள் இருந்தும், பொருள் மீது கொண்ட ஆசை காரணமாக, இல்லை எனச் சென்று இரப்பதும் உண்டு. உள்ளபொருள் தொலைந்து போய், இல்லை என்று சென்று இரப்பதும் உண்டு.

தன்னோடு ஒப்பாக உள்ள ஒருவனிடம் சென்று ஒரு பொருளைக் கேட்பது, "தா" என்பதாகும். இதுவும் பொருள் இல்லாத நிலையைக் காட்டும். கைம்மாற்றான கடனாகவும் இது அமையலாம்.

தன்னினும் தாழ்ந்தோரிடம் சென்று ஒரு பொருளைக் கேட்பது "கொடு" என்பதாகும். ஒரு நற்செயலுக்காகப் பொருள் ஈட்டுங்கால், தன்னை விடவும் தாழ்ந்தோரிடமும் சென்று கேட்கவேண்டும். அவர் என்ன கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது. அவர் என்ன கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளவேண்டும்.

ஆக, எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்னும் தொல்காப்பிய விதிப்படி,

ஈவது ஈகை. 
தருவது தருமம்,
கொடுப்பது கொடை ஆகும்.

"ஈயென இரத்தல் இழிந்தன்று, அதன்எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று,
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று"

என்பது புறநானூற்றுப் பாடல்.

ஈ என்று சென்று இரப்பது இழிவானது.
ஈயேன் என்ற சொல்வது அதனினும் இழிவானது.
கொள்வாயாக என்று கொடுத்தல் உயர்வானது.
கொடுத்தாலும், கொள்ளேன் என்று சொல்வது அதனினும் உயர்வானது.

"ஏற்பது இகழ்ச்சி" என்பது ஔவைப் பாட்டி அருளிய ஆத்திசூடி. நிலை தாழ்ந்து போனாலும், ஒருவரிடம் சென்று யாசகம் கேட்பது இழிவானது ஆகும். கேட்பவர் கொடுத்தாலும் கொடுப்பார். நாளை வா என்று இழுக்கடித்தலும் செய்யலாம். அடுத்த நாள் வரும்போது இல்லை என்றும் சொல்லலாம். ஆதனால், ஈ என இரத்தல் இழிந்தன்று" (இழிவான செயல்) எனப்பட்டது. அப்படிப்பட்ட இழிவான நிலை வரக் கூடாது என்கின்றார் வள்ளல்பெருமான்.

இல்லை என்று ஒருவர் வந்து, பல் எல்லாம் தெரியக் காட்டி, இரந்து நிற்கும்போது, இரக்கப்படுவது மனித இயல்பு. யாருக்கும் கொடுக்காமல், தாமே மிகு பொருள் கொண்டு வாழவேண்டும் என்று எண்ணும் உலோபத் தனம் மனிதனிடத்தில் இருப்பதும் உண்டு. ஆனால், இல்லை என்று வந்து இரந்தவர்க்கும் கொடுக்க மனம் எழவில்லையானால், அது மிகவும் இழிவான நிலை. இதனால், ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று" எனப்பட்டது. இரப்பவர்க்கு இல்லை என்று சொல்லாமல் உதவுகின்ற நல்ல மனம் அமைய அருள் புரிய வேண்டுகின்றார்.

என்றும் உள்ளத்தில் இறை நினைவை இருத்தி வைத்து இருப்போரை, இறைவன் மறப்பதில்லை.   டவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பதால், அப்படிப்பட்ட பெருமானைத் தான் என்றும் மறவாமல் நினைந்து வழிபட வேண்டும் என்கின்றார்.

"வஞ்சம் அற்ற மனத்தாரை மறவாத பிறப்பு இலியை,
பஞ்சிச் சீறடியாளைப் பாகம் வைத்து உகந்தானை,
மஞ்சு உற்ற மணிமாட வன்பார்த்தான் பனங்காட்டூர்
நெஞ்சத்து எங்கள் பிரானை, நினையாதார் நினைவு என்னே!"

என்பது சுந்தரர் தேவாரம்.

"அயலார் நிதி ஒன்றும் நயவாத மனமும்" என்பதுதான் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய இன்றியமையாத பண்பு ஆகும். அடுத்தவன் பொருளுக்கு ஆசைப் படக் கூடாது. அது பொறாமைக்கு இடம் தரும். பொறைமை வந்தால், அடுத்தவர் பொருளை எப்படியாவது கவர்ந்து அனுபவிக்க வேண்டும் என்னும் எண்ணம் அறியாமலேயே உதிக்கும். அது நிச்சயம் அழிவிலே கொண்டு சேர்க்கும். பெருவெள்ளம் வந்தபோது, ஆற்றில் ஏற்கெனவே இருந்த நீரும் அடித்துக் கொண்டு போகப் படுவது போல், வஞ்சகத்தால் பொருள் வந்தால், அது விரைந்து போகும்போது, உள்ள பொருளையும் கொண்டு சென்று விடும்.

மெய் நிலை --- உண்மையான நிலை. அன்பு, அடக்கம், ஒழுக்கம், உண்மை, பொறுமை, கடமை உணர்ச்சி. இன்ன பிற எல்லாம் மெய்ந்நிலை ஆகும். மெய்ந்நிலை நின்றோர் மெய்ப்பொருளாகிய இறையருளைப் பெற்று மகிழலாம். பொய்ந்நிலை நின்றால் பொய்யாகவே போகும்.

உலகில் நம்மை விட உயர்ந்தோர் என்ன தவறு செய்தாலும், வேண்டியவராய் இருந்தாலும், வேண்டாதவராய் இருந்தாலும் நாம் கவலைப்படுவதில்லை. கவலைப்பட்டும் எதுவும் ஆகப் போவதில்லை. நம்மை ஒத்த நிலையில் உள்ளவர், நமக்கு வேண்டியவர் என்று ஆகிவிட்டால், அவர் தவறு செய்தாலும் நாம் பொருட்படுத்துவதில்லை. அவரை இடித்து உரைக்க வேண்டும் என்னும் எண்ணம் நமக்கு வருவதில்லை. நமக்கு வேண்டாதவராக இருந்தால், நேரில் சொல்ல வக்கு இல்லாமல், அமைதியாக இருப்போம். ஆனால், நம்மிலும் தாழ்ந்தவர் ஒருவர், அறியாமையாலோ அல்லது உரிமை காரணமாகவோ, ஒரு தவறைச் செய்துவிட்டால், நாம் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. அவர்களை வாய்க்கு வந்தபடி திட்டுகின்றோம். வசை பாடுகின்றோம். அந்த நிலையில் நாமும், மதி கலங்கி, தவறுக்கு இடம் தந்துவிடுவோம். எனவே, "சீ என்று, பேய் என்று, நாய் என்று பிறர் தமைத்
தீங்கு சொல்லாத தெளிவும்" அருள வேண்டும் என்கின்றார்.

"திரம் ஒன்று வாய்மையும், தூய்மையும் தந்து, நின்
திருவடிக்கு ஆள் ஆக்குவாய்" --- 

திரம் --- நிலையானது, உறுதியானது. திரம் என்னும் தமிழ்ச்சொல், வடமொழியில் "ஸ்திரம்" என்ற சொல்லப்படும். (உறுதி - நன்மை)

திரம் ஒன்று வாய்மை --- வாய்மையே உயிர்க்கு நிலைபேற்றையும், உறுதி எனப்படும் நன்மையைம் தரும். வாய்மை உள்ள மனம் தூய்மையாக இருக்கும்.  தூய்மையான உள்ளத்தில், இறைவன் குடிகொண்டு இருப்பான். எனவே, திரம் ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்து, உனது திருவடிக்கு ஆள் ஆக்குவாய் என்று வேண்டுகின்றார்.

உலகியல் வாழ்வில் நாம் எது எதற்கோ ஆட்பட்டுப் போய்க் கிடக்கின்றோம். தெளிவாக நல்லதல்ல என்று தெரிந்தாலும், விட மனம் வருவதில்லை. நன்மை தருவது போலச் சிலது தோன்றும். சிலதில் இருந்து விடுபடவும் முடிவதில்லை. அவற்றில் இருந்து விடுபடுவதால் எந்த நன்மைக் குறைவும் உண்டாகப் போவது இல்லை.

"அருட் செல்வம் செல்வத்துள் செல்வம், பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள" என்பது திருக்குறள். பொருட்செல்வம் என்பது கீழோரிடத்திலும் உள்ளதை நாம் காணலாம். அந்த செல்வம் அனைத்தும் இன்று இருந்து ஒருநாள் மறைந்து போகும் தன்மை உடையவை. பொருளை மட்டும் வேண்டி இருந்தால், பொருள் வரும். வந்த வழியே போனாலும் போகும். தீயவழியில் வந்தால், அழித்துப் போகும். நல்வழியில் வந்தால், அருள் கொழித்து விட்டுப் போகும். ஆனால், இறைவன் திருவடிக்கு ஆளாகி, நின்றால், அருளோடு பொருளும் வரும். பொருளால் நமது வாழ்வும், பிறர் வாழ்வும் மேம்படும்

வேள் - விரும்பப்படுபவன்.

கருவேள் எனப்படும் மன்மதன் எல்லோராலும் விரும்பப்படுபவன். ஆனால், ஆவனால் விளைவது சிற்றின்பம்.

முருகப் பெருமான் செவ்வேள் ஆவார். அவரை விரும்பினால், இம்மை மறுமை நலங்கள் யாவும் விளங்கும்.





022. ஒப்புரவு அறிதல் - 10. ஒப்புரவினால் வரும்





திருக்குறள்
அறுத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 22 - ஒப்புரவு அறிதல்

     இந்த அதிகராத்தில் வரும் பத்தாம் திருக்குறள், "ஒப்புரவு செய்வதால், ஒருவனுக்குப் பொருள் கேடு உண்டாகும் என்றால், அது, அவன், தன்னை விற்றாவது பெற்றுக் கொள்ளத் தக்கது" என்கின்றது.

     பொருட்கேடு உண்டாயினும், புகழ் உண்டாகும். அந்தப் புகழானது உயிருக்கு ஊதியமாக அமையும் என்பதை, "ஈதல் இசைபட வாழ்தல், அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு" என்னும் திருக்குறளால் அறியலாம்.

     "கெடுவாக வையாது உலகம், நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு" என்னும் திருக்குறளையும் இங்கு வைத்து எண்ணுக.

திருக்குறளைக் காண்போம்...
ஒப்புரவினால் வரும் கேடு எனின், அஃது ஒருவன்
விற்றுக் கோள் தக்கது உடைத்து.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     ஒப்புரவினால் கேடு வரும் எனின் --- ஒப்புரவு செய்தலான் ஒருவனுக்குப் பொருட்கேடு வரும் என்பார் உளராயின்,

     அஃது ஒருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து - அக்கேடு தன்னை விற்றாயினும் கொள்ளும் தகுதியை உடைத்து.
        
      (தன்னை விற்றுக் கொள்ளப்படுவதொரு பொருள் இல்லை அன்றே? இஃதாயின் அதுவும் செய்யப்படும் என்றது, புகழ் பயத்தல் நோக்கி. இதனான் ஒப்புரவினால் கெடுவது கேடு அன்று என்பது கூறப்பட்டது.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

அந்தணர் மேன்மை அறியாமல்  சர்ப்ப என்ற
இந்திரன் பாம்பு ஆனான், இரங்கேசா! - முந்தவே
ஒப்புரவி னால்வரும் கேடுஎனின் அஃதுஒருவன்
விற்றுக் கோள் தக்கது உடைத்து.

இதன் பதவுரை ---

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! அந்தணர் மேன்மை அறியாமல் --- ஏழு முனிவர்களுடைய பெருமையைத் தெரியாமல், சர்ப்ப என்று --- (சீக்கிரம் போங்கள் என்னும் பொருளையுடைய) சர்ப்ப என்னும் வார்த்தையைச் சொல்லி, இந்திரன் --- இந்திர பதவியில் இருந்த நகுஷமகாராஜன், பாம்பு ஆனான் --- பாம்பாய்ப் பரதவித்தான், (ஆகையால், இது) ஒப்புரவினால் --- உலக நடை அறிந்து செய்யும் காரியத்தினால், முந்த --- முன்னதாக, கேடு வரும் என்னில் --- கெடுதி வருமானாலும், அஃது --- அந்தக் கேடானது, ஒருவன் --- ஒருவன் (தன்னை), விற்றுக் கொள் தக்கது உடைத்து --- விற்றானும் கொள்ளும் தகுதியை உடையதாகும் (என்பதை விளக்குகின்றது).

         கருத்துரை --- உலகநடை அறிந்து உபகாரியம் செய்து ஒழுகவேண்டும்.

         விளக்கவுரை --- முற்காலத்தில் நகுஷமகாராஜன் ஓராயிரம் பரிமேதயாகம் அசுவம் - பரி) செய்ததனால் இந்திரபதம் பெற்றான். பெற்றும் நல்லெண்ணமின்றி, முதலில் இந்திராணியை மணக்கவேண்டும் என்று விரும்பினான். ஆகையால், தன் பதவிக்கேற்ப ஏழு முனிவர்கள் தாங்கிச் செல்லும் சிவிகையில் ஏறி அவளிடத்திற்குச் சென்றான். செல்லும்போது அவளைக் காணவேண்டும் என்னும் அவசரத்தினால், விரைவில் செல்க என்னும் பொருள்தரும் சர்ப்ப சர்ப்ப எந்று சொல்லிப் பல்லக்கை அழுத்தித் தூண்டினான். அது முதலில் குறுமுனியாகிய அகத்தியர் தோளில் உறுத்தியது. உடனே அவர் நோயைப் பொறாமல் மனம் நொந்து, சர்ப்ப என்ற காரணத்தினால் நீ சர்ப்பமாகக் கடவது என்று அவனைச் சபித்தார். அப்படியே அவன் பூலோகத்தில் மலைப் பாம்பாய் வருந்திக் கிடந்தான்.  இது ஒப்புரவறியாமையால் வந்த கேடு.

ஐந்து வந்தாலும் அவசரம் ஆகாது
பத்து வந்தாலும் பதற்றம் ஆகாது

என்பது பழமொழி. ஒப்புரவினால் கேடு வராது. அங்ஙனம் வந்தாலும், அது தன்னை விற்றானாலும் கொள்லும் தகுதியை உடையது என்றார். இதற்கு அரிச்சந்திர மன்னன் கதையும் அமைவுடைத்தாம். ஒப்புரவினால் அம்மன்னற்குக் கேடு வந்ததும், அந்தக் கேட்டை அவன் தன்னை விற்றானாலும் கைக்கொண்டதும் உலகப் பிரசித்தம். அரிச்சந்திர மன்னன் ஒப்புரவறிந்த தன்மை பொய்யாமையேயாகும். நகுஷன் ஒப்புரவு இன்னதென்றே உணராமையால் பெருங்கேடு அடைந்தான்.  அரிச்சந்திரன் ஒப்புரவையே பெரும் பற்றாப் பற்றிப் பொய்யாமையைப் பொய்யாமை யாற்றினான், தன்னை விற்றும் அதனால் வரும் கேட்டை மனமொப்பி ஏற்றான். ஆகையால், பெரும்புகழ் உற்றான்.

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்திருத்தலைக் காணலாம்...

'பிறந்த நாள் தொடங்கி, யாரும்,
     துலை புக்க பெரியோன் பெற்றி
மறந்த நாள் உண்டோ? என்னைச்
     சரண் என வாழ்கின்றானைத்
துறந்த நாட்கு இன்று வந்து
     துன்னினான் சூழ்ச்சியாலே
இறந்த நாள் அன்றோ, என்றும்
     இருந்த நாள் ஆவது!' என்றான்.               
                                      --- கம்பராமாயணம், வீடணன் அடைக்கலப் படலம்.

இதன் பதவுரை ---

     பிறந்த நாள் தொடங்கி --- எவரும் தாம் பிறந்த நாள் முதலாக;  துலை புக்க பெரியோன் பெற்றி --- ஒரு புறாவுக்காகத் தானே தராசுக் கோலில் சென்றமர்ந்த பெரியோன் ஆகிய  சிபிச் சக்கரவர்த்தியின் பெருமையை; யாரும் மறந்த நாள் உண்டோ --- எவரேனும் மறந்த ஒரு நாளும் உள்ளதோ? இல்லை அன்றோ? என்னைச் சரண் என வாழ்கின்றானை --- என்னை அடைக்கலம் என்று கூறி வந்து வாழ இருக்கும் இந்த வீடணன்; துறந்த நாட்கு --- ஏற்றுக்கொள்ளாது விலக்கிய நாளைவிட;   இன்று வந்து
துன்னினான் --- இன்று இங்கு வந்து நம்மை அடைந்த இவனுடைய; சூழ்ச்சியாலே --- வஞ்சகச் செயல்களால்; இறந்த நாள் அன்றோ --- நான் இறக்க நேர்ந்தால் அவ்வாறு இறந்த நாள் அல்லவா; என்றும் இருந்த நாள் ஆவது என்றான் --- நான் என்றும் நிலை பெற்றிருந்த நாள் ஆவது என இராமன் கூறினான்.

     துலை புக்க பெரியோன் - சிபிச்சக்கரவர்த்தி. இன்று வந்து நம்மைச் சேர்ந்த இவனுடைய சூழ்ச்சியாலே நான் இறக்க  நேர்ந்தால் அந்த நாளே நிலைபெற்றிருக்கும் நாளாகும் என்பதை 'சூழ்ச்சியாலே இறந்த நான் அன்றோ என்றும் இருந்த நாள்'    என்றான். சிபியை உலகம் மறந்த நாள் இல்லை. அந்த மன்னன்    வழிவந்த நான் அடைக்கலம் என்று வந்தவனை   ஏற்றுக்கொள்வது தானே முறை என்பது கருத்து.

எள்அறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்உறு புன்கண் தீர்த்தோன், அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்

பெரும்பெயர்ப் புகார் என் பதியே, அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ்கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து ஈங்கு

என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக் களப் பட்ட கோவலன் மனைவி
கண்ணகி என்பது என் பெயரே....    --- சிலப்பதிகாரம், வழக்குரை காதை.
        
இதன் பதவுரை ---

      எள் அறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்உறு புன்கண் தீரித்தோன் --- இகழ்தலற்ற சிறப்பினை உடைய தேவர்களும் இறும்பூது எய்தப் புறாவொன்று உற்ற மிக்க துன்பத்தினைப் போக்கியோனும், அன்றியும் --- அவனன்றியும், வாயிற் கடைமணி நடு நா நடுங்க --- கடைவாயிலினிடத்துக் கட்டிய மணியின் நடுவிலுள்ள நா அசைய, ஆவின் கடைமணி உகு நீர் நெஞ்சு சுட --- பசுவொன்றின் கண்மணிக் கடையினின்றும் ஒழுகும் நீர் தன்னுடைய உள்ளத்தை வெதுப்பலானே, தான் தன் அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் - தானே தன்னுடைய பெறுதற்கரிய மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்றோனும் ஆகிய இவரது, பெரும் பெயர்ப் புகார் என் பதியே --- மிக்க புகழினையுடைய புகார் நகரமே யான் பிறந்த வூர், அவ் வூர் ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன் மகனை ஆகி --- அவ் வூரின்கண் பழிப்பில்லாத சிறப்பினை உடைய புகழ் யாங்கணும் சென்று விளங்கிய பெருங்குடிக்கண் மாசத்துவான் என்னும் வணிகனுடைய புதல்வனாகத் தோன்றி, வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச் சூழ் கழல் மன்னா நின் னகர்ப் புகுந்து --- வீரக் கழலணிந்த மன்னனே பொருளீட்டி வாழ்க்கை நடத்தலை விரும்பி முன்னைத் தீவினை செலுத்தலானே நினது மதுரை நகரத்தின்கண் புக்கு, இங்கு என் காற்சிலம்பு பகர்தல் வேண்டி நின்பாற் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி --- இந் நகரிடத்தே என்னுடைய காலின்கண் அணிந்த சிலம்பு ஒன்றனை விற்றல் காரணமாக நின்னிடத்துக் கொலையுண்ட கோவலன் என்பானுடைய மனைவியாவேன், கண்ணகி என்பது என் பெயரே --- என் பெயர் கண்ணகி எனப்படும்.

     புள் - புறா. பருந்து ஒன்றினால் துரத்தப்பட்டுத் தன்னை வந்தடைந்த புறாவினைக் காத்து, அதன்பொருட்டுத் தன் ஊனை அப் பருந்திற்கு அளித்தான் சிபி. இதனைக் "கொடுஞ்சிறைக், கூருகிர்ப் பருந்தி னேறு குறித்தொரீஇத், தன்னகம் புக்க குறுநடைப் புறவின், தபுதி யஞ்சிச் சீரை புக்க, வரையா ஈகை யுரவோன் மருக" -- புறம். 43  -- என்பதனானுணர்க.

     தன் புதல்வனை ஆழியின் மடித்தோன் மனுச்சோழன்.


இன்உயிர்க்கும் இன் உயிராய் நின்று
     ருநிலம் காத்தார் என்று
பொன் உயிர்க்கும் கழலவரை
     யாம் போலும் புகழ்கிற்பாம்?
மின் உயிர்க்கும் நெடு வேலோய்!
     இவர் குலத்தோன் மென் புறவின்
மன் உயிர்க்குத் தன் உயிரை
     மாறாக வழங்கினனால்.  ---  கம்பராமாயணம், குலமுறை கிளத்து படலம்.

இதன் பதவுரை ---

     மின் உயிர்க்கும் --- மின்னல்போல ஒளி விடுகின்ற; நெடு வேலாய் --- நீண்ட வேல் தாங்கிய சனகனே;  பொன் உயிர்க்கும் கழலவரை --- விளங்கும் வீரக் கழலைப் பூண்ட இக்குலத்து   மன்னர்களை; இன் உயிர்க்கும் ---- (உலகிலுள்ள)  இனிமையான உயிர்கள் எல்லாவற்றிற்கும்; இன் உயிராய் --- தாம் இனிய உயிர் ஆக இருந்து; இரு நிலம் காத்தார் --- பெரிய  நிலவுலகை  அரசாண்டார்கள்;  என்று --- என்று சொல்லி; புகழ்கிற்பாம் --- புகழவல்லோம்; யாம் போலும் --- நாம்தான் போலும்! (புகழ்   நம்மால் முடியாது;  ஏனெனில்);  இவர் குலத்தோன் --- இக் குமாரர்களின் குலத்தில் தோன்றிய அரசன் ஒருவன்; மென் பறவை --- மெல்லிய பறவை ஒன்றின்;  மன் உயிர்க்கு --- நிலைபெற்ற உயிர்க்கு; மாறாக --- ஈடாக; தன் உயிரை --- தனது ஆருயிரை; வழங்கினன் --- கொடுத்தான்.  


வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...