ஏவா மக்கள் மூவா மருந்து
-----
எளிய சிறுசிறு தொடர்களே மக்களின் தேவையைக் குறித்து உணர்த்தும் ஆற்றல் வாய்ந்தவை என்று வால்ட்டர் பேட்டர் என்னும் மேனாட்டு அறிஞர் ஒருவர் பின்னாளில் கூறியதை, அந்நாளிலேயே காட்டியவர் நமது ஔவைப் பிராட்டியார். எளிய சொற்களால் வாழ்க்கைப் பாடத்தை மக்களுக்குப் புகட்டியவர் பிராட்டியார்.
தாயும் தந்தையும் நமது கண் எதிரில் காணும் தெய்வங்களாக உள்ளனர். இவர்களே நமது கண் கண்ட தெய்வங்கள். இவர்களைப் போற்றினால், தெய்வத்தைப் போற்றியதாகும் என்பதை அறிவுறுத்த, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்று சொன்னார். தாயும் தந்தையுமே நமது கண்முன்பு காணப்படும் தெய்வங்களாவார்.
எங்கும் நீக்கம் அற நிறைந்து விளங்கும் பரம்பொருள் பொதுவான தெய்வம். எல்லா உயிர்களுக்கும் ஆதாரமாக அது விளங்குகின்றது. அதுவே உயிர்களைப் படைத்துக் காத்து, அருளுகின்றது. அதனை நம்பி பயபத்தியுடன் போற்றி வழிபாடு செய்கின்றோம். ஆனால், யாரும் நேரில் காணவில்லை. கண்டவரைக் கேட்டும் யாரும் அறிந்தது இல்லை. “கூதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால், கேட்டு அறியோம் உன்னைக் கண்டு அறிவாரை” என்கிறார் மணிவாசகப் பெருமான். அப்படிப்பட்ட பரம்பொருள்தான், தாயாகியும் தந்தையாகியும் வந்து, நம்மை ஈன்று, புறம் தந்து, இனிய கல்வியினைத் தந்து சான்றோக்கி, நல்லோர் போற்றச் சபை நடுவே வீற்றிருக்கச் செய்து, நலம் பலவும் தந்து அருளுகின்றது. "ஈன்றாளுமாய், எனக்கு எந்தையுமாய், உடன் தோன்றினராய், மூன்றாய் உலகம் படைத்து உகந்தான்" என்று அருளினார் அப்பர் பெருமான். நாம் நமது கண் எதிரில் காணுகின்ற தெய்வங்கள் தாய்தந்தையர் என்பதால், "அன்னையும் பிதாவும் முன் அறி தெய்வம்" என்றார் ஔவைப் பிராட்டியார். "தாயாகி, தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம், தன்னை நிகர் இல்லாத தனித் தலைமைத் தெய்வம்" என்றார் வள்ளல்பெருமான்.
தந்தைதாயைப் பேணும் ஒழுக்கம் உள்ள ஒருவனுக்கு, இயல்பாகவே, தந்தைக்கு ஒப்பவும், தாய்க்கு ஒப்பவும் மதித்துப் போற்றுதற்கு உரியவர்களையும் மதித்துப் போற்றும் நற்குணம் விளங்கும். இராமன் பரதனுக்கு அறிவுறுத்தியதாக வரும் கம்பராமாயணப் பாடல்களால் தாய்தந்தையரின் பெருமை அறியப்படும்.
“பரவு கேள்வியும், பழுது இல் ஞானமும்,
விரவு சீலமும், வினையின் மேன்மையும்,
உர வி(ல்)லோய்! தொழற்கு உரிய தேவரும்,
குரவரே எனப் பெரிது கோடியால்.” – கம்பராமாயணம்
வலிமை பொருந்திய வில்லை உடையவனே! புகழ்ந்து சொல்லப்படும் நூற்கேள்வியும்; குற்றமற்ற நல்லுணர்வும்; உடன் கொள்ளத்தக்க ஒழுக்கமும்; செய்தொழிலின் சிறப்பும்; வணங்குதற்கு உரிய தேவர்களும்; பெரியோர்களே என்று மிகவும் மனத்தில் கொள்வாய்.
“அந்த நல் பெருங் குரவர் ஆர்? எனச்
சிந்தை தேர்வுறத் தெரிய நோக்கினால்,
தந்தை தாயர் என்று இவர்கள்தாம் அலால்,
எந்தை! கூற வேறு எவரும் இல்லையால்.” --கம்பராமாயணம்.
(என் அன்பில் சிறந்த பரதனே! நான் கூறிய) சிறந்த பெருமையுடைய குரவர்கள் யார் என்று மனத்தால் மிக ஆராய்ந்து விளக்கப் பார்த்தால், தந்தையும் தாயுமே அல்லாமல், சிறப்பித்துக் கூற வேறு ஒருவரும் இல்லை. அத்தகைய பெற்றோர் துயரம் இன்றி வாழ்வதற்கு ஒரு அருமருந்தாக, அமுதமாக உதவுவது, அவர்கள் ஈன்றெடுத்த நல்ல மக்களே ஆவர். “ஏவா மக்கள் மூவா மருந்து” என்று அருளினார் ஔவைப் பிராட்டியார். பெற்றவர் இதைச் செய் என்று ஏவுதற்கு முன்பாகவே அவர்தம் குறிப்பு அறிந்து செய்கிற பிள்ளைகள் பெற்றவருக்குத் தேவாமிர்தம் போல்வார்.
இதைத் தசரத மன்னன் கூற்றாக நமக்குத் தெளிவுபடுத்துகிறார் கவிச் சக்கரவர்த்தி கம்பர்.
‘மன்னர் ஆனவர் அல்லர் ; மேல் வானவர்க்கு அரசு ஆம்
பொன்னின் வார் கழல் புரந்தரன் போலியர் அல்லர் ;
பின்னும், மா தவம் தொடங்கி, நோன்பு இழைத்தவர் அல்லர் ;
சொல் மறா மகப் பெற்றவர் அருந்துயர் துறந்தார். -- கம்ப. அயோத்தியா. மந்திரப் படலம்
(தசரதன் இராமனுக்குச் சொல்லியது) அருந் துயர் துறந்தார் - இவ்வுலகில் அரிய துன்பத்திலிருந்து விடுபட்டவர்கள்; மன்னர் ஆனவர் அல்லவர் – அரசர்களாக வாழ்கின்றவர்கள் அல்லர்; மேல் வானவர்க்கு அரசு ஆம் பொன்னின் வார் கழல் புரந்தரன் போலியர் அல்லர் - மேலுலகில் உள்ள தேவர்களுக்கு அரசனாகிய பொன்னாலான நீண்ட வீரக்கழல் அணிந்த இந்திரன் போன்றவரும் அல்லர்; பின்னும் – அன்றியும்; மாதவம் தொடங்கி நோன்பு இழத்தவர் அல்லர் - பெருந்தவத்தைச் செய்யத் தொடங்கி, பல விரதங்களைச் செய்தவரும் அல்லர்; சொல் மறா மகப் பெற்றவர் - (பின்னர் யார் என்று வினவின்) தம் சொல்லைத் தட்டாத மக்களைப் பெற்றவரே ஆவர்.
நல்ல மக்களைப் பெற்றவரே துயரம் நீங்கி வாழ்வர் என்பது அழகாக விளக்கப்பட்டது.
No comments:
Post a Comment