நல்லோர் தொடர்பு நன்மையைத் தரும்
-----
பெரியோர்களாடு சேர்ந்து இருந்தால், ஒருவனுக்கு நல்ல அறிவானது நாளும் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரும் என்று அறிவுறுத்துகின்ற "நாலடியார்" பாடல்....
“கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்து ஒழுகின்
நல்லறிவு நாளும் தலைப்படுவர் - தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு
தண்ணீர்க்குத் தான் பயந்தாங்கு.”
இதன் பொருள் ---
கல்வி அறிவு இல்லாதவராக இருந்தாலும், கற்று அறிந்த பெரியோர்களுடன் சேர்ந்து பழகினால், அவர்களுக்கும் அப் பெரியோரது சேர்க்கையால் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல அறிவானது வாய்க்கப் பெறும். எப்படி என்றால், சிறந்த மணமும் அழகும் நிறைந்த பாதிரிப் பூவானது, புதிய மண் பாத்திரத்தில் இருந்தால், அந்த மண் பாத்திரத்திற்கும், அதில் இருந்த தண்ணீருக்கும், பாதிரிப் பூவின் மணம் கிடைப்பது போல.
பெரியோர்களோடு கூடிப் பழக ஒருவனுக்கு, பவ்வியம் வேண்டும். விநயம் வேண்டும். பவ்வியம் - தாழ்மை, அடக்கம், பணிவு. விநயம் - வணக்கம், மரியாதை, ஒழுக்கம்.
"கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்" என்பது போலத்தான். கம்பர் வீட்டிலே உள்ள கட்டுத்தறி என்ன செய்யும்? கம்பர் என்ன செய்கின்றாரோ அதைச் செய்யும். செய்வதைப் புரிந்து கொள்ளும் தன்மையும், சொன்னதைச் செய்யும் திறமும் இருந்தால் போதும்.
பெரியோர்களோடு சகவாசம் செய்தால், அவர்க்கு உள்ள குணம் வரும் என்பதை, பின்வரும் பாடலால் அறியலாம்....
“சந்தன விருட்சத்தை அண்டி நிற்கின்ற பல
தருவும் அவ் வாசனை தரும்;
தங்கமக மேருவை அடுத்திடும் காக்கையும்
சாயல்பொன் மயமே தரும்;
பந்தம்மிகு பாலுடன் வளாவிய த(ண்)ணீர் எலாம்,
பால்போல் நிறம் கொடுக்கும்;
படிகமணி கட்குளே நிற்கின்ற வடமும்அப்
படியே குணங்கொடுக்கும்;
அந்தமிகு மரகதக் கல்லைத் தரித்திடில்,
அடுத்ததும் பசுமையாகும்;
ஆன பெரியோர்களொடு சகவாசம் அதுசெயின்,
அவர்கள் குணம் வரும் என்பர்காண்;
மந்தர நெடுங்கிரியின் முன்கடல் கடைந்தஅரி
மருக!மெய்ஞ் ஞானமுருகா!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.”
இதன் பொருள் ---
முன் மந்தர நெடுங்கிரியின் கடல் கடைந்த அரி மருக - முன்னொரு காலத்தில் மந்தரம் எனும் பெரிய மலையினை மத்தாக நிறுவிக் கடலைக் கடைந்த திருமாலின் திருமருகரே! மெய்ஞ்ஞான முருகா - உண்மையறிவான முருகக் கடவுளே! மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
சந்தன விருட்சத்தை அண்டி நிற்கின்ற பல தருவும் அவ்வாசனை தரும் - சந்தன மரத்தைச் சார்ந்து நிற்கின்ற பலவகையான மரங்களும் சந்தன மணத்தையே பெறும். தங்க மகமேருவை அடுத்திடும் காக்கையும் சாயல் பொன்மயமே தரும் - பொன்மயமான மகாமேரு மலையைச் சேர்ந்த காக்கையும் பொன் நிறத்தைப் பெறும்; பந்தம் மிகு பாலுடன் வளாவிய த(ண்)ணீர் எ(ல்)லாம் பால்போல் நிறம் கொடுக்கும் - பாலுடன் சேர்த்து வளாவிய தண்ணீரும் பால் போலவே வெண்ணிறம் கொடுக்கும். படிகமணிகட்கு உளே நிற்கின்ற வடமும் அப்படியே குணம் கொடுக்கும் - படிகமணிகளைக் கோத்த நூலும் படிகம் போலவே நிறம் கொடுக்கும். அந்தம் மிகு மரகதக் கல்லைத் திரித்திடில் அடுத்ததும் பசுமை ஆகும் - அழகு மிகுந்த மரகதக் கல்லை அணிந்தால் அதனைச் சார்ந்ததும் பசுமை நிறமாகவே இருக்கும். ஆன பெரியோர்களொடு சகவாசம் அது செயின், அவர்கள் குணம் வரும் என்பர் - அறிவு மிக்க பெரியோர்களுடன் நட்புக் கொண்டால், அவர்களுடைய குணமே வரும் என்பர் பெரியோர்.
“கனக மலை அருகே போயின காக்கையும் அன்றே படைத்தது பொன்வண்ணமே” என்பது பதினொன்றாம் திருமுறையில் வரும் “பொன்வண்ணத்து அந்தாதி”யில் சொல்லப்பட்டது. தன்னைச் சார்ந்த பொருளைத் தன் வண்ணம் ஆக்குதல், சிவனுக்கும், செம்பொன் மலைக்கும் இடையேயுள்ள பொதுத் தன்மை. “சேர்வார் தாமே தானாகச் செயும் அவன்” என்பது திருஞானசம்பந்தர் அருள்வாக்கு.
பெரியோர் இணக்கம் செய்யும் நன்மையைக் குறித்து, "நீதி வெண்பா" என்னும் நூல் கூறுமாறு காண்க.
“கங்கைநதி பாவம், சசி தாபம், கற்பகம் தான்
மங்கல் உறும் வறுமை மாற்றுமே, --- துங்கமிகும்
இக்குணம்ஓர் மூன்றும் பெரியோரிடம் சேரில்
அக்கணமே போம் என்று அறி.” --- நீதிவெண்பா.
கங்கை நதியானது பாவத்தையும், திங்கள் வெப்பத்தையும், கற்பக மரம் எல்லா நன்மைகளையும் மங்குமாறு செய்யும் வறுமையையும் நீக்கும். ஒருவனிடத்து உள்ள பாவம் தாபம் வறுமை ஆகிய இந்த மூன்று தீய குணங்களும் உயர்வு மிக்க பெரியோரிடம் சேர்ந்தால், அந்தக் கணத்திலேயே அழிந்து போகும் என்று நீ அறிந்து கொள்வாயாக.
அவ்வாறே, தீயோர் கூட்டுறவால் விளையும் தீமை குறித்தும் "நீதி வெண்பா" கூறுமாறு காண்க.
“நன்று அறியாத் தீயோர்க்கு இடம் அளித்த நல்லோர்க்கும்,
துன்று கிளைக்கும் துயர் சேரும்; --- குன்றிடத்தில்
பின்இரவில் வந்த கரும் பிள்ளைக்கு இடம் கொடுத்த
அன்னம் முதல் பட்டது போல்ஆம்.” --- நீதிவெண்பா.
முன்னொரு காலத்து மலையில் இரவில் வந்த காக்கைக்குத் தங்க இடம் கொடுத்த அன்னப் பறவை பின்பு துன்பப்பட்டது போல, செய்த நன்மையைத் தெரிந்துகொள்ள மாட்டாத தீயவர்களுக்குத் தமது இடத்தைக் கொடுக்கும் நல்லவர்களுக்கும், அவர்களைச் சேர்ந்த உறவினர்களுக்கும் துன்பம் வந்து சேரும்.
இதில் அமைந்த கதை ---
ஒரு மலையில் ஓர் அன்னம் தன் இனத்தோடு வசித்து வந்தது. ஒருநாள் இரவில் மழை கடுமையாகப் பெய்தது. அம் மழையில் நனைந்த காக்கை ஒன்று, அன்னத்திடம் வந்து இரவு தங்க இடம் கேட்டது. அன்னமும் தங்க இடம் கொடுத்தது. காக்கையானது தங்கிய இடத்தில் எச்சம் இட்டுவிட்டது. அந்த எச்சத்தில் இருந்து ஓர் ஆலம் வித்து முளைத்துப் பெரிய மரம் ஆகி, விழுதுகள் விட்டுத் தொங்கின. அவ் விழுதுகளைப் பிடித்துக் கொண்டு மலை மீது பலர் ஏறி வந்து அந்த அன்னத்தையும், அதனோடு சேர்ந்த பிற அன்னப் பறவைகளையும் பிடித்துச் சென்றனர். தாழ்ந்த காக்கைக்கு இடம் கொடுத்ததனால் அன்னத்திற்குக் கேடு வந்தது.
நல்லோரது கூட்டுறவால் நன்மை எப்படி விளையும் என்பதைக் கம்பர், தான் இயற்றிய இராமாயணத்தில் பின்வரும் பாடல்களால் தெளிவிக்கின்றார். இராமன், மிதிலையில் வில்லை ஓடித்து, சீதாதேவியை மணந்தான் என்ற செய்தியைக் கேட்டு, அயோத்தியில் இருந்து தசரதன் முதலானவர்கள் எல்லோருமாக, அவரவர் தேரில் ஏறிக் கொண்டு மிதிலை நோக்கிச் செல்லுகின்றார்கள். தேரில் இருந்தவை பொன்னால் ஆன சக்கரங்கள். அந்தப் பொன்னால் ஆன சக்கரங்கள் வேகமாக உருண்டு தமது பொன்னை உரைத்துக் கொண்டே சென்றதால், வழியில் இருந்த பாறைகள் எல்லாம் பொன்னிறம் ஆயின. இந்தக் காட்சியானது, தெளிந்த அறிவினை உடைய பெரியோர் சிறியவர்களிடத்தில் இருந்தால், அவர்களுடைய சொல்லை நாளும் கேட்டு, சிறியவர்களும் தமது புன்மைக் குணம் நீங்கி, தெளிந்த அறிவினைப் பெறுவர் என்னும் உண்மையைப் புலப்படுத்தி நின்றது. (பொன்னால் ஆன தேர்ச் சக்கரம் - தெளிந்த அறிவினை உடைய பெரியோர். கருமையான பாறாங் கற்கள் - அறிவில்லாத சிறியோர்.)
"தெருண்ட மேலவர் சிறியவர்ச் சேரினும், அவர்தம்
மருண்ட புன்மையை மாற்றுவர் எனும் இது வழக்கே;
உருண்ட வாய்தொறும் பொன்உருள் உரைத்து உரைத்து ஓடி.
இருண்ட கல்லையும் தன் நிறம் ஆக்கிய இரதம்".
தெருண்ட மேலவர் - தெளிந்த அறிவுடைய பெரியோர்; சிறியவர்ச் சேரினும் - சிறியவர்களை (தாம் போய்ச்) சேர்ந்திருந்தாலும்; மருண்ட அவர் தம் - அறிவுத் தெளிவில்லாமல் மயங்கிய அவர்களுடைய; புன்மையை - இழி குணத்தை; மாற்றுவர் எனும் இது - போக்குவர் என்று சொல்லுகின்ற இந்த வார்த்தை; வழக்கே - முறைமையானதே (உலக இயல்புதான்); இரதம் - (ஏனெனில்) இரதங்கள்; பொன் உருள் உருண்ட - பொன்னால் இயன்ற சக்கரங்கள் உருண்டு சென்ற; வாய்தொறும் – இடங்கள் தோறும்; உரைத்து உரைத்து ஓடி - (தம்) பொன்னை உரைத்துக் கொண்டே ஓடிச் செல்வதால்; இருண்ட கல்லையும் - கருமையான பாறாங் கற்களையும்; தம் நிறம் ஆக்கிய - (தம்) பொன்னிறமாகவே செய்யலாயின. தேரின் பொன்னிற உருளை சென்றதால் அங்குள்ள பாறைக் கற்கள் பொன்னிறத்தை அடைந்தன.
"ஆன தூயவரோடு உடன் ஆடினார்
ஞான நீரவர் ஆகுதல் நன்றுஅரோ! -
தேனும். நாவியும். தேக்கு. அகில் ஆவியும்.
மீனும். நாறின; வேறு இனி வேண்டுமோ?" --கம்பராமாயணம்.
ஆன தூயவரோடு- தூய்மையான ஞானியரோடு; உடன் ஆடினார் - கூடியிருந்து பழகியவரும்; ஞான நீரவர் ஆகுதல் நன்று – நல்ல ஞான குணத்தையுடையவர் ஆவது தக்கது. (அதுபோல); மீனும் - (மகளிர் நீராடிய நீர்நிலைகளில் உள்ள) மீன்களும்; தேனும் நாவியும் தேக்கு அகில் ஆவியும் நாறின - தேன் மணமும், கத்தூரி மணமும், தேக்கின் புகைமணமும், அகிலின் புகைமணமும் வீசல் ஆயின; வேறு இனி வேண்டுமோ? (இக்கருத்தை விளக்க) வேறு உவமையும் இனிவேண்டுமோ? (வேண்டா.)
“மொய் கொள் சீறடியைச் சேர்ந்த
முளரிக்கும் செம்மை ஈந்த
தையலாள் அமிழ்த மேனி
தயங்கு ஒளி தழுவிக்கொள்ள.
வெய்ய பூண்முலையில் சேர்ந்த
வெண் முத்தம் சிவந்த; - என்றால்.
செய்யவர்ச் சேர்ந்துளாரும்
செய்யராய்த் திகழ்வர் அன்றே?” --- கம்பராமாயணம்.
மொய்கொள் சீறடியைச் சேர்ந்த முளரிக்கும் செம்மை ஈந்த தையலாள் - செம்பஞ்சுக் குழம்பு முதலிய சாந்துகள் மொய்த்துக் கிடக்கின்ற (தனது) சிறிய அடிகளை (ஒப்பாக இயலாமல்) சரண் அடைந்த தாமரை மலர்களுக்கும். (தனது) அடிகளின் செம்மை நிறத்தைக் கொடுத்துள்ள சீதையினுடைய; அமிழ்த மேனி அங்கு ஒளி தழுவிக்கொள்ள - அமுதம் போன்று அரிய செந்நிறத் திருமேனியிலே விளங்குகின்ற செம்மைநிற ஒளி (தம் மேலே) வந்து படுதலால்; வெய்ய பூண்முலையில் சேர்ந்த வெண் முத்தம் சிவந்த என்றால் - விருப்பத்தை நல்கும் அணிகள் அணிந்த மார்பகங்களில் பொருத்தியுள்ள வெண்ணிறம் அமைந்த முத்துக்களும் செந்நிறம் அடைந்தன என்றால்; செய்யவர்ச் சேர்ந்துளாரும் செய்யராய்த் திகழ்வர் அன்றே? - செம்மைக் குணம் பொருந்தியவரைச் சேர்ந்தவகளும் செம்மைக் குணம் பெற்றுத் திகழ்வார்கள் (என்பது உண்மை) அன்றோ?
இதனை இரத்தினச் சுருக்கமாக, "நீரானது தான் சேர்ந்த நிலத்தின் இயல்பினாலே தனது தன்மை வேறுபட்டு, அந் நிலத்தினது தன்மையைச் சாரும். அதுபோல, மனிதரது அறிவும் தான் சேர்ந்துள்ள இனத்தினது தன்மையாலே மாறுபட்டு, அந்த இனத்தினது தன்மையை அடையும்" என்கின்றார் நாயனார்.
வானில் இருந்து இழிந்த நீரானது, யாதொரு நிறமும், சுவையும் இல்லாமல், தனது தன்மையோடு கூடி இருந்தும், நிலத்தில் வந்து சேர்ந்த காலத்து, எந்த எந்த நிலத்தில் சேருகின்றதோ, அந்த அந்த நிலத்தின் குணத்திற்குத் தக்க அளவாக, நிறத்தினையும், சுவையினையும் கொள்ளுவது போல, மிகப் பெரியோராக இருந்தாலும், சிற்றினத்தைச் சார்ந்து இருந்தால், தமது இயல்பாகிய குணம் கெட்டு, சார்ந்த இனத்தினது குணம் செயல் முதலியவைகளை அடைவார்கள். எனவே, உவர் நிலத்தைச் சேர்ந்த நீர், உவர்ப்புத் தன்மையை அடைவது போல, சிற்றினத்தைச் சேர்ந்து சிற்றறிவு விளங்கப் பெறாது இருத்தல் வேண்டும் என்பதை அறிவுறுத்த, “நிலத்து இயல்பால் நீர் திரிந்து அற்று ஆகும், மாந்தர்க்கு இனத்து இயல்பு அது ஆகும் அறிவு” என்று அருளினார்.
இதையும் கவிச்சக்கரவர்த்தி எதிர்மறையாக ஒரு பாடலின் வழி தெளிவுற விளக்குகின்றார்.
'புலத்தியன் வழிமுதல் வந்த பொய் அறு
குலத்து இயல்பு அழிந்தது; கொற்றம் முற்றுமோ?
வலத்து இயல் அழிவதற்கு ஏது; மை அறு
நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால். --- கம்பராமாயணம்.
புலத்தியன் வழிமுதல் வந்த - புலத்தியனுடைய மரபிலே வந்த ; பொய் அறு குலத்து இயல்பு அழிந்தது - தருமவழி நீங்காத குலத்தின் தன்மை, உனது செயலால் அழிந்துவிட்டது; வலத்து இயல் அழிவதற்கு ஏது - அதுவே வெற்றித் தன்மை அழிவதற்குக் காரணமாகும்; கொற்றம் முற்றுமோ - அதனால் உனக்கு வெற்றி கிட்டுமோ? மையறு நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால் - இது குற்றமற்ற நிலத்தின் இயல்பே நீரின் இயல்பு என்ற முறைமைக்கு ஏற்று உள்ளது.
No comments:
Post a Comment