அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
எழுபிறவி நீர்நிலத்தில் (பொது)
முருகா!
இந்த உடம்பு அழியுமுன் அடியேனுக்கு உபதேசித்து அருள் புரிவீர்.
தனதனன தானதத்த தனதனன தானதத்த
தனதனன தானதத்த ...... தனதான
எழுபிறவி நீர்நிலத்தி லிருவினைகள் வேர்பிடித்து
இடர்முளைக ளேமுளைத்து ...... வளர்மாயை
எனுமுலவை யேபணைத்து விரககுழை யேகுழைத்து
இருளிலைக ளேதழைத்து ...... மிகநீளும்
இழவுநனை யேபிடித்து மரணபழ மேபழுத்து
இடியுமுடல் மாமரத்தி ...... னருநீழல்
இசையில்விழ ஆதபத்தி யழியுமுன மேயெனக்கு
இனியதொரு போதகத்தை ...... யருள்வாயே
வழுவுநெறி பேசுதக்க னிசையுமக சாலையுற்ற
மதியிரவி தேவர்வஜ்ர ...... படையாளி
மலர்கமல யோனிசக்ர வளைமருவு பாணிவிக்ர
மறையஎதிர் வீரவுக்ரர் ...... புதல்வோனே
அழகியக லாபகற்றை விகடமயி லேறியெட்டு
அசலமிசை வாகையிட்டு ...... வரும்வேலா
அடலசுரர் சேனைகெட்டு முறியமிக மோதிவெட்டி
அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
எழுபிறவி நீர் நிலத்தில், இருவினைகள் வேர்பிடித்து,
இடர் முளைகளே முளைத்து, ...... வளர்மாயை
எனும் உலவையே பணைத்து, விரக குழையே குழைத்து,
இருள் இலைகளே தழைத்து, ...... மிகநீளும்
இழவு நனையே பிடித்து, மரண பழமே பழுத்து,
இடியும் உடல் மாமரத்தின் ...... அருநீழல்
இசையில் விழ, ஆதபத்தி அழியு முனமே, எனக்கு
இனியது ஒரு போதகத்தை ...... அருள்வாயே.
வழுவு நெறி பேசு தக்கன் இசையும் மகசாலை உற்ற
மதி, இரவி, தேவர், வஜ்ர ...... படையாளி,
மலர்கமல யோனி, சக்ர வளைமருவு பாணி, விக்ர
மறைய, எதிர் வீர உக்ரர் ...... புதல்வோனே!
அழகிய கலாப கற்றை விகட மயில் ஏறி எட்டு
அசலம் மிசை வாகை இட்டு ...... வரும்வேலா!
அடல் அசுரர் சேனை கெட்டு முறிய, மிக மோதி, வெட்டி,
அமரர் சிறை மீளவிட்ட ...... பெருமாளே.
பதவுரை
வழுவுநெறி பேசு --- வேதாகமங்களில் இருந்து விலகிய தவறான கொள்கையையே பேசிய
தக்கன் இசையும் மக சாலை உற்ற --- தக்கன்அமைத்த வேள்விச் சாலையுள் சென்று இருந்த,
மதி இரவி தேவர் வஜ்ரபடையாளி --- சந்திரன், சூரியன், தேவர்கள், வச்சிராயுதப் படையாளியான இந்திரன்,
மலர்கமல யோனி --- திருமாலின் உந்திக்கமலத்தில் தோன்றிய பிரமதேவன்,
சக்ர வளைமருவு பாணி --- சக்கரமும் சங்கும் ஏந்தின திருக்கைகளை உடைய திருமால்,
விக்ர மறைய --- ஆகிய இவர்களின் வீரம் கெட்டு ஒழிய,
எதிர் வீர உக்ரர் புதல்வோனே --- அவர்களை எதிர்த்து அடக்கிய வீரபத்திரராக வந்த உக்ர மூர்த்தியாகிய சிவபிரானின் திருக்குமாரரே!
அழகிய கலாப கற்றை விகட மயில் ஏறி --- அழகான தோகைக் கற்றையுடன் கூடிய வாகனமாகிய மயிலின் மீதேறி,
எட்டு அசலமிசை வாகை இட்டு வரும்வேலா ... எட்டுக் குலமலைகளின் மீதும் வெற்றிக் கொடி நாட்டி வரும் வேலாயுதக் கடவுளே!
அடல் அசுரர் சேனைகெட்டு முறிய --- வலிமை மிக்க அசுரர்களின் சேனைகள் அழிந்து முறியும்படியாக
மிக மோதி வெட்டி --- மிகவும் பலமாகத் தாக்கி அவர்களை துணித்து அழித்து,
அமரர் சிறை மீள விட்ட பெருமாளே --- தேவர்களைச் சிறையினின்றும் மீண்டும் வருமாறு அருளி செய்த பெருமையின் மிக்கவரே!
எழு பிறவி நீர்நிலத்தில் --- எழுவகைப் பிறவிகள் ஆகிய ஈரமுள்ள நிலத்திலே,
இருவினைகள் வேர் பிடித்து --- நல்வினை, தீவினை என்ற வேர்கள் ஊன்றப்பெற்று,
இடர் முளைகளே முளைத்து --- துன்பம் என்ற முளைகளே முளைக்கவும்,
வளர் மாயை எனும் உலவையே பணைத்து --- மேலும் மேலும் வளர்வதாகிய, பொய்த்தோற்ற உணர்ச்சிகள் என்ற கிளைகள் நன்கு பருத்து,
விரக குழையே குழைத்து --- காமம் என்ற தளிர்கள் விட்டு,
இருள் இலைகளே தழைத்து --- அறியாமையாகிய இலைகள் நெறிந்து நன்கு தழைத்து,
மிக நீளும் --- மிகவும் நீண்டு இருக்கும்
இழவு நனையே பிடித்து --- கேடு என்னும் மொட்டுக்கள் அரும்பு விட்டு,
மரண பழமே பழுத்து --- சாவு என்னும் பழம் பழுத்து,
இடியும் உடல் மாமரத்தின் --- முறிந்து அழிந்துபடுகின்றதாகிய உடல் என்னும் மாமரத்தின்
அருநீழல் இசை இல் விழ --- அருமையான நிழலானது புகழ் இன்றி மறைய,
ஆதபத்தி அழியும் முனமே --- தீப்பட்டு அழிவதற்கு முன்பாகவே
எனக்கு இனியது ஒரு போதகத்தை அருள்வாயே --- அடியேனுக்கு இனிமை தருவதாகிய ஒப்பற்ற உபதேசத்தை அருள்வாயாக.
பொழிப்புரை
வேதாகமங்களில் இருந்து விலகிய தவறான கொள்கையையே பேசிய தக்கன் அமைத்த வேள்விச் சாலையுள் சென்று இருந்த, சந்திரன், சூரியன், தேவர்கள், வச்சிராயுதப் படையாளியான இந்திரன், திருமாலின் உந்திக்கமலத்தில் தோன்றிய பிரமதேவன், சக்கரமும் சங்கும் ஏந்தின திருக்கைகளை உடைய திருமால், ஆகிய இவர்களின் வீரம் கெட்டு ஒழிய, அவர்களை எதிர்த்து அடக்கிய வீரபத்திரராக வந்த உக்ரமூர்த்தியாகிய சிவபிரானின் திருக்குமாரரே!
அழகான தோகைக் கற்றையுடன் கூடிய வாகனமாகிய மயிலின் மீதேறி, எட்டுக் குலமலைகளின் மீதும் வெற்றிக் கொடி நாட்டி வரும் வேலாயுதக் கடவுளே!
வலிமை மிக்க அசுரர்களின் சேனைகள் அழிந்து முறியும்படியாக மிகவும் பலமாகத் தாக்கி அவர்களை துணித்து அழித்து, தேவர்களைச் சிறையினின்றும் மீண்டும் வருமாறு அருளி செய்த பெருமையின் மிக்கவரே!
எழுவகைப் பிறவிகள் ஆகிய ஈரமுள்ள நிலத்திலே, நல்வினை, தீவினை என்ற வேர்கள் ஊன்றப்பெற்று, துன்பம் என்ற முளைகளே முளைக்கவும், மேலும் மேலும் வளர்வதாகிய, பொய்த்தோற்ற உணர்ச்சிகள் என்ற கிளைகள் நன்கு பருத்து, காமம் என்ற தளிர்கள் விட்டு, அறியாமையாகிய இலைகள் நெறிந்து நன்கு தழைத்து, மிகவும் நீண்டு இருக்கும் கேடு என்னும் மொட்டுக்கள் அரும்பு விட்டு, சாவு என்னும் பழம் பழுத்து, முறிந்து அழிந்துபடுகின்றதாகிய உடல் என்னும் மாமரத்தின் அருமையான நிழலானது புகழ் இன்றி மறைய, தீப்பட்டு அழிவதற்கு முன்பாகவே, அடியேனுக்கு இனிமை தருவதாகிய ஒப்பற்ற உபதேசத்தை அருள்வாயாக.
விரிவுரை
எழு பிறவி நீர் நிலத்தில் ---
பிறப்பு என்பது ஏழு வகைப்படும்.
எழு பிறப்பு - தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்ற எழுவகைப் பிறப்பு. இவற்றுள் முதல் ஆறும் இயங்கியல் பொருள். (இயங்குதிணை, சங்கமம், சரம்) எனவும், இறுதியில் நின்ற ஒன்று நிலையியல் பொருள் (நிலைத்திணைப் பொருள், தாவரம், அசரம்) எனவும் பெயர் பெறும்.
எண்பத்து நான்கு நூறு ஆயிரம் - 84 இலட்சம் யோனி போதங்கள். "உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதம் நிரைசேரப் படைத்து அவற்றின் உயிர்க்கு உயிராய் அங்கங்கே நின்றான்" என்பது திருஞானசம்பந்தப் பெருமானார் திருவீழிமிழலைத் தேவாரத்தின் மூலம் நமக்கு அறிவுறுத்துவது.
யோனி - கருவேறுபாடுகள்.
தேவர் - 14 இலட்சம்,
மக்கள் - 9 இலட்சம்,
விலங்கு - 10 இலட்சம்,
பறவை - 10 இலட்சம்,
ஊர்வன - 11 இலட்சம்,
நீர்வாழ்வன – 10 இலட்சம்,
தாவரம் - 20 இலட்சம்,
ஆக, 84 இலட்சம் பேதம் ஆகும், இதனை,
"ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானிடம்
நீர்பறவை நாற்கால் ஒர் பப்பத்தாம் - சீரிய
பந்தமாம் தேவர் பதினால் அயன்படைத்த
அந்தமில் தாவரம் நால்ஐந்து."
என்னும் பழம் பாடலால் அறியலாம்.
இந்த ஏழு வகைப் பிறப்பும் நான்கு வகைப்படும்.
அண்டசம் - முட்டையில் தோன்றுவன. (அண்டம் - முட்டை, சம் - பிறந்தது) அவை பறவை, பல்லி, பாம்பு, மீன், தவளை முதலியன.
சுவேதசம் - வேர்வையில் தோன்றுவன. (சுவேதம் - வியர்வை) அவை பேன், கிருமி, கீடம், விட்டில் முதலியன.
உற்பிச்சம் - வித்து. வேர், கிழங்கு முதலியவற்றை மேல் பிளந்து தோன்றுவன (உத்பித் - மேல்பிளந்து) அவை மரம், செடி, கொடி, புல், பூண்டு முதலியன.
சராயுசம், கருப்பையிலே தோன்றுவன (சராயு - கருப்பாசயப்பை) இவை தேவர், மனிதர், நாற்கால் விலங்குகள் முதலியன.
இப்பிறப்புக்கள் அறிவு வகையாலு முறைப்படுத்தப்பட்டு உள்ளன.
1. புல், செடி, கொடி, மரம், மலை முதலிய இவைகள் தாவரம் எனப்படும். இவைகட்கு ஒரே அறிவு. பரிச அறிவு மட்டும்.
புல்லும் மரனும் ஓர் அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.
2. நந்து, சங்கு, சிப்பி முதலிய உயிர்கள் ஊர்வன எனப்படும். இவைகடிகு பரிசமும் சுவையும் அறியும் இரண்டு அறிவுகள் உள்ளன.
நந்தும் முரளும் ஈர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.
3. செல்லு, எறும்பு முதலிய உயிர்கட்கு பரிசம், சுவை, மோப்பம் என்னும் மூன்று அறிவுகள் உண்டு.
சிதலும் எறும்பும் மூ அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.
4. நண்டு, தும்பி முதலிய உயிர்கட்கு பரிசம், சுவை, மோப்பம், காணல் ஆகிய நான்கு அறிவுகள் உண்டு.
நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.
5. விலங்குகளுக்கும் மனிதர்களில் சிலருக்கும் மேற்கூறிய நான்கு அறிவுகளுடன், கேட்டல் என்று ஐந்தாவது அறிவு உண்டு.
மாவும் மாக்களும் ஐ அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.
6. மக்களுக்கு ஐந்து அறிவுடன், நல்லவை தீயவை பகுத்து அறியும் மனம் என்ற ஆறாவது அறிவு உண்டு.
மக்கள்தாமே ஆறு அறிவு உயிரே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.
ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆறறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே" --- தொல்காப்பியம்.
ஓரறிவு --- உடம்பால் உணர்வன.
ஈரறிவு --- உடம்பு & நாக்கால் உணர்வன.
மூன்று அறிவு --- உடம்பு, நாக்கு, மூக்கால் உணர்வன.
நான்கறிவு ---- உடம்பு, நாக்கு, மூக்கு, கண்ணால் உணர்வன,
ஐந்தறிவு --- உடம்பு, நாக்கு, மூக்கு, கண், காதால் உணர்வன.
ஆறறிவு --- உடம்பு, நாக்கு, மூக்கு, கண், காது , மனம்.
இந்த எழுவகைப் பிறப்பும் உடம்பாகிய ஒரு மரம் முளைப்பதற்கு நிலமாகின்றது.
இருவினைகள் வேர் பிடித்து ---
உடம்பாகிய மரம் எழுவகைப் பிறப்பு என்ற மண்ணில் தோன்றுகிறது. மரம் தோன்றுவதற்கு வேர் இன்றியமையாதது. வேர் இன்றி மரம் இல்லை. இந்த உடம்புக்கு வேராக நின்று, இதைத் தோற்ற வைத்தது நல்வினை தீவினை என்ற இருவினைகளே.
வினைப்போகமே ஒரு தேகம் கண்டாய்,
வினைதான் ஒழிந்தால்
தினைப்போது அளவும் நில்லாது கண்டாய்,
சிவன் பாதம்நினை,
நினைப்போரை மேவு, நினையாரை நீங்கிஇந்
நெறியில் நின்றால்
உனைப்போல் ஒருவர் உண்டோ மனமே
எனக்கு உற்றவரே. --- பட்டினத்தார்.
"அறம் பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி" என்றார் மணிவாசகனாரும். "இரு வினையின் இடர் கலியொடு ஆடி" என்றார் அருணைமுனிவர்.
இருவினைகளாகிய வேர் அற்றால் ஒழிய இந்த உடம்பு நீங்காது.
இடர் முளைகளே முளைத்து ---
வேர் பிடித்தபின் முளை தோன்றும். இந்த உடம்பிற்கு, துன்பமே முளையாக உருவகம் செய்யப்பட்டது. கரு உற்ற நாள் தொட்டு, காலபாசத்தால் கட்டப்பட்டு, உயிர் பிரியும் வரை துன்பமே.
உயிர் கருவிலே அணுவடிவாகச் சென்றவுடன் தாய் உதரத்தில் உள்ள நஞ்சு அணுக்களால் துன்பம் நேரும். அதோடு அல்லாமல் தாய் வயிற்றில் சோற்றுப்பை, பிச்சுப்பை, நீர்ப்பை முதலிய பைகளுடன் கருப்பை ஒருபுறம். அதற்குள் கருவடைந்த உயிர்க்கு இப்படி அப்படி திரும்பவும் முடியாது. மிக நெருக்கம். உதர அக்கினி கொளுத்தும். கொல்லன் உலைக்களத்தில் இருப்பதுபோல் அதனால் குழவிக்குப் பெரும் துன்பம். மலசல நாற்றம் ஒருபுறம். காற்று இன்றி மிகவும் புழுங்கும். கருவில் உள்ள குழந்தைக்கு ஒளிழும் இன்றி ஒரே இருள் சூழ்ந்து வருத்தம் ஏற்படும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு துன்பம் ஏறுபடும். இப்படிப் பத்து மாதம் நிறைந்து பிறக்கும்போது, வருவனை மலைய்லு இருந்து உருட்டியது போலும், ஆலையில் இட்ட கரும்பு போலும் உருண்டு நொந்து தலை கீழாகப் பிறந்து சொல்ல முடியாத துன்பத்தை அடைகின்றது.
பிறந்த பின்னும் துன்பம் முடிந்தபாடில்லை. நோய்களாலும், பேய்களாலும், பசியினாலும், குளிர் பனி வெயில்களாலும் குழந்தை துன்புறுகின்றது.
சிறிது வளர்ந்த பின் வேண்டாத பொருள்களை எல்லாம் வேண்டும் என்னும் அவாவினாலும், பயத்தினாலும், வேதனை உறுகின்றது. கல்வி பயில்கின்ற போதும் துன்புறுகின்றது.
பிறகு காமத்தினாலும், மனைவி மக்களினாலும், பொருள் ஈட்டுவதனாலும், ஈட்டிய பொருளை வைத்துக் காப்பாற்றுவதனாலும், பகைவர்களாலும், விடப்பூச்சிகளாலும், பசிதாகத்தினாலும், பிறகு முதுமையினாலும், முதுமையில் வருந்தும் பல்வேறு பிணிகளாலும், மரண வேதனையினாலும், இந்த உயிர் எல்லை இல்லாத துன்பத்தை அநுபவிக்கின்றது.
"பலதுன்பம்உழன்றுக லங்கிய
சிறியன்புலை யன்கொலை யன்புரி
பவம்இன்றுக ழிந்திட வந்துஅருள் ...... புரிவாயே." --- (கனகந்திரள்) திருப்புகழ்.
இவ்வாறு உற்றுப் பார்க்கும்போது, நமது வாழ்நாள் முழுவதும் துன்பம்தான். இன்பமே இல்லை. இன்ப ஊற்று இறைவன் திருவடியில் ஊறுகின்றது. திருவடிக்கமலங்களைத் தியானித்தால் ஒழிய, துன்ப நீக்கமும், இன்ப ஆக்கமும் எய்தாது. திருவடிப் பேற்றைப் பெற்றவர், "இன்பமே எந்நாளும், துன்பமில்லை" என்று கூறி மகிழ்வர்.
நமக்கு வரும் துன்பங்களை நமது பரமகுருநாதராகிய மணிவாசகப் பெருந்தகையார் கூறுமாறு காண்க.
"யானை முதலா எறும்பு ஈறுஆய
ஊனம்இல் யோனியி னுள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனம்இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈர்இரு திங்களில் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறுஅலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்
ஆண்டுகள் தோறும் அடைந்தஅக் காலை
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
காலை மலமொடு கடும்பகல் பசிநிசி
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்
கருங்குழ் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில்
ஒருங்கிய சாயல் நெருங்கிஉள் மதர்த்துக்
கச்சுஅற நிமிர்ந்து கதிர்த்து முன்பணைத்து
எய்த்துஇடை வருந்த எழுந்து புடைபரந்து
ஈர்க்குஇடை போகா இளமுலை மாதர்தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்
பித்த உலகர் பெருந்துறைப் பரப்பினுள்
மத்தக் களிறுஎனும் அவாவிடைப் பிழைத்தும்
கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்
நல்குரவு என்னுந் தொல்விடம் பிழைத்தும்
புல்வரம்பு ஆகிய பலதுறை பிழைத்தும்"
வளர் மாயை எனும் உலவையே பணைத்து ---
மாயை தோற்றத்திற்கும் ஒடுக்கத்திற்கும் காரணமாக நிற்பது. இடர்களுக்கு எல்லாம் காரணம் மாயையே. உயிரை மயக்கி நிற்பது. இன்பத்தைத் துன்பமாகவும், இன்பமாகவும் மாறி அறியச் செய்யும்.
மாயையை வெல்வது அரிது. "மகமாயை களைந்திட வல்ல பிரான்" முருகனே ஆகும். "மாயைக்குச் சூழ ஒணாதது" என்பார் திருச்சிராப்பள்ளித் திருப்புகழில்.
மக மாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே
அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே.
மாஏழ் சனனம் கெட மாயைவிடா
மூஏடணை என்று முடிந்திடுமோ
கோவே, குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவ சங்கர தேசிகனே. --- கந்தர் அநுபூதி.
உலகமாயை என்னும் பிரகிருதி மாயையில் நின்று வருந்துவதே உயிர்களின் தன்மையாக இருக்கின்றது. அதனை, திருவருளும் குருவருளும் துணை செய்ய, ஞான வாளினால் சேதித்தல் வேண்டும்.
உலவை - மரக்கொம்பு. செடி முளைத்தபின் சிறுசிறு கொம்புகளாகப் பிரிந்து வளரும். இந்த மரத்திற்கு மாயையாகிய கொம்புகள் கிளைக்கின்றன.
விரக குழையே குழைத்து ---
விரகம் - ஆசை.
இந்த உடம்பு என்ற மரத்தில் ஆசை என்ற தளிர்கள் கோடிக்கணக்காக உண்டாகின்றன. தளிர்கள் தோன்றி முதிர்வதும் உதிர்வதும் ஆகவே இருக்கும். அதுபோல், ஆசைகளி பல உண்டாவதும், அவைகளி நிறைவேறாமல் அழிவதுமாகவே இருக்கும்.
வாழ்வில் எண்ணில்லாத ஆசைகள். எத்துணை போகம் எய்தினும் நிறைவு பெறாது மேலும் மேலும், பொருள்கள் வேண்டும் என்ற அவா எழுகின்றது.
"ஆசைச் சுழல் கடலில் ஆழாமல் ஐயாநின்
நேசப் புணைத்தாள் நிறுத்தினாலு ஆகாதோ" --- தாயுமானார்.
"ஆசையெனும் பெருங்காற்றுஊடு இலவம்பஞ்சு
எனவும்மனது அலையும் காலம்
மோசம் வரும், இதனாலே கற்றதும், கேட்
டதும் தூர்ந்து, முத்திக்கு ஆன
நேசமும்நல் வாசமும்போய்ப் புலனாய், இல்
கொடுமைபற்றி நிற்பர், அந்தோ
தேசுபழுத்து அருள்பழுத்த பராபரமே
நிராசைஇன்றேல் தெய்வம் உண்டோ" --- தாயுமானார்.
இருள் இலைகளே தழைத்து ---
இருள் என்றது அறியாமையை. ஆசையினால் அறியாமை உண்டாகும். ஆசை என்ற சூறாவளி வந்தபோது, அறிவு என்ற வான்பொருள் சிதறுண்டு செல்லுகின்றது.
தன் மகன் மீது அளவற்ற ஆசை வைத்து இருந்தான் தசரதன். அதனால் இராமருடைய ஆற்றலையும் அவருடைய அவதார நோக்கத்தையும் அறியாது கெட்டான். இராமர் கானகம் புறப்பட்டபோது, அவருடைய அளவற்ற ஆற்றலை உணராது, உயிர் விடுத்தான். மிதிலையில் மன்னர்கள் யாராலும் எடுக்க முடியாத பெரிய வில்லை எடுத்து ஒடித்த தன்மையைக் கேட்டும், சூரிய குலத்தை இருபத்தொரு தலைமுறை கருவறுத்த பரசுராமனை ஒரு நொடிப்பொழுதில் வென்ற திறத்தைக் கண்டும், அவருடைய ஆற்றலை அறிந்தானில்லை. இதற்கெல்லாம் ஆசையே காரணம்.
ஆசை கொடிது. கொடிது. எல்லாப் பொருள்களிடத்திலும் அன்பே இருக்கவேண்டும். அன்பு ஒளிமயமாகும். ஆசை இருள் மயமாகும்.
ஆசையினால் அறியாமை உண்டாகும். ஆசை தளிர். தளிர் இலையாக மாறுவதுபோல், ஆசை அறியாமையாக மாறும்.
மிக நீளும் இழவு நனையே பிடித்து ---
இழவு - கேடு. நனை - அரும்பு.
ஆசையினால் அறியாமையும், அறியாமையால் பெரும் கேடும் உயிர்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக விளைகின்றன. கேடுகளுக்கு எல்லாம் மூலகாரணம் அறியாமையே. "கேடு வரும் பின்னே, மதி கெட்டு வரும் முன்னே" என்பது முதுமொழி. அறியாமையாகிய அரும்பு அரும்புகின்றது.
விறகு பிளப்பான் ஒருவன் ஒரு மரத்தைப் பகுதி பிளந்து, பிளந்த பகுதியில் ஒரு ஆப்பை வைத்துவிட்டு, நாளை வந்து மற்றப் பகுதியைப் பிளப்போம் என்று சென்றான். ஒரு குரங்கு அம்மரத்தினிடத்து வந்தது. பிளந்த கொம்பில் தன் காலை நுழைத்துக் கொண்டு, பெரும்செயல் செய்வதாகக் கருதி, அந்த ஆப்பை அரும்பாடு பட்டு அசைத்துப் பிடுங்கி எடுத்தது. கால் அகப்பட்டுக் கொண்டு சொல்லொணாத் துயரம் உற்றது. குரங்கின் அறியாமையால் இந்தக் கேடு வந்தது.
"நாப்பிளக்கப் பொய்உரைத்து, நவநிதியம் தேடி,
நலம் ஒன்றும் அறியாத நாரியரைக் கூடி,
பூப்பிளக்கப் பொய்உரைத்து, புற்றீசல் போலப்
புலபுலெனக் கலகலனப் புதல்வர்களைப் பெறுவீர்,
காப்பதற்கும் வழிஅறியீர், கைவிடவும் மாட்டீர்,
கவர் பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே
ஆப்புஅதனை அசைத்துவிட்ட குரங்கு,அதனைப் போல
அகப்பட்டீர் கிடந்துஉழல அகப்பட்டீர் நீரே!". — பட்டினத்தார்.
மரண பழமே பழுத்து ---
கேடுகளின் சிகரம் மரணம். மரணமாகிய பழம் பழுத்து விடுகின்றது. இந்த அரிய உடல் அவமே உதிர்கின்றது. அதனை நினைத்து அறிவு உடையவர்கள் மரண பழம் பழுக்கும் முன், இறைவனை நினைந்து, அன்புசெய்து, சிவாநுபவம் பெறவேண்டும்.
"பொய்விளக்கப் புகுகின்றீர், போது கழிக்கின்றீர்,
புலைகொலைகள் புரிகின்றீர், கலகல என்கின்றீர்,
கைவிளக்குப் பிடித்துஒரு பாழ்ங் கிணற்றில் விழுகின்ற
களியர் எனக் களிக்கின்றீர், கருத்து இருந்தும் கருதீர்,
ஐ விளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால்
அடிவயிற்றை முறுக்காதோ? கொடிய முயற்றுலகீர்,
மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம்
மேவியது, ஈண்டு அடைவீரேல் ஆவி பெறுவீரே!" --- திருவருட்பா.
மூப்பு, மரணம் ஆகியவைகளை நினைத்தாலே அடிவயிறு கலங்க வேண்டும். இப் பிறவி தப்பினால் எப் பிறவி வாய்க்குமோ?
இடியும் உடல் மாமரம் ---
இந்த உடம்பை ஒரு மாமரமாக அடிகளார் உருவகம் புரிகின்றார். மரங்களுக்குள்ளே உயர்ந்தது மாமரம். பலா பூக்காமல் பழுப்பது. ஆலின் பழம் அத்துணைச் சிறந்தது அல்ல. மாமரத்தின் கீழே அம்பிகை இறைவனை வழிபட்டார். அந்தத் திருத்தலம் காஞ்சி. சூரபன்மனும் மாமரமாய் நின்றான்.
இந்த உடம்பு என்னும் மரத்திற்கு வேர் இருவினை என்பது சிந்தனைக்கு உரியது. வேரால் மரம் நிற்பதுபோல், வினையினால் உடம்பு நிற்கிறது. வினையாகிய வேர் அற்றுப்போனால், உடம்பாகிய மரம் வீழ்ந்து விடும். ப"வினைதான் ஒழிந்தால் தினைப்போதளவும் நில்லாது" என்பார் பட்டினத்தடிகள்.
ஆதபத்தி அழியும் முனமே எனக்கு இனியதொரு போதகத்தை அருள்வாயே ---
இந்த உடம்பு தீப்பட்டு அழியும் முன் இறைவனுடைய திருவருளைப் பெறவேண்டும். இந்த உடம்பு ஒரு ஏணி போன்றது. ஏணிநைக் கொண்டு மாடி மீது ஏறுவது போல், இந்த உடம்பு உள்ளபோதே, உடம்புக்குள் உறையும் உத்தமனை நாடி, பரகதி பெறவேண்டும்.
ஆதலின் அடிகள், "இறைவனே, இவ்வுடம்பு அழியுமுன் அடியேனுக்கு உபதேசித்து அருள் புரிவீர்" என வேண்டுகின்றார். அறுமுகப் பெருமானிடம் உபதேசம் பெற்றவர் அருணையடிகள். இதனை அடியில் வரும் அமுத வாக்குகளால் தெளிக.
"தேன்என்று பாகுஎன்று உவமிக்க ஒணாமொழித் தெய்வவள்ளி
கோன்அன்று எனக்கு உபதேசித்தது ஒன்றுஉண்டு. கூறவற்றோ
வான்அன்று, கால்அன்று, தீஅன்று, நீர்அன்று, மண்ணும்அன்று,
தான்அன்று நான்அன்று அசிரீரி அன்று சரீரிஅன்றே." --- கந்தர் அலங்காரம்.
"மருவி நாயெனை யடிமை யாமென
மகிழ்மெய் ஞானமு ...... மருள்வோனே" --- (இருளுமோர்) திருப்புகழ்.
"தலைநா ளிற்பத மேத்தி யன்புற
வுபதே சப்பொரு ளூட்டி மந்திர
தவஞா னக்கட லாட்டி யென்றனை ...... யருளாலுன்" --- திருப்புகழ்.
"அக்கண மேமாய துர்க்குணம் வேறாக
அப்படை யேஞான ...... வுபதேசம்
அக்கற வாய்பேசு சற்குரு நாதாவுன்
அற்புத சீர்பாதம் ...... மறவேனே". --- (பக்குவ) திருப்புகழ்.
வழுவு நெறி பேசு தக்கன் ---
தக்கன் நெடிது காலம் தவம் புரிந்து, சிவபெருமானிடம் எண்ணில்லாத வரம் பெற்றவன். வர பலத்தால் இறுமாந்து, சிவபெருமானைப் புறக்கணித்து, ஒரு வேள்வி புரியத் தொடங்கினான். ததீசி முனிவரும், வேதங்களும், சிவமே பரம் என்று இடித்துக் கூறியும் கேட்டானில்லை. அம்பிகை வேண்ட, இறைவர் திருமேனியில் இருந்து வீரபத்திரர் தோன்றி, மகச் சாலை சென்று, சிவநிந்தை புரிந்த தக்கனுடன் இருந்த எல்லாத் தேவர்களையும் தண்டித்தனர். சிவத்தை வணங்காத தக்கன் தலை இழந்து நிலை இழந்தான். அவன் தந்தை பிரமதேவனும் முன்பு தலை இழந்தவன்தான். தந்தை வழி மகனும். சந்திரன் உடல் தேய்ந்தான். சூரியன் பல்லிழந்தான். இந்திரன் அயன் மால் முதலிய யாவரும் தண்டிக்கப்பட்டனர்.
கருத்துரை
முருகா! இந்த உடம்பு அழியுமுன் அடியேனுக்கு உபதேசித்து அருள் புரிவீர்.