66. மானம் காத்தல்

 


"கனபாரம் ஏறினும் பிளந்திடுவ தன்றியே

     கற்றூண் வளைந்திடாது

கருதலர்க ளால்உடைந் தாலும்உயிர் அளவிலே

     கனசூரன் அமரில்முறியான்


தினமும்ஓர் இடுக்கண்வந் துற்றாலும் வேங்கைதோல்

     சீவன்அள வில்கொடாது

திரமான பெரியோர்கள் சரீரங்கள் போகினும்

     செப்பும்முறை தவறிடார்கள்


வனம்ஏறு கவரிமான் உயிர்போகும் அளவும்தன்

     மயிரின்ஒன் றும்கொடாது

வாராத ஆபத்து வருகினும் கற்புடைய

     மாதுநிறை தவறிநடவாள்


மனதார உனதடைக் கலமென்ற கீரற்கு

     வன்சிறை தவிர்த்தமுருகா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே!"


இதன் பொருள் ---

மனது ஆர உனது அடைக்கலம் என்ற கீரற்கு வன்சிறை தவிர்த்த முருகா! - தன் மனம் பொருந்தும்படி 'உனக்கு அடைக்கலம் நான்' என்று கூறிய நக்கீர தேவருக்கு உண்டாகிய கொடிய சிறைவாசத்தைப் போக்கி அருளிய முருகனே!

மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

கனபாரம் ஏறில் பிளந்திடுவது அன்றியே கல்தூண் வளைந்திடாது - அதிக சுமையை ஏற்றினால் கல்தூண் ஆனது பிளந்து போகுமே அல்லாமல், வளைந்து கொடுக்காது.

கருதலர்களால் உடைந்தாலும் உயிர் அளவிலே கனசூரன் அமரில் முறியான் - பகைவர்களால் தோல்வி அடைய நேர்ந்தாலும்  பெருவீரம் பொருந்திய  ஒருவன்  போரில் உயிர் துறப்பானே அல்லாது, பின்வாங்க மாட்டான்;

தினம் ஓர் இடுக்கண்  வந்து உற்றாலும்  வேங்கை தோல்  சீவன் அளவில் கொடாது - ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துன்பம் வந்து அடைந்தாலும் புலியானது தன்தோலை உயிர்விடும் வரையில் கொடாது; 

திரமான பெரியோர்கள் சரீரங்கள் போகினும் செப்புமுறை தவறிடார்கள் - உள்ள உறுதி வாய்ந்த பெரியோர்கள்  உடல் அழிவதானாலும் வார்த்தை தவறி நடக்கமாட்டார்கள்; 

வனம் ஏறு கவரிமான் உயிர்போகும் அளவும் தன் மயிரின் ஒன்றும் கொடாது - காட்டில் உலவுகின்ற கவரிமான் ஆனது உயிர் போகின்ற அளவிலும் தன் மயிரில் ஒன்றையும் இழவாது;  (மயிர் ஒன்று நீங்கினால் உயிர் துறந்து விடும். "மயிர் ந்நீபின் வாழாக் கவரி மா" என்பது திருக்குறள்.)

வாராத ஆபத்து வருகினும் கற்புடைய மாது நிறை தவறி நடவாள் - வரக்கூடாத துன்பம் வந்தபோதிலும் கற்புடைய பெண் தனது  கற்புநெறியிலிருந்து தவறி நடக்கமாட்டாள். 

     வாராத துன்பம் வந்தாலும் இவர்கள் தங்கள் (மானம்) பெருமையைக் காப்பார்கள் என்பது கருத்து.


No comments:

055. செங்கோன்மை - 04. குடிதழீஇக் கோலோச்சும்

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல்  அதிகாரம் 55 -- செங்கோன்மை இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில்,   "குடிமக்களின் கருத்த...