055. செங்கோன்மை - 04. குடிதழீஇக் கோலோச்சும்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல் 

அதிகாரம் 55 -- செங்கோன்மை


இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில்,  "குடிமக்களின் கருத்தை அறிந்து, நீதியோடு பொருந்தி, ஆட்சி செலுத்திப் பெருநிலம் காக்கும் மன்னனின் கொற்றக்குடை நிழலில், இந்த உலகம் பொருந்தி நிலைப்பது ஆகும்" என்கின்றார் நாயனார்.

அரசன் ஒருவன், தனது குடிகள் குறையிரந்து நின்ற காலத்தில், அவர்களுக்கு இனிய சொல்லைச் சொல்லியும், அவர்கள் வறுமை உற்ற காலத்தில் வேண்டும் பொருள்களைக் கொடுத்தும் நல்லாட்சி புரிவானாயின், அவ்வித அரசனை மக்கள் தங்களின் உயிராக மதித்துப் போற்றுவர்.


இதற்குத் திருக்குறள்...

“குடிதழீஇக் கோல் ஓச்சும் மன்னன்

அடி தழீஇ நிற்கும் உலகு.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

குடிதழீஇக் கோல் ஓச்சும் மாநில மன்னன் அடி - தன்குடிகளையும் அணைத்துச் செங்கோலையும் செலுத்தும் பெருநில வேந்தன் அடியை, 

தழீஇ நிற்கும் உலகு - பொருந்தி, விடார் உலகத்தார்.

(அணைத்தல் - இன்சொல் சொல்லுதலும், தளர்ந்துழி வேண்டுவன கொடுத்தலும் முதலாயின. இவ்விரண்டனையும் வழுவாமல் செய்தான் நிலம் முழுதும் ஆளும் ஆகலின், அவனை 'மாநில மன்னன்' என்றும், அவன் மாட்டு யாவரும் நீங்கா அன்பினராவர் ஆகலின்,  'அடிதழீஇ நிற்கும் உலகு'  என்றும் கூறினார்.)


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...

“வெண்குடைக் கீழ்வாழும் குடிகட்கு வேந்தனும்

செங்கோலன் அல்லாக்கால் செய்வதென், பொங்கு

படுதிரைச் சேர்ப்ப! மற்று இல்லையே யானை

தொடு உண்ணின் மூடுங் கலம்.”  --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

படுதிரை பொங்கு சேர்ப்ப - மிகுந்த அலைகள் பொங்கி எழுகின்ற கடல் நாடனே! யானை தொடு உண்ணின் மூடுங்கலம் மற்று இல்லை - யானை தனது கரத்தால் தொட்டு அக்கலத்தை உருட்டி உண்ணின் அதனை மூடுங்கலம் வேறொன்றும் இல்லையாதல் போல, வெண்குடைக்கீழ் வாழும் குடிகட்கு - தனது வெண்மையான கொற்றக்குடை நிழலின்கீழ் உயிர்வாழ்கின்ற குடிமக்கட்கு, வேந்தனும் செங்கோலன் அல்லாக்கால் - அரசன் செம்மையான கோலையுடையவன் அல்லாதவிடத்து, செய்வது என் -அவர்கள் செய்வது யாது? 



“பொருத்தம் அழியாத பூந்தண்டார் மன்னர்,

அருத்தம் அடிநிழ லாரை --- வருத்தாது,

கொண்டாரும் போலாதே கோடல், அதுவன்றோ

வண்டு ஊதாது உண்டு விடல்.” ---  பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

பொருத்தம் அழியாத பூம் தண் தார் மன்னர் - அரசனுக்குரிய இலக்கணங்கள் நீங்காத அழகிய குளிர்ந்த மாலையை உடைய அரசர்கள், அருத்தம் - இறைப் பொருளுக்காக, அடி நிழலாரை - தன்னடியின் கீழ் வாழும் குடிகளை, வருத்தாது - (மழையின்மை முதலிய காரணங்களால் பொருளில்லாத காலத்து) வருத்துதலைச் செய்யாமலும், கொண்டாரும் போலாதே கோடல் - பொருளுள்ள காலத்து வருத்திக் கொண்டவரைப் போலவும் கொள்ளாது எளிதாகக் கொள்ளுதலுமாகிய, அது - காலமறிந்து கொள்ளுதல், வண்டு - வண்டுகள், ஊதாது - (மொட்டாகிய தேனில்லாத பூக்களை மலராத காலத்து) ஊதிச் சிதையாது, உண்டுவிடல் - தேன் நிறைந்து மலர்ந்த காலத்துத் தேனை எளிதாக உண்ணும் விதத்தை (ஒக்கும்).

அரசர்கள் குடிகளிடத்திலிருந்து வாங்கும் இறைப் பொருள்களைக் காலமறிந்து வருத்தாது வாங்குதல் வேண்டும்.


“குடிகொன்று இறைகொள்ளும் கோமகற்குக் கற்றா

மடிகொன்று பால்கொளல் மாண்பே, - குடிஓம்பிக்

கொள்ளுமா கொள்வோற்கு காண்டுமே மாநிதியம்

வெள்ளத்தின் மேலும் பல.”   ---நீதிநெறி விளக்கம்.  

இதன் பொருள் ---

குடிகொன்று இறை கொள்ளும் கோமகற்கு - குடிமக்களை வருத்தி வருத்தி வாங்கும் அரசனுக்கு, கன்று ஆ மடிகொன்று பால் கொளலும் மாண்பே - கன்றையுடைய ஆவின் மடியினை வருத்திப்பால் கறப்பதும் நல்ல செயலாகும். (இவ்வாறு வருத்தி வரி வாங்கும் அரசனிடத்தில் செல்வம் சேர்ந்திருக்கிறதோ எனில் அதுவுமில்லை. ஆனால்.) குடி ஓம்பிக் கொள்ளுமா கொள்வோர்க்கு - குடிமக்களை அவர்கள் நலத்தில் கருத்து வைத்துப் பாதுகாத்து நல்ல முறையில் வாங்கும் (வகையாக வரியினை வாங்கும்) அரசர்க்கு, மா நிதியம் வெள்ளத்தின் மேலும் பல காண்டும் - பெருமையுடைய பணம் வெள்ளத்தினும் மேலும் பலவாகக் காண்கின்றோம்.


No comments:

055. செங்கோன்மை - 04. குடிதழீஇக் கோலோச்சும்

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல்  அதிகாரம் 55 -- செங்கோன்மை இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில்,   "குடிமக்களின் கருத்த...