திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 54 -- பொச்சாவாமை
இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், " உயர்ந்தவை என்று சான்றோரால் புகழப்பட்ட செயல்களை எண்ணிக் கடைப்பிடித்துச் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யாமல் இகழ்ந்தார்க்கு எழுபிறப்பிலும் நன்மை என்பது இல்லை" என்கின்றார் நாயனார்.
புகழ்ந்த செயல்களாவன - ஆறிவு, ஆண்மை, பொருள் என்னும் மூன்று வகையான ஆற்றல்களும், கொடுத்தல், இன்சொல் சொல்லல், வேறுபடுத்தல், தண்டித்தல் என்னும் நால்வகை உபாயங்களும் கூடிய இடத்து செய்யக்கூடிய தொழில்கள். அவை, எளிய முயற்சியால் முடிபவை. செய்தால் பயன் விளைபவை, பெரும்பயன் தருபவை, ஐயத்திற்கு இடம் இல்லாதவை, முடித்த பின் இன்பம் தருபவை ஆகிய ஐந்து கூறுகளை உடைய தொழில்கள் ஆகும்.
இவற்றில் இருந்து வழுவியவருக்கு நரகத் துன்பமே வரும். எனவே, "எழுமையும் இல்" என்றார். ஏனவே, செயலில் இகழ்ச்சி கூடாது.
இதற்குத் திருக்குறள்...
“புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும், செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.”
இதற்குப் பரிமேலழகர் உரை ---
புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் --- நீதி நூலுடையார் இவை அரசர்க்கு உரியன என்று உயர்த்துக் கூறிய செயல்களைக் கடைப்பிடித்துச் செய்க,
செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் - அங்ஙனம் செய்யாது மறந்தவர்க்கு எழுமையினும் நன்மை இல்லை ஆகலான்.
(அச்செயல்களாவன: மூவகை ஆற்றலும், நால்வகை உபாயமும், ஐவகைத் தொழிலும், அறுவகைக் குணமும் முதலாய செயல்கள். சாதி தருமமாகிய இவற்றின் வழீஇயோர்க்கும் உள்ளது நிரயத் துன்பமே ஆகலின், 'எழுமையும் இல்' என்றார். 'எழுமை' ஆகு பெயர், இதனான் பொச்சாவாது செய்ய வேண்டுவன கூறப்பட்டன.)
பின்வரும் பாடல், இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியாலம்...
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல் முன்இனிதே;
முன்தான் தெரிந்து முறைசெய்தல் முன்இனிதே;
பற்றிலனாய்ப் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப் பாங்கறிதல்
வெற்றிவேல் வேந்தர்க்கு இனிது. --இனியவை நாற்பது.
இதன் பொருள் --
வெற்றி வேல் வேந்தற்கு - வெற்றியைத் தருகின்ற வேலையுடைய அரசனுக்கு, ஒற்றினால் ஒற்றிப் பொருள் தெரிதல் முன் இனிது - ஒற்றராலே எல்லார் இடத்தும் நிகழ்வனவற்றை) ஒற்றுவித்து, அவற்றின் பயனை ஆராய்தலின் பெருமை, இனிது; முன் தான் தெரிந்து முறை செய்தல் முன் இனிது - தான் குற்றத்தை முன்னர் ஆராய்ந்து தண்டஞ் செய்தல் மிக இனிது; பற்று இலனாய் பல் உயிர்க்குப் பாத்து உற்றுப் பாங்கு அறிதல் இனிது - ஒருவர்க்குப் பற்றிலனாய், எல்லார்க்கும் அப் பற்றினைப் பகுத்து, எல்லாரிடத்தும் தானும் சென்று குற்றம் உளவாயின் அறிதல் இனிது.
No comments:
Post a Comment