“இரக்கத்தால் உலகுஆளும் தண்டலையா
ரே! சிவனே! எந்த நாளும்
இரக்கததான் புறப்பட்டீர்! என்றனையும்
இரக்கவைத்தீர்! இதனால் என்ன?
இரக்கத்தான் அதிபாவம்! இரப்பதுதீ
தென்றாலும், இன்மை யாலே
இரக்கப்போ னாலுமவர் சிறக்கப்போ
வதுகருமம் என்னல் ஆமே.”
இதன் பொருள் ---
இரக்கத்தால் உலகு ஆளும் தண்டலையாரே சிவனே – அருட்பெருங் கருணையால் உலக உயிர்களைக் காத்து ஆண்டு அருள் புரிபவரும், திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் “நீள்நெறி” என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருப்பவரும் ஆன சிவபரம்பொருளே! எந்தநாளும் இரக்கத்தான் புறப்பட்டீர் – நீர் எப்போதும் பிரம கபாலத்தை ஏந்திப் பிச்சை எடுக்கச் செல்வீர். என் தனையும் இரக்கவைத்தீர் - என்னையும் இரந்து உண்ண அமைத்து விட்டீர்!, இதனால் என்ன - இவ்வாறு செய்ததனால் என்ன பயன்?, இரக்கத்தான் அதிபாவம் – பிச்சை எடுப்பது பெரிய பாவம். (ஆகையால்) இரப்பது தீது – இரந்து உண்டு வாழ்வது தீயது, என்றாலும் - என்று மேலோர் கூறினாலும், இன்மையாலே இரக்கப் போனாலும் - வறுமையாலே பிச்சை எடுக்கச் சென்றாலும், அவர் சிறக்கப் போவது கருமம் என்னல் ஆமே - அவ்வாறு இரக்கப் போவோர் சிறப்புடன் செல்வது தகுதி என்று கூறுதல் வேண்டும்.
"இரக்கப் போனாலும் சிறக்கப் போ" என்பது பழமொழி. பிச்சை எடுக்கும் நிலை வந்தபோதும் நல்அறிவு நல்லொழுக்கங்களில் தவறுதல் கூடாது. கண்ணியமான முறையில் பிச்சை கேட்கவேண்டும். பொருள் உள்ளோரைத் தேடிச் சென்று இரத்தல் கூடாது. அருள் உள்ளம் கொண்டோரை நாடி இரந்து உண்ணுதல் சிறப்பு. இரப்போர்க்கு ஈவது சிறப்பு. ஈகை உள்ளம் கொண்டோரிடம் இரத்தலும் சிறப்பு எனவே, இரக்கப் போனாலும் அவர் சிறக்கப் போவது” என்றார்.
No comments:
Post a Comment