055. செங்கோன்மை - 06. வேல் அன்று

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல் 

அதிகாரம் 55 -- செங்கோன்மை


இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "அரசனுக்குப் போரில் வெற்றியைத் தருவது அவனது வேற்படை அல்ல. அவனுடைய கோடாத செங்கோலே ஆகும்" என்கின்றார் நாயனார்.

இதற்குத் திருக்குறள்....

“வேல் அன்று வென்றி தருவது, மன்னவன்

கோல், அதுவும் கோடாது எனின்.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

மன்னவன் வென்றி தருவது வேல் அன்று கோல் --- மன்னவனுக்குப் போரின்கண் வென்றியைக் கொடுப்பது அவன் எறியும் வேல் அன்று, கோல், 

அதூஉம் கோடாது எனின் - அஃதும் அப்பெற்றித்தாவது தான் கோடாதாயின்.

(கோல் செவ்விதாயவழியே 'வேல் வாய்ப்பது என்பார், 'வேல் அன்று' என்றார். 'மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' (புறநா.55) என்றார் பிறரும். 'கோடான்' என்பது பாடம் ஆயின், கருவியின் தொழில் வினைமுதல் மேல் நின்றதாக உரைக்க)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய, நீதிசூடாமணி என்கின்ற, "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“கண்கொண்டான் பொன்னிக் கரைகட்ட வாரானை

எண்கொண்ட சோழன், இரங்கேசா! --- மண்கொண்ட

வேல்அன்று வென்றி தருவது மன்னவன்

கோல்அதூஉம் கோடாது எனின்.”

இதன் பொருள் ---  

இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! பொன்னிக் கரை - காவேரிக் கரையை, கட்ட வாரானை - அடைக்க வாராத பிரதாபருத்திரன் என்னும் அரசனை, எண் கொண்ட சோழன் - செங்கோலரசன் என்று யாவரும் மதித்து இருந்த சோழ மகாராஜன், கண் கொண்டான் - அவனுடைய மூன்று கண்களில் ஒரு கண்ணைக் குத்தி அபராதமாகக் கொண்டான், (ஆகையால், இது) வென்றி தருவது - வெற்றியைத் தருவது, மண் கொண்ட - பூமியைத் தன் ஆட்சியில் கொண்ட, மன்னவன் வேல் அன்று - அரசனுடைய வேலாயுதம் அல்ல, கோல் - அவனுடைய கோலாகும், அதுவும் - அந்தக் கோலும், கோடாது எனின் - ஒரு பக்கம் சாயாமல் செங்கோலாய் இருக்குமாயின் (என்பதை விளக்குகின்றது).

கருத்துரை --- அரசனுக்கு வேலாயுதத்தினும் கோலாயுதம் சிறந்ததாம்.

விளக்கம் --- காவேரிக் கரைகொண்ட சோழமகாராஜன் அரசாளும் காலத்தில், அந் நதியின் கரையைக் கட்ட ஐம்பத்தாறு தேசத்தரசர்களுக்கும் அளந்து விட்டிருந்தான். எல்லாரும் தத்தம் அளவின்படி கரை கட்டி முடித்தார்கள். ஒருவன் மட்டும் சற்றே அசட்டையாய்த் தன் பங்கைக் குறித்த காலத்தில் கட்டி முடிக்காமல் சும்மா இருந்தான். அவன்தான் பிராதபருத்திரன்.  சோழன் கரை கட்டி முடிந்ததை மேற்பார்த்து வரும்போது, கட்டி முடியாதிருந்த கரையைக் கண்டு, "இது யார் பங்கு" என்றான்.  கூட இருந்தவர்கள், "இது பிராதபருத்திரன் பங்கு" என்றார்கள். அது கேட்ட சோழன், அவன் படத்தை வரவழைத்து உருவத்தைக் கவனித்து நோக்கினான். அவனுக்கு எல்லார்க்கும் இருப்பதுபோல இரண்டு கண்கள் இன்றி, முன்று கண்கள் இருந்தன். "இதனால் தான் இவனுக்குச் செருக்கு அதிகம்" என்று சோழன் அவ் உருவத்தில் இருந்த மூன்றாம் கண்ணாகிய நெற்றிக் கண்ணைத் தன் கை வாளால் குத்திக் குருடாக்கினான். சோழன் செங்கோலன் ஆகையால், அவன் செய்த தண்டனை படத்திற்கு ஆயினும், அம் மன்னனும் ஒரு கண் இழந்து, அவமானப்பட்டு, விரைந்து வந்து தன் பங்குக் கரையைக் கட்டிச் சோழனை வணங்கி வேண்டிக் கொண்டான். அது கண்டார் யாவரும் சோழன் செங்கோன்மைக்கு வியந்து மகிழ்ந்தார்கள்.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“மங்காத மங்குல்தனை மாறன்விலங்கு இட்டதுஅவன்

செங்கோன்மை மகிமை சிவசிவா --- எங்கேனும்

வேல்அன்று வென்றி தருவது மன்னவன்

கோல்அதூஉம் கோடாது எனின்.”

மங்குல் - மேகம். மாறன் - பாண்டியன். 

இதன் பொருள் ---

ஒரு காலத்திலே சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தர்களுடைய நாட்டிலே மழையில்லாமல் போய்விட்டது. அகத்தியருடைய அறிவுரைப்படி மூவரும் இந்திரனுடைய அவைக்குச் சென்றார்கள்.  சேரனும் சோழனும் இந்திரன் காட்டிய இருக்கைகளிலே இருந்தார்கள்.  உக்கிரபாண்டியன் மட்டும் இந்திரனுடைய இருக்கையிலே ஏறி இந்திரனோடு ஒன்றாக இருந்தான். இதனைப் பார்த்த இந்திரனுக்குச் சினம் உண்டாகியது. சேர சோழர்களுடைய செய்தியை வினவி அவர்களுடைய நாடுகளிலே மட்டும் மழை பெய்யச் செய்தான். இருவரையும் அனுப்பிய பிறகு உக்கிரபாண்டியனுடைய செருக்கை அடக்கவேண்டும் என்று எண்ணினான்.  இந்திரன் பாண்டியனுக்குச் சிறப்புச் செய்வான் போலத் தூக்க முடியாத மாலை ஒன்றைக் கொண்டு வரச் செய்து, அதனைப் பாண்டியனுடைய கழுத்திலே போட்டான்.  பாண்டியன் அம்மாலையை மலர்மாலை போலத் தாங்கிக் கொண்டு இந்திரனை மதியாமல் இருந்தான். பிறகு தன்னுடைய நாட்டை அடைந்தான். ஒருநாள் இந்திரனுடைய புட்கலாவருத்தம் முதலிய நான்கு முகில்கள் பொதிய மலைச் சாரலில் மேயக்கண்டு அவைகளைச் சிறையிலிட்டான்.  இதனை உணர்ந்து இந்திரன் உக்கிரபாண்டியனை எதிர்த்துப் போரிடத் தொடங்கினான். போரில் பாண்டியனை வெல்ல முடியவில்லை. அதனால் தோற்றோடினான். பிறகு "உன்னுடைய நாட்டிலேயும் மழை பெய்யச் செய்கிறேன், அன்பு கூர்ந்து முகில்களைச் சிறை விடுக" என்று செய்தியனுப்பினான்.  அச்சமயத்தில் வேளாளன் ஒருவன் இந்திரன் பொருட்டுப் பிணை நின்று வேண்டிக் கொண்டான்.  உக்கிரபாண்டியனும் அருள் கொண்டு முகில்களைச் சிறையிலிருந்து விட்டுவிட்டான்.


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...

“அங்கோல் அவிர்தொடி!ஆழியான் ஆயினும்

செங்கோலன் அல்லாக்கால் சேர்ந்தாரும் எள்ளுவரால்

செங்கோன்மை வேந்தர்கள் வேண்டும் சிறிதெனினும்

தண்கோல் எடுக்குமாம் மெய்.” --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

அம் கோல் அவிர் தொடி - அழகிய கோல் போன்று திரண்டு விளங்குகின்ற தொடியை உடையாய்!, வேந்தர்கண் - அரசன் பகையரசர்மாட்டு, வெம் கோன்மை சிறிது வேண்டும் எனினும் - கொடுங்கோன்மையைச் சிறிது விரும்பினான் என்றாலும், செங்கோலன் அல்லாக்கால் - தன்னிழற்கீழ் வாழ்வாரிடத்துச் செங்கோன்மை உடையவன் அல்லாதவிடத்து, ஆழியான் ஆயினும் - ஆழிப்படையை உடைய திருமாலே என்றாலும், சேர்ந்தாரும் - தன்னைச் சேர்ந்தவர்களும், எள்ளுவர் - இகழ்வார்கள்; தண்கோல் - தன்கீழ் வாழ்வாரிடத்துச் செலுத்தும் செங்கோலே, மெய் - உண்மையாக, எடுக்கும் - வெற்றியைத் தோற்றுவிக்கு மாதலான்.

        அரசனது வெற்றிக்கு அவனது செங்கோலே காரணமாம்.


“மன்னவன் வலிசெங் கோலினால் அன்றி,

வாளினால், சேனையால் இல்லை;

நன்னெறி வழுவா மன்னவன் தனக்கு

நாடெலாம் பேரரண், உலகின்

மன்னுயிர் எல்லாம் அவன்படை, அன்னோர்

மனம் எலாம் அவன் உறை பீடம்

இன்ன தன்மையனாய் அரசு அளிப்பவனை

இகல்செயுந் தெறுநரும் உளரோ.” ---  நீதிநூல்.

இதன் பொருள் ---

  வாளும் காலாளும் மன்னனுக்கு வலியும் வெற்றியும் தருவன அல்ல. அவன் செங்கோலே அவனுக்கு வலியாகும்; வெற்றியாகும். முறை தவிரா மன்னனுக்கு நாடெல்லாம் கோட்டை; குடிகளெல்லாம் படை; குடிகள் மனமெல்லாம் இருக்கை; இத்தகைய மன்னனுக்குப் பகைவரும் உண்டாவரோ? (உண்டாகார்.) 


“உருளும் நேமியும், ஒண் கவர் எஃகமும்,

மருள் இல் வாணியும் வல்லவர் மூவர்க்கும்

தெருளும் நல் அறமும், மனச் செம்மையும்,

அருளும் நீத்தபின் ஆவது உண்டாகுமோ?” ---  கம்பராமாயணம், மந்தரை சூழ்ச்சிப் படலம்.

இதன் பதவுரை ---

உருளும் நேமியும் - (வட்ட வடிவாய் இருத்தலின்) உருண்டு செல்லும் சக்கரத்தையும்;  ஒண் - ஒள்ளிய;  கவர் எஃகமும் - முக்கிளையாய் உள்ள வேலாகிய சூலவேலையும்;  மருள் இல் - மயக்கமற்ற;  வாணியும் - சொல் மகளையும்;  வல்லவர் - உடைமையாகக் கொண்டு வல்லமை பெற்றவராய; மூவர்க்கும் - முக்கடவுளர்களுக்கும்; தெருளும் - தெளிந்த ;நல் அறமும் -  நல்ல தருமமும்;  மனச் செம்மையும் - கோடுதல் இல்லாத நேரிய மனமும்; அருளும் - இரக்கமாகிய கருணையும்;  நீத்தபின் - விட்ட பிறகு;  ஆவது - நன்மை;  உண்டாகுமோ - உளதாகுமோ?’  (ஆகாது என்றபடி).

     ஆற்றல் படைத்த முத்தேவரும் தம் ஆற்றலால் அன்றி, அறம், நடுவு நிலைமை,  அருள் என்னும் நற்பண்புகளைக் கொண்டே அனைத்தையும் சாதிக்க இயலும் என்பதை உணர்ந்து,  நீயும் இம்மூன்றையும் பற்றி  இரு என்று வசிட்டன் இராமனுக்குக் கூறினன். 

     


No comments:

055. செங்கோன்மை - 06. வேல் அன்று

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல்  அதிகாரம் 55 -- செங்கோன்மை இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "அரசனுக்குப் போரில் வெற்ற...