திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 55 -- செங்கோன்மை
இந்த அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "நல்லவர் ஓதும் திருமறைக்கும், நீதிநெறி முறைமைக்கும், முதன்மைக் காரணமாய் நிலைத்து நிற்பது அரசனின் செம்மையான ஆட்சி முறை ஆகும்" என்கின்றார் நாயனார்.
வேதமானது அரசர் வணிகர் என்னும் மற்றையவர்க்கும் உரியது. ஆயினும், தலைமை பற்றி அதனை, "அந்தணர் நூல்" என்றார். வேதமானது இறைவனால் திருவாய் மலர்ந்து அருளப்பட்டவை. அரசனது செங்கோல் முறையாக நடக்கவில்லையானால், வேத்ததை ஓதுதலும், ஓதுவித்தலும் ஆகிய செயல்கள் நிகழாமல் போவதோடு, ஏனைய தொழில்களும் முறையாக நடக்காமல் போகும்.
இதற்குத் திருக்குறள்...
“அந்தணர் நூற்கும், அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.”
இதற்குப் பரிமேலழகர் உரை ---
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது --- அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும், அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது,
மன்னவன் கோல் --- அரசனால் செலுத்தப் படுகின்ற செங்கோல்.
(அரசர் வணிகர் ஏனையோர்க்கு உரித்தாயினும், தலைமை பற்றி அந்தணர் நூல் என்றார். 'மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல்' (மணி. 22 208 209) அன்றித் தம் காவலான் ஆகலின், ஈண்டு 'அறன்' என்றது அவை ஒழிந்தவற்றை. வேதமும் அறனும் அநாதியாயினும் செங்கோல் இல்வழி நடவா ஆகலின், அதனை அவற்றிற்கு 'ஆதி' என்றும், அப் பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிதில்லை என்பார் 'நின்றது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செங்கோலது சிறப்புக் கூறப்பட்டது.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
“அந்திவண்ணன் நூலால் அருகர் பிறர் கோள் சிதைய
வந்த திருவள்ளுவர்தம் வாய்மொழிகேள் --- இந்தநிலத்து
அந்தணர் நூற்கும், அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.”
அந்திவண்ணன் - சிவபெருமான். பிறர் என்றது உலகாயதரையும், புத்தரையும். சிதைய வந்த - சிதையும்படி அதற்குப் பிரமாணமாக வந்த. அந்தணர் நூலையும் அறத்தையும் திருவள்ளுவர் இத் திருக்குறளில் கூறி இருப்பதனால், புறச்சமயிகளின் கோட்பாட்டை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பெரியபுராணத்தில் வரும் நெடுமாற நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார், "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் பாடி அருளி ஒரு பாடல்...
“பழுதறுசம் பந்தர்எதிர் பாழ்அமணர் தாழ,
வழுஅறநெல் வேலிவென்ற மாறன் --- கழுஇட்டான்,
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.”
இதன் பொருள் ---
பாண்டி நாட்டிலே, மதுராபுரியிலே கூன்பாண்டியன் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சமணர்களுடைய துர்ப்போதனை காரணமாக பொய்மார்க்கமாகிய ஆருகமதத்திலே சேர்ந்தார். சோழமன்னருடைய திருமகளாரும் சைவசிகாமணியும் ஆகிய மங்கையர்க்கரசியாரை மனைவியாராகவும், குலச்சிறை நாயனாரை மந்திரியாகவும் அவ்வரசர் முன்னைப் பிறவிகளில் ஈட்டிய புண்ணியத்தால் பெற்றிருந்தார். அதனால், சைவ சமய குரவராகிய திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருக்கரத்தினால் தீண்டித் திருநீறு சாத்தப்பட்டார். அந்த நாயனார் அருளிச் செய்த உண்மை உபதேசத்தைப் பெற்றார். உயிர்க்கூனும் உடற்கூனும் அவருக்கு நிமிர்ந்தன. நெடுமாற நாயனார் என்னும் பெயரைப் பெற்றார். தம்மோடு போர் செய்ய வந்த வடபுலத்து அரசரோடு திருநெல்வேலிப் போர்க்களத்திலே போர் செய்து வென்றார். சைவசமயம் தழைத்து ஓங்கும்படி நெடுங்காலம் அரசு செய்திருந்து சிவபதம் அடைந்தார்.
அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும் அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது, அரசனால் செலுத்தப்படுகின்ற செங்கோல் எனத் திருவள்ளவ நாயனார் அருளியமை காண்க.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
“அயாஎன்று உனைப்புகழ் அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆ--
தியாய் நின்றது மன்னவன் கோல் புல்லாணித் திருவரசு
தயாநிதி முன் நின்கைச் செங்கோல் இராக்கதரை வென்றன்றோ
மெயாய் ஒலிவேதந் தருமம் எக்காலும் விளங்குவதே.”
இதன் பொருள் ---
அயா வென்று - தளர்ச்சியை வென்று. வேதமும் தருமமும் உலகத்தில் விளங்குவது, திருப்புல்லாணியில் எழுந்தருளி இருக்கும் பெருமாள், இராமாவதாரம் எடுத்து, இராவணன் முதலிய அர்க்கர்களை வென்றதனால் என்றபடி.
No comments:
Post a Comment