திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 55 -- செங்கோன்மை
இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "மேகம் பொழியும் மழையை எதிர்நோக்கி உலகத்து உயிர்கள் எல்லாம் வாழும்; அரசனுடைய செங்கோன்மையை எதிர்நோக்கிக் குடிமக்கள் வாழ்வார்கள்" என்கின்றார் நாயனார்.
உலகத்தில் உள்ள உயிர்கள் மழையின் தகுதியால் உணவினைக் கொண்டு பிழைப்பதும், நீரையே உணவாகக் கொண்டு பிழைப்பதும், உணவில்லாதபோது இறப்பதும் இயல்பாக உள்ளது. மழை இருந்து உணவு கிடைத்த காலத்தும், அரசாட்சியானது முறை தவறியதாக இருக்குமானால், குடிமக்கள் உணவால் பயன் அடைந்து வாழ்தல் என்பது கூடாது. முறை தவறிய ஆட்சியில், உண்ணும் உணவானது உயிர்கள் எல்லாவற்றிற்கும் கிடைப்பது அரிதாகும். உணவுப் பொருள் பதுக்கல், விலையேற்றம் முதலியவைகளால், பொருள் கிடைப்பது எல்லோருக்கும் சாத்தியாமாகாது. பசி, பட்டினி, பஞ்சம் தலைவிரித்து ஆடும்.
இதற்குத் திருக்குறள்...
“வான்நோக்கி வாழும் உலகு எல்லாம், மன்னவன்
கோல் நோக்கி வாழும் குடி.”
இதற்குப் பரிமேலழகர் உரை ---
உலகு எல்லாம் வான் நோக்கி வாழும் --- உலகத்து உயிர் எல்லாம் மழை உளதாயின் உளவாகா நிற்குமே எனினும்,
குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் - குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா நிற்கும்.
(நோக்கி வாழ்தல், இன்றியமையாமை. வானின் ஆய உணவை 'வான்' என்றும், கோலின் ஆய ஏமத்தைக் 'கோல்' என்றும் கூறினார். அவ்வேமம் இல்வழி உணவுளதாயினும் குடிகட்கு அதனால் பயனில்லை என்பதாம்.)
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...
“கோல்நோக்கி வாழுஙம்குடியெல்லாம், தாய்முலைப்
பால்நோக்கி வாழுங் குழவிகள், - வானத்
துளிநோக்கி வாழும் உலகம், உலகின்
விளிநோக்கி இன்புறூஉங் கூற்று.” --- நான்மணிக்கடிகை.
இதன் பொருள் ---
குடி எல்லாம் கோல் நோக்கி வாழும் - குடிமக்கள் எல்லோரும் அரசனது ஆட்சியை நோக்கி உயிர் வாழ்வார்; குழவிகள் தாய்முலைப் பால் நோக்கி வாழும் - குழந்தைகள் எல்லாரும் தாயின் முலைப்பாலை நோக்கி உயிர் பிழைக்கும்; உலகம் வானத் துளி நோக்கி வாழும் - உலகத்து உயிர்கள், வானத்தினின்றும் விழும் மழைத்துளியை நோக்கி உயிர் வாழும்; கூற்று உலகின் விளி நோக்கி இன்புறூஉம் - எமன் உயிர்களின் சாவை நோக்கி மகிழ்வான்.
குடிகள் அரசனது ஆட்சியால் உயிர் வாழ்வர்; குழந்தைகள் தாயினது முலைப்பாலால் உயிர்வாழும்; உயிர்கள் மழைத்துளியால் வாழும்; கூற்றுவன் உயிரிகளின் சாக்காட்டை எதிர்நோக்கியிருப்பன்.
“மழை இன்றி மாநிலத்தார்க்கு இல்லை, மழையும்
தவம் இல்லார் இல்வழி இல்லை, தவமும்
அரசன் இலாவழி இல்லை, அரசனும்
இல்வாழ்வார் இல்வழி இல்.” --- நான்மணிக்கடிகை.
இதன் பொருள் ---
மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை - மழையில்லாமல், இப் பேருலகத்தின் மக்கட்கு நலமில்லை; மழையும் தவம் இலார் இல்வழி இல்லை - அம்மழை தானும், தவஞ் செய்தல் இல்லாதவர்கள் இருப்பிடங்களில் பெய்தலில்லை; தவமும் அரசன் இலாவழி இல்லை - அவ் வியல்பினதான தவஞ்செய்தலும் செங்கோலரசன் இல்லாதவிடத்து நிகழ்தல் இல்லை; அரசனும் இல்வழ்வார் இல்வழி இல் - அச் செங்கோலரசனும் குடிமக்கள் இல்லாதவிடத்து இல்லாதவன் ஆவான்.
மழையில்லாவிட்டால் உலகத்து மக்களுக்கு நலம் இல்லை. அம் மழையும் தவம் உடையார் இல்லாத இடத்துப் பெய்தல் இல்லை. அத் தவஞ் செய்தலும் முறையான அரசன் இல்லாத நாட்டில் நிகழ்தல் இல்லை. அவ்வரசனும் குடிகள் இல்லாத இடத்தில் இருப்பது இல்லை.
“வான் நோக்கி நிற்கும் உலகு என்னவும், மன்னவன் செம்
கோன் நோக்கி நிற்கும் குடி என்னவும், கோது உம்பர்
ஆனோர்க்கும் நாகர் உலகோர்க்கும் அவனியோர்க்கும்
ஏனோர்க்கும் நாடும் நகராகி இருந்தது அவ்வூர். “ --- கந்தபுராணம்.
இதன் பொருள் ---
உலகத்து உயிர்கள் எல்லாம் வானத்து மழையை நோக்கி வாழ்வது போலவும், குடிமக்கள் எல்லாரோம் மன்னனுடைய செங்கோல் முறையை நோக்கி வாழ்வது போலவும், தேவர்களுக்கும், நாகர் உலகைச் சார்ந்தவர்களுக்கும், பூதலத்தில் உள்ளோர்க்கும், மற்றும் பிறர்க்கும் நாடிச் செல்கின்ற நகரமாக விளங்கியது காஞ்சி மாநகரம்.
“மீன் நோக்கும் நீள் வயல் சூழ்
வித்துவக்கோட்டு அம்மா என்-
பால் நோக்காயாகிலும் உன்
பற்று அல்லால் பற்று இலேன்
தான் நோக்காது எத்துயரம்
செய்திடினும் தார்-வேந்தன்
கோல் நோக்கி வாழும்
குடி போன்று இருந்தேனே.” --- குலசேகர ஆழ்வார்.
இதன் பொருள் ---
மீன்கள் எல்லாம் தாம் உயிர் வாழ மிகவும் தகுதியான இடம் என்று ஆசையோடு பார்க்கின்ற, நீர்வளம் மிக்க அகன்ற கழனிகள் சூழ்ந்து விளங்கும் வித்துவக்கோடு என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி உள்ள பெருமனே! அடியேன்பால் நீ உனது கருணை நோக்கம் செய்யாது இருந்தாலும், உன்னையே சரணாக வந்து பொருந்துதலை விட்டு, வேறு ஒருவரைச் சரணாக நான் அடையமாட்டேன். குடிமக்களைக் காப்பதற்கு என்று மாலை அணிந்துள்ள அரசன் துன்பங்களைச் செய்தாலும், அவனுடைய செங்கோலையே எதிர்பார்த்து வாழ்கின்ற குடிமக்களை ஒத்து நான் இருந்தேன்.
“எத்தனையும் வான் மறந்த
காலத்தும் பைங்கூழ்கள்
மைத்துஎழுந்த மாமுகிலே
பார்த்திருக்கும் மற்று அவைபோல்
மெய்த் துயர் வீட்டாவிடினும்
வித்துவக்கோட்டு அம்மா என்
சித்தம் மிக உன்பாலே
வைப்பன் அடியேனே.” --- குலசேகர ஆழ்வார்.
இதன் பொருள் ---
வித்துவக்கோடு என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி உள்ள பெருமானே! மேகமானது எவ்வளவு காலம் மழை பொழியாமல் ஒழிந்தாலும், பசுமையான பயிர்கள், கருநிறம் கொண்டு வான் வெளியில் திரளுகின்ற பெரிய மேகங்களையே எதிர்பார்த்து இருக்கும். அந்தப் பயிர்கள் போலத் தவறாமல், எனது துன்பங்களை நீ போக்காவிட்டாலும், எனது மனத்தை உன்னிடத்திலேயே வைத்து இருப்பேன்.
“வான் நோக்கி நிற்கும்பைங் கூழ்போலவும், ஒரு மன்னவன்செங்
கோல் நோக்கி நிற்கும் குடிபோலவும், தடங்கோட்டு, இமையத்
தேன் நோக்கி நிற்கும் எழில் உடையாள் வெங்கைச் செல்வி உனைத்
தான் நோக்கி நிற்கும் நல் ஆயத்துளே சென்று சார்ந்தருளே.” --- திருவெங்கைக் கோவை.
வேந்தனே இல்லாவிடின், உலகத்து
மேலது கீழதா மணஞ்செய்
காந்தனுக்கு அடங்கிக் களத்திரம் நடவாள்,
காதலர் தந்தைசொல் கேளார்,
மாந்தர் வேளாண்மை முதல் தமக்கு உரிய
வளமைகூர் தொழில்களின் முயலார்,
சாந்தருந் தீயர் ஆவரேல், தீயர்
தன்மையைச் சாற்றுமாறு எவனோ. --- நீதிநூல்
இதன் பொருள் ---
நாடும் மொழியும் நலமுறக் கூடிவாழ்வதே குடிகள் இயல்பு. செங்கோல் மன்னன் இல்லாவிட்டால், மேன்மை தாழ்வை அடையும். குடும்பம் குலையும். மக்கள் தந்தைசொல் பேணார். உழவர் பயிர்த் தொழில் செய்யார். அமைதியினரும் கொடியவர் ஆவர்.
“நம்மனை மைந்தர் கிரகவாழ்வு எல்லாம்
நரபதியால், அவன் இலனேல்
அம்மனை தீயர் கைவசம் ஆவள்,
அருநிதி கொள்ளையாம், நாளும்
வெம்மையோடு ஒருவர் ஒருவரை உண்பார்,
மேலவர் அசடரால் மெலிவர்,
அம்ம ஈது எல்லாம் உணர்ந்து அரசாணைக்கு
அமைதல் நற்குடிகளின் இயல்பே.” --- நீதிநூல்.
இதன் பொருள் ---
மனையாள் மக்கள் வாழ்வு எல்லாம் மன்னவனாலேயே நிலைக்கும். அவன் இல்லாவிட்டால் கற்பு அழிவும் கொள்ளையும் கொலையும், உயர்ந்தவரைத் தாழ்ந்தவர் துன்புறுத்தும் கொடுமையும் பெருகும். அதனால், அரசன் ஆணைக்கு அடங்கி நடப்பதே பெருமை.
No comments:
Post a Comment