திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 55 -- செங்கோன்மை
இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "இயற்கையான நீதிமுறையில் ஆட்சி புரிகின்ற மன்னனுடைய நாட்டில் மழை தவறாமல் பெய்யும், விளைபொருள்களும் மிகும்" என்கின்றார் நாயனார்.
மேகம் பெய்யவேண்டிய காலத்துத் தவறாது மழையைப் பொழிதலும், விளை நிலங்கள் விளையவேண்டிய காலத்து, குறைவு இல்லாமல் விளைதலும் நல்லரசாட்சியால் உண்டு என்றார்.
வேதம் ஓதிய வேதியர்க்கு ஒர் மழை;
நீதி மன்னர் நெறியினுக்கு ஓர் மழை;
மாதர் கற்புடை மங்கையர்க்கு ஓர் மழை;
மாதம் மூன்று மழைஎனப் பெய்யுமே.
அரிசி விற்றிடும் அந்தணர்க்கு ஓர் மழை;
வரிசை தப்பிய மன்னருக்கு ஓர் மழை;
புருடனைக் கொன்ற பூவையர்க்கு ஓர் மழை;
வருடம் மூன்று மழையெனப் பொய்க்குமே.
என வரும் விவேக சிந்தாமணிப் பாடல்களால் இதனைத் தெளிக.
இதற்குத் திருக்குறள்...
“இயல்புஉளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட,
பெயலும் விளையுளும் தொக்கு.”
இதற்குப் பரிமேலழகர் உரை ---
பெயலும் விளையுளும் தொக்கு --- பருவமழையும் குன்றாத விளைவும் ஒருங்கு கூடி,
இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட --- நூல்கள் சொல்லிய இயல்பால் செங்கோலைச் செலுத்தும் அரசனது நாட்டின் கண்ணவாம்.
('உளி' என்பது மூன்றாவதன் பொருள்படுவதோர் இடைச்சொல், வானும் நிலனும் சேரத் தொழிற்பட்டு வளம் சுரக்கும் என்பதாம்.)
பின்வரும் பாடலும் இதனையே குறித்திருப்பது காண்க.
“வானவர் பிதிர்க்கள்முச் சுடர்மூவர் கோள்கட்கும்
வாழ்வுதரும் உதவி புவனம்,
வளம்மிக்க புவனம் தனக்குமேன் மேல்உதவி
வாழ்வுபெற் றிடுமன் னராம்!
தேன்அமர் நறுந்தொடையல் புனைமன்ன வர்க்குஉதவி
சேர்ந்தகுடி படைவர்க் கம்ஆம்;
சேர்குடி படைக்குஉதவி விளைபயிர்! பயிர்க்குஉதவி
சீர்பெற வழங்கு மழையாம்!
மேல்நிமிர் மழைக்குஉதவி மடமாதர் கற்புஒன்று;
வேந்தர்தம் நீதி ஒன்று;
வேதியர் ஒழுக்கம்ஒன்று; இம்மூன்று மேஎன்று
மிக்கபெரி யோர்உரை செய்வார்,
ஆன்அமர் நெடுங்கொடி உயர்த்த எம் இறைவனே!
அதிபனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!” -- அறப்பளீசுர சதகம்.
இதன் பொருள் ---
ஆன் அமர் நெடுங்கொடி உயர்த்த எம் இறைவனே - ஏறு எழுதிய நீண்ட கொடியை உடைய எமது இறைவனே! அதிபனே - உயிர்களுக்கு அரசனே! அருமை மதவேள் - அருமை மதவேள் என்பான், அனுதினமும் மனதில் நினைதரு - எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,
வானவர் பிதிர்க்கள் முச்சுடர் மூவர் கோள்கட்கும் வாழ்வு உதவி தரும் புவனம் - தேவர்களுக்கும், தென்புலத்தாருக்கும், ஞாயிறு திங்கள் அக்கினி என்னும் முச்சுடர்களுக்கும், பிரமன் திருமால் உருத்திரன் என்னும் மூன்று கடவுளர்க்கும், ஒன்பது கோள்களுக்கும் வாழ்வதற்கு பூசனை முதலானவைகளை இயற்றி , நிவேதனப் பொருள்களை அளித்து உதவி செய்வது இந்த உலகம்,
வளம் மிக்க புவனம் தனக்கு மேன்மேல் உதவி வாழ்வு பெற்றிடும் மன்னர் ஆம் - வளம் நிறைந்த இந்த உலகத்திற்கு மேலும் மேலும் வளம் சிறக்க உதவியாக இருப்பவர்கள் வாழ்வில் சிறந்த அரசர்கள் ஆவர்,
தேன் அமர் நறுதொடையல் புனை மன்னவர்க்கு உதவி சேர்ந்த குடிபடை வர்க்கம் ஆம் - தேன் பொருந்திய மணம் மிக்க மலர்களால் ஆன மாலைகளை அணிந்த அரசர்கட்குத் துணையானவை, அந்த அரசரைச் சார்ந்த குடி மக்ககளும் படைகளும் ஆகும்,
சேர் குடி படைக்கு உதவி விளை பயிர் - அந்த அரசரைச் சார்ந்து இருக்கக்கூடிய குடிகளுக்கும், படைகளுக்கும் துணையாக விளங்குவது விளைந்த பயிராகும்,
பயிர்க்கு உதவி சீர்பெற வழங்கும் மழை ஆம் - பயிர்களுக்குத் துணையாக விளங்குவது சிறப்புறப் பெய்யும் மழை ஆகும், மேல் நிமிர் மழைக்கு உதவி - வானத்தில் இருந்து பரவிப் பெய்யும் மழைக்குத் துணையாக இருப்பன, மடமாதர் கற்பு ஒன்று - இளமங்கையரின் கற்பு ஒன்றும், வேந்தர் தம் நீதி ஒன்று - அரசர்களின் நீதி தவறாத முறைமை ஒன்றும், வேதியர் ஒழுக்கம் ஒன்று - அந்தணர்களின் ஒழுக்கம் ஒன்றும், ஆகிய, இம் மூன்றுமே என்று மிக்க பெரியோர் உரை செய்வார் --- இவை மூன்றுமே என்று அறிவில் சிறந்த பெரியோர் சொல்லுவர்.
வாழ்க்கைத் துணையும், ஊரிலே உள்ள அந்தணர்களும், நாட்டை ஆளும் மன்னவரும் தத்தமது நெறியிலே தவறாமல் ஒழுகினால், உலகில் மழை வளம் சிறக்கும். அதனால்,உலக உயிர்கள் பசிப்பிணி இன்றி வாழும். விழாக்களும், வழிபாடும் சிறக்கும். தானமும் தவமும் சிறக்கும்.
No comments:
Post a Comment