பொது --- 1125. செட்டாகத் தேனை

 அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

செட்டாகத் தேனை (பொது)


முருகா! 

உலுத்தரைப் பாடி உழலாமல், 

உன்னைப் பாடி உய்ய அருள்.


தத்தா தத்தா தத்தா தத்தா

     தத்தா தத்தத் ...... தனதான


செட்டா கத்தே னைப்போ லச்சீ

     ரைத்தே டித்திட் ...... பமதாகத்


திக்கா மற்பா டுற்றா ரிற்சீ

     ருற்றா ருக்குச் ...... சிலபாடல்


பெட்டா கக்கூ றிப்போ தத்தா

     ரைப்போல் வப்புற் ...... றுழலாதே


பெற்றா ரிற்சார் வுற்றாய் நற்றாள்

     சற்றோ தப்பெற் ...... றிடுவேனோ


எட்டா நெட்டா கத்தோ கைக்கே

     புக்கோ லத்திட் ...... டிமையோர்வா


னிற்பா ரிற்சூ ழச்சூ ரைத்தா

     னெட்டா வெட்டிப் ...... பொரும்வேலா


முட்டா மற்றா ளைச்சே விப்பார்

     முற்பா வத்தைக் ...... களைவோனே


முத்தா முத்தீ யத்தா சுத்தா

     முத்தா முத்திப் ...... பெருமாளே.


                  பதம் பிரித்தல்


செட்டாகத் தேனைப் போலச் 

     சீரைத் தேடித் திட் ...... பம் அதாக,


திக்காமல் பாடு உற்றாரில், சீர்

     உற்றாருக்கு, ...... சிலபாடல்


பெட்டாகக் கூறிப் போதத்தா-

     ரைப் போல் வப்புற்று ...... உழலாதே,


பெற்றாரில் சார்வு உற்றாய்! நல் தாள்

     சற்று ஓதப் பெற் ...... றிடுவேனோ?


எட்டா நெட்டாகத் தோகைக்கே

     புக்கு ஓலத்து இட்டு, ...... இமையோர், வா-


னில் பாரில் சூழச் சூரைத்தான்

     நெட்டா வெட்டிப் ...... பொரும்வேலா!


முட்டாமல் தாளைச் சேவிப்பார்

     முன் பாவத்தைக் ...... களைவோனே!


முத்தா! முத்தீ அத்தா! சுத்தா!

     முத்தா! முத்திப் ...... பெருமாளே.


பதவுரை

எட்டா நெட்டாகத் தோகைக்கே புக்கு --- நீண்ட பெருமையுடன் விளங்கும் மயில் மீது ஆரோகணித்து,

ஓலத்திட்டு இமையோர் வானில் பாரில் சூழ --- எங்களைக் காத்தருள்க என்று ஓலம் இட்ட தேவர்கள் விண்ணிலும், மண்ணிலும் சூழ்ந்து இருக்க,

சூரைத் தான் எட்டா வெட்டிப் பொரும் வேலா --- சூரபதுமனை அணுகி அவனை வெட்டிப் போர் புரிந்த வேலாயுதரே!

முட்டாமல் தாளைச் சேவிப்பார் முன் பாவத்தைக் களைவோனே --- தடைபடாமல் தேவரீரது திருவடிகளை வாழ்த்தி வழிபடுவோர் முற்பிறவிகளில் செய்த பாவங்களைப் போக்கி அருள் புரிபவரே!

முத்தா --- முத்தி நிலைக்கு அதிபரே!

முத்தீ அத்தா --- ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினம்

என்னும் மூன்று வேள்வித் தீக்குத் தலைவரே! 

சுத்தா --- தூயவரே!

முத்தா --- பற்று அற்றவரே!

முத்திப் பெருமாளே --- உயிர்களுக்கு முத்தியை அளிக்கும் பெருமையில் மிக்கவரே!

செட்டாகத் தேனைப் போலச் சீரைத் தேடி --- சிறுகச் சிறுகத் தேனைப் போல இனிமை தரும் சொற்களையும் கருத்தையும் நாடி, 

திட்பம் அதாக –-- திட்பமான சொற்களால்,

திக்காமல் பாடு உற்றாரில் --- தடை இல்லாமல் பாடுகின்ற திறம் கொண்டவர்களைப் போல,

சீர் உற்றாருக்குச் சில பாடல் பெட்டாகக் கூறி --- செல்வம் படைத்தவர்கள் மீது பொய்யாகச் சில பாடல்களைக் கூறி,

போதத்தாரைப் போல் வப்புற்று உழலாதே --- அறிவு மிக்கவனைப் போல போலியாக உழன்று திரியாமல்,

பெற்றாரில் சார்வுற்றாய் --- ஈன்ற தாய் தந்தையரைப் போல அடியேன் மீது அன்பைப் பொழிகின்ற பெருமானே!

நல் தாள் சற்று ஓதப் பெற்றிடுவேனோ --- தேவரீரது நல்ல திருவடிளைச் சற்றேனும் புகழ்ந்து வழிபடும் பேற்றினை அடியேன் பெறுவேனோ?


பொழிப்புரை


“எங்களைக் காத்தருள்க” என்று ஓலம் இட்ட தேவர்கள் விண்ணிலும், மண்ணிலும் சூழ்ந்து இருக்க, நீண்ட பெருமையுடன் விளங்கும் மயில் மீது ஆரோகணித்துச் சூரபதுமனை அணுகி அவனை வெட்டிப் போர் புரிந்த வேலாயுதரே!

தடைபடாமல் தேவரீரது திருவடிகளை வாழ்த்தி வழிபடுவோர் முற்பிறவிகளில் செய்த பாவங்களைப் போக்கி அருள் புரிபவரே!

முத்தி நிலைக்கு அதிபரே!

ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினம்

என்னும் மூன்று வேள்வித் தீக்குத் தலைவரே! 

தூயவரே!

பற்று அற்றவரே!

உயிர்களுக்கு முத்தியை அளிக்கும் பெருமையில் மிக்கவரே!

சிறுகச் சிறுகத் தேனைப் போல இனிமை தரும் சொற்களையும் கருத்தையும் நாடி, திட்பமான சொற்களால், தடை இல்லாமல் பாடுகின்ற திறம் கொண்டவர்களைப் போல, செல்வம் படைத்தவர்கள் மீது பொய்யாகச் சில பாடல்களைக் கூறி, அறிவு மிக்கவனைப் போல போலியாக உழன்று திரியாமல், ஈன்ற தாய் தந்தையரைப் போல அடியேன் மீது அன்பைப் பொழிகின்ற பெருமானே! தேவரீரது நல்ல திருவடிளைச் சற்றேனும் புகழ்ந்து வழிபடும் பேற்றினை அடியேன் பெறுவேனோ?

விரிவுரை

முற்காலத்தில் தமிழ்ப் புலவர்கள் பாடி வைத்த அருமையான பாடல்களில் பொதிந்து உள்ள இனிய சொற்களைத் தேடித் திருடி, அவற்றைத் தமது பாடலில் வைத்து, அருமையான தமிழால், இறைவனைப் பாடாமல்,  காமதேனுவின் பாலைக் கமரில் கொட்டியது போல்,  தனமுடையவர்களைத் தேடிச் சென்று அருமையினும் அருமையான இனிய தமிழை, இறைவனுக்கு அர்ப்பணியாமல் அழிந்து போகின்றவர்களும், பரமலோபிகளும், மகா மூடர்களுமாகியப் பாவிகளைப் பாடிப் பரதவிக்கின்றார்கள்.  அருளாளர்கள் பாடி வைத்த பாடல்களில் சொற்களைத் தேடுவது, சிறிது சிறிதாகப் பல பாடல்களை நாடிச் சென்று தேனைத் தேருகின்ற நிலைக்குக் காட்டி “செட்டாகத் தேனைபோலச் சீரைத் தேடி” என்று சொல்லி, இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பாடல்களில் உள்ள பொருத்தமான சொற்களைத் தேடி என்று அடிகளார் குறிப்பிட்டார்.  இந்த அவல நிலையைக் கண்டு அருணகிரிநாதர் இத் திருப்புகழின் முற்பகுதியில் குறிப்பிட்டு, அத்தகைய நிலையைத் தவிர்த்து இறைவனைப் பாடி உய்யும் அறிவை அருளுமாறு வேண்டுகின்றார்.

மூடர்களாகிய உலோபிகளை, “தந்தையே! தாயே! தெய்வமே! ஆதரிக்கின்ற வள்ளலே! ஆண்மை நிறைந்த அர்ச்சுனனே! என்று, என்ன என்ன விதமாகப் புகழ்ந்து பாடினாலும் மனமிரங்கி அரைக்காசும் உதவமாட்டார்கள். செந்தமிழ்த் தெய்வமாகிய முருகப்பெருமானை இலக்கண இலக்கிய கற்பனை நயங்களோடு ஒன்றும் அழகாகப் பாடவேண்டாம். “பித்தன் பெற்ற பிள்ளை; நீலிமகன்; தகப்பன் சாமி; பெருவயிற்றான் தம்பி; பேய் முலையுண்ட கள்வன் மருமகன்; குறத்தி கணவன்” என்று ஏசினாலும் இன்னருள் புரிவான். அத்துணைக் கருணைத் தெய்வம்.


“அத்தன்நீ, எமதுஅருமை அன்னைநீ, தெய்வம்நீ,

    ஆபத்து அகற்றி அன்பாய்

ஆதரிக்கும் கருணை வள்ளல்நீ, மாரன்நீ,

    ஆண்மைஉள விசயன்நீ, என்று

எத்தனை விதஞ்சொலி உலோபரைத் தண்தமிழ்

    இயற்றினும் இரக்கஞ் செயார்,

இலக்கண இலக்கியக் கற்பனைக் கல்வியால்

    இறைஞ்சிஎனை ஏத்த வேண்டாம்,

பித்தனொடு நீலியும் பெறுதகப்பன் சாமி!

    பெருவயிற்றான் தம்பி,அப்

பேய்ச்சிமுலை உண்டகள் வன்மருகன், வேடுவப்

    பெண்மணவன், என்றுஏசினும்,

சித்தமகிழ் அருள் செய்யும் என்றே முழக்கல்போல்

    சிறுபறை முழக்கி அருளே!

செம்பொன் நகருக்கு இனிய கம்பைநகருக்கு இறைவ,

    சிறுபறை முழக்கி அருளே!”               ---  கம்பை முருகன் பிள்ளைத் தமிழ்


“நலம்இலாதானை நல்லனே என்றும்,

         நரைத்த மாந்தரை இளையனே,

குலமிலாதானைக் குலவனே என்று

         கூறினும் கொடுப்பார்இலை,

புலம்எலாம்வெறி கமழும் பூம்புக

         லூரைப் பாடுமின் புலவீர்காள்,

அலமராது அமருலகம் ஆள்வதற்கு

         யாதும் ஐயுறவு இல்லையே”. -- சுந்தரர் தேவாரம்.


ஓலத்திட்டு இமையோர் வானில் பாரில் சூழ சூரைத் தான் எட்டா வெட்டிப் பொரும் வேலா --- 

முருகப் பெருமானுடைய விசுவரூபத்தைக் கண்டு வெருண்ட சூரபதுமன், "முருகப் பெருமானை வெல்லுவதும் கொல்லுவதும் பின்னர் ஆகட்டும். இக் குமரனைக் கொணர்ந்து என்னுடன் போர் புரிய விடுத்த தேவர் யாவரையும் முன்னே கொல்லுவன்" என்று சீறினான். கதிரவனும் அஞ்ச, உலக முழுதும் ஓரே இருள் வடிவாக நின்று ஆர்த்தான். ஆலாலவிடம் போல் தோன்றிய அவ் இருளைக் கண்டு அமரர் அஞ்சினர். அவ் இருளில் சூரபதுமன் மலை போன்ற பேருருவம் கொண்டு வானவரை விழுங்குமாறு வானிடை எழுந்தான். அதனைக் குறிப்பினால் அறிந்த வானோரும் ஏனோரும் திசைதொறும் ஓடி திக்கு வேறு இன்றி திகைத்துக் கூற்றை எதிர்ந்த உயிர்களைப் போல் பதறிக் கதறித் துதிக்கலுற்றார்கள்.


“நண்ணினர்க்கு இனியாய் ஓலம், ஞான நாயகனே ஓலம்,

பண்ணவர்க்கு இறையே ஓலம், பரஞ்சுடர் முதலே ஓலம்,

எண்ணுதற்கு அரியாய் ஓலம், யாவையும் படைத்தாய் ஓலம்,

கண்ணுதல் பெருமான் நல்கும் கடவுளே ஓலம் ஓலம்.”


“தேவர்கள் தேவே ஓலம், சிறந்த சிற்பரனே ஓலம்,

மேவலர்க்கு இடியே ஓலம், வேற்படை விமலா ஓலம்,

பாவலர்க்கு எளியாய் ஓலம், பன்னிரு புயத்தாய் ஓலம்,

மூவரும் ஆகி நின்ற மூர்த்தியே ஓலம், ஓலம்.”


"எம்பெருமானே! அடியேங்களைக் காத்து அருளும்" என்று வேண்டினார்கள். முருகவேள் தமது திருக்கரத்தில் உள்ள வேற்படையை நோக்கி, "இங்கு இவன் உடலைப் பிளந்து எய்துதி இமைப்பில்" என்று பணித்து அருளினர். முருகப் பெருமான் விடுத்த வேலாயுதம் ஆயிரகோடி சூரிய ஒளியை உடையதாய், நெருப்பைச் சிந்திக்கொண்டு சென்றது. அதனால் சூரபன்மன் கொண்ட இருளுருவம் அழிந்தது.


“ஏயென முருகன் தொட்ட இருதலை படைத்த ஞாங்கர்

ஆயிர கோடி என்னும் அருக்கரில் திகழ்ந்து தோன்றித்

தீஅழல் சிகழி கான்று சென்றிட அவுணன் கொண்ட

மாஇருள் உருவம் முற்றும் வல்விரைந்து அகன்றது அன்றே.”


அதுகண்ட சூரபதுமன், வேலாயுதத்தினது வெம்மையை ஆற்றாது கடலுக்கு நடுவில் ஒளித்தான். வேல் கடலின் அருகில் சென்றவுடன் கடல் வற்றி வறண்டு விட்டது.


"திரைக்கடலை உடைத்துநிறை புனல்கடிது குடித்துஉடையும்

உடைப்புஅடைய அடைத்துஉதிரம் நிறைத்துவிளை யாடும்."        ---  வேல் வகுப்பு.


சூரபதுமன் அண்ட முகடு முட்ட, நூறாயிர யோசனை அளவுடைய பெரு மரமாகி நின்று, மண்ணும் விண்ணும் விழல் பரப்பி, கிளைகளை அசைத்து, உலகங்களுக்கு எல்லாம் பேரிடர் விளைத்தான்.  அப்போது உடுக்கள் உதிர்ந்தன. சூரியசந்திரர் கதி மாறினர். மண்ணுலகம் இடிந்தது. குலமலைகள் பொடிபட்டன. திசை யானைகள் மடிவுற்றன. அது கண்ட வேலாயுதம் வெகுண்டு ஆயிரகோடி அக்கினி அண்டங்களின் தீப்பிழம்பு முழுவதும் ஒன்றுபட்டது போலாகி, மடம் பிடித்திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்தது. வேலாயுதத்தால் மாமரம் பிளக்கப்பட்டதும், மாளா வரம் பெற்ற சூரன் மடிந்திலன் ஆகி, பழைய அசுர வடிவம் கொண்டு, வாள் கொண்டு எதிர்த்துச் சீறினான். ஒப்பற்ற வேற்படை அவனுடைய உடம்பை இருகூறாகப் பிளந்து கடலிடை அவன் அடலை மாய்த்து, வேதங்கள் ஆரவாரிக்க, தேவர்கள் துதித்துச் சிந்தும் பூமழைக்கு இடையே சென்று, அங்கியின் வடிவம் நீங்கி, அருள் வடிவைத் தாங்கி, வான கங்கையில் முழுகி கந்தக் கடவுளது கரமலரில் வந்து அமர்ந்தது.


“புங்கவர் வழுத்திச் சிந்தும் பூமழை இடையின் ஏகி

அங்கியின் வடிவம் நீங்கி, அருள்உருக் கொண்டு, வான்தோய்

கங்கையில் படிந்து மீண்டு, கடவுளர் இடுக்கண் தீர்த்த

எங்கள்தம் பெருமான் செங்கை எய்திவீற்று இருந்ததுஅன்றே.”


சிவபெருமான் தந்த வர பலத்தால், சூரபதுமன் அழிவில்லாதவன் ஆகி, மீட்டும் எழுந்து ஒரு கூறு சேவலும், மற்றொரு கூறு மயிலுமாகி, மிக்க சினத்துடன் சிறகுகளை வீசி, அதனால் உலகங்களைத் துன்புறுத்தி, முருகவேள் திருமுன் வந்தான்.


“தாவடி நெடுவேல் மீளத் தற்பரன் வரத்தால் வீடா

மேவலன் எழுந்து மீட்டு மெய்பகிர் இரண்டு கூறும்

சேவலும் மயிலும் ஆகி சினங்கொடு தேவர் சேனை

காவலன் தன்னை நாடி அமர்த்தொழில் கருதி வந்தான்.”


அவ்வாறு மீட்டும் அமர் புரிய வந்த ஆற்றலின் மிக்க அந்த இரு பறவைகளையும் எம்பெருமான் கருணை நாட்டத்துடன் நோக்கி அருளினார். உடனே சேவலும் மயிலும் போர் புரியும் எண்ணமும் சீற்றமும் செற்றமும் நீங்கி, தெளிந்த உள்ளமும், சிவஞானமும், அன்புருவமும் பெற்றன. செவ்வேள் பரமன் சேவலைக் கொடியாகவும், மாமயிலை வாகனமாகவும் கொண்டருளினார். ஆயிரத்தெட்டு அண்டங்களும் வணங்க வாழ்ந்த சூரபதுமன் சேவலும் மயிலும் ஆகி அகிலாண்ட கோடி எல்லாம் வணங்கி வாழ்த்தும் வரம்பிலாப் பேறு பெற்றான். அவனது தவத்தின் பெருமை அளப்பரியது! முருகப் பெருமானது அருட் பார்வையின் பெருமையும் அளப்பரியது. ஞானிகளது பார்வையால் இரும்பு பொன்னாவது போல், கந்தவேள் கருணை நோக்கால், சூரன் மறவடிவு நீங்கி, அறவடிவு பெற்றான்.


“மருள்கெழு புள்ளே போல வந்திடு சூரன், எந்தை

அருள்கெழு நாட்டம் சேர்ந்த ஆங்குஅவன் இகலை நீங்கித்

தெருள்கெழு மனத்தன் ஆகி நின்றனன், சிறந்தார் நோக்கால்

இருள்கெழு கரும்பொன் செம்பொன் ஆகிய இயற்கை யேபோல்.”


“தீயவை புரிந்தா ரேனும் முருகவேள் திருமுன் உற்றால்

தூயவர் ஆகி மேலைத் தொல்கதி அடைவர் என்கை

ஆயவும் வேண்டும் கொல்லோ, அடுசமர் அந்நாள் செய்த

மாயையின் மகனும் அன்றோ வரம்புஇலா அருள்பெற்று உய்ந்தான்.”


.....           .....           .....  சகம்உடுத்த

வாரிதனில், புதிய மாவாய்க் கிடந்த, நெடும்

சூர்உடலம் கீண்ட சுடர்வேலோய்! - போர்அவுணன்

அங்கம் இருகூறுஆய், அடல் மயிலும், சேவலுமாய்த்

துங்கமுடன் ஆர்த்து, எழுந்து தோன்றுதலும், - அங்குஅவற்றுள்

சீறும் அரவைப் பொருத சித்ரமயில் வாகனமா

ஏறி நடாத்தும் இளையோனே! -  மாறிவரு

சேவல் பகையைத் திறல்சேர் பதாகை என

மேவத் தனித்து உயர்த்த மேலோனே!        --- கந்தர் கலிவெண்பா.


தழைந்து எழும் தொத்துத் தடங்கை கொண்டு அப்பி,

     சலம் பிளந்து எற்றிப் ...... பொருசூர், அத்

தடம் பெரும் கொக்கைத் தொடர்ந்து, இடம் புக்குத்

     தடிந்திடும் சொக்கப் ...... பெருமாளே.      --- பொதுத் திருப்புகழ்.


கடல் சலம் தனிலே ஒளி சூரனை

     உடல் பகுந்து, இரு கூறு எனவே, அது

     கதித்து எழுந்து, ஒரு சேவலும் மாமயில் ...... விடும்வேலா!     --- அவிநாசித் திருப்புகழ்.


கொடியநெடும் கொக்குக் குறுகு அவுணன் பட்டுக்

     குரைகடல் செம்ப, சக்- ...... கரவாளச்

சிலை பக, எண் திக்குத் திகிரிகளும் பத்துத்

     திசைகளினும் தத்த, ...... செகம் ஏழும்

திருகு சிகண்டிப் பொன் குதிரை விடும் செட்டி!

     திறல! கொடும்பைக்கு உள் ...... பெருமாளே.    --- கொடும்பாளூர்த் திருப்புகழ்.


கொலைகாட்டு அவுணர் கெட, மாச் சலதி

     குளமாய்ச் சுவற, ...... முதுசூதம்

குறிபோய்ப் பிளவு பட,மேல் கதுவு

     கொதிவேல் படையை ...... விடுவோனே!      --- திருச்செந்தூர்த் திருப்புகழ்.


முட்டாமல் தாளைச் சேவிப்பார் முன் பாவத்தைக் களைவோனே --- 


முட்டு – தடை, தட்டுப்பாடு. நாள்தோறும் தடைபடாமல் திருவடிகளை வாழ்த்தி வழிபடுவோர் முற்பிறவிகளில் செய்த பாவங்களைப் போக்கி அருள் புரிபவர் முருகப் பெருமான். “தப்பாமற் பாடிச் சேவிப்பார் தத்தாம் வினையைக் களைவோனே” எனத் திருத்தணிகைத் திருப்புகழில் அடிகளார் காட்டி அருளியது காண்க.  

"தவமே புரிந்திலன், தண்மலர் இட்டு முட்டாது இறைஞ்சேன்” என்பது மணிவாசகம். உடலுக்கு உணவு இன்றியமையாதது போல உயிருக்கு இறைவழிபாடு இன்றியமையாதது ஆகும். அதனை உள்ளம் ஒன்றி உருகி நாள்தோறும் இயற்றுதல் வேண்டும். அப்படி வழிபட்டால் உயிருக்கு ஊனம் ஏதும் இல்லையாகும். “ஒன்றி இருந்து நினைமின்கள், உந்தமக்கு ஊனம் இல்லை” என்றார் அப்பர் பெருமான்.

 “நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கைதொழுவேன்” என்று உந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிதும் அறிக. உயிருக்கு உள்ள ஆறுவகையான குற்றங்கள் ஆகிய, காமம், குபோதம், உலோபம், மகம், மதம், மாச்சரியம் என்பவகளை அறுத்தவர்களை குற்றமற்ற மனத்தை உடைய அடியவர்கள் அவர்கள் இறைவன் நறுமடம் மிக்க மலர்களைக் கொண்டு வழிபடுகின்றார்கள் என்கின்றார் அருணைவள்ளலார். குற்றமற்ற அடியவர்கள் உள்ளத்தை இறைவன் தனக்குக் கோயிலாகக் கொண்டு எழுந்தருளி இருக்கின்றான். அவனை அகமலரில் வைத்துப் போற்றும் அடியார்கள் ஞானபூசையை எக்காலத்தும் புரிந்துகொண்டு இருப்பார்கள்.


“மானமா மடப்பிடி வன்கையால் அலகிடக்

கானமார் கடகரி வழிபடுங் கானப்பேர்

ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெடஎண்ணில்

ஞானமா மலர்கொடு நணுகுதல் நன்மையே.”


என்பது அப்பர் தேவாரம்.


இறைவனைப் பூமாலை கொண்டு வழிபடுதல் கிரியை நெறி ஆகும். பாமலைகளைச் சூட்டி, அன்போடு உருகி வழிபடுதல் ஞானநெறி.  பூக்களால் செய்யும் அருச்சனையானது, பாக்களால் செய்யும் சிறந்த அருச்சனைக்குப் பின்பே நிறைவு பெறும். விதவிதமான பூக்களால் ஆன மாலைகளை இறைவனுக்கு அணிவித்து, விதவிதமான பூக்களால் இறைவனை அருச்சனை செய்தபின், மந்திரங்களால் அமைந்த "மந்திர புஷ்பம்" இறைவனுக்குச் சாத்தப்பட்ட பின்னரும், அருளாளர்கள் பாடிய அருளிய சிறந்த பாமாலைகளால், இறைவனை வழிபட்ட பிறகே அருச்சனையானது நிறைவு பெறுவதைக் காணலாம்.


“நாவழுத்தும் சொல்மலரோ? நாள்உதிக்கும் பொன்மலரோ?

 தேவை உனக்கு இன்னது என்று செப்பாய் பராபரமே"

என்கிறார் தாயுமானார்.


இறைவனுக்கு நாவால் போற்றிப் பாடுகின்ற சொல்மலர் விருப்பமானதா? அல்லது நாள்தோறும் மலரும் மலர்கள் விருப்பமானதா? என்று தாயுமான அடிகளார் கேட்டதற்கு,  விடை பெரியபுராணத்தில் வருகின்றது. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு "அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும். ஆதலால், மண்மேல் நம்மைச் சொல்தமிழ் பாடுக" என்று அருளிச் செய்தார் இறைவர். "சுவாமி, நான் என்ன சொல்லி, எப்படி உம்மைப் பாடுவது?" என்று நாயனார் கேட்க, "முன்பு எனைப் பித்தன் என்றே மொழிந்தனை. ஆதலாலே, என் பெயர் ‘பித்தன்’ என்றே பாடுவாய்" என்றார் இறைவர். அன்பினால் செய்யப்படுபவை தான், திருமுழுக்காட்டுதல் என்னும் அபிடேகம், திருமாலை அணிவித்தல், திருவிளக்கிடுதல் முதலான வழிபாடுகள். அந்த அன்பு வழிபடாகளிலும், மேலான வழிபாடாவது இறைவனைப் போற்றி உரைக்கும் புகழுரைகளே ஆகும். எனவே, சொல் தமிழால் பாடுக என்று அருளினார் இறைவர். ஏன் தமிழால் பாடுக என்றார்? சுந்தரரின் தாய்மொழி தமிழ். எனவே, அவர் அறிந்த மொழியால் பாடுவது, அவரது உள்ளன்பை வெளிப்படுத்தும் சாதனமாக இருக்கும். எனவே, இறைவனை அவரவருக்குத் தெரிந்த மொழியினால் ஆன சொற்களைக் கொண்டு வழிபடலாம் என்பது தெளிவாகும். "வேற்று மொழியால் என்னைப் பாடாதே?" என்று இறைவர் அறிவிக்கவே இல்லை. அப்படி அறிவித்தால் அவர் இறைவர் இல்லை. நான் சொல்லுகின்ற மொழியில் தான் இறைவனை வழிபடவேண்டும் என்று யாரும் வற்புறுத்துவது அழகல்ல.


இவ்வாறு பூவைக் கொண்டும், நாவைக் கொண்டும் இறைவன் திருவடியை வழிபட்டு உய்தி பெறாதவர்கள், உடம்புக்கு வேண்டிய இரையைத் தேடி அலைந்து, வாழ்நாள் முடிவில், காக்கைக்கு இரையாகி அழிந்து ஒழிவர் என்கின்றார் அப்பர் பெருமான். 


“பூக்கைக் கொண்டுஅரன் பொன்அடி போற்றிலார்,

நாக்கைக் கொண்டுஅரன் நாமம் நவில்கிலார்,

ஆக்கைக்கே இரை தேடி அலமந்து,

காக்கைக்கே இரை ஆகிக் கழிவரே. ---  அப்பர்.


நாவினால் இறைவனுடைய நாமங்களை நவில்பவர் எல்லா நலன்களையும் பெறுவர். அல்லாதவர் அவமே அழிவர் என்பது இத் தேவாரப் பாடலால் தெளிவாகும்.


நாவுக்கு முதலிடம் தந்து, "கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ" என்று மணிவாசகர் கூறுமாறும் காண்க.


"பலபல பைம்பொன் பதக்கம் ஆரமும்,

     அடிமை சொலும் சொல் தமிழ்ப் பனீரொடு,

     பரிமளம் மிஞ்ச, கடப்ப மாலையும் ...... அணிவோனே!"


என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.


இதன் பொருள் ---


பலப்பல விதமான பசும் பொன்னால் செய்த பதக்கங்களையும், மாலைகளையும்,  அடிமையேன் சொல்லுகின்ற திருப்புகழாகிய தமிழ்ப் பன்னீரையும், வாசனை மிகுதியாக வீசும் அந்தக் கடப்ப மலர் மாலையையும் அணிகின்றவரே!

இறைவன் திருவடியை அடியவர்களும் வானவர்களும் எப்போதும் அன்றலர்ந்த மலர் தூவி வழிபட்டுக் கொண்டு இருப்பார்கள். அந்த மலர்களில் தேன் நிறைந்து மணம் பொருந்தி இருக்கும். நாளடைவில் அவை வாடி விடும். மணம் இன்றிப் போய் வாடிவிடுகின்ற மலர்கள் அவை. வாடா நறுமலர் என்பது ஞானமலர்களைக் குறிக்கும். ஞானமலர்கள் பாமாலைகளே ஆகும். அந்த மலர்களில் எப்போதும் மணம் மாறாது இருக்கும். ஆனந்தத் தேன் சொரியும்.

இறைவனை அன்று அலர்ந்த மலர்களைக் கொண்டு வழிபடவேண்டும். அன்று அலர்ந்த மலர்கள், "நாள் மலர்கள்" எனப்படும். அன்று அலர்ந்த எட்டுவிதமான மலர்களைக் கொண்டு இறைவனை வழிபடவேண்டும் என்பது பின்வரும் அப்பர் தேவாரப் பாடலால் விளங்கும்.

“எட்டு நாள்மலர் கொண்டுஅவன் சேவடி

மட்டு அலர் இடுவார் வினை மாயுமால்,

கட்டித் தேன்கலந்து அன்ன கெடிலவீ

ரட்ட னார்அடி சேரும் அவருக்கே.”

இதன் பொருள் ---

கன்னல் கட்டியும் தேனும் கலந்ததைப் போன்று இனிக்கும் கெடிலவீரட்டனார் சேவடி சேர்பவராய், எட்டுவகைப்பட்ட நாள் மலர்களாகிய தேன் அவிழும் மலர்களை இட்டு வழிபடுவார் வினைகள் மாயும் .

நாள் மலர் என்றது அன்று அலர்ந்த மலர்களை. எட்டு நாள் மலர் என்றது அஷ்ட புஷ்பங்கள் எனப்படும் எண் வகைப் புதிய மலர்கள். அவையாவன:- புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம், பாதிரி, குவளை, அலரி, செந்தாமரை ஆகிய பூக்கள். இவை புறப்பூசைக்கு அமைந்தவை. 

பூசையால் "பவன்" முதலிய எட்டு நாமங்கள் சொல்லி வழிபடும் மரபு உண்டு. ஆகமங்களில் விதித்தவாறு அட்ட புட்பம் சாத்தி வழிபடுதலையே குறிப்பது இத் தேவாரம். 

பூக்களைக் கொண்டு வழிபடுவது "புறப்பூசை". அகத்தில் விளங்கும் நற்பண்புகளைக் கொண்டு வழிபடுவது, "அகப்பூசை".

அகப் பூசைக்குரிய அட்டபுட்பங்கள் - கொல்லாமை, ஐம்பொறியடக்கம், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு என்னும் "நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும்" என்பார் அப்பர் பெருமான்.

அருணகிரிநாதப் பெருமான் அறுமுகப் பரமனுடைய அடிமலருக்கு ஒரு மாலை தொடுத்துப் புனையக் கருதுகின்றார். "பூமாலை" வாடும் தன்மை உடையது. ஆதலின் வாடாத தன்மையும் மென்மையும் உடைய "மந்திர மலர்மாலை" சூட்டத் துணிந்தார். மலர்மாலைக்கு இடையே குஞ்சம் ஒன்று தொங்க வேண்டும். அதுதான் மாலையை அழகு படுத்தும். அது பெரிய ஒரு பூங்கொத்தாக அமைந்திருக்கும். அடிகளார் தொடுக்கும் மந்திர மலர்மாலைக்கு இடையே "மனம்" என்ற தாமரைப் பூவை குஞ்சமாகக் கட்டித் தொங்கவிடுகின்றனர்.

மனமே பந்தத்திற்கும் முத்திக்கும் காரணமாகும். தண்ணீரே மனிதனை வாழ்விக்கின்றது. தண்ணீரே மனிதனைக் கொல்கின்றது. மனதை ஆண்டவனுடைய திருவடியில் சேர்த்து விடுவதே துன்ப நீக்கத்திற்குச் சிறந்த சாதனமாகும். அதுவே எளிய வழியுமாகும்.

காற்றும் காற்றாடியும் போல் சதா இடையறாது ஓடி ஓடி உழல்வதே மனத்தின் இயல்பு. அதனால் எண்ணில்லாத இடர்கள் விளைகின்றன. மனதை இறைவன் திருவடியில் சேர்த்துவிட்டால் இன்பம் மட்டுமே விளையும்.

மந்திர மலர்களைத் தொடுப்பதற்கு நூல் வேண்டும். "அன்பு" என்ற நூலினால் அழகுற மந்திர மலர்களைத் தொடுக்க வேண்டும். அன்பு, ஒன்றுடன் ஒன்றை இணைத்து வைக்கும் இயல்பு உடையது. இறைவனுடன் ஆன்மாவை ஒன்றுபடுத்துவதும் அன்பே ஆகும். சகாதேவன் கண்ணபிரானை அன்பு என்ற கயிற்றினால் உள்ளமாகிய மண்டபத்தில் உறுதியாகிய தூணில் கட்டினான். 

அத்தகு சிறந்த திருமாலையைக் கட்டுவதற்குரிய இடம் எது. அதற்குரிய சிறந்த இடம் "நாவே" ஆகும். வேறு எந்த உயிர்களுக்கும் அமையாத சிறப்பு மனிதனுடைய நாவுக்கு அமைந்துள்ளது. நன்கு பேசும் தகைமையுடன் கூடிய நாவை இறைவர் நமக்குத் தந்துள்ளார். அந்த நாவிலே பரமனுடைய திருநாமங்களை அன்புடன் நவில வேண்டும். "கற்றுக் கொள்வன வாய்உள நாஉள" என்பார் அப்பரடிகள். "நாமேல் நடவீர் நடவீர் இனியே" என்று அநுபூதியில் அருணகிரிநாதரும் கூறுகின்றார்.

இம் மந்திர பூமாலையில் ஒப்பற்ற மெய்ஞ்ஞானமாகிய நறுமணம் கமழ்கின்றது. மற்ற மணம் சில நேரமே கமழும்.  ஞானமணம் எப்போதும் இடையறாது கமழும். மணம் கண்களுக்குத் தோன்றாது. மென்மையாக வீசும் இயல்பு உடையது. ஞானம் அத்தகையது. ஞானம் மிகவும் நுண்மையானது. "கூர்த்த மெய்ஞ்ஞானம்" என்பது மணிவாசகம்.  ஞானவாசனை எவ்வுலகினும் பரிமளிக்கத் தக்கது.

ஞானமணம் கமழும் இம் மந்திர மலர்மாலையில் துளிக்கும் அருள் தேனைப் பருக, "புத்தி" என்ற வண்டு வந்து மொய்த்து, இனிய நாதத்துடன் ஒலிக்கின்றது. மலரிலே உள்ள மதுவைப் பிரித்து எடுத்து அருந்தும் ஆற்றலும் அறிவும் வண்டுகளுக்கே உண்டு. வண்டினாலேயே இனிய தேன் கிடைக்கின்றது. புத்திக்கு வண்டு உவமை ஆனது. புத்தியே எல்லா நூல்களிலிருந்தும் உயர்ந்த தத்துவங்களாகிய தேனைப் பிடித்து உணரும். "புத்திமான் பலவான் ஆவான்" என்ற பழமொழியும் கருதத் தக்கது. புத்திமான் எங்கும் எச் சபையிலும் நடுநாயகமாக வீற்றிருப்பான். புத்திகாரகன் புத பகவான். ஏழு நாள்களின் தலைவர்களாகிய ஏழு கிரகங்களின் நடுவில் புதன் அமைந்திருப்பதை எண்ணிப் பார்க்கவும்.

இறைவனும் அடியவர் புத்தியில் உறைகின்றான் என்று அருணகிரியார் முதல் பாடலிலேயே "கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ" என்று கூறியருளினார். இங்கே புத்தி என்று கூறியது அந்தக் கரணங்களுள் ஒன்றான புத்தி அல்ல. நல்லறிவைக் குறித்தது.

உடம்புக்குள் ஆறு ஆதாரங்கள் உள்ளன. மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆதாரங்கள் ஆறுக்குள் அகரம் முதலாக க்ஷகரம் இறுதியாக ஐம்பத்தொரு அக்ஷரங்கள் அடங்கி இருக்கின்றன. இந்த அக்ஷரங்களுக்கு "மாத்ருகா மந்திரம்" என்றும், "மாலாமந்திரம்" என்றும் கூறுவர். இம் மாத்கருகா மந்திரமே எல்லா மந்திரங்களினும் உயர்ந்தது. அம் மந்திரத்தின் பெருமை அளவிடற்கரியது.

இந்த மாத்ருகா மந்திரங்கள் ஐம்பத்தொன்றின் பரிணாமமே "கந்தர் அநுபூதி". ஐம்பத்தொரு பாடல்களாக அது அமைந்திருப்பதை ஆழ்ந்து சிந்தித்தல் நலம் "செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே" என்று காப்புச் செய்யுளில் அடிகள் கூறுகின்றனர்.

"ஆசைகூர் பத்தனேன் மனோ பத்மம்

     ஆன பூ வைத்து, ...... நடுவே அன்பு

ஆன நூல் இட்டு, நாவிலே சித்ரம்

     ஆகவே கட்டி, ...... ஒரு ஞான


வாசம் வீசி, ப்ரகாசியா நிற்ப,

     மாசு இல் ஓர் புத்தி ...... அளிபாட,

மாத்ருகா புஷ்ப மாலை கோல ப்ர-

     வாள பாதத்தில் ...... அணிவேனோ?"


என்பது அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்.


"வீண்பொழுது போக்காமலே,

நேயமுடனே தெளிந்து, அன்பொடு உன் பாதத்தில்

     நினைவு வைத்து, இரு போதினும்

  நீர்கொண்டு, மலர்கொண்டு, பரிவுகொண்டு அர்ச்சிக்க

     நிமலனே! அருள் புரிகுவாய்".     ---  அறப்பளீசுர சதகம்.


பெறுதற்கு அரிய மனிதப் பிறவியைப் பெற்றதன் பயன் இறைவனை, கையினால் பூக்களைக் கொண்டும், நாவினால் பாக்களைக் கொண்டும் வழிபடுவது ஒன்றே பேரின்ப வீட்டிற்குச் செல்லும் வழியாகும். இந்தப் பேரின்ப வீடுகூட வேண்டாம். இறைவனைத் தமிழ்ப் பாமாலைகளால் பாடி வழிபடுகின்ற பிறவியே வேண்டும் என்னும் பொருளில், உலகினில் பிறவாமையை வேண்டுவார் அவ்வாறே வேண்டிக் கொள்ளட்டும். ஆனால் நான் பிறவியையே வேண்டுவேன். எப்படிப்பட்ட பிறவி?  இனிமை நிறைந்த தமிழ்ச் சொற்களால் ஆன மலர்களை உனக்குச் சூட்டி மகிழ்கின்ற பிறவியே அடியேனுக்கு வேண்டும் என்றார் கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகள்.


அண்ணாமலையார் மீது பாடப்பட்ட அருமையான, "சோணசைல மாலை" என்னும் நூலில் வரும் பாடலைக் காண்போமாக..

விரைவிடை இவரும் நினை, பிறவாமை

      வேண்டுநர் வேண்டுக, மதுரம்

பெருகுறு தமிழ்ச்சொல் மலர் நினக்கு அணியும்

      பிறவியே வேண்டுவன் தமியேன்;

இருசுடர்களும் மேல் கீழ்வரை பொருந்த

     இடையுறல் மணிக்குடக் காவைத்

தரையிடை இருத்தி நிற்றல் நேர் சோண

     சைலனே! கைலைநா யகனே!.

இதன் பொருள் ----          

சூரியன் சந்திரன் ஆகிய இரு சுடர்களும் மேல்மலை, கீழ்மலை ஆகியவற்றில் விளங்க, இடையில் மலைவடிவமாக நிற்பதாவது, இருபுறத்தும் குடங்களைக் கொண்ட காவடியைத் தரையில் வைத்து நிற்பவரைப் போலத் தோன்றும் சோணசைலப் பெருமானே! திருக்கயிலையின் நாயகனே! விரைந்து செல்லும் இடபவாகனராகிய தேவரீரிடத்தில் பிறவாமை வேண்டுவோர் வேண்டிக் கொள்ளட்டும். இனிய தமிழ்ச் சொற்களால் ஆன பாமாலையை தேவரீருக்கு அணிவிக்கக் கூடிய மனிதப் பிறவியையே அடியேன் வேண்டுகின்றேன்.

கிரியை என்பது தயிரைப் போன்றது. தயிர் வெண்ணெய் ஆகவேண்டும். அது யோக நிலை. வெண்ணெயும் நெய்யாக வேண்டும். அது ஞானநிலை. கிரியை என்பது யோகத்தில் சென்று, ஞானத்தில் நிலைபெறவேண்டும். ஞானத்தில் நிலைபெற வேண்டும் என்றால், அடியார் திருக்கூட்டத்தோடு கூடி இருக்கவேண்டும். அந்த நிலையை அருள்வது, அன்பு வழிபாடே ஆகும் என்பதால்,

"உருகியும், ஆடிப் பாடியும், இருகழல் நாடிச் சூடியும்,

     உணர்வினோடு ஊடிக் கூடியும், ...... வழிபாடு உற்று,

உலகின் ஒர் ஆசைப் பாடு அற, நிலைபெறு ஞானத்தால் இனி,

     உனது அடியாரைச் சேர்வதும் ...... ஒருநாளே?"

என்று வேண்டினார் அருணகிரிநாதப் பெருமான்.

இறைவனுடைய திருவடிகள் நான் எனது என்ற அகப்பற்று புறப்பற்று அற்ற இடமே ஆகும். திருவடிகளை நாடுதல் சூடுதல் என்றால், இருவகையான பற்றுக்களையும் விடுவதே ஆகும். பற்று அறுதலே பரமனடி சார்தலாகும்.

யான் எனது என்று அற்ற இடமே திருவடியா..... --- கந்தர் கலிவெண்பா.

ஞானம் ஒன்றே என்றும் நிலைபெற்று நிற்கும். ஏனைய எல்லாம் நிலைபேறு இல்லாதவை. எனவே, "நிலைபெறு ஞானம்" என்றார் அடிகளார்.

நெய்யானது உணவின் வழி உடம்பில் கலந்து ஆற்றலைத் தரும். வேள்வியில் இடப்படும் நெய்யானது, இறை ஆற்றலைத் தரும். நிலையான சானத்தைப் பெற்ற பின் அடியாரொடு கூடி இருத்தலே சிறந்த பேறு ஆகும். 

இறைவனை நினைந்து உருகி, திருவருள் மயமாக நிற்பவர்கள் அடியார்கள். அவர்கள் தமது உரை, அறிவு, உயிர், உணர்வு என்ற நான்கையும் இறைவனுடைய திருவடியில் புனைவார்கள். இந்த நான்கில், உரையைப் புனைபவர் சரியையாளர். அறிவைப் புனைபவர் கிரியையாளர். உயிரைப் புனைபவர் யோகிகள். உணர்வைப் புனைபவர் ஞானிகள். எனவே, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு படிகளில் நின்று தொண்டு புரிவார்கள்.

"உரையையும் அறிவையும் உயிரையும் உணர்வையும்

     உன்பாத கஞ்ச ...... மலர்மீதே

உரவொடு புனைதர நினைதரும் அடியரொடு

     ஒன்றாக என்று ...... பெறுவேனோ...."

என்றார் அருணகிரிநாதர்.

கருத்துரை


முருகா! உலுத்தரைப் பாடி உழலாமல், உன்னைப் பாடி உய்ய அருள்.







No comments:

பொது --- 1125. செட்டாகத் தேனை

 அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் செட்டாகத் தேனை (பொது) முருகா!  உலுத்தரைப் பாடி உழலாமல்,  உன்னைப் பாடி உய்ய அருள். தத்தா தத்தா தத்தா தத்தா...