திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 55 -- செங்கோன்மை
அரசன் நீதிமுறையுடன் அரசினை ஆளுதல் சொல்லப்பட்டது. அந்த முறையானது ஒரு பக்கத்தில் சாயாமல், கோல்போல் இருத்தலினால், "செங்கோல்" எனப்பட்டது.
இது, நீதிநெறிகளில் மறதி இல்லாத அரசனால் செய்யப்படும் என்றதால், பொச்சாவாமை என்னும் அதிகாரத்தின் பின்னர் இது வைக்ககப்பட்டது.
இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "தன் கீழ் வாழ்வார் குற்றம் செய்தால், அக்குற்றத்தை ஆராய்ந்து, முகம் கொடாமல், நடுவுநிலைமையோடு இருந்து, உரிய தண்டனையைத் தேர்ந்து அளிப்பதே நீதி ஆகும்" என்கின்றார் நாயனார்.
"முறை எனப்படுவது, கண்ணோடாது உயிர் வௌவல்" என்பது கலித்தொகை. முகம் கொடுத்தல் என்பது பழகியவர்க்குக் காட்டும் தாட்சண்ணியம் ஆகும்.
இதற்குத் திருக்குறள்...
“ஓர்ந்து, கண் ஓடாது, இறை புரிந்து, யார் மாட்டும்
தேர்ந்து செய்வஃதே முறை.”
இதற்குப் பரிமேலழகர் உரை ---
ஓர்ந்து --- தன்கீழ் வாழ்வார் குற்றம் செய்தால் அக்குற்றத்தை நாடி:
யார்மாட்டும் கண்ணோடாது, இறை புரிந்து --- யாரிடத்தும் தாட்சண்ணியம் காட்டாது, நடுவு நிலைமையைப் பொருந்தி,
தேர்ந்து --- அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நூலோரோடும் ஆராய்ந்து,
செய்வஃதே முறை --- அவ்வளவிற்றாகச் செய்வதே முறையாம்.
(நடுவு நிற்றல் இறைக்கு இயல்பு ஆகலின், அதனை இறை என்றும் உயிரினும் சிறந்தார் கண்ணும் என்பார் 'யார் மாட்டும்' என்றும் கூறினார். இறைமை 'இறை' எனவும் , செய்வது 'செய்வஃது' எனவும் நின்றன. இதனான் செங்கோன்மையது இலக்கணம் கூறப்பட்டது.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
“இறைமகிழ வேந்தன் இளம் கன்றிற்காக
மகவினையும் தேர் ஊரும் ஆற்றால்
ஓர்ந்து, கண் ஓடாது, இறை புரிந்து, யார் மாட்டும்
தேர்ந்து செய்வஃதே முறை.”
இறை - சிவபெருமான். வேந்தன் - மனுநீதிச் சோழன். தன் மகனுடைய தேர்க்காலில் அகப்பட்டு இறந்த ஒரு கன்றின் தாய்ப்பசுவுக்கு நீதி வழங்கும் பொருட்டு, தானே தனது மகன் மீது தேரைச் செலுத்திய மனுநீதிச் சோழனின் செங்கோன்மையைத் தெரிவிக்கும் இவ்வரலாறு வருமாறு...
சோழநாட்டு மன்னர்கள் செங்கோன்மையிலும், வண்மையிலும், வீரத்திலும் பேர் பெற்றவர்கள். சிறப்பு வாய்ந்த சோழநாட்டில், பழமையில் சிறந்து விளங்குவது திருவாரூர் என்னும் திருநகரம். அங்கே துறவோர்களும் அறவோர்களும் நீங்காமல் இருப்பார்கள். திருவாரூரில் பரவை நாச்சியார் வன்தொண்டரை மணந்து இல்லறம் நடத்திய சிறப்பினை உடையது. திருவாரூரை ஆண்ட மன்னர்களுள் ஒருவர் மனுநீதிகண்ட சோழர். இவர் அநபாய சோழனின் குலமுதல்வர். எல்லா உயிர்கட்கும் கண்ணும், உயிரும் போன்றவர். ஊனமில்லாத வேள்வி பல நிகழ்த்தியவர். புற்றிடம் கொண்ட பெருமானார்க்குப் பூசனை முதலியன முறைப்படி நிகழ்த்தியவர்.
அவ்வரசர் பெருமானுக்கு ஓர் அரிய புதல்வன் பிறந்தான். பலகலைகளையும் பயின்று வளர்ந்து இளவரசன் ஆகும் பருவத்தை அடைந்தான். அப் பருவத்தில் அவன் தேரில் ஏறி, சேனைகளும், மற்றவர்களும் புடை சூழ்ந்து உலா வருவது வழக்கம். வழக்கம் போல ஒருநாள் அவன் உலா வரலானான். அன்று வழியில் ஓரிடத்தில் இருந்து பசுங்கன்று ஒன்று துள்ளிப் பாய்ந்து, தேரின் உருளையில் அகப்பட்டு உயிர் துறந்தது. தாய்ப்பசு அங்கே ஓடி வந்து, அந்தக் காட்சியைக் கண்டு கதறித் துடித்துக் கீழே விழுந்தது. அதன் கதறலும், துடிப்பும் இளவரசனின் நெஞ்சைப் பிளந்தது. அது தேரில் இருந்து அவனைச் சாய்த்துத் தள்ளியது. கீழே விழுந்த இளவரசன், உடல் பதற, வாய் குழற, நாக்கு வறளத் தாய்ப்பசுவைப் பார்க்கின்றான். இறந்து கிடக்கும் கன்றைப் பார்க்கின்றான். கண்ணீர் விடுகின்றான். பெருமூச்சு விடுகின்றான். உள்ளம் மிகத் தளர்ந்து, "அந்தோ, அறவழியில் கோலோச்சும் எனது தந்தைக்கு நான் ஏன் மகனாய்ப் பிறந்தேன்? மனு என்னும் பெரும்பேர் தாங்கும் எனது தந்தைக்குப் பெரும்பழியைச் சுமத்தவோ நான் பிறந்தேன்?" என்று அழுகின்றான். "இந்தப் பெரும் பாவத்திற்குக் கழுவாய் இருக்குமாயின், எனது தந்தை அறியாமுன்னம், அக் கழுவாயைத் தேடுவது நலம்" என்று எண்ணி, அந்தணர் இருக்கை நோக்கிச் சென்றான்.
வாயில்லாப் பசு மனம் கலங்க, முகத்தில் கண்ணீர் தாரை தாரையாகப் பெருக, மன்னுயிர்களைத் தன்னுயிர்போல் காக்கும் மனுச்சோழ மன்னரின் அரண்மனையை விரைந்து சென்று அடைந்தது. அரண்மனை வாயிலில் தூங்கிக் கொண்டு இருந்த ஆராய்ச்சி மணியைத் தன் கொம்பினால் புடைத்தது.
“தன்உயிர்க் கன்று வீயத்
தளர்ந்தஆத் தரியாது ஆகி
முன்நெருப்பு உயிர்த்து விம்மி
முகத்தினில் கண்ணீர் வார
மன்உயிர் காக்கும் செங்கோல்
மனுவின்பொன் கோயில் வாயில்
பொன்அணி மணியைச் சென்று
கோட்டினால் புடைத்தது அன்றே.” --- பெரியபுராணம்.
அம் மணி ஓசை, மன்னர் பெருமான் செவியில் விழுந்ததும், அவர் திடுக்கிட்டு, அரியாசனத்தில் இருந்து குதித்து, வாயிலை அடைந்தார். வாயில் காப்போர் மன்னர்பிரானை வணங்கி, "இப் பசு தனது கோட்டினால் இம் மணியைத் துலக்கியது" என்றார். மன்னர் பெருமான் சினந்து அமைச்சர் பெருமக்களை நோக்கினார். அமைச்சருள் ஒருவன் நிகழ்ந்ததைக் கூறினான். கருணை மன்னர் பசுவுக்கு உற்ற துயரத்தை அடைந்தார். நஞ்சு தலைக்கு ஏறினால் போல மயங்கினார். எழுந்தார். பசுவைப் பார்த்தார். "எனது அரசாட்சி நன்று, நன்று" என்று இரங்கினார்.
“அவ்வுரை கேட்ட வேந்தன்
ஆஉறு துயரம் எய்தி
வெவ்விடம் தலைக்கொண் டால்போல்
வேதனை அகத்து மிக்குஇங்கு
இவ்வினை விளைந்த வாறுஎன்று
இடர்உறும் இரங்கும் ஏங்கும்
செவ்விதுஎன் செங்கோல் என்னும்
தெருமரும் தெளியும் தேறான்.” --- பெரியபுராணம்.
“மன்உயிர் புரந்து வையம்
பொதுக்கடிந்து அறத்தில் நீடும்
என்நெறி நன்றால் என்னும்
என்செய்தால் தீரும் என்னும்
தன்இளம் கன்று காணாத்
தாய்முகம் கண்டு சோரும்
அந்நிலை அரசன் உற்ற
துயரம்ஓர் அளவிற்று அன்றால்.” --- பெரியபுராணம்.
இவ்வாறு துயர் உறும் வேந்தரை அமைச்சர்கள் பார்த்து, "அரசே! சிந்தை தளர வேண்டாம். இந்தப் பழிக்குக் கழுவாய் உண்டு. என்றார்கள்.
“மந்திரிகள் அதுகண்டு
மன்னவனை அடிவணங்கிச்
சிந்தை தளர்ந்து அருளுவது
மற்றுஇதற்குத் தீர்வுஅன்றால்
கொந்துஅலர்த்தார் மைந்தனைமுன்
கோவதை செய்தார்க்கு மறை
அந்தணர்கள் விதித்த முறை
வழிநிறுத்தல் அறம்என்றார்.” --- பெரியபுராணம்.
அதற்கு அரசர், "அமைச்சர்களே! நீங்கள் கூறும் கழுவாய்க்கு நான் இசையேன். அக் கழுவாய் கன்றை இழந்து அலரும் பசுவின் நோய்க்கு மருந்தாகுமோ? எனது மைந்தன் பொருட்டுக் கழுவாய் தேடினால், அறக்கடவுள் சலிப்பு உறாதோ? உயிர்களுக்குத் தன்னாலாவது, தனது பரிசனங்களாலாவது, பகைவர்களாலாவது, கள்வர்களாலாவது, பிற உயிர்களாலாவது விளையும் ஐந்து வகையான பயத்தையும் தீர்த்து அறத்தைக் காப்பவன் அல்லவோ அரசன். இன்று உங்கள் சொல்லுக்கு நான் இசைந்து, நாளை வேறு ஒருவன் ஓர் உயிரைக் கொன்றால், அவனுக்கு மட்டும் கொலைத் தண்டனை விதிக்கலாமோ? 'பண்டை மனுவின் நீதி பாவி மகனால் தொலைந்தது' என்னும் பழிமொழி உலகில் நிலையாதோ? நீங்கள் மந்திரிகள். உங்கள் வழக்கப்படி மொழிந்தீர்கள்" என்று இயம்பினார்.
“வழக்குஎன்று நீர்மொழிந்தால்
மற்றுஅதுதான் வலிப்பட்டுக்
குழக்கன்றை இழந்துஅலறுங்
கோஉறுநோய் மருந்துஆமோ
இழக்கின்றேன் மைந்தனைஎன்று
எல்லீரும் சொல்லியஇச்
சழக்குஇன்று நான்இயைந்தால்
தருமம் தான் சலியாதோ?” --- பெரியபுராணம்.
“மாநிலம்கா வலன்ஆவான்
மன்உயிர்காக் கும்காலைத்
தான்அதனுக்கு இடையூறு
தன்னால்தன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தால்
கள்வரால் உயிர்தம்மால்
ஆனபயம் ஐந்தும் தீர்த்து
அறம் காப்பான் அல்லனோ?” --- பெரியபுராணம்.
“என்மகன்செய் பாதகத்துக்கு
இருந்தவங்கள் செயஇசைந்தே
அன்னியன்ஓர் உயிர்கொன்றால்
அவனைக்கொல் வேன்ஆனால்
தொன்மனுநூல் தொடைமனுவால்
துடைப்புஉண்டது எனும்வார்த்தை
மன்உலகில் பெறமொழிந்தீர்
மந்திரிகள் வழக்கு என்றான்.” --- பெரியபுராணம்.
மன்னரின் மனோநிலையை உணர்ந்த மந்திரிகள், அவரைப் பார்த்து, "இத்தகைய நிகழ்ச்சி முன்னரும் நிகழ்ந்துள்ளது. இதன் பொருட்டு அருமைப் புதல்வனை இழப்பது முறை ஆகாது. கழுவாய் தேடுவதே முறை ஆகும்" என்றனர். சோழர் பெருமான், "இத்தகைய நிகழ்ச்சி இதற்கு முன்னர் எங்கே நடந்தது? எங்கே, எந்தப் பசு துன்பத்தால் மணியை அடித்தது? ஆகவே, பசு உற்ற துயரை, நானும் உறுதல் வேண்டும். திருவாரூரில் பிறந்த உயிரை அல்லவா என் மகன் கொன்றான். அவனைக் கொல்வதே தகுதி" என்று கூறி, அவ்வாறு செய்ய உறுதி கொண்டார்.
“அவ்வுரையில் வருநெறிகள்
அவைநிற்க அறநெறியின்
செவ்விய உண்மைத்திறம் நீர்
சிந்தை செயாது உரைக்கின்றீர்
எவ் உலகில் எப் பெற்றம்
இப்பெற்றித்து ஆம் இடரால்
வெவ் வுயிர்த்துக் கதறிமணி
எறிந்து விழுந்தது விளம்பீர்.” --- பெரியபுராணம்.
“போற்றி இசைத்துப் புரந்தரன்மால்
அயன்முதலோர் புகழ்ந்துஇறைஞ்ச
வீற்றுஇருந்த பெருமானார்
மேவிஉறை திருவாரூர்த்
தோற்றம்உடை உயிர்கொன்றான்
ஆதலினால் துணிபொருள்தான்
ஆற்றவும் மற்று அவற்கொல்லும்
அதுவே ஆம் எனநினைமின்.” --- பெரியபுராணம்.
அமைச்சர்கள் நடுக்கு உற்றார்கள். நீதிமன்னர் தம்மொரு புதல்வனை வரவழைத்து, ஓர் அமைச்சரை விளித்து, "இவனைக் கன்று இறந்த இடத்தில் கிடத்தி, தேரைச் செலுத்துவாயாக" என்றார். அரசன் ஆணவழி நின்று கடமை ஆற்ற ஒருப்படாத அந்த அமைச்சர், அங்கிருந்து அகன்று சென்று தமது உயிரை மாய்த்துக் கொண்டார். அதற்குமேல் அரசர் பெருமான், தமது குலமகனைத் தாமே அழைத்துச் சென்று, தாம் எண்ணியவாறு முடித்தார்.
“ஒருமைந்தன் தன்குலத்துக்கு
உள்ளான்என் பதும்உணரான்
தருமம்தன் வழிச்செல்கை
கடன்என்று தன்மைந்தன்
மருமம் தன் தேர்ஆழி
உற ஊர்ந்தான் மனுவேந்தன்
அருமந்த அரசாட்சி
அரிதோ மற்று எளிதோதான்.” --- பெரியபுராணம்.
கருணை மன்னனின் செயல் கண்டு மண்ணவர்கள் கண்மழை பொழிந்தார்கள். விண்ணவர்கள் பூமழை சொரிந்தார்கள். வீதிவிடங்கப் பெருமான் விடைமேல் எழுந்தருளி, சோழர் பெருமானுக்குக் காட்சி கொடுத்து அருளினார். சோழர் பெருமான் இறைவரைத் தொழுது இன்பக் கடலில் திளைத்தார். அந் நிலையில், பசுவின் கன்று எழுந்தது. அரசிளங்குமரனும் விழித்து எழுந்தான். அமைச்சரும் உயிர் பெற்று எழுந்தார். தம்மை வணங்கிய புதல்வனை மார்புறத் தழுவிச் சோழவேந்தர் மகிழ்ந்தார்.
“தண்அளிவெண் குடைவேந்தன்
செயல்கண்டு தரியாது
மண்ணவர்கண் மழைபொழிந்தார்
வானவர்பூ மழைசொரிந்தார்
அண்ணல்அவன் கண்எதிரே
அணிவீதி மழவிடைமேல்
விண்ணவர்கள் தொழநின்றான்
வீதிவிடங் கப்பெருமான்.” --- பெரியபுராணம்.
“சடைமருங்கில் இளம்பிறையும்
தனிவிழிக்கும் திருநுதலும்
இடம் மருங்கில் உமையாளும்
எம்மருங்கும் பூதகணம்
புடைநெருங்கும் பெருமையும்முன்
கண்டுஅரசன் போற்றிஇசைப்ப
விடைமருவும் பெருமானும்
விறல்வேந்தற்கு அருள்கொடுத்தான்.” --- பெரியபுராணம்.
“அந்நிலையே உயிர்பிரிந்த
ஆன்கன்றும் அவ்அரசன்
மன்உரிமைத் தனிக்கன்றும்
மந்திரியும் உடன்எழலும்
இன்னபரிசு ஆனான் என்று
அறிந்திலன் வேந் தனும் யார்க்கும்
முன்னவனே முன்நின்றால்
முடியாத பொருள்உளதோ.” --- பெரியபுராணம்.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பெரியபுராணத்துள் வரும் கழற்சிங்க நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார் பாடி அருளிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
“தொழச்சங் கரன்சூடாத் தூய்மலர்மோந் தாள்கை
விழச்சென்று அரிந்து விடுத்தார் --- கழற்சிங்கர்,
ஓர்ந்துகண் ஓடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.”
இதன் பொருள் ---
கழற்சிங்க நாயனார் காடவர் குலத்தில் அவதரித்தவர். சிவபெருமான் திருவடிகளையே அன்றி மற்றொன்றும் அறியாத வாய்மையாளர். சிவபெருமானது திருவருளால் வடபுலத்தார்களைப் போரில் வென்றார். எங்கும் சைவசமயம் தழைத்து ஓங்குமாறு அரசு புரிந்தார். அவர் தனது மாதேவியோடு சிவதரிசனம் செய்யுமாறு தலங்கள்தோறும் சென்று வணங்கிக் கொண்டு திருவாரூரை அடைந்தார். பூங்கோயிலின் உள்ளே சென்று புற்றிடங்கொண்டாரை வணங்கினார். அவருடைய மாதேவி திருக்கோயிலை வலம் வந்தாள். திருமாலை கட்டும் மண்டபத்தின் பக்கத்திலே விழுந்து கிடந்த ஒரு புதுப் பூவை எடுத்து மோந்தாள். அதனைச் செருத்துணை நாயனார் கண்டு விரைந்து ஓடிவந்து, பூமண்டபத்திலிருந்த பூவை எடுத்து மோந்ததாகக் கருதி அவளைக் கூந்தலைப் பிடித்து இழுத்து வீழ்த்தி அவளுடைய மூக்கை அரிந்தார். திருக்கோயில் வலம் வந்துகொண்டிருந்த கழற்சிங்க நாயனாரும் இதனைக் கண்டார். நடந்ததை விசாரித்து அறிந்து, பூவை எடுத்த பூவை கையை அன்றோ முதலில் துணிக்கவேண்டும் என்றார். உடைவாளை உருவிக் கையைத் துணித்தார்.
தன்கீழ் வாழ்வார் குற்றம் செய்தால் அக்குற்றத்தை நாடி, யாவர் மாட்டும் கண்ணோடாது நடுவுநிலைமையைப் பொருந்தி, அக்குற்றத்துக்குச் சொல்லிய தண்டத்தை நூலோரோடும் ஆராயந்து அவ்வளவிற்றாகச் செயவதே முறையாம் என்று திருவள்ளுவ நாயனார் அருளியச் செவ்வியை நோக்குக.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்த்துளதை அறியலாம்...
“வழிபடு வோரை வல் அறிதீயே,
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே,
நீமெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி...” --- புறநானூறு
இதன் பொருள் ---
நின்னை வழிபட்டு ஒழுகுவோரை நீ விரைவில் அறிந்து கொள்வாய். புறங்கூறுவோர் பிறர்மேல் சொல்லும் பழிச் சொற்களை நீ சற்றும் ஏற்றுக் கொள்ளமாட்டாய். தவறு உடையது என்று நீ ஆராய்ந்து தெளிந்த தீமையை யாரேனும் செய்யக் கண்டால், முறை தவறாது, நடுநிலையோடு நின்று, அவர்க்குத் தண்ட்னை தருவாய்.
“எங்கண் இனையர் எனக்கருதின் ஏதமால்,
தங்கண்ண ரானும் தகவில கண்டக்கால்
வன்கண்ணன் ஆகி ஒறுக்க, ஒறுக்கல்லா
மென்கண்ணன் ஆளான் அரசு.” --- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
எம்கண் இனையர் என கருதின் - அரசன் நீதி கூறுமிடத்து எமக்கு இவர் (நண்பர், பகைவர்) இத்தன்மையை உடையார் என்று கருதுவானாயின், ஏதம் - அது செங்கோன்மைக்குக் குற்றமாகும். தம் கண்ணரானும் - தமது கண்போல்வார் ஆயினும், தகவு இல கண்டக்கால் - தகுதியற்ற செயல்களை அவர்களிடத்துக் கண்டபொழுது, வன்கண்ணனாகி – மனக் கொடுமையை உடையவன் ஆகி, ஒறுக்க - அவர்களைத் தண்டிக்கவேண்டும். ஒறுக்கல்லா மென் கண்ணன் - தண்டஞ் செய்யாத கண்ணோட்டம் உடையான், அரசு ஆளான் - அரசினை ஆளும் தகுதியில்லாதவனே ஆவான்.
“சால மறைத்து ஓம்பிச் சான்றவர் கைகரப்பக்
காலைக் கழிந்ததன் பின்றையும், - மேலைக்
கறவைக்கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்
முறைமைக்கு மூப்பிளமை இல்.” --- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
சான்றவர் - அறிவு நிரம்பிய அமைச்சர்கள். சால மறைத்து ஓம்பி கை கரப்பவும் - மிகுதியானவைகளைக் கூறி இது பெருங் குற்றமல்ல என்று மறைத்து, அதற்கு மறை மொழிந்தபடி செய்தலே அறமென்று பாதுகாவலும் செய்து அரசன் நினைத்திருந்த செயலைக் கரப்பவும், காலை கழிந்ததன் பின்றை - அன்றிரவு கழிந்த பின்னர், மேலை - முன்னாள், கறவை கன்று ஊர்ந்தானை - பசுவின் கன்றின்மேல் தனது தேரைச் செலுத்தினவனை, தந்தையும் ஊர்ந்தான் - அவன் தந்தையும் அவன் மேல் தனது தேரைச் செலுத்தினான்; (ஆகையால்), முறைமைக்கு மூப்பு இளமை இல் - செங்கோன்மைக்கு முதுமையுடையோனுக்கு ஒரு நீதி, இளமையுடையானுக்கு ஒருநீதி என்பதில்லை.
“வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுட .....
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்”
--- சிலப்பதிகாரம்.
“பழமை கடைப்பிடியார், கேண்மையும் பாரார்,
கிழமை பிறிதுஒன்றும் கொள்ளார், வெகுளின்மன்
காதன்மை உண்டே, இறைமாண்டார்க்கு ஏதிலரும்
ஆர்வலரும் இல்லை அவர்க்கு.” --- நீதிநெறி விளக்கம்.
இதன் பொருள் ---
வெகுளின்மன் - (அரசர்) மிகுதியாகக் கோபித்தால், பழமை - (இவர் நமக்கு அரசியலில்) தொன்றுதொட்டுப் பணியாற்றி வருபவர் என்பதையும், கடைப்பிடியார் - நிலைநிறுத்தார், கேண்மையும் பாரார் - (இவர் நமக்கு) நண்பர் என்பதையும் கவனியார், பிறிது - (அவை) ஒழிய, கிழமை - (இவர் நமக்கு) உரியவர் என்பதையும், ஒன்றும் கொள்ளார் – சிறிதும் நினையார், (ஆதலால்) இறை - அரசியலில், மாண்டார்க்கு - அகப்பட்டார்க்கு, காதன்மை உண்டே - அன்புடைமை உண்டோ?,அவர்க்கு - அவ்வரசர்க்கு, ஏதிலரும் - (இவர்) அயலார் எனவும், ஆர்வலரும் - (இவர்) அன்பு உடையர் எனவும், இல்லை - கிடையாது.
அரசர் சினம் கொள்வாராயின், அயலார் எனவும் அன்புடையார் எனவும் பாரார் என்பதற்குச் சோழ மன்னன் ஒரு பசுவினது கன்றின்பொருட்டுத் தன் புதல்வன் செய்த குற்றத்திற்காக அவனையே கீழே கிடத்தி அவன் மேல் தேரூர்ந்த வரலாறு சான்றாகும்.
“மன்னுயிர் அனைத்தும் தன்னுயிர் என்ன
மகிழ்வொடு தாங்கி, யாரேனும்
இன்னல் உற்று அயர்ந்தோம் எனக் கலுழ்ந்திடில்,தன்
இருவிழி நீரினை உகுப்பான்,
அன்ன வெந் துயரை நீக்குமுன் தான் ஒன்று
அயின்றிடான், துயின்றிடான், எவரும்
நன்னகர் எங்கும் உளன் எனப் பகர
நாடொறும் இயங்குவோன் கோனே. --- நீதிநூல்.
இதன் பொருள் ---
எல்லா உயிரும் தன் உயிர்போல் காத்துப், பிறர் துன்பம் கண்டால் கண்ணீர்விட்டு, அத்துன்பம் நீக்கும் வரை ஊண் உறக்கமின்றி நகரெங்கும் காணும்படி வருவோன் மன்னன்.
“காது இறைவனுக்குக் கண் எனலான்,மெய்
காண்குறான் எனுமொழி மாற்றி,
வாதிகள் சாட்சி சாதகம் எல்லாம்
வகைவகை இனிதுகேட்டு அமைந்த
மேதினிக்கிழமை நீங்கிடுந் தன்மை
விளையினும் நடுவில் நீங்காது
பாதியா அணுவும் பகுந்து தீர்ப்பதுவே
பார்த்திபன் கடமையாம் அன்றோ.” --- நீதிநூல்.
இதன் பொருள் ---
ஒற்றர் சொல்லுவது அன்றிப் பிறர் மொழியைக் கேட்டு உண்மை காணான் மன்னன் என்று உலகோர் சொல்லும் உரையை மாற்றி, வழக்காளியும் எதிர்வழக்காளியும் சான்று சொல்லுவோரும் கூறுவனவும், மற்றை ஆவணமாகிய எழுத்து முதலியவும் செவ்வையாகக் கேட்டும் ஆய்ந்தும் முறைசெய்தல் வேண்டும். அரசே தன்னை விட்டு நீங்குமாயினும் தான் நடுவுநிலைமையில் நீங்காது அணுவையும் பாதியாகப் பிளந்து நடுவுநிலை செய்யும் மன்னனே வேந்தன்.
No comments:
Post a Comment