"உய்யும் மருந்துஇதனை உண்மின் எனவுற்றார்
கையைப் பிடித்துஎதிரே காட்டியக்கால், - பைய
எழுந்து,இருமி, யான்வேண்டேன் என்னாமுன், நெஞ்சே,
செழுந்திரும யானமே சேர்."
இதன் பொருள் ---
உய்யும் மருந்து – இறவாமல் வாழ்வதற்கு உரிய மருந்து, இதனை உண்மின் என – இதனை உண்ணுங்கள் என்று, உற்றார் – சுற்றத்தார், கையைப் பிடித்து எதிரே காட்டியக்கால் – கையினைப் பிடித்து எதிரே காட்டி நிற்கும்போது, பைய எழுந்து – மெல்லப் படுக்கையிலு இருந்து எழுந்து, இருமி – எழுகின்ற முயுற்சியால் இருமல் உண்டாகிய நிலையில், யான் வேண்டேன் என்னா முன் – உண்ண முடியாமையால் எனக்கு இது வேண்டாம் என்று சொல்லும் நிலை வருவதற்கு முன்பாகவே, நெஞ்சே – நெஞ்சமே! செழும் திருமயானமே சேர் – செழிப்பு உடைய திருமாயனம் என்னும் திருத்தலத்தைச் சென்று அடைவாயாக.
நோய் முற்றிய நிலையில் படுக்கையில் கிடப்போர்க்கு அவரது சுற்றத்தார் எவ்வகையிலாவது தேற்றி விட வேண்டும் என்னும் எண்ணத்தால், நோயில் இருந்து தப்பிப் பிழைப்பதற்கு உரிய மருந்து இது என்று சொல்லி, நோயின் மிகுதியால் கண்மூடிப் படுத்துக் கிடக்கும் ஒருவரை, அவரது கையைப் பிடித்து இந்த மருந்தினை உண்ணுங்கள் என்று கையைப் பிடித்துக் காட்டிய நிலையில், படுக்கையில் இருந்து மெல்ல எழும்போது, இயலாமையால் இருமல் வந்து நிற்கும். மருந்தினை உண்ண மனம் வராமையால் இது எனக்கு வேண்டாம் என்று சொல்லும் நிலை உண்டாகும். அந்த நிலை வராத முன்னரே, திருமாயனம் என்று சொல்லப்படும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு விளங்கும் சிவபரம்பொருளை வழிபட்டு உய்ய வேண்டும்.
'திருமயானம்' என்பது சில திருத்தலங்களில் உள்ள திருக் கோயில்களைக் குறிக்கும். திருக் கச்சி மயானம், திருக் கடவூர் மயானம், திரு நாலூர் மயானம் ஆகிய இவை காண்க.
No comments:
Post a Comment