திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 54 -- பொச்சாவாமை
இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "அளவு கடந்த மகிழ்ச்சியின் காரணமாக ஒருவன் மிகுந்த செருக்குக் கொள்ளும்போது, முற்காலத்தில், அந்த மகிழ்ச்சியினால் உண்டாகிய மறதியால் கெட்டவர்களை நினைவில் கொள்ளவேண்டும்" என்கின்றார் நாயனார்.
தமக்குப் பெரியதோர் செல்வம் கிடைக்குமானால், அந்த செல்வத்தின் மிகுதியால், அளவு கடந்த மகிழ்ச்சியை அடைந்து, செய்யவேண்டிய காரியங்களை மறந்து, செருக்குக் கொண்டு இருப்பதால், ஒருவன் கேட்டினை அடைவது திண்ணம். எனவே, அவ்வித மறப்பும், அதனால் உண்டாகின்ற கேடும் உண்டாகாது இருக்கவேண்டும் என்று எண்ணுகின்ற நல்லறிவினை உடையவன், முற்காலத்தில் இவ்வாறான அளவு கடந்த களிப்பினால், செய்யவேண்டிய காரியங்களைச் செய்யாது கேட்டினை அடைந்தவர்களது வரலாறுகளை எண்ணிப் பார்க்கவேண்டும்.
ஆற்றலின் களிப்பால் இரணியன் கெட்டான்.
வீரக் களிப்பால் சூரபதுமன் கெட்டான்.
காமக் களிப்பால் இராவணன் கெட்டான்.
மமதைக் களிப்பால் துரியோதனன் கெட்டான்.
களிப்பினால் கெட்டவர் வரலாற்றை, பின்வரும் பாடல் காட்டுவது காண்க.
“சூரபதுமன் பலமும், இராவணன் தீரமும்,
துடுக்கான கஞ்சன்வலியும்,
துடியான இரணியன் வரப்ரசா தங்களும்,
தொலையாத வாலி திடமும்,
பாரமிகு துரியோத னாதி நூற் றுவரது
பராக்ரமும், மதுகைடவர்
பாரிப்பும், மாவலிதன் ஆண்மையும், சோமுகன்
பங்கில்உறு வல்லமைகளும்,
ஏரணவு கீசகன் கனதையும், திரிபுரர்
எண்ணமும், தக்கன் எழிலும்,
இவர்களது சம்பத்தும் நின்றவோ? அவரவர்
இடும்பால் அழிந்த அன்றோ?
மாரனைக் கண்ணால் எரித்தருள் சிவன்தந்த
வரபுத்ர! வடிவேலவா!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.”
இப் பாடலில் குறித்துள்ளவர்கள் எல்லாருக்கும் அளவில்லாத செல்வமும் ஆற்றலும் வந்து அடைந்தது அவரவருடைய தவலிமையாலும், பிறப்பினாலுமே. அவர்கள் கேடு அடைந்த்தும் அவரவர் கொண்டு இருந்த அகந்தையால் தான். ஆக, இடும்பு, இடும்பைக்கு இடமாகும் என்பதை அறிக.
இதற்குத் திருக்குறள்...
“இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக, தாம் தம்
மகிழ்ச்சியின் மைந்து உறும் போழ்து.”
இதற்குப் பரிமேலழகர் உரை ---
தம் மகிழ்ச்சியின் தாம் மைந்து உறும் போழ்து --- அரசர் தம் மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும் பொழுது,
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக --- முற்காலத்து அதனினாய சோர்வால் கெட்டவர்களை நினைக்க.
(காரணங்களோடு அவர்க்கு உளதாய உரிமையை மகிழ்ச்சிமேல் ஏற்றித் தம் மகிழ்ச்சியின் என்றும், இகழ்ச்சியும் கேடும் உடன் தோன்றும் ஆகலின், 'மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து' என்றும் கூறினார். கெட்டாரை உளவே, 'நாமும் அவ்வாறே கெடுதும்' என்று அதன்கண் மைந்துறார் என்பது கருத்து. எண்ணுக என்று பாடம் ஓதுவாரும் உளர்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரானமாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
“முப்புரத்தோர் வேவ உடன்இருந்த மூவரே
துப்பினால் கண்டுஅறிந்தார், சோமேசா! --- வெப்பால்
இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக தாம்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.”
இதன் பொருள்---
சோமேசா! தம் மகிழ்ச்சியின் தாம் மைந்து உறும் போழ்து - அரசர் தம் மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும்பொழுது, இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக - முற்காலத்து அதனின் ஆய சோர்வால் கெட்டவர்களை நினைக்க, வெப்பால் முப்புரத்தோர் வேவ - சிவபெருமானுடைய புன்சிரிப்பில் தோன்றிய தீயினால் திரிபுரத்தசுரர்கள் வெந்தொழிய, உடன் இருந்த மூவரே - அத் திரிபுரத்தசுரர்களுடன் வாழ்ந்திருந்த சுதன்மன், சுசீலன், சுபுத்தி என்னும் மூன்று அசுரர்களுமே, துப்பினால் கண்டு அறிந்தார் - சிவபூசை வலிமையினாலே உண்மையைக் கண்டு அறிந்து உய்ந்தனர் ஆகலான் என்றவாறு.
துப்பு - வலிமை. சிவபூசையின் பயனால் அவர்கட்கு அது விளைந்தது.
தாருகாட்சன், கமலாட்சன், வித்தியுன்மாலி என்னும் அசுரர் மூவர் மிக்க சிவபத்தியுடையார். தேவர்களைத் துன்புறுத்தியதுடன், பொன், வெள்ளி, இரும்பு ஆகிய இவற்றாலாகிய மூன்று அரண்களில் இருந்து எங்கெங்கும் பறந்து சென்று கீழிறங்கி உயிர்களுக்குக் கேடு செய்தனர். திருமால் புத்தனாய்த் தோன்றி அவர்கள் சிவபத்தி கெடப் போதித்தார். அதனால் அவர்களும் மயங்கினார்கள். அதன் பின் திருமாலாதி தேவர்கள் திருக்கயிலை சென்று சிவபெருமானை அடைந்து, அவர்கள் செய்யும் துன்பத்தை விண்ணப்பித்து அவர்களை அழிக்கவேண்டினார்கள். சிவபெருமான் அதற்கு இன்றியமையாத கருவிகள் அமைக்க என ஏவத் தேவர்கள் பூமியைத் தேராகவும், சந்திரசூரியர்களை உருளைகளாகவும், மேலுவை வில்லாகவும், வாசுகியை நாணாகவும், விஷ்ணுவை அம்பாகவும், அக்கினியை அம்பின் நுனியாகவும் செய்து கருவிகள் அமைத்தார்கள். பெருமான் அவை கொண்டு பூரதமீது ஏறிச் சென்று திரிபுரத்தை அடைந்து, நகைத்த அளவில், அப்புரம் மூன்றும் வெந்து நீறாயின. அவ்வாறாக, அப்புரத்தாருள் மற்றையோரெல்லாம் வெந்து அழியவும், புத்தன் போதனையால் மயங்கிச் சிவபூசையைக் கைவிடாத சுதன்மன், சுபுத்தி, சிசீலன் என்னும் மூவரே பிழைத்துப் பெருமான் பணித்தவாறே காஞ்சியில் இலிங்கப் பிரதிட்டை செய்து பூசித்தபின் கயிலையில் இருவர் துவாரபாலகர்களாகவும், மற்றொருவர் முழா முழக்குபவராகவும் நியமிக்கப் பெற்றனர்.
இதனை,
“பூஆர்மலர் கொண்டு அடியார் தொழுவார்
புகழ்வார் வானோர்கள்
மூவார்புரங்கள் எரித்த அன்று
மூவர்க்கு அருள்செய்தார்
தூமாமழைநின்று அதிரவெருவித்
தொறுவின் நிரையோடும்
ஆமாம் பிணைவந்து அணையும்சாரல்
அண்ணா மலையாரே.”
என்னும் திருஞானசம்பந்தப் பெருமானாரின் அருட்பாடலாலும்,
“மூவெயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில்
இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்
காவ லாளர்என்று ஏவிய பின்னை
ஒருவன் நீகரி காடு அரங் காக
மானை நோக்கிஓர் மாநடம் மகிழ
மணிமு ழாமுழக்க அருள் செய்த
தேவ தேவநின் திருவடி அடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே.”
என்னும் நம்பியாரூர் திருவாக்காலும்,
“உய்யவல் லார் ஒரு மூவரைக் காவல்கொண்டு,
எய்யவல் லானுக்கே உந்தீபற!
இளமுலை பங்கன் என்று உந்தீபற.”
என்னும் திருவாசகப் பாடலாலும்
“முப்பு ரங்களின் மூவர் புத்தன்
மொழித்தி றத்தின் மயங்கிடாது
அப்பு அணிந்தவர் தாள் பணிந்து அருள்
ஆற்றின் நின்றனர், ஆதலால்
பொய்ப்புரம் தபு காலை, நீற்றறை
நாவின் மன்னவர் போல்,எரி
தப்பி வாழ்ந்தனர், ஈசன் ஆணையில்
நிற்பவர்க்கு இடர் சாருமோ?.”
“சுதன்மன் என்று சுசீலன் என்று
சுபுத்தி என்று சொலப்படும்
அதன்மம் நீத்தஅம் மூவருக்கும்
அருள் சுரந்து, உமை பாகனார்
இதம் விளங்க வரங்கள் வேட்ட
விளம்புமின் என, அங்கு அவர்
பதம் வணங்குபு நின் திருப்பணி
வாயில் காப்பருள் என்றனர்.”
எனவரும் காஞ்சிப் புராணச் செய்யுட்காளாலும் அறிக.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய, நீதிசூடாமணி என்கின்ற, "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
“தண்ணார் சடைமுடியைத் தக்கன் இழ்ந்தான், அரனை
எண்ணாமல் அன்றோ? இரங்கேசா! --- மண்ணோர்
இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக, தாம்தம்
மகிழ்ச்சியில் மூந்து உறும் போழ்து.”
இதன் பொருள் ---
இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! தக்கன் - தட்சப் பிரஜாபதி, அரனை எண்ணாமல் அன்றோ - சிவனை இகழ்ந்து மதிக்காமையினால் அல்லவோ, தண் ஆர் சடைமுடியை இழந்தான் - (தனது) குளிர்ச்சி பொருந்திய சடைத் தலையை இழந்தான், (ஆகையால், இது) தாம் தம் மகிழ்ச்சியில் மைந்துறும் போழ்து - ஒருவர் தமது செல்வச் செருக்கில் இறுமாந்து இருக்கும்போது, இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக - அதனாலாகிய மறதியினால் இகழ்ந்து விட்டவர்களை (எப்படியேனும்) நினைக்கக் கடவர் (என்பதை விளக்குகின்றது).
கருத்து --- செல்வச் செருக்கினால் யாரையும் இகழ்ந்து மறந்து விடக் கூடாது.
விளக்கம் --- தக்கன் என்பவன் பரமசிவனுக்கு மாமன். அவன் தன் செல்வச் செருக்கினால் பரமசிவனை இகழ்ந்து மறந்து விட்டு ஓர் யாகம் செய்யத் தொடங்கினான். யாகம் நல்ல காரியம். ஆனாலும் அதைச் செய்தவன் அழுக்காறை மேற்கொண்டு இருந்தமையால், அவனுக்கு அது கெட்ட காரியமாகவே முடிந்தது. பரமசிவனைத் தவிர மற்றைத் தேவர்களுக்கெல்லாம் அவிப்பாகம் தரவேண்டி அவர்களை வரவழைத்திருந்தான். அவர்களும் அவனைப் போலவே எண்ணித் துணியாமல் யாகத்துக்கு வந்திருந்தார்கள். அது தெரிந்த சிவபிராற்குக் கோபம் மூண்டது. கோபமே உருவெடுத்து வந்து போல அகோர வீரபத்திரர் தோன்றினார். அவரை ஏவி யாகத்தை அழிக்கக் கட்டளை இட்டார் சிவபிரான். அவர் அவ்விடத்திற்குப் போய், யாகத்தை அழித்ததும் அன்றித் தக்கன் தலையையும் அறுத்து எறிந்தார். அவரைக் கண்டவுடனே மற்றைத் தேவர்கள் எல்லாம் கை இழந்தவர்களும் - கண் இழந்தவர்களும் - பல் இழந்தவர்களும் - மூக்கு இழந்தவர்களும் - நாக்கு இழந்தவர்களும் ஆகி ஓட்டம் பிடித்தார்கள். ஆகையால், ஒருவன் தன் மகிழ்ச்சியில் மைந்துறும்போது இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளவேண்டும். இல்லாவிட்டால் தக்கனுக்கு வந்த கேடு வரும் என்க.
பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளதை அறியலாம்...
“இக்காலத்து இவ்வுடம்பு செல்லும் வகையினால்
பொச்சாவாப் போற்றித்தாம் நோற்பாரை--மெச்சா(து)
அலந்துதம் வாய்வந்த கூறும் அவரின்
விலங்குகள் நல்ல மிக.” --- அறநெறிச்சாரம்.
இதன் பொருள் ---
இக்காலத்து இவ்வுடம்பு செல்லும் வகையின் - இவ்வுடல் இப்பொழுதே அழியும் தன்மையாயிருத்தலை அறிந்து, பொச்சாவாப் போற்றி நோற்பாரை - மறவாமல் குறித்துக் கொண்டு பாவம் தங்கண் நிகழாவழித் தம்மைப் பாதுகாத்துத் தவம் முயல்கின்றவரை, மெச்சாது - புகழாமல், அலந்து - நொந்து, தம் வாய் வந்த கூறும் அவரின் - தம் வாயில் வந்த சொற்களைச் சொல்லி இகழுகின்றவர்களைக் காட்டிலும், விலங்குகள் மிக நல்ல - மிருகங்கள் மிக நல்லனவாகும்.
No comments:
Post a Comment