திருப்பரங்குன்றம் - 0015. தடக்கை




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தடக்கைப் பங்கயம் (திருப்பரங்குன்றம்)

முருகா!
அடியேனை உனது திருவடிக்குத் தொண்டு செய்ய ஆண்டுகொள்.

தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனந்
     தனத்தத் தந்தனந் ......தனதான

தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல்தண்
     டமிழ்க்குத் தஞ்சமென் ...... றுலகோரைத்

தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந்
     தளர்ச்சிப் பம்பரந் ...... தனையூசற்

கடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடுங்
     கலத்தைப் பஞ்சஇந் ...... த்ரியவாழ்வைக்

கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங்
     கழற்குத் தொண்டுகொண் ...... டருள்வாயே

படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்
     புரக்கக் கஞ்சைமன் ...... பணியாகப்

பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்
     பரத்தைக் கொண்டிடுந் ...... தனிவேலா

குடக்குத் தென்பரம் பொருப்பிற் றங்குமங்
     குலத்திற் கங்கைதன் ...... சிறியோனே

குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
     குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


தடக்கைப் பங்கயம், கொடைக்குக் கொண்டல்,தண்
     தமிழ்க்குத் தஞ்சம் என்று ...... உலகோரைத்

தவித்துச் சென்று இரந்து, உளத்தில் புண்படும்
     தளர்ச்சிப் பம்பரம் ...... தனை, ஊசல்

கடத்தை, துன்பம் அண் சடத்தை, துஞ்சிடும்
     கலத்தை, பஞ்ச இந் ...... த்ரிய வாழ்வை,

கணத்தில் சென்று இடம் திருத்தி, தண்டை அம்
     கழற்குத் தொண்டு கொண்டு ...... அருள்வாயே.

படைக்கப் பங்கயன், துடைக்கச் சங்கரன்,
     புரக்கக் கஞ்சைமன், ...... பணியாகப்

பணித்து, தம் பயம் தணித்து, சந்ததம்
     பரத்தைக் கொண்டிடும் ...... தனிவேலா!

குடக்குத் தென்பரம் பொருப்பில் தங்கும் அம்
     குலத்தில் கங்கை தன் ...... சிறியோனே!

குறப்பொன் கொம்பை முன் புனத்தில், செங்கரம்
     குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே.
  

பதவுரை

      படைக்க பங்கயன் --- படைக்கும் தொழிலைச் செய்ய பிரமதேவனையும்,

     துடைக்க சங்கரன் --- அழித்தல் தொழிலைச் செய்ய உருத்திர மூர்த்தியையும்,

     புரக்க கஞ்சைமன் --- காத்தல் தொழிலைச் செய்ய இலக்குமிதேவிக்கு நாயகனாகிய திருமாலையும்,

     பணித்து --- அந்த ஏவலில் நியமித்து,

     தம் பயம் தணித்து --- அவர்கட்கு அத் தொழிலில் அவ்வப்போது நேர்கின்ற அச்சத்தை அகற்றி,

     சந்ததம் பரத்தைக் கொண்டிடும் --- எப்போதும் தலைமையாக வீற்றிருக்கும்,

     தனி வேலா --- ஒப்பற்ற வேலாயுதக்கடவுளே!

      குடக்கு தென்பரம் பொருப்பில் தங்கும் --- மதுரைக்கு மேல் திசையில் உள்ள இனிய திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கின்றவரே!

      குலத்தில் கங்கை தன் சிறியோனே --- மேன்மை பொருந்திய கங்காதேவியின் இளங்குமாரரே!

      குற பொன் கொம்பை --- குறவர் குடியில் வளர்ந்த பொன் கொம்பு போன்ற அழகிய வள்ளி பிராட்டியை,

     முன் புனத்தில் --- முற்காலத்தில் தினைப்புனத்திலே சந்தித்து,

     செங்கரம் குவித்து கும்பிடும் --- சிவந்த கரமலரைக் கூப்பிக் கும்பிட்ட,

     தம்பிரானே --- தனிப்பெருந்தலைவரே!

      தடக் கை பங்கயம் --- விசாலமான கரம் பத்மநிதிக்குச் சமானமென்றும்,

     கொடைக்கு கொண்டல் --- கைம்மாறு கருதாமல் வழங்குவதில் மேகம் போன்றவர் என்றும்,

     தண் தமிழ்க்கு தஞ்சம் என்று --- குளிர்ந்த தமிழுக்கு நீரே அடைக்கலம் என்றும் புகழ்ந்து கூறி,

     உலகோரை --- உலகில் வாழும் உலோபிகளிடம் போய்,

     தவித்து --- துன்பப்பட்டு,

     சென்று இரந்து உளத்தில் புண்படும் --- அவர்கள் வீடுதோறும் போய் யாசித்து, அவர்கள் ஒன்றேனும் தாராமையால் மனம் புண்ணாகிய,

     தளர்ச்சி பம்பரம் தனை --- ஆடி ஓய்ந்த பம்பரம் போன்றவனும்,

     ஊசல் கடத்தை --- ஊஞ்சலிலே வைத்த குடம் போன்றவனும்,

     துன்பம் அண் சடத்தை --- துன்பம் நெருங்கிய அறியாமையை உடையவனும்,

     துஞ்சிடும் கலத்தை --- உடைந்த பானை போன்றவனும்,

     பஞ்ச இந்த்ரிய வாழ்வை --- மெய் வாய் கண் நாசி செவி என்ற ஐந்து இந்திரியங்களுடன் கூடியவனும் ஆகிய அடியேனை,

     கணத்தில் சென்று இடம் திருத்தி --- ஒரு நொடிப்பொழுதில் என்பால் எழுந்தருளி உள்ளத்தைத் திருத்தி,

     தண்டை அம் கழற்கு தொண்டு கொண்டு அருள்வாயே --- தண்டையணிந்த அழகிய திருவடிக்குத் தொண்டனாக்கித் திருவருள் புரிவீர்.

பொழிப்புரை


         பிரமதேவனை படைக்கும் தொழிலிலும், உருத்திரமூர்த்தியை அழித்தல் தொழிலிலும், திருமாலைக் காத்தல் தொழிலிலும் நியமித்து, அவர்கட்கு அவ்வப்போது சூராதியவுணர்களால் வரும் அச்சத்தையும் அல்லலையும் அகற்றி, எப்போதும் மேலான பொருளாக விளங்கும் ஒப்பற்ற வேலாயுதக் கடவுளே!

         மதுரைமா நகருக்கு மேல் திசையில் உள்ள இனிய திருப்பரங்குன்றத்தில் வீற்றிருப்பவரே!

         மேலான கங்காதேவியின் இளங்குமாரரே!

         தினைப்புனத்தில் முன்னாளில் சென்று குறமாதாகிய அழகிய பொற்கொம்பு போன்ற வள்ளிநாயகியை, சிவந்த கர மலரைக் கூப்பிக் கும்பிட்ட பெருமிதம் உடையவரே!

         உலகில் உள்ள உலோபிகளிடம் போய் உம்முடைய கரம் பதுமநிதிக்கு நிகர் என்றும், நீர் கொடுப்பதில் மேகம் போன்றவர் என்றும், இனிய தமிழ் மொழிக்கு நீரே அடைக்கலம் என்றும் கூறிப் புகழ்ந்து பாடி ஒன்றும் ஊதியம் பெறாது துன்புற்று உள்ளம் புண்ணாகியவனும், ஆடி ஓய்ந்த பம்பரம் போன்றவனும், ஊஞ்சலில் வைத்த மண் குடம் போன்றவனும், ஐந்து இந்திரியங்களுடன் கூடியவனுமாகிய அடியேனை ஒரு நொடியில் திருத்தி, உமது தண்டையணிந்த தாமரைத் திருவடிகளில் தொண்டு செய்யுமாறு ஆட்கொண்டருள்வீர்.


விரிவுரை


தடக்கை பங்கயம் ---

     புலவர்கள் பொருளாசையால் உலோபிகள் இருக்கும் வீடு தோறும் சென்று, பரமலோபியான அத் தனவந்தனைப் பார்த்து பல்லைக் காட்டிக் கையை நீட்டி, “உன் திருக்கரம் பதுமநிதிக்குச் சமமானது” என்பர்.

     பதுமநிதி, சங்கநிதி என்று இரு நிதிகள் உண்டு. அவைகள் பத்மம் போன்ற உருவம் பதித்த பொற்காசுகளையும், சங்கு போன்ற உருவம் பதித்த பொற்காசுகளையும் எடுக்க எடுக்கச் சுரந்து கொண்டே இருக்கும் அரிய பொருள்கள்.

     ஒரு சிறிய செப்புக் காசேனுந் தராத வீணனை, பத்மநிதி என்று கூறித் திரிவார்கள்.

கொடைக்குக் கொண்டல் ---

     உயிர்களிடம் இருந்து யாதொரு பயனையும் எதிர்பாராது காலந்தோறும் பெய்யும் கடப்பாடுடையது மேகம். “இத்தகைய மேகத்திற்கு நிகரான கொடையாளியே” என்பார்கள்.

தமிழ்க்குத் தஞ்சம் ---

     தமிழுக்கு நீயே புகலிடம்; நீ யில்லையானால் தமிழ் வாழாது; அழிந்தே விடும்” என்று வஞ்சகப் புகழ்ச்சியாகப் பாடுவார்கள்.

     அப்படிப் பாடியும் அந்த உலோபியிடம் ஒரு காசேனும் பெறாது, காலும் மனமும் நாவும் புண்ணாகி வறிதே அலைந்து உலைந்து, ஆடிஓய்ந்த பம்பரம் போல் நிலைகுலைவார்கள் புலவர்கள்.

ஊசல் கடத்தை ---

     மண் பானை உடையும் இயல்புடையது.  ஊஞ்சலின் மீது வைத்த பானை விரைவில் வீழ்ந்து உடைந்து விடும். அது போல் அழியும் இயல்புடையது இவ்வுடம்பு.

துன்பம் அண் சடத்தை ---

துன்பம்-அண்-சடம். அண்ணுதல் --- பொருந்துதல். துன்பம் பொருந்திய அறியாமையுடன் கூடியவன்.

துஞ்சிடும் கலம் ---

கலம் --- பானை. உடைந்த மண்ணோடு ஒன்றுக்கும் உதவாதது போல், இவ்வுடம்பும் உயிர்போனால் ஒன்றுக்கும் உதவாது ஒழியும்.

பஞ்ச இந்த்ரிய வாழ்வை ---

     மெய் வாய் கண் மூக்கு காது என்ற ஐந்து இந்திரியங்களுடன் கூடியது இந்த உடம்பு. இந்த ஐவரும் மாறுபட்ட செயல் உள்ளவர்கள். ஒருவர் போன வழியில் ஒருவர் போகாதவர்கள். எப்போதும் ஆன்மாவுக்கு துன்பந் தருகின்றவர்கள். இந்த ஐந்து இந்திரியங்களின் வழிச் சென்று ஆன்மா அல்லற்படுகின்றது. இந்த ஐவரை வென்றவர்களே இன்புறுவார்கள்.

கணத்திற் சென்றிடந்திருத்தித் தண்டையம் கழற்குத் தொண்டு கொண்டருள்வாயே ---

     இவ்வாறு அலைகின்ற அடியேனிடம் ஒரு நொடிப் பொழுதில் வந்து, என்னைத் திருத்தி, உமது சரணாவிந்தங்கட்குத் தொண்டனாக்கி ஆட்கொண்டருள்வீர்.

படைக்கப்பங்கயன் துடைக்கச் சங்கரன் புரக்கக் கஞ்சைமன் பணியாகப் பணித்துத் தம்பயம் தணித்துச் சந்ததம் பரத்தைக் கொண்டிடும் தனிவேலா ---

     ஆக்கல், அளித்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களைப் புரிவோர் அயன் அரி அரன் என்போர். அவர்கள் பரம் பொருளாகிய சிவமூர்த்தியின் அருள் தாங்கிச் செய்பவர்கள். அவர்கட்குச் சுதந்திரம் இல்லை. அவர்கள் பரதந்திரர். சிவமூர்த்தி ஒருவரே சுதந்தரர்.

     ஆணவக் கருவறையில் கட்டுண்டு கிடந்த ஆன்மாக்கட்குப் பக்குவம் விளைவிக்கும் பொருட்டு, முத்தொழிலையும் மூவரைக் கொண்டு இறைவன் புரிந்தருளுகின்றான்.

     சிவபெருமான் இம்மூவரில் ஒருவர் அல்லர். அவர் சதுர்த்தப் பொருள். துரிய சிவம் --- வேதங்கள் அவ்வாறு முழங்குகின்றன.

     பிரமன் சிருட்டித் தொழில் புரிகின்றார். சிவனருளைத் தாங்கிச் செய்கின்றார். சிவபெருமான் அவருடைய சிரத்தைக் கொய்தனர். அச்சிரத்தை இன்னும் அவர் உண்டாக்கிக் கொண்டாரில்லை.

     வங்கியில் பணத்தை வாங்கி வைக்கும் அலுவலர், தன் அவசரச் செலவுக்கு அதில் இருந்து பணம் எடுத்துக் கொள்ள முடியாது.

     காமன் இறைவன் கனற்கண்ணால் எரிந்த போது, இரதி அழுதும், காத்தற் றொழிலைப் புரியும் திருமால் காக்கவில்லை. சிவபரம்பொருளின் கருணை இன்றிக் காக்க இயலாது.

     ஆதலால் மூவர்கள் முத்தொழிலைப் புரிவது சிவாக்ஞையால். அவர்கட்கு அவ்வப்போது வரும் அச்சத்தையும் அல்லல்களையும் போக்கி அவர்கட்கு அருள் புரிபவர் அப் பரமனே யாகும். சிவமே குகன்.

குடக்குத் தென்பரம் பொருப்பு ---

     மாடமலி மறுகிற் கூடல் குடவயின்” என்று நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் கூறுமாறு போல் திருப்பரங்குன்றம் மதுரைக்கு மேற்கே உளது என அறிக.

குறப்பொற் கொம்பை-கரம்குவித்து கும்பிடும் ---

     வள்ளியை முருகன் கும்பிட்டார் என்றது ஆன்மாவுக்கு எளிமையாக வந்து அருள் புரிந்தார் என்பது. எளிவந்த வான் கருணை.

கருத்துரை

         திருப்பரங்குன்றம் மேவிய முருகா! அடியேனைத் தொண்டு கொண்டு ஆண்டருள்.

No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...