கீழைத் திருக் காட்டுப்பள்ளி


கீழைத் திருக்காட்டுப்பள்ளி
(ஆரண்யேசுரர் கோயில்)

     சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.

         சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும், திருவெண்காட்டில் இருந்து இளையமுதுகுளபுரம் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மீ. தொலைவிலும் இத் திருத்தலம் அமைந்துள்ளது.

     சீர்காழி - தரங்கம்பாடி சாலையில் அல்லி விளாகம் என்னுமிடத்தில் திருவெண்காட்டிற்குப் பிரியும் சாலையில் வந்து இலையமுதுகுளபுரம் தாண்டி கீழைத்திருக்காட்டுப்பள்ளியை அடையலாம். ஊரில் சாலையில் இருந்து சற்றுத்தள்ளி வலதுபுறம் உட்புறமாகக் கோயில் உள்ளது.

இறைவர்                    : ஆரணியசுந்தரேசுவரர்.

இறைவியார்               : அகிலாண்டநாயகி.

தல மரம்                   : பன்னீர் மரம்

தீர்த்தம்                    : அமிர்த தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்         : சம்பந்தர் - செய்யருகேபுனல்


         இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் பிரம்மேசர், முனியீசர் என்ற பெயரில் இரு சிவலிங்கங்கள் உள்ளன. அடுத்து, சுப்பிரமணியர், பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. கருவறைச் சுவரில் வெளிப்புறத்தில் ஓரிடத்தில் மன்னன் ஒருவன் சிவலிங்கத்தை வழிபடுவது போன்ற சிற்பமுள்ளது. பிரகார வலம் முடித்து வாயில் நுழைந்தால் மண்டபத்தில் மேற்கு நோக்கிய சுவாமி சந்நிதியும் இடதுபுறம் அம்பாள் சந்நிதியும் ஒரு சேரத் தரிசிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளன. இத்தலத்து இறைவன் ஆரணியசுந்தரேசுவரர் சுயம்பு மூர்த்தியாக சதுரபீட ஆவுடையாரில் அருள்பாலிக்கிறார் . பிரகாரத்தில் "தசலிங்கம்" சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியில் ஏழு லிங்கங்கள் இருக்கிறது. இதில் ஒரே லிங்கத்தில் இரண்டு பாணங்கள் இருப்பது வித்தியாசமான அமைப்பு.

     அம்பாள் அகிலாண்டேஸ்வரி அழகிய சிறிய திருமேனியுடன் தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் இருக்கிறாள். இங்கு சுவாமியே பிரதானம் என்பதால் இத்தலத்தில் நவக்கிரக சந்நிதி இல்லை.

         ததீசி முனிவரின் முதுகுத் தண்டை ஆயுதமாகப் பெற்று இந்திரன் விருத்திராசுரன் என்ற அசுரனை அழித்தான். இந்தப் பழியும் பாவமும் நீங்க தேவேந்திரன் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டதாகப் புராணம் சொல்கிறது.

         சுவாமி திருச்சுற்றில் உள்ள தட்சிணாமூர்த்தி ஆறு சீடர்களுடன் வீற்றிருக்கிறார். பொதுவாக சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நால்வருடன் மட்டும் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் ஆறு பேருடன் காட்சி தருவது விசேஷம். பைரவர், சூரியன், சனீஸ்வரர் ஆகியோரும் பிரகாரத்தில் இருக்கின்றனர். இத்தலத்திலுள்ள விநாயகர் மிகவும் விசேஷமானவர். ஒரு சாபத்தால் நண்டு வடிவம் எடுத்த கந்தர்வன் இவரை வழிபட்டதால், இவர் நண்டு விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த விநாயகரின் பீடத்தில் நண்டு இருப்பது வித்தியாசமான அமைப்பு. பொதுவாக விநாயகருக்கு இருக்க வேண்டிய மூசிக வாகனமும் இங்கு கிடையாது. நண்டு, இவருக்கு வாகனமாக இருப்பதால் மூசிக வாகனம் இல்லை என்கிறார்கள்.

         ஆரண்ய முனிவர் வழிபட்ட தலம் இது. கோஷ்டத்தில் மகாகாளர் சிவ வழிபாட்டிற்காக சங்கு ஊதிக் கொண்டிருக்க, ஆரண்ய முனிவர் சிவனை பூஜை செய்யும் சிற்பம் இருக்கிறது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "தண்காட்டி, கார் காட்டி, தையலார் தம் கண் காட்டி, சோலைகள் சூழ் சீர் காட்டுப்பள்ளிச் சிவக்கொழுந்தே" என்று போற்றி உள்ளார்.

         காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
 

திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 129
வைகும்அந் நாளில் கீழ்பால் மயேந்திரப்பள்ளி, வாசம்
செய்பொழில் குருகாவூரும், திருமுல்லை வாயில் உள்ளிட்டு
எய்திய பதிகள் எல்லாம் இன்புஉற இறைஞ்சி, ஏத்தித்
தையலாள் பாகர் தம்மைப் பாடினார் தமிழ்ச்சொல் மாலை.

         பொழிப்புரை : இவ்வாறு அப்பதியில் வாழ்ந்து வந்த நாள்களில் இப்பதியின் கீழ்த்திசையில் உள்ள திருமயேந்திரப்பள்ளியையும், மணம் கமழ்கின்ற சோலை சூழ்ந்த திருக்குருகாவூரையும், திருமுல்லைவாயில் உள்ளிட்ட முன்பு சென்று வணங்கிய திருப்பதிகள் பலவற்றையும் இன்பம் பொருந்தப் போற்றி, உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட சிவபெருமான் மீது தமிழ்ச் சொல் மாலைகளைப் பாடினார்.

         குறிப்புரை : திருமயேந்திரப்பள்ளியில் அருளிய பதிகம்: `திரைதரு' - பண் : கொல்லி (தி.3 ப.31).

         திருக்குருகாவூரில் அருளிய பதிகம் : `சுண்ணவெண்\' - பண்: அந்தாளிக் குறிஞ்சி (தி.3 ப.124).

         திருமுல்லைவாயில் உள்ளிட்ட பதிகளாவன: திருக்கலிக்காமூர், திருவெண்காடு, கீழைத்திருக்காட்டுப்பள்ளி முதலியனவாகலாம். இவற்றுள் திருமுல்லைவாயிலுக்குப் பாடிய பதிகம் ஒன்றே இருத்தலின், அது முதல்முறை சென்ற பொழுது பாடியது என முன்னர்க் குறிக்கப்பட்டது. இது பொழுது பாடிய பதிகம் கிடைத்திலது.

         திருக்கலிக்காமூரில் அருளிய பதிகம்: `மடல்வரையின்\' - பண்: பழம்பஞ்சுரம் (தி.3 ப.105).

         திருவெண்காட்டில் அருளிய பதிகங்கள்: `உண்டாய் நஞ்சை' - பண்: காந்தாரம் (தி.2 ப.61). `மந்திர மறையவை\' - பண்: காந்தார பஞ்சமம் (தி.3 ப.15).

         கீழைத்திருக்காட்டுப்பள்ளியில் அருளிய பதிகம்: `செய்யருகே' - பண் : நட்டபாடை (தி.1 ப.5).

1.005 கீழைத்திருக்காட்டுப்பள்ளி      பண் –  நட்டபாடை
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
செய்அரு கேபுனல் பாயஓங்கிச்
         செங்கயல் பாயச் சிலமலர்த்தேன்
கைஅரு கேகனி வாழைஈன்று
         கானல்எல் லாங்கமழ் காட்டுப்பள்ளி,
பையரு கேஅழல் வாய ஐவாய்ப்
         பாம்புஅணை யான்,பணைத் தோளிபாகம்
மெய்அரு கேஉடை யானை உள்கி
         விண்டவர் ஏறுவர் மேல்உலகே.

         பொழிப்புரை :வயலின்கண் நீர்பாய, அதனால் களித்த செங்கயல் மீன்கள் துள்ள, அதனால் சில மலர்களிலிருந்து தேன் சிந்துதலானும், கைக்கெட்டும் தூரத்தில் வாழை மரங்கள் கனிகளை ஈன்று முதிர்ந்ததனானும், காடெல்லாம் தேன் மணமும் வாழைப்பழமணமும் கமழும் திருக்காட்டுப்பள்ளியுள், நச்சுப்பையினருகே அழலும் தன்மை உடைய ஐந்து வாயையும் கூரிய நச்சுப் பற்களையும் உடைய ஆதிசேடனை அணையாகக் கொண்ட திருமாலையும் உமையம்மையையும் தனது மெய்யின் இடப்பாகமாகக் கொண்டு (அரியர்த்தர், அர்த்த நாரீசுரர்) விளங்கும் இறைவன் மீது பற்றுக்கொண்டு ஏனைய பற்றுக்களை விட்டவர், வீட்டுலகை அடைவர்.

பாடல் எண் : 2
      * * * *

பாடல் எண் : 3
திரைகள்எல் லாமல ரும்சுமந்து
         செழுமணி முத்தொடு பொன்வரன்றி,
கரைகள்எல் லாம் மணி சேர்ந்து உரிஞ்சி,
         காவிரி கால்பொரு காட்டுப்பள்ளி,
உரைகள் எல்லாம் உணர்வு எய்திநல்ல
         உத்தமராய் உயர்ந் தார் உலகில்
அரவம் எல்லாம் அரை ஆர்த்தசெல்வர்க்கு
         ஆட்செய அல்லல் அறுக்கலாமே.

         பொழிப்புரை :காவிரியின் வாய்க்கால்கள் எல்லா மலர்களையும் சுமந்தும், செழுமையான மணிகள் முத்துக்கள் பொன் ஆகியவற்றை வாரிக் கொண்டும் வந்து இருகரைகளிலும் அழகு பொருந்த உராய்ந்து வளம் சேர்க்கும் திருக்காட்டுப்பள்ளியுள் பாம்புகளை இடையில் கட்டிய செல்வராய் எழுந்தருளியிருக்கும் சிவபிரானுக்கு, வேதம் முதலான மேம்பட்ட உரைகள் யாவற்றையும் உணர்ந்த நல்ல உத்தமராய்த் தொண்டு செய்யின் அல்லல் அறுக்கலாம்.


பாடல் எண் : 4
தோல்உடை யான்,வண்ணப் போர்வையினான்,
         சுண்ண வெண்ணீறு துதைந்துஇலங்கு
நூல்உடை யான்,இமை யோர்பெருமான்,
         நுண்அறி வால்வழி பாடுசெய்யும்
கால் உடை யான்,கரிது ஆயகண்டன்,
         காதலிக் கப்படும் காட்டுப்பள்ளி
மேல்உடை யான், இமை யாதமுக்கண்
         மின்இடை யாளொடும் வேண்டினானே.

         பொழிப்புரை :புலித்தோலை ஆடையாக உடுத்தவன். யானைத்தோலை அழகிய போர்வையாகப் போர்த்தவன். திருவெண்ணீறாகிய சுண்ணத்தில் செறிந்து விளங்கும் பூணூலை மார்பகத்தே உடையவன். தேவர்கட்குத் தலைவன். பதிஞானத்தாலே அன்பர்கள் வழிபாடு செய்யும் திருவடிகளை உடையவன். கரிய கண்டத்தை உடையவன். பலராலும் விரும்பப் பெறும் திருக்காட்டுப்பள்ளியில் இமையாத மூன்றாவது கண்ணை நெற்றியில் உடைய அவ்விறைவன் மின்னல் போன்ற இடையினை உடைய உமையம்மையோடு விரும்பி எழுந்தருளியுள்ளான்.


பாடல் எண் : 5
சலசல சந்துஅகி லோடும் உந்தி,
         சந்தனமே கரை சார்த்திஎங்கும்
பலபல வாய்த்தலை ஆர்த்துமண்டிப்
         பாய்ந்துஇழி காவிரிப் பாங்கரின்வாய்,
கலகல நின்றுஅதி ருங்கழலான்
         காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளிச்
சொலவல தொண்டர்கள் ஏத்தநின்ற
         சூலம்வல் லான்கழல் சொல்லுவோமே.

         பொழிப்புரை :சலசல என்னும் ஒலிக் குறிப்போடு சந்தனம் அகில் முதலியவற்றை அடித்துவந்து, சந்தனத்தைக் கரையில் சேர்த்துப் பற்பல வாய்க்கால்களின் தலைப்பில் ஆரவாரித்து ஓடிப் பாய்ந்து வயல்களில் இழிந்து வளம் சேர்க்கும் காவிரியின் தென்பாங்கரில் சலசல என்னும் ஓசையோடு அதிரும் கழல்களை அணிந்த இறைவனால் விரும்பப்படும் திருக்காட்டுப்பள்ளியை அடைந்து இறைவனது பொருள்சேர் புகழ் பேசும் தொண்டர்களால் துதிக்கப்படும் அச் சூலபாணியின் திருவடிப் பெருமையை நாமும் கூறித் தோத்திரிப்போம்.


பாடல் எண் : 6
தளைஅவிழ் தண்நிற நீலநெய்தல்
         தாமரை செங்கழு நீரும் எல்லாம்,
களை அவி ழும்குழ லார்கடியக்
         காதலிக் கப்படும் காட்டுப்பள்ளி,
துளைபயி லும் குழல் யாழ்முரலத்
         துன்னிய இன்னிசை யால் துதைந்த
அளைபயில் பாம்புஅரை ஆர்த்தசெல்வர்க்கு
         ஆட்செய அல்லல் அறுக்கலாமே.

         பொழிப்புரை :கட்டவிழ்ந்த குளிர்ந்த நிறத்துடன் கூடிய நீலோற்பலம், நெய்தல், தாமரை, செங்கழுநீர் ஆகிய எல்லா மலர்களையும், அவிழ்ந்து விழும் கூந்தலை உடைய உழத்தியர் களைகளாய்ப் பிடுங்கி எறியும் வளம் உடையதும், பலராலும் விரும்பப்படுவதும் ஆகிய திருக்காட்டுப்பள்ளியில் துளைகளால் ஓசை பயிலப்பெறும் புல்லாங்குழல் யாழ் ஆகியன இடைவிடாமல் ஒலிக்கும் இன்னிசை முழக்கோடு வளையினின்றும் பிரியாத பாம்புகளை இடையிற் கட்டி எழுந்தருளிய செல்வராகிய பெருமானுக்கு ஆளாய்த் தொண்டு செய்யின் அல்லல் அறுக்கலாம்.


பாடல் எண் : 7
முடிகையி னால் தொடு மோட்டு உழவர்
         முன்கைத் தருக்கைக் கரும்பின்கட்டி
கடிகையி னால்எறி காட்டுப்பள்ளி,
         காதல்செய் தான்கரிது ஆயகண்டன்,
பொடிஅணி மேனியி னானைஉள்கி,
         போதொடு நீர்சுமந்து ஏத்தி,முன்நின்று
அடிகையி னால்தொழ வல்லதொண்டர்
         அருவினை யைத்துரந்து ஆட்செய்வாரே.

         பொழிப்புரை :நாற்று முடியைக் கையால் பறிக்கும் வலிய உழவர்கள் தங்கள் முன்கைத் தினவை வெல்லக் கட்டியை உடைப்பதால் போக்கிக் கொள்கின்ற திருக்காட்டுப்பள்ளியை விரும்பி உறைபவனும், கரிதான கண்டமுடையவனும், திருநீறணிந்த மேனியனும் ஆகிய பெருமானை நினைந்து அபிடேக நீர், மலர்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்று துதித்து முன்நின்று அவன் திருவடிகளைக் கையால் தொழவல்ல தொண்டர்கள் நீக்குதற்கு அரிய வினைகளினின்றும் நீங்கி அவ்விறைவனுக்கு ஆட்செய்வர்.


பாடல் எண் : 8
பிறைஉடை யான்,பெரி யோர்கள்பெம்மான்,
         பெய்கழல் நாள்தொறும் பேணிஏத்த
மறையுடை யான்,மழு வாள்உடையான்,
         வார்தரு மால்கடல் நஞ்சமுண்ட
கறையுடை யான்,கனல் ஆடுகண்ணால்
         காமனைக் காய்ந்தவன், காட்டுப்பள்ளிக்
குறைஉடை யான்,குறள் பூதச்செல்வன்,
         குரைகழலே கைகள் கூப்பினோமே.

         பொழிப்புரை :தலையில் பிறையை அணிந்தவனும், பெரியோர்கள் தலைவனும், வேதங்களை அருளியவனும், மழுவாகிய வாளை உடையவனும், நீண்ட கரிய கடலிடையே தோன்றிய நஞ்சினை உண்ட கறைக் கண்டனும், கனல் சேர்ந்த நுதல்விழியால் காமனைக் காய்ந்தவனும், அன்பர்களின் குறைகளைக் கேட்டறிபவனும், குறட்பூதச் செல்வனுமாகிய, திருக்காட்டுப்பள்ளியில் உள்ள இறைவன் திருவடிகளை நாள்தோறும் விரும்பி ஏத்தி அத்திருவடிகளையே கை கூப்பினோம்.


பாடல் எண் : 9
செற்றவர் தம்அர ணம் அவற்றைச்
         செவ்வழல் வாய்எரி ஊட்டிநின்றும்,
கற்றவர் தாம்தொழுது ஏத்தநின்றான்,
         காதலிக் கப்படும் காட்டுப்பள்ளி,
உற்றவர் தாம் உணர்வு எய்திநல்ல
         உம்பர்உள் ளார்தொழுது ஏத்தநின்ற
பெற்றுஅம ரும்பெரு மானைஅல்லால்
         பேசுவதும் மற்றொர் பேச்சுஇலோமே.

         பொழிப்புரை :தேவர்க்குப் பகைவராய திரிபுரத்து அசுரர்தம் அரணங்களைச் செவ்வழலால் எரியூட்டி அழித்துப் பெருவீரத்தோடு கற்றவர்கள் தொழுதேத்த மேம்பட்டு, விளங்கும் இறைவனால் காதலிக்கப்படும் திருக்காட்டுப்பள்ளியை அடைந்து, மெய்யுணர்வு பெற்ற தேவர்கள் பலரும் தொழுது ஏத்தும், விடை மீது ஏறி அமரும் அப்பெருமான் புகழல்லால் மற்றோர் பேச்சைப் பேசுவதிலோம்.


பாடல் எண் : 10
ஒண்துவர் ஆர்துகில் ஆடைமெய்போர்த்து,
         உச்சிகொளாமை உண்டே உரைக்கும்,
குண்டர்க ளோடுஅரைக் கூறையில்லார்,
         கூறுவதாம் குணம் அல்லகண்டீர்,
அண்டம றையவன் மாலுங்காணா
         ஆதியி னான்உறை காட்டுப்பள்ளி
வண்டுஅம ரும்மலர்க் கொன்றைமாலை
         வார்சடை யான்கழல் வாழ்த்துவோமே.

         பொழிப்புரை :நிறம் பொருந்திய காவியாடையை மேனியில் போர்த்து, உச்சி வேளையில் வயிறு கொள்ளாத அளவில் தின்று பொய் கூறும் உடல்பருத்த புத்தர், இடையில் உடையில்லாத திகம்பர சமணர் கூறுவன நற்பயனைத்தாராதன என்பதை அறிந்து கொள்ளுங்கள். உலகைப் படைத்த வேதாசாரியனான பிரமனும், மாலுங் காணாத முதல்வன் உறையும் திருக்காட்டுப்பள்ளிக்குச் சென்று வண்டு அமரும் மலர்க் கொன்றை புனைந்த வார்சடையோன் கழல்களை ஏத்தி வாழ்த்துவோம்.


பாடல் எண் : 11
பொன்இயல் தாமரை நீலநெய்தல்
         போதுக ளால்பொலிவு எய்துபொய்கைக்
கன்னியர் தாம்குடை காட்டுப்பள்ளிக்
         காதல னைக்கடல் காழியர்கோன்
துன்னிய இன்னிசை யால் துதைந்து
         சொல்லிய ஞானசம் பந்தனல்ல
தன்இசை யால்சொன்ன மாலைபத்தும்
         தாங்கவல் லார்புகழ் தாங்குவாரே.

         பொழிப்புரை :திருமகள் வாழும் தாமரை, நீலம், நெய்தல் ஆகிய மலர்களால் பகலும் இரவும் பொலிவெய்தும் பொய்கைகளில் கன்னிப்பெண்கள் குடைந்தாடும் திருக்காட்டுப்பள்ளியை விரும்பும் இறைவனைக் கடல் சூழ்ந்த காழி மாநகர்த்தலைவனாகிய ஞானசம்பந்தன் பொருந்திய இன்னிசைகூட்டிச் சொன்னதும், தானே தன்னிச்சையால் பாடியவும் ஆகிய இத்திருப்பதிகப் பாடல் மாலை பத்தையும் மனத்திடைத் தரிக்க வல்லவர் புகழ் எய்துவர்.

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...