அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சொரியும் முகிலை
(திருத்தணிகை)
திருத்தணிகை வேலா!
கீழ்மக்களைப் பாடி வாடாமல்,
உன்னையே பாடி உய்ய அருள்
தனன
தனனத் தனன தனனத்
தனன தனனத் ...... தனதான
சொரியு
முகிலைப் பதும நிதியைச்
சுரபி தருவைச் ...... சமமாகச்
சொலியு
மனமெட் டனையு நெகிழ்விற்
சுமட ரருகுற் ...... றியல்வாணர்
தெரியு
மருமைப் பழைய மொழியைத்
திருடி நெருடிக் ...... கவிபாடித்
திரியு
மருள்விட் டுனது குவளைச்
சிகரி பகரப் ...... பெறுவேனோ
கரிய
புருவச் சிலையும் வளையக்
கடையில் விடமெத் ...... தியநீலக்
கடிய
கணைபட் டுருவ வெருவிக்
கலைகள் பலபட் ...... டனகானிற்
குரிய
குமரிக் கபய மெனநெக்
குபய சரணத் ...... தினில்வீழா
உழையின்
மகளைத் தழுவ மயலுற்
றுருகு முருகப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
சொரியும்
முகிலை, பதும நிதியை,
சுரபி தருவை, ...... சமமாகச்
சொலியும்
மனம் எள் தனையும் நெகிழ்வுஇல்
சுமடர் அருகு உற்று ...... இயல்வாணர்
தெரியும்
அருமைப் பழைய மொழியைத்
திருடி, நெருடிக் ...... கவிபாடித்
திரியும்
மருள்விட்டு, உனது குவளைச்
சிகரி பகரப் ...... பெறுவேனோ?
கரிய
புருவச் சிலையும் வளைய,
கடையில் விடம் எத் ...... தியநீலக்
கடிய
கணைபட்டு உருவ வெருவி,
கலைகள் பல பட் ...... டன, கானிற்கு
உரிய
குமரிக்கு அபயம் என நெக்கு,
உபய சரணத் ...... தினில் வீழா,
உழையின்
மகளைத் தழுவ மயல்உற்று
உருகும் முருகப் ...... பெருமாளே.
பதவுரை
கரிய புருவ சிலையும் வளைய --- கரிய
புருவமாகிய வில் வளைய,
கடையில் விடம் எத்திய நீல = மன்மதனுடைய கடைசி
பாணமாகிய நஞ்சு நிறைந்த நீலோற்பலம் ஆகிய,
கடிய கணை பட்டு உருவ வெருவி --- கொடுமையான கணை
தாக்கி உருவ அதனால் அச்சத்தை அடைந்து,
கலைகள் பல பட்டன --- மான்கள் பல வாழ்கின்ற,
கானிற்கு உரிய குமரிக்கு --- கானகத்துக்கு
உரிய வள்ளிநாயகிக்கு,
அபயம் என --- அபயம் என்று உரைத்து,
நெக்கு --- மனம் நெகிழ்ந்து,
உபய சரணத்தினில் வீழா --- வள்ளிநாயகியின் இரு
சரணங்களில் வீழ்ந்து,
உழையின் மகளை --- மான்மகளாகிய வள்ளியை,
தழுவ மயல் உற்று --- தழுவும் பொருட்டு
மோகங்கொண்டு,
உருகு முருக --- உருகுகின்ற முருகக்கடவுளே!
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
சொரியு முகிலை --- மழை சொரிகின்ற
மேகத்தையும்,
பதும நிதியை --- பதும நிதியையும்,
சுரபி --- காமதேனுவையும்,
தருவை --- கற்பகத் தருவையும்,
சமமாகச் சொலியும் --- ஒப்பாகக் கூறியும்,
மனம் எள் தனையும் நெகிழ்வு இல் --- மனமானது
எள்ளளவு கூட இளகி இரங்குதல் இல்லாத,
சுமடர் அருகு உற்று --- கீழ்மக்களின் அருகில்
சென்று,
இயல்வாணர் --- இயற்றமிழில் வல்ல புலவர்கள்,
தெரியும் அருமை --- தெரிந்து பாடிய அருமையான,
பழைய மொழியை --- பழமையான பாடல்களில் உள்ள
சொற்களை,
திருடி நெருடி கவிபாடி --- திருடியும் சிறிது
திரித்தும் கவிகளைப்பாடி,
திரியும் மருள் விட்டு --- திரிகின்ற
மயக்கத்தை விட்டு,
உனது குவளை சிகரி பகர பெறுவேனோ --- உமது
குவளை மலர்கின்ற மலையாகிய திருத்தணிகையைப் புகழ்ந்து பாடும் பெரும் பேற்றினை
அடியேன் பெறமாட்டேனோ?
பொழிப்புரை
கருமையான புருவமாகிய வில் வளையவும், மன்மதனுடைய கடைசி பாணமாகிய நஞ்சு
மிகுந்த நீலோற்பலமாகிய, கொடிய கணைபட்டுத்
தொளைபட, அதனால் அஞ்சி, மான்கள் பல வாழும் கானகத்துக்கு உரிய
வள்ளிபிராட்டிக்கு அபயம் என்று கூறி உள்ளம் நெகிழ்ந்து, இரண்டு பாதங்களில் வீழ்ந்து மான் மகளைத்
தழுவுவதற்கு மோகங்கொண்டு உருகி நின்ற முருகப் பெருமானே!
பெருமிதம் உடையவரே!
மழை சொரிகின்ற மேகத்தையும், பதுமநிதியையும் காமதேநுவையும், கற்பகத் தருவையும், நிகராகக் கூறியும் மனம் எள்ளளவும்
இளகுதல் இல்லாத கீழ் மக்களிடம் போய் இயல் கற்ற தமிழ்ப் புலவர்கள் ஆராய்ந்து
அருமையாக முன்னோர்கள் பாடிய பழைய பாடல்களில் உள்ள பழமையான இனிய சொற்களைத்
திருடியும், ஒரு சிறிது
மாற்றியும் கவிகள் பாடித் திரிகின்ற மயக்கத்தை விடுத்து, தேவரீர் வாழ்கின்ற குவளை மலர் மலர்கின்ற
திருத்தணி மலையைப் பாடும் பேற்றினை அடியேன் பெறுவேனோ?
விரிவுரை
தமிழ் கற்ற புலவர்கள், அருமையான தமிழால், தமிழ்த் தெய்வமாகிய தணிகேசனைப் பாடாமல், காமதேநுவின் பாலைக் கமரில் கொட்டியது
போல், ஈயாத உலோபிகளிடம்
போய், இனிய கனியமுதம் போன்ற
தமிழ்க் கவிகளைப் பாடி உழல்கின்ற பரிதாபத்தைக் கண்டு வருந்தி, அருணகிரிநாத சுவாமிகள் இத்திருப்புகழைப்
பாடுகின்றார்.
சொரியு
முகிலை
---
கைமாறு
கருதாது உலகுக்கு அமுதம் போன்ற மழையைப் பொழிகின்றது மேகம். மேகத்துக்கு
உலகிலுள்ளோர் என்ன கைம்மாறு செய்ய முடியும்?
நாம்
நன்றி நவில முடியுமா? நமது நன்றியுரையை
மேகம் எதிர்பார்க்கின்றதா?
துப்பார்க்குத்
துப்பு ஆய துப்பு ஆக்கி, துப்பார்க்குத்
துப்பு ஆய
தூஉ மழை. --- திருக்குறள்.
ஞாலந்
தோன்றிய நாள்தொட்டு காலந்தோறும் மழை பொழிந்து சராசரங்கட்கெல்லாம் உதவுகின்ற
மேகத்துக்கு நிகரானவனே! என்று கூறிப் புகழ்ந்து பாடுவார்கள்.
பதும
நிதியை
---
சங்கநிதி
பதுமநிதி என்பன இரு நிதிகள். சங்க வடிவிலும், தாமரை, வடிவிலும் அவைகள் இருக்கும். அவை தம்
உருவம் போன்ற பொற்காசுகளை எடுக்குந் தோறும் வழங்கிக் கொண்டேயிருக்கும்.
“சங்கநிதி பதுமநிதி
இரண்டும் தந்து
தரணியொடு வான்ஆளத் தருவரேனும்,
மங்குவார், அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்,
மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லர் ஆகில்” --- அப்பர்
இந்த
இரு நிதிகளையும் சிவபெருமான் குபேரனுக்கு வழங்கியருளினார்.
சுரபி ---
சுரபி-காமதேநு; இது பாற்டலில் அமுதத்துடன் பிறந்தது.
வசிட்டாதி முனிவர்க்கு உதவுவது. இத்தகைய புனிதமான “காமதேனுவே” என்று கூறிப்
பாடுவார்கள்.
தருவை ---
தரு-கற்பகத்
தரு. இதுவும் அமுதத்துடன் பாற் கடலில் தோன்றியது. எட்டுக் கிளைகளையுடையது. இதில்
படருங்கொடி காமவல்லி. நினைத்ததைத் தரும் நீர்மையுடையது.
சமமாகச்
சொலியும் மனம் எள் தனையும் நெகிழ்வு இல் ---
மேகம், பதுமபதி, கற்பகம், காமதேனு முதலியவைக்கு நிகரானவன் என்று
மிகமிகப் புகழ்ந்து கூறியும் ஒரு எள்ளளவேனும் உள்ளம் உருகாது, கிள்ளியுங் கொடுக்காது மூடர்கள்
புலவர்களை விரட்டுவார்கள்.
தெரியும்
அருமைப் பழைய மொழியைத் திருடி நெருடிக் கவிபாடி:-
பழங்காலத்தில்
முன்னோர்கள் பாடிய அருமையான தமிழ்ப் பாடல்களில் உள்ள சில இனிய சொற்களைத் திருடி
தமது பாடல்களில் சொருகிக் கொள்வார்கள் சில புலவர்கள். அதனைத்தான் சுவாமிகள் இங்கு
கண்டிருக்கின்றார்.
“திருடி ஒருபடி நெருடி
அறிவிலர்
செவியில் நுழைவன கவிபாடித்
திரியும்
அவர் சிலர் புலவர் மொழிவது
சிறிதும் உணர்வகை யறியேனே”---
(கருட) திருப்புகழ்.
குவளைச்
சிகரி பகரப் பெறுவேனோ ---
குவளைச்
சிகிரி-திருத்தணிகை மலை. குவளைப்பூ தினந்தோறும் மலர்வதனால் இப்பெயர் பெற்றது.
இம்மலையிலும்
மேம்பட்ட மலை யாண்டும் இல்லை. இதன் பெருமையைத் தணிகைக் கலம்பகம் கூறுகின்றது.
தணிகைஎன்று
ஒருகால் ஓதில் சாலோக பதவி எய்தும்,
தணிகைஎன்று
இருகால்ஓதில் சாமீப பதவி எய்தும்,
தணிகைஎன்று
உரைக்கில் முக்கால் சாரூபம்நண்ணும்,செவ்வேல்
தணிகைஎன்று
உரைக்கின் நாற்கால் சாயுச்யம் அடைவர்தாமே.
கரிய
புருவச் சிலையும் வளைய ---
புருவம்
வில்லைப் போல் வளைந்திருப்பது. அது காமமிக்குடையார்க்குச் சிறிது சிறுத்துத் தோன்றும்.
கடையில்
விடம் எத்திய நீல கடிய கணை ---
மன்மதனுக்கு
ஐந்து கணைகள். தாமரை, மா, அசோகு, முல்லை, நீலோற்பலம். இவை முறையே உன்மத்தம், மதனம், சம்போகம், சந்தாபம், வசீகரணம் எனவும் பெயர் பெறும். இவற்றின்
அவத்தைகள், சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோகம், மரணம்
உபய
சரணத்தினில் வீழா ---
முருகவேள்
வள்ளிபதம் பணிந்தான் என்று வருவன எல்லாம் அப்பரமபதியின் அருளாடலேயாகும்.
உலைப்படு
மெழுகதென்ன உருகியே ஒருத்தி காதல்
வலைப்படு
கின்றான்போல் வருந்தியே இரங்கா நின்றான்,
கலைப்படு
மதியப் புத்தேள் கலங்கலம் புனலில் தோன்றி
அலைப்படு
தன்மைத் தன்றோ அறுமுகன் ஆடல் எல்லாம். --- கந்தபுராணம்
கருத்துரை
வள்ளி
மணவாளா! உமது திருத்தணி மலையைப் பாட அரு செய்.