பொறுத்தவரே பூமி ஆள்வார்.




17. பொறுத்தவரே அரசாள்வார்

கறுத்தவிடம் உண்டுஅருளும் தண்டலையார்
     வளநாட்டில் கடிய தீயோர்
குறித்துமனை யாள்அரையில் துகில் உரிந்தும்
     ஐவர்மனம் கோபித் தாரோ!
பறித்து உரிய பொருள்முழுதும் கவர்ந்தாலும்
     அடித்தாலும் பழிசெய் தாலும்
பொறுத்தவரே அரசு ஆள்வார்! பொங்கினவர்
     காடு ஆளப் போவார் தாமே.

               இதன் பொருள் ---

     கறுத்த விடம் உண்டு அருளும் தண்டலையார்
வளநாட்டில் --- கரிய விடத்தினை உண்டு, உலகில் உள்ளோர் யாவருக்கும் அருளிய திருத்தண்டலை நீள்நெறி இறைவர் எழுந்தருளி உள்ள வளம் மிக்க நாட்டிலே,

     மனையாள் அரையில் துகில் கடிய தீயோர் குறித்து உரிந்தும் --- தங்களுடைய மனைவியான திரௌபதையின் இடையில் இருந்த ஆடையை மிகவும் கொடியரான கவுரவர்   அவிழ்த்து அவமானப் படுத்திய காலத்திலும்,

     ஐவர் மனம் கோபித்தாரோ --- பாண்டவர்கள் உள்ளத்திலே கோபம் கொண்டனரோ?

     உரிய பொருள் முழுதும் பறித்துக் கவர்ந்தாலும் அடித்தாலும் பழி செய்தாலும் --- தமக்கு உரிமையான எல்லாப் பொருளையும் வலிதில் கொண்டாலும், அடித்தாலும், இழிவு செய்தாலும்,

     பொறுத்தவரே அரசு ஆள்வர் --- பொறுத்துக் கொண்டவரே உலக்னைப் பின்னர் ஆள்வர்,

     பொங்கினவர் காடு ஆளப் போவர் --- மனம் பொறாமல் சினத்தோடு பொங்கினவர் காட்டை ஆளப் போவர்.

          விளக்கம் --- ‘பொறுத்தவர் பூமி ஆள்வார்; பொங்கினவர் காடு ஆள்வார்' என்பது பழமொழி.

நேர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால் மற்று அது
தாரித்து இருத்தல் தகுதி, மற்று --- ஓரும்
புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்,
சமழ்மையாக் கொண்டு விடும்.               ---  நாலடியார்.

     கீழோர் தகாத வார்த்தைகளால் தம்மைத் திட்டினாலும், அதைத் தாங்கிக் கொள்வதே பெரியோருக்கு அழகு ஆகும். அப்படி இல்லாமல், அவர்களும் கீழோர் மீது இழிசொல் வீசினால், கடலால் சூழப்பட்ட இந்த உலகம், அத்தகைய பெரியோர் புகழைப் போற்றாமல், அவர்களையும் இழிந்த கீழோராகவே கருதி விடும்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல, தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

திறன் அல்ல தன் பிறர் செய்யினும், நோ நொந்து,
அறன் அல்ல செய்யாமை நன்று.

என்பது முதலாக வரும் "பொறையுடைமை" அதிகாரத் திருக்குறள் கருத்துக்களை இங்கு வைத்து எண்ணிக் கொள்ளுக.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...