திருப் பள்ளியின் முக்கூடல்





திருப் பள்ளியின்முக்கூடல்
(திருப்பள்ளிமுக்கூடல், குருவிராமேஸ்வரம்)

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

     மக்கள் வழக்கில், திருப்பள்ளிமுக்கூடல் என்றும், குருவிராமேச்வரம் என்றும் வழங்கப்படுகின்றது.

         திருவாரூரிலிருந்து 'கேக்கரை ' ரோடில் (ராமகே ரோடு) வந்து, கேக்கரையை அடைந்துது, அங்கிருந்து அதே சாலையில் 1 கி. மீ. சென்றால் வரும் சிறிய பாலத்தை கடந்து செல்லும் போது அங்கு இரண்டாகப் பிரியும் பாதையில் இடப்பக்கமாகச் செல்லும் பாதையில் ஒரு கி. மீ. சென்றால் ஊரை அடையலாம்.


இறைவர்                  : முக்கோணநாதர், திரிநேத்ர சுவாமிமுக்கூடல்நாதர்.

இறைவியார்              : அஞ்சனாட்சி, மைம்மேவு கண்ணி.

தீர்த்தம்                    : முக்கூடல் தீர்த்தம். (இத்தீர்த்தம் திரிவேணி சங்கமத்திற்கு                                                              ஒப்பாகச் சொல்லப்படுகிறது.)

தேவாரப் பாடல்கள்         : அப்பர் - ஆராத இன்னமுதை.

          பழைய சிவத்தல மஞ்சரி நூலில் இத்தலத்தின் பெயர் 'அரியான் பள்ளி ' என்று குறிக்கப்பட்டுள்ளது. (அரிக்கரியான் பள்ளி என்றும், அரியான்பள்ளி என்றும் அக்கால மக்கள் வழங்கி வந்தனராதலின் அரியான்பள்ளி என்று அந்நூலில் குறித்தனர்.) ஆனால் இன்று அப்பெயர் மாறி, 'திருப்பள்ளிமுக்கூடல் ' என்றே வழங்குகிறது.

          இத்தல வரலாறு ஜடாயுவுடன் தொடர்புடையதாதலால் இத்தலத்தை இங்குள்ள மக்கள் "குரவிராமேஸ்வரம்" என்றும் கூறுகின்றனர்.

          இறைவன் பெயர், சமஸ்கிருதப் பெயரை நோக்கத் தமிழில் 'முக்கண்நாதர் ' என்றிருக்க வேண்டும். ஆனால் பேச்சு வழக்கில் சிதைவுற்று - தொடர்பே இல்லாமல் 'முக்கோணநாதர் ' என்று வழங்குகிறது.

          ஜடாயு இறைவனை நோக்கித் தவம் செய்து, "தனக்கு இறுதி எப்போது" என்று கேட்க; இறைவன் அவரைப் பார்த்து, "இராவணன் சீதையை கவர்ந்து வரும் வேளையில் நீ தடுப்பாய், அப்போது அவன் உன் சிறகுகளை வெட்ட நீ வீழ்ந்து இறப்பாய்" என்றாராம். அது கேட்ட ஜடாயு, "பெருமானே! அப்படியானால் நான் காசி, கங்கை, இராமேஸ்வரம், சேது முதலிய தீர்த்தங்களில் மூழ்கித் தீர்த்தப் பலனை அடைய முடியாமற் போகுமே என் செய்வேன்" என்று வேண்ட, இறைவன் முக்கூடல் தீர்த்தத்தை உண்டாக்கி அதில் மூழ்குமாறு பணிக்க அவரும் அவ்வாறே மூழ்கிப் பலனைப் பெற்றாராம். இவ்வரலாற்றை ஒட்டித் தான் மக்கள் பேச்சு வழக்கில் இப்பகுதியை 'குருவிராமேஸ்வரம் ' என்று கூறுகின்றனர். இதனால் இத்தீர்த்தமும் திரிவேணி சங்கமத்திற்கு நிகராகவும்; இதில் மூழ்குவோர்க்குப் பதினாறு மடங்கு (கங்கை, சேது) தீர்த்த விசேஷப் பலனைத் தருவதால் இத்தீர்த்தம் "ஷோடசசேது" என்றும் சொல்லப்படுகிறது.


          கோயிலின் முகப்பில் மேற்புறத்தில் இறைவன், இராமர், ஜடாயு, விநாயகர், சுப்பிரமணியர் சுதை உருவங்கள் அழகுற உள்ளன.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "பூவின் இடை, இக் கூடல் மைந்தினிக் கூடல் என்று பள்ளி முக்கூடல் மேவி அமர் முன்னவனே" என்று போற்றி உள்ளார்.


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 230
திருப்புகலூர் அமர்ந்துஅருளும் சிவபெருமான்
         சேவடிகள் கும்பிட்டு ஏத்தும்
விருப்பு உடைய உள்ளத்து, மேவிஎழும்
         காதல்புரி வேட்கை கூர,
ஒருப்படுவார், திருவாரூர் ஒருவாறு
         தொழுது, அகன்று, அங்கு உள்ளம் வைத்துப்
பொருப்பு அரையன் மடப்பாவை இடப்பாகர்
         பதி பிறவும் பணிந்து போந்தார்.

         பொழிப்புரை : திருப்புகலூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் திருவடிகளைப் போற்றுதற்குரிய விருப்பம் வரப்பெற்ற திருவுள்ளத்தில் பொருந்தி எழுகின்ற காதல் மிக, அங்ஙனமே செல்வதற்கு எண்ணியவராய்த், திருவாரூரை ஒருவாறாகத் தொழுது, நீங்கித், தம் கருத்தைத் திருவாரூரில் வைத்து, மலையரசன் பாவையாரான உமையம்மையாரை ஒரு கூற்றில் வைத்த பெருமான் எழுந்தருளியிருக்கும் இடைப்பட்ட பிற பதிகளையும் வணங்கிச் சென்றார்.

         திருவாரூரில் தம் கருத்தை வைத்தமைக்கு அடையாளமாகப் பாடப்பெற்ற திருப்பதிகம்: `கைம்மான` (தி.6 ப.24) எனத் தொடங்கும் திருத்தாண்டகம் ஆகும்.

பிறபதிகளாவன: திருப்பள்ளியின் முக்கூடல், திருவிற்குடி, திருப்பனையூர் முதலாயினவாகலாம்.

இவற்றுள் முன்னுள்ள பதியொன்றற்கே திருப்பதிகம் உள்ளது. திருப்பள்ளியின் முக்கூடல் : `ஆராத` (தி. 6 ப.69) - திருத்தாண்டகம்.


                           6. 069     திருப்பள்ளியின் முக்கூடல்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
ஆராத இன்அமுதை, அம்மான் தன்னை,
         அயனொடுமால் அறியாத ஆதியானை,
தார்ஆரும் மலர்க்கொன்றைச் சடையான் தன்னை,
         சங்கரனை, தன்ஒப்பார் இல்லா தானை,
நீரானை, காற்றானை, தீயா னானை,
         நீள்விசும்பாய், ஆழ்கடல்கள் எழுஞ் சூழ்ந்த
பாரானை, பள்ளியின்முக் கூட லானைப்
         பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

         பொழிப்புரை :தெவிட்டாத இனிய அமுதமாய்த் தலைவனாய், பிரமனும் திருமாலும் அறியாத முதலவனாய், கொன்றை மாலை அணிந்த சடையனாய், நன்மை தருபவனாய், ஒப்பற்றவனாய், நீராய், தீயாய், காற்றாய், நீண்ட வானமாய், ஆழ்ந்த கடல்கள் ஏழும் சூழ்ந்த நிலனாய்ப் பரந்து இருக்கும் பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது.


பாடல் எண் : 2
விடையானை, விண்ணவர்கள் எண்ணத் தானை,
         வேதியனை, வெண்திங்கள் சூடும் சென்னிச்
சடையானை, சாமம்போல் கண்டத் தானை,
         தத்துவனை, தன்ஒப்பார் இல்லா தானை,
அடையாதார் மும்மதிலும் தீயில் மூழ்க
         அடுகணைகோத்து எய்தானை, அயில்கொள் சூலப்
படையானை, பள்ளியின்முக் கூட லானைப்
         பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

         பொழிப்புரை :காளை வாகனனாய் , தேவர்களால் தியானிக்கப் படுபவனாய் , வேதம் ஓதுபவனாய் , வெண்பிறை சூடிய சடையனாய் , நீலகண்டனாய் , மெய்ப் பொருளாய் , ஒப்பற்றவனாய் , பகைவருடைய மும்மதிலும் தீயில் மூழ்க அழிக்கும் அம்பினைக் கோத்து எய்தவனாய் , கூரிய சூலப் படையை உடையவனாய் , உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல் , பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது .


பாடல் எண் : 3
பூதியனை, பொன்வரையே போல்வான் தன்னை,
         புரிசடைமேல் புனல்கரந்த புனிதன் தன்னை,
வேதியனை, வெண்காடு மேயான் தன்னை,
         வெள்ஏற்றின் மேலானை, விண்ணோர்க்கு எல்லாம்
ஆதியனை, ஆதிரைநல் நாளான் தன்னை,
         அம்மானை, மைம்மேவு கண்ணி யாள்ஓர்
பாதியனை, பள்ளியின் முக்கூட லானைப்
         பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

         பொழிப்புரை :நீறு அணிந்தவனாய் , பொன்மலை போல்வானாய் , முறுக்கேறிய சடையின் கங்கையை மறைத்த தூயோனாய் , வேதியனாய் , வெண்காட்டில் உறைவானாய் , வெண்மையான காளை வாகனனாய் , தேவர்களுக்கு எல்லாம் முற்பட்டவனாய் , திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரிமை பூண்டவனாய் , தலைவனாய் , மை தீட்டிய கண்களை உடைய பார்வதிபாகனாய் , உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல் , பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது .


பாடல் எண் : 4
போர்த்தானை ஆனையின் தோல், புரங்கள் மூன்றும்
         பொடியாக எய்தானை, புனிதன் தன்னை,
வார்த்தாங்கு வனமுலையாள் பாகன் தன்னை,
         மறிகடலுள் நஞ்சுஉண்டு வானோர் அச்சம்
தீர்த்தானை, தென்திசைக்கே காமன் செல்லச்
         சிறிதுஅளவில் அவன்உடலம் பொடியா ஆங்கே
பார்த்தானை, பள்ளியின்முக் கூட லானைப்
         பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

         பொழிப்புரை :யானையின் தோலைப் போர்த்தவனாய் , முப்புரங்களும் சாம்பலாகுமாறு அம்பு எய்தவனாய் , தூயனாய் , கச்சணிந்த முலையை உடைய பார்வதிபாகனாய் , அலைகள் கரையை அடைந்து மீண்டுவரும் கடலுள் தோன்றிய விடத்தை உண்டு, தேவர்களின் அச்சத்தைப் போக்கியவனாய் , மன்மதன் யமனுலகத்தை அடையுமாறு சிறிது நேரத்தில் அவன் உடலம் சாம்பலாகுமாறு தீத் தோன்ற விழித்தவனாய், உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது .


பாடல் எண் : 5
அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள்
         அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணம்
கடிந்தானை, கார்முகில்போல் கண்டத் தானை,
         கடுஞ்சினத்தோன் தன்உடலை நேமி யாலே
தடிந்தானை, தன்ஒப் பார்இல்லா தானை,
         தத்துவனை, உத்தமனை, நினைவார் நெஞ்சில்
படிந்தானை, பள்ளியின்முக் கூட லானைப்
         பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

         பொழிப்புரை :தன்னைச் சரணாக அடைந்த அடியவர்பால் பாவங்கள், துன்பங்கள், நோய்கள், பழைய தீவினைகள், வறுமை என்பன அணுகாதவாறு அவற்றைப் போக்கியவனாய், கார்முகில் போன்ற நீலகண்டனாய், மிக்க வெகுளியை உடைய சலந்தரனுடைய உடலைச் சக்கரத்தாலே அழித்தவனாய், ஒப்பற்றவனாய், மெய்ப்பொருளாய், உத்தமனாய், தன்னைத் தியானிக்கும் அடியவர் நெஞ்சில் ஊன்றி யிருப்பவனாய், உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது .

  
பாடல் எண் : 6
கரந்தானைச் செஞ்சடைமேல் கங்கை வெள்ளம்,
         கனல்ஆடு திருமேனிக் கமலத் தோன்தன்
சிரந்தாங்கு கையானை, தேவ தேவை,
         திகழ்ஒளியை, தன்அடியே சிந்தை செய்வார்
வருந்தாமைக் காப்பானை, மண்ணாய் விண்ணாய்
         மறிகடலாய் மால்விசும்பாய் மற்றும் ஆகிப்
பரந்தானை, பள்ளியின்முக் கூட லானைப்
         பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

         பொழிப்புரை :சிவந்த சடையின் மீது கங்கை வெள்ளத்தை மறைத்தவனாய், தீப்போன்ற சிவந்த தன் திருமேனிக்கண் பிரமனுடைய மண்டையோட்டினைச் சுமக்கும் கையை உடையவனாய், தேவர்களுக்குத் தலைமைத் தேவனாய், விளங்குகின்ற ஞானப்பிரகாசனாய், தன் திருவடிகளைத் தியானிப்பவர் வருந்தாத வகையில் அவரைக் காப்பவனாய், ஐம்பூதங்களாகி எங்கும் பரவியுள்ளவனாய், உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத் தக்கது .


பாடல் எண் : 7
நதிஆருஞ் சடையானை, நல்லூ ரானை,
         நள்ளாற்றின் மேயானை, நல்லத் தானை,
மதுஆரும் பொழில்புடைசூழ் வாய்மூ ரானை,
         மறைக்காடு மேயானை, ஆக்கூ ரானை,
நிதியாளன் தோழனை, நீடூ ரானை,
         நெய்த்தான மேயானை, ஆரூர் என்னும்
பதியானை, பள்ளியின்முக் கூட லானைப்
         பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

         பொழிப்புரை :கங்கை தங்கிய சடையினனாய் , குபேரனுக்குத் தோழனாய் , நல்லூர் , நள்ளாறு , நல்லம் , தேன் ஒழுகும் பொழில்களால் சூழப்பட்ட வாய்மூர் , மறைக்காடு , ஆக்கூர் , நீடூர் , நெய்த்தானம் , ஆரூர் என்னும் திருத்தலங்களில் உறைபவன் ஆகிய பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல் , பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது .


பாடல் எண் : 8
நல்தவனை, நான்மறைகள் ஆயி னானை,
         நல்லானை, நணுகாதார் புரங்கள் மூன்றும்
செற்றவனை, செஞ்சடைமேல் திங்கள் சூடுந்
         திருவாரூர்த் திருமூலட் டானம் மேய
கொற்றவனை, கூர்அரவம் பூண்டான் தன்னை,
         குறைந்துஅடைந்து தன்திறமே கொண்டார்க்கு என்றும்
பற்றுஅவனை, பள்ளியின்முக் கூட லானைப்
         பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

         பொழிப்புரை :பெருந்தவத்தை உடையவனாய் , நான்கு வேத வடிவினனாய் , பெரியவனாய் , பகைவர் மதில்கள் மூன்றையும் அழித்தவனாய் , சிவந்த சடையின் மீது பிறையைச் சூடித் திருவாரூர்த் திருமூலட்டானத்தில் விரும்பி உறையும் வெற்றியனாய் , கொடிய பாம்புகளைப் பூண்டவனாய் , தம் தேவையைக் கருதித் தன் தன்மையையே கடவுள் தன்மையாகத் துணிந்த அடியவர்களுக்கு என்றும் பற்றுக்கோடாக இருப்பவனாய் , உள்ள பள்ளியின் முக்கூட லில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல் , பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது .


பாடல் எண் : 9
ஊன்அவனை, உடல்அவனை, உயிர்ஆ னானை,
         உலகேழும் ஆனானை, உம்பர் கோவை,
வானவனை, மதிசூடும் வளவி யானை,
         மலைமகள்முன் வராகத்தின் பின்பே சென்ற
கானவனை, கயிலாய மலைஉ ளானை,
         கலந்துஉருகி நைவார்தம் நெஞ்சின் உள்ளே
பானவனை, பள்ளியின்முக் கூட லானைப்
         பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

         பொழிப்புரை :ஊனாய், உடலாய், உயிராய், ஏழுலகமுமாய், தேவர்கள் தலைவனாய், பரமபதமாகிய வீட்டுலகில் இருப்பவனாய், பிறைசூடியாய், வளவி என்ற தலத்தில் உறைபவனாய், பார்வதி காணப் பன்றியின்பின் போன வேடனாய், கயிலாய மலையில் உள்ளவனாய் , ஒன்றுபட்டு இளகி உருகும் அடியவருடைய நெஞ்சில், அப்பொழுது கறந்த பால் போல் இனியவனாய், பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது.


பாடல் எண் : 10
தடுத்தானைத் தான்முனிந்து, தன்தோள் கொட்டி,
         தடவரையை இருபதுதோள் தலையி னாலும்
எடுத்தானைத் தாள்விரலால் மாள ஊன்றி,
         எழுநரம்பின் இசைபாடல் இனிது கேட்டுக்
கொடுத்தானைப் பேரோடும் கூர்வாள் தன்னை,
         குரைகழலால் கூற்றுவனை மாள அன்று
படுத்தானை, பள்ளியின்முக் கூட லானைப்
         பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

         பொழிப்புரை :தன்னைத் தடுத்த தேர்ப்பாகனை வெகுண்டு , தன் தோள்களைக் கொட்டிக் கயிலை மலையைப் பத்துத் தலைகளாலும் இருபது தோள்களாலும் பெயர்த்த தசக்கிரிவனைத் தன் கால் விரலால் நசுங்குமாறு அழுத்தி , அவன் நரம்பு ஒலியோடு இசைத்த பாடலை மகிழ்வோடு கேட்டு, இராவணன் என்ற பெயரையும் , கூரிய வாளையும் கொடுத்தவனாய் , கழல் ஒலிக்கும் திருவடியால் கூற்றுவன் மாளுமாறு ஒரு காலத்தில் உதைத்தவனாய் , உள்ள பள்ளியில் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது.

                                             திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...