சமயப் பொதுமை

 


சமயப் பொதுமை

-----

மனிதன் உலகத்தில் வாழும்போது இன்பத்தை வேண்டுகிறான். துன்பத்தை வேண்டுவது இல்லை. ஆனால் எல்லோரும் இன்பம் அடைகிறார்களா என்றால், அதுதான் இல்லை. சின்னஞ்சிறு குழந்தையின் கண்ணுக்கு கண்ணாடித் துண்டு அழகாகத் தெரிகிறது. அதைக் கையில் எடுத்து விளையாடுகிறது. கையிலே கீறிக் கொண்டு இரத்தம் வந்து கத்துகிறது. முதலில் எடுக்கும்போது அதனால் துன்பம் உண்டாகும் என்று குழந்தைக்குத் தெரியாது. முன் அனுபவமும் அறிவும் இல்லாமையினால் உடைந்த கண்ணாடியை எடுத்துக் கீறிக்கொண்டு துன்பம் அடைகிறது. துன்பம் அடையவேண்டும் என்பது அதன் நோக்கம் இல்லை. துன்பம் அடையும் வகையில் அதன் அறியாமை அதனைச் செலுத்துகிறது. அதுபோலவே மனிதன் துன்பத்தை அடைய வேண்டுமென்று விரும்புவது இல்லை. அவன் எப்போதும் இன்பமே வேண்டுமென்று விரும்புகிறான். ஆனால் அது எங்கே கிடைக்குமென்று அறியாமையினால் துன்புறுகின்றான். இன்பம் கிடைக்குமென்று எதை எதையோ நினைந்து எண்ணி ஏமாந்து, தான் நினைத்தபடி முடியாமல் துன்பம் உண்டாவதைக் காண்கிறான். 

சில பண்டங்கள் நாவுக்கு இன்பமாக இருக்கின்றன. ஆனால், உடம்புக்குக் கேடு விளைக்கும். ஐந்து இந்திரியங்களால் உண்டாகின்ற இன்பம் எல்லாம் அப்போதைக்கு இன்பம் என்று தோன்றினாலும் அவற்றால் விளைகின்ற துன்பம் மிகப் பெரிது. மனிதன் இந்திரியங்களால் உண்டாகின்ற இன்பத்தை உண்மை இன்பம் என்று கருதி ஏமாந்து போகிறான். அப்போதைக்கு இன்பமாகத் தோன்றுவனவற்றைச் சிற்றின்பம் என்று சொல்வார்கள். ஐந்து பொறிகளின் வாயிலாகக் கிடைக்கின்ற எல்லா இன்பங்களுமே சிற்றின்பந்தான். சிற்றின்பம் என்ற பெயர் இருந்தாலும் அதனை இன்பம் என்று சொல்வதற்கு இல்லை. 

இனிப்பு என்று ஒன்றைச் சொன்னால், மற்றவை கசக்குமோ என்ற எண்ணம் தோன்றும். அதுபோலவே, சிற்றின்பம் என்ற பெயரே, பேரின்பம் என்று மற்றொன்று இருப்பதை உணர்த்தும். விளையாடிக் கொண்டு இருப்பவன் சிறிய பையன்  என்றால், பெரிய பையன் ஒருவன் இருக்கிறான் என்று தெரிகிறது. அதுபோல, சிற்றின்பம் என்ற தொடர் பேரின்பம் என்ற ஒன்று இருக்கிறதை உணர்த்துகிறது. அறிவினாலும் ஆற்றலினாலும் சிறியவர்களாக இருக்கும் நாம் சிற்றின்பத்தை நாடிச் செல்கிறோம். பெரியவர்கள் பேரின்பத்தை நாடுகிறார்கள். நாம் செய்கிற முயற்சிகள் யாவுமே சிறிய முயற்சிகளே. நெடுங்காலம் செலவிட்டும் பெரிய முயற்சிகளைச் செய்தும் இந்த இன்பத்தை அடைகிறோம்.  இது எப்படிச் சிறிய இன்பம் ஆகும்? என்று தோன்றும். நெடுநாளைக்கு இந்த இன்பம் நில்லாமல், பின்னாலே துன்பம் தரும் வகையில் அமைந்திருப்பதனால் இது சிற்றின்பம் ஆகிறது. இந்த இன்பம் பொய்யான இன்பம்; போலி இன்பம். மெய்யான இன்பம் என்பது மாறாமல், குறையாமல், நிறைவாக இருக்கிற பேரின்பமே. உண்மையில் அதுதான் உண்மையில் இன்பம் ஆகும்.

அந்த இன்பத்தை அடைவது எப்படி என்பதுதான் பெரிய கேள்வி. பேரின்பம் என்ற ஒன்று இருக்கிறது என்று யாரேனும் சொல்வதைக் காதாலே கேட்கிறோம். மனம் நம்புவது இல்லை. நமக்கு உறுதிப்பாடு இல்லாவமையால் ஐயம் பிறக்கிறது. "இறைவன் இருக்கிறான். அவன் திருவருள் செய்வான். அந்தத் திருவருளால் நிலையான இன்பத்தைப் பெறலாம்"  என்று ஒருவர் அல்ல, இருவர் அல்ல, ஆயிரக்கணக்கான பேர்கள் பலகாலமாகச் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். நாம் நேரிலும் கேட்கிறோம். இப்படிச் சொன்ன பெரியவர்கள் சாதி,  சமயம், மொழி, நாடு என்ற வரையறைகளைக் கடந்தவர்கள். இப்படிப்பட்டவர்கள் இன்னும் தோன்றுவார்கள். பலகாலமாகப் பல பெருமக்கள் பேரின்பத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தாலும் நமக்கு நம்பிக்கை உண்டாவது இல்லை. பிறர் மதிக்கவேண்டுமே என்று கருதி பேச்சளவில் நாம் நம்புவதாகக் காட்டுகிறோம். பேரின்பம் என்று ஒன்று இருக்குமா? அது  நமக்குக் கிடைக்குமா?" என்ற ஐய அலை ஓய்ந்தபாடு இல்லை. இதற்கு முதற்காரணம், மாயை என்றும் திரோதம் என்றும் மறைப்பாற்றல் என்றும் சொல்வார்கள்.

நாம் விரும்புகின்ற சிற்றின்றபத்தை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறோம். பல சமயங்களில் அது கைகூடுவது இல்லை. ஒருவேளை கைகூடினாலும், நாம் கருதியது போல இல்லை. அதனால் ஏமாற்றம் அடைகிறோம். இந்த ஏமாற்றத்தால், பேரின்பம் என்ற ஒன்று நமது முயற்சியினால் கைகூடும் என்பது ஐயமே என்ற எண்ணம் உண்டாகிறது. படித்தவர்களில் சிலர் பேரின்பம் என்பது வெறும் கற்பனையே என்று எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். பேரின்பத்தைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் பிறருக்கு விரிவாக மேடைகளில் முழங்குகின்ற பலரின் வாழ்க்கை, சொல்வது ஒன்று,  செய்வது ஒன்றாக அமைந்து இருக்கிறது. ஏட்டுச்சுரைக்காய் போலப் பிறருக்கு உபதேசம் செய்யும் வகையில் அவர்கள் பெரியவர்கள் எழுதிய நூலை எடுத்துச் சொல்கிறார்கள். ஆனால், அவர்களுடைய உள்ளத்தில் அவற்றில் சிறிதும் நம்பிக்கை இருப்பதில்லை. மெத்தப் படித்தவர்களே நம்பிக்கை கொள்ளாமல் இருப்பார்களானால், அவர்களை அப்படி ஆக்கும் மாயாசத்திக்கு எவ்வளவு ஆற்றல் இருக்க வேண்டுமென்பதை எண்ணிப் பார்க்கலாம். 

தம்முடைய முயற்சியினாலே பேரின்பத்தைப் பெற்றதாகச் சொல்லாமல், "இறைவன் திருவருளால் பெற்றேன்" என்று சொன்ன பெருமக்களே பலர். நம்மைப் போல வாழும் காலத்தில் அவர்கள் கண்டு அறியாத தனி இன்பத்தை, இறைவன் திருவருளைப் பெற்ற பிறகு அடைகிறார்கள். அப்போது அவர்களுக்கு உண்டாகும் வியப்பு அளவிட முடியாது. "கண்டறியாதன கண்டேன்"  என்றும், "'தேடிக் கண்டுகொண்டேன்" என்றும் பெருமகிழ்ச்சியோடு அப்பர் பெருமான் கூறுகிறார். "ஆர் பெறுவார் அச்சோவே" என்கிறார் மணிவாசகப் பெருமான். இறைவனுடைய திருவருளைப் பெற்ற பெருமக்கள் பலரும் தாம் பெற்ற அனுபவத்தை விம்மிதத்தோடு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சொல்லி இருக்கிறார்கள். இப்படி வெவ்வேறு வகையில் சொல்வதனால் அது உண்மையா என்ற ஐயமும் நமக்கு உண்டாகி விடுகிறது. 

எல்லோரும் ஒன்றே சொன்னால் அது நிச்சயம் என்று தெளிந்து கொள்ளலாம். அவர்கள் வெவ்வேறு வகையில் இறைவனுடைய திருவருளைப் பெற்றாலும், அவர்கள் பெற்ற இன்ப உணர்ச்சி பொதுவான ஒன்றே. விரத நாள் என்பதற்காகப் பலரும் இனிப்பான பண்டத்தைச் செய்திருக்கிறார்கள். ஒரு வீட்டில் செய்த பண்டம் மற்றொருவர் வீட்டில் இல்லை. வெவ்வேறு உருவத்தில் இனிப்புப் பண்டத்தை உண்டாலும், அறிகின்ற சுவை இனிப்பு என்ற ஒன்றுதான். அதுபோலவே, இறைவனுடைய திருவருளைப் பெறும் வழி வெவ்வேறாக இருந்தாலும், இறைவனைச் சந்தித்த முறை வெவ்வேறாக இருந்தாலும், அவர்கள் திருவருளை உணர்ந்து பெற்ற இன்பம் ஒன்றுதான். அவரவர்களுடைய உபாசனை முறைக்கும், குருவின் உபதேச வகைக்கும், சாதனத்தின் தன்மைக்கும் ஏற்ப அவர்களுக்கு அனுபவம் வருகிறது. எத்தகைய உணவை உண்டாலும் பசி தீருகிற அனுபவம் ஒன்று. அதுபோலவே எந்த வகையில் வழிபட்டாலும் இறைவன் திருவருளால் பெறுகின்ற இன்பம் ஒன்றுதான். இத்தகைய இன்பத்தைத்தான் பேரின்பம் என்று பொதுவாக எல்லோரும் சொன்னார்கள். குறித்தார்கள். 

ஆணும் பெண்ணும் பல உருவமாகப் பலவகை வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொருத்தியை மனைவியாகப் பெற்று வாழ்ந்தாலும், எல்லோரும் பெறுகின்ற சிற்றின்பம் பொதுவகையில் ஒன்றுதான். உருவமும் அழகும் வெவ்வேறு விதமாக இருந்தாலும், ஆண் பெண் உறவில் உண்டாகின்ற இன்பத்தில் வேறுபாடு இல்லை. அதுபோலத்தான், வெவ்வேறு உருவத்தில் கடவுளை வழிபட்டு, வெவ்வேறு மந்திரங்களை உருவேற்றி, வெவ்வேறு இடத்தில் உபாசனை செய்து, வெவ்வேறு காலத்தில் இன்பத்தை அடைந்தாலும் எல்லா இன்பமும் ஒன்றே. 

எந்த வழியானாலும் முன்னாலே ஒருவர் சென்று பயன் பெற்ற வழியாக இருக்க வேண்டும். நாலுபேர் போன வழியில் போகவேண்டும் என்பது வழக்குச் சொல்லாக உள்ளது. இதைத்தான் மரபு என்றும், சமயம் என்றும், மார்க்கம் என்றும் பெரியவர்கள் வெவ்வேறு பெயராலே சொல்கிறார்கள். எந்த வழியில் சென்றாலும் இறைவனுடைய திருவருளைப் பெறலாம். இந்த வழியில் சென்றால் திருவருளைப் பெறலாம் என்பது ஒரு சமயம். இன்னொரு சமயம் இன்னொரு வழியைக் காட்டும். சமய பேதங்கள் இருந்தாலும், அவற்றால் அடைகின்ற இன்பம் ஒன்றுதான்.

இந்தப் பொதுமையை உணர்ந்து கொள்ளமால், சமயங்களுக்கிடையில் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொண்டு பிணங்குவது பேதைமை ஆகும். மறைப்பு ஆற்றல் அல்லது திரோதானம், முள்ளை முள்ளால் அகற்றுவது போல, அறியாமையை உண்டாக்கி, அறிவை விளக்குகிறது. உலகிலே மக்கள் ஒருவரை ஒருவர் இன்னார் இனியார் என்று தெளிவாக அறியாது மயங்குகின்றார்கள். உடன் பிறந்தவன்தான் அருச்சுனன் என்பதை அறியாத கர்ணன் அவனைப் பகைவன் என்று கருதிப் பகைத்தான். இதம் சொன்ன வீடணனை, இராவணன் வெறுத்தான். கெடுமதி கூறிய மகோதரனை மதித்தான். ஒரு மதத்தினர் கூறும் திறத்தினை மற்றொரு மதத்தினர் தெளிவாக அறியாது, அவர்களுடன் தர்க்கமிட்டுக் கலகம் புரிகின்றார்கள். பசுக்கள் பல நிறமாயினும் பால் ஒரு நிறம்தானே? நதிகள் வளைந்து வளைந்து பல்வேறு வழிகளில் சென்றாலும் முடிவில் கூடுகின்ற இடம் கடல்தானே?

அதுபோல் சமயங்கள் முடிகின்ற இடம் ஒன்றுதான், ஆகவே சமயவாதம் புரிதல் கூடாது. இறையருளை நாடி ஒன்றுபட வேண்டும். சமயவாதம் புரிவோர் நரகிலே ஒற்றுமைப்பட்டு வாழ்வார்கள் என்பதை, "காதிமோதி வாதாடு நூல் கற்றிடுவோரும்..... மாறு இலாத மாகாலன் ஊர் புக்கு அலைவாரே" என்றார் அருணகிரிதாப் பெருமான். 

கடவுள் உணர்ச்சி ஒன்றுதான் இந்த மனப் பக்குவத்தைத் தரும். கடவுள் உணர்ச்சி இல்லாதவர் எதனையும் செய்யத் தலைப்படுவர். புண்ணிய பாவங்களையும் உண்டு என்று உடன்படாது, நினைத்தவற்றை எல்லாம் பேசி, நினைத்தவற்றை எல்லாம் செய்து நரகக் குழியில் சென்று வீழ்வர். ஆகவே, கடவுள் அன்பு மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்பதனைக் கடைப்பிடிக்க. மனிதவாழ்க்கைக்கு மூச்சுக் காற்று எத்துணை அவசியமோ, அத்துணை அவசியம் கடவுளன்பு.

எங்கும் நிறைந்த பரம்பொருள் நமது உள்ளத்தில் உறைகின்றார் என்று மறவாது நினைப்பவர், மனத்தினாலும் பிற உயிர்க்குத் தீமை செய்யமாட்டார். கடவுள் எல்லாவற்றையும் அறிகின்றார் இருக்கின்றார் என்று எண்ணுவோமானால், உண்மைக்கு மாறாக எதையும் சொல்ல முடியாது.  ஆகவே,  இறைவனை ஒரு கணமேனும் மறவாது சிந்தை செய்து உய்வு பெறவேண்டும். கடவுள் உணர்ச்சி மனிதனைத் தூய்மையாக்குகின்றது. வாய்மை நெறியில் வளப்படுத்துகின்றது. ஆகவே, அறிவு நூல்களைக் கற்கவேண்டும். அவ்வறிவு நூல்களைக் கற்றாரே கற்றார் ஆவார். அல்லாதார் கற்றார் எனினும் கல்லாதாரே ஆவார். "கற்றவர் விழுங்கும் கற்பகக் கனி" என்றும், "கற்றவர்கள் உண்ணும் கனி" என்றும் "கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ" என்றும் வரும் அமுத வசனங்களால் அறிக.

கற்றதன் பயன் வாலறிவன் நற்றாள் தொழுதலே என்று திருவள்ளுவ நாயனார் வகுத்து உரைத்த வாய்மையாலும் அறிக.

"கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்

நள்ளார் தொழாஅர் எனின்". --- திருக்குறள்.

"கற்பவை கற்க" என்று திருவள்ளுவர் கூறியபடியால், கற்கத் தக்க நூல்களையே கற்கவேண்டும். கற்கத்தக்க நூல்கள் எவை அவை ஞானநூல்களாகும். "அறிவுநூல் க(ல்)லா மூடர்" என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான் ஒரு திருப்புகழில்.

தமிழ் நூல்களில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று தோத்திர நூல்கள். மற்றொன்று சாத்திர நூல்கள். தோத்திரங்கள் பன்னிரு திருமுறைகள். சாத்திரங்கள் பதினான்கு சித்தாந்த சைவ நூல்கள். அருணகிரிநாதர், தாயுமானார் முதலிய அருளாளர்கள் அருளிய நூல்கள் அவைகளின் வழி வந்தவைகள். எனவே, இத்தகைய முத்திநெறிக்கு உரிய சத்திய நூல்களையே கற்றல்வேண்டும், கற்றவண்ணம் நிற்றல் வேண்டும்.

கற்பது என்பது உள்ளத்தில் உள்ள கசடு அறுவதற்காகவே. "கற்க கசடு அற" என்றார் திருவள்ளுவ நாயனார். ஓதுவது என்பதை நன்னெறியில் நிற்பதற்காக. "ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது" என்றார் திருஞானசம்பந்தர். ஒதுவது என்பது உணர்தலில் முடிய வேண்டும். "ஓதியும் உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும்" என்றார் திருவள்ளுவ நாயனார். "உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான். எனவே, அருள்நூல்களையும், சாத்திரங்களையும், கசடு அறக் கற்று, ஓதி உணர்ந்து தெளிவு பெறுதல் வேண்டும். 

"எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு

மக்கட் பிறப்பில் பிறிது இல்லை; - அப்பிறப்பில்

கற்றலும், கற்றவை கேட்டலும், கேட்டதன்கண்

நிற்றலும் கூடப் பெறின்." --- அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

மக்கள் பிறப்பில் படிப்பதற்கு உரியவற்றைப் படித்தலும், படித்தவற்றைப் பெரியோரிடம் கேட்டுத் தெளிவடைதலும், அவ்வாறு கற்றும் கேட்டும் தெளிந்த வழியிலே நிற்றலும் பொருந்தப் பெற்றால், வேறு எந்த வகைப் பிறப்பாக இருந்தாலும், மனிதனாகப் பிறப்பதைப் போல ஒருவனுக்கு இன்பம் தரக்கூடியது வேறு ஒன்றும் இல்லை. அதுவே, மனிதப் பிறப்பு எடுத்ததன் சிறந்த பயன் ஆகும்.

     காரணம், அப்போதுதான், மனதில் தீய எண்ணங்கள் தோன்றாதிருக்கும்.

"கற்றதுவும் கற்று, ஒருபால் நிற்பக் கடைப்பிடியும்,

மற்று ஒருபால் போக மறித்திட்டுத்-தெற்றென

நெஞ்சத்துள் தீமை எழுதருமேல், இன்னாதே

கஞ்சத்துள் கல்பட்டால் போன்று. "             --- அறநெறிச்சாரம்.

     படிக்க வேண்டிய நூல்களைப் படித்து, அதனால் பெற்ற அறிவு ஒழுக்கம் ஆகியவற்றோடு பொருந்த வேண்டும். அவ்வாறு பொருந்தாமல் ஒரு பெறம் நிற்கவும், எடுத்த செயலை முடிக்கும் துணிவும், படித்த நூல்களின் கருத்தில் இருந்து மாறுபட்டு, மற்றொருபுறம் செல்லவும், நல்லொழுக்கத்தில் நடப்பதை விடுத்து, மனத்திலைவிரைந்து கெட்ட எண்ணம் உண்டாகுமானால், அது, தின்னும் உணவில் கலந்து இருக்கும் கல்லைப் போல, மிக்க துன்பத்தைத் தருவதாகும்.

"கற்றும் என்பலன்? கற்றிடு நூன்முறை

சொற்ற சொற்கள் சுகாரம்ப மோ?நெறி

நிற்றல் வேண்டும், நிருவிகற பச்சுகம்

பெற்ற பேர்பெற்ற பேசாப் பெருமையே." ---  தாயுமானார்.

கற்க வேண்டிய நூல்களைக் கற்று, கற்ற நெறியில் நில்லாமல், வெறும் இலக்கண இலக்கியங்களாகிய கருவி நூல்களை மட்டும் கற்று, அதனால் வந்த பொது அறிவினால், நம்மினும் உயர்ந்தவர் எவர் என்று செருக்குக் கொண்டு, பல புலவர் நிமிர்ந்து நிற்பர். அவர்கள் உள்ளத்தில் குழைவு இராது. சிந்தையில் தணிவும், செய்கையில் பணிவும் இரா. இத்தகையோர் ஒருவரையொருவர் காணும்போது தாம்தாம் கற்ற வித்தைகளைக் கொட்டிக் கலகமிடுவர்.

பிறவித் துன்பத்தை நினைந்து உள்ளம் குழைந்து உருகி, "ஈசனே! எண்ணில்லாத பிறவி எடுத்து எடுத்து இளைத்து விட்டேனே! இனி இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ? யாது வருமோ? இனி எளியேனைப் பிறவா வண்ணம் ஏன்றுகொள்" என்று உள்ளத்தால் உரைத்து, வெள்ளம்போல் விழிநீர் பெருக நின்று, நெய்யிலே இட்ட அப்பத்தில் தண்ணீர்ப் பசை அற்றவுடன், அந்த அப்பம் அமைதி உறுவதுபோல் சாந்தியுடன் நிற்பர்.

இத்தகைய பெருந்தன்மையும் நன்மையும் அறியாத பலர், மரப் பெட்டியில் உள்ள நூல்களை மாமிசப் பெட்டியில் ஏற்றி, அகந்தை கொண்டு, மனிதப் பண்பு ஒரு சிறிதும் இன்று, ஒருவரை ஒருவர் எதிர்த்து அதிர்ந்து பேசி, பற்கள் உதிர்ந்து, கண்கள் பிதிர்ந்து, பேதுறுவர்.  இம்மையிலே இகழும் மறுமையிலே நரகமும் அடைவர்.

சமயப் பொதுமை உணர்வு இல்லாதவர்கள் எப்போதும் தாம் கற்றதை வைத்துக் கொண்டு குரைத்துக் கொண்டு திரிவார்கள் என்கிறார் திருமூல நாயனார்.

"ஒன்றதே பேரூர், வழி ஆறு அதற்கு உள,

என்றது போலும் இருமுச் சமயமும்,

நன்று இது தீது இது என்று உரை ஆதர்கள்

குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே."      ---  திருமந்திரம்.

சென்று அடைதற்கு உரிய பெரிய ஊர் ஒன்றே. அதனை அடையும் வழிகள் ஆறு உள்ளன என்றது போன்று, கடவுள் உண்மையைக் கூறும் ஆறு சமயங்களும்,கடவுள் என்னும் ஒரு பொருளையே அடைவதற்குச் சாதனமாக உள்ளன. நான் சொல்லும் இந்த வழியே நல்லது, பிறர் கூறும் வழிகள் எல்லாம் தீயனவே என்று (உண்மை அறிவு விளங்காமல், தாம் உணர்ந்த்ததையே சொல்லிப்)  பிணங்குகின்ற சமயவாதிகள் எல்லாம்,மலையைப் பார்த்துக் குரைக்கின்ற நாயை ஒத்தவர் ஆவர் என்று சமயவாதிகளைப் பார்த்துச் சாடுகின்றார்.

     எல்லாச் சமயங்களும், மக்கள் அறிவு நலம் பெற்று வாழ்வதன் பொருட்டே அருளாளர்களால் வகுத்து உரைக்கப்பட்டன.  அவற்றிடையே அமைந்த ஒருமை உணர்வினைக் காண முயலாது, அவற்றின் வெளித் தோற்றத்தை மட்டும் கண்டு மருண்டு வாதித்துப் பிணங்குவோர், மலையைக் கண்டு மருண்டு குரைத்துக் கொண்டு கடிக்க ஒடும் நாயினைப் போன்று, பிறர் கூறும் மொழியின் பொருளை உள்ளவாறு உணரும் தெளிவின்றித் தம் சொற்களைப் பயனில்லாதவைகளாகச் செய்கின்றார்களே என்றும் இரங்கி வருந்தி, "குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே" என்றார் திருமூலர். ஞானமே திருமேனியாகவுடைய இறைவன் சமயங்கள் தோறும் அருளிச் செய்த ஆகமங்களில் கூறப்பட்ட மெய்யுணர்வு பற்றிய முடிவுகள் எல்லா ஆகமங்களிலும் ஒத்துச் சென்று முழுமுதற் பொருள் ஒன்றையே நோக்கிச் செல்வன என்பதை விளக்க, "ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்கு உள" என்றார்.

     சமய நெறியில் நம்பிக்கை இல்லாதவர்கள் அப்படியே இருக்கவேண்டும். சமயப் பற்றாளர்களைப் பார்த்து எப்போதும் குரைத்துக் கொண்டு இருத்தல் கூடாது. இல்லை என்பது ஒருவருடைய கொள்கைச் சுதந்தரம் என்றால், உண்டு என்பதும் ஒருவருடைய கொள்கைச் சுதந்தரம். அதைப் பரிகசிப்பது தன்னைத் தானே ஒருவன் தாழ்த்திக் கொள்வது போல ஆகும். சபயப் பற்றாளர்களும் தாம் சார்ந்து உள்ள சமயத்தின் உண்மையை முழுமையாக உணரவேண்டும். மேலெழுந்த வாரியாகப் படித்துவிட்டோ, பிறர் சொல்லுவதைக் கேட்டோ. சமயங்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்தல் கூடாது. எல்லாச் சமய உண்மைகளையும் தெரிந்திருக்க வேண்டும். ஒழுங்காகக் கற்பதும் இல்லை, கேட்பதும் இல்லை. அவரவர் அறிவு நிலைக்கு ஏற்ப சமய உண்மைகளை உரைப்பார்கள்; கற்பித்துக் கொள்ளுவார்கள். என் தாய் உயர்ந்தவள் என்றால், இன்னொரு அம்மையார் தாழ்ந்தவர் என்று கொள்வது எவ்வளவு மடமைக்கு உரியதோ, அதுபோலத் தான் சமய நிலைகளும். இவர்களை மலையைப் பார்த்துக் குலைக்கின்ற நாய்கள் என்றார் திருமூல நாயனார்.. மலையின் உண்மை இயல்பை நாய் அறியாது தானே. நாயின் இயல்பு என்ன? குரைத்தல் தான். பேதையின் இயல்பு என்ன? தான் சொன்னதையே சாதிப்பது தான். மேலான இந்த உண்மையைத் தெளிந்து அடங்க வேண்டும். இதை,

"சமயவாதிகள் தத்தம் மதங்களே

அமைவதாக அரற்றி மலைந்தனர்."

என்கிறார் மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில். சமயவாதிகள் எல்லாம் தம் தம் மதங்களே ஏற்புடையதாகும் எனச் சொல்லி ஆரவாரித்துப் பூசலிட்டார்கள், பூசலிடுவார்கள், இனியும் பூசலிட்டுக் கொண்டுதான் இருப்பார்கள் என்பது இதன் பொருள். சமயம் கடந்த உண்மையைச் சமயநெறி சார்ந்து தெளியவேண்டும் என்பது தான். தெளிவு, அறிவு, ஞானம், அன்பு என்பவை அளவுக்குள் அடங்காதவை. அளவு அற்றவை.

     இதைத்தான், "தொட்டு அனைத்து ஊறும் மணல்கேணி, மாந்தர்க்குக் கற்று அனைத்து ஊறும் அறிவு" என்று திருவள்ளுவ நாயனார் காட்டினார். மணல் கேணியை எந்த அளவுக்குத் தோண்டுகின்றோமோ அந்த அளவுக்குத் தண்ணீர் ஊறும். ஒருவன் எந்த அளவுக்கு நூல்களைப் பயிலுகின்றானோ, அந்த அளவுக்கு அறிவு ஊறும். அதுகொண்டே,"பாடம் ஏறினும் ஏடு அது கைவிடேல்" என்றும் "ஓதுவது ஒழியேல்" என்றும் "ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்" என்றும் முதுமொழிகள் தோன்றின. படித்தல் வேறு. ஓதுவது வேறு.

     கறுப்புக் கண்ணாடி அணிந்தவனுக்கு, அவன் காணும் பொருள்கள் எல்லாம் மங்கலாகவே தெரியும். சமயக் கண்ணோடு பார்ப்பவனுக்கு சமயம் மட்டுமே தெரியும். சமயம் கடந்த உண்மை தெரியாது. சமயம் எதை நமக்கு அறிவுறுத்த வந்தது என்றும் தெரியாது. மனக்கண்ணால் காணுங்கள். அறிவுக் கண்ணால் காணாதீர்கள். உங்களுடைய இன்றைய அறிவு, நாளை பொய்யாகலாம், மாறுபடலாம். நேற்று நீங்கள் சொன்னதை இன்று நீங்களே கூட மறுக்கலாம். உங்களுக்குப் பின் வந்த உங்கள் மகனோ மகளோ, ஏன் உங்களோடு உங்களுக்காகவே வாழுகின்ற உங்கள் வாழ்க்கைத்துணை கூட மறுக்கலாம். விருப்பு வெறுப்பு இல்லாமல் எதையும் கண்டால் நல்லது.

"பித்தர்குணம் அதுபோல, ஒரு கால் உண்டாய்ப்

பின் ஒருகால் அறிவு இன்றிப் பேதையோராய்க்

கத்திடும் ஆன்மாக்கள் உரைக் கட்டில்பட்டோர்

கனகவரை குறித்துப் போய்க் கடற்கே வீழ்வர்."

எனவரும் அருள்நந்தி சிவச்சாரியார் பாடல் மேற்குறித்த திருமந்திரத்திற்கு உரிய விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்.

பைத்தியம் பிடித்தவனுக்குத் தன் செய்கை அல்லாது பிறரைப் புரிந்து கொள்ள வராது. அவனது செயல் ஒருகால் அறிவு உள்ளது போலவும், இன்னொருகால் அறிவில்லாதது போலவும் தோன்றும். அதுபோல, அறிவு விளங்கியது போல, அறிவின்றிப் பேசுகின்ற சமயவாதிகளின் பேச்சில் அறிவு மயங்கிக் கட்டுண்டவர்கள், மேருமலையை அடைய எண்ணிப் போய், அதை அடையாமல் கடலில் விழுந்ததைப் போல் ஆவார்கள். 

"அறநிலையத் துறையில் முழுமையாக நான் ஈடுபட்டட பிறகு ஒரு உண்மை விளங்கியது. அறுபது ஆண்டு காலத்திற்கு மேல் எங்களுடைய திராவிட இயக்கம் சமுதாய உயர்வுக்காகப் பல எதிர்ப்பு இயக்கங்களை மேற்கொண்டதால், சமய இலக்கியங்களைக் குறித்து தமிழ் மக்களுக்குச் சரியான பாதையைக் காட்டாமல், எங்கோ பிழை ஏற்பட்டுவிட்டது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். பேரறிஞர் அண்ணா அவர்கள் முழு நாத்திகராக விளங்கிய தந்தை பெரியாருடைய மாணவர். தந்தை பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட ஒரு தலைவர் என்றாலும், தந்தை பெரியாரோடு முரண்பட்டு, 1949-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய போது, தந்தை பெரியாருடைய இலட்சியத்திற்கு மாறாக, நாத்திகக் கொள்கைக்கு எதிரான திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை, "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற சொற்றொடரைப் பிரகடனப்படுத்தினார். ஆனால், இது சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறையாக இடம் பெற்றிருக்கிற திருமூலர் திருமந்திரத்தில் உள்ள தத்துவமாகும்" என்று 08.05.2021 அன்று வெளியான தினமணி  நாளிதழில் முன்னாள் அறநிலையத் துறை அமைச்சர் இரு இராம. வீரப்பன் அவர்கள் குறிப்பிட்டு உள்ளார்கள்.

எனவே, இறையருளால் உண்மை இன்பத்தைப் பெற்று மகிழலாம். அதற்குத் துணை செய்வது சமய உணர்வு. சமய உண்மையை அறிந்து கொள்ளாமல், சமயங்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொண்டு பிணங்குதல் நன்மையைத் தராது. குலம் என்றால் அது மனிதகுலம் ஒன்றுதான். இறைவனும் ஒருவனே ஆவான்.  


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...