பற்றற்ற பெருநிலை

 


பற்றற்ற பெருநிலை.

-----

மனிதன் மனிதனாக வாழ்வதற்கு மூன்று நன்றாக இருக்கவேண்டும். அவையாவன உள்ளம், உடம்பு, சூழல். உள்ளம் நன்றாக இருப்பதற்காகவே அறநெறியும் கடவுள் வழிபாடும் அமைந்தன. உடம்பு நன்றாக இருப்பதற்கு நல்ல உணவும் உடையும் தொழிலும் மருந்தும் வேண்டும். சூழல் அல்லது சுற்றுப்புறம் நன்றாக இருப்பதற்கு முன்னோர்கள் சில கட்டுப்பாடுகளை விதித்தார்கள். இன்று சுற்றுப்புறமும் நன்றாக இல்லாத காரணத்தால்தான், பொதுவாக வாழ்க்கையில் அமைதியும் இன்பமும் இல்லை. நல்ல கல்வி அமைந்தால் நல்லறிவு சிறக்கும். நல்லறிவு வாழ்த்தால் நற்பண்புகள் நிறைந்து இருக்கும். கல்வி கற்கவில்லை என்றாலும், கற்ற பெரியவரிடத்திலாவது கூடி இருந்து கழகவேண்டும். "கற்ற மேலவரோடும் கூடி நில்லேன், கல்வி கற்கும் நெறி தேர்ந்து கல்லேன்" என்பார் வடலூர் வள்ளல்பெருமான். 

"கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்து ஒழுகின்

நல்லறிவு நாளும் தலைப்படுவர் - தொல்சிறப்பின்

ஒள்நிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு

தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு." --- நாலடியார்.

சிறந்த அழகும் மணமும் நிறைந்த பாதிரிப் பூ வைக்கப்பட்டு இருந்த மண்மாண்டத்தில் உள்ள தண்ணீருக்கும் அதன் மணம் கிடைக்கும். அதுபோல, கல்வி அறிவு இல்லாதவர்கள் என்றாலும், கற்றறிந்த பெரியோர்ளுடன் கூடிப் பழகினால், அவர்களுக்கும், அப் பெரியோரின் சேர்க்ககையால் நாளாக நாளாக நல்ல அறிவு வாய்க்கப் பெறும் என்கிறது நாலடியார்.

தனிமனிதன் இன்பற்று வாழவேண்டுமானால், சமுதாயம் நன்றாக அமைந்திருக்க வேண்டும். சமுதாயம் என்ற சொல்லே ஆறறிவு படைத்த மக்களினத்தைக் குறிக்கும். "மக்கள் தாமே ஆறு அறிவினவே" என்பது தொல்காப்பியம். அறிவு எனப்படுவது நல்லதன் நன்மையும், தீயதன் தீமையும் அறிந்து அதற்கு ஏற்ப, நன்மையை நாடி, தீயதே விலக்கி ஒழுகுதல் ஆகும். ஆறு அறிவு படைத்தவர்களே மக்கள் எனப்படுவர்.  இன்று நம் கண்முன்னால் நடைபெறுகிற வாழ்க்கை முழுதும், நல்லறிவும் நற்பண்பும் நிறைந்த நமது முன்னோர்களின் உள்ளங்களில் பிறந்த எண்ணங்களின் விளைவுதான்.

நம்முடைய அரசியல் நெறிகள், சமுதாய ஒழுக்கக் கோட்பாடுகள், பொருளாதார அமைப்புகள், நம் பண்பாடுகள், நாம் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, அணியும் அணிகலன்கள் என யாவுமே பன்னெடுங்காலமாக முன்னோர் வகுத்துத் தந்து சென்றவைதான். ஒவ்வொரு காலத்திலும் அவற்றில் சிற்சில மாறுதல்களை நாம் செய்து வருகிறோம்.

மனித குலத்தின் ஒப்பற்ற பெரியோர்களின் பூதவுடல் மட்டுமே மறைந்தது. அவர்கள் சொல்லிச் சென்ற கருத்துகள், நடை உடை பாவனைகளால் அவர்கள் உயிர்த்தன்மை பெற்று நம்முடனேயே நிலவுகிறார்கள். அவர்களின் நிறைவேறாத கனவுகளையும், முழுமை பெறாத முயற்சிகளையும், அருமையான நூல்களின் வழியாக விட்டுச் சென்றுள்ளார்கள். அவர்கள் வித்தகர்கள். "நத்தம்போல் கேடும், உளது ஆகும் சாக்காடும் வித்தகர்க்கு அல்லால் அரிது" என்றார் திருவள்ளுவ நாயனார். புகழ் செழிக்கும் அளவுக்கு வறுமையை அடைதலும், புகழ் நிலைக்கும் அளவுக்கு சாக்காடு அடைதலும் இந்த வித்தகர்களிடத்தே உண்டு. 

நம்முள் ஒவ்வொருவருக்கும் ஒரு துறையில் ஈடுபாடும் ஆர்வமும் இருக்கின்றது. அந்தத் துறையில் ஆழ்ந்த கல்வியும் பயிற்சியும் பெற்று வல்லுநர் ஆகலாம். துறையறிவோடு, உலகியல் அறிவு முழுமை பெற வேண்டுமானால், கற்க வேண்டிய அறிவு நூல்களைக் கற்றுத் தெளிய வேண்டும். கற்ற பெரியோர்களோடு கூடிக் கலந்து உள்ளம் மகிழவும் பழகிக்கொள்ள வேண்டும். பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதுமே அறிவுடைமை ஆகாது. அதுவே வாழ்க்கை ஆகிவிடாது. 

கல்வியின் பயன் அறிவு மிகுவதாக இருக்கவேண்டும். அறிவின் பயன் அன்பு நிறைவதாக அமைய வேண்டும். உள்ளத்தில் அன்பு என்னும் உயிர்ப் பண்பு இல்லாமல், வெறும் அறிவால் மட்டும் எந்தப் பயனும் இல்லை. ("அறிவினால் ஆகுவது உண்டோ? பிறிதன் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை" - திருக்குறள்.) பிற உயிர்படும் துன்பத்தைத் தான்படும் துன்பத்தைப் போல மதித்து நடந்து கொள்ளாதபோது, தான் பெற்ற அறிவினால் பயன் விளைவது உண்டோ? என்று நாயனார் வினவுவதில் இருந்தே அறிவின் பயன் உயிர்களிடத்தில் அன்பு வைப்பதுதான் என்பது விளங்கும். அறிவு என்பது என்னவென்று கேட்டால், "போகின்ற இடங்களில் எல்லாம் மனத்தைச் செலுத்தாமல், தீமையை நீக்கி, நன்மையை நோக்கிச் செலுத்துவதே அறிவு ஆகும் என்கிறார் திருவள்ளுவ நாயனார். ("சென்ற இடத்தால் செ(ல்)ல விடாது, நன்றின்பால் உய்ப்பது அறிவு" - திருக்குறள்.) "மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்றும் "நுண்பொருள் காண்பது அறிவு" என்றும் அறிவுறுத்துகிறார்.

"புத்தகப் பிதற்றை விட்டு, வித்தகத்து உனைத் துதிக்க, புத்தியில் கலக்கம் அற்று நினையாதே" என்பார் அருணகிரிநாதப் பெருமான். புத்தகங்களைப் படித்து விட்டு, அவற்றில் உள்ளதைப் பிதற்றிக் கொண்டு இருப்பது கூடாது. நான் மெத்தப் படித்தவன் என்னும் செருக்கு இருக்கக் கூடாது. புத்தியில் கலக்கம் இருத்தல் கூடாது. "கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்” என்பார் மணிவாசகப் பெருமான். உண்பதற்கு வாழை இலை உதவுகின்றது. உண்டபின் வாழை இலையை எடுத்து எறிந்து விடுகிறோம். அதுபோல், உயிர்கள்பால் அன்பு செலுத்துவதற்கும், அதன் பயனாக இறைவனை அடைவதற்கும் கல்வி துணை செய்யவேண்டும். அந்தப் பயனை அடைந்தவுடன், எச்சில் இலையைத் தூக்கி எறிவதுபோல், 'நான் படித்தேன்' என்னும் அகந்தையை விட்டு ஒழிக்கவேண்டும். அடைந்த பின் கல்வியை விட்டுவிட வேண்டும். "கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும்" என்று மணிவாசகப் பெருமான் அருளியதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நூல்களை வீடு முழுமையும் நிறைத்து வைப்பதாலேயே ஒருவருக்கு நல்லறிவு நிறைந்துவிடாது. நூல்களின் கருத்தினை அறிந்து அவற்றால் நலம் பெறுதல் வேண்டும். தானும் தெளிந்து பிறரையும் தெளிவித்தல் வேண்டும்.

"புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார்

உய்த்து அகம் எல்லாம் நிறைப்பினும் - மற்று அவற்றைப்

போற்றும் புலவரும் வேறே, பொருள்தெரிந்து

தேற்றும் புலவரும் வேறு."             --- நாலடியார்.

இதன் பொருள் ---

புத்தகங்களை எல்லாம் சிலர் சேகரித்து, அவற்றை வீடு முழுதும் நிறைத்து வைத்து, அவற்றின் பொருளை உணராமலேயே அழகு பார்த்துக் கொண்டு இருப்பவர் சிலர். ஆனால், சிலர் புத்தகங்களைப் பொருள் அறிந்து படித்துப் பயன் அடையும் புலவர்கள் சிலர். அந்தச் சிலருள்ளும் தாம் படித்து அறிந்த கருத்துக்களை மற்றவர் மனம் கொள்ளுமாறு எடுத்து விளக்கிப் புரிய வைப்பவர்கள் மிகச் சிலரே.

இந்த நல்லறிவைப் பெறாதவர்களுக்கு, இந்தப் பெரிய உலகம், பட்டப்பகலிலும் ஒரே இருட்டாகத் தோன்றும் என்று அறிவுறுத்துகிறார் திருவள்ளுவ நாயனார்.

"நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டு அன்று இருள்" --- திருக்குறள்.

இதன் பொருள் ---

பண்புடன் கூடி கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இவ்வுலகத்தின் ஒளி உள்ள பகல்பொழுதும் இருளின்பால் பட்டது ஆகும்.

'இந்த நல்லறிவு விளக்கம் பெறாமையால், சமுதாய நல்லொழுக்கம் சீர் குலைந்துவிட்டது, நடுவுநிலைமை, நியாய உணர்வு, நீதிநெறி, நாவடக்கம் எல்லாம் தேய்ந்து மாய்ந்துக் கிடக்கின்றன' என்று திரும்பத் திரும்ப வாய்கிழியப் பேசுவதாலோ, எழுதுவதாலோ பயன் பெரிதும் விளைந்து விடாது. நடக்கும் சாலையிலே ஒருவருக்கு விபத்து நடந்து வீழ்ந்து கிடக்கும்போது எரிகிற வீட்டில் அகப்பட்டது இலாபம் எனச் சுருட்டிக் கொண்டு ஒடும் பான்மையில், அருகே சிதறிக் கிடப்பதைக் கவர்ந்துகொண்டு நடக்க முயலும் விட்டேற்றி மனப்பான்மை மாற வேண்டும். இது சமுதாயச் சீர்குலைவு, மனிதநேயச் சிதைவு. இவைகளைக் கண்டும் காணாமல் போகின்ற போக்கு எல்லா நிலைகளிலும் உள்ளது.

மனிதனை உண்மையான மனிதனாக வாழக் கற்றுக் கொடுப்பது கல்வி. கல்விப் பயிற்சியே மனிதனை நிமிர்ந்து நிற்கச் செய்யும். ஒரு தனி மனிதனுக்குக் கல்வியறிவு மிகப் பயன்படும். அவன் வழிச் சமுதாய மறுமலர்ச்சி தழைக்கும். உலகப் பேரறிஞர்கள் மனித நேயத்தை அறிவியல் கண்கொண்டு பேசி, அதுவே வழி என்று காட்டி, வாழ்ந்து உள்ளனர். மனித நேயம் மிக்க பண்பாளர்கள் நம்மிடையே இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். அவர்களை இனம் கண்டு பின்பற்றியே ஆகவேண்டும். மனித நேயத்தை வளர்ப்பதற்குக் கற்கும் கல்வி மிகவும் பயன்படும். இலக்கியத்தின் இலக்கும், இசையின் குறிக்கோளும் மனித நேயம் அன்றி வேறு இல்லை. ஆகவே, கல்வி மூலம் மனித நேயத்தை பரவச் செய்வது அவசியம் ஆகின்றது.

வளரும் இளம் செடிக்கு உரம் இட்டு, களை களைந்து, நீர்பாய்ச்சி காவல் செய்தால், கதிரவன் ஒளியின் துணையுடன் அப்பயிர் நன்கு செழித்து வளரும். இம்முறையில் இளம் நெஞ்சில் உயரிய கருத்துகளை எளிய சொற்களால் புகுத்தி, வாழ்க்கையின் அருமையை உணரவைக்க வேண்டும்.

நாள் என்பது ஒரு காலவரையறை போல் தோன்றுகின்றது. அதனால் ஒவ்வொரு நாளும் கழிவதைக் கண்டு பலரும் மகிழ்கின்றார்கள். நாள் என்பது ஒரு காலவரையறை போல் காட்டினாலும், அந்த வரையறை முடிவதற்குள் செய்யத்தக்க நல்வினை எல்லாம் விரைந்து செய்ய வேண்டும். வாழ்நாள் உள்ளபோதே பயனுள்ளவற்றை எண்ணி அறத்தைப் போற்ற வேண்டும். உயிர் உடம்பில் வாழும் இயல்பை உணர்ந்தால் இந்த அறநினைவு மாறாது. விழிப்பு உள்ளபோது கடமைகளைச் செய்து முடிப்பதுபோல், வாழ்வு உள்ளபோதே அறத்தைப் போற்றி உயரவேண்டும்.

அருளுணர்வு மிகுந்து தன்னலம் தேய்ந்து அழிந்த பின், வாழ்க்கையில் பற்று எல்லாம் அற்றுப் போகும்.  இல்லறத்தில் இருந்து கொண்டு அகத் துறவோடு வாழுதல் வேண்டும். பிறரால் பழிக்கப்பபடாத புறத்துறவும் நன்றுதான். 

"அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை, அஃதும்

பிறன்பழிப்பது இல்லாயின் நன்று"

என்று நாயனார் அருளிய திருக்குறளைக் கருத்தில் இருத்துதல் வேண்டும். 

"இல்லறம் துறவறம் என்று சொல்லப்பட்ட இருவகை அறத்தினும் நூல்களால் அறன் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே. ஏனைத் துறவறமோ எனின், அதுவும் பிறனால் பழிக்கப்படுவது இல்லையாயின், அவ் இல்வாழ்க்கையோடு ஒரு தன்மைத்தாக நன்று" என்று பரிமேலழகர் வகுத்து உரையைக் காண்க. அல்லாமல், அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது எல்லாம் இல்வாழ்க்கைதான். அப்பேர்ப்பட்ட சிறப்புடைய இல்வாழ்க்கையும், பிறன் எவனும் பழிப்பதற்கு இடம் இல்லாது இருக்குமானால்தான் சிறந்த அறம் ஆகும் என்றும் பொருள் கொள்ளலாம்.

துறவு என்றாலே பற்று அற்று இருத்தல் என்பதுதான் பொருள். துறத்தல் என்று சொன்னாலே, துறப்பதற்கு இடமாக ஒன்று இருக்கு வேண்டும். பற்றுக்களைத் துறப்பதற்கான பக்குவத்தை உண்டாக்கிக் கொடுப்பதே இல்லறம்தான் என்பதை மறத்தல் ஆகாது. ஒருவன் எதனிடம் பற்றுக்கொண்டு வாழ்கின்றானோ, அதனால் துன்பத்தை அடைவான். எதிலிருந்து எதிலிருந்து பற்று நீங்கி வாழ்கின்றானோ அதனால் அதனால் அவனுக்குத் துன்பம் இல்லை, ஆகையால் துன்பம் அற்ற இன்ப வாழ்வை விரும்பினால், எல்லாம் உள்ளபோதே, இல்லறத்தில் இருந்துகொண்டே பற்றற்ற துறவு வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். துறந்த வாழ்க்கையில் கைகூடும் இன்பங்கள் பல உண்டு.

"யாதனின் யாதனின் நீங்கியான், நோதல்

அதனின் அதனின் இலன்"

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

உள்ளத்தில் அன்பு உள்ளோரிடத்திலேயே உண்மைத் துறவு மிகுந்து இருக்கும். மனித நேயமே உண்மைத் துறவுக்கு இருப்பிடம் ஆகும். காவி ஆடையை உடுத்துக் கொண்டு காடுகளில் சென்று உழல்வது அவசியம் இல்லை. அதில் விழுமிய பயனும் இல்லை.

"காவி உடுத்தும், தாழ்சடை வைத்தும்

     காடுகள் புக்கும் ...... தடுமாறி;

காய்கனி துய்த்தும், காயம் ஒறுத்தும்,

     காசினி முற்றும் ...... திரியாதே;


சீவன் ஒடுக்கம், பூத ஒடுக்கம்

     தேற உதிக்கும் ...... பரஞான

தீப விளக்கம் காண, எனக்கு உன்

     சீதள பத்மம் ...... தருவாயே."     

என்பது அருணகிரிதாநர் அருளிய திருப்புகழ்.

இறைவன் செம்மேனி எம்மான் ஆதலினாலும், செம் பொருளைக் குறிப்பதற்குரிய முயற்சியை உடையார் என்று குறிப்பைக் காட்டுதல் பொருட்டும் துறவிகள் கல்லாடையைப் புனைவது மரபு. நீண்ட சடையை வைத்துக் கொள்ளுதலும் துறவிகட்கு ஒரு அங்கம். அன்றி முண்டிதம் செய்து கொள்வதும் உண்டு. காம குரோதம் முதலிய குற்றங்களைக் கடிந்து விட்டவர்க்கு தலைமயிரை நீட்டினாலும் குறைத்தாலும் ஒன்று தான்.  நல்லொழுக்கம் உடையார்க்கு சடை இன்றியமையாதது அல்ல.

"மழித்தலும் நீட்டலும் வேண்டா, உலகம்

பழித்தது ஒழித்து விடின்."                     ---  திருக்குறள்.

நாட்டை விட்டு காடு போய்,  மழைக் காலத்திலும், பனிக் காலத்திலும், தண்ணீரில் நின்றும், வெய்யில் காலத்தில் நெருப்பில் நின்றும் தவம் இயற்றுதல் துறவு என்று சொல்லப்படுவது மரபு. காட்டுக்குச் சென்று தவ வாழ்வை மேற்கொள்ள விரும்புகின்றவன், தன் துணையோடுதான் செல்லவேண்டும். உள்ளன்பு இல்லையானால் இம் முயற்சி பெரும்பலனை அளிக்காது.

"காடே திரிந்து என்ன, காற்றே புசித்து என்ன, கந்தை சுற்றி

ஓடே எடுத்து என்ன, உள்ளன்பு இலாதவர்ய; ஓங்கு விண்ணோர்

நாடே, இடைமருது ஈசர்க்கு மெய்யன்பர், நாரியர் பால்

வீடே இருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே!"   

என்பது ஓட்டுடன் பற்று இன்றி உலகைத் துறந்த அருட்பெரும் செல்வராகிய பட்டினத்து அடிகளாரின் அருள்வாக்கு.  

இதன் பொருள் ---

உள்ளத்தின் அன்பு இல்லாதவர்கள் காட்டிலே திரிவதால் என்ன பயன்? காற்றையே புசிப்பதால் என்ன பயன்? கந்தைத் துணியை அரையிலே சுற்றிக் கொண்டு, திருவோட்டைக் கையில் ஏந்தித் திரிவதால் என்ன பயன்? உயர்ந்த தேவர் உலகத்தை நிகர்த்த திருவிடைமருதூரில் எழுந்தருளி உள்ள பெருமானுக்கு உண்மை அன்பராக உள்ளவர்கள், மாதரோடு கூடி இல்வாழ்க்கையில் ஈடுபட்டு இருந்தாலும், உண்மை ஞானத்தால் அடைதற்கு உரிய வீடுபேற்றுப் பேரின்பத்தைப் பொருந்தியவர்களாக இருப்பார்கள்.

அன்பு இல்லாத வைராக்கியம் பயன்படாது. அது  உயிர் இல்லாத உடம்பு போல் ஆகும். அன்பு உடைய சாக்கிய நாயனார் கல்லை விட்டு எறிந்தாலும் இறைவன் ஏற்று அருள் புரிந்தான். அன்பு இல்லாதவர் மலர் விட்டு அருச்சனை புரிவதாகப் பாவகம் புரிந்தாலும், இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டான்.  இதற்குச் சான்று சாக்கிய நாயனாரும் மன்மதனும். 

"மனத்து அகத்து அழுக்கு அறாத மவுனஞான யோகிகாள்

வனத்து அகத்து இருக்கினும் மனத்து அகத்து அழுக்கு அறார்;

மனத்து அகத்து அழுக்கு அறுத்த மவுனஞான யோகிகள்

முலைத்தடத்து இருக்கினும் பிறப்பு அறுத்து இருப்பரே."

என்பது சிவவாக்கியர் காட்டிய அருள்நெறி.

இதன் பொருள் ---

உள்ளத்திலே முற்பிறப்பு வாசனையாகப் படிந்து உள்ள அகங்கார மமகாரங்களால் உண்டான மாயாபாசங்களை அறுத்து ஒழிக்காமல், மவுனஞானத்தை உடையவர் போலக் காட்டிக் கொள்ளும் யோகிகள் காட்டில் இருந்தாலும், உள்ளத்திலே பொருந்தி உள்ள அழுக்கினை அறுத்து ஒழித்தவர் ஆகமாட்டார்கள். உள்ளத்திலே உள்ள மாயாபாசங்களை அறவே ஒழித்த மவுனஞானத்தை உண்மையாகவே உடைய யோகிகள் பெண்களுடைய முலைத்தடத்தில் முழுகி இருந்தாலும் (சிற்றின்ப நிலையில் இருந்தாலும்) பிறப்பு அற்ற பெருநிலையை அடைந்து பேரின்பத்தில் திளைத்து இருப்பவர் ஆவார்.

உள்ளத்தில் அழுக்கை அறுக்காமல் யோகிகள் போல வாழ்பவர்களைக் காட்டிலும், உள்ளத்தில் அழுக்கை அறுத்து, போகிகளாக வாழ்பவர்களே சிறந்தவர்கள். 

ஒருவனுக்கு நல்லறிவு வளர நல்ல கல்வி அவசியம். கல்வி கற்கவில்லையானாலும், கற்ற பெரியோருடன் கூடி இருந்தால் நல்லறிவு நாளும் வளரும். நல்லறிவு நல்லொழுக்கத்திற்குத் துணை புரியும். நல்லொழுக்கமே பற்றற்ற நிலையை உண்டாக்கும். அதற்கு நிலைக்களன் இல்லறமே.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...