"கொன்றேன் அநேகம் உயிரை எல்லாம், பின்பு கொன்று கொன்று
தின்றேன், அது அன்றியும் தீங்கு செய்தேன், அது தீர்க்க என்றே
நின்றேன் நின் சந்நிதிக்கே, அதனால் குற்றம் நீ பொறுப்பாய்
என்றே உனை நம்பினென், இறைவா, கச்சி ஏகம்பனே."
பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே! அநேகமான உயிர்களை எல்லாம் நான் கொன்றேன். பிறகு, கொலைசெய்து, கொலைசெய்து உண்டேன். அது அல்லாமலும் மற்றும் பல தீமைகளையும் செய்தேன். அவைகள் தீரவேண்டும் என்று பெருமானின் சந்நிதியில் நின்றேன். ஆதலால், எனது குற்றங்களை எல்லாம் தேவரீர் பொறுத்து அருளுவீர் என்றே நம்பி இருக்கின்றேன்.
விளக்கம் -- உயிர்க்கு உறுதி பயக்கும் செயல்களைச் செய்யாமல் தீத் தொழில்களையே செய்தேன் என்பார், "கொன்றேன் அநேகம் உயிரை எல்லாம்" என்றார். "கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் செல்லாது உயிர் உண்ணும் கூற்று" என்பதையும் அறவே மறந்தேன். "கொல்லா நெறியே குருவருள் நெறி எனப் பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச்சிவமே" என்றார் அருட்பெருஞ்சோதி அகவலில் வள்ளல்பெருமான். "கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க எல்லார்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே" என்றார் தாயுமானார்.
"தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிதின் ஊன் உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்" என்றார் திருவள்ளுவ நாயனார். இத்தனை பெரியோர்கள் சொன்ன அருள்மொழிகள் அனைத்தையும் மறந்து, கொன்றதோடு மட்டும் அல்லாமல், கொன்றவற்றை எல்லாம், எனது ஊன் உடம்பு கொழுப்பதற்குத் தின்றேன் என்பார், "பின்பு கொன்று கொன்று தின்றேன்" என்றார்.
பதினோராம் திருமுறையில் திருக்கழுமல மும்மணிக்கோவை என்னும் நூலில் பின்வருவாறு அடிகளார் பாடியுள்ளதை நோக்குக...
"அகில லோகமும், அனந்த யோனியும்,
நிகிலமும் தோன்ற, நீ நினைந்தநாள் தொடங்கி
எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்து
யாரும், யாவையும், எனக்குத் தனித்தனித்
தாயர் ஆகியும் தந்தையர் ஆகியும்
வந்து இலாதவர் இல்லை, யான் அவர்
தந்தையர் ஆகியும் தாயர் ஆகியும்
வந்து இராததும் இல்லை, முந்து
பிறவா நிலனும் இல்லை, அவ்வயின்
இறவா நிலனும் இல்லை, பிறிதில்
என்னைத் தின்னா உயிர்களும் இல்லை,
யான் அவை தம்மைத் தின்னாது ஒழிந்ததும் இல்லை,
அனைத்தே காலமும் சென்றது..."
கோயில் திருஅகவல் என்னும் பாடலில் பின்வருமாறு பாடியுள்ளார் அடிகளார்.....
"பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும்,
கொன்றனை அனைத்தும், அனைத்தும் நினைக் கொன்றன,
தின்றனை அனைத்தும், அனைத்தும் நினைத் தின்றன,......"
No comments:
Post a Comment