கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டில், காடு நல்லது.

 


படுங்கோலம் அறியாமல் தண்டலையார்

     திருப்பணிக்கும் பங்கம் செய்வார்;

நெடுங்கோளும் தண்டமுமாய் வீணார

     வீணனைப்போல் நீதி செய்வார்;

கெடுங்கோபம் அல்லாமல் விளைவுண்டோ?

     மழையுண்டோ? கேள்வி யுண்டோ?

கொடுங்கோல்மன் னவன் நாட்டிற் கடும்புலிவா

     ழுங்காடு குணமென் பாரே!


இதனத் பொருள் ---

        படும் கோலம் அறியாமல் தண்டலையார் திருப்பணிக்கும் பங்கம் செய்வார் - அடையப்போகும் தன்மையை உணராமல் திருத் தண்டலை இறைவருக்கு ஆற்றும் திருத்தொண்டுக்கும் குறைவு புரிவார்கள், வீணார வீணனைப்போல் நெடுங்கோளும்  தண்டமுமாய்  நீதி செய்வார் - வீணார வீணன் என்பானைப் போலப் பெரிய கொலையும் தண்டனையுமாக அரசியல் புரிவர்; (இதனால்) கெடும் கோபம் அல்லாமல் விளைவு  உண்டோ மழை உண்டோ கேள்வி உண்டோ - (தம்மைக் கெடுக்கும்) சீற்றமே விளைவது அல்லாமல், நாட்டில் விளைவும், மழையும், கேள்விமுறையும்  இருக்குமோ?,  கொடுங்கோல் மன்னவன் நாட்டில் கடும்புலி வாழும் காடு குணம் என்பார் – முறை தவறிய அரசன்  வாழும் நாட்டில் வாழ்வதினும் கொடிய புலி வாழும் காடு நலந்தரும் என்று அறிஞர் கூறுவர்.

      கோள் - கொலை. அரசன் ஆட்சி முறையானதாக இருந்தால், அந்த நாட்டில் மழைபெய்து விளைவு பெருகி நாடு வளம் உற்று இருக்கும். 

        தமது தொழிலைச் செய்வதற்கு வாய்ப்பாக, கோலைத் துணைக் கொள்பவர்கள் உண்டு. முடவன் ஒருவன் தான் நடப்பதற்குத் துணையாக ஒரு கோலைக் கைக்கொள்வான். அவன் அந்தக் கோலைக் கொண்டு தனக்கு இடையூறாக வருபவற்றையும் தடுத்துக் கொள்வான். பிறரையும் அடிக்கத் தலைப்படுவான். ஆடுமாடுகளை மேய்ப்பவர்கள் கையில் கோல் இருக்கும். தான் மேப்பவற்றை ஒழுங்குபடுத்துவதற்கும், கால்நடைகளுக்கு இடையூறு விளைப்பவற்றை விலக்குவதற்கும் அது பயன்படும். இது "செங்கோல்" ஆகும். தனது கையில் உள்ள கோலைக் கொண்டு தனக்கு வேண்டாதவர்களைப் புடைப்பதற்கு அந்தக் கோல் பயன்படுமானால், அது "கொடுங்கோல்" ஆகிவிடும். கோலின் பயன்பாட்டை வைத்தே, செங்கோல் அல்லது கொடுங்கோல் என்று சொல்லப்படும். கோலில் வேறுபாடு இல்லை. 

        பின்வரும் பாடல்களை இங்குக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.

"கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில்

 கடும்புலி வாழும் காடு நன்றே.".       --- வெற்றிவேற்கை.

நீதிமுறைமை இல்லாத கொடுங்கோல் அரசர் ஆட்சி புரியும் நாட்டில் இருப்பதைப் பார்க்கிலும், கொடிய புலி வாழும் காட்டில் இருப்பது நல்லது.

கொடுங்காலன் தன்னைத் தானே  புகழ்ந்து கொண்டு  தருக்கி இருப்பான். அவன் நாட்டிலே குடிகளுக்கு  அச்சமும்  கவலையும் அளவின்றி  இருக்கும்.


"ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்

முறையில் அரசன் நாடு நல்கூர்ந்தன்று." --- முதுமொழிக் காஞ்சி.

இதன் பொருள் ---

கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மனிதர் எல்லார்க்கும்  நீதி முறை இல்லாத அரசனது நாடானது வறுமை உடையது ஆகும்.


"சான்றோர் இல்லாத் தொல்பதி இருத்தலின்

தேன்தேர் குறவர் தேயம் நன்றே.".        --- வெற்றிவேற்கை.

அறிவு ஒழுக்கங்களால்  நிறைந்த பெரியோர்  இல்லாத பழைமையான  நகரத்தில் இருப்பதைப் பார்க்கிலும், குறவர் வசிக்கும் மலைப் பக்கத்தில் இருப்பது  நல்லது.


No comments:

Post a Comment

கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டில், காடு நல்லது.

  படுங்கோலம் அறியாமல் தண்டலையார்      திருப்பணிக்கும் பங்கம் செய்வார்; நெடுங்கோளும் தண்டமுமாய் வீணார      வீணனைப்போல் நீதி செய்வார்; கெடுங்க...