19. கயவரைத் திருத்துதல் இயலாது


“துர்ச்சனரும் பாம்பும் துலை ஒக்கினும், பாம்பு

துர்ச்சனரை ஒக்குமோ? தோகையே! - துர்ச்சனர்தாம்

எந்தவிதத்தாலும் இணங்காரே, பாம்பு மணி

மந்திரத்தால் ஆமே வசம்.” — நீதிவெண்பா.

பெண்ணே! கெட்ட குணம் உடையோரும் பாம்பும் ஓரு நிலையில் ஒத்து இருந்தாலும், பாம்பு கெட்டவருக்கு ஒப்பு ஆகுமா?  ஆகாது.  எவ்வாறு எனில், பாம்பு மணிமந்திரங்களுக்கு அடங்கிக் கொடுமை செய்யாது இருக்கும்.  ஆனால், கயவர்கள் எவ்வழியிலும் அடங்கி, திருந்தி,  நல்வழிப்பட மாட்டார்கள்.

        (பாம்புக்குப் பால் வார்த்தாலும், விடத்தையே உமிழும் என்பார்கள். துர்ச்சனர் - கெட்டவர்.  துலை - ஒப்பு.  இணங்கார் - திருந்தார்.)

    எவ்விதமான சாதனைகளையும் ஒருவன் புரிந்து கொள்ள முடியும். ஆனால், கயவர் குணத்தை மட்டும் திருத்த முடியாது என்பதை விளக்கும் ஒரு பாடல், "குமரேச சதகம்" என்னும் நூலில் வருகிறது.


"குணமிலாத் துட்டமிரு கங்களையும் நயகுணம்

     கொண்டு உட்படுத்தி விடலாம்,

கொடியபல விடநோய்கள் யாவும்ஒள டதமது

     கொடுத்துத் திருப்பிவிடலாம்,


உணர்விலாப் பிரமராட் சசுமுதல் பேய்களை

     உகந்து கூத்தாட்டி விடலாம்,

உபாயத்தினால் பெரும் பறவைக்கு நற்புத்தி

     உண்டாக்க லாம்,உயிர்பெறப்


பிணமதை எழுப்பலாம், அக்கினி சுடாமற்

     பெரும்புனல் எனச்செய்யலாம்,

பிணியையும் அகற்றலாம், காலதூ துவரையும்

     பின்புவரு கென்றுசொலலாம்,


மணலையும் கயிறாத் திரிக்கலாம், கயவர்குணம்

     மட்டும் திருப்ப வசமோ?

மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே".

இதன் பொருள் ---

மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

குணம் இலாத் துட்ட மிருகங்களையும் நயகுணம் கொண்டு உட்படுத்தி விடலாம் - நல்ல குணம் இல்லாத கொடிய விலங்குகளையும் இனிய பண்பினாலே வசப்படுத்தி விடலாம். கொடிய பல விட நோய்கள் யாவும் ஒளடதமது கொடுத்துத் திருப்பி விடலாம் - கொடுமையான பல துன்பத்தைத் தரும் நோய்களை எல்லாம் தக்க மருந்தைக் கொடுத்து மாற்றிவிடலாம். உணர்வு இலாப் பிரமராட்சசு முதல் பேய்களை உகந்து கூத்தாட்டி விடலாம் - நல் உணர்வு இல்லாத பிரமராட்சசு முதலான பேய்களை, அவைகள் விரும்பும் முறையிலே கூத்தாடச் செய்து, அவைகளை  நீக்கிவிடலாம். உபாயத்தினால் பெரும் பறவைக்கு நற்புத்தி உண்டாக்கலாம் - தக்க முறைகளைக் கையாண்டு, கிளி முதலிய பறவைகளுக்கும் நல்லறிவை உண்டாக்கிப் பழக்கலாம். உயிர் பெறப் பிணம் அதை எழுப்பலாம் - பிணத்தையும் கூட உயிர் பெற்று எழச் செய்து விடலாம். அக்கினி சுடாமல் பெரும்புனல் எனச் செய்யலாம் - அக்கினித் தம்பம் என்னும் முறையினால் சுடுகின்ற நெருப்பை, மிகவும் குளிர்ந்த நீர் என ஆக்கி விடலாம். பிணியையும் அகற்றலாம் - நோயையும் அகற்றலாம். கால தூதுவரையும் பின்பு வருக என்று சொல்லலாம் - காலனுடைய தூதுவர்களையும் "பிறகு வருக" என்று கூறலாம். மணலையும் கயிறாத் திரிக்கலாம் - மணலைக் கூடக் கயிறாகத் திரிக்கலாம். கயவர் குணம் மட்டும் திருப்ப வசமோ - கீழ்மக்களின் குணத்தை மட்டும் மாற்ற இயலாது.

எந்தத் தீமையையும் நன்மையாக மாற்றலாம். ஆனால், கீழ்மக்களை மட்டும் நற்குணம் பொருந்தியவர்களாக்க முடியாது என்கின்றார் இந்த நூலின் ஆசிரியர். இக் கருத்தையே பிற நூலாசிரியர்களும் வலியுறுத்துவதை அறியலாம். 

மனிதர்களை முதல் இடை கடை என்று மூன்றுவகைப் படுத்தலாம். முதல் வகையினர் பக்குவர்கள். இவர்கள் உள்ளும் புறமும் தூய்மையானவர். உள்ளேயும் வெளுப்பு, புறத்தேயும் வெளுப்பு. "பூசு நீறுபோல் உள்ளும் புனிதர்கள்" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான். பக்குவர்களைத் திருத்த வேண்டிய அவசியம் எழாது. இடைப்பட்டவர்கள் பக்குவாபக்குவர்கள். அதாவது, பக்குவப்பட்டவர்களும் அல்லர், பக்குவப்படாதவர்களும் அல்லர். இவர்கள் அகத்தே கறுத்து, புறத்தே வெளுத்து இருப்பவர்கள். 

கடைப்பட்டவர்களாகிய கயவர்களிடத்து அஞ்ஞானம் நிறைந்து இருக்கும். இவர்கள் உள்ளும் புறமும் கறுத்தவர்கள். கடவுள் உண்டு என்பதையும், பாவபுண்ணியங்கள் உண்டு என்பதையும், வினையின் பயன் உண்டு என்பதையும் நம்பாதவர்கள். இவர்களைப் பீடித்து உள்ள இந்தத் தீராத நோயானது, தீராத பிணியாகிய பிறவிப்பிணிக்குக் காரணமாக அமைகின்றது. உடல்நோய், உள்ளநோய், உயிர்நோய் ஆகியவற்றைத் தீர்த்து அருள் புரிகின்ற மருத்துவராக இறைவன் உள்ளான். வள்ளற்பெருமான் பாடியருளிய பாடலைக் காணலாம்.


"கல்லையும் உருக்கலாம்; நார் உரித்திடலாம்;

கனிந்த கனியாச் செய்யலாம்;

கடுவிடமும் உண்ணலாம்; அமுது ஆக்கலாம்; கொடும்

     கரடிபுலி சிங்கம் முதலா

வெல்லும் மிருகங்களையும் வசம் ஆக்கலாம்;அன்றி

     வித்தையும் கற்பிக்கலாம்;

மிக்க வாழைத்தண்டை விறகு ஆக்கலாம்; மணலை

     மேவுதேர் வடம் ஆக்கலாம்;

இல்லை ஒரு தெய்வம், வேறு இல்லை, எம் பால்இன்பம்

      ஈகின்ற பெண்கள் குறியே

எங்கள்குல தெய்வம் எனும் மூடரைத் தேற்ற எனில்

      எத்துணையும் அரிது அரிதுகாண்;

வல்லை அவர் உணர்வு அற மருந்து அருள்க, தவசிகா

      மணி உலக நாதவள்ளல்

மகிழவரு வேளூரில் அன்பர் பவரோகம் அற

       வளர் வயித்தியநாதனே."

இதன் பொருள் ---

     மாதவச் சிகாமணி உலகநாதத் தம்பிரான் ஆகிய வள்ளல் மனம் மகிழவும், மெய்யன்பர்களின் பிறவிப் பிணி நீங்கவும், திருப் புள்ளிருக்குவேளூரில் (வைத்தீசுவரன் கோயில்) கோயில் கொண்டு அருளும் வைத்தியநாதப் பெருமானே!  கருங்கல்லையும் நீராய் உருக்கி விடலாம்; அக் கல்லில் நாரும் உரித்து எடுக்கலாம்; அக் கல்லைப் பழுத்த பழமாகவும் செய்யலாம்; கொடிய விடத்தை உண்ணலாம்; அதனையே யாவரும் உண்ணும் அமுதமாகவும் செய்யலாம்; கொடிய புலி கரடி சிங்கம் முதலாகவுள்ள பிற விலங்குகளை எளிதில் வெல்லும் விலங்குகளை நம் வயமாக்கி விடலாம்; அன்றியும் அவற்றைக் குரங்குகளைப் போல வித்தை காட்டவும் செய்யலாம்; தண்மை மிக்க வாழைத் தண்டையும் விறகாய் எரிக்கலாம்; நுண்ணிய மணலையும் பெருமை பொருந்திய தேர்க்கு வடமாகத் திரிக்கலாம்; ஆனால், ஒரு தெய்வமும் கிடையாது; வேறு யாதும் இல்லை; எங்களுக்கு இன்பம் தருகின்ற பெண்களின் அல்குலே குலதெய்வமாகும் என்று கருதிப் பேசுகின்ற மூட மக்களைத் தெய்வசிந்தனை உடையவர்களாக்குவது பெரிதும் அரிதாகும். அவர்களின் மூடக் கொள்கையாகிய நோய் விரைவில் நீங்க ஞானமாகிய நன்மருந்தினை அருள்வீராக.

     எரிமலைகளில் கற்கள் உருகி நெருப்புக் குழம்பாய் வெளிவருவதைப் பார்க்கின்றோம். எனவே,  “கல்லையும் உருக்கலாம்” என்றார்.  சிற்பத்தொழில் வல்லவர், கல்லில் சங்கிலித் தொடர்களைச் செய்திருப்பதைக் காண,  "கல் நார் உரிக்கலாம்” எனவும் கூறுகின்றார். மாணிக்கவாசகப் பெருமான் “கல் நார் உரித்து என்னை ஆண்டு கொண்டான்" எனவும், “கல்லை மென்கனி ஆக்கும் விச்சைகொண்டு என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய்” என்று பாடி உள்ளதால், கல்லைக் “கனிந்த கனியாகச் செய்யலாம்” என வள்ளல்பெருமான் பாடுகின்றார். கடல் விடத்தைச் சிவபெருமானே உண்டதனால்,  அவனுக்கு அடியவராகிய அப்பர்பெருமான், சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பால்சோற்றை உண்டு, சாவாது இருந்தார். “வஞ்சனை பால்சோறு ஆக்கி, வழக்கிலா அமணர் தந்த நஞ்சு அமுதாக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே” அப்பர்பெருமானே பாடி உள்ளார். இதனை, "நஞ்சு அமுதாம் எங்கள் நாதன் அடியார்க்கு" என்றே சேக்கிழாரும் பாடி உள்ளார். எனவே, “கடல் விடமும் உண்ணலாம், அமுது ஆக்கலாம்” என்றார் வள்ளல்பெருமான்.  "கரடி வெம்புலி வாயையும் கட்டலாம், ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்" என்று தாயுமான அடிகளார் பாடி உள்ளார்.  அதனை ஒட்டியே, "கொடுங் கரடி புலி முதலா வெல்லு மிருகங்களையும் வசமாக்கலாம் அன்றி வித்தையும் கற்பிக்கலாம்" என்றார் வள்ளல்பெருமான். வாழைத் தண்டை விறகு ஆக்கினார் பட்டினத்தார். உலகவர், வாழைத் தண்டை விறகாக்கினர், மணலைக் கயிறாகத் திரித்தனர் என்றெல்லாம் பேசுவர். எனவே, “மிக்க வாழைத் தண்டை விறகாக்கலாம், மணலை மேவு தேர் வடம் ஆக்கலாம்” என்றார் வள்ளல்பெருமான். கயவர்கள் காம இன்பத்தையே பெரிதும் விரும்பி இருப்பர். காம இன்பம் தரும் பெண் அல்லது தெய்வம் வேறில்லை என்னும் பேதைகள் இன்னும் இருப்பதால், அவர்களை “இல்லையொரு தெய்வம், வேறிலை எம்பால் இன்பம் ஈகின்ற பெண்கள் குறியே எங்கள் குலதெய்வம் எனும் மூடர்” என இழித்துரைக்கின்றார். திருவருளால் அன்றி இத்தகு கயவர்க்கு அறிவு விளக்கம் பெறாது என்பது பற்றி, அவர் கொண்டு உள்ள “உணர்வு அற மருந்து அருள்க” என வேண்டுகிறார்.


No comments:

பொது --- 1116. கட்டம்உறு நோய்

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கட்டம்உறு நோய் (பொது) முருகா !உடம்பில் உயிர் உள்ளபோதே  தேவரீரை முத்தமிழால் ஓதி வழிபட அருள் புரிவாய். தத்த...