ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

=====


    “ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்” என்னும் அற்புதமான வாழ்வியல் உண்மையை முதன்முதலில் உலகுக்கு அறிவுறுத்தியவர் நமது கருமூலம் அறுக்க வந்த திருமூலநாயனார். இறைவன் ஒருவனே. “ஒருவனே போற்றி, ஒப்பு இல் அப்பனே போற்றி” என்றார் மணிவாசகப் பெருமான். “ஏகன், அநேகன்” என்பதும் மணிவாசகர் அருளிய அற்புதான சொற்றொடரே. இறைவன் ஒருவன்தான். அவனை வழிபடும் வழிகள் பல. இந்த உண்மையினை அவரே,  “தென்னா டுடைய சிவனே போற்றி, எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி” என்னும் சொற்றொடரால் விளக்கி அருள்கின்றார். அருள் நாட்டம் உடையவர்கள் சிவன் என்று அழைக்கின்றார்கள். மற்ற எந்த நாட்டமும் உடையவர்கள், அவரவர் வணங்கி வழிபடும் முறையில், அந்தச் சிவனே இறைவனாக (அவரவர் கருதும் பலவிதமான வடிவங்களை உடையவனாக) இருக்கின்றான். 


    இந்த உண்மையினை உணராத காரணத்தினால்தான் நம் நாடு சமயத்தால் பிளவுபட்டதோடு அல்லாமல், சமயத்தின் பேரால் மாறாட்டங்களும் போராட்டங்களும் நடைபெறுகின்றன. இன்னொரு பக்கம் சமய உணர்வே இல்லாதவர்கள, இறை நம்பிக்கை இல்லாதவர்களும் கூட, இந்த நாட்டின் சனாதன சமயத்தைப் பற்றி அவதூறாகப் பேசுகின்ற அவல நிலையும் உள்ளது. எந்தச் சமய அறிவும் இல்லாத ஒருவன் எப்படி, ஒன்றைத் தாழ்த்தியும், மற்றொன்றை உயர்த்தியும் பேச முடியும்? மனிதன் நிதானமாகச் சிந்தித்துச் செயலாற்றக் கடமைப் பட்டவன். அவ்வாறின்றி மனம் போன போக்கில் மதி இழந்த நிலையில்தான் பூசல்கள் தோன்றுகின்றன. மனித நேயமும், ஒருமைப்பாட்டு உணர்வும் கொண்டு ஒழுகும் வாழ்வும் தேவை என்பதை பட்டினத்து அடிகளார் உபதேசமாகக் காட்டுகிறார்.


“ஒன்று என்று இரு, தெய்வம் உண்டு என்று இரு, 

உயர் செல்வமெல்லாம்

அன்று என்று இரு, பசித்தோர் முகம் பார், 

நல்லறமும் நட்பும்

நன்று என்று இரு நடு நீங்காமலே நமக்கு இட்டபடி

என்று என்று இரு, மனமே! உனக்கு உபதேசம் இதே.”


என்று தெய்வம் உண்மையினையும், அது ஒன்றே என்பதையும், பிற செல்வங்களை நம்பி வேறுபாடாகாத நல்வாழ்வும் ஏழைக்கு இரங்கும் உளமும், அறமும், நட்பும் இவையாவும் வேண்டப்படுவன என்று நெஞ்சறிவுறுத்தலாகப் பாடி மனித குலத்தை ஆற்றுப்படுத்துகிறார். 


    இந்த ஒரு தெய்வ உணர்வு உள்ளத்தில் அரும்புமானால், பிற வேறுபாடுகளும் மிருக உணர்வுகளும் காழ்ப்பும் கசப்பும் உலகில் இல்லாமல் போகும். இன்றைய நிலையினை அன்றே எண்ணிய அருளாளர்கள் இவ்வாறு மன உணர்வால் வேறுபட்டவர்கள் இறைவனைக் காணமாட்டார்கள் என்றே கூறுவர். “இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி இரண்டாட்டாது ஒழிநது ஈசன் திறமே பேணிக் கவராதே தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே” என்கிறார் அப்பர் பெருமான். “அரன் அதிகன்; உலகு அளந்த அரி அதிகன் என்று உரைக்கும் அறிவிலோர்க்குப் பரகதி சென்று அடைவு அரிய பரிசேபோல்” என்பது கவிச் சக்கரவர்த்தியின் கூற்று. சமய வேறுபாடு கற்பித்து வாழும் மக்களைக் கம்பர் அறிவில்லாதார் என்கிறார். அவர்களுக்குப் பரகதி கிடையாது என்கிறார்.


    சமயப் பிணக்குக் கொண்டு, என் தெய்வம் உயர்ந்தது, என் தெய்வம் உயர்ந்தது என்று மயங்கி வாழும் மாக்கள் (விலங்குத் தன்மை பொருந்திய) உள்ளத்தில் இறைவன் விளங்கமாட்டான். சமரச உணர்வோடு இறைவனைப் போற்றுபவர் உள்ளத்திலேயே அவனைக் காண முடியும். இறைவன் திருவடியைப் புகழ்ந்து பாடிய வள்ளற்பெருமான், “எங்கள் பதம் எங்கள் பதம் என்று சமயத் தேவர் இசை வழக்கிடு நற்பதம்” என்று பாடுகின்றார்.


    சென்று சேர்வதற்கு உரிய பெரிய ஊர் ஒன்று.  அதனை அடையும் வழிகள் ஆறு உள்ளன, என்பது போன்று, அறுவகைச் சமயங்களும், முழுமுதற்பொருள் ஒன்றையே அடைவதற்குச் சாதனமாக உள்ளன. அவ்வாறாகவும் நாம் கூறும் இதுவே நன்று, பிறர் கூறும் அது தீது என்று சொல்லித் தம்முள் பிணங்கி வாதிட்டுத் திரியும் சமயவாதிகள் மலையைப் பார்த்துக் குரைக்கின்ற இழிந்த நாயினை ஒத்தவர் ஆவர் என்கிறார் திருமூல நாயனார்.


“ஒன்றது பேரூர், வழி ஆறு அதற்கு உள

என்றது போல இருமுச் சமயமும்;

நன்று இது, தீது இது என்று உரை ஆதர்கள்

குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே” -- திருமந்திரம்.


    எல்லாச் சமயங்களும் மக்கள் அறிவு நலம் பெற்று ஒழுகுதற் பொருட்டே அருளாளர்களால் வகுத்து அருளப்பட்டன.. அவற்றிடையே அமைந்த ஒருமை உனர்வினைக் காணமுயலாது, அவற்றின் வெளித் தோற்றத்தை மட்டும் கண்டு மருண்டு வாதித்துப் பிணங்குவோர் மலையைக் கண்டு மருண்டு குரைத்துக் கொண்டு கடிக்க ஒடும் நாயினைப் போன்று பிறர் கூறும் மொழியின் பொருளை உள்ளவாறு உணரும் தெளிவின்றித் தம் சொற்களைப் பயனில்லாதவைகளாகச் செய்கின்றார்கள். பிறரைக் குறை கூறுவதன் மூலம் தம்மை உயர்த்திக் கொள்ள எண்ணும் அறிவிலிகளின் செயல் இது.


    அவரவர் தாம் சார்ந்து உள்ள சமயத்தின் உண்மையை முழுமையாக உணரவேண்டும். மேலெழுந்த வாரியாகப் படித்துவிட்டோ, பிறர் சொல்லுவதைக் கேட்டோ. சமயங்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்தல் கூடாது. எல்லாச் சமய உண்மைகளையும் தெரிந்திருக்க வேண்டும். இதுவும் இல்லை. அதுவும் இல்லை. அவரவர் அறிவு நிலைக்கு ஏற்ப சமய உண்மைகளை உரைப்பார்கள். கற்பித்துக் கொள்ளுவார்கள். என் தாய் உயர்ந்தவள் என்றால், இன்னொரு அம்மையார் தாழ்ந்தவர் என்று கொள்வது எவ்வளவு அறியாமைக்கு உரியதோ, அதுபோலத்தான் சமய நிலைகளும். இவர்களை மலையைப் பார்த்துக் குலைக்கின்ற நாய்கள் என்றார் திருமூல நாயனார். மலையின் உண்மை இயல்பை மனிதனே இன்னமும் அறியாது உள்ளபோது, நாய் அறியாதுதானே. நாயின் இயல்பு என்ன?. குரைத்தல்தான். பேதையின் இயல்பு என்ன. தான் சொன்னதையே சாதிப்பது தான். மேலான இந்த உண்மையைத் தெளிந்து அடங்க வேண்டும். இதை,


"சமயவாதிகள் தத்தம் மதங்களே

அமைவதாக அரற்றி மலைந்தனர்"


 என்கிறார் மணிவாசகப் பெருமான். சமயவாதிகள் எல்லாம் தம் தம் மதங்களே ஏற்புடையதாகும் எனச் சொல்லி ஆரவாரித்துப் பூசலிட்டார்கள், பூசலிடுவார்கள், பூசலிட்டுக் கொண்டு இருப்பார்கள் என்பது இதன் பொருள்.


    சமயம் கடந்த உண்மையைச் சமயநெறி சார்ந்து தெளியவேண்டும். தெளிவு, அறிவு, ஞானம், அன்பு என்பவை அளவுக்குள் அடங்காதவை. அளவு அற்றவை. இதைத்தான், "தொட்ட அனைத்து ஊறும் மணல்கேணி, மாந்தர்க்குக் கற்ற அனைத்து ஊறும் அறிவு" என்று திருவள்ளுவ நாயனார் காட்டினார். மணல் கேணியை எந்த அளவுக்குத் தோண்டுகின்றோமோ அந்த அளவுக்குத் தண்ணீர் ஊறும். ஒருவன் எந்த அளவுக்கு நூல்களைக் கருத்து ஊன்றிப் பயிலுகின்றானோ,  அந்த அளவுக்கு அறிவு ஊறும். அதனால்தான் "பாடம் ஏறினும் ஏடு அது கைவிடேல்" என்றும் "ஓதுவது ஒழியேல்" என்றும் "ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்" என்றும் முதுமொழிகள் தோன்றின. படித்தல் வேறு. ஓதுவது வேறு.


    கறுப்புக் கண்ணாடி அணிந்தவனுக்கு, அவன் காணும்பொருள்கள் மங்கலாகவே தெரியும். சமயக் கண்ணோடு பார்ப்பவனுக்கு சமயம் மட்டுமே தெரியும். சமயம் கடந்த உண்மை தெரியாது. சமயம் எதை நமக்கு அறிவுறுத்த வந்தது என்றும் தெரியாது. மனக்கண்ணால் காணுங்கள். அறிவுக் கண்ணால் காணாதீர்கள். உங்களுடைய இன்றைய அறிவு, நாளை பொய்யாகலாம், மாறுபடலாம். நேற்று நீங்கள் சொன்னதை இன்று நீங்களே கூட மறுக்கலாம். உங்களுக்குப் பின் வந்த உங்கள் மகனோ மகளோ, ஏன் உங்களோடு உங்களுக்காகவே வாழுகின்ற உங்கள் வாழ்க்கைத்துணை கூட மறுக்கலாம். விருப்பு வெறுப்பு இல்லாமல் எதையும் கண்டால் நல்லது. 


"பித்தர்குணம் அதுபோல,ஒரு கால் உண்டாய்ப்

⁠பின் ஒருகால் அறிவு இன்றிப் பேதையோராய்க்

கத்திடும் ஆன்மாக்கள் உரைக் கட்டில்பட்டோர்

⁠கனகவரை குறித்துப் போய்க் கடற்கே வீழ்வர்."

 

எனவரும் அருள்நந்தி சிவச்சாரியார் பாடல் மேற்குறித்த திருமந்திரத்திற்கு உரிய விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்.

 

    சரயு நதியின் அழகைப் பாட வந்த கம்பர், மேற்குறித்த திருமந்திரப் பாடலின் கருத்தை வைத்துப் பின்வருமாறு பாடியுள்ளார்.


“கல் இடைப் பிறந்து போந்து

    கடல் இடைக் கலந்த நீத்தம்

எல்லை இல் மறைகளாலும் இயம்பு

    அரும் பொருள் இது என்னத்

தொல்லையின் ஒன்றே ஆகித்

    துறைதொறும் பரந்த சூழ்ச்சிப்

பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்

    போல் பரந்தது அன்றே.”    --- கம்பராமாயணம்.

 

இதன் பொருள் ---

 

    இமய மலையில் தோன்றி, அங்கிருந்து வந்து, கடலிலே கலந்துவிட்ட சரயு நதியின் வெள்ளமானது, அளவிட முடியாத வேதங்களாலும் சொல்லுதற்கரிய பரம்பொருள் போன்றது  இந்த வெள்ளம்’  என்று சொல்லும்படி, ஆதிமுதலில் ஒன்றாகவே  இருந்து, ஏரி குளம் முதலிய வேவ்வேறு இடங்களில் எல்லாம், விரிந்த ஆராய்ச்சியுடைய  பல்வேறு சமயவாதிகள் விளக்கி உரைக்கின்ற பரம்பொருள் போலப் பரந்து ஓடியது.

     பரம்பொருள் ஒன்று; அதுபோல வெள்ளநீரும் ஒன்றே. பல்வேறு சமய தத்துவங்களின் கருத்துக்கு ஏற்பப் பரம்பொருளும் வெவ்வேறு நாம,  ரூப பேதங்களைக் கொண்டு விளங்குகிறது.  அதுபோலவே சரயுவின்  வெள்ளநீரும் ஏரி,  குளம்,  கால்வாய் போன்ற பல இடங்களில் பல பெயர்களால் பரந்து செல்கிறது என்கிறார் கம்பர்.

 

தாயுமான அடிகளாரும், இக் கருத்தையே வலியுறுத்திப் பாடுகின்றார்...

 

“வேறுபடும் சமயம் எல்லாம் புகுந்து பார்க்கின்,

     விளங்கு பரம்பொருளே! நின் விளையாட்டு அல்லால்,

மாறுபடும் கருத்து இல்லை,முடிவில் மோன

     வாரிதியில் நதித்திரள்போல் வயங்கிற்று அம்மா.”

 

இதன் பொருள் ---

 

    ஒன்றோடு ஒன்று ஒவ்வாமல் முரண்பட்டுக் கொண்டிருக்கும் பலவகைச் சமயங்கள் அனைத்தினையும் புகுந்து ஆராய்ந்து பார்க்குமிடத்து, அனைத்திற்கும் மேலாகத் திகழும் தனிமுதற்பொருளே!  உன்னுடைய திருவிளையாடலே அல்லாமல் மாறுபாடு எய்தும் கருத்துகள் இல்லையாகும். பல ஆறுகளின் வெள்ளமானது,  கடலில் கலந்தபோது, கடல்நீரில் உள்ளது எந்த ஆறு என்று பகுத்து அறிய முடியாதவாறு போல முடிவில்லாத மவுனப் பெருங்கடலில், எல்லாச் சமயங்களும் கலந்து வேறுபாடு இன்றி, சமரசம் உற்று விளங்குகின்றன. 

 

    எனவே, எல்லாச் சமயங்களையும் சமரச உணர்வுடன் ஒப்ப மதித்தல். "ஆறு அனைத்தும் புகும் கடல்போல் சமய கோடி அத்தனையும் தொடர்ந்து புகும் ஆதி நட்பே" என்று தாயுமான அடிகளார் வேறு ஒரு பாடலிலும் காட்டி உள்ளார்.

 

இவ்வுண்மையை வள்ளல்பெருமானும்,

                           

“பொங்குபல சமயம் எனும் நதிகள் எல்லாம்

     புகுந்து கலந்திட, நிறைவாய்ப் பொங்கி ஓங்கும்

கங்குகரை காணாத கடலே! எங்கும்

     கண்ணாகக் காண்கின்ற கதியே! அன்பர்

தங்க நிழல் பரப்பி,மயல் சோடை எல்லாம்

     தணிக்கின்ற தருவே! பூந் தடமே! ஞானச்

செங்குமுதம் மலரவரு மதியே! எல்லாம்

     செய்யவல்ல கடவுளே! தேவ தேவே! “

 

என்று அருளிச் செய்தார்.

 

முன்னர்க் குறிப்பிட்டது போல, சமயங்களின் உண்மையைத் தெளிந்து அறிந்து கொள்ளமாலேயே, அவைகளுக்கு இடையில் உயர்வு தாழ்வு கற்பித்துப் பிணங்குவதே, சமயவாதிகளின் போக்காக உள்ளது என்பதை, அருணகிரிநாதப் பெருமானும்,  "கலகல கல என, கண்ட பேரொடு  சிலுகு இடு சமயப் பங்க வாதிகள்" என்றும், "சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள், சமய பஞ்ச பாதகர்" என்றும் தமது அருளிச் செயலாகிய திருப்புகழ்ப் பாடல்களில் காட்டி உள்ளார்.

 

    கடலானது எப்போதும் ஒவென்று இரைந்து கொண்டே இருக்கும். சமயவாதிகள் தத்தம் சமயமே சிறந்தது என்று கூறிப் பிற சமயத்தைப் பழித்தும் கடல் போல முழங்கி வாதிட்டும் போரிடுவர். அத்தகைய சமயவாதம் கூடாது. சமய வாதத்தால் இறைவனை உணர முடியாது. "சமயவாதிகள் பெற அரியது" என்றார் பிறிதொரு திருப்புகழில். "கலகல எனச் சில கலைகள் பிதற்றுவ" என்பார் அடிகள் பிறிதொரு திருப்புகழில். உயிரானது மெய்ஞ்ஞானத்தைப் பெற்று, ஞானமே வடிவாகிய இறைவன் திருத்தாளை அடைந்து, தன் செயல் ஏதும் இன்றி, சிவானந்தத் தேனை அனுபவிக்கும் நிலைக்குத் துணை புரிவதற்காக எழுந்தவையே சமய நூல்கள். சண்டையிட்டுப் பிணங்கி, அறிவழிந்து போவதற்கு அல்ல.

 

"உவலைச் சமயங்கள், ஒவ்வாத சாத்திரமாம்

சவலைக் கடல் உளனாய்க்கிடந்து,தடுமாறும்

கவலைக் கெடுத்து, கழல் இணைகள் தந்து அருளும்

செயலைப் பரவி, நாம்தெள்ளேணம் கொட்டாமோ"

 

என்பது மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகம்.

 

இதன் பொருள் ---

 

    பொய்யான சமயங்களும், ஒன்றுக்கு ஒன்று பொருந்தாத சாத்திரங்களுமாகிய குழப்பமான கடலில் அகப்பட்டுக் கிடந்து, தடுமாறுகின்ற துன்பத்தைப் போக்கி, தனது திருவடிகள் இரண்டையும் கொடுத்தருள்கின்ற திருவருட்செயலைப் போற்றி, நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

 

    ஆக, அருளாளர்கள் அனைவரும், அவரவர் சார்ந்து உள்ள சமயத்தின் உட்பொருளை உணர்ந்து தெளிந்து, திருவருள் பெற்று உயரவேண்டும் என்பது அல்லாமல், சமயக் கருத்துக்களைத் தெளியாமல், உயர்வு தாழ்வு கற்பித்து, ஒருவரோடு ஒருவர் பிணக்கம் கொண்டு அறிவிழந்து அழிந்து போதல் கூடாது என்றே அருளி உள்ளனர்.

 

    ஒரு சமயத்தைச் சார்ந்தவர், பிற சமயத்தாரை இகழ்ந்து, பரிகசிப்பது இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அவரவர் கொண்ட சமயத் தெய்வத்தைப் புகழ்ந்து பேசுவதும், பிற சமயத்தார் கருதும் தெய்வங்களை இகழ்ந்து பேசுவதும் நன்மையைத் தராது. ஆனால், இவ்வாறுதான் மனிதர்கள் உள்ளார்கள் என்பதை, கம்பர் அன்றே காட்டிவிட்டார்.

 

    மிதிலை நகரின் வீதிகளில் அழியா அழகு உடையவனாகிய இராமபிரான், தனது தம்பியோடும், விசுவாமித்திரரோடும் போகின்றான். அவனது அழகைக் கண்டு மயங்கிய பெண்களில்,  இராமனின் தோளைக் கண்டவர்கள், தோளை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தார்கள். தோள்களின் அழகில் மயங்கிய பெண்களுக்கு, மற்ற உறுப்புக்களின் அழகு தோன்றவில்லை. அப்படியே பிற உறப்புக்களைப் பார்த்தவர்களும் இருந்தனர். இது எப்படி இருந்தது? ஒவ்வொரு சமயத்தாரும் தங்கள் கடவுள்தான் உயர்ந்தவர் என்று கொண்டாடுகின்றார்கள். மற்ற மதங்கள் போற்றுகின்ற கடவுளர்களை ஏறெடுத்துப் பார்க்கக்கூட மாட்டாதவர்களைப் போல இருந்தது. சமயவாதிகள் யாரும், நாமரூபம் அற்ற கடவுளின் தன்மையை முழுமையாக உணரவில்லை என்பது போல, மிதிலை நகரில் உள்ள பெண்களில் யாரும் இராமனது முழு அழகைக் கண்டு களிக்கவில்லை.

 

“தோள் கண்டார் தோளே கண்டார்;

    தொடு கழல் கமலம் அன்ன

தாள் கண்டார் தாளே கண்டார்;

    தடக் கை கண்டாரும் அஃதே;

வாள் கண்ட கண்ணார் யாரே

    வடிவினை முடியக் கண்டார்?

ஊழ் கண்ட சமயத்து அன்னான்

    உருவு கண்டாரை ஒத்தார்.”   --- கம்பராமாயணம்.

 

இதன் பொருள் ---

 

    (மிதிலையில் இருந்த மகளிருள்) இராமபிரானது தோள்  அழகைக் கண்டவர்கள் (அவ்வழகை முற்றும் கண்டு, களித்து முடியாமையால், பிற உறுப்புக்களின் அழகைப் பார்க்க   இயலாமையால்) அத்தோள் அழகினையே கண்டவண்ணம் இருந்தார்கள். வீரக் கழல்கள் அணிந்த தாமரைப் பூக்கள் போன்ற (இராமனது) திருவடிகளைப் பார்த்தவர்கள் (வேறு    பார்க்காது) அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். (அவனது)  பெரிய திருக்கரங்களின் அழகைப் பார்த்தவர்களும் அவ்வாறே  (பிறவற்றை நோக்காது) அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  ஆகவே,  வாள் போன்ற ஒளி பொருந்திய கண்களை உடைய பெண்களுள் இராமனது திருமேனி அழகினை முழுவதும் பார்த்தவர்கள் ஒருவரும் இல்லை. (தமக்குத் தாமே ஒவ்வொரு) முறையினைக் கொண்ட சமயங்கள், பிற சமயங்கள் கூறும் தெய்வங்களின் வடிவங்களை நோக்காது, தமது தெய்வ வடிவங்களையே நோக்கியவாறு இருப்பது போல,  இராமனைக் காண வந்த மகளிர் (அப் பெருமானின்) உறுப்புக்கள்  பலவற்றையும் நோக்காது, அவர்கள் தாம் தாம் கண்ட ஓர் உறுப்பின் அழகிலேயே ஊன்றி நின்று விட்டனர். 


    தாயுமான அடிகளார், இன்றைய நிலையை எண்ணித்தான், “சமய கோடிகள் எல்லாம் தம்தெய்வம் எம்தெய்வம் என்று எங்கும் தொடர்ந்து, எதிர் வழக்கு இடவும் நின்றது” என்று அன்றே பாடி வைத்தார். ஆம்! இன்று உச்சநீதிமன்றம் வரை சென்று  வழக்கிடுவதையும், அதை நிலைநிறுத்த மேற்கொள்ளும் வாதங்களையும், அது உண்மை அல்ல என்பதை நிலைநிறுத மேற்கொள்ளும் எதிர்வாதங்களையும் எண்ணும்போது, மனிதன் அறியாமையாகிய இருட்கடலுள் மூழ்கி அறிவிழந்து இருப்பது தெளிவாகும். அறியாமையின் இன்னொரு பக்கம் என்பது, எல்லோரும் அறியக் கடவுள் மறுப்புத் தெரிவிப்பதும், யாரும் அறியாமல் கடவுள் வழிபாட்டை மேற்கொள்வதும் ஆகும்.


    இந்த வேறுபாடுகளை மறந்து, மேலே கண்டபடி பல அருளாளர்கள் காட்டிய வாய்மொழிகளையே ஒளி விளக்கங்களாகக் கொண்டு,  அறியாமை இருளை மாற்றி, ஒன்றே தெய்வம் என்ற உணர்விலே, ஒன்றிய செயலிலே, வேறுபாடற்று வாழ்வோமேயானால், அவரவர் வாழும் நாடும், மனித குலமும் நலம் பெறும். 



No comments:

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் =====      “ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்” என்னும் அற்புதமான வாழ்வியல் உண்மையை முதன்முதலில் உலகுக்கு அறிவுறுத்த...