திருமூலர் காட்டும் வாழ்வியல் நெறி

 

திருமூலர் காட்டும் வாழ்வியல் நெறி

-----

உலகில் நாள்தோறும் எண்ணற்ற உயிரினங்கள் பிறக்கின்றன; இறக்கின்றன. உலகின் நியதி பிறப்பும் இறப்புமாய் அமைந்துள்ளது. பிறக்கும் உயிர்கள் அனைத்தும் உண்டு வாழ்ந்து இறுதியில் முடிகின்றன. பிறப்பதும் இறப்பதுமேதான் வாழ்க்கையா? இதில் என்ன பெருமை உள்ளது? என்ற ஐயம் எழுதல் இயல்பு. "தோற்றம் உண்டேல் மரணம் உண்டு" என்கிறார் சுந்தரமூர்த்தி நாயனார். வான வீதியில் வலம் வரும் சந்திரனும் இதனை மக்களுக்கு உணர்த்தி வருகிறான். மாதத்தில் பதினான்கு நாட்கள் வளர்வதும் பின் பதினான்கு நாட்கள் தேய்வதும் சந்திரனின் நியதியாக அமைகிறது என்பதனை, "தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும், மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும் அறியாதோரையும் அறியக் காட்டித் திங்கள் புத்தேள் திரிதரும் உலகம்" என்கிறது புறநானூறு. இதுதான் நிலையாமை ஆகும். இந்த நிலையாமையை வற்புறுத்தும் நாலடியார் பாடல் ஒன்று "இன் இனியே நின்றான், இருந்தான், கிடந்தான், தன் கேள் அலறச் சென்றான்" என்று கூறும். அருணகிரிநாதப் பெருமான், "பெரும் காரியம் போல் வரும் கேடு உடம்பால், ப்ரியம் கூர வந்து கரு ஊறி, பிறந்தார், கிடந்தார், இருந்தார், தவழ்ந்தார், நடந்தார், தளர்ந்து பிணம் ஆனார்" என்றி நிலையாமையை அறிவுறுத்துகின்றார்.

திருவள்ளுவ நாயனாரும், நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்பதே இவ்வுலகிற்குப் பெருமையாக அமைகிறது என்ற கருத்தில், "நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ் வுலகு" என்று அருளினார். "இன்று உளார் நாளை இல்லை என்னும் பொருள் ஒன்றும் ஓராது உழிதரும் ஊமர்காள்" என்கிறார் அப்பர் பெருமான். "நேற்று உள்ளார் இன்று மாளா நின்றனர், அதனைக் கண்டும் போற்றிலேன் நின்னை, அந்தோ! போக்கினேன் வீணே காலம்" என்று புலம்புகின்றார் தாயுமான அடிகளார்.

இந்த நிலையாமையினை உணர்ந்து கொள்கிற பொழுதுதான், இவ்வுலகில் நம்மால் நிலைத்த சில செயல்களைச் செய்ய முடியும். நிலையில்லாத இந்த உலகத்தில் தமது பருவுடல் அழிந்த பின்னும் புகழுடல் நிலைத்து இருக்குமாறு வாழ்ந்து பிற்காலச் சந்ததியினருக்கு வழி காட்டிச் சென்றவர்கள் நமது முன்னோர் என்பதை "மன்னா உலகில் மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே" என்னும் புறநானூற்றுப் பாடல் வரிகளால் அறியலாம்.

நிலையாமை என்னும் நிலைத்த உண்மையை மக்கள் மனதில் நன்கு பதியும் வண்ணம் உணர்த்தியவர் நமது கருமூலம் அறுக்கவந்து அவதரித்த திருமூல நாயனார் ஆவார். அன்றாட வாழ்க்கையில் நிகழும் எளியதொரு நிகழ்ச்சியைக் கொண்டே உலகில் பிறந்த எவரும் புரிந்து கொள்ள வேண்டிய நிலையாமைக் கோட்பாட்டினை உணர்த்தி உள்ளார்.  மனிதர் ஓயாமல் எப்போதும் உழைத்துக் கொண்டிருப்பது வயிற்றுப் பாட்டுக்கே என்பது எளிதில் புலப்படும். 

"உண்பது நாழி, உடுப்பது நான்குமுழம்,

எண்பது கோடிநினைந்து எண்ணுவன,-கண்புதைந்த

மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்

சாந்துணையும் சஞ்சலமே தான்."

என்கிறார் ஔவைப் பிராட்டியார்.

இதன் பொருள் ---

உண்பது ஒரு நாழி அரிசி அன்னமே ஆகும். உடுப்பது நான்கு முழ உடையே ஆகும். இப்படியாகவும், நினைத்து எண்ணும் காரியங்களோ எண்பது கோடியாகின்றன. எனவே, அகக்கண் குருடாய் இருக்கிற மக்களின் குடிவாழ்க்கையானது மட்கலம்போல இறக்கும் அளவும். அவர்க்குத் துன்பமாகவே இருக்கிறது.

தலைவி ஒரு செல்வந்தர் வீட்டுப் பெண். அவள் தன் வீட்டில்  செல்லமாக வளர்ந்தவள். அவளுக்குச் சமைத்துப் பழக்கமில்லை. சாப்பிட்டுத்தான் பழக்கம். திருமணம் முடிந்தவுடன் தன் கணவனுடன் குடித்தனம் போய்விட்டாள். ”அவளுக்குச் சமைக்கத் தெரியாதே! அவள் என்ன செய்கிறாளோ? எப்படிக் குடும்பம் நடத்துகிறாளோ?” என்று தலைவியின் தாய் வருந்துகிறாள். அப்பொழுது அங்கு வந்த தலைவியின் செவிலித்தாய் (தலைவியை வளர்த்தவள்) தான் போய்த் தலைவி எப்படி இருக்கிறாள் என்று பார்த்து வருவதாகத் தலைவியின் தாயிடம் சொல்லிவிட்டு, தலைவியின் வீட்டிற்கு போகிறாள். அங்கு, தலைவி மோர்க்குழம்பு செய்வதையும், கணவனுக்கு அவள் அதைப் பரிமாறும் காட்சியையும்,  ”நீ சமைத்த மோர்க்குழம்பு மிகவும் இனிமையாக இருக்கிறது” என்று சொல்லி,  மகிழ்ச்சியோடு அவள் கணவன் உண்ணுவதையும், கணவனின் பாராட்டுதலைக் கேட்ட தலைவி புன்முறுவல் பூப்பதையும் பார்த்த செவிலித்தாய், அந்தக் காட்சியைத் தலைவியின் தாயிடம் வந்து கூறுகிறாள் என்று "குறுந்தொகை" என்னும் நூல் கூறுகிறது.

"முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்

கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்

குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்

தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்

இனிது எனக் கணவன் உண்டலின்,

நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே." 

கோசலை நாடு உடைய வள்ளல் இராமபிரானைப் பிரிந்து,  அசோகவனத்தில் இருக்கும் சீதையும் தன் வருத்தத்தினை அனுமனுக்குப் புலப்படுத்தும் நிலையினைக் கம்பநாட்டாழ்வார் பின் வருமாறு காட்டுவார்.

"அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும்? என்று அழுங்கும்;

விருந்து கண்டபோது என் உறுமோ? என்று விம்மும்;

மருந்தும் உண்டுகொல் யான்கொண்ட நோய்க்கு? என்று மயங்கும்;

இருந்த மாநிலம் செல் அரித்து எழவும் ஆண்டு எழாதாள்."     --- கம்பராமாயணம்.

இதன் பொருள் ---

தான் அமர்ந்துள்ள இடப் பரப்பானது  கரையானால் அரிக்கப் பெற்றுப் புற்று தோன்றினும், அவ்விடத்திருந்து பெயர்ந்து போகாத பிராட்டி,  உண்ணும் மெல்லிய இலைக்கறி உணவை இராமபிரான் எவர் பரிமாற உண்பார் என்று கூறி  இரங்கித் துன்புறுவாள். பரிமாறும் நான் பக்கத்தில் இல்லாமையால். விருந்தினரைப் பார்க்கும் சமயத்தில் என்ன துன்பம் அடைவாரோ என்று நினைந்து ஏக்கம் உறுவாள். இப்படி நானே வரவழைத்துக் கொண்ட பிணிக்கு மருந்தும் உள்ளதோ என்று கூறி சோர்வு அடைவாள். 

திருமூல நாயனார் நிலையாமையினை உணர்த்துவதற்குத் தேர்ந்தெடுத்த காட்சியும் இந்த இல்லறக் காட்சியே ஆகும். பொருள் ஈட்டி வந்த கணவன் மனைவியிடம் அவற்றைத் தந்து சிறந்த முறையில் அன்று உணவு அமைய வேண்டும் என்று குறிப்பிட்டான். அவளும் தன் கைத்திறன் எல்லாம் காட்டி அருமையான, அறுசுவை மிக்க உணவைச் சமைத்திருந்தாள். கணவனும் மிக விரும்பி உண்டான். உண்டவுடன் கணவனும் மனைவியும் மகிழ்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள். கணவனுக்கு மனைவி வெற்றிலை மடித்துச் சுவைக்கக் கொடுத்துக் கொண்டிருந்தாள். இவ்வாறான நிலை சற்று நேரமே நீடித்தது. திடீரென்று கணவன் தன் இடப்பக்க மார்பு சிறிது வலிக்கிறது என்றான். கீழே சாய்ந்து படுத்தான். அவ்வளவில் அவன் உயிர் உடற்கூட்டை விட்டுப் பறந்து சென்றது. 

"அடப் பண்ணி வைத்தார், அடிசிலை உண்டார்,

மடக் கொடியாரொடு மந்தணம் கொண்டார்,

இடப்பக்கமே இறை நொந்தது இங்கு என்றார்,

கிடக்கப் படுத்தார், கிடந்து ஒழிந்தாரே."  ---  திருமந்திரம்.

இத்தோடு விட்டாரா என்றால், அதுதான் இல்லை. இறந்தவனைச் சுற்றி உற்றாரும் உறவினரும் ஊராரும் போரொலி எழுப்பி அழுகின்றனர். இதுவரை பெற்றோரிட்ட பெயரும், மற்றோரிட்ட பெயரும், பெற்ற பட்டப் பெயர்களும் ஒருங்கே நீக்கப் பெற்று, பிணம் என்றே எல்லோரும் அழைக்கும் நிலை வந்து விடுகின்றது. அதுமட்டுமா! சுடுகாட்டிற்குச் சுமந்து சென்று அங்கே சுடலையில் வைத்து இதுகாறும் அரிதின் முயன்று அழகுபடுத்தப் பட்டுக் காக்கப்பட்டு வந்த உடலைத் தீக்கு இரையாக்குகிறார்கள். அவ்வாறு தீ மூட்டிய பின்,  உறவினரும் மற்றோரும் தீட்டுப் போக நீரில் மூழ்கிக் குளித்து இறந்தவனைப் பற்றிய நினைப்பையும் ஒழித்து விடுகிறார்கள் என்கிறார் திருமூலர்.

"ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு,

பேரினை நீக்கி, பிணம்என்று பேரிட்டு,

சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு,

நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே."    --- திருமந்திரம்.

பாவும் உண்டையுமாக மாறி மாறிக் கூடும் இழைகளை நன்கு செப்பப் படுத்தி, விலை வரம்பு செய்யப்பட்ட பட்டாடை என்றும் அவ்வாறே இருப்பது இல்லை. நாளடைவில் நைந்து கிழிந்து போவதைப் பார்த்திருக்கிறோம். பட்டு ஆடையை உடுத்தி மகிழாமல், மடித்து வைத்துப் பாதுகாப்பது இயல்பு ஆகும். அதுபோலவே, இந்த உடம்பை அறச் செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ளாமல் பாதுகாத்து, வாழ்நாளைக் கழித்து வீணாக்குகின்றோம். அது மட்டும் அல்லாமல், பிறந்த நாள் என்று குறித்துக் கொண்டாடப்படுகின்ற ஒரு நாளானது ஓர் ஆண்டின் முடிவாகவும், அடுத்த நாளானது அடுத்த ஆண்டின் தொடக்கமாகவும் கழிகின்ற போதே, கறுத்த தலைமுடியானது நரைத்து வெளுத்துப் போகும் என்பதை அறிவிப்பதாக உள்ளதைக் காண்கிறோம். இருந்தும் மக்கள் எல்லோரும் தமது அறிவும் ஆற்றலும் இன்று உள்ளது போலவே என்றும் இருக்கும் என்று மகிழ்ந்து இருப்பது அறியாமை ஆகும் என்கிறார் திருமூல நாயனார்.

"மாறு திருத்தி வரம்பு இட்ட பட்டிகை

பீறும், அதனைப் பெரிது உணர்ந்தார் இ(ல்)லை;

கூறும் கருமயிர் வெண்மயிர் ஆவதும்

ஈறும் பிறப்பும் ஓர் ஆண்டு எ(ன்)னும் நீரே."  --- திருமந்திரம்.

எனவே, நிலையாமையே நிலைபெற்றிருக்கின்ற இவ்வுலகத்தில் மக்கள் செய்ய வேண்டிய செயல்களைப் புலப்படுத்தி, அவர்கள் வாழ வேண்டிய நெறியினை வகையுற எடுத்துக் காட்டுகின்றார் திருமூல நாயனார்.   உள்ளத்தை ஒருமுகப்படுத்தி, காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி, இறைவனை வணங்குவதும், இல்லை என்று வந்தோர்க்கு இல்லை என்னாது தம்மிடத்தில் உள்ளதைக் கொடுத்து உதவுவதும், யாவரிடத்தும் அன்போடு உசாவுவதும் வாழ்வியில் நெறி என்பதனை அறிவுறுத்துகின்றார்.

"படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்

நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா;

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே."    --- திருமந்திரம்.

படம்போல எழுப்பி வைத்திருக்கிற மாடக் கோயிலில் உள்ள இறைவனுக்கு ஒன்றைக் கொடுத்தால், அது நடமாடுகிற கோயிலாகிய நம்மவர்களுக்குப் போய்ச் சேராது. ஆனால் நடமாடுகிற கோயிலாகிய நம்மவர்களுக்கு ஒன்று கொடுத்தால், அது படமாடக் கோயிலின் இறைவனுக்கு மிக உறுதியாய்ப் போய்ச் சேரும்.

"யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை;

யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை;

யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி;

யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே."  --- திருமந்திரம்.

இறைவனுக்குப் படையல் போட்டுத்தான் வணங்க வேண்டும் என்பதில்லை. எளிமையாகப் பச்சிலை கொடுத்து வணங்கினாலே போதும். பசுவுக்குப் பூசை செய்ய வேண்டும் என்பதில்லை. பூசை செய்வோர்க்குப் பசுவைத் தானமாக வழங்கவேண்டும் என்பதில்லை. பசுவுக்கு ஒரு கைப்பிடி புல் கொடுத்தாலும் போதும். பசித்து இருப்பவர்க்கு அறுசுவை உணவு கொடுக்க வேண்டும் என்பதில்லை. உண்ணும்போது தான் உண்கிற உணவில் ஒரு கைப்பிடி கொடுத்தாலும் போதும். புகழ்ந்துரை செய்து யாருடைய முதுகையும் சொறிய வேண்டும் என்பதில்லை.  யாவரிடத்தும் அன்போடு சொல்லாடினாலே போதும்.

எனவேதான், மேலோர் வகுத்துச் சென்ற அறங்களில் எல்லாம் மேலானது,  தமக்குக் கிடைத்த உணவினைப் பிறருக்கும் பகிர்ந்து கொடுத்து வாழ வேண்டும் என்பதே என்கிறார் திருவள்ளுவ நாயனார்.

"பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை."

தமக்குக் கிடைத்த உணவின் ஒரு பகுதியைப் பிறர்க்கென வழங்கும் நல்ல மனம் வேண்டும்; அது எல்லோராலும் இயல்வது என்பதால், "யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒருகைப்பிடி" என்றார் திருமூல நாயனார்.

இனிய சொற்கள் இருக்க, கடும் சொற்களைப் பேசுவது, உண்ணுவதற்கு இனிய கனி இருப்ப, காயினை விரும்பி உண்ணுவதனை ஒக்கும் என்பாராய், "இனிய உள ஆக, இன்னாத கூறல்  கனி இருப்பக்  காய் கவர்ந்த அற்று" என்றார் திருவள்ளுவ நாயனார்.  பிறர் மனம் வருந்தப் பேசாமல், அவர் மனம் உவக்கப் பேசும் திறத்தில் வல்லவராகத் திகழ வேண்டும், இதுவும் எல்லோராலும் கடைப்பிடிக்கக் கூடியதுதான் எனக் காட்ட "யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே" என்றார் திருமூல நாயனார்.

எனவே, உடம்பின் நிலையாமையை உணர்ந்து, அதனால் பெறவேண்டிய பயனை, அது உள்ளபோதே பெற்றுக் கொள்ளுதல் அறிவுடைமை ஆகும். மணப் பிள்ளையே உயிர் கழிந்த பிணமாகவும், மண வாத்தியமே சாவுக்கு அடிக்கின்ற பறையாகவும், அணியப்பட்ட கலன்களையுடைய மங்கல மகளிரின் வாழ்த்தொலியே அழுகை ஒலியாகவும் மாறி முடிய, கணப்பொழுதில் தோன்றி மறையும் இவ்வுடலினால் ஆன பயனை அறிவுடையார் பெறுவர். அறிவு சிறிதும் இல்லாதவர்க்கு அப்பயன் எய்துதல் சிறிதும் இல்லை என்று கூறுகிறது திருவிளையாடல் புராணம்.

"மணமகனே பிணமகனாய்,

         மணப்பறையே பிணப்பறையாய்,

அணியிழையார் வாழ்த்தொலி போய்,

         அழுகை ஒலியாய்க் கழியக்

கணம் அதனிற் பிறந்து இறும் இக்

         காயத்தின் வரும்பயனை

உணர்வு உடையார் பெறுவர், உணர்வு

         ஒன்றும் இலார்க்கு ஒன்றும் இலை."

உடம்பின் நிலையாமை குறித்து, "குமரேச சதகம்" என்னும் நூல் கூறுமாறு காண்க...

"மனு, நல் மாந்தாதா முன் ஆனவர்கள் எல்லோரும்

     மண்மேல் இருந்து வாழ்ந்து

மடியாது இருந்தபேர் இல்லை; அவர் தேடியதை

     வாரி வைத்தவரும் இல்லை;

பனி அதனை நம்பியே ஏர்பூட்டு கதையெனப்

     பாழான உடலைநம்பிப்

பார்மீதில் இன்னும்வெகு நாளிருப்போம் என்று

     பல்கோடி நினைவை எண்ணி

அனிதமாய் விருதாவில் மாய்வதே அல்லாமல்,

     அன்பாக நின்பதத்தை

அர்ச்சித்து முத்திபெறல் வேண்டும் என்று எண்ணார்கள்;

     ஆசை வலையில் சுழலுவார்;

வனிதையர்கள் காம விகாரமே பகையாகும்,

     மற்றும்ஒரு பகையும்உண்டோ?

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.

இதன் பொருள் ---

மயல்மீது இவர்ந்து அருட்திருவிளையாடல் புரியும் குகப் பெருமானே! திருப்புல்வழல் என்னும் திருத்தலத்தில் மலை மீது கோயில் கொண்டு அருளிய குமாரக் கடவுளே! மனு என்னும் அரசனும், நற்குணமுடைய மாந்தாதா முதலானவர்கள் எல்லாரும்,  மண்ணுலகில் நீண்டநாள் இருந்து வாழ்ந்தாலும் இறவாமல் இருந்தவர்கள் எவரும் இல்லை; சிறிது சிறிதாக சேர்த்த பொருளைத் தம்முடன் எடுத்துச் செல்ல அள்ளி வைத்தவர்களும் இல்லை; பனி பெய்ததால் ஈரமிருக்கும் என்று நம்பிக்கை வைத்து ஏரைப் பூட்டும் அறிவின்மைபோல, அழியும் உடலை நிலையானது என்று நம்பிக்கை கொண்டு, உலகிலே மேலும் நீண்டகாலம் வாழ்வோம் என, பல கோடிக்கணக்கான நினைவுகொண்டு, நெறிகெட்டு வீணில் இறப்பதே அன்றி, அன்புடன் உன் திருவடியில் மலரிட்டு வணங்கி, வீடுபேற்றை அடையவேண்டும் என நினையார்கள்; ஆசையாகிய வலையில் அகப்பட்டுத் திகைப்பார்கள்; அவர்களுக்குப்) பெண்களைக் காமநோக்குடன் பார்ப்பதே கெடுதி தரும்; வேறொரு பகை இல்லை.

நிலையாமைக்கு இடமான உடம்பைக் கொண்டு, பெறவேண்டிய நிலையான பயன் குறித்து, "அறப்பளீசுர சதகம்" என்னும் வாழ்வியல் வழிபாட்டு நூல் கூறுவது காணலாம்.

"காயம்ஒரு புற்புதம்! வாழ்வு மலை சூழ்தரும்

      காட்டில் ஆற்றின் பெருக்காம்!

  கருணைதரு புதல்வர்கிளை மனை மனைவி இவை எலாம்

      கானல் காட்டும் ப்ரவாகம்!

மேயபுய பலவலிமை இளமைஅழகு இவை எலாம்

      வெயில்மஞ்சள்! உயிர் தானுமே,

  வெட்டவெளி தனில்வைத்த தீபம் எனவே கருதி,

      வீண்பொழுது போக்காமலே.

நேயம் உடனே தெளிந்து அன்பொடு உன் பாதத்தில்

      நினைவு வைத்து, இருபோதினும்

  நீர்கொண்டு மலர்கொண்டு பரிவுகொண்டு அர்ச்சிக்க

      நிமலனே! அருள்புரி குவாய்

ஆயும் அறி வாளர்பணி பாதனே! போதனே!

      அண்ணல்எம தருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

      அறப்பளீ சுரதே வனே!         

 இதன் பொருள் ---

      தூயவனே! ஆராய்ந்த அறிவினை உடையவர்கள் பணிந்து வணங்கும் திருவடிகளை உடையவனே!  அறிவு வடிவானவனே!  தலைவனே! எமது அரிய மதவேள் என்பான், எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,  சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

இந்த உடம்பு ஒரு நீர்க்குமிழியைப் போன்றது. இந்த வாழ்க்கையானது மலையைச் சுற்றியுள்ள காட்டிலே ஓடுகின்ற ஆற்று வெள்ளம் ஆகும். அன்புக்கு உரிய மக்கள்,  உறவினர்,  தேடிய வீடு,   மனைவி ஆகிய இவைகளெல்லாம் கானல் நீர் காட்டுகின்ற வெள்ளம். பொருந்திய தோள் வலிமை, இளமை,  அழகு, ஆகிய இவை எல்லாம் காலையிலும் மாலையிலும் காணப்படும்  மஞ்சள் நிறமுள்ள இளவெயில். இந்த உடலில் தங்கி உள்ள உயிரும் திறந்த வெளியில் ஏற்றப்பட்ட விளக்கு என்றே நினைத்து,  வாழ்நாளை வீணே கழிக்காமல்,  அறிவுத் தெளிவை அடைந்து,  உன் திருவடிகளில் அன்பு பூண்டு, காலை மாலை ஆகிய இரு வேளைகளிலும் நீரையும் பூவையும் கொண்டு அன்புடன் வழிபட அருள் புரிவாய்.

          நீரிலே தோன்றுகின்ற குமிழானது மிகவும் அழகாக இருக்கும். ஆனால், எப்போது அது அழியும், எப்படி அழியும் என்று தெரியாது. அதுபோலவே, இந்த உடம்பானது தொடக்கத்தில் மிகமிக வனப்பாகவே இருக்கும். ஆனால், நாளாக நாளாக, நம்மை அறியாமலே முதுமை வந்துகொண்டே இருக்கும். அது எப்போது அழியும் என்பதும் தெரியாது.  எப்போதும் இருக்கும் என்று கருதியே, அதை அழகு செய்வதும், உண்டி முதலியவற்றால் அதை வலிமை பெறச் செய்வதுமாகவே இருக்கின்றோம். 

இவ்வாறாகத் திருமூல நாயனார் இவ்வுலக வாழ்வின் நிலையாமையினை மனத்தில் பதியும் வண்ணம் தெள்ளத் தெளிய உணர்த்திப் பின் வையத்துள் வாழ்வாங்கு வாழும் நெறியினை வகையுற அறிவுறுத்துகின்றார். இதுவே திருமூலர் காட்டும் வாழ்வியல் நெறி ஆகும்.

வாழும் நெறி

 

வாழும் நெறி

-----


"அரிது அரிது, மானிடர் ஆதல் அரிது;

மானிடர் ஆயினும், கூன்குருடு செவிடு

பேடு நீங்கிப் பிறத்தல் அரிது;

பேடு நீங்கிப் பிறந்த காலையும்,

ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;

ஞானமும் கல்வியும் நயந்த காலையும்,

தானமும் தவமும் தான்செயல் அரிது;

தானமும் தவமும் தான்செய்வர் ஆயின்,

வானவர் நாடு வழிதிறந் திடுமே."

என்று ஔவைப் பிராட்டியார் அருளினார். உயர்ந்த மானிடப் பிறவியின் நோக்கம், ஞானமும் கல்வியும் நயத்தில் என்றும், தானமும் தவமும் புரிதல் என்றும் உணர்த்தி அருளினார். தானம் என்பது பிறருக்காகச் செய்வது. தவம் என்பது தனக்காகச் செய்வது. தானம் "எனது" என்னும் புறப்பற்று ஆகிய மமகாரத்தை அறுக்கும். தவம் என்பது "நான்" என்னும் அகப்பற்று ஆகிய அகங்காரத்தை அறுக்கும். அகப்பற்றும் புறப்பற்றும் அறுதலே மானிடப் பிறவியின் நோக்கம். மானிடப் பிறவியே பெறுதற்கு அரியது என்பதால், "பெறுதற்கு அரிய பிறவி" என்றார் திருமூல நாயனார். "பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்" என்பார் அருணகிரிநாதர்.

பெறுதற்கு அரியது மானிடப் பிறவியை எடுத்து வந்த மக்கள், மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து, நல்ல கதியை அடைதல் வேண்டும். அதற்குச் சில நெறிமுறைகளைப் பின்பற்றுதல் வேண்டும். 'எப்படியாவது வாழலாம்'  என்பதை விடுத்து, 'இப்படித்தான் வாழ வேண்டும்'  என்று உள்ளத்தில் உறுதி பூண்டு, வாழ்ந்து காட்ட வேண்டும். அதுவே மானிடத்தின் குறிக்கோள் ஆகும். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை கெட்டுப் போகும். "குறிக்கோள் இல்லாது கெட்டேன்"  என்பார் அப்பர் பெருமான். உயர்ந்த தொண்டு நெறியைத் தமது குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த அப்பர் பெருமானே இவ்வாறு சொல்லிக் கொள்வாரானால், நமது வாழ்க்கை எவ்வாறு அமைதல் வேண்டும் என்பது சொல்லமாலே விளங்கும். 

நில்லாமை என்பதே நிலையாக இருக்கின்ற இந்த உலகில் நிலைபெற்று வாழவேண்டும் என்று எண்ணியவர்கள், தமது புகழ் நிலைக்கக் கூடிய வகையில் சில சிறந்த செயல்களைச் செய்துவிட்டு மாண்டு போனார்கள். "மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே" என்கிறது புறநானூறு. நிலையில்லாத இந்த உலகத்தில், தமது புகழ் நிலைத்து இருக்கவேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள், தம்முடைய புகழை நிலைநிறுத்தத் தமது உயிரையும் விட்டிருக்கின்றனர். அதே நேரத்தில், "துன் அருஞ் சிறப்பின் உயர்ந்த செல்வர், இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின், தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே" என்றும் கூறுகிறது புறநானூறு. நெருங்க முடியாத பெரும் செல்வச் சிறப்பை உடைய செல்வர்கள், பசி என்று யாசித்து வருபவர்களுக்குத் தமது பொருளைத் தந்து உதவாத காரணத்தால், புகழுக்காகத் தமது உயிரையும் கொடுக்கும் பெருமை மிக்க சான்றோர் காட்டிய வழியில் செல்லத் தெரியாதவர்களும் இருக்கின்றார்கள.

முதலாவதாக, நமக்கு வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோள்கள் இருக்க வேண்டும். அவ்வாறு உயர்ந்த குறிக்கோள்களை அடையப் பாடுபடும் பொழுது, அவ்வுயர்ந்த குறிக்கோள்களை அடைய முடியாமல் போனாலும் கவலையில்லை. முயல் வேட்டையாடி மனம் சோர்ந்து போவதைவிட, யானை வேட்டையாடித் தோற்றுப் போவது மேல் என்பார் திருவள்ளுவ நாயனார்.

"கான முயல் எய்த அம்பினில், யானை 

பிழைத்த வேல் ஏந்தல் இனிது" --- திருக்குறள்.

எனவே, உயர்ந்த குறிக்கோள்கள் நமது வாழ்க்கையின் இலக்காக அமைய வேண்டும். அப்பொழுதுதான் சில அரிய செயல்களை நமக்காகவும் சமுதாயத்திற்காகவும் ஆற்ற முடியும்.

"மனிதர்க்கு வயது நூறு அல்லது இல்லை;

ஐம்பது இரவில் அகலும் துயிலினால்;

ஒட்டிய இளமையால் ஓர் ஐந்து நீங்கும்;

ஆக்கை இளமையில் ஐம்மூன்று நீங்கும்;

எழுபதும் போக நீக்கி இருப்பது முப்பதே;

அவற்றுள்

இன்புறு நாளும் சிலவே, அதாஅன்று

துன்புறு நாளும் சிலவே, ஆதலால்

பெருக்கு ஆறு ஒத்தது செல்வம், பெருக்கு ஆற்று

இடிகரை ஒத்தது இளமை,

இடிகரை வாழ் மரம் ஒத்தது வாழ்நாள், ஆதலால்

ஒன்றே செய்யவும் வேண்டும், அவ்வொன்றும்

நன்றே செய்யவும் வேண்டும், அந் நன்றும்

இன்றே செய்யவும் வேண்டும், அவ்வின்றும்

இன்னே செய்யவும் வேண்டும், அவ்வின்னும்

நாளை நாளை என்பீர் ஆகில், நாளை

நம்முடை முறைநாள் ஆவதும் அறியீர்!

நமனுடை முறைநாள் ஆவதும் அறியீர்!".    --- கபிலர் அகவல்.

இதன் பொருள் ---

பிறந்த மனிதர்க்கு வாழ்நாள் என்பது நூறு ஆண்டுகளுக்கு மேல் இல்லை. அவ்வாறு விதிக்கப்பட்ட வாழ்நாளில், ஐம்பது ஆண்டுகள் உறக்கத்தில் கழியும். பொருந்தி வந்த குழந்தைப் பருவத்தில் ஐந்து ஆண்டுகள் கழிந்து போகும். இளமைப் பருவமாகப் பதினைந்து ஆண்டுகள் கழியும். ஆக, இவ்வாறு எழுபது ஆண்டுகள் கழிந்த நிலையில் எஞ்சி இருப்பவை முப்பது ஆண்டுகளே, அவ்வாறு எஞ்சி நின்ற அந்த முப்பது ஆண்டுகளுள்ளும், மகிழ்ச்சியோடு வாழ்வதும் சில நாள்களே. அதுவும் அல்லாமல், துன்பத்தை அடைகின்றதும் சில நாள்களே. தோன்றிச் சில நாள்களிலே குறைந்து போகின்ற நீர்ப் பெருக்கினை ஒத்தது செல்வம் ஆகும். நீர்ப் பெருக்கால் அழிந்து போகின்ற வலிமை அற்ற கரையைப் போன்றது, தேடிய செல்வத்தை அனுபவித்தற்கு உரிய இளமை என்னும் செழுமை, செல்வத்தோடு இருந்து வாழுகின்ற நாள்கள், இடிந்து போகின்ற வலிமை அற்ற கரையின் மேல் உள்ள மரங்களைப் போன்றது ஆகும், ஆதலினாலே, நீங்கள் ஒரு செயலைச் செய்ய வேண்டும். அந்த ஒரு செயலும் அறச் செயலாகவே செய்ய வேண்டும். அந்த அறச் செயலையும் இன்றைய நாளிலேயே செய்யவேண்டும். அதையும் இந்தப் பொழுதிலேயே செய்ய வேண்டும். அந்தப் பொழுதையும் விடுத்து, நாளைய பொழுது செய்வோம் என்று, இருக்கின்ற காலத்தை வீணாகக் கழிப்பீர்களானால், நாளைப் பொழுது என்பது நம்முடைய உயிர் நிலைத்திருக்கும் நாள்தானா என்பதை உங்களால் அறிந்து கொள்ள முடியாது. நாளை என்கின்ற அந்த நாள், நமது உயிரைக் கொண்டு போக வருகின்ற இயமனுடைய நாளாக இருக்கலாம் என்பதும் உங்களால் அறிந்து கொள்ள முடியாது.

வாழ்நாளைப் பயனுடையதாக ஆக்கிக் கொள்ளும் முயற்சி வேண்டும். ‘புகழும் இன்பமும் அறமும் ஆகிய இம்மூன்றும் சோம்பல் உடையாரிடம் தவறிக்கூட உண்டாவதில்லை’ என்று  முன்னோர் கூறினர்.

"இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்

அசைவுடன் இருந்தோர்க்கு அரும்புணர்வு இன்ம்" --- நற்றிணை.

"இம்மையிலே சிறந்ததாகிய புகழும், இல்லறத்தை ஆற்றுதலாகிய இன்ப வாழ்வும், மறுமைக்கு இன்பம் தருதலாகிய கொடையும் என்னும் மூன்றும், ஒருவனுக்கு இன்றியமையாதன ஆகும். செயல் அற்றவராகச் சோம்பி இருந்தோர்க்கு இம்மூன்று பயன்களும் அரிதாகக் கூட வந்து அடைவதில்லை”

எனவே, வாழ்வியல் நெறிகளைச் செம்மையாக வைத்துக் கொள்ள விரும்புவோர், சோம்பியிருத்தல் தகாது என்பது முதலாவதாக ஒருவர் கற்க வேண்டிய பாடமாகும். இந்த உலகில் ஒருவர் உயிர் வாழ உறுதுணையாய் அமைவது உணவு. எந்த ஒருவருடைய முயற்சியும் உணவைத் தேடுவதிலேயே அமைவதனைக் காணலாம். வறுமை காரணமாக உண்ண உணவின்றி வருவோர்க்கு ஒரு பிடி உணவாவது கொடுத்து உதவுதல் வேண்டும். "யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி" என்றார் திருமூல நாயனார். பிறந்த நாள்முதல் தூராத குழியாகிய இந்த அவல வயிற்றை வளர்ப்பதற்கு அல்லும் பகலும் உணவு தேடி வாழுகின்றோம். வாழ வழியற்றவர்க்கு, நம்மிடத்து உள்ள உணவில் ஒரு பிடியையாவது கொடுத்து உண்ணுதல் வேண்டும். "பிடி சோறு கொண்டு இட்டு உண்டு இரு" என்றார் அருணகிரிநாதர்.

"பகுத்து உண்டு, பல்உயிர் ஓம்புதல், நூலோர்\

தொகுத்துவற்றுள் எல்லாம் தலை"              --- திருக்குறள். 

நம்மிடத்து உள்ளதைப் பகிர்ந்து கொடுத்து உண்டு பல உயிர்களையும் இறவாதபடி காத்தல் என்பது, அறநூலோர் தொகுத்துக் கூறிய நற்செயல்கள் எல்லாவற்றிலும் தலையானது ஆகும் என்கிறார் திருவள்ளுவ நாயனார்.

எனவே, கிடைத்ததைப் பலருக்கும் பகிர்ந்து உண்னக் கொடுத்து வாழ வேண்டும். சோம்பல் கூடாது.  எவரையும் வெறுக்கக்கூடாது; சான்றோர் அஞ்சும் அறம் சாராத செயல்களைச் செய்யக் கூடாது. நாளும் தல்ல செயல்களையே நாடிச் செய்ய வேண்டும். எவ்வளவுதான் இலாபம் கிடைப்பதாயினும் பழிச் செயல்களைச் செய்யக்கூடாது. அத்தகைய மனவுறுதி அமைதல் வேண்டும். தன்னலம் பாராமல் பிறர் நலம் பேணும் பெற்றியராகத் துலங்க வேண்டும்’ என்பது புறநானூறு காட்டும் வாழ்வியல் நெறி ஆகும். இந்த வாழ்வியல் நெறியை அடிப்படையாகக் கொண்டே இந்த உலகம் இன்னமும் ஆழியாமல் இயங்கிக் கொண்டு இருக்கின்றது.

"உண்டால் அம்ம! இவ்வுலகம், இந்திரர்

அமிழ்தம் இயைவது ஆயினும், இனிதுஎனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவுஇலர்;

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்; பழி எனின்

உலகு உடன் பெறினும் கொள்ளலர்; அயர்வு இலர்;

அன்ன மாட்சி அனையர் ஆகித்

தமக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கு என முயலுநர் உண்மை யானே.". --- புறநானூறு.

இதன் பொருள் ---

இந்த உலகம் எவ்வளவோ காலமாக அழியாமல் இயங்கிக் கொண்டு இருக்கிறதே! இதற்கு என்ன காரணம்? யார் காரணம்? என்றால், தேவர்களுக்கும், தேவர்கள் தலைவன் ஆகிய இந்திரனுக்குமே கிடைக்கக் கூடிய அமுதமே கிடைத்தாலும், அதைத் தாமே உண்டு பயன் அடைந்துகொள்ளலாம் என்று எண்ணும் மனம் இல்லாதவர்கள்; பிறரிடம் சினம் கொள்ளாதவர்கள்; சோம்பல் இல்லாதவர்கள்; பிறர் கண்டு அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சி வாழ்பவர்கள்; புகழுக்கு உரிய செயல் என்றால், அதற்காகத் தமது உயிரையும் கொடுப்பவர்கள்; அதேசமயம் பழிக்கு இடமாகிய செயல் என்றால், அதற்குப் பரிசாக இந்த உலகமே கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ளாத உயர்ந்த பண்பினை உடையவர்கள்; எந்நேரமும் மனத் தளர்வு இல்லாதவர்கள். இத்தகைய குணநலன்கள் எல்லாம் நிரம்பப் பெற்று, தனக்கு என வாழும் தன்னலம் இல்லாத, பிறர் வாழ்வதற்காகத் தான் வாழும் பொதுநலம் பேணுபவர்கள் இன்னமும் இந்த உலகில் இருப்பதால்தான் இந்த உலகம் இன்னமும் இயங்கிக் கொண்டு இருக்கின்றது.

இதைத்தான், "புண்பு உடையார்ப் பட்டு உண்டு உலகம், அது இன்றேல் மண் புக்கு மாய்வதுமன்" என்றார் திருவள்ளுவ நாயனார். பண்பு உடையவர்கள் இருப்பதால் இந்த உலக இயக்கம் இருந்துகொண்டு இருக்கிறது. இல்லையானால், மண்குழியில் அமிழ்ந்து முற்றும் அழிந்துபோகும்.

சாதி, சமயம் ஆகிய வேறுபாட்டு உணர்வுகளால் மனித இனத்தை வேறுபடுத்திப் பார்க்காமல், மனிதகுலம் ஒன்றேதான் குலம், மனிதகுலம் முழுமைக்கும் ஒன்றேதான் கடவுள் என்னும் பொதுமைப் பண்பு உருவாக வேண்டும். அப்போது, அன்பு என்ற ஒப்பு உயர்வற்ற பண்பே மனிதகுலத்தை ஆட்கொள்ளும். எனவேதான்,  "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்று முழங்கினார் திருமூல நாயனார்.

"அல்லா என்பார் சிலபேர்கள்;

அரன் அரி என்பார் சிலபேர்கள்;

வல்லான் அவன்பர மண்டலத்தில்

வாழும் தந்தை என்பார்கள்;

சொல்லால் விளங்கா  நிர்வாணம்

என்றும் சிலபேர் சொல்வார்கள்;

எல்லாம் இப்படிப் பலபேசும்

ஏதோ ஒருபொருள் இருக்கிறதே!

"எந்தப் படியாய் எவர் அதனை

எப்படித் தொழுதால் நமக்கென்ன?

நிந்தை பிறரைப் பேசாமல்,

நினைவிலும் கெடுதல் செய்யாமல்,

வந்திப்போம்; அதனை வணங்கிடுவோம்;

வாழ்வோம்; சுகமாய் வாழ்ந்திடுவோம்;"

என்று பாடினார் நாமக்கல் கவிஞர்.

இவ்வாறு இறை நம்பிக்கையுடன் வாழத் தலைப்படும் நேரத்தில், அடுத்து மேற்கொள்ள வேண்டிய வாழ்வியல் கெறி எதுவெனச் சிக்திக்கும் பொழுது ஈட்டும் செல்வத்தினைப் பிறர்க்குப் பகிர்ந்து வாழும் தன்மையை மேற்கொள்ள வேண்டும் என்பது தெளிவாகின்றது.

ஏனெனில், கடல் சூழ்ந்த இவ்வுலகை ஒரு வெண்கொற்றக் குடையின்கீழ் ஆளும் பேரரசனாயினும், இரவும் பகலும் கண்ணுறங்காமல் விலங்குகளை வேட்டையாடித் திரியும் கல்வி அறிவற்ற ஒருவனாயினும், இருவரும் உண்பது நாழி அரிசிச் சோறுதான். உடுப்பவை இடுப்பில் ஒன்று, தோளில் ஒன்று ஆக இரண்டேதான். மற்ற பிற வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களும் இவ்வாறேதான். எனவே செல்வத்தை ஈட்டுவதன் பயன், இல்லாதவர்க்கு ஈந்து உதவுவதே ஆகும். அப்படி இல்லாமல் நாம் மட்டும் அனுபவித்து வாழ்வோம் என்று இருந்தால் அதனால் வரும் கேடுகள் பல உண்டு என்றும் நவில்கிறது புறநானூறு.

"தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்

கடுமாப் பார்க்குங் கல்லா ஒருவற்கும்

உண்பது நாழி, உடுப்பவை இரண்டே;

பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே;

செல்வத்துப் பயனே ஈதல்;

துய்ப்பேம் எனினே தப்புந பலவே."  --- புறநானூறு.

நம் வாழ்க்கையின் குறிக்கோள் பிறருக்கு உதவுவதாகவே அமைய வேண்டும். பொருளால்தான் உதவவேண்டும் என்பது இல்லை. மனம், மொழி, மெய் என்னும் முக்கரணத்தாலும் நலத்தை நினைக்கலாம், நல்லதைப் பேசலாம். நல்லதைச் செய்யலாம். இந்த எண்ணம் உண்டாகிவிட்டால், பிறருக்கு எவ்வுகையாலும் உதவ வேண்டும் என்ற எண்ணம் தன்னாலேயே வந்துவிடும். அதுதான் சான்றோர் கண்ட வாழ்வியல் நெறி.  அவ்வாறு ஒருவேளை உதவ முடியாமல் போனாலும், பிறருக்குத் தீங்காவது செய்யாமல் இருத்தலே சிறப்பாகும். அதுவே எல்லோராலும் விரும்பப்படுவது ஆகும். அதுவே நல்ல கதிக்கு அழைத்துச் செல்லும் பாங்கு உடையதாகும். 

"நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் 

அல்லது செய்தல் ஒம்புமின், அதுதான் 

எல்லோரும் உவப்பது அன்றியும் 

நல்லாற்றுப் படுஉம் நெறியும் ஆர் அதுவே."   --- புறநானூறு.

இத்தகைய மனத் தெளிவைப் பெற்றவுடன் மனிதன் விரைந்து மேற்கொள்ள வேண்டிய செயல்கள் பலவாகும். உலகியல் உரிமையை உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்படுவது அவற்றுள் ஒன்றாகும்.

சேற்றிலே பிறந்து வளர்ந்து வந்திருக்கும் தாமரை மலரில், ஒளி பொருந்திய நூற்றுக்கணக்கான இதழ்கள் ஒரே மாதிரியாகக் காணப்படும். அதுபோல ஏற்றத் தாழ்வில்லாத சிறந்த குடியிலே பிறந்து வாழ்ந்தவர்களைப் பற்றி ஆராய்ந்து பார்த்தால், அவர்களிலே பிறரால் புகழப் பெற்றவர்கள் ஒரு சிலராகத்தான் அமைவார்கள். தாமரையிலை போலப் புகழ் இன்றி மாண்டவர்களே பலராக இருப்பர். புலவர்களின் பாடல்களைப் பெற்ற புகழுடையவர்கள் தாம் ஆற்றும் கடமைளைச் குறைவறச் செய்து முடிப்பர். அதன் பயனாக வானத்திலே ஒட்டுவான் இல்லாத வானவூர்தியிலே ஊர்ந்து இன்புறும் பெரும் பொருளைப் பெற்று இன்புறுவர்.

இவ்வுலகிலே சந்திரன் ஒர் உண்மையை விளக்கிக் காட்டிக் கொண்டே திரிகின்றது. ஒருவனுக்குச் செல்வம் தேய்ந்து போவது உண்டு; பெருகுவதும் உண்டு; அடியோடு அழிந்து போவதும் உண்டு; மீண்டும் பிறப்பதும் உண்டு என்ற உண்மையைச் சந்திரன், கல்வி அறிவு இல்லாதோரையும் உணர்த்மு கொள்ளுமாறு தன் செய்கையால் வெளிப்படுத்துகின்றது. 

ஆதலால், இந்த உலகிலே ஒன்றைச் செய்ய வல்லவராயினும் சரி; வல்லமை அற்றவராயினும் சரி; வறுமையால் வாடி வருந்தி வந்தோர் யாராயினும், அவர்கள் துன்பத்தைக் கண்டு இரங்க வேண்டும்; அவர்களுடைய வயிற்றுப் பசியைப் பார்த்து. அவர்களிடம் இரக்கம் காட்டி, அவர்களுக்கு உதவி செய்யும் தன்மையுடையவர்கள் ஆக வேண்டும். இதுதான் வாழ்வியல் நெறி என்கிறது புறநானூறு.

"சேற்றுவளர் தாமரைப் பயந்த ஒண்கேழ்

நூற்றிதழ் அலரின் நிரைகண்டு அன்ன

வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து

வீற்றிருந் தோரை எண்ணுங் காலை,

உரையும் பாட்டும் உடையோர் சிலரே,

மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே,

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

வலவன் ஏவா வான வூர்தி

எய்துப என்ப தம்செய்வினை முடித்து எனக்

கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி!

தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும்

மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்

அறியா தோரையும் அறியக் காட்டித்

திங்கள் புத்தேள் திரிதரும் உலகத்து,

வல்லார் ஆயினும் வல்லுநரு ஆயினும்

வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி

அருள வல்லை ஆகுமதி, அருளுஇலர்

கொடாமை வல்லர் ஆகுக,

கெடாத துப்பின் நின் பகை எதிர்ந்தோரே."   --- புறநானூறு.

மேலும், வாழ்வியல் நெறியாகப் பின்வரும் நற்பண்பு ஒன்றும் முன்நாளில் பாராட்டப் பெற்றது. “தம்மால் கொடுக்க முடிந்த பொருளை முடியும் என்று சொல்லிக் கொடுப்பதும், தம்மால் கொடுக்க முடியாத பொருளை முடியாது என்று மறுத்து விடுவதும் ஆகிய இரண்டு பண்புகளும் நற்பண்புகள்தாம். உதவி செய்யும் தன்மையோடு கூடிய நட்பின் தன்மைதான். இதுபோன்றே தன்னால் முடியாததை முடியும் என்று சொல்லுதலும், தன்னால் செய்யக் கூடியதை முடியாது என்று மறுத்தலும் ஆகிய இந்த இரண்டு பண்புகளும் தீயபண்புகள் தாம். இந்தத் தீயபண்பு, தன்னிடம் உதவி நாடி விரைந்து வந்த இரவலர்களைத் துன்புறுத்துவதாகும். அது மட்டுமல்லாமல் ஈவோரின் புகழ் தேய்ந்து போவதற்கான வழியும் ஆகும்" என்றும் வாழ்வியல் நெறியினை வற்புறுத்துகிறது புறநானூறு.

"ஒல்லுவது ஒல்லும் என்றாலும், யாவர்க்கும் 

ஒல்லாது இல் என மறுத்தலும், இரண்டும் 

ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே; 

ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது

இல் என மறுத்தலும் இரண்டும் வல்லே;

இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர்

புகழ் குறை படுஉம் வாயில்." --- புறநானூறு

இதுவரை கூறியவற்றைக் கொண்டு பார்த்தால், வாழ்வியல் நெறிகள் என்று சிலவற்றை நமது முன்னோர் நமக்கு வகுத்து வைத்துச் சென்றிருக்கின்றனர் என்பது புலப்படும். அவற்றைக் கடைப்பிடித்து, வாழ்வாங்கு வாழ்ந்து ஈடேறுவதும், நமது சந்ததியினருக்கும் வாழும் வழியைக் காட்டி அவர்களையும் ஈடேற வைப்பதும் நமது கடமை ஆகும்.



கடவுள் இல்லை என்பதும் ஒரு மதமே

 கடவுள் இல்லை என்பதும் ஒரு மதமே

-----

மதம் என்னும் சொல்லுக்கு, கருத்து, கொள்கை, அறிவு, போதனை, பெற்றதைப் பெரிதாக மதிப்பது என்ற பொருள்கள் உண்டு. கருதுவது கருத்து, கொள்ளுவது கொள்கை, அறிவது அறிவு, போதிப்பது போதனை ஆகும்.

உலகில் பலவகையான மதங்கள் உண்டு. நமது தமிழகத்திலும் பலவகையான மதங்கள் இருந்தன. அவைகளின் கொள்கை வேறு வேறாக இருந்தது. கொள்கைகளால் பிணங்குவது மதவாதிகளின் இயல்பு. எனவேதானே, "சமயவாதகிள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர்" என்றார் மணிவாசகப் பெருமான். இந்த சமயவாதிகளைப் பார்த்து, "குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே" என்றார் திருமூல நாயனார். சமயகோடிக் எல்லாம் தம்தெய்வம் எம்தெய்வம் என்று எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கிடவும் நின்றது" என்று தாயுமான அடிகளாரும், "பேர் உற்ற உலகில் உறு சமயமத நெறி எல்லாம் பேய்ப்பிடிப்பு உற்ற, பிச்சுப்பிள்ளை விளையாட்டு என உணர்ந்திடாது, உயிர்கள் பல பேதமுற்று அங்கும் இங்கும் போர் உற்று இறந்து வீண் போயினார்" என்று வள்ளல்பெருமானும் கூறி அருளினர்.

எனவே, வாதம் புரிந்து, உண்மைப் பொருஉளை உணராமல், வாழ்நாளை வீணாக்குதல் கூடாது. சமயங்களின் உண்மை நிலையை உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். அப்பர் பெருமானுக்கு அவ்வாறு உணர்ந்து கொள்ளத் திருவருள் வாய்க்காமையால், சைவத்தை விடுத்து சமணத்தைச் சார்ந்தார். "சமயங்கள் ஆனவற்றின் நல் ஆறு தெரிந்து உணர நம்பர் அருளாமையினால், கொல்லாமை மறைந்து உறையும் அமண் ணமயம் குறுகினார்" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான். மணிமேகலை மாதவன் வடிவத்தில் வஞ்சி நகரில் இருந்து, பல்வகைச் சமய வாதிகளையும் கண்டு, அவரவர் கடைப்பிடியாகக் கொண்டு உள்ள சமயப் பொருட்களைக் கேட்க விரும்பி, அவரிடத்தில் சென்று, அளவைவாதி முதல் பூதவாதி ஈறாகவுள்ள அனைவரையும் கேட்க, அவர்கள் தம் சமயக் கருத்துக்களை உரைத்தனர் என்று மணிமேகலைக் காப்பியத்தில் "சமயக் கணக்கர் திறம் கேட்ட காதை" மூலமாக அறியக் கிடக்கிறது. சமயச்சார்பு உடையவர்களிடத்தில் இந்த மனப்பாங்கு அமையாது. உண்மை நிலையை உணர்ந்து கொள்ளும் வேட்கை உடையோர்க்கே இந்த நிலை வாய்க்கும்.

"பூதவாதம்" என்னும் சமயம் "பொருள்முதல் வாதம்" என்றும் "உலகாயதம்" என்றும் சொல்லப்படும். இந்த நாத்திகவாதம் என்பதும் ஒரு மதமாகவே இருந்தது. அது இப்போது உருவானது அல்ல என்பதை அறிதல் வேண்டும்.

பூதவாதி தமது கருத்தைச் சொன்னதாக "மணிமேலை" என்னும் காப்பியத்தில் பின்வருமாறு கூறப்பட்டு உள்ளது

"தாதகிப் பூவும் கட்டியும் இட்டு

மற்றும் கூட்ட மதுக்களி பிறந்தாங்கு,

உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும்

அவ்வுணர்வு அவ்வப் பூதத்து அழிவுகளின்

வெவ்வேறு பிரியும், பறை ஓசையில்கெடும்"

இதன் பொருள் ---

ஆத்திப் பூவையும் கருப்புக் (வெல்லக்) கட்டியையும் கூட்டி, வேறு பிற பொருள்களையும் கலந்தபோது, களிப்பினை உண்டாக்குகின்ற கள் உண்டானது போல, பொருந்துகின்ற பூதங்களின் கூட்டத்தால் உணர்வு பிறக்கும். அவ்வாறு தோன்றிய உணர்வும், அந்த அந்தப் பூதங்களின் கூட்டம் கலைந்து நீங்குமிடத்து,  வேறுவேறாகப் பிரிந்து, பறையில் எழுந்த ஒசையானது சென்று சென்று தேய்ந்து கெடுவது போலத் தேய்ந்து தேய்ந்து தத்தம் பூதமுதலொடு ஒன்றிவிடும்.

ஆத்திப் பூவினோடு பிற பொருள்களைக் கலந்தால், கள் உண்டாகும், அதனால் களிப்பு உண்டாகும் என்றது, பூதங்களின் கூட்டுறவால் உணர்வு பிறக்கும் என்பது உலகாயதர் கொள்கை. மேலும் காண்க.

"உயிரொடும் கூட்டிய உணர்வுடைப் பூதமும்,

உயிர் இல்லாத உணர்வுஇல் பூதமும்,

அவ்வப் பூத வழி அவை பிறக்கும்,

மெய்வகை இதுவே; வேறுஉரை விகற்பமும்

உண்மைப் பொருளும் உலோகாயதன் உணர்வே;

கண்கூடு அல்லது கருத்தளவு அழியும்,

இம்மையும் இம்மைப் பயனும் இப்பிறப்பே,

பொய்ம்மை மறுமை உண்டாய் வினை துய்த்தல்"

இதன் பொருள் ---

உயிர்த் தோற்றத்துக்கு ஏதுவாக அதனோடு கூட்டப்பட்ட உணர்வுடைய பூதக் கூறும், உடம்பின் ஆக்கத்துக்கு ஏதுவாக அதனோடு கூட்டப்பட்ட உணர்வில்லாத அப்பூதக் கூறுகள், அவ்வப் பூதங்களின் வழியாகவே தோன்றும். உண்மைநெறி இதுவே ஆகும்.  இவற்றின் வேறாகக் கூறப்படும் பொருளும் தத்துவங்களும் உலோகாயதர் மேற்கொண்டு கூறுவனவே ஆகும். காட்சி அளவை அல்லது, வேறே கருத்து முதலியன நிலைபெறாமையின் அவற்றைக் கொள்ளவில்லை. இவ்வாழ்வும் இவ்வாழ்வில் பெறும் இன்பமும் துன்பமும் இப்பிறப்போடே கழிந்து போவன. மறுபிறப்பு உண்டு என்றும், இப்பிறப்பில் செய்யப்படும் வினைப் பயனை மறுபிறப்பில் அனுபவித்தல் வேண்டும் என்றும் கூறுவது பொய் (என்று பூதவாதி கூறினானாக).

எனவே, கடவுள் இல்லை என்று சொல்வதும் ஒருவகைச் சமயமே ஆகும். இதற்கு "சார்வாகம்" என்று ஒரு பெயரும் உண்டு. இது நாத்திக வாதம் ஆகும். கடவுள் இல்லை என்கிற கொள்கை உடையவர்கள், உலகாயதர்கள். இவர்கள் காண்டல், கருதல், உரை என்கின்ற மூன்று அளவைகளுள், காண்டல் என்கின்ற பிரத்தியட்ச அளவை மட்டுமே தமக்கு உடன்பாடு எனக் கொண்டு, கண்ணுக்குப் புலனாகின்ற நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கு பூதங்களுமே எப்போதும் உள்ள பொருள் என்று ஒத்துக் கொள்ளுகின்றவர்கள். முதலில் சொல்லப்படுகின்ற ஆகாயம் என்பது கண்ணுக்குப் புலப்படாமையால், அதை உலகாயதர், ஒரு பூதமாக ஏற்க மறுக்கின்றனர். நிலம், நீர், தீ, காற்று என்னும் நான்கு பூதங்களின் சம்பந்தத்தால் ஆகியதே உடம்பு என்கின்றனர். அது எது போல என்றால், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய மூன்றையும் ஒருவன் வாயில் இட்டு உண்கின்ற போது, செந்நிறம் தோன்றுவது போல, இந்த நான்கு பூதங்களின் சேர்க்கையால், அவற்றிற்கு வேறாகிய ஓர் உணர்வு உண்டு என்றும், அந்த உணர்ச்சியானது உடம்பு வளருந்தோறும் வளர்ந்து, தேயும்தோறும் தேய்ந்து போவது என்பது. 

உடம்பிற்கு வேறாக உயிர் என்பது உண்டு என்பது பொய் என்பது அவர் கூற்று. அல்லாமலும், உடம்பிற்கு நல்வினை தீவினை என்கின்ற இருவினையால் வரும் இன்ப துன்பங்கள் என்பதும் பொய்.  இன்ப துன்பங்கள் உடம்பிற்கு இயல்பாகவே உள்ளதால், இருவினை என்பதும் பொய் என்பது அவர் கூற்று. கடவுள் உண்டு என்பதும் பொய் என்பார் அவர். மயிலுக்கு அழகை ஊட்டியவர் யாரும் இல்லை. குயிலின் குரலுக்கு இனிமையை ஊட்டினவரும் யாரும் இல்லை. அவை இயல்பாகவே அமைந்துள்ளது போல், இந்த உலகமும் இயற்கையாகவே அமைந்து உள்ளது. இல்லாத கடவுளை உண்டு என்று சொல்லும் மார்க்கத்தைத் தழுவி, மோட்ச இன்பத்தை அடைவோம் என்னும் கொள்கையும் பொய். ஆனால், தான் கருதுகின்றபடி, இயல்பாகவே அமைந்த இந்த உலகத்தில், வாழுகின்ற காலத்தில் இளம்பருவம் உடைய பெண்களை மணந்து, நல்ல உணவை உண்டு, நல்ல ஆடைகளை உடுத்து, போகத்துடன் வாழ்வதே மோட்ச இன்பம் என்பது அவர் கொள்கை. இந்த இன்பத்தைப் பெறாமல், பகைவராலும், நோயாலும், வறுமையாலும் வருந்துவதே நரகத் துன்பம் என்பது உலகாயதர் கொள்கை. 

இந்த உலகாயதக் கொள்கை மக்களை எளிதில் மயக்கும் ஆற்றல் படைத்தது. எனவே தான், "உலோகாயதன் எனும் ஒண் திறல் பாம்பின் கலாபேதத்த கடுவிடம்" என்றார் மணிவாசகப் பெருமான். 

மேலும், இவ்விதம் கூறிய நான்கு பூதங்களின் கூட்டுறவில், பிராணவாயு என்பது நீங்குமானால், முன் வளர்ந்த உணர்வு என்பது நீங்கி, உடம்பு என்பது நாசம் ஆகும். அதுவே, வீடு என்கின்ற மோட்சத்தை அடைகின்ற பேறு ஆகும். எனவே, இந்த உண்மையை உணராதவர்கள்,  மறுபிறவி உண்டு என்றும், வீடு என்பது உண்டு என்றும் சொல்லி, தவம் கிடந்து, பட்டினி கிடந்து, உடலை வருத்துகின்றனர். அல்லாமலும், பொன் தானம், நிலத் தானம், உணவுத் தானம் என்பவர்கள் வறுமமை நோயால் பீடிக்கப்பட்டவர்கள் ஆவர். ஆலயம், தண்ணீர்ப்பந்தல், கிணறு, சோலை, குளம் முதலியவைகளை தருமத்துக்கு அமைப்பவர்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லுகின்ற நூல்கள், வழிச் செல்பவர்கள் தாம் செல்லுகின்ற காலத்து இளைப்பு அடையாமலும், உடம்பு வருந்தாமலும், பொருள் செலவு இல்லாமலும், தங்களின் பயணத்தை முடிப்பதன் நிமித்தம் எழுதிய நூல்கள் ஆகும் என்பவர் உலகாயதர். ஆகையால், இவைகளை எல்லாம் விட்டுவிட்டு, மனம் விரும்பும் உணவு உண்டு, நல்ல வத்திரம் அணிந்து, இளம்பெண்களோடு சுகித்து வாழ்வதே வாழ்க்கையின் பயன் என்பது இவர்தம் கொள்கை.

ஆனால், இவர்களை மறுத்து, கடவுள் உண்டு என்ற நிறுவுகின்றவர்கள் சொல்லுவது, ஒருவன் பிறந்தவுடன் தாய் தந்தையர் இறந்து போய் இருப்பார்களானால், அவர்களைக் காணாததாலேயே, தாய்தந்தையர் இல்லை என்று கூறுவது போலத்தான், கண்ணுக்குப் புலப்படாத ஆகாயத்தை இல்லை என்று கூறுவது. மேகமானது திரண்டு, முழங்கி, மின்னி, வானில் பரந்து எழுந்து அதனால் மழை பொழிவதைக் காண்ணால் காண்கின்றோம். இது காட்சி அளவை மட்டுமன்றி கருதல் அளவையும் ஆகும். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய மூன்றும் கூடி, சிவப்பு என்னும் தன்மையை உண்டாக்குவதற்கு, அவைகளை மென்று தின்கின்ற ஒருவன் வேண்டும் என்பதைப் போல, அவைகளை உண்டாக்குவதற்கும் ஒருவன் வேண்டும் என்று ஆத்திகர்கள் கூறுகின்றனர்.  

இன்னும் பிற வாதங்களும் உண்டு. நான் என்னும் புத்திக்கு விடயமாய் இருப்பது ஆன்மா. நான் மனிதன்,  நான் பார்ப்பான்,  நான் பருத்தேன், நான் இளைத்தேன் என்னும் அனுபவத்தினால், தேகத்திலேயே நான் என்னும் புத்தி உண்டாவதால், தேகமே ஆன்மா. ஆபத்து நேர்ந்த போது தேகத்திலேயே அபிமானம் உண்டாவதால், அதைவிடப் பிரியமான பொருள் வேறு இல்லை. தேகத்தில் உள்ள விருப்பத்தின் பொருட்டே, பிறரிடத்து விருப்பம் உண்டாகின்றது. எனவே, உடம்பைக் காப்பாற்றுதல், அலங்கரித்தல் முதலியனவே புருஷார்த்தங்கள். ஆகாயம், ஊழ், கடவுள், பிறவி என்பது இல்லை. பூதங்களில் கூட்டுறவால் உண்டாவது உடம்பு. இதன் மரணமே மோட்சம். இது தேகான்மவாதியின் மதம்.  காணப்படும் இந்த உடம்பு இந்திரியங்கள் இருந்தால் இருக்கின்றது. இல்லாவிட்டால் செத்துப் போகின்றது. எனவே, உடலுக்கு வேறாக உள்ள, இந்திரியமே ஆன்மா என்பது இந்திரியான்மவாதியின் மதம். பிராணவாயு இருந்தால் இந்த உடம்பு இருக்கின்றது. அது நீங்கிப் போனால் அழிகின்றது. எனவே, உடம்பு நிலைத்து இருக்கக் காரணமான பிராணனே ஆன்மா என்பது பிராணான்மவாதியின் மதம். பிராணனுக்கு உணர்ச்சி இல்லை. மனமே ஆன்மா என்பது மனவான்மவாதியின் மதம். மனமானது புத்தியின் வசமாய் இருக்கின்றது. புத்தியின் ஆகாரமே மனம். ஆதலால், புத்தியே ஆன்மா என்பது புத்தியான்மவாதி மதம்.

      அவை எல்லாம் உண்மை அல்ல. மனத் தூய்மைக்கு அவை வழி வகுக்காது. கயமைத் தனத்திற்கே காரணம் ஆகும் என்பதால், கடவுள் இல்லை  என்று  கூறுபவர்களின்  கூட்டுறவு  உண்டாகாதபடி காத்து அருள் புரியுமாறு, தருமமிகு  சென்னையில்  கந்தகோட்டத்தில்  எழுந்தருளி உள்ள  முருகப் பெருமான்  மீது வள்ளல்பெருமான்  பின்வருமாறு பாடினார்.

"பரம்ஏது, வினைசெயும் பயன்ஏது, பதிஏது,

பசுஏது, பாசம்ஏது,

பத்திஏது, அடைகின்ற முத்திஏது, அருள்ஏது,

பாவபுண் ணியங்கள் ஏது,

வரம்ஏது, தவம்ஏது, விரதம்ஏது, ஒன்றும்இலை,

மனம்விரும்பு உணவு உண்டு, நல்

வத்திரம் அணிந்து, மட மாதர்தமை நாடி,நறு

மலர்சூடி, விளையாடி,மேல்

கரம்மேவ விட்டு, முலைதொட்டு வாழ்ந்து, அவரொடு

கலந்து மகிழ்கின்ற சுகமே

கண்கண்ட சுகம், இதே கைகண்ட பலன்எனும்

கயவரைக் கூடாது அருள்,

தரம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்

தலம் ஓங்கு கந்தவேளே!

தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!

சண்முகத் தெய்வமணியே!"

இதன் பொருள் ---

மேன்மை பொருந்திய சென்னைக் கந்தகோட்டத்தில் எழுந்தருளும் கந்தவேளே! தூய மணிகளுள் சைவமணியாம் சண்முகத் தெய்வ மணியே!  பரம் என்பது யாது?  வினையாவது யாது? வினையின் பயன் என்பது யாது? பதி, பசு, பாசம் என்பன யாவை? பத்தி ஆவது யாது? அதனால் அடைகின்ற முத்தி என்பது யாது? அருள் என்பது யாது? பாவ புண்ணியங்கள் யாவை? வரம் என்றும் தவம் என்றும் விரதம் என்றும் கூறுவன ஒன்றும் இல்லை. மனம் ஆசைப்படுகின்ற உணவை உண்டு, நல்ல ஆடை உடுத்து, இளமகளிரை நாடி அடைந்து, மணம் வீசும் பூக்களைச் சூடிப் பல்வகையாக விளையாடி, கைகளை அம்மகளிர் மேல் செலுத்தி அவர்களுடைய முலைகளைப் பற்றி, உடம்போடு உடம்பு கலந்து மகிழ்கின்ற சுகமே கண்கண்ட சுகம். இதுவே வாழ்வின் கைகண்ட பயன் என்று கருதி மொழிகின்ற கீழ் மக்களோடு கூடாதவாறு அருள் புரிவாயாக.

உலோகாயதன் சமய நடை எப்படிப்பட்டது என்பதை தாயுமான அடிகளார் கூறுமாறு காண்க. நடை என்பதன் பொருள் ஒழுக்கம் ஆகும்.

"மின்அனைய பொய்உடலை நிலைஎன்றும், மைஇலகு

        விழிகொண்டு மையல்பூட்டும்

      மின்னார்கள் இன்பமே மெய் என்றும், வளர்மாட

        மேல்வீடு சொர்க்கம் என்றும்,

பொன்னை அழியாது வளர் பொருள் என்று போற்றி, இப்

        பொய்வேடம் மிகுதிகாட்டி,

      பொறை அறிவு துறவு ஈதல் ஆதி நற்குணம் எலாம்

        போக்கிலே போகவிட்டு,

தன்நிகர் இல் உலோபாதி பாழ்ம்பேய் பிடித்திட,

        தரணிமிசை உலோகாயதன்

      சமயநடை சாராமல், வேதாந்த சித்தாந்த

        சமரச சிவாநுபூதி

மன்ன, ஒருசொல் கொண்டு, எனைத் தடுத்து ஆண்டன்பின்

        வாழ்வித்த ஞானகுருவே!

      மந்த்ர குருவே! யோக தந்த்ர குருவே! மூலன்

        மரபில்வரு மௌனகுருவே."

இதன் பொருள் ---

தோன்றி நெடிது நிற்பதுபோலக் காட்டி விரைய மறையும் தன்மை வாய்ந்த மின்னலுக்கு ஒப்பான, நிலையில்லாத பொய்யுடலை அழியாது என்றும், நிலைநிற்பது என்று மைதீ ட்டப்பட்ட கண்களைக் கொண்டு காமுகர்களை மயக்கவலையில் விழும்படி செய்யும் பெண்ணியலார் இன்பமே நிலையான பேரின்பம் என்றும், அப் பெண்களோடு கூடிப் பகட்டாய் வாழ்வதற்கு அமைக்கப்பட்ட மாடமாளிகை, மேல்வீடு நிலாமுற்றம் முதலிய பல டமைந்த வளமையான மனையே கிடைத்தற்கரிய இன்ப ஒளியுலகம் என்றும், இன்பத்திற்கு ஏதுவாகிய பொன்னையும், அப் பொன்னால் தேடப்படும் பண்டங்களாகிய பொருள்களையும் அழியாது வளர்ந்து பெருகும் நிலைப்பொருள் என்றும் மிகவிரும்பி, தமது புன்மையான பொய்க்கோலத்தின் மிகுதிப்பாட்டை மேற்கொள்ள வெளிப்படுத்தி, காம மயக்கில் விட்டில் பூச்சி என வீழ்ந்த ஆடவர் தங்கட்கு இன்றியமையாத பொறுமையும், சிறந்த அறிவும்ன, செருக்கு அற்று நான் எனது என்னும் இருவகைப் பற்றும் நீங்குதலாகிய துறவும், வாழ்வில் பெறத்தக்க ஊதியமாகிய ஈகை முதலிய நற்பண்புகளும் சிறிதும் வந்து பொருந்த இடங்கொடாது மனம்போன போக்கிலே போகவிட்டு, தனக்குத் தானே இணையான உலோபத் தன்மை எனப்படும் பொருட்பற்று ஆகிய பாழான பேய் பிடித்யது ஆட்ட ஆடிட்ட, இவ்வுலகில் உலகாயதனுடைய சமயக் கட்டில் சாராமல் மறை முடிபும் என்னும் வேதாந்தம், திருமுறை முடிபு என்னும் சித்தாந்தம் ஆகியவற்றின் ஒருங்கியைந்த சிவனடிப் பேரின்பத் துய்ப்பு என்னும் நிலைபெற, ஒப்பில்லாத உபதேசம் என்னும் ஒரு சொல்லைக் கொண்டு அடியேனைத் தடுத்தாட்கொணடு இறவா இன்ப) அன்பினால் ஆட்கொண்டு நிலையான வாழ்வில் வாழ்வித்தருளிய குருநாதரே! (வேதாந்தம் - மறை முடிபு. சித்தாந்தம் - முறை முடிபு. சமரசம் - இயைபு.)

உலகாயதர் கொள்கை பற்றிப் பின்னும் அறியலாம்.

"மதிநிலா நுதலாரோடு மணிநிலா முன்றில் ஏறி

முதிர்நிலா எறிப்ப, செவ்வாய் இளநிலா முகிழ்ப்ப, மொய்த்த

கதிர்நிலா வடங்கொள் கொங்கை, கண்கள், மார்பு அகல மூழ்கும்

புது நிலாவிய நன்போகம் விடுவர் புன்சமயத்தோரே."  --- சிவஞானசித்தியார், பரபக்கம்.

இதன் பொருள் ---

பூரண நிலவு போல விளங்கும் நெற்றியினை உடைய மாதரோடும் கூடி, ஒளியை உடைய முற்றத்தில் சென்று ஏறி, பூரணச் சந்திரன் ஒளிவிட்டு விளங்க, அவரது சிவந்த வாயில் புன்சிரிப்புத் தோன்ற, செறிந்த ஒளிமிக்க முத்துவடத்தைத் தாங்கிய முலைக்கண்கள் தமது மார்பகலத்தே மூழ்கும்படி அழுந்தி அனுபவித்துல, நாள்தோறும் புதுமை தங்கிய நல்ல அனுபோகத்தைக் கைவிடுவர் புன்மையான சமயநெறியினைச் சார்ந்தோர்.

"ஊடுவது, உணர்வது, உற்ற கலவி மங்கையரை உள்கி

வாடுவது, அடியில் வீழ்ந்து வருந்துவது, அருந்தவம்; பின்

கூடுவது உணர்வு கெட்டுக் குணம் எ(ல்)லாம் வேட்கையே ஆய்

நீடுவது இன்ப முத்தி; இத்தில் நின்றார்கள் முத்தர்." --- சிவஞானசித்தியார், பரபக்கம்

இதன் பொருள் ---

புதிதாகக் கூடிக் கலவியில் மாதரை நினைத்து அவர்கள் தம்முடன் ஊடுவதானால் அவரை ஊடல் தீர்ப்பது பொருட்டாக உள்ளம் தளர்தலும், அவர்கள் காலடிகளில் வீழ்ந்து வருந்துதலுமே அரிதாகச் செய்யுலம் தவம் ஆகும். அப்படித் தவத்தில் நின்றபின், அம்மகளிரோடு தன் அறிவு கெட்டுக் கூடுவது முத்தி ஆகும். இந்திரியங்கள் எல்லாம் ஒருமைப்பட விருப்பம் நிலைப் பெறுவது முத்தி இன்பம் ஆகும். இவ்வழியில் நின்றவர்களே முத்தராவர்.        

உடம்பே உயிர், உடம்பால் அடையும் இன்பமே மோட்சம் எனக் கருதுகின்ற உலகாயத நிலை விருதா என்றும், மடவார் மயலாலே அந்த வாழ்வு அவமாகிப் போகும் என்றும் அருணகிரிநாதப் பெருமான் இத் திருப்புகழில் அறிவுறுத்துமாறு காண்க.

"விழு தாது எனவே கருதாது, உடலை

     வினை சேர்வதுவே ...... புரி தாக,

விருதாவினிலே உலகாயதம் மேல்

     இடவே, மடவார் ...... மயலாலே,

அழுது ஆ கெடவே, அவம் ஆகிட, நாள்

     அடைவே கழியாது, ...... உனை ஓதி

அலர் தாள் அடியேன் உறவாய் மருவ,

     ஓர் அழியா வரமே ...... தருவாயே."

இதன் பொருள் ---

     விழுகின்ற தாது (சுக்கிலம்) தான் இந்த உடல் என்று கருதாமல், வினைகளை மேலும் மேலும் சேர்ப்பதையே விருப்பம் கொண்டு, வீணாக (தேகமே ஆத்மா, போகமே மோட்சம் என்ற) உலக வழக்கில் அறிவு மேலிட, பெண்களின் மேல் ஆசைமயக்கத்தால் அவநிலையை அடைந்து கெட்டுப் போகும்படியாக, வாழ்நாள் முழுவதும் கழிந்து போகாமல்,  தேவரீரது திருப்புகழை ஓதித் துதித்து, அன்றலர்ந்த தாமரை போன்ற உமது திருவடிகளே எனக்கு உறவாகக் கலந்து இருக்க, ஒப்பற்ற அழியா வரத்தினைத் தந்து அருள்வாயாக.

    உலோகாயதன் நிலை குறித்து அருணகிரிநாதர் மேலும் ஒரு திருப்புகழில் கூறுவதும் காண்க.

"இலகிய வேலோ? சேலோ? ஒளிவிடு வாளோ? போதோ?

     எமன்விடு தூதோ? மானோ? ...... விடம் ஈதோ?

என விழி கூறா வாரா அரிவையர், தோள் ஊடு ஆடா

     இறுதியில் வேறாய், மாறா ...... நினைவாலே,

பலபல கோளாய், மாலாய் உழலும் அதானால், வீணே

     படிறு சொல் ஆகா, உலோகா ...... யதன் ஆகி,

பரிவுடன் நாடாய் வீடாய் அடிமையும் ஈடேறாதே,

     பணி தியில் மூழ்கா, மாயா ...... விடுவேனோ?"

இதன் பொருள் ---

விளங்குகின்ற வேலாயுதமோ, சேல் மீனோ, தாமரையோ, யமன் அனுப்பியுள்ள தூதோ, மானோ, நஞ்சு தானோ இது என்று வியக்கக் கூடிய கண்களால் பேசும்படி வருகின்ற விலைமாதர்களின் தோள்களில் ஈடுபட்டுத் திளைத்து, கடைசியாக மனம் வேறுபட்டு, மாறுபட்ட எண்ணத்தால் பலபல தீமைகள் உண்டாக, மோகத்துடன் அலைச்சல் உறுகின்றதாக என் அனுபவம் ஆனதால், வீணான வஞ்சனைச் சொற்களைப் பேசி யாருக்கும் ஆகாத உலகாயதனாகி, அன்புடன் நாட்டிலும் வீட்டிலும் பயனடையாமல் அடிமையாகிய நானும் செல்வச் செருக்கில் முழுகி இறந்து படுவேனோ? 

மணிவாசகப் பெருமானும் இதனைத் தமது திருவாசகத்தில் பின்வருமாறு காட்டினார்...

"மிண்டிய மாய வாதம் என்னும்

சண்ட மாருதம் சுழித்து அடித்து ஆஅர்த்து

உலோகாயதன் எனும் ஒண்திறல் பாம்பின்

கலாபே தத்த கடுவிடம் எய்தி,"

முன்னர்க் குறிப்பிட்டது போல, உலோகாயதம் என்பது, காட்சியே அளவை என்றும், பூதங்கள் நான்கே என்றும், உடம்பே ஆன்மா என்றும், மறுபிறவியும் கடவுளும் இல்லை என்றும், இன்பமும் பொருளுமே புருஷார்த்தங்கள் என்றும் சொல்லும் மதம். பாம்பு ஒளி உடையது. ஆனால், விடத்தைக் கொண்டது. உலோகாயதம் கவர்ச்சி உடையது. ஆனால், தீமையுடையது. விடம் இம்மையில் தீமை புரிவது. உலோகாயத மதம் இம்மை மறுமை இரண்டிலும் தீமை புரிவது. அதனால் உலோகாயத மதத்தைப் "பாம்பு" என்றும், அதன் பயனைக் "கடுவிடம்" என்றும் கூறினார்.

எனவே, நாத்திக வாதமும் ஒரு மதமாகவே இயங்கி வந்தது, இயங்கி வருகிறது. இறைவன் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இருக்கின்றான், புறத்திலும் இருக்கின்றான் என்று கொள்வோருக்கு அவரவர் உள்ளத்திலும், புறத்திலும் இருக்கின்றான். உள்ளத்திலும் இல்லை, புறத்திலும் இல்லை என்பாருக்கும் அப்படியே இல்லாத பொருளாகே மறைந்து பின்னர் விளங்குவான். 

இல்லை என்பதன் உண்மைப் பொருள், உண்மைப் பொருளாக விளங்கும் இறைவனால் பெறக்கூடிய நன்மை ஏதும் இல்லை என்பதே.

"உள்ளத்தும் உள்ளன், புறத்து உள்ளன் என்பவர்க்கு

உள்ளத்தும் உள்ளன், புறத்து உள்ளன் எம்இறை;

உள்ளத்தும் இல்லை, புறத்து இல்லை என்பவர்க்கு

உள்ளத்தும் இல்லை, புறத்து இல்லை தானே."  --- திருமூலர்.

இல்லை என்று ஆகிவிட்ட ஒரு பொருளை இல்லை என்று நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. உள்ளது என்று சொல்லுகின்ற பொருளைத் தான் இல்லை என்று மறுக்கின்ற வாதம் எழும். "உள்ளது போகாது, இல்லது வாராது" என்பது சற்காரிய வாதம். நாத்திகவாதம் என்னும் மதச் சார்பும் ஒருவகை மதச்சார்பே ஆகும். மதச்சார்பு இன்மை என்பது, தாம் கொண்ட கொள்கையைப் பிறர் மீது திணிக்காமல் இருப்பதும், பிறரையும் தம்மைப் போல மனிதர்தாம் என மதித்து அன்பு செய்து, அவரது கொள்கைக்கும் மதிப்புத் தருவதும் ஆகும்.




சமயப் பொதுமை

 


சமயப் பொதுமை

-----

மனிதன் உலகத்தில் வாழும்போது இன்பத்தை வேண்டுகிறான். துன்பத்தை வேண்டுவது இல்லை. ஆனால் எல்லோரும் இன்பம் அடைகிறார்களா என்றால், அதுதான் இல்லை. சின்னஞ்சிறு குழந்தையின் கண்ணுக்கு கண்ணாடித் துண்டு அழகாகத் தெரிகிறது. அதைக் கையில் எடுத்து விளையாடுகிறது. கையிலே கீறிக் கொண்டு இரத்தம் வந்து கத்துகிறது. முதலில் எடுக்கும்போது அதனால் துன்பம் உண்டாகும் என்று குழந்தைக்குத் தெரியாது. முன் அனுபவமும் அறிவும் இல்லாமையினால் உடைந்த கண்ணாடியை எடுத்துக் கீறிக்கொண்டு துன்பம் அடைகிறது. துன்பம் அடையவேண்டும் என்பது அதன் நோக்கம் இல்லை. துன்பம் அடையும் வகையில் அதன் அறியாமை அதனைச் செலுத்துகிறது. அதுபோலவே மனிதன் துன்பத்தை அடைய வேண்டுமென்று விரும்புவது இல்லை. அவன் எப்போதும் இன்பமே வேண்டுமென்று விரும்புகிறான். ஆனால் அது எங்கே கிடைக்குமென்று அறியாமையினால் துன்புறுகின்றான். இன்பம் கிடைக்குமென்று எதை எதையோ நினைந்து எண்ணி ஏமாந்து, தான் நினைத்தபடி முடியாமல் துன்பம் உண்டாவதைக் காண்கிறான். 

சில பண்டங்கள் நாவுக்கு இன்பமாக இருக்கின்றன. ஆனால், உடம்புக்குக் கேடு விளைக்கும். ஐந்து இந்திரியங்களால் உண்டாகின்ற இன்பம் எல்லாம் அப்போதைக்கு இன்பம் என்று தோன்றினாலும் அவற்றால் விளைகின்ற துன்பம் மிகப் பெரிது. மனிதன் இந்திரியங்களால் உண்டாகின்ற இன்பத்தை உண்மை இன்பம் என்று கருதி ஏமாந்து போகிறான். அப்போதைக்கு இன்பமாகத் தோன்றுவனவற்றைச் சிற்றின்பம் என்று சொல்வார்கள். ஐந்து பொறிகளின் வாயிலாகக் கிடைக்கின்ற எல்லா இன்பங்களுமே சிற்றின்பந்தான். சிற்றின்பம் என்ற பெயர் இருந்தாலும் அதனை இன்பம் என்று சொல்வதற்கு இல்லை. 

இனிப்பு என்று ஒன்றைச் சொன்னால், மற்றவை கசக்குமோ என்ற எண்ணம் தோன்றும். அதுபோலவே, சிற்றின்பம் என்ற பெயரே, பேரின்பம் என்று மற்றொன்று இருப்பதை உணர்த்தும். விளையாடிக் கொண்டு இருப்பவன் சிறிய பையன்  என்றால், பெரிய பையன் ஒருவன் இருக்கிறான் என்று தெரிகிறது. அதுபோல, சிற்றின்பம் என்ற தொடர் பேரின்பம் என்ற ஒன்று இருக்கிறதை உணர்த்துகிறது. அறிவினாலும் ஆற்றலினாலும் சிறியவர்களாக இருக்கும் நாம் சிற்றின்பத்தை நாடிச் செல்கிறோம். பெரியவர்கள் பேரின்பத்தை நாடுகிறார்கள். நாம் செய்கிற முயற்சிகள் யாவுமே சிறிய முயற்சிகளே. நெடுங்காலம் செலவிட்டும் பெரிய முயற்சிகளைச் செய்தும் இந்த இன்பத்தை அடைகிறோம்.  இது எப்படிச் சிறிய இன்பம் ஆகும்? என்று தோன்றும். நெடுநாளைக்கு இந்த இன்பம் நில்லாமல், பின்னாலே துன்பம் தரும் வகையில் அமைந்திருப்பதனால் இது சிற்றின்பம் ஆகிறது. இந்த இன்பம் பொய்யான இன்பம்; போலி இன்பம். மெய்யான இன்பம் என்பது மாறாமல், குறையாமல், நிறைவாக இருக்கிற பேரின்பமே. உண்மையில் அதுதான் உண்மையில் இன்பம் ஆகும்.

அந்த இன்பத்தை அடைவது எப்படி என்பதுதான் பெரிய கேள்வி. பேரின்பம் என்ற ஒன்று இருக்கிறது என்று யாரேனும் சொல்வதைக் காதாலே கேட்கிறோம். மனம் நம்புவது இல்லை. நமக்கு உறுதிப்பாடு இல்லாவமையால் ஐயம் பிறக்கிறது. "இறைவன் இருக்கிறான். அவன் திருவருள் செய்வான். அந்தத் திருவருளால் நிலையான இன்பத்தைப் பெறலாம்"  என்று ஒருவர் அல்ல, இருவர் அல்ல, ஆயிரக்கணக்கான பேர்கள் பலகாலமாகச் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். நாம் நேரிலும் கேட்கிறோம். இப்படிச் சொன்ன பெரியவர்கள் சாதி,  சமயம், மொழி, நாடு என்ற வரையறைகளைக் கடந்தவர்கள். இப்படிப்பட்டவர்கள் இன்னும் தோன்றுவார்கள். பலகாலமாகப் பல பெருமக்கள் பேரின்பத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தாலும் நமக்கு நம்பிக்கை உண்டாவது இல்லை. பிறர் மதிக்கவேண்டுமே என்று கருதி பேச்சளவில் நாம் நம்புவதாகக் காட்டுகிறோம். பேரின்பம் என்று ஒன்று இருக்குமா? அது  நமக்குக் கிடைக்குமா?" என்ற ஐய அலை ஓய்ந்தபாடு இல்லை. இதற்கு முதற்காரணம், மாயை என்றும் திரோதம் என்றும் மறைப்பாற்றல் என்றும் சொல்வார்கள்.

நாம் விரும்புகின்ற சிற்றின்றபத்தை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறோம். பல சமயங்களில் அது கைகூடுவது இல்லை. ஒருவேளை கைகூடினாலும், நாம் கருதியது போல இல்லை. அதனால் ஏமாற்றம் அடைகிறோம். இந்த ஏமாற்றத்தால், பேரின்பம் என்ற ஒன்று நமது முயற்சியினால் கைகூடும் என்பது ஐயமே என்ற எண்ணம் உண்டாகிறது. படித்தவர்களில் சிலர் பேரின்பம் என்பது வெறும் கற்பனையே என்று எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். பேரின்பத்தைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் பிறருக்கு விரிவாக மேடைகளில் முழங்குகின்ற பலரின் வாழ்க்கை, சொல்வது ஒன்று,  செய்வது ஒன்றாக அமைந்து இருக்கிறது. ஏட்டுச்சுரைக்காய் போலப் பிறருக்கு உபதேசம் செய்யும் வகையில் அவர்கள் பெரியவர்கள் எழுதிய நூலை எடுத்துச் சொல்கிறார்கள். ஆனால், அவர்களுடைய உள்ளத்தில் அவற்றில் சிறிதும் நம்பிக்கை இருப்பதில்லை. மெத்தப் படித்தவர்களே நம்பிக்கை கொள்ளாமல் இருப்பார்களானால், அவர்களை அப்படி ஆக்கும் மாயாசத்திக்கு எவ்வளவு ஆற்றல் இருக்க வேண்டுமென்பதை எண்ணிப் பார்க்கலாம். 

தம்முடைய முயற்சியினாலே பேரின்பத்தைப் பெற்றதாகச் சொல்லாமல், "இறைவன் திருவருளால் பெற்றேன்" என்று சொன்ன பெருமக்களே பலர். நம்மைப் போல வாழும் காலத்தில் அவர்கள் கண்டு அறியாத தனி இன்பத்தை, இறைவன் திருவருளைப் பெற்ற பிறகு அடைகிறார்கள். அப்போது அவர்களுக்கு உண்டாகும் வியப்பு அளவிட முடியாது. "கண்டறியாதன கண்டேன்"  என்றும், "'தேடிக் கண்டுகொண்டேன்" என்றும் பெருமகிழ்ச்சியோடு அப்பர் பெருமான் கூறுகிறார். "ஆர் பெறுவார் அச்சோவே" என்கிறார் மணிவாசகப் பெருமான். இறைவனுடைய திருவருளைப் பெற்ற பெருமக்கள் பலரும் தாம் பெற்ற அனுபவத்தை விம்மிதத்தோடு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சொல்லி இருக்கிறார்கள். இப்படி வெவ்வேறு வகையில் சொல்வதனால் அது உண்மையா என்ற ஐயமும் நமக்கு உண்டாகி விடுகிறது. 

எல்லோரும் ஒன்றே சொன்னால் அது நிச்சயம் என்று தெளிந்து கொள்ளலாம். அவர்கள் வெவ்வேறு வகையில் இறைவனுடைய திருவருளைப் பெற்றாலும், அவர்கள் பெற்ற இன்ப உணர்ச்சி பொதுவான ஒன்றே. விரத நாள் என்பதற்காகப் பலரும் இனிப்பான பண்டத்தைச் செய்திருக்கிறார்கள். ஒரு வீட்டில் செய்த பண்டம் மற்றொருவர் வீட்டில் இல்லை. வெவ்வேறு உருவத்தில் இனிப்புப் பண்டத்தை உண்டாலும், அறிகின்ற சுவை இனிப்பு என்ற ஒன்றுதான். அதுபோலவே, இறைவனுடைய திருவருளைப் பெறும் வழி வெவ்வேறாக இருந்தாலும், இறைவனைச் சந்தித்த முறை வெவ்வேறாக இருந்தாலும், அவர்கள் திருவருளை உணர்ந்து பெற்ற இன்பம் ஒன்றுதான். அவரவர்களுடைய உபாசனை முறைக்கும், குருவின் உபதேச வகைக்கும், சாதனத்தின் தன்மைக்கும் ஏற்ப அவர்களுக்கு அனுபவம் வருகிறது. எத்தகைய உணவை உண்டாலும் பசி தீருகிற அனுபவம் ஒன்று. அதுபோலவே எந்த வகையில் வழிபட்டாலும் இறைவன் திருவருளால் பெறுகின்ற இன்பம் ஒன்றுதான். இத்தகைய இன்பத்தைத்தான் பேரின்பம் என்று பொதுவாக எல்லோரும் சொன்னார்கள். குறித்தார்கள். 

ஆணும் பெண்ணும் பல உருவமாகப் பலவகை வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொருத்தியை மனைவியாகப் பெற்று வாழ்ந்தாலும், எல்லோரும் பெறுகின்ற சிற்றின்பம் பொதுவகையில் ஒன்றுதான். உருவமும் அழகும் வெவ்வேறு விதமாக இருந்தாலும், ஆண் பெண் உறவில் உண்டாகின்ற இன்பத்தில் வேறுபாடு இல்லை. அதுபோலத்தான், வெவ்வேறு உருவத்தில் கடவுளை வழிபட்டு, வெவ்வேறு மந்திரங்களை உருவேற்றி, வெவ்வேறு இடத்தில் உபாசனை செய்து, வெவ்வேறு காலத்தில் இன்பத்தை அடைந்தாலும் எல்லா இன்பமும் ஒன்றே. 

எந்த வழியானாலும் முன்னாலே ஒருவர் சென்று பயன் பெற்ற வழியாக இருக்க வேண்டும். நாலுபேர் போன வழியில் போகவேண்டும் என்பது வழக்குச் சொல்லாக உள்ளது. இதைத்தான் மரபு என்றும், சமயம் என்றும், மார்க்கம் என்றும் பெரியவர்கள் வெவ்வேறு பெயராலே சொல்கிறார்கள். எந்த வழியில் சென்றாலும் இறைவனுடைய திருவருளைப் பெறலாம். இந்த வழியில் சென்றால் திருவருளைப் பெறலாம் என்பது ஒரு சமயம். இன்னொரு சமயம் இன்னொரு வழியைக் காட்டும். சமய பேதங்கள் இருந்தாலும், அவற்றால் அடைகின்ற இன்பம் ஒன்றுதான்.

இந்தப் பொதுமையை உணர்ந்து கொள்ளமால், சமயங்களுக்கிடையில் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொண்டு பிணங்குவது பேதைமை ஆகும். மறைப்பு ஆற்றல் அல்லது திரோதானம், முள்ளை முள்ளால் அகற்றுவது போல, அறியாமையை உண்டாக்கி, அறிவை விளக்குகிறது. உலகிலே மக்கள் ஒருவரை ஒருவர் இன்னார் இனியார் என்று தெளிவாக அறியாது மயங்குகின்றார்கள். உடன் பிறந்தவன்தான் அருச்சுனன் என்பதை அறியாத கர்ணன் அவனைப் பகைவன் என்று கருதிப் பகைத்தான். இதம் சொன்ன வீடணனை, இராவணன் வெறுத்தான். கெடுமதி கூறிய மகோதரனை மதித்தான். ஒரு மதத்தினர் கூறும் திறத்தினை மற்றொரு மதத்தினர் தெளிவாக அறியாது, அவர்களுடன் தர்க்கமிட்டுக் கலகம் புரிகின்றார்கள். பசுக்கள் பல நிறமாயினும் பால் ஒரு நிறம்தானே? நதிகள் வளைந்து வளைந்து பல்வேறு வழிகளில் சென்றாலும் முடிவில் கூடுகின்ற இடம் கடல்தானே?

அதுபோல் சமயங்கள் முடிகின்ற இடம் ஒன்றுதான், ஆகவே சமயவாதம் புரிதல் கூடாது. இறையருளை நாடி ஒன்றுபட வேண்டும். சமயவாதம் புரிவோர் நரகிலே ஒற்றுமைப்பட்டு வாழ்வார்கள் என்பதை, "காதிமோதி வாதாடு நூல் கற்றிடுவோரும்..... மாறு இலாத மாகாலன் ஊர் புக்கு அலைவாரே" என்றார் அருணகிரிதாப் பெருமான். 

கடவுள் உணர்ச்சி ஒன்றுதான் இந்த மனப் பக்குவத்தைத் தரும். கடவுள் உணர்ச்சி இல்லாதவர் எதனையும் செய்யத் தலைப்படுவர். புண்ணிய பாவங்களையும் உண்டு என்று உடன்படாது, நினைத்தவற்றை எல்லாம் பேசி, நினைத்தவற்றை எல்லாம் செய்து நரகக் குழியில் சென்று வீழ்வர். ஆகவே, கடவுள் அன்பு மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்பதனைக் கடைப்பிடிக்க. மனிதவாழ்க்கைக்கு மூச்சுக் காற்று எத்துணை அவசியமோ, அத்துணை அவசியம் கடவுளன்பு.

எங்கும் நிறைந்த பரம்பொருள் நமது உள்ளத்தில் உறைகின்றார் என்று மறவாது நினைப்பவர், மனத்தினாலும் பிற உயிர்க்குத் தீமை செய்யமாட்டார். கடவுள் எல்லாவற்றையும் அறிகின்றார் இருக்கின்றார் என்று எண்ணுவோமானால், உண்மைக்கு மாறாக எதையும் சொல்ல முடியாது.  ஆகவே,  இறைவனை ஒரு கணமேனும் மறவாது சிந்தை செய்து உய்வு பெறவேண்டும். கடவுள் உணர்ச்சி மனிதனைத் தூய்மையாக்குகின்றது. வாய்மை நெறியில் வளப்படுத்துகின்றது. ஆகவே, அறிவு நூல்களைக் கற்கவேண்டும். அவ்வறிவு நூல்களைக் கற்றாரே கற்றார் ஆவார். அல்லாதார் கற்றார் எனினும் கல்லாதாரே ஆவார். "கற்றவர் விழுங்கும் கற்பகக் கனி" என்றும், "கற்றவர்கள் உண்ணும் கனி" என்றும் "கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ" என்றும் வரும் அமுத வசனங்களால் அறிக.

கற்றதன் பயன் வாலறிவன் நற்றாள் தொழுதலே என்று திருவள்ளுவ நாயனார் வகுத்து உரைத்த வாய்மையாலும் அறிக.

"கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்

நள்ளார் தொழாஅர் எனின்". --- திருக்குறள்.

"கற்பவை கற்க" என்று திருவள்ளுவர் கூறியபடியால், கற்கத் தக்க நூல்களையே கற்கவேண்டும். கற்கத்தக்க நூல்கள் எவை அவை ஞானநூல்களாகும். "அறிவுநூல் க(ல்)லா மூடர்" என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான் ஒரு திருப்புகழில்.

தமிழ் நூல்களில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று தோத்திர நூல்கள். மற்றொன்று சாத்திர நூல்கள். தோத்திரங்கள் பன்னிரு திருமுறைகள். சாத்திரங்கள் பதினான்கு சித்தாந்த சைவ நூல்கள். அருணகிரிநாதர், தாயுமானார் முதலிய அருளாளர்கள் அருளிய நூல்கள் அவைகளின் வழி வந்தவைகள். எனவே, இத்தகைய முத்திநெறிக்கு உரிய சத்திய நூல்களையே கற்றல்வேண்டும், கற்றவண்ணம் நிற்றல் வேண்டும்.

கற்பது என்பது உள்ளத்தில் உள்ள கசடு அறுவதற்காகவே. "கற்க கசடு அற" என்றார் திருவள்ளுவ நாயனார். ஓதுவது என்பதை நன்னெறியில் நிற்பதற்காக. "ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது" என்றார் திருஞானசம்பந்தர். ஒதுவது என்பது உணர்தலில் முடிய வேண்டும். "ஓதியும் உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும்" என்றார் திருவள்ளுவ நாயனார். "உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான். எனவே, அருள்நூல்களையும், சாத்திரங்களையும், கசடு அறக் கற்று, ஓதி உணர்ந்து தெளிவு பெறுதல் வேண்டும். 

"எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு

மக்கட் பிறப்பில் பிறிது இல்லை; - அப்பிறப்பில்

கற்றலும், கற்றவை கேட்டலும், கேட்டதன்கண்

நிற்றலும் கூடப் பெறின்." --- அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

மக்கள் பிறப்பில் படிப்பதற்கு உரியவற்றைப் படித்தலும், படித்தவற்றைப் பெரியோரிடம் கேட்டுத் தெளிவடைதலும், அவ்வாறு கற்றும் கேட்டும் தெளிந்த வழியிலே நிற்றலும் பொருந்தப் பெற்றால், வேறு எந்த வகைப் பிறப்பாக இருந்தாலும், மனிதனாகப் பிறப்பதைப் போல ஒருவனுக்கு இன்பம் தரக்கூடியது வேறு ஒன்றும் இல்லை. அதுவே, மனிதப் பிறப்பு எடுத்ததன் சிறந்த பயன் ஆகும்.

     காரணம், அப்போதுதான், மனதில் தீய எண்ணங்கள் தோன்றாதிருக்கும்.

"கற்றதுவும் கற்று, ஒருபால் நிற்பக் கடைப்பிடியும்,

மற்று ஒருபால் போக மறித்திட்டுத்-தெற்றென

நெஞ்சத்துள் தீமை எழுதருமேல், இன்னாதே

கஞ்சத்துள் கல்பட்டால் போன்று. "             --- அறநெறிச்சாரம்.

     படிக்க வேண்டிய நூல்களைப் படித்து, அதனால் பெற்ற அறிவு ஒழுக்கம் ஆகியவற்றோடு பொருந்த வேண்டும். அவ்வாறு பொருந்தாமல் ஒரு பெறம் நிற்கவும், எடுத்த செயலை முடிக்கும் துணிவும், படித்த நூல்களின் கருத்தில் இருந்து மாறுபட்டு, மற்றொருபுறம் செல்லவும், நல்லொழுக்கத்தில் நடப்பதை விடுத்து, மனத்திலைவிரைந்து கெட்ட எண்ணம் உண்டாகுமானால், அது, தின்னும் உணவில் கலந்து இருக்கும் கல்லைப் போல, மிக்க துன்பத்தைத் தருவதாகும்.

"கற்றும் என்பலன்? கற்றிடு நூன்முறை

சொற்ற சொற்கள் சுகாரம்ப மோ?நெறி

நிற்றல் வேண்டும், நிருவிகற பச்சுகம்

பெற்ற பேர்பெற்ற பேசாப் பெருமையே." ---  தாயுமானார்.

கற்க வேண்டிய நூல்களைக் கற்று, கற்ற நெறியில் நில்லாமல், வெறும் இலக்கண இலக்கியங்களாகிய கருவி நூல்களை மட்டும் கற்று, அதனால் வந்த பொது அறிவினால், நம்மினும் உயர்ந்தவர் எவர் என்று செருக்குக் கொண்டு, பல புலவர் நிமிர்ந்து நிற்பர். அவர்கள் உள்ளத்தில் குழைவு இராது. சிந்தையில் தணிவும், செய்கையில் பணிவும் இரா. இத்தகையோர் ஒருவரையொருவர் காணும்போது தாம்தாம் கற்ற வித்தைகளைக் கொட்டிக் கலகமிடுவர்.

பிறவித் துன்பத்தை நினைந்து உள்ளம் குழைந்து உருகி, "ஈசனே! எண்ணில்லாத பிறவி எடுத்து எடுத்து இளைத்து விட்டேனே! இனி இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ? யாது வருமோ? இனி எளியேனைப் பிறவா வண்ணம் ஏன்றுகொள்" என்று உள்ளத்தால் உரைத்து, வெள்ளம்போல் விழிநீர் பெருக நின்று, நெய்யிலே இட்ட அப்பத்தில் தண்ணீர்ப் பசை அற்றவுடன், அந்த அப்பம் அமைதி உறுவதுபோல் சாந்தியுடன் நிற்பர்.

இத்தகைய பெருந்தன்மையும் நன்மையும் அறியாத பலர், மரப் பெட்டியில் உள்ள நூல்களை மாமிசப் பெட்டியில் ஏற்றி, அகந்தை கொண்டு, மனிதப் பண்பு ஒரு சிறிதும் இன்று, ஒருவரை ஒருவர் எதிர்த்து அதிர்ந்து பேசி, பற்கள் உதிர்ந்து, கண்கள் பிதிர்ந்து, பேதுறுவர்.  இம்மையிலே இகழும் மறுமையிலே நரகமும் அடைவர்.

சமயப் பொதுமை உணர்வு இல்லாதவர்கள் எப்போதும் தாம் கற்றதை வைத்துக் கொண்டு குரைத்துக் கொண்டு திரிவார்கள் என்கிறார் திருமூல நாயனார்.

"ஒன்றதே பேரூர், வழி ஆறு அதற்கு உள,

என்றது போலும் இருமுச் சமயமும்,

நன்று இது தீது இது என்று உரை ஆதர்கள்

குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே."      ---  திருமந்திரம்.

சென்று அடைதற்கு உரிய பெரிய ஊர் ஒன்றே. அதனை அடையும் வழிகள் ஆறு உள்ளன என்றது போன்று, கடவுள் உண்மையைக் கூறும் ஆறு சமயங்களும்,கடவுள் என்னும் ஒரு பொருளையே அடைவதற்குச் சாதனமாக உள்ளன. நான் சொல்லும் இந்த வழியே நல்லது, பிறர் கூறும் வழிகள் எல்லாம் தீயனவே என்று (உண்மை அறிவு விளங்காமல், தாம் உணர்ந்த்ததையே சொல்லிப்)  பிணங்குகின்ற சமயவாதிகள் எல்லாம்,மலையைப் பார்த்துக் குரைக்கின்ற நாயை ஒத்தவர் ஆவர் என்று சமயவாதிகளைப் பார்த்துச் சாடுகின்றார்.

     எல்லாச் சமயங்களும், மக்கள் அறிவு நலம் பெற்று வாழ்வதன் பொருட்டே அருளாளர்களால் வகுத்து உரைக்கப்பட்டன.  அவற்றிடையே அமைந்த ஒருமை உணர்வினைக் காண முயலாது, அவற்றின் வெளித் தோற்றத்தை மட்டும் கண்டு மருண்டு வாதித்துப் பிணங்குவோர், மலையைக் கண்டு மருண்டு குரைத்துக் கொண்டு கடிக்க ஒடும் நாயினைப் போன்று, பிறர் கூறும் மொழியின் பொருளை உள்ளவாறு உணரும் தெளிவின்றித் தம் சொற்களைப் பயனில்லாதவைகளாகச் செய்கின்றார்களே என்றும் இரங்கி வருந்தி, "குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே" என்றார் திருமூலர். ஞானமே திருமேனியாகவுடைய இறைவன் சமயங்கள் தோறும் அருளிச் செய்த ஆகமங்களில் கூறப்பட்ட மெய்யுணர்வு பற்றிய முடிவுகள் எல்லா ஆகமங்களிலும் ஒத்துச் சென்று முழுமுதற் பொருள் ஒன்றையே நோக்கிச் செல்வன என்பதை விளக்க, "ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்கு உள" என்றார்.

     சமய நெறியில் நம்பிக்கை இல்லாதவர்கள் அப்படியே இருக்கவேண்டும். சமயப் பற்றாளர்களைப் பார்த்து எப்போதும் குரைத்துக் கொண்டு இருத்தல் கூடாது. இல்லை என்பது ஒருவருடைய கொள்கைச் சுதந்தரம் என்றால், உண்டு என்பதும் ஒருவருடைய கொள்கைச் சுதந்தரம். அதைப் பரிகசிப்பது தன்னைத் தானே ஒருவன் தாழ்த்திக் கொள்வது போல ஆகும். சபயப் பற்றாளர்களும் தாம் சார்ந்து உள்ள சமயத்தின் உண்மையை முழுமையாக உணரவேண்டும். மேலெழுந்த வாரியாகப் படித்துவிட்டோ, பிறர் சொல்லுவதைக் கேட்டோ. சமயங்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்தல் கூடாது. எல்லாச் சமய உண்மைகளையும் தெரிந்திருக்க வேண்டும். ஒழுங்காகக் கற்பதும் இல்லை, கேட்பதும் இல்லை. அவரவர் அறிவு நிலைக்கு ஏற்ப சமய உண்மைகளை உரைப்பார்கள்; கற்பித்துக் கொள்ளுவார்கள். என் தாய் உயர்ந்தவள் என்றால், இன்னொரு அம்மையார் தாழ்ந்தவர் என்று கொள்வது எவ்வளவு மடமைக்கு உரியதோ, அதுபோலத் தான் சமய நிலைகளும். இவர்களை மலையைப் பார்த்துக் குலைக்கின்ற நாய்கள் என்றார் திருமூல நாயனார்.. மலையின் உண்மை இயல்பை நாய் அறியாது தானே. நாயின் இயல்பு என்ன? குரைத்தல் தான். பேதையின் இயல்பு என்ன? தான் சொன்னதையே சாதிப்பது தான். மேலான இந்த உண்மையைத் தெளிந்து அடங்க வேண்டும். இதை,

"சமயவாதிகள் தத்தம் மதங்களே

அமைவதாக அரற்றி மலைந்தனர்."

என்கிறார் மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில். சமயவாதிகள் எல்லாம் தம் தம் மதங்களே ஏற்புடையதாகும் எனச் சொல்லி ஆரவாரித்துப் பூசலிட்டார்கள், பூசலிடுவார்கள், இனியும் பூசலிட்டுக் கொண்டுதான் இருப்பார்கள் என்பது இதன் பொருள். சமயம் கடந்த உண்மையைச் சமயநெறி சார்ந்து தெளியவேண்டும் என்பது தான். தெளிவு, அறிவு, ஞானம், அன்பு என்பவை அளவுக்குள் அடங்காதவை. அளவு அற்றவை.

     இதைத்தான், "தொட்டு அனைத்து ஊறும் மணல்கேணி, மாந்தர்க்குக் கற்று அனைத்து ஊறும் அறிவு" என்று திருவள்ளுவ நாயனார் காட்டினார். மணல் கேணியை எந்த அளவுக்குத் தோண்டுகின்றோமோ அந்த அளவுக்குத் தண்ணீர் ஊறும். ஒருவன் எந்த அளவுக்கு நூல்களைப் பயிலுகின்றானோ, அந்த அளவுக்கு அறிவு ஊறும். அதுகொண்டே,"பாடம் ஏறினும் ஏடு அது கைவிடேல்" என்றும் "ஓதுவது ஒழியேல்" என்றும் "ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்" என்றும் முதுமொழிகள் தோன்றின. படித்தல் வேறு. ஓதுவது வேறு.

     கறுப்புக் கண்ணாடி அணிந்தவனுக்கு, அவன் காணும் பொருள்கள் எல்லாம் மங்கலாகவே தெரியும். சமயக் கண்ணோடு பார்ப்பவனுக்கு சமயம் மட்டுமே தெரியும். சமயம் கடந்த உண்மை தெரியாது. சமயம் எதை நமக்கு அறிவுறுத்த வந்தது என்றும் தெரியாது. மனக்கண்ணால் காணுங்கள். அறிவுக் கண்ணால் காணாதீர்கள். உங்களுடைய இன்றைய அறிவு, நாளை பொய்யாகலாம், மாறுபடலாம். நேற்று நீங்கள் சொன்னதை இன்று நீங்களே கூட மறுக்கலாம். உங்களுக்குப் பின் வந்த உங்கள் மகனோ மகளோ, ஏன் உங்களோடு உங்களுக்காகவே வாழுகின்ற உங்கள் வாழ்க்கைத்துணை கூட மறுக்கலாம். விருப்பு வெறுப்பு இல்லாமல் எதையும் கண்டால் நல்லது.

"பித்தர்குணம் அதுபோல, ஒரு கால் உண்டாய்ப்

பின் ஒருகால் அறிவு இன்றிப் பேதையோராய்க்

கத்திடும் ஆன்மாக்கள் உரைக் கட்டில்பட்டோர்

கனகவரை குறித்துப் போய்க் கடற்கே வீழ்வர்."

எனவரும் அருள்நந்தி சிவச்சாரியார் பாடல் மேற்குறித்த திருமந்திரத்திற்கு உரிய விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்.

பைத்தியம் பிடித்தவனுக்குத் தன் செய்கை அல்லாது பிறரைப் புரிந்து கொள்ள வராது. அவனது செயல் ஒருகால் அறிவு உள்ளது போலவும், இன்னொருகால் அறிவில்லாதது போலவும் தோன்றும். அதுபோல, அறிவு விளங்கியது போல, அறிவின்றிப் பேசுகின்ற சமயவாதிகளின் பேச்சில் அறிவு மயங்கிக் கட்டுண்டவர்கள், மேருமலையை அடைய எண்ணிப் போய், அதை அடையாமல் கடலில் விழுந்ததைப் போல் ஆவார்கள். 

"அறநிலையத் துறையில் முழுமையாக நான் ஈடுபட்டட பிறகு ஒரு உண்மை விளங்கியது. அறுபது ஆண்டு காலத்திற்கு மேல் எங்களுடைய திராவிட இயக்கம் சமுதாய உயர்வுக்காகப் பல எதிர்ப்பு இயக்கங்களை மேற்கொண்டதால், சமய இலக்கியங்களைக் குறித்து தமிழ் மக்களுக்குச் சரியான பாதையைக் காட்டாமல், எங்கோ பிழை ஏற்பட்டுவிட்டது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். பேரறிஞர் அண்ணா அவர்கள் முழு நாத்திகராக விளங்கிய தந்தை பெரியாருடைய மாணவர். தந்தை பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட ஒரு தலைவர் என்றாலும், தந்தை பெரியாரோடு முரண்பட்டு, 1949-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய போது, தந்தை பெரியாருடைய இலட்சியத்திற்கு மாறாக, நாத்திகக் கொள்கைக்கு எதிரான திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை, "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற சொற்றொடரைப் பிரகடனப்படுத்தினார். ஆனால், இது சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறையாக இடம் பெற்றிருக்கிற திருமூலர் திருமந்திரத்தில் உள்ள தத்துவமாகும்" என்று 08.05.2021 அன்று வெளியான தினமணி  நாளிதழில் முன்னாள் அறநிலையத் துறை அமைச்சர் இரு இராம. வீரப்பன் அவர்கள் குறிப்பிட்டு உள்ளார்கள்.

எனவே, இறையருளால் உண்மை இன்பத்தைப் பெற்று மகிழலாம். அதற்குத் துணை செய்வது சமய உணர்வு. சமய உண்மையை அறிந்து கொள்ளாமல், சமயங்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொண்டு பிணங்குதல் நன்மையைத் தராது. குலம் என்றால் அது மனிதகுலம் ஒன்றுதான். இறைவனும் ஒருவனே ஆவான்.  


யோகம்

 

யோகம்

---

"யோகம்" என்னும் சொல்லுக்குப் 'பொருந்துதல்' அல்லது 'ஒன்றி இருத்தல்' என்று பொருள். பரம்பொருளுடன் பொருந்துதல் யோகம் எனப்படும். 

பொருந்துதல் என்ற உடனே,

1. பொருந்துகின்ற பொருள் எது?

2. எந்தப் பொருளோடு பொருந்த வேண்டும்?

3. பின் பொருந்துதற்கு உரிய காரணம் என்ன?

4. இதற்கு முன் பொருந்தாது இருந்தமைக்குக் காரணம் என்ன?

5.ஒன்றை மற்றொன்றைனொடு பொருத்துகின்ற உபகார சக்தி எது?

6.பொருந்திய பின்விளையும் பயன் என்ன?

என்ற வினாக்கள் எழும். இவ்வினாக்களுக்கு விடை பின்வருமாறு:

1.பொருந்துகின்ற பொருள், சீவன்.

2.பொருந்தப்படும் பொருள், பரம்பொருள்.

3..பின் பொருந்துதற்குரிய காரணம், பரமானந்த வேட்கை;

4.முன் பொருந்தாது இருந்தாமைக்குக் காரணம், ஆணவமல மறைப்பு;

5. பொருத்துகின்ற பொருள், இறைவனோடு தாதான்மியப்பட்டு நிற்கும் அனுக்கிரக சக்தி;

6. பொருந்திய பின் விளைவது பரமானந்தம்.

இது எதைப் போல என்றால், ஒருத்தியும் ஒருவனும் கூடி இன்புறுவார்களானால், கூடுகின்றவள் மனைவி. கூட்டப்படுகின்றவன் மணாளன்.  அவள் அவனைக் கூடுவதற்குக் காரணமாக அமைந்தது காமவேட்கை. முன் அவனைக் கூடாது இருந்தமைக்குக் காரணம் அவனை அறியாமை. அறியாமை இருந்தபோது அந்தப் பெண்ணுக்கு காம வேட்கை என்றால் என்னவென்று அறிந்து கொள்ள முடியவில்லை. பக்குவம் வந்தபோது,  அவளுக்குக் காமவேட்கை தானாகவே உண்டாகிறது. தனது ணாளனைக் கேடி மகிழ்கிறாள். அப்போது கிடைத்த இன்பத்தை எண்ணுகின்ற போது, இதனை அறியாமல் இருந்தோமே என்று தனது பக்குவம் இன்மையை எண்ணி அவள் தனக்குள்ளேயே சிரித்துக் கொள்கிறாள். கூடிய பின் விளைவது சொல்லால் விவரிக்க முடியாத இன்பம் என்கிறார் தாயுமான அடிகளார்.

"இன்னமுது கனிபாகு கற்கண்டு சீனிதேன்

எ(ன்)ன ருசித்திட, வலியவந்து

இன்பம் கொடுத்த நி(ன்)னை எந்நேரம் நின்அன்பர்

இடையறாது உருகிநாடி

உன்னிய கருதது அவிழ, உரைகுளறி, உடல் எங்கும்

ஓய்ந்து உயர்ந்து அவசமாகி,

உணரவு அரிய பேரின்ப அநுபூதி உணர்விலே

உணர்வார்கள் உள்ளபடிகாண்;

கன்னிகை ஒருத்தி சிற்றின்பம் வேம்பு என்னினும்,

கைக்கொள்வள் பக்குவத்தில்

கணவன் அருள் பெறின், மு(ன்)னே சொன்னவாறு என் என்னக்

கருதி நகையாவள், அதுபோல்

சொன்னபடி கேட்கும் இப் பேதைக்கு நின்கருணை

தோற்றில் சுக ஆரம்பம் ஆம்

சுத்த நிர்க்குணமான பரதெய்வமே! பரஞ்

சோதியே! சுகவாரியே!"

இதன் பொருள் ---

சொன்னபடி கேட்டு நடக்கும் அறிவில்லாத அடியேனுக்கு, உன்னுடைய பேரருட்பெருக்கு இருக்குமாயின், நீங்காத பேரின்பத் தோற்றம் ஓங்கும். முக்குணச் சார்பில்லாத நன்மைக்கு மேலான விழுமிய முழுமுதற்பொருளே! பேரொளிப் பிழம்பே! பேரின்பப் பெருங்கடலே! இனிய அமுதுக்கு ஒப்பான வாழை மா பலா என்னும் முக்கனியைப் போலவும், சருக்கரைப் பாகுபோலவும், கற்கண்டு எனவும், சீனத்துச் சீனிபோலவும், தேன் போலவும் சுவை உண்டாகும்படி வலிய எழுந்தருளி வந்து திருவடி இன்பத்தினை அருட்கருணையால் ஊட்டி அருளிய உன்னை, அந்த இன்பத்தினை அனுபவித்த மெய்யன்பர்கள், எப்பொழுதும் உன்னையே இடையறாது நினைந்து உள்ளம் உருகி, எண்ணி, எண்ணிய உள்ளமும் நெகிழ்ந்து, சொல் தடுமாறி, உடம்பு இளைத்து, நினைவு இழந்து,  தன்வசம் இழந்து நின்வசம் ஆகி,  அறிதறகு அரிய பேரின்ப நுகர்வு உணர்விலே உணர்ந்து இன்ப வண்ணமாய் அமர்ந்திருப்பர்; இது மெய்ம்மை ஆகும்.

அது எதைப் போன்றது என்றால்) மங்கைப்பருவம் எய்தாத கன்னிப் பெண் ஒருத்தி, தனது பருவம் இன்மையால், உண்மையில் பலராலும் விழைந்து அனுபவிக்கப்பட்டு வரும் சிற்றின்பத்தினை கசக்கும் வேம்பு என வெறுத்துப் பேசுவாள். அவளே மங்கைப் பருவத்தினை அடைந்து, தனக்கு வாய்த்த கணவனுடன் இல்வாழ்க்கையை ஏற்று, கணவனுடன் கூடி மகிழ்ந்து வரும் காலத்தில், அவள் அனுபவித்து வரும் இன்பமே பேரின்பம் என அவளுக்குத் தோன்ற, முன்னம் என்ன சொன்னோம் என்று நினைந்து அடங்காத சிரிப்பினை எய்துவாள்.

பருவம் அடையாதபோது, ஒரு கன்னிப் பெண்ணுக்கு சிற்றின்பம் என்றால் என்னவென்று தெரியாது. எனவே, அதை வேப்பங்காயாக எண்ணி வெறுத்தாள். பருவம் வந்து காமவேட்கை மீதூர, கணவனாக அமைந்த ஒருவனுடன் கூடி இன்பத்தை அனுபவித்தபோது அந்த இன்பம் அவளுக்குப் பேரின்பமாகத் தோன்றியது. மருவம் இல்லாத காலத்தில் தான் எண்ணியதை நினைத்து இப்போது அவளுக்கே சிரிப்புத் தோன்றுகின்றது.

அருள்நந்தி சிவாச்சாரியார் தாம் அருளிய "சிவஞான சித்தியார்" என்னும் நூலில் இதே நிகழ்வை வைத்துப் பின்வருமாறு பாடுகின்றார்.

"கருவி கழிந்தால் காணார், ஒன்றும் எனில் காணார்

காணாதார், கன்னிகைதான் காமரதம் காணாள்

மருவி இருவரும் புணர வந்த இன்பம்

வாயினால் பேச அரிது, மணந்தவர்தாம் உணர்வர்;

உருவின் உயிர் வடிவதுவும் உணர்ந்திலர் காண்; சிவனை

உணராதார் உணர்வினால் உணர்வது கற்பனைகாண்;

அருள்பெறின் அவ் இருவரையும் அறிவுஇறந்து அங்கு அறிவர்;

அறியாரேல் பிறப்பும் விடாது ஆணவமும் அறாதே."

கருவிகளை விட்டு நீங்கப் பெற்றவர்கள் எதனையும் காண முடியாதவர் ஆவார் அல்லவா!  எனவே அந்தக்கரணங்களோடும் கூடாதே நின்றவர்களே இறைவனைக் காண்பார் என்பது பொருந்துமா? என்று சிலர் வினவுவர். உலகியல் பொருளைக் காண்பதற்கு உட்கருவியாகிய மனக்கண்ணும், புறக்கருவி ஆகிய கண்ணும் வேண்டும். இது உலகியாருக்கே பொருந்தும். ஆனால் ஞானநிட்டை கூடியவர்கள் இறைவனைத் தமது உள்ளக்கண்ணால் கண்டவர்கள் ஆதலால், ஞானத்தால் யாவற்றையும் அறியும் அறிவு பெற்றவர்கள்.  இது எத்தகையது என்றால், திருமணமாகாத கன்னிப் பெண் ஒருத்தி இன்பச் சுவையை அறிய மாட்டாள். ஒருவனும் ஒருத்தியுமாகக் கலந்து அனுபவிக்கும் இன்பம் இத்தகையது எனச் சொல்லினால் உணர்த்த இயலாது. அவ்வின்பத்தை துய்த்தவரே அதனை உணர்வர். அது போலவே இறைவனைக் கண்டவர்கள் பெறுகின்ற இன்பமும் இத்தகையது என்று உணர்த்த இயலாது. திருவருள் வழி நின்று உணராதவர்கள் தாம் உணர்வதாகக் கூறினால் அது கற்பனையே அன்றி வேறு அல்ல. திருவடி ஞானம் பெற்றவர்க்கு அல்லாமல் பிறர்க்குப் பிறப்பும் நீங்காது. ஆணவமும் அறாது.

இறைவன் உயிர்களுக்குப் பேரின்பத்தை வழங்கி அருளும் நிலையைத் திருமூல நாயனார் பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றார்.

"அற்புதமாகி அனுபோகக் காமம்போல்

கற்பனை இன்றிக் கலந்து நின்றானே."      --- திருமந்திரம்.

இதன் பொருள் ---

கருத்து ஒருமித்த காதலர் கூடி அனுபவித்த அந்தக் காம இன்பம்போல், இறைவன் நிலையும், அவன் திருவடியின்பமும் நுண்ணுணர்வால் உணர்ந்து அனுபவிக்கப் படுவது ஆகும்.  

        இது பொய்யெனக் கூறப்படும் கற்பனை அல்ல.  

ஓர் அறிவற்ற பொருள் மற்றோர் அறிவற்ற பொருளுடன் கூடி இன்புறுவது இல்லை. ஒரு மரப்பலகை ஒரு மாம்பழத்துடன் கலந்து அதன் சுவையை அறியாது. அறிவற்ற பொருளாய் இருப்பினும் அறிவு உடைய பொருளுடன் கூடும்போதுதான் அறிவுடைய பொருள் இன்புறும். ஒரு மாங்கனியை ஒரு மனிதன் நுகர்ந்து இன்புறுவன். ஆயினும் அது அற்ப இன்பமே ஆகும்.

அதனினும் சிறந்தது, அறிவுடைய ஒருவனும் மற்றோர் அறிவுடைய ஒருத்தியும் கூடுகின்ற பொழுது உண்டாகும் மிகுந்த இன்பம். ஆயினும் அந்த இன்பம் கூட, கணப்பொழுதில் மறைவதும், தூய்மை இல்லாததும், நோய் செய்வதும், வெறுக்கத் தக்கதும் ஆகி விடும்.

சிற்றறிவுடைய ஆன்மா பேரறிவுடைய பரம்பொருளோடு கூடுகின்ற பொழுது,  தெவிட்டாத பேரின்பமும், அனுபவிக்க அனுபவிக்கக் குறையாத ஆனந்தமும், நிலைபேறான உண்மை இன்பமும் உண்டாகும். ஆதலால்,  அருளியல் நிலையில் யோகம் என்பது,  ஆன்மா பரம்பொருளுடன் பொருந்துதல் எனப் பொருள்படும்.

இதனைத் திருமூல நாயனார் பின்வரும் திருமந்திரப் பாடலால் விளக்கி அருளுகின்றார்.

"புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல,

உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்க வல்லாருக்கு

உணர்ச்சி இல்லாது குலாவி உலாவி

அணைத்தலும் இன்பம் அது இது ஆமே."

இதன் பொருள் ---

பெண்டிரோடு கூடும் கூட்டத்தில், ஆடவர் அப் பெண்டிர்மேல் வைக்கின்ற அன்பிலே தனது அறிவு அழிந்து நிற்றல்போல, பரம்பொருளினிடத்துச் செய்கின்ற அன்பிலே தம் அறிவு அழிந்து அந்நிலையில் நிற்க வல்லார்க்கு, அதனால் விளைகின்ற பேரின்பம் அவரைப் பின்னும் அந்நிலையில் இருந்து பெயராத வகையில் பெருகி விளங்கி, விழுங்கி அன்பு வடிவாக நிற்கும்.

ஆணும் பெண்ணும் கூடி மகிழ்கின்றபோது, அறிவு அழிந்து, பிற உணர்வுகள் ஏதும் இன்றி, அன்பு மட்டுமே விஞ்சி நிற்பதைப் போல, பிற உணர்வுகள் எவையும் இல்லாமல், அறிவு அழிந்து, அன்பு மேலிட்டு இறைவன் ஒருவனையே எண்ணி இருத்தல் வேண்டும்.

இதனை இன்னும் தெளிவாக, "ஒழிவில் ஒடுக்கம்" என்னும் நூலில் சொல்லப்பட்டு உள்ளது. காழிக் கண்ணுடைய வள்ளல் என்னும் அருளாளர் அருளிய இந்த நூலை, அதன் அருமை உணர்ந்து, வடலூர் வள்ளல்பெருமான் பதிப்பித்து அருளினார். இந்த நூலில் முதல் பாடலுக்கு அருமையான விளக்கத்தையும் அருளினார். நூல் முழுமைக்கும் வள்ளல்பெருமானுடைய விளக்கம் நமக்குக் கிடைக்கத் திருவருள் இல்லைபோலும். பின்னாளில், திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் நூல் முழுமைக்கும் விளக்கம் எழுதி அளித்தார்கள். பாடலையும், சிதம்பர சுவாமிகள் அருளிய விளக்கத்தையும் காணலாம்.

"முலைமுதிர நாணம் முதிர்ந்து, அடங்கி, மூடி,

கலவியிலே நக்கினத்தைக் காட்டல் - சலனைபயன்

ஆனாலும் தம்பனைசெய் ஆநந்தம் ஆக்குவது

போனாலாம் இந்தப் பொருள்."

இதன் பதவுரை ---

  முலைமுதிர நாணம் முதிர்ந்து அடங்கி மூடிக் கலவியிலே நக்கினத்தைக் காட்டல் - ஓர் பேதைப் பெண் தனது முலை முதிர முதிர, நாணம் மேன்மேலும் முதிர்ந்து,  புற புருடரோடு முன்போல நகையாடல் செய்யாது அடங்கி, அம் முலையினை மறைத்துத் தனது சுய புருடனுக்குக் கூட்டுறவின்கண் நக்கினத்தைக் காட்டுவதுபோலும், ஒருவன் அறிவு முதிர முதிர, முன்போல் விடயங்களில் செல்வதற்கு நாணம் முதிர்ந்து, அவ் விடயங்களில் செல்லும் போதத்தை (அறிவை) உள்ளடக்கித் திருவருளில் மறைத்து, ஆநந்தத்திற்கு ஒப்பித்து நிற்றல், அப் போதத்தை ஆனந்தத்திற்கு ஒப்பிக்க எனின், அங்ஙனம் ஒப்பிக்குமாறே நில்லாமல்,

சலனை பயன் ஆனாலும் தம்பனை செய் ஆநந்தம் ஆக்குவது போனாலாம் இந்தப் பொருள் - போதச் சலனை ஆனாலும் விடயப் பயனை அனுபவிப்பதானாலும், இவ் விடயப் பயனை நீக்கி, அப்போதச் சலனையை அடக்கி, அப் போதத்தை ஆனந்த மயமாக்குவதானாலும், இவ் ஆநந்தப் பொருள் ஓர் இயல்பிற்றாய்த் தோற்றாது, அங்ஙனம் செய்வன் போம் ஆயின், இப்பொருளும் ஓர் இயல்பிற்றாய்த் தோற்றுவதாம்.

குறிப்பு --- முலை முதிர்ந்த பெண், அம் முலையையும் அல்குலையும் பிற புருடருக்குக் காட்டாது மறைத்துத் தன் புருடனுக்குக் காட்டுதல்போல், அறிவு முதிர்ந்தோர் தற்போதத்தை விடயங்களில் செல்ல ஒட்டாது மீட்டு உள்ளடக்கி, அதனைச் சிவாநந்தத்திற்கு ஒப்பிக்க வேண்டும். ஆகலின், அங்ஙனம் உவமை கூறினார்.

தலைவனும் தலைவியும் கூடித் தம்மை மறந்து இன்பத்தை அனுபவிப்பது யோகம் ஆகும். நாற்றைப் பிடுங்கி நடுவதைப்போல, திருமணத்தின் மூலம் தான் பெற்ற மகளை வேற்றுக் குடும்பத்துக்குள் புகுத்துகிறார்கள். பிறந்த வீட்டின் சூழலுக்கு முற்றும் மாறாகப் பெகுந்த வீடு இருக்கும். அந்தச் சூழலுக்குத் தக்கவாறு தன்னை அமைத்துக் கொள்ளாவிட்டால் துன்பப்படுவாள் மகள். எனவே, எந்தச் சூழலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று தான் வாழ்ந்த வாழ்வை முன்வைத்து, மகளுக்கு வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறாள் தாய். எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தவள், மகள் தன் மணவாளனோடு உறவாடித் தோய்ந்து பெற வேண்டிய இன்பத்தின் தன்மையை மட்டும் சொல்லிக் கொடுப்பதில்லை. காரணம், அந்த அனுபவம் தாய்க்குக் கிடைக்கவில்லை என்பது அல்ல. அந்த அனுபவத்தைச் சொல்லிக் கொடுக்க முடியாது என்பதே.

கணவனோடு உறவாடித்தான் மகளைப் பெற்றாள். அந்த உறவின் மூலம் பெற்ற இன்பத்தைத் தனது மகளுக்கு அவளால் எப்படிச் சொல்லமுடியும்?  கருத்தில் வைத்து அனுபவித்துப் பார்க்கவே முடியும். எல்லாவற்றையும் கண்ணில் பார்க்க வேண்டும் என்றால், தனிநிலை அக அனுபவங்களை வெளிப்படுத்திக் காட்ட யாராலும் முடியாது. எனவே,  உங்கள் முகக் கண்களை மூடிவிட்டு அகக் கண்களைத் திறந்து பாருங்கள். எதைப் பெற விரும்புகிறீர்களோ அதைத் தேடுங்கள், அதில் தோயுங்கள், கண்டுகொள்வீர்கள் என்று கடவுளைத் தேடுதலை யோக அனுபவமாகக் காட்டுகிறார்கள் நமது முன்னோர்கள். அதைப் பாடல்களாக வடித்து வைத்து அருளி உள்ளனர்.

இந்த யோக நிலையைத்தான், "நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா" என்று ஆண்டாள் நாச்சியார் காட்டினார். தெய்வச் சேக்கிழார் பெருமான், யோகம் என்பதற்கு விளக்கமாகப் பெரியபுராணத்தில், சுந்தரமூர்த்தி நாயனார் பரவை நாச்சியாருடன் கூடி வாழ்ந்த வகையைக் காட்டிப் பாடியுள்ள பாடல் வருமாறு...

"தென்நாவ லூர்மன்னன் தேவர்பிரான் திருவருளால்

மின்ஆருங் கொடிமருங்குல் பரவைஎனும் மெல்லியல்தன்

பொன்ஆரும் முலைஓங்கல் புணர்குவடே சார்வுஆகப்

பல்நாளும் பயில்யோக பரம்பரையின் விரும்பினார்."

இதன் பொருள் ---

அழகிய திருநாவலூரின் மன்னராக விளங்கும் ஆரூரர் (சுந்தரமூர்த்தி சுவாமிகள்), தியாகேசப் பெருமானின் திருவருளால் மின்னலையும் கொடியையும் ஒத்த இடையினை உடைய பரவையார் என்னும் மெல்லியலாரின், பொன் அணிகலன்களை உடைய தனங்களாகிய இருமலைகளின் நெருங்கிய சிகரங்களையே அரணாகக் கொண்டு பலநாள்களும் பழகும் யோகத்தை, அதற்கு உரித்தான வழிவழியாகச் சொல்லப் பெறும் அறத்தின் வழிநின்று துய்த்து மகிழ்வாராயினார்.

குறிப்புரை : மின்னல், இடையின் அசைவிற்கும், கொடி அதன் மென்மைக்கும் உவமை ஆயின. யோகம் - கூடுவது. மனத்தை இறைவன்பால் கூட்டவும் பின் அதனை விட்டு நீங்காது காக்கவும் கொள்ளும் பயிற்சியே யோகமாகும். இதனைச் செய்தற்கு உலகியல் சூழலினின்றும் நீங்கி மலைச் சிகரங்களைச் சார்ந்து பயில்வர். அப்பொழுது தான் அது விரைவாகவும் நிறைவாகவும் கைகூடும். இவ்வாறே நம் ஆரூரரும் பரவையாரை மணந்திருந்தும், உலகியலில் காணும் இன்பவழியன்றி, அருளியல்வழிக் காணும் இன்பமாம் இவ் யோகப் பயிற்சியைச் செய்தார் என்பதை இவ்வாறு கூறினார்.

ஓங்கல் - மலை. குவடு - சிகரங்கள். இங்குப் பரவையாரின் தனங்களாகிய மலைகளின் நெருங்கிய சிகரங்களையே இடனாகக் கொண்டு ஆரூரர் யோகம் செய்தார் என்றார். இறைவன் திருவருளிலேயே அழுந்தி நின்று அவன் செயலாகவே அனைத்தையும் கண்டு நிற்பார்க்கு நாம் காணும் உலகியல் இன்பங்களும் இறைவனின் அருள் வழிவரும் இன்பங்களாகவே தோன்றும். அம் மனநிலையால் அவர் அனுபவிக்கும் உலகியல் இன்பங்கள் நம்போன்று வினை வழிப்படுவனவும் ஆகா. 

ஆக, யோகம் என்னும் சொல்லுக்கு ஒன்றி இருத்தல், பொருந்தி இருத்தல், சேர்க்கை, புணர்ச்சி என்று பொருள்கள் உண்டு. தியானத்திற்கு "யோகிப்பு" என்ற ஒரு பொருளும் உண்டு. எதனோடு ஒன்றி இருக்கின்றோமோ, அதற்கு யோகம் என்று பொருள். அதனால் பெறப்படும் அனுபவம் யோக அனுபவம் ஆகும். தத்துவமசி யோகம் என்று ஒன்று உண்டு. இதற்குப் பொருள் "அது நீயாக இருக்கிறாய்" என்பதாகும். வடமொழியில் `தத்+த்வம்+அசி` என்னும் மூன்று பதங்களின் சேர்க்கையே `தத்துவமஸி` என்று ஆகின்றது. தத் - அது. த்வம் - நீ,  அசி - ஆகின்றாய். தத்துவமசி - அது நீ ஆகின்றாய். இங்ஙனமாயினும் 'ஆகின்றாய்' என்பதனால், 'நீ அது ஆகின்றாய்' என்பதே கருத்து.  பக்குவம் வாய்த்தவர்க்கு யோக அனுபவம் கைகூடும். 

புளிக்கும் மாங்காய் மரத்திலே இருக்கிறது. பச்சைப் பசேல் என்று இருக்கும் அந்த மாங்காயைப் பறித்தால் கண்ணிர் விடுவது போலப் பால் வடிகிறது. அது பழுத்துவிட்டால், அதன் பச்சை நிறம் பொன் நிறமாகிறது. கடினமாய் இருந்தது போய் நெகிழ்ச்சி பெறுகிறது. அதன் புளிப்பு மாறி இனிப்பாகிறது. நன்றாகப் பழுத்துவிட்டால் யாரும் பறிக்காமல் தானாகவே மரத்திலிருந்து நழுவிவிடுகிறது. அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது. நாமும் இறைவன் திருவடியை நினைந்து அவனைத் தியானம் பண்ணப் பண்ண, அந்தத் தியானம் உள்ளத்தில் ஏறஏற,  யோகமுதிர்ச்சி உண்டாக உண்டாக உள்ளத்தில் ஆனந்தம் அரும்பும். இது இவ்வுலக வாழ்வில் உண்மையில் நடக்கக் கூடியதே.



சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை

சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை

-----

சின்னக் குழந்தைக்கு ஒழுக்க நெறியைப் போதிக்க வந்த ஒளவைப் பிராட்டியார், சிறியவர் யார், பெரியவர் யார் என்பதை ஒரு பாடலின் மூலம் சொல்லி நல்வழிப்படுத்துகிறார். நல்வழிப்படுவதற்குப் பாடியதால், அந்த நூலின் பெயர் "நல்வழி" ஆயிற்று. மக்களை ஆண்சாதி பெண்சாதி என்றோ, நால்வகை சாதி என்றோ அவர் வகுக்கவில்லை. மேல் சாதி, கீழ்சாதி என்று இருவகையாகப் வகுத்துக் காட்டுகிறார்.

"சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை; சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்

இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்,

பட்டாங்கில் உள்ள படி"

என்பது ஔவையார் பாடியருளிய அருமையான பாடல்.

இதன் பதவுரை ---

சாற்றுங்கால் - சொல்லுமிடத்து, மேதினியில் - பூமியில், சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை - இரண்டு சாதியின்றி வேறில்லை, (அவ்விரண்டு சாதியாரும் யாவர் எனின்) நீதி வழுவா நெறி - நீதி தவறாத நல்வழியில் நின்று, முறையின் - முறையோடு; இட்டார் - (வறியர் முதலானவர்க்கு) ஈந்தவரே, பெரியோர் - உயர்வாகிய சாதியார்; இடாதார் - ஈயாதவரே, இழிகுலத்தார் - இழிவாகிய சாதியார்; பட்டாங்கில் உள்ளபடி - உண்மை நூலில் உள்ள இயற்கை இதுவே ஆம். (பட்டாங்கு = உண்மை, உள்ள நிலைமை, சாத்திரம்)

இந்த உலகத்தில் தம்மிடம் உள்ள பொருளை யார் பிறருக்குக் கொடுக்கிறார்களோ அவர்களே பெரியவர்கள். கொடுக்காமல் இருக்கிறவர்கள் சிறியவர்கள் என்று நமது பெரியபாட்டி சொல்கிறாள்.

ஔவையார் காட்டிய இரண்டு சாதிகளில் ஒன்று உயர்ந்ததாகிய நீதிச் சாதி. மற்றொன்று தாழ்ந்ததாகிய அநீதிச் சாதி. உயர்ந்த சாதிக்கு அறிவு இருக்கிறது. தாழ்ந்த சாதிக்கு ஆசை இருக்கிறது. அறிவு, நீதியைச் சார்ந்து தெய்வத் தன்மையோடு விளங்குவது. ஆசை, அநீதியைச் சார்ந்து விலங்குத் தன்மையோடு இருப்பது. அறிவு இருக்கின்ற இடத்தில் அன்பு விளங்கும். ஆசை இருக்கின்ற இடத்தில் வஞ்சகம் இருக்கும். நீதிக்கும் அநீதிக்கும் நடக்கின்ற போர் எப்போதும் ஓயாது இருக்கும். அறிவு விஞ்சுகின்ற போது தெய்வத் தன்மை விளங்கும். ஆசை விஞ்சுகின்ற போது விலங்குத் தன்மை இருக்கும்.

நாம் தெருவிலே நடந்து போய்கொண்டு இருக்கின்ற போது ஒரு பையைக் காண்போம். பையிலே உள்ளதை அறிந்து கொள்ள ஆசை மேலிடும். அதிலே நிச்சயம் பணம் அல்லது பணமதிப்பு உள்ள பொருள் காணப்படும். இப்போது ஆசைக்கும் அறிவுக்கும் இடையே போர் மூளும். இது யாரோ உழைத்துச் சேர்த்த பொருள். இதை இழந்தவர் வருத்தப்படுவார். இதற்கு உரியவர் யார் என்று அறிந்து அவரிடம் சேர்த்து விடவேண்டும் என்று அறிவு சொல்லும். பையைத் துழாவிப் பார்த்தால் ஒரு முகவரி இருக்கும். மனம் நிம்மதி அடையும். ஆனால், ஆசை விடாது தனது போர்க்குணத்தைக் காட்டும். அந்தப் பை கிடைத்தது தமது அதிருஷ்டம் என்று வியக்கும். இந்தப் போராட்டத்தில் வெற்றி கொள்வது அறிவாக இருந்தால் நீதி தழைக்கும். ஆசையாக இருந்தால் அநீதி தாண்டவம் ஆடும்.

"புண்ணியம் ஆம், பாவம் போம்" என்பது ஔவையார் அருள்வாக்கு. புண்ணியம் செய்யத் தக்கது. பாவம் விலக்கத் தக்கது. நீதியை மறைக்கும் குற்றங்கள் இரண்டு. ஒன்று அறியாமை, மற்றொன்று வஞ்சகம். அறியாமை பாவம் அல்ல. இருந்தாலும், அறியாமல் இருப்பது குற்றம் என்பதால், அறியாமை என்பது நீக்கிக் கொள்ளக் கூடிய குற்றம் ஆகிறது. ஆனால், வஞ்சகம் பெரும் குற்றம் ஆகும். அது நரகத்துக்கு வித்தாக அமைகிறது. அது உயிரின் அறிவை அழித்து, அறியாமை என்னும் இருளிலேயே மக்களை வைத்து இருப்பது.

வழியில் கண்டு எடுத்த பொருள் நமது இல்லை என்பது நன்றாகவே தெரியும். பொருளுக்கு உரியவர் இன்னார் என்று தெரிகிறது. அவர் குறித்து அறிந்து கொள்ள வழியும் உள்ளது. பொருளை உரியவரிடம் ஒப்படைப்பதே நீதி என்று அறிவு சொல்லுகின்றது. வஞ்சகம் அந்த அறிவு மழுங்கச் செய்கிறது. இந்தக் கள்ளத்தனம்தான் நமக்குப் பரமவிரோதி. அதனோடு நாம் சதாகலமும் போர் தொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். வஞ்சகம் ஒரு கணத்தில் மனதைத் தன் வசப்படுத்திவிடும். நாம் அதனைச் சிறை செய்து அறிவினிடம் ஒப்புவிக்க வேண்டும். நீதி பற்றிய விசாரம் வேண்டும்.  அது, அறியாமை மற்றும் வஞ்சகத்தைச் சிறிது சிறிதாக அகற்றும் ஒளி ஆகும். அறிவு உதயம் ஆக ஆக, அறியாமை இருள் கொஞ்ச கொஞ்சமாக அகலும்.

நீதியின் வடிவாக உள்ளவன் இறைவன். நீதியின் வழி நடப்பவன் அகச் சமயவாதி. அதற்குப் புறம்பானவன் சமயத்துக்கும் புறம்பானவனே. நீதி மிக ஆழமானது. மிக நீளமானது. அந்த நீதியை நான் எனது என்னும் அகப்பற்றும் புறப்பற்றும் உள்ளர்களால் காணமுடியாது. "பங்கயத்து அயனும் மால் அறியா நீதியே" என்று மணிவாசகப் பெருமான் பாடிருளியதை உணரவேண்டும். நீதியோடு சம்பந்தப்பட்டவன் இறைவனோடு சம்பந்தப்பட்டவன் ஆகிறான்.

நீதி மிக ஆழமானது என்று சொன்னோம். நீதியின் ஆழத்தை இப்போது காண்போம்.

தமிழ்நாட்டில் ஈகையின் பெருமையைப் பல புலவர்கள் மிகச் சிறப்பாகச் சொல்லி இருக்கிறார்கள். திருவள்ளுவர் ஈகையை மிகச் சிறப்பித்துப் பேசுகின்றார். ஈபவனுக்கு வாங்குகிறவன் இருந்தால்தான் பெருமை. ஈதலினால் ஒருவனுக்கு இன்பம் வரவேண்டுமானால் அவனிடத்தில் ஏற்றுக் கொள்வான் ஒருவன் இருக்க வேண்டும். ஆகையால், ஒரு வகையில் பார்த்தால் ஈதலும் ஏற்றலும் ஒன்றாகவே நிகழ்வன என்று தெரியும். புறநானூற்றில் ஈதலையும் இரத்தலையும் பற்றி ஒரு புலவர் பேசுகிறார். இழிந்ததிலும் இழிந்தது இன்னது, உயர்ந்ததிலும் உயர்ந்தது இன்னது என்று காட்டுகிறார். நமக்கு இறைவன் உடம்பையும், அறிவையும், பிற வசதியையும் கொடுத்திருப்பதால் அவற்றைப் பயன்படுத்தி முயற்சி செய்து நல்ல வகையில் வாழவேண்டும். அப்படியின்றி முயற்சி செய்யாமல் சோம்பேறியாகத் திரிந்து, பொருள் ஈட்டாமல் பிறரிடத்தில் சென்று பல்லைக் காட்டிக் கொண்டு 'ஈ' என்று சொல்லுதல் மிகவும் இழிந்த செயல்.  அப்படி ஒருவன் மானத்தை விட்டுப் பிறர் இழிவு படுத்துவதற்குரிய நிலையில் பல்லைக் காட்டி இரக்கும்போது செல்வம் உள்ளவன் ஈதலே முறை. அப்படியின்றி இல்லை என்று சொல்கிறானே அவன் மிகவும் இழிந்தவன். அவனுடைய குணம் இழிந்த குணம். "ஈ என இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று" என்று இப்படி இழிவையும், அதனினும் இழிவையும் சொன்ன புலவர், உயர்வையும் அதனினும் உயர்வையும் சொல்ல வருகிறார். பிறருடைய குறைபாட்டைக் குறிப்பினால் தெரிந்து கொண்டு தமக்கு இறைவன் அருளிய செல்வம் பிறருடைய வறுமையை நீக்குவதற்கு என்று அறிந்து, தாமே வலிந்து சென்று,  'இந்தா, இதைப் பெற்றுக்கொள்' என்று கொடுப்பது மிக உயர்ந்த இயல்பு. இனி இந்த உயர்ந்த இயல்புக்கு மேல் மற்றோர் இயல்பைப் பற்றிக் கூறுகின்றார். கொள்வாயாக என ஒருவன் கொடுக்கும் போது, நான் இதனைப் பெற்றுக் கொள்ள மாட்டேன் என்று மறுக்கிறானே, அவன் கொடுக்கும் உயர்ந்த குணம் படைத்தவனை விடச் சிறந்தவன். "கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று"  என்கிறார் புறநானூற்றுப் புலவர். கொள் என்று கொடுப்பவனுக்கு முன்னாலே நின்று, கொள்ளமாட்டேன் என்று சொல்வதற்கு மனத் திண்மை வேண்டும். நம்பிக்கை வேண்டும். இறைவன் திருவருள் நமக்கும் ஒரு வழி காட்டும் என்ற உறுதி வேண்டும். ‘'வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டு இல்லை, யாண்டும் அஃது ஒப்பது இல்" என்று திருவள்ளுவ நாயனார் சொல்கிறார். வேண்டாமை என்பது ஒன்றுதான் மேலான செல்வம். 


"வேண்டாமை ஒன்றை அடைந்து, உளம்

     மீண்டு ஆறி, நின் சரணங்களில்

     வீழந்து, ஆவல் கொண்டு உருகு அன்பினை...உடையேனாய்,

வேந்தா! கடம்பு புனைந்து அருள்

     சேந்தா! சரண் சரண் என்பது,

     வீண்போம் அது ஒன்று அல என்பதை .....உணராதோ?"

என்பது அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்.

இதன் பொருள் ---

ஒரு பொருளையும் விரும்பாத தன்மையை அடைந்து, உள்ளமானது இங்கு ஆறுதலாக இருந்து, தேவரீருடைய திருவடிகளில் விழுந்து வணங்கி, ஆவல் கொண்டு உள்ளம் உருகுகின்ற அன்பை உடையவனாகி, அரசரே, கடப்ப மாலை அணிந்து அருள் புரிகின்ற செம்மைப் பண்பு உடையவரே, உமது திருவடியே சரணம் சரணம் என்று அடியேன் கூறுவது வீண்போகாது என்பதைத் தேவரீர் திருவுள்ளம் அறியாததோ?


வேண்டும் என்பது உள்ளவரை பிறவிப் பிணி அகலாது. வேண்டும் என்பது ஒன்று உண்டாயின், அது பிறவாமையே ஆகும். அப் பிறவாமை வேண்டாமை எய்தினால் எய்தும்.


"வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை, மற்றுஅது

வேண்டாமை வேண்ட வரும்." ---  திருக்குறள்.


"வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்றமையால்,

வேண்டின் அஃதொன்றுமே வேண்டுவது, வேண்டினது

வேண்டாமை வேண்டவரும் என்றமையால், வேண்டிடுக

வேண்டாமை வேண்டும் அவன் பால்."   ---  திருக்களிற்றுப்படியார்.


வேண்டும் என்ற தன்மை உள்ளவரை துன்பம்தான். ஆதலின், வேண்டும் என்ற எல்லாவற்றையும் ஒருங்கே விடவேண்டும்.


"அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை, விடல்வேண்டும்

வேண்டிய எல்லாம் ஒருங்கு."

என்ற திருவள்ளுவ நாயனார் அருளிய வானமுத வாக்கை நன்கு உணர்ந்து,  அதனைச் செயலில் கொண்டுவர வேண்டும். கொடுப்பதை வேண்டாம் என்று சொல்கிறவன் ஒரு வகையில் செல்வனாக விளங்குகிறான். பணம் இருந்தாலும், மேலும் ஒருவன் கொடுத்தால் பணத்தின்மேல் பணத்தைச்  சேர்த்துக் கொள்வதற்காக வாங்குகிறவர்கள் உலகத்தில் உண்டு. அப்படி இருக்க, நம்முடைய வறுமை தெரிந்து ஒருவன் கொடுக்கிறான் என்றால், அதனை மறுப்பது சாமானிய மனம் படைத்தவனால் இயலாது. அதற்கு ஒரு சிறந்த மனத் துணிவு ஆகையால் கொள் என்பதற்கு எதிரே கொள்ளேன் என்று சொல்வது மிகச் சிறந்த பண்பு என்று புலவர் சொன்னார்.  எனவே, கொடுப்பவர் உயர்ந்த சாதி. இறுக்கம் பிடிப்பவர் தாழ்ந்த சாதி.

இசைக்குப் பெயர்பெற்ற பாணர் குலம் காலப்போக்கில் தீண்டாக் குலம் ஆனது. அக்குலத்தில் பாண்பெருமாள் என்னும் திருநாமத்தோடு, ஆழ்வார்கள் வரிசைக் கிரமத்தில் பதினோராம் ஆழ்வாராக அவதரித்தவர் சிறந்த திருமால் அடியார். எனினும், தன் குலத்தின் பொருட்டு திருவரங்கத்தின் உள்ளே நுழைவதற்கும், அந்த மண்ணை மிதிப்பதற்கும் அஞ்சி காவிரியின் மறுகரையில் இருந்தவாறே, பண் இசைத்துத் திருவரங்கனைப் பாடி வந்தார். காவிரியிலிருந்து தண்ணீரைக் குடத்தில் எடுத்துச் சென்று அரங்கனுக்கு திருமஞ்சனம் செய்யும் பொருட்டு விரைந்து வந்த லோகசாரங்கர் என்னும் கோயில் பட்டர், வழியில் தன்னிலை மறந்து நின்றுகொண்டிருந்த பாணரைப் பலமுறை அழைத்தும் அவர் செவிமடுக்காததால், பாணர் விலகும் பொருட்டு ஒரு கல் கொண்டு எறிந்தார். லோகசாரங்கர் எறிந்த கல் பாணரின் தலையில்பட்டு குருதி பெருக, அதைக் கவனியாது லோகசாரங்கர் தண்ணீரோடு அரங்கன் முன் சென்றார். பாணரின் சிறந்த பத்தி உணர்வையும், அவரது உயர்வையும் உணர்த்த விரும்பிய திருவரங்கன், இரத்தம் வடிந்த முகத்தினராய் லோகசாரங்கருக்கு காட்சி கொடுத்ததோடு, பாணரான திருப்பாணாழ்வாரைத் தனது தோளில் சுமந்து திருவரங்கத்துள் கொணர்ந்து தனது சந்நிதியில் நிறுத்தும்படியும் லோகசாரங்கருக்கு ஆணையிட, அவ்வாறே செய்தார். அதன் பொருட்டு திருப்பாணாழ்வாருக்கு "முனிவாகனன்" என்றும் "யோகிவாகனன்" என்றும் பெயர் ஏற்பட்டது.

"என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே" என்று பாடியபடி தன் பருவுடலோடு ஆண்டாள் போல அரங்கனோடு இரண்டறக் கலந்தார். இதனால், திருமால் குலம் கோத்திரம் பார்ப்பதில்லை. அன்பு செய்யும் அடியவரையே விரும்புகின்றான் என்பது தெளிவாகும்.

தில்லையின் சிறப்பை அறிந்தும் உணர்ந்தும் இருந்த திருநாளைப் போவார் நாயனார் என்னும் நந்தனார், தமது குலத்தின் இழிவைக் கருதி, தில்லைத் திருத்தலத்தை மிதிப்பதற்கு ஆஞ்சி, தில்லையின் எல்லையை இரவு பகல் பலகாலும் வலம் செய்து வந்தார். ஒருநாள், "தில்லையின் உள் நுழைவிற்கு இப்பிறவி தடையாக நிற்கிறதே, எந்த வழியில் திருக்கூத்தைக் கண்டு தொழுவது" என்று நினைந்து, நினைந்து, மனம் நொந்து நொந்து உறங்கிவிட்டார். அன்பர் உள்ளம் கோயில் கொண்ட தில்லையம்பலவாணப் பெருமான், நந்தனார் கனவில் தோன்றிப் புன்முறுவல் செய்து,  "இப் பிறவி ஒழிய,  நீ நெருப்பில் மூழ்கி வேதியர்களுடன் நம் முன் அணைவாய்" என்று திருவாய் மலர்ந்தருளினார். மேலும் தொடர்ந்து, தில்லைவாழ் அந்தணர்கள் கனவில் தோன்றித் திருநாளைப் போவார் நிலையை அவர்களுக்கு உணர்த்தி, எரி அமைக்குமாறு பணித்து அருளினான். அந்தணர் பெருமக்கள் விழித்து எழுந்து, அச்சத்துடன் ஆலயத்திலே ஒருங்கு சேர்ந்து, ஆண்டவன் கட்டளையை நிறைவேற்ற உறுதிகொண்டு, திருநாளைப் போவாரிடம் சேர்ந்தார்கள். சென்று, "ஐயரே! ஆண்டவன் ஆணைப்படி இங்கே வந்தோம், உம்பொருட்டு எரி அமைக்கப் போகிறோம்" என்றார்கள். திருநாளைப் போவார் "உய்ந்தேன், உய்ந்தேன்" என்று ஆண்டவன் திருவருளைப் போற்றினார். 

ஆகவே சாதியை வைத்து மனிதன் உயர்நிலையை அடைவது இல்லை. எனவே சாதி வேற்றுமை பார்ப்பது கூடாது. நல்ல குலம், தீய குலம் என்பதன் பொருளை நாலடியார் உணர்த்துமாறு காணலாம்.

"நல்ல குலம் என்றும் தீய குலம் என்றும்

சொல்அளவு அல்லால் பொருள்இல்லை; - தொல்சிறப்பின்

ஒண்பொருள் ஒன்றோ? தவம் கல்வி, ஆள்வினை

என்று இவற்றான் ஆகும் குலம்".                    --- நாலடியார்.

இதன் பொருள் ---

     நல்ல குலம் என்றும் தீய குலம் என்றும் உலகத்தில் பிறப்பின் மேலேற்றிச் சொல்வது வெறும் சொல்லளவே அல்லால், அதற்குப் பொருள் இல்லை. குலம் என்பது, தொன்று தொட்டுவரும் மேன்மையினை உடைய செல்வத்தால் மட்டுமல்ல, தவம், கல்வி, முயற்சி என இவை தம்மால் எல்லாம் உண்டாவதாகும்.

உயர்ந்த குலத்தில் பிறந்து, அந்தக் குல ஒழுக்கம் தவறி, கன்ம சண்டாளனாக ஒருவன் ஆவது இழுக்கு. குலத்திற்கு ஏற்ற ஒழுக்க நிலையில் இருந்து உயர்கதியை அடைதல் வேண்டும். ஒழுக்கம் கெடுமானால், இழிந்த பிறப்பு ஆகிவிடும். மறந்துபோனால் கூட, வேதத்தை, திரும்பவும் தக்கவரை அடுத்து ஓதிக் கொள்ளலாம். ஆனால், உயர் குலப் பிறப்பானது ஒழுக்கம் குன்றினால் கெட்டுப் போகும் என்பதைக் காட்ட, "மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்" என்றார் திருவள்ளுவ நாயானர். சன்ம சண்டாளனாகப் பிறந்த ஒருவர், தமது ஒழுக்க நெறியால் உயர் நிலையை அடையலாம் என்பதே திருப்பாணாழ்வார் மற்றும் திருநாளைப் போவார் நாயானார் வரலாறு உணர்த்துவது.

பெரிய கடலின் நீரானது தன்னை அடுத்து உள்ள சிறிய உப்பங்கழியிலும் சென்று பாயும். அது போல, உயர்ந்தவர்கள் தம்முடைய தம்மையும் தம்முடைய தலைமைத் தன்மையையும் எண்ணிப் பார்த்து தம்மைத் தாமே வியக்காமல், தாழ்ந்தவர்கள் இருக்கும் இடமும் சென்று அவர் துன்பத்தைப் போக்குவார்கள் என்கிறார் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் 

"தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்துஉயர்ந்தோர்

தம்மை மதியார், தமையடைந்தோர் - தம்மின்

இழியினும் செல்வர், இடர்தீர்ப்பர், அல்கு

கழியினும் செல்லாதோ கடல்." --- நன்னெறி.

தலைமை - பெருமை. இழியினும் - கீழானவர்களாக இருந்தாலும். அல்கு கழி - சிறிய உப்பங் கழிநிலம்.

மேலும், அறிவு உடையோரே உயர்குலத்தவர் என்றும் அறிவு இல்லாதவர்  இழிகுலத்தவர் என்றும் பின்வரும் பாடலால் வகுத்துக் கூறுகின்றார்.


"ஆக்கும் அறிவான் அல்லது பிறப்பினால்

மீக்கொள் உயர்விழிவு வேண்டற்க - நீக்க

பவர்ஆர் அரவின் பருமணிகண்டு என்றும்

கவரார் கடலின் கடு." --- நன்னெறி.


நஞ்சை உடைய பாம்பினிடத்தே தோன்றிய பெரிய மாணிக்கத்தை இகழ்பவர் இல்லை. திருப்பாற்கடலினிடத்தே தோன்றிய நஞ்சை விரும்புபவரும் இல்லை. அதுபோல அறிவினால் அல்லாமல் பிறப்பினால் உயர்வு தாழ்வு கொள்ளக் கூடாது.

ஆக்கும் - கல்வியால் உண்டாக்கும். மீக்கொண்ட - மேன்மையாகக் கொள்ளுகிற. அரவின் பருமணி - பாம்பின் சிறந்த மணி. கடு - நஞ்சு.

எனவே, நீதி வழுவா நெறிமுறையில் நின்று வறுமையில் வாழ்வோர்க்கு அவர் இருக்கும் இடம் தேடிச் சென்றும், தம்மிடம் தேடி வந்தபோதும் இல்லை என்னாமல் உதவி புரிபவரே உயர்ந்த சாதியினர். "இம்மி அரிசித் துணையானும் வைகலும் நும்மில் இயைவ கொடுத்து உண்மின்" என்கிறது நாலடியார். "வறிஞர்க்கு என்றும் நொய்யில் பிளவு அளவேனும் பகிர்மின்கள்" என்கிறார் அருணகிரிநாதர். பெரிதாகத் தருமம் செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள், இயன்ற வரையில் நொய்யரிசியில் பாதி அளவாவது ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்து, தாம் உண்ணுதல் வேண்டும். நற்சிந்தையும், நற்சொல்லும், நற்செயலும் என்று மூன்று வகைப்பட்ட அறத்தை முறையே மனத்தாலும், வாக்காலும், காயத்தாலும் ஒழியாது செய்து வருதல் வேண்டும். அவரே உயர்ந்த சாதியினர்.

செல்வமானது நீர்மேல் குமிழிபோல் நிலையற்றது. ஆதலால், அதனை உள்ளபோதே அறவழியில் செலவழித்தல் வேண்டும். செல்வம் வந்தபோது அதன் நிலைமையை உணர்தல் வேண்டும்.  நம்மைக் காட்டிலும் அறிவும் ஆற்றலும் உடையவர்கள் எல்லாம் ஏழையாய் இருக்கிறார்களே?  நமக்கு மட்டும் செல்வம் உண்டாவதற்குக் காரணம் என்ன?  "கொடுத்து வைத்த புண்ணியவான்" என்கிறார்களே? எப்போது கொடுத்து வைத்தோம்? முந்தின பிறவியில் ஏழைகளுக்குக் கொடுத்து வைத்தோம். அதன் புண்ணியத்தால் இப்போது பெருஞ்செல்வராய் இருக்கிறோம். இப்போதும் கொடுத்து வைத்தால் தானே, இனிவரும் பிறிவியிலும் சுகமே வாழ்வோம். நாம் எந்தப் பொருளை ஏழைக்குத் தருகிறோமோ அதுதான் நம்முடைய பொருள். எவ்வளவு பொருளை அறவழியில் செலவழிக்கிறோமோ, அவ்வளவும் மறுமைக்கு வந்து துணை செய்யும். இதனை ஒவ்வொருவரும் தனியே இருந்து சிறிது நேரம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

பிறக்கும் பொழுது கொண்டு வந்ததில்லை. இறக்கும் பொழுது கொண்டு போவதுமில்லை. எனவே இடையில் வந்த பொருள் இறைவனால் கொடுக்கப்பட்டது. அதனை இறைபணியிலும், அடியார் பணியிலும் செலவழித்தல் வேண்டும்.  அங்ஙனம் செலவழிக்காது காவல் புரிந்து கொண்டிருந்தால், செல்வம் விரைவில் அழியும். தேனீயானது மிகவும் துன்புற்று அலைந்து சிறிது சிறிதாகத் தேனைச் சேர்த்து வைத்துத் தானும் உண்ணாமல் பிறருக்கும் வழங்காமல் காத்துக் கொண்டிருக்கிறது. பின்னர் என்ன ஆகிறது? பிறரால் அத்தேன் கவரப்பட்டு, தேனீ வீணே வருந்தி அழிகிறது. அதுபோல் அறம் செய்யாதான் செல்வம் அழியும். 

"உடா அதும், உண்ணாதும், தம்உடம்பு செற்றும்,

கெடாஅத நல்லறமும் செய்யார்-கெடா அது

வைத்து ஈட்டினார் இழப்பர், வான்தோய் மலைநாட!

உய்த்து ஈட்டும் தேனீக் கரி."           --- நாலடியார்.

பெருந் தருமங்களைப் புரிவதற்குப் போதிய செல்வம் இல்லாதோரும் தமது தகுதிக்குத் தக்கவாறு சிறிதாவது அறம் புரிதல் வேண்டும். இதனை வலியுறுத்துவதற்காகவே “இயல்வது கரவேல்” என்ற அமுதமொழி எழுந்தது. ஒவ்வொரு நாளும் நமது வருவாயில் சிறிதாவது அறத்தில் செலவழிந்ததா என்று இரவில் படுக்கும்போது சிந்தித்தல் வேண்டும்.


"ஒல்லும் வகையான் அறவினைஓவாதே

செல்லும் வாய் எல்லாம் செயல்."       --- திருக்குறள்.


சிறுமிக் குமர நிகர்வீர் பகிரச் சிதையுயிர்த்துச்

சிறுமிக் குமர சரணமென் னீருய்விர் செந்தினைமேற்

சிறுமிக் குமர புரைத்துநின் றோன்சிலை வேட்டுவனெச்

சிறுமிக் குமர வணிமுடி யான்மகன் சீறடிக்கே.  --- கந்தர் அந்தாதி.

இதன் பதவுரை -----

சிறு - சிறிதான, உமிக்கும் - குற்று உமியை ஆயினும், பகிர மர நிகர்வீர் - பிறர்க்கு இட்டு உண்ண மனம் கூடாமல் மரம் போன்று இருப்பவரே, சிதை - அழிந்து போவதும், உயிர் - பிராணனுக்கு, துச்சில் - ஒதுக்கிடமும் ஆகிய இவ் உடலின்கண், துமி - ஒரு தும்மல் உண்டாகும் அக் காலையினும், குமர - குமரனே, சரணம் - உனக்கு அடைக்கலம், என்னீ்ர் - என்று சொல்லுங்கள், உய்விர் - பிழைப்பீர்கள், செம் - சிவந்த, தினைமேல் - தினைப் புனத்தில் வாசம் செய்த, சிறுமிக்கு - வள்ளிநாயகிக்கு, மரபு - தமது மரபின் வழிகளை, உரைத்து - எடுத்து உரைத்து, நின்றோன் - குறையிரந்து நின்றவனும், சிலை - வில்லை உடைய, வேட்டுவன் - வேடத் திருமேனியை உடைய கண்ணப்ப நாயனார், எச்சில் - ஊன் முதலியவற்றை முன் ருசி பார்த்து நிவேதித்த எச்சிலை, து - உவப்புடனே உண்டவராகிய, மிக்கும் - மேன்மையாக, அரவு - பாம்பு ஆபரணத்தை, அணி - தரித்த, முடியான் - முடியை உடைய பரமசிவனது, மகன் - மைந்தனுமாகிய குமாரக் கடவுளினது, சீறடிக்கு - சிறிய திருவடியைக் கருதிக் கொண்டே.

அறிஞர் அறமொழியைக் கேட்பதனாலும், அறிவு நூல்களைப் படிப்பதாலும் அறஞ்செய்ய வேண்டுமென்ற எண்ணம் உண்டாகும். அங்ஙனம் உண்டாயின் உடனே அறத்தைச் செய்யவேண்டும். இன்று புரிவோம் நாளை புரிவோம் என்றிருத்தல் கூடாது, ஏனெனில் மறுகணம் இருப்போம் என்பது நிச்சயம் இல்லை. நாம் இளையோம் முதுமையில் அறம் புரிவோம் என்னில், இளமையில் அழிதலும் கண்கூடு. காற்று அடித்தால் முற்றிய கனி உதிர்வதோடு, முதிராத பிஞ்சுகளும் உதிர்ந்து வீழ்வதைக் காண்கிறோம். ஆதலால், யாக்கை நிலையாமையை யஉணர்ந்து, அறம்புரிய வேண்டும் என்ற எண்ணம் உண்டானபோதே, விரைந்து தருமம் செய் என்றனர்.

"அன்று அறிவாம் என்னாது அறஞ்செய்க, மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை."         --- திருக்குறள்.


"மற்றுஅறிவாம் நல்வினை, யாம்இளையம் என்னாது

கைத்துஉண்டாம் போதே கரவாது அறஞ்செய்மின்,

முற்றி இருந்த கனிஒழியத் தீ வளியால்

நற்காய் உதிர்தலும் உண்டு."                    --- நாலடியார்.


ஆன்றோர் அறமொழிகள்,  அறிவு நூல்கள் இவைகளைக் கொண்டு யாக்கை, இளமை, செல்வ நிலையாமைகளை உணரவில்லை என்றாலும், தினந்தோறும் இறந்தவரைப் பறை ஒலி முழக்கிக் கொண்டு போவதைக் கண்டாவது நெஞ்சம் அஞ்ச வேண்டாமோ? இறந்தோரை அலங்கரித்து அழுகை ஒலியுடன் ஈமதேசத்திற்குக் கொண்டுபோகப் போகிறதைக் கண்டும் ஆசையில் அழுந்தலாமா?

நெடு நாளைக்கு நாம் இருப்போம் என்று எண்ணுவது மதியீனம்.  "ஐயோ! இறையருளால் பொருளைப் பெற்று இருந்தும், இதுவரையில் அறஞ்செய்யாது ஒழிந்தோமே?  நாமும் ஒரு நாள் இறப்போம்.  பாடுபட்டுத் தேடிய இவ்வளவு செல்வத்தையும் விட்டுப்போய் விடுவோம்.  நமக்கு இப்போது இருக்கிற பெயரை நீக்கி, பிணம் என்ற பெயரினை இட்டு, பறை ஒலியுடன் கொண்டுபோய்த் தீக்கு இரையாக்குவர்? அதற்குள் விரைந்து தருமம் செய்து இகபர சௌபாக்கியத்தைப் பெற வேண்டும்" என்று நினைத்து நினைத்து நெஞ்சம் அஞ்சிப் பகிர்ந்து அளிக்கவேண்டும். அந்த ஈகையின் பயனாக உண்டாகும் புகழினை இப்பிறவியிலேயே தேடிக் கொள்ள வேண்டும். 

"ஈதல், இசைபட வாழ்தல், அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு" என்றார் திருவள்ளுவ நாயனார். நாயனாரும், ஔவையாரும் இன்னபிற அருளாளர்களும் காட்டிய வழியில் வாழ்பவர் உயர்ந்த சாதியினர். அல்லாதவர்கள் தாழ்ந்த சாதியினர் என்று காட்டி, அந்த வழியில் வாழ்ந்து காட்டியது முந்தைய தமிழ்ச் சமுதாயம். அதனைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை. "குலமும் கோத்திரமும் கொண்டு என் செய்வீர்?" என்று கேட்டவர் அப்பர் பெருமான். "சாதி குலம் பிறப்பு என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதம் இலி" என்று பாடியவர் மணிவாசகப் பெருமான். 

"சாதியிலே, மதங்களிலே, சமய நெறிகளிலே,

சாத்திரச் சந்தடிகளிலே, கோத்திரச் சண்டையிலே,

ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்!

அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகு அலவே"

என்று வள்ளல்பெருமானும் அறிவுறுத்தி உள்ளார். எல்லா வேறுபாடுகளும் நீங்கி 'ஒருமையின் உலகெலாம் ஒங்குக' என உலக ஒருமைக்கு அவர் வித்திட்டு உள்ளார். நாயன்மார்கள், ஆழ்வார்கள், உட்பட இன்னும் பல அருளாளர்களும் அறிஞர்களும் உலக ஒற்றுமைக்கு அடிகோலி வந்துள்ளனர். சாதி மத வேற்றுமைகளைப் போலவே, இன வேற்றுமையும் ஒழிக்கப்படல் வேண்டும். இவ்வளவும் இருக்க, தமிழ்ச் சமுதாயத்திற்கு, அதற்குப் புறம்பானவர்கள் போதிப்பது அவசியம் அற்றது. "சாதிகள் இல்லையடி பாப்பா" பாரதியார் சொன்ன பிறகும் ஏன் இந்தப் பதைபதைப்பு? அங்கலாய்ப்பு! சமணத்தில் சாதி இல்லை. பௌத்தத்தில் சாதி இல்லை. இன்னும் சில சமயங்களில் சாதிப் பாகுபாடு இல்லை. சாதிக்குப் புறம்பானவர்களிடம் நால்வருணம் பற்றிப் பேசவேண்டிய அவசியம் இல்லை. 


057. வெருவந்த செய்யாமை - இறைகடியன் என்று

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 57 -- வெருவந்த செய்யாமை இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "தன் நாட்டு அரசன...