திருத்தணிகை - 0286. திருட்டு நாரிகள்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

திருட்டு நாரிகள் (திருத்தணிகை)

திருத்தணிகை வேலா!
மாதர் ஆசையில் உழலாமல் காத்து அருள்

தனத்த தானன தத்தன தத்தன
     தனத்த தானன தத்தன தத்தன
          தனத்த தானன தத்தன தத்தன ...... தனதான


திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள்
     வறட்டு மோடியி னித்தந டிப்பவர்
          சிறக்க மேனியு லுக்கிம டக்குகண் ...... வலையாலே

திகைத்து ளாவிக ரைத்தும னத்தினில்
     இதத்தை யோடவி டுத்தும யக்கிடு
          சிமிட்டு காமவி தத்திலு முட்பட ...... அலைவேனோ

தரித்து நீறுபி தற்றிடு பித்தனு
     மிதத்து மாகுடி லைப்பொருள் சொற்றிடு
          சமர்த்த பாலஎ னப்புகழ் பெற்றிடு ...... முருகோனே

சமப்ர வீணம தித்திடு புத்தியில்
     இரக்க மாய்வரு தற்பர சிற்பர
          சகத்ர யோகவி தக்ஷண தெக்ஷிண ...... குருநாதா

வெருட்டு சூரனை வெட்டிர ணப்பெலி
     களத்தி லேகழு துக்கிரை யிட்டிடர்
          விடுத்த கூளிகள் தித்திகு தித்தென ...... விளையாட

விதித்த வீரச மர்க்கள ரத்தமு
     மிரற்றி யோடவெ குப்ரள யத்தினில்
          விலக்கி வேல்செரு கிட்டுயிர் மொக்கிய ....மறவோனே

பெருக்க மோடுச ரித்திடு மச்சமு
     முளத்தின் மாமகிழ் பெற்றிட வுற்றிடு
          பிளப்பு வாயிடை முப்பொழு தத்துமொர் ...... கழுநீரின்

பிணித்த போதுவெ டித்துர சத்துளி
     கொடுக்கு மோடைமி குத்ததி ருத்தணி
          பிறக்க மேவுற அத்தல முற்றுறை ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


திருட்டு நாரிகள், பப்பர மட்டைகள்,
     வறட்டு மோடியில் நித்தம் நடிப்பவர்,
          சிறக்க மேனி உலுக்கி, மடக்கு கண் ...... வலையாலே.

திகைத்து உள்ஆவி கரைத்து, மனத்தினில்
     இதத்தை ஓட விடுத்து, மயக்கிடு
          சிமிட்டு காம விதத்திலும் உட்பட ...... அலைவேனோ?

தரித்து நீறு, பிதற்றிடு பித்தனும்,
     இதத்து மா குடிலைப் பொருள் சொற்றிடு
          சமர்த்த! பால! எனப்புகழ் பெற்றிடு ...... முருகோனே!

சம ப்ரவீண! மதித்திடு புத்தியில்
     இரக்கமாய் வரு தற்பர! சிற்பர!
          சகத்ர யொக விதட்சண தெட்சிண ...... குருநாதா!

வெருட்டு சூரனை வெட்டி, ரணப் பெலி
     களத்திலே கழுதுக்கு இரை இட்டு, இடர்
          விடுத்த கூளிகள் தித்திகு தித்தென ...... விளையாட,

விதித்த வீர சமர்க்கள ரத்தமும்
     இரற்றி ஓட, வெகு ப்ரளயத்தினில்
          விலக்கி, வேல் செருகிட்டு உயிர் மொக்கிய ......மறவோனே!

பெருக்கமொடு சரித்திடு மச்சமும்,
     உளத்தின் மாமகிழ் பெற்றிட உற்றிடு,
          பிளப்பு வாய் இடை முப்பொழுதத்தும் ஒர் ......கழுநீரின்

பிணித்த போது வெடித்து, ரசத் துளி
     கொடுக்கும் ஓடை மிகுத்த திருத்தணி
          பிறக்கமே உற அத்தலம் உற்று உறை ...... பெருமாளே.


பதவுரை


        நீறு தரித்து பிதற்றிடு பித்தனும் --- திருநீற்றினைத் தரித்து வேதங்களை மொழிந்த பித்தனாகிய சிவபெருமான்,

     சமர்த்த --- ஆற்றல் உடையவரே!
  
     பால --- குழந்தையே!

     இதத்து --- இனிமையாக,

     மா குடிலை பொருள் சொற்றிடு --- பெருமை பொருந்திய பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசிப்பாயாக,

     என புகழ் பெற்றிடு --- என்று தேவரீரைக் கேட்கும்படியான புகழைப்பெற்றுள்ள,

     முருகோனே --- முருகக் கடவுளே!

         சம ப்ரவீண --- நிபுணரே!

         மதித்திடு புத்தியில் --- போற்றுகின்ற அடியார்களின் புத்தியில்,

     இரக்கமாய் வரு தற்பர --- கருணையுடன் எழுந்தருளும் பரம்பொருளே!

         சிற்பர --- அறிவுக்கு அப்பாற் பட்டவரே!

         சகத்ர யோக விதக்ஷிண --- ஆயிரக்கணக்கான பல யோகங்களுள் சிறப்புற்ற தான மௌன யோகநிலையைக் கொண்ட,

     தெக்ஷிண குருநாதா --- தெட்சிணா மூர்த்தியான குருநாதரே!

         வெருட்டு சூரனை வெட்டி --- தேவர்களை அச்சப் படுத்திய சூரபன்மனைக் கொன்று,

     ரண பெலி களத்திலே --- போரில் கொலையுண்ட இடங்களில்,

     கழுதுக்கு இரை இட்டு --- பேய்களுக்குப் பிணங்களை இரையாகக் கொடுத்து,

     இடர் விடுத்த கூளிகள் --- அதனால் பசித்துன்பம் நீங்கிய பேய்கள்,

     தித்திகு தித்தென விளையாட விதித்த வீர --- தித்திகு தித்தென்று தாள வரிசையுடன் விளையாடும்படிச் செய்த வீரமூர்த்தியே!

      சமர்க் கள ரத்தமும் --- போர்க்களத்தில் உதிரமானது,

     வெகு ப்ரளயத்தினில் இரற்றி ஓட --- பெரிய பிரளய வெள்ளம்போல் ஒலித்து ஓட,

     விலக்கி --- தேவர்களின் துன்பத்தை நீக்கி,

     வேலை செருக்கி --- வேலை நுழைவித்து,

     உயிர் மொக்கிய மறவோனே --- உயிரையுண்ட வீரமூர்த்தியே!

பெருக்கமோடு சரித்திடு மச்சமும் --- மிகுதியாக உலாவுகின்ற மீன்கள்,

உளத்தில் மா மகிழ் பெற்றிட --- உள்ளத்தில் மிகுந்த மகிழ்ச்சி பெற,

உற்றிடு பிளப்பு வாயிடை --- தமது பிளப்புள்ள வாயில்,

முப்பொழுதத்தும் --- காலை உச்சி மாலையென்ற மூன்று வேளைகளிலும்,

ஓர் கழுநீரின் --- ஒப்பற்ற செங்கழு நீரின்,

பிணித்த போது வெடித்து --- கட்டுள்ள மொட்டுகள் வாய் விரிந்து,

ரசத்துளி கொடுக்கும் ஓடை மிகுந்த ---  தித்திக்கின்ற தேன் துளிகளைத் தருகின்ற சுனைபெருமையுடன் திகழும்,

திருத்தணி --- திருத்தணி மலையில்,
பிறக்க மேவுற --- விளக்கம் பொருந்த,

அத்தலம் உற்று உறை --- அத்திருத்தலத்தில் பொருந்தி வாழ்கின்ற,

பெருமானே --- பெருமையில் மிகுந்தவரே!

         திருட்டு நாரிகள் --- திருட்டுத் தனமுள்ள பெண்கள்,

     பப்பர மட்டைகள் --- கூத்தாடும் பயனிலிகள்,

     வறட்டு மோடி இனித்த நடிப்பவர் --- பசையில்லாத செருக்குடன் இனிமையாக நடிப்பவர்கள்,

     சிறக்க மேனி உலுக்கி --- சிறப்புடன் உடம்பைக் குலுக்கி,

     மடக்கு கண் வலையாலே --- அப்படியும் இப்படியும் திருப்புகின்ற கண்வலையினாலே,

     திகைத்து ---  மயக்குவித்து,

     உள் ஆவி கரைத்து --- உள்ளுறையும் உயிரைக் கரையுமாறு செய்து,

     மனத்தினில் இதத்தை ஓட விடுத்து --- மனத்தில் உள்ள இன்பத்தை ஓடிப்போகும்படிச் செய்து,

     மயக்கு இடு சிமிட்டு --- மயக்கத்தைத் தருகின்ற கண் சிமிட்டலால்,

     காமவிதத்திலும் உட்பட அலைவேனோ --- காமவழியில் உட்படும்படி அலைவேனோ?


பொழிப்புரை


         திருநீற்றைத் தரித்து வேதங்களைக் கூறிய பித்தனாம் சிவபெருமான், “சமர்த்தனே! குழந்தையே! பெரிய பிரணவப் பொருளை இனிமையாக உபதேசிப்பாயாக” என்று தேவரீரைக் கேட்கும் புகழ்பெற்ற முருகக் கடவுளே!

நிபுணரே!

         போற்றுகின்ற அடியார்களது அறிவில் கருணையுடன் எழுந்தருளும் பரம்பொருளே!

         அறிவுக்கும் அப்பாற்பட்டவரே!

         ஆயிரக்கணக்கான யோகங்களுக்குள் சிறந்த சிவயோக நிலையைக் கொண்ட தட்க்ஷிணாமூர்த்தியான குருநாதரே!

         தேவர்களை அஞ்சும்படிச் செய்த சூரபன்மனைச் சங்கரித்து போரில் கொலையுண்ட இடங்களில் பேய்களுக்குப் பிணக்குவியல்களை உணவாகக் கொடுத்து, அதனால் பசித்துன்பம் நீங்கிய பேய்கள் தித்திகு தித் தென்று விளையாடும்படிச் செய்த வீரமூர்த்தியே!

         போர்க் களத்தில் உதிரம் பெரிய பிரளய வெள்ளம் போல் ஒலித்து ஓட துன்பத்தை விலக்கி, வேலை விடுத்து உயிரை உண்ட வீரக் கடவுளே!

         மிகுதியாக உலாவுகின்ற மீன்கள் உள்ளத்தில் மிக்க மகிழ்ச்சி பெறத் தமது பிளப்புள்ள வாயில், காலை உச்சி மாலை என்ற மூன்று வேளைகளிலும் ஒப்பற்ற செங்கழுநீரின் கட்டுள்ள மொட்டுக்கள் வாய்விரிந்து தேன் துளிகளைக் கொடுக்கும், செங்கழுநீர் சுனை சிறந்து விளங்கும் திருத்தணிகையில், விளக்கம் பொருந்த அத்திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமிதம் உடையவரே!

         திருட்டுப் பெண்கள், கூத்தாடும் பயனில்லாதவர்கள், பகையற்ற செருக்குடன் இனிது நடிப்பவர்கள், சிறப்புடன் தேகத்தைக் குலுக்கி, அப்படியும் இப்படியுமாக கண் வலையாலே மயக்குவித்து, உயிரைக் கரைத்து; மனத்தில் உள்ள இன்பத்தை ஓடிப் போகும்படிச் செய்து, மயக்கத்தைத் தருகின்ற கண் சிமிட்டலால் காம விழியால் உட்படும்படி அடியேன் அலையலாமோ?

விரிவுரை

திருட்டு நாரிகள்: ---

இத்திருப்புகழின் முதல் இரண்டு அடிகளில் விலை மகளிரைப் பற்றி அடிகளார் கூறுகின்றார்.

தம்மை நாடி வந்தவர்களிடம் உண்மையன்பு காட்டாது, மனத்தில் ஒன்றும் முகத்தில் ஒன்றுமாகக் கரவுடன் நடப்பார்கள். அதனால் அவர்கள் இருமனப் பெண்டிர் எனப்படுவார்கள்.

பப்பர மட்டைகள் ---

பப்பரம்-ஒருவகை வரிக்கூத்து; மட்டை-பயனில்லாத பொருள். பிறவியெடுத்ததன் பயன் இன்னதென்று அறியாமல் வீணாக வாழ்பவர்கள்.

வறட்டு மோடியினித்த நடிப்பவர் ---

வறட்டு-சாறு இல்லாதது. பொருளின்றிப் பேசுவதை “வறட்டு வார்த்தை” என்பார்கள். வறட்டு ஜம்பம் என்றுங் கூறுவர். கொடுமையை மறைத்து இனிமை போல் நடித்துப் பழகுவார்கள்,

சிறக்கு மேனி உலுக்கி ---

மலரும், அணிகலன்களும் நிறைந்த அழகிய உடம்பு, மேலும் பளிச்சிடுமாறு குலுக்குவர். அதனால் அவர்களின் அழகு மிகும். ஒரு பொருள் அசைந்தால் அதன் அழகு அதிகப்படும். திருக்கோயில்களில் அலங்கரித்த உத்சவ மூர்த்தியை அப்படி சிறிது அசைப்பார்கள். அதற்கு வையாளி நடையென்று பேர். பூத்த மலர்க் கொம்பு அசைவதால் அழகு பெறும்.

மடக்கு கண் வலையாலே ---

கண்கள் நீரில் பிறழும் சேல்மீன்போல் இப்படியும் அப்படியும் அசையுமாறுசெய்து இளைஞர்களை அக்கண் வலையால் பிடித்து வசப்படுத்துவார்கள்.வலையால் பறவைகளைப் பிடிப்பவர் காட்டில் வலை வைப்பார்கள். வேசையர்கள் கூந்தலாகிய அடர்ந்த காட்டிலே கண்ணாகிய வலையை வீசி இளைஞர்களின் உள்ளங்களாகிய பறவைகளைப் பற்றுவார்கள்.

       திண்ணிய நெஞ்சப் பறவை சிக்கக் குழற் காட்டில்
    கண்ணி வைப்பார் மாயம் கடக்கும் நாள் எந்நாளோ”     ---தாயுமானார்.

திகைத்துளாவி கரைத்து ---

ஆசை மிகுதியால் இளைஞர்கள் மனந்திகைப்புற்று காமாக்கினியால் உயிர் உருகி கரையுமாறு புரிவார்கள்.

மனத்தினில் இதத்தை ஓட விடுத்து ---

மனத்தினில் இன்பத்தை ஓடி ஒளியுமாறு விலக்குவர். ஆசை வயப்பட்டோர் துன்பம் அடைவார்கள் என்பது தேற்றம்.

மயக்கிடு சிமிட்டு ---

மயக்கு இடு சிமிட்டு கண்களை அப்படி ஒயிலாகச் சிமிட்டுவதனால் மயக்கத்தை வளர்ப்பார்கள்.

காம விதத்திலுமுட்பட அலைவேனோ ---

ஆசாபாசத்தில் உட்பட்டவர்கள் அலைவார்கள். “முருகா!  அவ்வண்ணம் ஆசையிற் சிக்கி அலைதல் முறையோ?  அடியேனை அவ்வாறு அலையாத வண்ணம் ஆட்கொள்வீர்” என்று சுவாமிகள் வேண்டுகின்றார்கள்.

தரித்து நீறு ---

திருநீற்றின் பெருமை

சிவபெருமான் திருநீறு தரித்து அருள் புரிகின்றார்.

           நீறு தங்கிய திருநுதலானை”     --- சுந்தரர் தேவாரம்.

நீறு-வினைகளை நீறாக்குவது வடமொழியில் ‘பஸ்மம்’ என்று பேர். எல்லா சமயங்களுக்கும் உரியது திருநீறு.

           சமயத்தில் உள்ளது நீறு”        --- திருஞானசம்பந்தர்.

நம்முடைய வினை நீங்கும் பொருட்டு நாம் திருநீறு தரித்துக் கொள்ளுகின்றோம். இறைவன் ஏன் திருநீறு தரிக்கின்றார்?

குழந்தைகட்குப் பிணி உண்டானால் தாய் பத்தியம் இருப்பது போல், தமது திருவடிகளை நினைக்கின்ற அடியார்களது வினைகள் விலகும் பொருட்டு இறைவன் திருநீறு தரிக்கின்றார்.

நினைவொடு பணிபவர் வினைதுகள் பட எதிர்
 நினைந்து திருநீறு அணிந்தது ஒருபால்”      --- கொலு வகுப்பு.

பகைவருடைய கணைகளினின்றுங் காக்கும் பொருட்டு வீரர்கள் கவசம் அணிவார்கள். அதுபோல் காமாதி பகைவருடைய துன்பம் நேராவண்ணம் அணியும் கவசம் திருநீறு. அதனால் அது ரக்ஷை எனப் பேர்பெறும்.

           கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை”    --- திருமந்திரம்.

சைவ மரபில் பிறந்து திருநீறு அணியாத பாவிகள் நெற்றியைச் சுடு”, “திக் பஸ்ம ரஹிதம் பாலம்” என்று பஸ்ம ஜாபால உபநிடதங் கூறுகின்றது.

வெண்மையை உலகம் விரும்பும், வெள்ளையாக உடுப்பது சிறப்பு. “வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை” என்பது பழமொழி. சூதுவாது இல்லாதவர்களைப் பார்த்து, “வெள்ளையுள்ளம்” என்று கூறுவர்.

வெண்மையான துணி, வெண்மையான கடிதம் இவைகளை நெருப்பில் இட்டால், கருமையாகிவிடும். வெண்மையான பொருள்கள் யாவற்றையும் கருமையாக்கும் அக்கினி கருமையான சாணத்தை மட்டும் வெண்மையாக்கி விடுகின்றது. ஆகவே நமது அஞ்ஞானமான கருமையை ஞானமாகச் செய்வது திருநீறு.

சாணத்தால் நீற்ற சாம்பல் அவரைச் செடியில் வரும் கருங் கிருமிகளைக் கொல்லும் ஆற்றலுடையது. விதிப்படி சாணத்தால் நீற்ற வெண்ணீறு நம் சரீரத்தில் உள்ள நச்சுக் கிருமிகளைக் கொல்லும் ஆற்றல் உடையது என உணர்க.

       அருள் செய்நீறிடார் அமுது உனக்கு இடினும்
      அம் மலத்தினை அருந்துதல் ஒழிக”       --- திருஅருட்பா.

சைவ சமயமாம் நமது தெய்வச் சமயத்தின் சின்னங்கள் மூன்று. திருநீறு, உரத்திராக்கம், திருவைந்தெழுத்து. நெற்றியில் நீறும், மார்பில் உருத்திராக்கமும், உள்ளத்தில் திருவைந்தெழுத்தும் திகழ வேண்டும். “நீறில்லா நெற்றி பாழ்” என்கின்றார் ஒளவையார்.

தீட்சை பெறாதார் இடுகின்ற மலர், முகவரி எழுதாத கடிதம் உரியவரிடம் சேராததுபோல், இறைவன்பால் சேராது அதனால் கண்ணபிரான் உபமன்யு முனிவரிடம் தீட்சைபற்று சிவபூசை செய்தார்.

அங்ஙனம் தீட்சை பெற்றுக்கொண்டோர், திருநீற்றை எடுத்து இட உள்ளங்கையில் வைத்து ஓம் என்ற பிரணவத்தை வலக்கை மோதிர விரலால் எழுதி, பஞ்சகலா மந்திரம், பஞ்சப் பிரம்ம மந்திரம், ஷடங்க மந்திரம் கூறியணிய வேண்டும்,  அதனால் அது மந்திர விபூதியாக ஆகின்றது.

இதனை “மந்திரமாவது நீறு” என்ற தமிழ் மறையால் அறிக. நீர் இட்டுக் குழைத்து சிரசு, நெற்றி, மார்பு, நாபி, இரு முழந்தாள்கள், இரு முழங்கைகள், இரு மணிக்கட்டுகள், இரு தோள்கள், இரு விலா, முதுகு, கழுத்து ஆக இந்த பதினாறு அங்கங்களில் அணிந்து கையலம்பி, அந்த நீரை இடக்கையில் கும்ப முத்தரையாகப் பிடித்து, சிந்தும் நீரை, சம்மிதாமந்திரம் கூறி சிரசில் தெளித்துக் கொள்ள வேண்டும். இது மந்திர ஸ்னானமாகும்.

பிணியெலாம்வரினும் அஞ்சேன்
     பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியினான்றதன்
     தொழும்பரோடு அழுந்தி, அம்மால்
திணிநிலம் பிளந்து காணாச்
     சேவடிபரவி, வெண்ணீ(று)
அணிகிலாதவரைக் கண்டால்
     அம்மநாம் அஞ்சுமாறே”

என்று மாணிக்கவாசக சுவாமிகள் கூறுகின்றார். நோய்கட்கும், பிறப்பு இறப்பு என்ற பெருந் துயருக்கும் அஞ்சாத அப்பெருவீரர் வெண்ணீறணியாத பேதைகட்கு அஞ்சுகின்றார். “திருவெணீறிடாமூடர்” என்கிறார் அருணகிரிநாதர்.

திருநீறு இடாஉருத் தீண்டேன் என்னும்,
     திருநீறு மெய்திரு முண்டம் தீட்டிப்
பெருநீல கண்டன் திறங்கொண்டுஇவள்
     பிதற்றிப் பெருந்தெரு வேதிரியும்,
வருநீ ரருவி மகேந்திரப்பொன்
     மலையில் மலைமக ளுக்குஅருளும்
குருநீ என்னும், குணக் குன்றே என்னும்,
     குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.   --- திருவிசைப்பா.

திருநீறு வாங்குதல், அணிதல் முறையை, "குமரேச சதகம்" என்னும் நூலில் விளக்கியிருப்பது காண்க.
  
திருநீறு வாங்கும் முறை

பரிதனில் இருந்தும் இயல் சிவிகையில் இருந்தும் உயர்
     பலகையில் இருந்தும்மிகவே
பாங்கான அம்பலந் தனிலே இருந்தும்
     பருத்ததிண் ணையிலிருந்தும்

தெரிவொடு கொடுப்பவர்கள் கீழ்நிற்க மேல்நின்று
     திருநீறு வாங்கியிடினும்
செங்கையொன்றாலும்விரல் மூன்றாலும் வாங்கினும்
     திகழ்தம் பலத்தினோடும்

அரியதொரு பாதையில் நடக்கின்ற போதினும்
     அசுத்தநில மான அதினும்
அங்கே தரிக்கினும் தந்திடின் தள்ளினும்
     அவர்க்குநர கென்பர்கண்டாய்

வரிவிழி மடந்தைகுற வள்ளிநா யகிதனை
     மணந்துமகிழ் சகநாதனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.
  
திருநீறு அணியும் முறை

பத்தியொடு சிவசிவா என்றுதிரு நீற்றைப்
     பரிந்துகை யாலெடுத்தும்
பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியொடு
     பருத்தபுய மீதுஒழுக

நித்தம்மூ விரல்களால் நெற்றியில் அழுந்தலுற
     நினைவாய்த் தரிப்பவர்க்கு
நீடுவினை அணுகாது தேகபரி சுத்தமாம்
     நீங்காமல் நிமலன் அங்கே

சத்தியொடு நித்தம்விளை யாடுவன் முகத்திலே
     தாண்டவம் செய்யுந்திரு
சஞ்சலம் வராதுபர கதியுதவும் இவரையே
     சத்தியும் சிவனுமென்னலாம்

மத்தினிய மேருஎன வைத்தமு தினைக்கடையும்
     மால்மருகன் ஆனமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

பிதற்றிடு பித்தனும் ---

இறைவன் பேசுவது வேதமேயாகும்.

           பேசுவதுந் திருவாயால் மறைபோலுங் காணேடீ”   --- திருவாசகம்.

ஆன்மாக்கள் செய்யும் பிழைகளைப் பொறுத்து அருள் புரிகின்ற பரமகருணையுடையவன் ஆதலின் பித்தன் எனப்பெற்றான். மகன்செய்த குற்றங்களை யெல்லாம் பொறுத்து வாழ்த்தும் தாயைக் கண்டு, “பெற்ற மனம் பித்து, பிள்ளைமனங் கல்லு” என்று கூறும் பழமொழியாலும் உணர்க.

இதத்து மாகுடிலைப் பொருள் , , , , , குருநாதா ---

சனகாதி முனிவர்கட்குக் கல்லாலின்புடையமர்ந்து எல்லாமாய் அல்லவுமாய் இருந்ததனை இருந்தபடி யிருந்து காட்டிச் சொல்லாமல் சொன்னவராகிய குருதட்சிணாமூர்த்தி, “சமர்த்தனே!  குழந்தாய்!  இனிய பிரணவப் பொருளைச் சொல்” என்று துதி செய்து கேட்டருளினார். ஆதலின் குருவுக்குங் குருவாதலின் ஆதிகுருப்புகழ் மேவுங் கொற்றவன் முருகன்.

சம ப்ரவீண ---

சமப்ரவீணன்-நிபுணன். ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐம்பெருந் தொழில்களை விளையாட்டாக எளிதில் புரிகின்ற ஆற்றலுடையவன்.

மதித்திடு புத்தியில் இரக்கமாய் வருதற்பர---

இறைவன் தன்னையுணர்ந்து உணர்வுமயமாய் நிற்கும் அடியவரது அறிவில் கலந்து விளங்குவான்.

  கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ”        ---திருப்புகழ்.

அறிவுஒன்று அறநின்று அறிவார் அறிவில்
 பிறிவுஒன்று அறநின் றபிரான் அலையோ”    ---கந்தர்அநுபூதி.

சகத்ர யோக ---

யோகத்தில பல வகையுண்டு. ஹடயோகம், ஆலம்ப யோகம், நிராலம்பயோகம், ஆதாரயோகம், நிராதாரயோகம், மந்திரயோகம், கர்மயோகம், பக்தியோகம், ராஜயோகம் என்பன வாதி அநேகம். இவற்றுக்கெல்லாம் மேலான சிவ யோகத்தினை உணர்த்தும் ஞானகுரு முருகன்.

தக்ஷிண குருநாதா ---

தென்னாட்டில் அப் பரமபதியாகிய முருகனையுணர்ந்து வழிபடுவார் பலர். அகத்தியர், சிகண்டி, நக்கீரர், அருணகிரிநாதர், குமரகுருபரர், சிதம்பர சுவாமிகள், இராமலிங்க அடிகள், பாம்பனடிகள் முதலிய அனைவரும் தென்னாட்டில் அவதரித்தவர்களேயாகும். அதனால் தட்சிண குருநாதர் என்றார்.

வெருட்டு சூரனை, , ,, , மறவோனே ---

இந்த ஐந்தாவது ஆறாவது அடிகளில் போர்க்கள வர்ணனைகளையும் பேய்கட்கு உணவளித்த பெருமையையும், சூராதியவுணரை அழித்த போர்த் திறத்தையும் சுவாமிகள் கூறுகின்றார்கள்.

பெருக்கமோடு சரித்திடு மச்சமும் ---

திருத்தணியில் செங்கழுநீர் சுனை ஒன்று இன்றும் இருக்கின்றது. இச்சுனை கோயிலின் தென்புறம் இருக்கின்றது. சுனையின் முன்புறம் ஒரு சிறு கோபுரம் உளது. தேனால் அது கோயில்போல் காட்சி தரும். அதில் அர்ச்சகரை அன்றி பிறர் புகமாட்டார்கள். அச்சுனையில் செங்கழுநீர் மலர் மலரும். அச்சுனை நீரை தூய்மை செய்து கொண்டு மீன்கள் நிரம்ப உலாவும்.

உளத்தின் மாமகிழ் பெற்றிட ரசத்துளி கொடுக்கும் ஓடை ---

தன்னிடத்தில் வாழ்ந்து, தூய்மை செய்யும் அந்த மீன்கள் மகிழுமாறு செங்கழுநீர் மலர்கள் அம்மீன்கட்கு உணவு தந்து அவைகளை மகிழச் செய்கின்றன. என்னவுணவு தருகின்றன?  செங்கழுநீர் மலர் மூன்று வேளைகளிலும் மலர்ந்து மீன்களின் பிளந்த வாயில் தேன் துளிகளை வழங்கி உதவுகின்றன.

செங்கழுநீர் சுணையை உடையதால் திருத்தணி கல்லார கிரியென்று பேர் பெற்றது. செங்கல்வராயன் என்ற பேர் இதனால் ஏற்பட்டது.

கருத்துரை


தணிகேசா!  ஆசா பாசத்தில் சிக்கி அலையாமல் அடியேனை ஆட்கொள்ளும்.

12ந துறந்தார் பெரு்மை

“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும் ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம் தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா ...