திருச் சத்திமுற்றம்
(சத்திமுத்தம்)
சோழ நாட்டு காவிரித் தென்கரைத் திருத்தலம்.
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பாடல்
பெற்ற பட்டீச்சுரம் என்னும் திருத்தலத்துக்கு மிக அருகில் திருசத்திமுத்தம்
இருக்கிறது. அருகில் உள்ள இரயில் நிலையம் தாராசுரம்.
இறைவர்
: சிவக்கொழுந்தீசர்.
இறைவியார்
: பெரியநாயகி.
தீர்த்தம் : சூல தீர்த்தம்.
தேவாரப்
பாடல்கள் : அப்பர் - கோவாய் முடுகி
காஞ்சீபுரத்தில் அம்பிகை இறைவனைத் தழுவக்
குழைந்தது போலவே, திருசத்திமுற்றத்திலும்
நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
சிவபெருமான் ஒருமுறை அம்பிகையை பூலோகத்தில்
இத்தலத்தில் தம்மை பூஜை செய்யுமாறு பணித்தார். அம்பிகையும் இத்தலத்திற்கு வந்து
காவிரிக்கரையில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து பூஜை செய்து வந்தாள். இறைவன் அம்பிகையை
சோதிக்க விரும்பி காவிரியில் வெள்ளம் வருமாறு செய்தார். ஆற்று வெள்ளம் லிங்கத்தை
அடித்துச் சென்று விடுமோ என்று அஞ்சி அம்பிகை இறைவனை ஆரத் தழுவினார். இறைவன்
அம்பிகைக்கு காட்சி கொடுத்து அம்மையை தழுவக் குழைந்தார். சக்தி இறைவனை தழுவக் குழைந்ததால்
இத்தலம் திருசத்திமுற்றம் என்று அழைக்கப்படுகிறது.
மேற்கொண்டு இத்தலத்தில் இறைவனை நோக்கி
ஒற்றைக்காலில் நின்று தவம் செய்த அன்னையின் பக்திக்குக் கட்டுப்பட்டு அம்பிகையை
மேலும் சோதிக்கும் வகையில் சோதி ரூபமாய் காட்சி கொடுத்தார். தீப்பிழம்பாய் எழுந்து
நிறபது ஈசனே என்றுணர்ந்த அம்பிகை மகிழ்ந்து அத்தீப்பிழம்பையே தழுவிக் குழைந்தாள்.
இனைவன் மகிழ்ந்து அன்னைக்கு அருள் பாலிக்கிறார். அன்னை தழுவி முத்தமிட்டதால்
"சக்தி முத்தம்" என்பது மருவி "சத்தி முற்றம்" என்று ஆகி
இருக்கிறது. மூலவர் சிவக்கொழுந்தீசர் கருவறையின் நுழைவு வாயிலின் வ்லதுபுறம்
அம்பிகை சிவனை தழுவியபடி காட்சி கொடுக்கும் சந்நிதி உள்ளது. அதன் பின்னாலேயே அன்னை
ஒற்றைக் காலில் தவம் இருந்த கோலத்தையும் கண்டு களிக்கலாம்.
இவ்வாலயம் கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன்
காட்சியளிக்கிறது. கோபுர வாயிலில் வல்லபை கணபதி காட்சியளிக்கிறார். முதல் கோபுர
வாயிலைக் கடந்தால் பெரிய வெளிப் பிரகாரத்தைக் காணலாம்.
அடுத்துள்ள இரண்டாங் கோபுர வாயிலில் விநாயகர்
முருகன் சந்நிதிகள் உள்ளன. மூலவர் சிவக்கொழுந்தீசர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு
நோக்கி கருவறையில் காட்சி கொடுக்கிறார். திருமேனியில், தீச்சுடர்கள் தெரிகின்றன. தெரியாதவர்கள்
குருக்களிடம் கேட்டால் தீப ஆராதனை செய்து காட்டுகிறார். நன்றாகப் பார்க்கும்
வண்ணம் மூன்று சுடர்கள் புடைத்துத் தெரிகின்றன. சுவாமி சன்னதிப் பிரகாரத்தில் உள்ள
பைரவர் சன்னதியின் பைரவர் நிஜமாகவே ஒரு ஆள் உயரத்துக்கு இருக்கிறார். கண்ணையும்
கருத்தையும் கவரும் அழகு வாய்ந்த சிற்பம். மற்றக் கோவில்களில் சிறு சிற்பமாகக்
காணப்படும் காவல் தெய்வமான பைரவர் இங்கே நிஜமான ஒரு ஆள் போல இருக்கிறார். அன்னை
பெரியநாயகியாகத் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள். நடராஜர் மற்றும் சரபேஸ்வரர்
சந்நிதிகளும் பார்க்க வேண்டியவை. உட் பிராகாரத்தில் தலவிநாயகரும் சோமாஸ்கந்தரும்
ஆறுமுகர், கஜலட்சுமி
சந்நிதிகளும் உள்ளன.
இத்தலத்திலுள்ள முருகப் பெருமான் ஆறு
திருமுகமும், பன்னிரு திருக்கரங்களும்
கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராய்
மயில் மீது அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருப்புகழில்
இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது
செங்கற்களால் கட்டபட்டிருந்த இக்கோவிலை
கற்கோவிலாக மாற்றியவர் சோழ அரச வம்சத்தைச் சேர்ந்த செம்பியன்மாதேவி ஆவார். முதலாம்
ராஜ ராஜ சோழன் காலத்திலும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. முதலாம் ராஜ ராஜ சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன் மற்றும்
விஜயநகர அரசர்கள் காலத்திய கல்வெட்டுகள் இக்கோவிலில் காணப்படுகின்றன.
திருமணம் ஆகாதவர்களும், விதிவசத்தால் பிரிந்து போன தம்பதியரும்
தழுவக்குழைந்த அன்னைக்கும், ஈசனுக்கும் சிறப்புப்
பூஜை செய்து வழிபடுகின்றனர். சக்தி தழுவிய ஈசனை திருமணமாகாத ஆண்களும், பெண்களும் திங்கள்கிழமைகளில் வந்து
வணங்கினால் தோஷங்களும், தடைகளும் நீங்கி நல்ல
இல்வாழ்க்கை அமையும்.
அப்பர் இத்தலத்தில் தங்கி ஆலயத்
திருப்பணி செய்துகொண்டு இறைவனை வணங்கித் தொழுது வந்தார். ஒருநாள் திருநாவுக்கரசர்
இறைவனை விழுந்து வணங்கி இறைவன் திருப்பாதங்களைத் தன் தலைமேல் வைத்து அருளவேண்டும்
என்று பதிகம் பாடி வேண்டுகோள் வைத்தார்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "ஓவாது சித்தம் உற்ற
யோகம் செழும்பொழிலில் பூவை செயும் சத்திமுற்றம் மேவும் சதாசிவமே" என்று போற்றி
உள்ளார்.
காலை 8 முதல பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 192
எறிபுனல்பொன்
மணிசிதறும் திரைநீர்ப் பொன்னி
இடைமருதைச் சென்று எய்தி, அன்பி னோடு
மறிவிரவு
கரத்தாரை வணங்கி, வைகி,
வண்தமிழ்ப்பா மாலைபல
மகிழச் சாத்தி,
பொறிஅரவம்
புனைந்தாரைத் திருநாகேச் சுரத்துப்
போற்றி, அருந் தமிழ்மாலை
புனைந்து போந்து,
செறிவிரைநன்
மலர்ச்சோலைப் பழையாறு எய்தி,
திருச்சத்தி
முற்றத்தைச் சென்று சேர்ந்தார்.
பொழிப்புரை : பின், அலை எறியும் நீரால் பொன்னையும்
மணிகளையும் கொழிக்கும் அலைகளையுடைய காவிரிக் கரையில் உள்ள திருவிடைமருதூரைச்
சென்றடைந்து, மான் கன்றைக் கையில்
உடைய இறைவரை அன்பு மிக வணங்கி, அங்கே தங்கி, இசையாலும், பொருண்மையாலும் வளமை மிக்க தமிழ்ப்பதிக
மாலை பலவற்றையும் மகிழ்ந்து பாடிப் போற்றி, புள்ளிகளையுடைய பாம்புகளை அணிந்த
இறைவரைத் திருநாகேச்சுரத்தில் வணங்கி, அரிய
தமிழ் மாலை பாடிச் சென்று, மணம் நிரம்பிய நல்ல
மலர்களையுடைய பூஞ்சோலைகள் சூழ்ந்த பழையாறை எனும் திருப்பதியை அடைந்து, பின் திருச்சத்திமுற்றத்தை அடைந்தார்.
இப்பாடலில்
திருச்சத்திமுற்றத்தை அடைதற்கு முன் குறிக்கப் பெற்ற திருப்பதிகள் மூன்றாம்.
இவற்றில் அருளிய திருப்பதிகங்கள்:
1. திருவிடைமருதூர்: (அ).
`காடுடை` (தி.4 ப.35)- திருநேரிசை. (ஆ). `பாசம் ஒன்று இலராய்` (தி.5 ப.14) - திருக்குறுந்தொகை. (இ). `பறையின் ஓசையும்` (தி.5 ப.15) - திருக்குறுந்தொகை. (ஈ). `சூலப்படை உடையார்` (தி.6 ப.16)- திருத்தாண்டகம். (உ). `ஆறுசடைக்கணிவர்` (தி.6 ப.17) – திருத்தாண்டகம்.
2. திருநாகேச்சரம்: (அ).
`கச்சைசேர்` (தி.4 ப.66)- திருநேரிசை. (ஆ). `நல்லர்`(தி.5 ப.52) - திருக்குறுந்தொகை. (இ). `தாயவனை`(தி.6 ப.66) - திருத்தாண்டகம்.
3. திருப்பழையாறை:
இத்திருப்பதிக்கு நாவரசர் இருமுறை எழுந்தருளுகின்றார்.(தி.12 திருநாவுக்கரசர் புராணம், 215) இதுபொழுது பதிகம்
அருளப் பெறவில்லை.
பெ.
பு. பாடல் எண் : 193
சென்று
சேர்ந்து திருச்சத்தி
முற்றத்து இருந்த
சிவக்கொழுந்தை,
குன்ற
மகள்தன் மனக்காதல்
குலவும் பூசை
கொண்டுஅருளும்
என்றும்
இனிய பெருமானை,
இறைஞ்சி, இயல்பில்
திருப்பணிகள்
முன்றில்
அணைந்து செய்து,தமிழ்
மொழிமா லைகளும்
சாத்துவார்.
பொழிப்புரை : சென்றவர், திருச்சத்திமுற்றம் என்ற பதியில்
வீற்றிருக்கும் சிவக்கொழுந்தீசரை,
மலையரசன்
மகளாரான உமை அம்மையாரின் உள்ளத்தில் எழுந்த அன்பால் விளங்கும் பூசனையை என்றும்
ஏற்றருளுகின்ற இனியவரான இறைவரைத் தொழுது, திருமுற்றத்தினை
அடைந்து, தம் இயல்பாய்ச்
செய்துவரும் திருப்பணிகளான உழவாரப் பணிகளைச் செய்து, சொல் மாலைகளையும் சாத்துவாராய்,
பெ.
பு. பாடல் எண் : 194
"கோவாய் முடுகி"
என்றுஎடுத்துக்
"கூற்றம் வந்து
குமைப்பதன்முன்
பூவார் அடிகள்
என்தலைமேல்
பொறித்து வைப்பாய்"
எனப்புகன்று
நாஆர் பதிகம்
பாடுதலும்
நாதன் தானும், "நல்லூரில்
வாவா" என்றே
அருள்செய்ய
வணங்கி மகிழ்ந்து
வாகீசர்.
பொழிப்புரை : `கோவாய் முடுகி` எனத் தொடங்கிக் கூற்றம் வந்து உயிரைக்
கொண்டு போதற்கு முன்பு, பூவார்ந்த உம்
திருவடியை என் தலைமேற் பொறித்து வைத்தருளுக! என விண்ணப்பிக்கும் நாவில் நிறைந்த
திருப்பதிகத்தைப் பாடவும், இறைவரும் `நீ திருநல்லூருக்கு வா` எனக் கூறியருள, திருநாவுக்கரசரும் மகிழ்ந்து வணங்கி.
இவ்வாறு விண்ணப்பித்த
பதிகத்தின் முதற்பாடல்:
கோவாய்
முடுகி அடுதிறல் கூற்றம் குமைப்பதன்முன்
பூவார்
அடிச்சுவடு என்மேல் பொறித்துவை, போகவிடில்
மூவா
முழுப்பழி மூடும் கண்டாய், முழங்கும் தழற்கைத்
தேவா, திருச்சத்தி முற்றத்து உறையுஞ்
சிவக்கொழுந்தே.
-தி.4 ப.96 பா.1 என்பதாம்.
இப்பாடற்
கருத்தையே ஆசிரியர் சேக்கிழார் `கூற்றம் வந்து
குமைப்பதன் முன் பூவார் அடிகள் என்தலை மேற்பொறித்து வைப்பாய்` எனக் குறித்தருளுகின்றார். பூவார்
அடிகள் - மலரனைய திருவடிகள், அடியார்கள் இட்ட
மலர்கள் பொருந்திய திருவடிகள் என இருபொருள் பட நின்றது. `கோவாய் முடுகி` என வழங்கும் இத்திருப்பதிகம்
திருச்சத்திமுற்றத்திலும், `திருவடி என் தலைமேற்
வைத்தார்` எனும் குறிப்புடைய
பதிகம் திருநல்லூரிலும் இருத்தலின்,
`நல்லூருக்கு
வா வா` என்று அருளினன் என
வரலாற்றை அமைப்பாராயினர் ஆசிரியர் சேக்கிழார். வா வா என்ற அடுக்கு விரைவு குறித்து
நின்றது.
4. 096 திருச்சத்திமுற்றம் திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
கோவாய்
முடுகி அடுதிறல் கூற்றம் குமைப்பதன்முன்
பூஆர்
அடிச்சுவடு என்மேல் பொறித்துவை, போகவிடில்,
மூவா
முழுப்பழி மூடும்கண் டாய்,
முழங்
குந்தழற்கைத்
தேவா, திருச்சத்தி
முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே.
பொழிப்புரை : ஒலிக்கும் தீயினைக்
கையில் ஏந்திய தேவனே ! திருச்சத்திமுற்றத்தில் உகந்தருளியிருக்கும் சிவக்கொழுந்தே
! தலைமை உடையவனாய் விரைந்து வந்து உயிரைப் போக்கும் திறமையை உடைய கூற்றுவன்
என்னைத் துன்புறுத்துவதன் முன்னம் ,
தாமரைப்
பூப் போன்ற திருவடிகளின் அடையாளத்தை என்மேல் பொறித்து வைப்பாயாக. அங்ஙனம்
பொறிக்காது வாளா விட்டு விட்டால் அழியாத பழி முழுதும் உன்னைச் சூழ்ந்து கொள்ளும்
என்பதனை நீ உணர்வாயாக .
பாடல்
எண் : 2
காய்ந்தாய்
அனங்கன் உடலம் பொடிபட, காலனை முன்
பாய்ந்தாய்
உயிர்செக, பாதம் பணிவார் தம்
பல்பிறவி
ஆய்ந்து ஆய்ந்து
அறுப்பாய், அடியேற்கு அருளாய், உன் அன்பர் சிந்தை
சேர்ந்தாய், திருச்சத்தி
முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே.
பொழிப்புரை : திருச்சத்திமுற்றத்து
உறையும் சிவக்கொழுந்தே ! மன்மதன் உடம்பு சாம்பலாகுமாறு அவனை வெகுண்டாய் .
கூற்றுவனை அவன் உயிர்போகும்படி உதைத்தாய். உன் திருவடிகளைப் பணிபவர்களின் பல
பிறவிகளையும் அறுத்தருளுவாய் . உன்னை வழிபடும் அடியவர்களுடைய உள்ளத்தை
இருப்பிடமாகக் கொண்ட நீ அடியேனுக்கு அருள்செய்வாயாக .
பாடல்
எண் : 3
பொத்து ஆர்
குரம்பை புகுந்துஐவர் நாளும் புகல்அழிப்ப,
மத்து ஆர்
தயிர்போல் மறுகு என் சிந்தை மறுக்கு ஒழிவி,
அத்தா, அடியேன் அடைக்கலம்
கண்டாய், அமரர்கள் தம்
சித்தா, திருச்சத்தி
முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே.
பொழிப்புரை : தேவர்கள் உள்ளத்தில்
இருப்பவனாய் உள்ள திருச்சத்திமுற்றச் சிவக் கொழுந்துப் பெருமானே ! பல துளைகள் உள்ள
கூடாகிய இவ்வுடம்பில் புகுந்து ஐம்பொறிகளும் நாள்தோறும் அடியேனுக்குப்
பற்றுக்கோடான உன் திருவடிப்பற்றினை அழிக்க , மத்தால் குழப்பப்படும் தயிர்போலச்
சுழலும் என் சிந்தையின் கலக்கத்தை ஒழியச் செய்வாயாக . தலைவனே ! அடியேன் உன்
அடைக்கலம் என்பதனை நோக்குக .
பாடல்
எண் : 4
நில்லாக்
குரம்பை நிலையாக் கருதி இந் நீள்நிலத்து, ஒன்று
அல்லாக்
குழி வீழ்ந்து அயர்வு உறுவேனை வந்து ஆண்டுகொண்டாய்,
வில்ஏர்
புருவத்து உமையாள் கணவா,
விடில்
கெடுவேன்,
செல்வா, திருச்சத்தி
முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே.
பொழிப்புரை : வில் போன்ற புருவத்தை
உடைய பார்வதி கணவனே ! செல்வனே ! சிவக்கொழுந்தே ! நிலைபேறு இல்லாத உடம்பை நிலைபேறு
உடையதாகக் கருதி இந்த நீண்ட உலகத்திலே பல துன்பங்களாகிய குழிகளில் விழுந்து
சோர்வுறும் அடியேனை நீயாகவே வந்து அடிமை கொண்டுள்ளாய். அடியேனைக் கை விட்டால்
அழிந்துவிடுவேன் .
பாடல்
எண் : 5
கருஉற்று
இருந்துஉன் கழலே நினைந்தேன்,
கருப்புவியில்
தெருவில்
புகுந்தேன், திகைத்த அடியேனைத்
திகைப்புஒழிவி,
உருவில்
திகழும் உமையாள் கணவா, விடில்கெடுவேன்,
திருவில்
பொலிசத்தி முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே.
பொழிப்புரை : வடிவால் விளங்கும்
பார்வதி கணவனே ! செல்வத்தால் பொலிவுபெறும் சத்தி முற்றப் பெருமானே ! கருப்பையை
அடைந்த காலத்தும் உன் திருவடிகளையே தியானித்தேன் . கருவில் இருந்து வெளிப்பட்டு
வளர்ந்து தெருவில் புகுந்தபோது வியப்புற்ற அடியேனை உலகப்பொருள்களை வியப்போடு
பற்றும் நிலையைப் போக்குவிப்பாய். அடியேனை உலகப்பற்றில் விடுவாயானால் வீணாகக்
கெட்டுவிடுவேன் .
பாடல்
எண் : 6
வெம்மை
நமன்தமர் மிக்கு விரவி விழுப்பதன்முன்,
இம்மைஉன்
தாள்என்தன் நெஞ்சத்து எழுதிவை, ஈங்குஇகழில்
அம்மை
அடியேற்கு அருளுதி என்பதுஇங்கு ஆர்அறிவார்,
செம்மை
தருசத்தி முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே.
பொழிப்புரை : பேரின்பவீட்டை
நல்கும் சத்திமுற்றச் சிவக்கொழுந்தே ! கொடிய இயமனுடைய ஏவலர் மிகுதியாகக் கூடி
என்னைக் கீழே தள்ளுவதன் முன் இம்மை வாழ்விலேயே உன் திருவடிகளை என் நெஞ்சில்
சுவடுபடும்படியாக வைப்பாயாக . இவ்வுலகில் என்னை நீ இகழ்ந்து புறக்கணித்து
இருப்பாயானால் மறுமையிலே நீ அடியேனுக்கு அருளப் போகும் செய்தியை யாவர் அறிவார்கள்?
பாடல்
எண் : 7
விட்டார்
புரங்கள் ஒருநொடி வேவவொர் வெங்கணையால்
சுட்டாய்,என் பாசத்
தொடர்புஅறுத் தாண்டுகொள்,
தும்பிபம்பும்
மட்டுஆர்
குழலி மலைமகள் பூசை மகிழ்ந்துஅருளும்
சிட்டா, திருச்சத்தி முற்றத்து
உறையும் சிவக்கொழுந்தே.
பொழிப்புரை : வண்டுகள் நெருங்கும்
தேன் பொருந்திய மலர்களை அணிந்த கூந்தலை உடைய பார்வதியின் வழிபாட்டினை விரும்பும்
மேம்பட்டவனே ! சிவக்கொழுந்தே ! பகைவருடைய மதில்கள் ஒருநொடியில் வெந்து போகுமாறு
கொடிய அம்பினால் சுட்டு நீறாக்கினாய் . அடியேனுடைய உலகப்பற்றாகிய தொடர்பை நீக்கி
அடிமை கொள்வாயாக .
பாடல்
எண் : 8
இகழ்ந்தவன்
வேள்வி அழித்திட்டு, இமையோர் பொறைஇரப்ப
நிகழ்ந்திட
அன்றே விசயமும் கொண்டது,
நீலகண்டா,
புகழ்ந்த
அடியேன்தன் புன்மைகள் தீரப் புரிந்துநல்காய்,
திகழ்ந்த
திருச்சத்தி முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே.
பொழிப்புரை : விளங்குகின்ற
சத்திமுற்றச் சிவக்கொழுந்தே ! நீலகண்டா ! உன்னை அலட்சியம் செய்த தக்கனுடைய
வேள்வியை அழித்து வேள்விக்கு வந்த தேவர்கள் தம்பிழையைப் பொறுத்துக் கொள்ளுமாறு
வேண்ட உலகப் பிரசித்தமாக அந்நாளிலேயே வெற்றி கொண்ட உன் செயலைப் புகழ்ந்த
அடியேனுடைய குறைபாடுகள் நீங்க விரும்பி அருளுவாயாக .
பாடல்
எண் : 9
தக்குஆர்வம்
எய்திச் சமண்தவிர்ந்து உன்தன் சரண்புகுந்தேன்,
எக்காதல்
எப்பயன் உன்திறம் அல்லால் எனக்குஉளதே,
மிக்கார்
திலையுள் விருப்பா, மிகவட மேருஎன்னும்
திக்கா, திருச்சத்தி முற்றத்து
உறையும் சிவக்கொழுந்தே.
பொழிப்புரை : சான்றோர் வாழும்
தில்லைநகரில் விருப்புடையவனே ! வடமேரு என்று சிறப்பித்துச் சொல்லப்படும்
வடதிசைக்கு உரியவனே ! சிவக்கொழுந்தே ! பொருத்தமான விருப்பத்தைப் பொருந்திச் சமண்
சமயத்தை விடுத்து உன் அடைக்கலமாக வந்து சேர்ந்தேன் . உன்னைப் பற்றிய செய்திகளைத்
தவிர வேற்றுச் செய்திகளில் எந்த விருப்பமும் இல்லை . அவற்றால் எனக்கு எந்தப்
பயனும் இல்லை .
பாடல்
எண் : 10
பொறித்தேர்
அரக்கன் பொருப்பு எடுப்புற்றவன் பொன்முடிதோள்
இற, தாள் ஒருவிரல்
ஊன்றிட்டு அலற, இரங்கி ஒள்வாள்
குறித்தே
கொடுத்தாய், கொடியேன் செய் குற்றக் கொடுவினைநோய்
செறுத்தாய், திருச்சத்தி
முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே.
பொழிப்புரை : சிவக்கொழுந்தே !
இயந்திரத் தேரை உடைய இராவணன் கயிலையைப் பெயர்க்க முற்பட்டானாக அவனுடைய பொன்னாலாகிய
முடிகளை அணிந்த தலைகளும் தோள்களும் நொறுங்குமாறு ஒரு விரலை அழுத்த அவன் அலற
அவனிடம் இரக்கம் காட்டிப் பிரகாசமான வாளினை அவன் நலன் குறித்துக் கொடுத்தாய் .
தீவினையை உடைய அடியேன் செய்த குற்றமாகிய கொடிய வினையின் பயனாகிய நோயினை அழித்தாய்
.
திருச்சிற்றம்பலம்