திருப் பட்டீச்சரம்




                                             திருப் பட்டீச்சரம்

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

         கும்பகோணத்தில் இருந்து தென்மேற்கே 8 கி.மீ. தொலைவில் பட்டீஸ்வரம். சுவாமிமலையில் இருந்து 3 கி.மீ. தொலைவு. பட்டீஸ்வரம் தேனுபுரீசுவரர் ஆலயத்திற்கு அருகில் திருசத்திமுற்றம். கும்பகோணம் - ஆவூர் சாலையில் சென்று இத்தலத்தை யடையலாம்.

இறைவர்                  : பட்டீச்சுரர், தேனுபுரீசுவரர்.

இறைவியார்               : ஞானாம்பிகை, பல்வளைநாயகி.

தல மரம்                    : வன்னி.

தீர்த்தம்                    : ஞான தீர்த்தம். (கோடி தீர்த்தம்)

தேவாரப் பாடல்கள்         : சம்பந்தர் - பாடன்மறை சூடன்மதி.


         தேவலோகப் பசு காமதேனுவின் மகள் பட்டி இத்தலத்தில் இறைவனை பூசித்ததால் இத்தலம் பட்டீஸ்வரம் எனபட்டது. திருமலைராயன் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள இத்திருக்கோயில் கிழக்கு மேற்காக 650 அடி நீளமும், தெற்கு வடக்காக 295 அடி நீளமும் உடையது. 5 பெரிய உயரமான கோபுரங்களும் 3 பிரகாரங்களும் உடையது. முதன்மைக் கோபுரம் 7 நிலைகளையும் மற்ற கோபுரங்கள் 5 நிலைகளையும் உடையன. கோயிலின் முதல் திருச்சுற்றில் உள்ள நடு மண்டபத்தில் மூலவர் பட்டீசுவரர் சந்நிதி இருக்கிறது. வெளியில் சோமச்கந்தரும், சுற்றிலும் சப்த கன்னிகைகள், மகாலிங்கம், இராமலிங்கம், இலக்குமி, சண்டிகேசுவரர், நடராஜர், சூரியன், ரேணுகாதேவி, சுவர்ண விநாயகர் மற்றும் நவக்கிரகங்கள் முதலானோர் சந்நிதிகள் உள்ளன. வடபுறத்தில் அம்மன் ஞானாம்பிகை சந்நிதி இருக்கிறது. அம்மன் சந்நிதியில் உள்ள மண்டபம் கலையம்சம் வாய்ந்தது. இம்மண்டத் தூண்களில் உள்ள யாளிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் நடுவில் மேலே கல்லாலான ஊஞ்சல் சங்கிலி உள்ளது. ஒரே கல்லாலான சக்கரம் சுழலக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கலையம்சம் பொருந்திய பல சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம்.

          பராசக்தி தனித்து தவம் செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்து இறைவனை பூஜித்து வர இறைவன் பராசக்தியின் தவத்திற்கு உவந்து தமது சடைமுடியுடன் காட்சி கொடுத்த சிறப்புடையது இத்தலம்.

          விசுவாமித்திர முனிவர் காயத்திரி சித்திக்கப் பெற்று பிரம்மரிஷி என்ற பட்டம் இத்தலத்தில் பெற்ற சிறப்புடையது.

          வாலியைக் கொன்றதால் ஏற்பட்ட சாயஹத்தி தோஷத்தை இராமர் இங்கு தன் வில்லின் முனனயால் கோடிதீர்த்தம் என்ற கிணற்றை தோற்றுவித்து அதன் நீரால் இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டு போக்கிக் கொண்டார் என்று ஒரு கதை உண்டு. இத்தலத்தில் இராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட இலிங்கம் இராமலிங்கம் என்று வழங்கப்படுகிறது.

          மாளவ தேசத்து தர்மசர்மா என்ற அந்தணனுக்கு மேதாவி முனிவரின் சாபத்தால் ஏற்பட்ட நாய் வடிவம் இத்தலத்திலுள்ள ஞானவாவி தீர்த்தத்தின் ஒரு துளி நீர் பட்டதால் சாபம் நீங்கப் பெற்றான் என்றும் சொல்லப்படுகிறது.

          இத்தலத்தில் ஐந்து நந்திகள் உள்ளன. அனைத்தும் சந்நிதியிலிருந்து விலகியேயுள்ளன. திருவலஞ்சுழி, பழையாறை மேற்றளி, திருச்சத்தி முற்றம் ஆகிய தலங்களிலுள்ள இறைவனைப் பணிந்து நண்பகல் பொழுதில் பட்டீச்சுரம் வந்த திருஞானசம்பந்தருக்கு வெய்யிலின் கொடுமை தாக்காமல் இருக்க இத்தலத்து இறைவன் சிவகணங்கள் மூலம் முத்துப் பந்தல் அளித்து அதன் குடை நிழலில் திருஞானசம்பந்தர் தன்னை தரிசிக்க வரும்போது நந்தி மறைக்காமல் இருக்க நந்தியெம் பெருமானை விலகி இருக்கச் சொல்லி அருளிய சிறப்புடையது என்று சொல்லப்படுகிறது.

           வடக்குக் கோபுர வாயில் வெளியில் துர்க்கையம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள் ஆகக் கருதப்படுகின்றாள். சோழ அரசர்கள் காலத்தில் பழையாறையில் அரச மகளிர் வசிப்பதற்கான மாளிகை இருந்தது. அந்த மாளிகைக் கோட்டையின் வடக்கு வாசலில் குடி கொண்டிருந்தவள் இந்த துர்க்கை. சோழர்கள் காலத்திற்குப் பிறகு இந்த துர்க்கையை அங்கிருந்து கொண்டுவந்து பட்டீச்சுரம் கோயிலில் பிரதிஷ்டை செய்தார்கள். பட்டீச்சுரம் துர்க்கையை பக்தர்கள் ராகுகால நேரங்களிலும், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும், அட்டமி, நவமி திதிகளிலும் வழிபடுதலைச் சிறப்பாக கருதுகின்றனர். துர்க்கை இங்கு சாந்த சொரூபியாக, கருணை வடிவமாக எட்டு திருக்கரங்கள் கொண்டு அருள் பாலிக்கிறாள். இவ்வன்னை மகிடன் தலைமீது நின்ற கோலத்துடன் சிம்ம வாகனத்துடன் திரிபங்க ரூபமாய், எட்டுத் திருக்கரங்களுடனும், முக்கண்களுடன், காதுகளில் குண்டலங்களோடு காட்சி தருகிறாள்.காளி மற்றும் துர்க்கைக்கு இயல்பாக சிம்மவாகனம் வலப்புறம் நோக்கியதாக காணப்படும்.ஆனால் சாந்த சொரூபிணியான இந்த துர்க்கைக்கு சிம்மவாகனம் இடப்புறம் நோக்கி அமைந்துள்ளது.அபயகரத்துடன் சங்கு சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றை தாங்கி அருள் பாலிக்கிறாள்.

         ஆனி மாதம் முதல் தேதியில் திருஞானசம்பந்தருக்குச் சிவபெருமான் பூதகணங்கள் மூலம் முத்துப்பந்தல் அளிக்கும் விழா நடைபெறும். இத்தலத்தின் சிறப்புவிழா இதுவேயாகும்.

     வள்ளல் பெருமான் தம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "பத்தி உற்றோர் முள் தீச் சுரத்தின் முயலா வகை அருளும் பட்டீச்சுரத்து எம் பராபரமே" என்று போற்றி உள்ளார்.

         காலை 6 முதல பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.



திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 391
திருச்சத்தி முற்றத்தில் சென்று எய்தி, திருமலையாள்
அருச்சித்த சேவடிகள் ஆர்வம் உறப் பணிந்து ஏத்தி,
கருச்சுற்றில் அடையாமல் கைதருவார் கழல்பாடி,
விருப்பு உற்றுத் திருப்பட்டீச்சரம் பணிய மேவுங்கால்.

         பொழிப்புரை : திருச்சத்திமுற்றத்தினைச் சென்றடைந்து திருமலைவல்லியார் போற்றி வழிபட்ட அழகிய திருவடிகளை ஆர்வத்துடனே வணங்கி, பிறவிச் சுழலில் அகப்படாமல் கைதந்து ஈடேற்றுபவரான இறைவரின் திருவடிகளைப் பாடி, விருப்புக் கொண்டு `திருப்பட்டீச்சரத்தை' வணங்கச் சென்ற போழ்து,


பெ. பு. பாடல் எண் : 392
வெம்மைதரு வேனில்இடை வெயில் வெப்பம் தணிப்பதற்கு
மும்மை நிலைத் தமிழ்விரகர் முடிமீதே, சிவபூதம்
தம்மை அறியாதபடி தண்தரளப் பந்தர் எடுத்து,
"எம்மை விடுத்து அருள் புரிந்தார் பட்டீசர்" என்று இயம்ப.

         பொழிப்புரை : வெப்பத்தை மிகுதியாய் அளிக்கும் முதுவேனிற் காலத்தின் வெம்மையைத் தணித்து ஆற்றும் பொருட்டு, முத்தமிழ் வல்லுநரான சம்பந்தரின் திருமுடியின் மீது, தம்மை அறியாத வகையால் சிவபூதம் குளிர்மை தரும் முத்துப் பந்தரை எடுத்துப் பிடித்து, `பட்டீசர் எங்களை இதனுடன் சென்று தருமாறு திருவாய் மலர்ந்தருளினார்' எனக் கூற,


பெ. பு. பாடல் எண் : 393
அவ்வுரையும், மணிமுத்தின் பந்தரும் ஆகாயம் எழ,
செவ்விய மெய்ஞ் ஞானம்உணர் சிரபுரத்துப் பிள்ளையார்,
"இவ் வினைதான் ஈசர் திருஅருள் ஆகில் இசைவது" என
மெய்விரவு புளகமுடன் மேதினியின் மிசைத் தாழ்ந்தார்.

         பொழிப்புரை : அச்சொற்களும் அழகிய முத்துப்பந்தரும் வானத்தில் எழுந்தனவாக, செம்மையான சிவஞானத்தை உணர்ந்த ஆளுடைய பிள்ளையார், `இச்செயல்தானும் இறைவரின் திருவருளாயின் நமக்கு இயைவதாகுக!\' என்று உள்ளத்தில் எண்ணி மேனியில் மயிர்க் கூச்சல் உண்டாக, நிலத்தில் வீழ்ந்து வணங்கினார்.


பெ. பு. பாடல் எண் : 394
அதுபொழுதே அணிமுத்தின் பந்தரினை அருள் சிறக்கக்
கதிர் ஒளிய மணிக்காம்பு பரிசனங்கள் கைக்கொண்டார்,
மதுரமொழி மறைத்தலைவர் மருங்கு இமையோர் பொழி வாசப்
புது மலரால் அப்பந்தர் பூம்பந்த ரும்போலும்.

         பொழிப்புரை : அதுபோழ்து உடன் வந்த ஏவலர் அழகிய முத்துப்பந்தரைத் திருவருள் சிறக்க ஒளிவீசும் அழகிய காம்புகளைக் கையில் பிடித்தனர். இனிய மொழியையுடைய தமிழ் மறைத் தலைவர் ஆன பிள்ளையாரின் அருகில், தேவர்கள் பொழிந்த மணமுடைய தெய்வப் பூக்களால், அம்முத்துப் பந்தர், பூம்பந்தர் போலவும் விளங்கியது.


பெ. பு. பாடல் எண் : 395
தொண்டர் குழாம் ஆர்ப்பு எடுப்ப, சுருதிகளின் பெருந்துழனி
எண்திசையும் நிறைந்து ஓங்க, எழுந்து அருளும் பிள்ளையார்,
வெண்தரளப் பந்தர் நிழல் மீது அணையத் திருமன்றில்
அண்டர்பிரான் எடுத்த திருவடி நீழல் எனஅமர்ந்தார்.

         பொழிப்புரை : தொண்டர் கூட்டமானது மகிழ்வொலி செய்யவும், மறைகளின் பேரொலி எண்திசைகளிலும் நிறைந்து எழவும் எழுந்தருளி வருகின்ற பிள்ளையார், வெண்மையான முத்துப்பந்தரின் நிழலானது தம் முடியின் மீது நிழற்றுவதால், பொன்னம்பலத்தில் கூத்தப்பிரானின் தூக்கிய திருவடி நீழலில் அமர்ந்திருத்தலைப் போல் அமர்ந்திருந்தார்.


பெ. பு. பாடல் எண் : 396
பாரின்மிசை அன்பருடன் வருகின்றார், பன்னகத்தின்
ஆரம் அணிந்தவர் தந்த அருட்கருணைத் திறம்போற்றி,
ஈரமனம் களி தழைப்ப எதிர்கொள்ள முகம் மலர்ந்து,
சேரவரும் தொண்டர்உடன் திருப்பட்டீச் சரம்அணைந்தார்.

         பொழிப்புரை : நிலத்தின் மீது தொண்டர்களுடன் வருகின்ற பிள்ளையார், பாம்புகளையே மாலையாகச் சூடிய இறைவர் அளித்த பெருங்கருணைத் திறத்தைப் போற்றிய வண்ணமே, அன்பு நிறைந்த உள்ளம் களிப்புக் கொள்ள எதிர்கொள்ளும் பொருட்டு முகமலர்ந்து வருகின்ற திருத்தொண்டர்களுடன் திருப்பட்டீச்சரத்தை அடைந்தனர்.


பெ. பு. பாடல் எண் : 397
சென்று அணைந்து, திருவாயில் புறத்து இறைஞ்சி, உள்புக்கு,
வென்றி விடையவர் கோயில் வலம்கொண்டு, வெண்கோட்டுப்
பன்றி கிளைத்து அறியாத பாத தாமரை கண்டு,
முன்தொழுது, விழுந்து,எழுந்து, மொழிமாலை போற்றி இசைத்தார்.

         பொழிப்புரை : சென்று சேர்ந்து வாயிலின் வெளியில் வணங்கி, உள்ளே புகுந்து, வெற்றி பொருந்திய ஆனேற்றை ஊர்தியாக உடைய சிவபெருமானின் திருக்கோயிலை வலம் வந்து, வெள்ளைக் கொம்புடைய பன்றி உருவெடுத்த திருமால் நிலத்தைத் தோண்டியும் காண இயலாத திருவடித் தாமரைகளைக் கண்டு, திருமுன்பு வணங்கி, நிலத்தில் வீழ்ந்து எழுந்து சொல்மாலை கொண்டு போற்றினார்.

         இறைவன் திருமுன்பு அருளிய பதிகம் `பாடல்மறை' (தி.3 ப.73) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணில் அமைந்த பதிகமாகும்.


பெ. பு. பாடல் எண் : 398
அருள் வெள்ளத் திறம் பரவி, அளப்பு அரிய ஆனந்தப்
பெருவெள்ளத்து இடைமூழ்கி, பேராத பெருங்காதல்
திருவுள்ளப் பரிவுடனே, செம்பொன்மலை வல்லியார்
தரு வள்ளத்து அமுது உண்ட சம்பந்தர் புறத்துஅணைந்தார்.

         பொழிப்புரை : திருக்கருணைப் பெருக்கின் திறத்தைப் போற்றி அதனால் அளவிடற்கரிய இன்ப வெள்ளத்தில் திளைத்து, மாறாத பெருங்காதல் கொண்ட உளம் பெருகிய அன்புடன், செம்பொன் மலையரசனின் மகளாரான உமையம்மையார், பொற்கிண்ணத்தில் தந்தருளிய ஞான அமுது உண்டருளிய பிள்ளையார் திருக்கோயில் புறத்தே அடைந்தார்.



3. 073    திருப்பட்டீச்சரம்                          பண் - சாதாரி
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பாடன்மறை, சூடல்மதி, பல்வளையொர்
         பாகம், மதில் மூன்றுஓர்கணையால்,
கூடஎரி ஊட்டி,எழில் காட்டி,நிழல்
         கூட்டுபொழில் சூழ்பழைசையுள்
மாடமழ பாடிஉறை பட்டிசர
         மேயகடி கட்டுஅரவினார்,
வேடநிலை கொண்டவரை வீடுநெறி
         காட்டிவினை வீடும்அவரே.

         பொழிப்புரை : சிவபெருமான் வேதங்களை அருளிச்செய்து வேதப் பொருளாயும் விளங்குபவர் . பிறைச்சந்திரனைச் சூடியவர் . பல வளையல்களையணிந்த உமாதேவியைத் தம் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டவர் . மதில்கள் மூன்றினையும் ஒரு கணையால் எரித்த வீர அழகைக் காட்டியவர் . நிழல்தரும் சோலைகள் சூழ்ந்த திருப்பழையாறையில் , மாடங்களையுடைய திருமழபாடி என்னும் நகரில் , திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார் . பாம்பைக் கச்சாகக் கட்டியவர் . வேடநிலைக்கேற்ப நல்லொழுக்கத்தில் நிற்கும் அடியவர்களின் வினைகளைப் போக்கி முத்திநெறி அருளவல்லவர் .


பாடல் எண் : 2
நீரின்மலி புன்சடையர், நீள்அரவு
         கச்சைஅது, நச்சுஇலையதுஓர்
கூரின்மலி சூலம்அது ஏந்தி, உடை
         கோவணமும் மானின்உரிதோல்,
காரின்மலி கொன்றைவிரி தார்கடவுள்
         காதல்செய்து மேயநகர்தான்,
பாரின்மலி சீர்பழைசை பட்டிசரம்
         ஏத்தவினை பற்றுஅழியுமே.

         பொழிப்புரை : சிவபெருமான் கங்கையைச் சடையில் தாங்கியவர் . நீண்ட பாம்பைக் கச்சாகக் கட்டியவர் . கூர்மையான இலைபோன்ற வடிவுடைய கொடிய சூலப்படையை ஏந்தியவர் . கோவண ஆடை அணிந்தவர் . மான் தோலையும் அணிந்தவர் . கார்காலத்தில் மலரும் கொன்றையை மாலையாக அணிந்தவர் . அத்தகைய கடவுள் விரும்பி வீற்றிருந்தருளும் தலமாவது பூமியில் மிக்க புகழையுடைய திருப்பழையாறை ஆகும் . அங்குள்ள திருப்பட்டீச்சரம் என்னும் கோயிலிலுள்ள இறைவனைப் போற்றி வணங்க நம் வினைகள் யாவும் அடியோடு அழியும் .


பாடல் எண் : 3
காலைமட வார்கள்புனல் ஆடுவது,
         கௌவைகடி யார்மறுகுஎலாம்,
மாலைமண நாறுபழை யாறைமழ
         பாடிஅழ காயமலிசீர்,
பாலைஅன நீறுபுனை மார்பன்,உறை
         பட்டிசர மேபரவுவார்,
மேலைஒரு மால்கடல்கள் போல்பெருகி,
         விண்உலகம் ஆளும்அவரே.

         பொழிப்புரை : பெண்கள் காலையில் நீர்நிலைகளில் நீராடுவதால் உண்டாகும் ஓசையை உடையதாய் , மாலையில் பூசை செய்வதால் வீதிகளிலெல்லாம் நறுமணம் கமழ்வதாய் உள்ள திருப்பழையாறை என்னும் தலத்தில் மழபாடி என்னும் பகுதியில் , தன் திருமேனி முழுவதும் மிக்க சிறப்புடைய பால்போன்ற திருவெண்ணீற்றைப் பூசிய மார்புடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலை வணங்குவார் இம்மையில் கடல்போல் செல்வம் பெருக , மறுமையில் விண்ணுலகை ஆள்வர் .


பாடல் எண் : 4
கண்ணின்மிசை நண்ணிஇழி விப்பமுகம்
         ஏத்துகமழ் செஞ்சடையினான்,
பண்ணின்மிசை நின்றுபல பாணிபட
         ஆடவல பால்மதியினான்,
மண்ணின்மிசை நேரின்மழ பாடிமலி
         பட்டிசர மேமருவுவார்,
விண்ணின்மிசை வாழும்இமை யோரொடுஉடன்
         ஆதல்அது மேவல்எளிதே.

         பொழிப்புரை : சிவபெருமானின் கண்களை உமாதேவி பொத்த , அதனால் அரும்பிய வியர்வையைக் கங்கையாகச் செஞ்சடையில் தாங்கியவன் . அப்பெருமான் பண்ணிசைகளோடு பாடல்களைப் பாடவும் , ஆடவும் வல்லவன் . பால் போன்ற வெண்ணிறச் சந்திரனைச் சூடியவன் . அப்பெருமான் மண்ணுலகில் ஒப்பற்ற பெருமையுடைய திருமழபாடி என்னும் தலத்தில் திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் . அவனைப் போற்றி வணங்குபவர்களுக்கு விண்ணுலகிலுள்ள தேவர்களுடன் வாழ்வது எளிதாகும் .


பாடல் எண் : 5
மருவமுழவு அதிர,மழ பாடிமலி
         மத்தவிழவு ஆர்க்க,வரையார்
பருவமழை பண்கவர்செய் பட்டிசர
         மேயபடர் புன்சடையினான்,
வெருவமத யானைஉரி போர்த்து,உமையை
         அஞ்சவரு வெள்விடையினான்,
உருவம்எரி கழல்கள்தொழ, உள்ளம்உடை
         யாரைஅடை யாவினைகளே.

         பொழிப்புரை : முழவு முதலிய வாத்தியங்கள் அதிர்ந்து ஒலிக்க , திருமழபாடி என்னும் திருத்தலம் கோயில் உற்சவங்களாலும் , விழாக் களியாட்டங்களாலும் ஓசை மிகுந்து விளங்குகின்றது . மலை உள்ளதால் பருவகாலத்தில் மழை பொழிய , வளம் மிகுந்து , கண்டவர் மனத்தைக் கவர்கின்ற திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் படர்ந்த செஞ்சடையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமான் அஞ்சத்தக்க மதயானையின் தோலை உமாதேவி அஞ்சுமாறு உரித்துப் போர்த்துக் கொண்டவன் . வெண்ணிற இடபத்தை வாகனமாகக் கொண்டவன் . நெருப்புப்போன்ற சிவந்த திருமேனியுடைய அச்சிவபெருமானின் திருவடிகளை உள்ளம் ஒன்றித் தொழுபவர்களை வினையால் வரும் துன்பம் சாராது .


பாடல் எண் : 6
மறையின்ஒலி கீதமொடு பாடுவன,
         பூதம்அடி மருவிவிரவார்
பறையின்ஒலி பெருக,நிகழ் நட்டம்அமர்
         பட்டிசர மேயபனிகூர்
பிறையினொடு மருவியதொர் சடையின்இடை
         ஏற்றபுனல் தோற்றநிலையாம்
இறைவன்அடி, முறைமுறையின் ஏத்தும்அவர்
         தீத்தொழில்கள் இல்லர்மிகவே.

         பொழிப்புரை : வேதங்கள் ஓதும் ஒலியும் , கீதங்கள் பாடும் ஒலியும் , பூதகணங்கள் திருவடிக்கீழ் அமர்ந்து போற்றும் ஒலியும் கலந்து ஒலிக்க , பறை என்னும் வாத்திய ஓசையும் பெருகத் திருநடனம் புரியும் சிவபெருமான் திருப்பட்டீச்சரம் என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் . குளிர்ச்சி பொருந்திய சந்திரனை அணிந்த சடையிலே கங்கையையும் தாங்கிய நிலையான தோற்றப் பொலிவு உடையவன் . அத்தகைய இறைவனின் திருவடிகளை நாடொறும் முறைமையோடு போற்றி வணங்குபவர்கள் துன்புறும் வினைகளிலிருந்து முற்றிலும் நீங்கியவராவர் .


பாடல் எண் : 7
பிறவிபிணி மூப்பினொடு நீங்கி,இமை
         யோர்உலகு பேணல்உறுவார்,
துறவிஎனும் உள்ளம்உடை யார்கள்,கொடி
         வீதிஅழ காயதொகுசீர்
இறைவன்உறை பட்டிசரம் ஏத்தி எழு
         வார்கள்,வினை ஏதும் இலவாய்,
நறவவிரை யாலும் மொழி யாலும்வழி
         பாடுமற வாதஅவரே.

         பொழிப்புரை : பிறவியாகிய நோயும் , மூப்பும் நீங்கித் தேவலோகத்தில் உள்ளவர்களால் பாராட்டப்படுகின்றவர்களும் , உலகப் பற்றைத் துறந்த உள்ளமுடைய ஞானிகளும் வாழ்கின்ற , கொடி அசைகின்ற வீதிகளையுடைய திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் அழகிய சிறப்புடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . அக்கோயிலைப் போற்றி வணங்குபவர்கள் வினை சிறிதும் இல்லாதவராகி , தேன் ஒழுகுகின்ற நறுமணம் கமழும் மலர்களாலும் , தோத்திரங்களாலும் சிவனை வழிபட மறவாதவர்களாவர் . அவர்கள் சிவகணங்களோடு உறைவர் என்பது குறிப்பு .


பாடல் எண் : 8
நேசமிகு தோள்வலவன் ஆகிஇறை
         வன்மலையை நீக்கிஇடலும்,
நீசன்விறல் வாட்டி,வரை உற்றதுஉண
         ராதநிரம் பாமதியினான்,
ஈசன்உறை பட்டிசரம் ஏத்தி எழு
         வார்கள்,வினை ஏதும்இலவாய்
நாசம்அற வேண்டுதலின், நண்ணல்எளி
         தாம் அமரர் விண்உலகமே.

         பொழிப்புரை : திக்குவிசயம் செய்வதில் விருப்பம் கொண்டுவரும் இராவணன் தன் புய வலிமையினால் சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க , இழிபண்புடைய இராவணனின் வலிமையை வாட்டியவராய் , தன்னுடைய எல்லையும் , தன்னுடைய நிலைமையும் பிறரால் அறியப்படாது , பிறைச்சந்திரனை அணிந்த அச்சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலைத் தொழுது வணங்குவார்களின் வினை முழுவதும் நீங்க , இனிப் பிறந்திறத்தலும் நீங்க அவர்கள் சிவஞானம் பெறுதலால் விண்ணுலகத்தை எளிதில் அடைவர் .


பாடல் எண் : 9
தூயமல ரானும்நெடி யானும் அறியார் அவன                     
       தோற்ற நிலையின்,
ஏயவகை ஆனதனை யார்அதுஅறி வார்,அணிகொள்       
        மார்பின்அகலம்
பாயநல நீறுஅதுஅணி வான்,உமைத
         னோடும் உறை பட்டிசரமே
மேயவனது ஈர்அடியும் ஏத்த,எளிது
         ஆகும்நல மேல்உலகமே.

         பொழிப்புரை : தூய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் , திருமாலும் சிவபெருமானுடைய தோற்றத்தையும் , பலவகையான நிலைகளையும் அறியாதவர்களாயின் வேறுயார்தான் அவற்றை அறிவர் ? அழகிய அகன்ற மார்பு முழுவதும் திருநீற்றினை அணிந்து உமாதேவியோடு இறைவன் வீற்றிருந்தருளுகின்ற திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலை அடைந்து அவன் இரு திருவடிகளைப் போற்றி வணங்கச் சிவஞானம் பெறுதலும் , அதன் பயனால் முக்தியுலகை அடைதலும் எளிதாகும் .


பாடல் எண் : 10
தடுக்கினை இடுக்கிமட வார்கள்இடு
         பிண்டம்அது உண்டுஉழல்தரும்,
கடுப்பொடி உடல்கவசர் கத்துமொழி
         காதல்செய்தி டாது,கமழ்சேர்
மடைக்கயல் வயல்கொள் மழ பாடிநகர்
         நீடுபழை யாறைஅதனுள்
படைக்கொரு கரத்தன்மிகு பட்டிசரம்
         ஏத்த,வினை பற்றுஅறுதலே.

         பொழிப்புரை : தடுக்கையேந்திப் பெண்கள் இடுகின்ற உணவை உண்டு , சுற்றித் திரிகின்றவர்களும் , கடுக்காய்ப் பொடியைத் தின்பவர்களுமான சமணர்களும் , உடம்பைப் போர்த்திக் கொள்கின்ற பௌத்தர்களும் கூறும் அன்பற்ற மொழிகளை ஏற்க வேண்டா . மடைகளில் கயல்மீன்கள் பாய வளப்பம் மிகுந்த வயல்களையுடைய நெடிய திருப்பழையாறையின் , திருமழபாடி என்னும் நகர்ப் பகுதியில் , திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் மழுப்படையைக் கையிலேந்தி வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி வணங்க வினையாவும் முற்றிலும் நீங்கும் .


பாடல் எண் : 11
மந்தம்மலி சோலைமழ பாடிநகர்
         நீடுபழை யாறை அதனுள்,
பந்தம் உயர் வீடுநல பட்டிசர
         மேயபடர் புன்சடையனை,
அந்தண்மறை யோர்இனிது வாழ்புகலி
         ஞானசம் பந்தன்,அணிஆர்
செந்தமிழ்கள் கொண்டுஇனிது செப்பவல
         தொண்டர்வினை நிற்பதுஇலவே.

         பொழிப்புரை : தென்றல் உலாவும் சோலைகளையுடைய திருமழபாடி என்னும் நகர்ப் பகுதியைத் தன்னுள் கொண்ட நெடிய பழையாறை என்னும் திருத்தலத்தில் , தன்னையடைந்தவர்கட்குப் பந்தமும் , வீடும் அருளவல்ல நல்ல திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் படர்ந்த சிறுசடைகளை உடைய சிவபெருமான். அப்பெருமானைப் போற்றி எவ்வுயிர்களிடத்தும் இரக்கமுள்ள மறையோர்கள் இனிது வாழ்கின்ற திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் அழகிய செந்தமிழில் அருளிய இப்பதிகத்தைக் கேட்டற்கும் , உணர்தற்கும் இனிதாகச் சொல்லவல்ல தொண்டர்களின் வினைகள் நீங்கும் .

                                             திருச்சிற்றம்பலம்


12ந துறந்தார் பெரு்மை

“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும் ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம் தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா ...