திரு நல்லம்




திரு நல்லம்
(கோனேரிராஜபுரம்)

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

     மக்கள் வழக்கில் "கோனேரிராஜபுரம்" என்று வழங்கப்படுகின்றது.

         கும்பகோணத்தில் இருந்து வடமட்டம் அல்லது ஆடுதுறையிலிருந்து வடமட்டம் செல்லும் நகரப் பேருந்தில் சென்று கோனேரிராஜபுரம் கூட்டுச் சாலையில் இறங்கி 1 கி.மீ. சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம்.

     கும்பகோணம் - காரைக்கால் பாதையில் எஸ். புதூர் என்னும் ஊரை அடைந்து அங்கிருந்தும் அருகிலுள்ள கோனேரிராஜபுரத்தை அடையலாம். அருகில் உள்ள பெரிய ஊர் கும்பகோணம்.

இறைவர்                : உமாமகேசுவரர், பூமீசுவரர், பூமிநாதர்.

இறைவியார்           : தேகசௌந்தரி, அங்கவளநாயகி.

தல மரம்                : அரசு

தீர்த்தம்               : பிரம தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்    : 1. சம்பந்தர் - கல்லால் நிழல்மேய.
                                               2. அப்பர் - கொல்லத்தான் நமனார்தமர்.


         இக்கோயிலை கற்றளிக் கோயில் ஆக்கிய பெருமைக்கு உரியவர் கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி ஆவார்.

     கோயிலின் வெளியே சக்தி தீர்த்தம் அமைந்திருக்கிறது. கோயில் முகப்பு வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் எதிரே நீண்ட முன்மண்டபமும், மண்டபத்தின் உள்ளே கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தியெம் பெருமான் உள்ளனர். மண்டபத்தின் மேற்பாகத்தின் உட்புற முழுவதும் அறுபத்துமூவர், சிவமூர்த்தம், பன்னிரண்டு ராசிகள், மகரிஷிகள் முதலிய உருவங்கள் அனைத்தும் வண்ண ஓவியங்களாக எழுதப்பட்டுள்ளன.

     மூலவர் உமாமகேசுவரர் சந்நிதி மேற்குப் பார்த்தும், அம்பாள் அங்கவளநாயகியின் சந்நிதி கிழக்குப் பார்த்தும் அமைந்துள்ளன. மூலவர் கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், ஜ்வரஹரர், லிங்கோத்பவர், கங்காதரர், அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

         வெளிப் பிரகாரத்தில் சண்முகர் சந்நிதி உள்ளது. பிரகாரத்தில் இடதுபுறம் உள்ள வழியாகச் சென்றால் தனிக் கோயிலில் அம்பாள் சந்நிதியை அடையலாம். அடுத்துள்ளது வைத்தியநாதர் சந்நிதி. புரூரவ மன்னனின் குட்டநோயைத் தீர்த்த பெருமான் இவரே. இச்சந்நிதியில் ஜபம் செய்தால் பலமடங்கு பயனுண்டு எனப்படுகிறது.

     அடுத்துள்ளவை யாகசாலை மண்டபம், மகாகணபதி சந்நிதிகள். பிரகார வலம் முடிந்து அடுதுள்ள வாயில் கடந்து உள்மண்டபம் சென்றால் இடதுபுறம் பிரம்மலிங்கம், சுப்பிரமணியர், மகாலட்சுமி, நடராசசபை, உற்சவத் திருமேனிகள் பாதுகாப்பறை, நால்வர், விநாயகர்கள், அகத்திய லிங்கம், நவக்கிரகங்கள் முதலியவை உள்ளன. சனிபகவான் உருவமும், அருகில் பைரவர், இராகு துர்க்கை, அக்னி ஆகியோர் உருவச்சிலைகளும் உள்ளன. தொழுது வாயிலைக் கடந்தால் முலவர் தரிசனம் கிடைக்கும். சதுர ஆவுடையார் மீது உயர்ந்த பாணத்துடன் உமாமகேசுவரர் இலிங்க உருவில் காட்சி தருகிறார். கருவறை கோஷ்டத்தில் பின்புறம் கிழக்கு நோக்கி காணப்படும் லிங்கோத்பவர், அவரின் இரு பக்கமும் பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் இருப்பது பார்த்து ரசிக்கத் தக்கது.

         இக்கோயிலில் உள்ள மூலவர் உமாமகேசுவரர் மற்றும் அங்கவள நாயகியின் சந்நிதியைத் தவிர இக்கோயிலில் உள்ள கல்யாணசுந்தரர் கல்யாண கோலத்துடனும், ஸ்ரீமகாவிஷ்ணு பார்வதியை தாரை வார்த்துக் கொடுக்கும் காட்சியுடனும் எருந்தருளியுள்ளார்.

     இத்தலத்தில் நடராஜர் திருஉருவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இவர் சுயம்புவாக இத்தலத்தில் காட்சி தருகிறார். இந்த செப்புச் சிலை நடராஜர் சுமார் 9 அடி உயரம் உள்ளவர். நடராஜருக்கு ஏற்ற உயரத்தில் சிவகாமி அம்மைக்கும் செப்புச் சிலை உள்ளது. உற்சவ காலங்களில் தெரு உலா வருவதற்காக ஒரு சிறிய நடராஜர் செப்புச் சிலையும் இருக்கிறது. பெரிய நடராஜர் செப்புச் சிலை உருவம் மிகவும் கலை அழகுடன் காட்சி அளிக்கிறது. அவர் உடம்பில் மருவு, ரேகை, தழும்பு போன்றவைகளைக் காண்பது ஒரு அதிசயம். பூமாதேவி இத்தலத்து இறைவனை வழிபட்டிருக்கிறாள்.

          ஜாதகத்தில் திருமண தோஷம், புத்திர தோஷம் உள்ளவர்கள் இக்கோவிலில் உள்ள கல்யாண சுந்தரரையும், நடராஜரையும் வழிபட்டால் அந்த தோஷங்கள் நீங்கும் என்றும், இங்குள்ள வைத்தீசுவர சுவாமியை வழிபடும் பக்தர்களுக்கு பலவகையான நோய்களிலில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகின்றது.

     வள்ளல் பெருமான் தாம் பாடிஅருளியவிண்ணப்பக் கலிவெண்பாவில், "பாடச் சீர் வல்ல தமிழ்ப்புலவர் மன்னி வணங்கு திரு நல்லம் மகிழ் இன்ப நவ வடிவே" என்று போற்றி உள்ளார்.

         காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 433
வைகல் நீடுமா டக்கோயில் மன்னிய மருந்தைக்
கைகள் அஞ்சலி கொண்டுதாழ்ந்து எழுந்து,கண் அருவி
செய்ய, இன்னிசைச் செந்தமிழ் மாலைகள் மொழிந்து,
நையும் உள்ளத்தராய்த் திரு நல்லத்தில் நண்ணி.

         பொழிப்புரை : வைகலில் நீண்ட மாடக்கோயிலில் பொருந்திய பெருமருந்தான இறைவரைத் தம் கைகள் கூப்பி, விழுந்து வணங்கி, எழுந்து, கண்களினின்றும் நீர் அருவியாய்ச் சொரிய, இனிய இசையை உடைய செந்தமிழ் மாலைகளால் போற்றி, உருகி இளகும் மனத்தை உடையவராகித் `திருநல்லம்\' என்ற பதியை அடைந்து,


பெ. பு. பாடல் எண் : 434
நிலவு மாளிகைத் திருநல்லம் நீடுமா மணியை
இலகு சேவடி இறைஞ்சி, இன் தமிழ்கொடு துதித்து,
பலவும் ஈசர்தம் திருப்பதி பணிந்துசெல் பவர்தாம்,
அலைபு னல்திரு அழுந்தூர்மா டக்கோயில் அடைந்தார்.

         பொழிப்புரை : நிலைபெற்ற மாளிகைகளைக் கொண்ட திருநல்லத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவரின் விளங்கும் திருவடிகளை வணங்கி, இனிய தமிழ் மாலை பாடி, அருகிலுள்ள திருப்பதிகள் பலவற்றையும் வணங்கிச் செல்லும் பிள்ளையார், அலைகளை உடைய நீர் சூழ்ந்த திருஅழுந்தூர் மாடக்கோயிலைச் சென்றடைந்தார்.

         திருநல்லத்தில் அருளிய பதிகம் `கல்லானிழல்' (தி.1 ப.85) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

திருஞானசம்பந்தர் திருப்பதிகம்


1.085     திருநல்லம்                     பண் - குறிஞ்சி                           திருச்சிற்றம்பலம்         
பாடல் எண் : 1
கல்ஆல் நிழல்மேய கறைசேர் கண்டா,என்று
எல்லா மொழியாலும் இமையோர் தொழுதுஏத்த
வில்லால் அரண்மூன்றும் வெந்து விழஎய்த
நல்லான் நமைஆள்வான் நல்லம் நகரானே.

         பொழிப்புரை :இமையவர்கள் கல்லால மரநிழலில் எழுந்தருளிய கறை பொருந்திய கண்டத்தை உடையவனே என்று தமக்குத் தெரிந்த அனைத்து மொழிகளாலும் தோத்திரம் செய்து தொழுது ஏத்த, மேரு வில்லால் அசுரர்தம் மூன்று அரண்களும் வெந்து விழுமாறு செய்தருளிய பெரியவனாகிய சிவபிரான் நம்மையாட்கொள்ளுதற் பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.


பாடல் எண் : 2
தக்கன் பெருவேள்வி தன்னில் அமரரைத்
துக்கம் பலசெய்து, சுடர்பொற் சடைதாழக்
கொக்கின் இறகோடு குளிர்வெண் பிறைசூடும்
நக்கன் நமைஆள்வான் நல்லம் நகரானே.

         பொழிப்புரை :தன்னை இகழ்ந்து தக்கன் செய்த பெரிய வேள்விக்குச் சென்ற அமரர்களை, அவ்வேள்விக் களத்திலேயே பலவகையான துக்கங்களை அடையச் செய்தவனும், ஒளிவிடும் பொன்போன்ற சடைகள் தாழ்ந்து தொங்கக் கொக்கின் இறகோடு குளிர்ந்த வெண்மையான பிறையைச் சூடியிருப்பவனும் திகம்பரனுமாய இறைவன் நம்மை ஆளுதற்பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.


பாடல் எண் : 3
அந்தி மதியோடும் அரவச் சடைதாழ,
முந்தி அனல்ஏந்தி, முதுகாட்டு எரிஆடி,
சிந்தித்து எழவல்லார் தீரா வினைதீர்க்கும்
நந்தி, நமைஆள்வான் நல்லம் நகரானே.

         பொழிப்புரை :மாலைக் காலத்தில் தோன்றும் பிறை மதியோடு பாம்பையும் அணிந்த சடைமுடி தாழ்ந்து தொங்க, முற்பட்ட ஊழிக்காலத்தில் கையில் அனலேந்திப் பழமையான சுடுகாட்டகத்தே எரியில் நின்றாடித் தன்னைச் சிந்தித்தே எச்செயலையும் தொடங்கும் அன்பர்களின் தீராதவினைகள் எல்லாவற்றையும் தீர்த்தருளும் நந்தியாகிய சிவபெருமான், நம்மை ஆட்கொண்டருளுதற் பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.


பாடல் எண் : 4
குளிரும் மதிசூடிக் கொன்றைச் சடைதாழ,
மிளிரும் அரவோடு வெண்நூல் திகழ்மார்பில்
தளிரும் திருமேனித் தையல் பாகமாய்
நளிரும் வயல்சூழ்ந்த நல்லம் நகரானே.

         பொழிப்புரை :குளிர்ந்த பிறை மதியைச் சூடி, கொன்றை மலர் களை அணிந்துள்ள சடைகள் தாழ்ந்து தொங்க, விளங்கும் பாம்போடு பூணநூல் திகழும் மார்பினனாய்த் தளிர் போன்ற திருமேனியை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்ட சிவபிரான் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.


பாடல் எண் : 5
மணிஆர் திகழ்கண்டம் உடையான், மலர்மல்கு
பிணிவார் சடைஎந்தை பெருமான் கழல்பேணித்
துணிவார் மலர்கொண்டு தொண்டர் தொழுதுஏத்த
நணியான் நமைஆள்வான் நல்லம் நகரானே.

         பொழிப்புரை :நீலமணி போன்ற விளங்கிய கண்டத்தினை உடைய வனும், மலர்கள் நிறைந்த வளைத்துக் கட்டப்பட்ட நீண்ட சடைமுடியினனும், எமக்குத் தந்தையானவனும் ஆகிய பெருமான் மனத் துணிவோடு மலர் கொண்டு தன் திருவடிகளை விரும்பித் தொழுதேத்தவும் நம்மை ஆட்கொண்டருளவும் நண்ணிய நிலையினனாய் நல்லம் நகரில் எழுந்தருளியுள்ளான்.


பாடல் எண் : 6
வாசம் மலர்மல்கு மலையான் மகளோடும்
பூசும் சுடுநீறு புனைந்தான், விரிகொன்றை
ஈசன் எனஉள்கி எழுவார் வினைகட்கு
நாசன் நமைஆள்வான் நல்லம் நகரானே.

         பொழிப்புரை :மணம் கமழ்கின்ற மலர்களைச் சூடிய மலையரையன் மகளாகிய பார்வதிதேவியோடும், பூசத்தக்கதாய்ச் சுட்டெடுத்த திருநீறு அணிந்தவனாய், இதழ் விரிந்த கொன்றை மாலையைப் புனைந்தவனாய், ஈசன் எனத் தன்னை நினைந்தேத்துபவர்களின் வினைகளைப் பொடிசெய்பவனாய், விளங்கும் இறைவன், நம்மை ஆட்கொண்டருள நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.


பாடல் எண் : 7
அங்கோல் வளைமங்கை காண அனல்ஏந்திக்
கொங்குஆர் நறுங்கொன்றை சூடி, குழகுஆக
வெங்காடு இடமாக வெந்தீ விளையாடும்
நம்கோன் நமைஆள்வான் நல்லம் நகரானே.

         பொழிப்புரை :அழகிய திரண்ட வளையல்களை அணிந்த உமை யம்மை காணக் கையில் அனல் ஏந்தி, தேன் நிறைந்த மணமுடைய கொன்றை மலர்மாலை சூடி, இளமைக் கோலத்தில் சுடுகாட்டை அரங்காகக் கொண்டு எரியாடும் நம் தலைவனாகிய சிவபிரான், நம்மை ஆட்கொள்ளுதற் பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.


பாடல் எண் : 8
பெண்ஆர் திருமேனிப் பெருமான், பிறைமல்கு
கண்ஆர் நுதலினான், கயிலை கருத்தினால்
எண்ணாது எடுத்தானை இறையே விரல்ஊன்றி,
நண்ணார் புரம்எய்தான் நல்லம் நகரானே.

         பொழிப்புரை :உமையம்மையைத் திருமேனியின் ஒரு கூற்றிலே கொண்டுள்ள பெருமானும், பிறை மதியை முடியில் சூடிக் கண்பொருந்திய நுதலினனாய் விளங்குவோனும், இறைவனது வரம் பிலாற்றலை மனத்தால் எண்ணாது கயிலை மலையை எடுத்த இரா வணனைச் சிறிதே விரலூன்றி அடர்த்தவனும், பகைவர்தம் முப்புரங்களை எய்தழித்தவனுமாகிய சிவபிரான், நம்மை ஆட்கொண்டருள, நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.


பாடல் எண் : 9
நாகத்து அணையானும் நளிர்மா மலரானும்
போகத்து இயல்பினார் பொலிய, அழகுஆகும்
ஆகத் தவளோடும் அமர்ந்துஅங்கு அழகுஆரும்
நாகம் அரையார்த்தான் நல்லம் நகரானே.

         பொழிப்புரை :பாம்பணையில் துயிலும் திருமாலும், தண்ணிய, தாமரை மலர்மேல் எழுந்தருளியுள்ள நான்முகனும், திருமகள் கலைமகளிரோடு போகம் பொருந்திவாழ, தானும் மலைமகளோடு கூடிப் போகியாய் இருந்து அருள் செய்த, அழகு பொருந்திய பாம்பை இடையில் அரைநாணாகக் கட்டிக் கொண்டிருப்பவன் ஆகிய சிவ பிரான், நம்மை ஆள நல்லம் என்னும் நகரிடை எழுந்தருளியுள்ளான்.


பாடல் எண் : 10
குறியில் சமணோடு குண்டர் வண்தேரர்
அறிவுஇல் ஊரைகேட்டுஅங்கு அவமே கழியாதே,
பொறிகொள் அரவுஆர்த்தான், பொல்லா வினைதீர்க்கும்
நறைகொள் பொழில்சூழ்ந்த நல்லம் நகரானே.

         பொழிப்புரை :குறிக்கோள் இல்லாத சமணர்களும் புத்தரும் கூறும் அறிவற்ற சொற்களைக் கேட்டு நாள்களைப் பயனற்றனவாய்ப்போக்காதீர், புள்ளிகளோடு கூடிய பாம்பினை இடையிற்கட்டிய பரமன், நம் பொல்லா வினைகளைத் தீர்க்கும் நிலையில் தேன் நிறைந்த பொழில்கள் சூழ்ந்த நல்லம் என்னும் நகரிடை எழுந்தருளியுள்ளான்.


பாடல் எண் : 11
நலமார் மறையோர்வாழ் நல்லம் நகர்மேய
கொலைசேர் மழுவானைக் கொச்சை அமர்ந்துஓங்கு
தலம்ஆர் தமிழ்ஞான சம்பந் தன்சொன்ன
கலைகள் இவைவல்லார் கவலை கழிவாரே.

         பொழிப்புரை :நன்மைகள் நிறைந்த வேதங்களை ஓதும் அந்த ணர்கள் வாழும் நல்லம் நகரில் எழுந்தருளிய, கொல்லும் தொழில் வல்ல மழுவைக் கையில் ஏந்திய சிவபிரானை, கொச்சை வயம் என்னும் புகழுடைய தலத்தில் வாழ்ந்த தமிழ் ஞானசம்பந்தன், போற்றிப் பாடிய கலைநலம் வாய்ந்த இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர், கவலைகள் நீங்கப் பெறுவர்.

                                             திருச்சிற்றம்பலம்

     
திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 293
பூவில் பொலியும் புனல் பொன்னிக்
         கரைபோய்ப் பணிவார், பொற்பு அமைந்த
ஆவுக்கு அருளும் ஆவடுதண்
         துறையார் பாதம் அணைந்து இறைஞ்சி,
நாவுக் கரசர் ஞானபோ
         னகர்க்குச் செம்பொன் ஆயிரமும்
பாவுக்கு அளித்த திறம் போற்றிப்
         போந்து, பிறவும் பணிகின்றார்.

         பொழிப்புரை : இவ்வுலகத்தில் விளங்கும், நீரையுடைய காவிரியாற்றின் கரை வழியாய்ச் சென்று, பல பதிகளையும் வணங்கியவாறே செல்பவரான நாவுக்கரசர், பசு வடிவத்துடன் பூசித்த உமையம்மையாருக்கு அருள் செய்த திருவாவடுதுறை இறைவரின் திருவடிகளைச் சேர்ந்து வணங்கி, ஞான அமுதுண்ட காழிப்பெருமானுக்கு அவரது பாடலுக்காக அங்கே இறைவர் ஆயிரம் பொற்காசுகளை வழங்கியருளிய திறத்தை வைத்துப் போற்றி, அங்கிருந்து புறப்பட்டுப் பிற பதிகளையும் வணங்கிச் செல்லலானார்.

         திருவாவடுதுறையில் அருளிய பதிகம், `மாயிரு ஞாலம் எல்லாம்` எனத் தொடங்கும் திருநேரிசைப் பதிகமாகும். இப்பாடலில், ``காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல வூரர்க் கம்பொன் ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடு துறைய னாரே.`` (தி.4 ப.56 பா.1) என வருவதை நினைவு கூர்ந்தே ஆசிரியர் சேக்கிழார், `ஞானபோனகர்க்குச் சொம்பொன் ஆயிரமும் பாவுக்களித்த திறம் போற்றி` என்று அருளுகின்றார்.

பிற பதிகளாவன:

1.    திருக்கோழம்பம்: `வேழம் பத்தைவர்` (தி.5 ப.64) – திருக்குறுந்தொகை.

2.     திருநல்லம்: `கொல்லத் தான்` (தி.5 ப.43) - திருக்குறுந்தொகை.



திருநாவுக்கரசர் திருப்பதிகம்

5. 043    திருநல்லம்                   திருக்குறுந்தொகை
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
கொல்லத் தான்நம னார்தமர் வந்தக்கால்
இல்லத் தார்செய்யல் ஆவது என்ஏழைகாள்,
நல்லத் தான்நமை ஆள்உடை யான்கழல்
சொல்லத் தான்வல்லி ரேல்துயர் தீருமே.

         பொழிப்புரை : அறிவற்றவர்களே ! நமன் தமராகிய எமதூதர் கொல்லவந்தபோது இல்லத்தில் உள்ளவர்கள் செய்யலாவது யாது ? திருநல்லத்தில் எழுந்தருளியிருப்பவனும் , நம்மை ஆளுடையவனும் ஆகிய பெருமான் கழல் சொல்ல வல்லமை உடையீரேல் , உம் துயர்கள் தீரும் .


பாடல் எண் : 2
பொக்கம் பேசிப் பொழுது கழியாதே
துக்கம் தீர்வகை சொல்லுவன் கேண்மினோ,
தக்கன் வேள்வி தகர்த்த தழல்வண்ணன்
நக்கன் சேர்நல்லம் நண்ணுதல் நன்மையே.

         பொழிப்புரை : பொய்ம்மொழிகளைப் பேசிப் பொழுது கழியாமல் துயரங்கள் தீர்தற்கு ஓர் உபாயம் சொல்லுவேன் ; கேட்பீராக ; தக்கன் வேள்வியைத் தகர்த்த தீவண்ணனாகிய திகம்பரன் உறைகின்ற திருநல்லம் நண்ணி வழிபடுதலே உமக்கு நன்மை .


பாடல் எண் : 3
பிணிகொள் வார்குழல் பேதையர் காதலால்
பணிகள் மேவிப் பயனில்லை பாவிகாள்,
அணுக வேண்டில் அரன்நெறி யாவது
நணுக நாதன் நகர்திரு நல்லமே.

         பொழிப்புரை : பாவம் செய்தவர்களே ! மலர் முதலியன விட்டுப் பிணித்தலைக்கொண்ட நீண்ட கூந்தலை உடைய பெண்களிடத்து வைத்த காதலால் , அவர்கட்கு ஆளாகிப் பணிகளைப் பொருந்திச் செய்து பயன் இல்லையாதலால் , நெருங்கிப் பணி செய்ய வேண்டில் அரன் நெறியே அணுகி திருநல்லம் சென்று வழிபடுவீர்களாக .


பாடல் எண் : 4
தமக்கு நல்லது தம்உயிர் போயினால்,
இமைக்கும் போதும் இராதுஇக் குரம்பைதான்,
உமைக்கு நல்லவன் தானுறை யும்பதி
நமக்கு நல்லது நல்லம் அடைவதே.

         பொழிப்புரை : தம்முயிர் தம்மைவிட்டு நீங்கினால் தமக்கு நல்லது ; அங்ஙனமே இவ்வுடலாகிய குடிசை இமைப்பொழுது கூட நில்லா இயல்புடையது ; உமாதேவிக்கு நல்லவனாகிய இறைவன் உறைகின்ற பதியாகிய திருநல்லம் என்னுந் தலத்தை அடைந்து வழிபடுவதே நமக்கு நல்லது ஆகும் .


பாடல் எண் : 5
உரை தளர்ந்துஉட லார்நடுங் காமுனம்
நரைவி டைஉடை யான்இடம் நல்லமே
பரவு மின்,பணி மின்,ணி வாரொடே
விரவு மின்,விர வாரை விடுமினே.

         பொழிப்புரை : வார்த்தைகள் தளர்ந்து உடல் நடுங்குவதற்கு முன்பே , நரை உடைய இடபவாகனத்தை உடைய இறைவன் வீற்றிருக்கும் இடமாகிய திருநல்லத்திற்சென்று பரவிப் பணிவீர்களாக ; பணிகின்ற அன்பர்களோடு கலந்து வழிபடுவீராக; அங்ஙனம் கலவாதவர்களை நீங்குவீர்களாக .


பாடல் எண் : 6
அல்ல லாகஐம் பூதங்கள் ஆட்டினும்
வல்ல வாறு, சிவாய நமஎன்று,
நல்லம் மேவிய நாதன் அடிதொழ
வெல்ல வந்த வினைப்பகை வீடுமே.

         பொழிப்புரை : ஐம்பெரும் பூதங்கள் துன்பங்கள் உண்டாக ஆட்டினாலும் , திருநல்லத்தில் எழுந்தருளியுள்ள நாதன் திருவடிகளை வல்லவாறு ` சிவாயநம ` என்று தொழுதால் வெல்லுதற்கு வந்த வினைகளாகிய பகை கெடும் .


பாடல் எண் : 7
மாத ராரொடு மக்களும் சுற்றமும்
பேதம் ஆகிப் பிரிவதன் முன்னமே,
நாதன் மேவிய நல்லம் நகர்தொழப்
போது மின்,எழு மின்,புகல் ஆகுமே.

         பொழிப்புரை : மனைவியரும் , மக்களும் , சுற்றத்தாரும் வேற்றுமைப்பட்டுப் பிரிகின்ற இறுதிக்காலம் வருவதற்குமுன்பே; தலைவன் மேவியுள்ள திருநல்லமாகிய நகரைத் தொழப் போதுவீர்களாக ; எழுவீர்களாக ; அப்பெருமானே புகலாவான் .


பாடல் எண் : 8
வெம்மை ஆன வினைக்கடல் நீங்கிநீர்
செம்மை ஆய சிவகதி சேரலாம்,
சும்மை ஆர்மலர் தூவித் தொழுமினோ
நம்மை ஆள்உடை யான்இடம் நல்லமே.

         பொழிப்புரை : வண்டுகளின் ஒலி பொருந்திய மலர்களைத் தூவி , நம்மை ஆளுடையானாகிய பெருமான் உறையும் திருநல்லத்தினைத் தொழுவீர்களாக ; தொழுதால் . வெப்பம் பொருந்திய வினைக்கடலினின்றும் நீங்கி நீர் செம்மையாகிய சிவகதியினைச் சேரலாம் .


பாடல் எண் : 9
காலம் ஆன கழிவதன் முன்னமே
ஏலும் ஆறு வணங்கிநின்று ஏத்துமின்,
மாலும் மாமல ரானொடு மாமறை
நாலும் வல்லவர் கோன்இடம் நல்லமே.

         பொழிப்புரை : திருமாலும் , பிரமனும் , பெருமைமிக்க வேதங்கள் நான்கும் வல்லவர்களாகிய முனிவர்களும் ஆகிய அனைவர்க்கும் கோனாகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடம் திருநல்லம் . ஆதலால் , பொருந்திய காலம் கழிவதற்கு முன்பே , இயலும் நெறியில் வணங்கி நின்று வழிபடுவீராக .


பாடல் எண் : 10
மல்லை மல்கிய தோள்அரக் கன்வலி
ஒல்லை யில்ஒழித் தான்உறை யும்பதி
நல்ல நல்லம் எனும்பெயர் நாவினால்
சொல்ல வல்லவர் தூநெறி சேர்வரே.

         பொழிப்புரை : வளம் நிறைந்த தோள்களை உடைய இராவணன் ஆற்றலை விரைந்து ஒழித்த பெருமான் உறைகின்ற பதியாகிய நல்ல நல்லம் என்னும் பெயரை நாவினால் சொல்லும் வல்லமை உடையவர்கள் தூயநெறியிற் சேர்வர் .

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...