திரு வைகல்




திரு வைகல் மாடக்கோயில்

     சோழநாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

     கும்பகோணம் - காரைக்கால் பேருந்து வழித் தடத்தில் திருநீலக்குடி தாண்டி, பழியஞ்சியநல்லூர் கூட்டுரோடு என்னுமிடத்தில் வலப்புறமாகப் பிரிந்து செல்லும் சாலையில் திரும்பி பழியஞ்சியநல்லூரை அடைந்து, மேலும் 2 கி.மீ. அதே சாலையில் சென்றால் வைகல் கிராமத்தை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து கிழக்கே சுமார் 12 கி.மீ. தொலைவிலும், கொல்லுமாங்குடிக்கு மேற்கே சுமார் 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது. திருநீலக்குடி என்ற மற்றொரு திருத்தலம் இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. அருகில் உள்ள பெரிய நகரம் கும்பகோணம்.


இறைவர்              : சண்பகாரண்யேசுவரர், வைகல்நாதர்.

இறைவியார்           : சாகாகோமளவல்லி, கொம்பியல்கோதை, வைகலாம்பிகை.

தல மரம்               : சண்பகம் (தற்போதில்லை).

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - துளமதி யுடைமறி.

         வைகல் என்ற இந்த சிறிய கிராமத்தில் 3 சிவாலயங்கள் இருக்கின்றன.

1)ஊரின் தென்புறமுள்ள திருமால் வழிபட்ட விசுவநாதர் ஆலயம்,

2) பிரமன் வழிபட்ட பிரமபுரீசுவரர் ஆலயம்,

3) ஊரின் மேற்கு திசையிலுள்ள வைகல்நாதர் ஆலயம் - இதுவே மாடக்கோயில்.

         சிவபெருமானின் 3 கண்களைப் போல் விளங்கும் இந்த விசுவநாதர் கோவில், பிரம்மபுரீசுவரர் கோவில் மற்றும் வைகல்நாதர் கோவில் ஆகியவற்றில் ஊரின் மேற்கே அமைந்துள்ள வைகல்நாதர் ஆலயமே தேவாரப் பதிகம் பெற்ற தலம் என்ற பெருமையைப் பெற்றதாகும். கோச்செங்கட் சோழன் முற்பிறவியில் சிலந்தியாய் இருந்து திருவானைக்கா இறைவனுக்கு வலைப்பந்தல் அமைத்து வழிபட்டு இறைவன் அருளால் சோழ நாட்டின் பேரரசனாக பிறக்கும் பேறு பெற்றான். முற்பிறவியில் தான் சிலந்தியாக இருந்து செய்த சிவத்தொண்டிற்கு யானை இடையூறாக இருந்த காரணத்தினால் யானை ஏறாத மாடக் கோவில்களைக் கட்டினான். இத்தலத்தில் உள்ள ஆலயம் கோச்செங்கட் சோழன் கட்டிய அத்தகைய மாடக் கோவில்களுள் ஒன்றாகும்.

         தேவாரப் பதிகம் பெற்ற இந்த ஆலயமும், இவ்வூரிலுள்ள மற்ற இரண்டு ஆலயங்களும் திருமால், பிரம்மா, திருமகள் ஆகியோராலும், இந்திரன் முதலான தேவர்களாலும் அகத்தியர் போன்ற முனிவர்களாலும் வழிபடப் பெற்ற பெருமைக்குரியதாக திகழ்கின்றன.

         முன்னொரு காலத்தில் பூமிதேவி தன்னை விரும்பி மணம் செய்து கொள்ளுமாறு திருமாலை வேண்ட, திருமாலும் அதற்கு இசைந்து நிலமகளான பூமிதேவியை மணம் புரிந்து கொண்டார். திருமால் மேல் கோபம் கொண்ட திருமகள் சணபகவனமாகிய இத்தலம் வந்து சிவபெருமானை கடுந்தவம் புரிந்து வழிபட்டாள். திருமாலும், பூமிதேவியும் பிரிந்து சென்ற திருமகளை அடையும் பொருட்டு இத்தலம் வந்து அவர்களும் சிவபெருமானை வழிபட்டனர். திருமாலைத் தேடி வந்த பிரம்மாவும் இத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமான் திருவருளால் திருமால் திருமகளை அடையும் பேறு பெற்றார். பிரம்மாவிற்கும் அருள் புரிந்தார் என்பது இத்தலத்தின் மூன்று கோவிலகளையும் இணைத்துக்கூறும் புராண வரலாறாகும்.

         இவ்வாலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு நுழைவாயில் மட்டும் உள்ளது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள படிகள் மூலம் ஏறி மாடக்கோவிலின் முன்புற மேடையை அணுகலாம். முன்புற மேடையில் இறைவன் சந்நிதியை நோக்கி நந்தி மண்டபம் உள்ளது. மாடக்கோவிலின் உள்ளே இறைவன் வைகல் நாதர் கிழக்கு நோக்கிய சந்நிதியில் அருட்காட்சி தருகிறார். வலதுபுறம் தெற்கு நோக்கிய இறைவி கொம்பியல்கோதையின் சந்நிதி அமைந்துள்ளது. வள்ளி தெய்வானை சமேத முருகர், ஸ்ரீதேவி பூதேவி சமேத மஹாவிஷ்ணு ஆகியோர் சந்நிதிகளும் ஆலயத்தில் உள்ளன. காகவாகனர் சனீஸ்வரருக்கும் தனி சந்நிதி உள்ளது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "ஞாலத்து நீள் தக்கோர் நாளும் நினைந்து ஏத்திடும் வைகல் மாடக் கோயிற்குள் மதுரமே" என்று போற்றி உள்ளார்.

         காலை 6-30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 432
கொன்றை வார்சடை முடியரைக் கோழம்பத்து இறைஞ்சி,
என்றும் நீடிய இன்னிசைப் பதிகம் முன் இயம்பி,
மன்று உளார்மகிழ் வைகல்மா டக்கோயில் மருங்கு
சென்று சார்ந்தனர் திருவளர் சிரபுரச் செல்வர்.

         பொழிப்புரை : கொன்றை மலரைச் சூடிய நீண்ட சடையை உடைய இறைவரைத் திருக்கோழம்பத்தில் வணங்கி, என்றும் அழியாது நிலைபெற்றிருத்தற்கு ஏதுவாய இன்னிசை உடைய திருப்பதிகத்தைத் திருமுன்பு நின்று பாடி, பொன்னம்பலம் உடைய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் `திருவைகல் மாடக் கோயிலின்\' அருகே முத்திச் செல்வம் வளர்தற்கு இடனான சீகாழித் தலைவர் சென்று அடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 433
வைகல் நீடுமா டக்கோயில் மன்னிய மருந்தைக்
கைகள் அஞ்சலி கொண்டுதாழ்ந்து, எழுந்து,கண் அருவி
செய்ய இன்னிசைச் செந்தமிழ் மாலைகள் மொழிந்து,
நையும் உள்ளத்த ராய்த்திரு நல்லத்தில் நண்ணி.

         பொழிப்புரை : வைகலில் நீண்ட மாடக்கோயிலில் பொருந்திய பெருமருந்தான இறைவரைத் தம் கைகள் கூப்பி, விழுந்து வணங்கி, எழுந்து, கண்களினின்றும் நீர் அருவியாய்ச் சொரிய, இனிய இசையை உடைய செந்தமிழ் மாலைகளால் போற்றி, உருகி இளகும் மனத்தை உடையவராகித் `திருநல்லம்' என்ற பதியை அடைந்து,

         ருவைகல் மாடக்கோயிலில் அருளிய பதிகம், `துளமதியுடை' (தி.3 ப.18) எனத் தொடங்கும் காந்தாரபஞ்சமப் பண்ணிலமைந்த பதிகமாகும்.


3. 018     திருவைகல் மாடக்கோயில்    பண் - காந்தாரபஞ்சமம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
துளமதி உடைமறி தோன்று கையினர்,
இளமதி அணிசடை எந்தை யார்இடம்,
உளமதி உடையவர் வைகல் ஓங்கிய
வளமதி தடவிய மாடக் கோயிலே.

         பொழிப்புரை :இறைவன் , துள்ளிக்குதிக்கும் இயல்புடைய மான்கன்றை ஏந்தியுள்ள திருக்கரத்தினன் . இளம்பிறையை அணிந்துள்ள சடையன் . எம் தந்தையாகிய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது சிவஞானிகள் வாழ்கின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தில் , அழகிய சந்திரனை வருடுமளவு ஓங்கி உயர்ந்துள்ள திருமாடக்கோயில் ஆகும் .

  
பாடல் எண் : 2
மெய்அகம் மிளிரும்வெண் நூலர், வேதியர்,
மையகண் மலைமக ளோடும் வைகுஇடம்,
வையகம் மகிழ்தர வைகல் மேல்திசைச்
செய்யகண் வளவன்முன் செய்த கோயிலே.

         பொழிப்புரை :இறைவர் ஒளிர்கின்ற முப்புரிநூல் அணிந்துள்ளவர் . வேதத்தை அருளிச்செய்தவர் . அவர் , மை தீட்டிய கரிய கண்ணுடைய மலைமகளான உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருந்தருளும் இடமாவது , இப்பூவுலகத்தார் மகிழும்படி திருவைகல் என்னும் திருத்தலத்தில் மேற்குத் திசையில் , சிவந்த கண்ணுடைய கோச்செங்கட் சோழ மன்னனால் முற்காலத்தில் எழுப்பப்பட்ட மாடக்கோயிலாகும் .


பாடல் எண் : 3
கணிஅணி மலர்கொடு காலை மாலையும்,
பணிஅணி பவர்க்குஅருள் செய்த பான்மையர்,
தணிஅணி உமையொடு தாமும் தங்குஇடம்
மணிஅணி கிளர்வைகல் மாடக் கோயிலே.

         பொழிப்புரை :வேங்கைமரத்தின் அழகிய மலர்களைக் கொண்டு காலையும் , மாலையும் வழிபாடு செய்பவர்கட்கு அருள்செய்யும் தன்மையுடைவர் இறைவர் . அவர் குளிர்ந்த அருளையே தம் வடிவமாகக் கொண்டு உமாதேவியோடு தாமும் வீற்றிருந்தருளும் இடமாவது இரத்தினங்களால் அழகுபடுத்தப்பட்ட திருவைகல் என்னும் திருத்தலத்திலுள்ள மாடக்கோயிலாகும் .


பாடல் எண் : 4
கொம்புஇயல் கோதைமுன் அஞ்சக் குஞ்சரத்
தும்பியது உரிசெய்த துங்கர் தங்குஇடம்,
வம்புஇயல் சோலைசூழ் வைகல் மேல்திசைச்
செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே.

         பொழிப்புரை :பூங்கொம்பு போன்ற மெல்லியலாளான உமாதேவி அஞ்சுமாறு யானையின் தோலை உரித்த மேன்மையுடையவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருவைகல் என்னும் திருத்தலத்தின் மேற்குத்திசையில் கோச்செங்கட் சோழன் எழுப்பிய மாடக்கோயில் ஆகும் .


பாடல் எண் : 5
விடம்அடை மிடற்றினர், வேத நாவினர்,
மடமொழி மலைமக ளோடும் வைகுஇடம்,
மடஅனம் நடைபயில் வைகல் மாநகர்க்
குடதிசை நிலவிய மாடக்கோயிலே.

         பொழிப்புரை :இறைவர் பாற்கடலில் தோன்றிய நஞ்சை அடைத்து வைத்துள்ள கண்டத்தினர் . வேதங்களை ஓதும் நாவினர் . அவர் , இனிய மொழிகளை மென்மையாகப் பேசுகின்ற மலைமகளான உமாதேவி யோடு வீற்றிருந்தருளும் இடம் , இள அன்னப்பறவைகள் நடை பயிலும் திருவைகல் என்னும் பெருநகரின் மேற்குத்திசையில் நிலவும் மாடக்கோயில் ஆகும் .


பாடல் எண் : 6
நிறைபுனல் பிறையொடு நிலவு நீள்சடை
இறையவர் உறைவிடம், இலங்கு மூஎரி
மறையொடு வளர்வுசெய் வாணர் வைகலில்
திறைஉடை நிறைசெல்வன் செய்த கோயிலே.

         பொழிப்புரை :புனிதமான கங்கையையும், பிறைச் சந்திரனையும் அணிந்துள்ள நீண்ட சடைமுடியுடைய இறைவர் வீற்றிருந்தருளும் இடமாவது , மூவகை அக்கினிகளை வேதங்களோடு வளர்க்கின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தில் , சிற்றரசர்கள் கப்பம் கட்ட நிறைந்த செல்வனாக விளங்கும் கோச்செங்கட்சோழன் என்ற மாமன்னன் கட்டிய மாடக்கோயில் ஆகும் .


பாடல் எண் : 7
எரிசரம் வரிசிலை வளைய ஏவிமுன்
திரிபுரம் எரிசெய்த செல்வர் சேர்வுஇடம்,
வரிவளை அவர்பயில் வைகல் மேல்திசை
வருமுகில் அணவிய மாடக் கோயிலே.

         பொழிப்புரை :அக்கினியாகிய அம்பை , மேருமலையை நீண்ட வில்லாக வளைத்துச் செலுத்தி முற்காலத்தில் திரிபுரங்களை எரி யுண்ணுமாறு செய்த செல்வராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடமாவது , வரிவளையல்கள் அணிந்த பெண்கள் பழகுகின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தின் மேற்குத் திசையில் விரிந்துள்ள மேகத்தைத் தொடும்படி ஓங்கியுள்ள மாடக்கோயில் ஆகும் .


பாடல் எண் : 8
மலைஅன இருபது தோளி னான்வலி
தொலைவுசெய்து அருள்செய்த சோதி யார்இடம்,
மலர்மலி பொழில்அணி வைகல் வாழ்வர்கள்
வலம்வரு மலைஅன மாடக் கோயிலே.

         பொழிப்புரை :மலை போன்ற இருபது தோள்களையுடைய இராவணனது வலிமையை அழித்து , பின்னர் அவன் சாம கானம் பாடிப் போற்ற அவனுக்கு அருள் செய்த சோதியாகிய இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது , மலர்கள் நிறைந்த சோலைகளையுடைய அழகிய திருவைகலில் வாழ்கின்றவர்கள் வலம் வந்து வணங்கும் மலை போன்ற மாடக்கோயில் ஆகும் .

  
பாடல் எண் : 9
மாலவன் மலரவன் நேடி மால்கொள
மால்எரி ஆகிய வரதர் வைகுஇடம்,
மாலைகொடு அணிமறை வாணர் வைகலில்
மால்அன மணிஅணி மாடக் கோயிலே.

         பொழிப்புரை :திருமாலும் , பிரமனும் இறைவனின் அடிமுடி களைத் தேடியும் காணமுடியாது மயக்கம் கொள்ள , நெருப்பு மலையாய் நின்ற , வழிபடுபவர்கட்கு வேண்டிய வரங்களை அளிக்கவல்ல சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , பூமாலைகளை இறைவனுக்கு அணிவித்து , வேதங்களை ஓதி வழிபாடு செய்யும் அந்தணர்கள் வாழ்கின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தில் , மேகம் போலும் நிறத்தையுடைய நீலமணிகளால் அழகுபடுத்தப்பட்ட மாடக்கோயில் ஆகும் .


பாடல் எண் : 10
கடுஉடை வாயினர், கஞ்சி வாயினர்,
பிடகுஉரை பேணிலார் பேணு கோயிலாம்,
மடம்உடை யவர்பயில் வைகல் மாநகர்
வடமலை அனையநல் மாடக் கோயிலே.

         பொழிப்புரை :கடுக்காயைத் தின்னும் வாயுடையவர்களும் , கஞ்சி குடிக்கும் வாயுடையவர்களுமான சமணர்களையும் , புத்தர்களின் பிடகநூலையும் பொருட்படுத்தாத சிவனடியார்கள் போற்றும் கோயிலாவது , மடம் என்னும் பண்புடைய மகளிர் பழகுகின்ற திருவைகல் என்னும் மாநகரில் மேருமலையை ஒத்த சிறப்புடைய நன்மாடக் கோயில் ஆகும் .

 
பாடல் எண் : 11
மைந்தனது இடம் வைகல் மாடக் கோயிலைச்
சந்துஅமர் பொழில்அணி சண்பை ஞானசம்
பந்தன தமிழ்கெழு பாடல் பத்துஇவை
சிந்தைசெய் பவர்சிவ லோகம் சேர்வரே.

         பொழிப்புரை :அளவில்லாத ஆற்றலுடைய இறைவன் வீற்றிருந்தருளும் இடமாகிய திருவைகல் என்னும் திருத்தலத்திலுள்ள மாடக் கோயிலைச் சந்தன மரங்கள் கொண்ட சோலைகளையுடைய அழகிய திருச்சண்பை நகரில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப் பதிகத்தைச் சிந்தையிலிருத்திப் போற்ற வல்லவர்கள் சிவலோகத்தில் இருப்பர் .

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...