திரு நீலக்குடி
(தென்னலக்குடி)
சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
மக்கள் வழக்கில் 'தென்னலக்குடி' என்று வழங்குகின்றது.
கும்பகோணம் - காரைக்கால் சாலையில், கும்பகோணத்தை அடுத்துள்ளது.
ஆடுதுறையிலிருந்தும் தென்னலக்குடிக்கு பேருந்து வசதி உள்ளது.
இறைவர்
: மனோக்ஞ நாதசுவாமி, வில்வாரண்யேசுவரர், காமதேனுபுரீசுவரர்,
பிரமநாயகர், நீலகண்டேஸ்வரர், தைலாப்பியங்கேசர்,
இறைவியார்
: அநூபமஸ்தனி (திருமணக்கோலம்),
பக்தாபீஷ்டதாயினி (தவக்கோலம்)
தல
மரம் : பஞ்சவில்வம்.
தீர்த்தம் : தேவி தீர்த்தம், பாரத்வாஜ தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம்,
பிரம தீர்த்தம், க்ஷீரகுண்டம்.
தேவாரப்
பாடல்கள் : அப்பர் - வைத்த மாடும் மனைவியும்.
பாற்கடலில் அமுது கடைந்த காலத்தில் தோன்றிய
நஞ்சையுண்டு இறைவன் நீலகண்டராக எழுந்தருளி விளங்கும் தலமாதலின் திருநீலக்குடி
என்றாயிற்று.
இத்தலத்திற்கு பஞ்ச வில்வாரண்ய
க்ஷேத்திரம் என்றும் பெயருண்டு.
அப்பரின்
திருவாக்கில் 'நெல்லு நீள் வயல்
நீலக்குடி' என்று
மலர்ந்ததற்கேற்ப சுற்றிலும் வயல்கள் உள்ளன.
உட்பிரகாரத்தில்
பிரம்மா வழிபட்ட பிரம்மலிங்கம் உள்ளது.
மூலவர் - சிறப்பான, அதிசய மூர்த்தியாக திகழ்கிறார். இங்கு
மூலவருக்கு தைலாபிஷேகம் (எண்ணெய்) விசேஷம். எவ்வளவு எண்ணெய் வார்த்துத் தேய்த்தாலும்
அவ்வளவும் பாணத்திற்குள்ளேயே சுவறிப்போகும்; வெளியே வழியாது. தவமிருக்கும் அம்பாளே, சுவாமிக்குத் தலாபிஷேகம் செய்வதாக
ஐதீகம். ஆகவே அம்பாள் முன் எண்ணெய் வைத்துப் பின்பு எடுத்துச் சுவாமிக்குத்
தேய்ப்பர். (சித்திரை, கார்த்திகை, மாசியில் இந்த அபிஷேகம் செய்வது
சிறப்பாகச் சொல்லப்படுகிறது.
இங்குள்ள பலாமரம்
தெய்விகமானது. காய்க்குங் காலத்தில் நித்யபடியாக பலாச்சுளை நிவேதமுண்டு. நிவேதித்த
பலாச்சுளைச் சாப்பிடுவது நல்லது. ஆனால் நிவேதிக்காமல் பலாப்பழத்தையே வெளியில்
எடுத்துக்கொண்டு போனால் நிச்சயமாக அப் பலாப்பழத்தில் வண்டுகள் உண்டாகிப் பழம்
கெட்டுப்போவது இன்றும் கண்கூடானதொன்றாகும் என்று சொல்லப்படுகிறது.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "புன் குரம்பை ஏல்
அக்குடி பிறந்த எம்மனோர்க்கு உண்மை தரு நீலக்குடி விளங்கு நிட்களமே" என்று போற்றி
உள்ளார்.
திருநாவுக்கரசர் திருப்பதிக
வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 301
பொங்கு
புனல்ஆர் பொன்னியினில்
இரண்டு கரையும்
பொருவிடையார்
தங்கும்
இடங்கள் புக்குஇறைஞ்சித்
தமிழ்மா லைகளும்
சாத்திப்போய்
எங்கும்
நிறைந்த புகழாளர்
ஈறுஇல் தொண்டர்
எதிர்கொள்ளச்
செங்கண்
விடையார் திருஆனைக்
காவின் மருங்கு
சென்று அணைந்தார்.
பொழிப்புரை : திருப்பழையாற
வடதளியினின்றும் வரும் வழியில் பொங்கி வருகின்ற காவிரியின் இருமருங்கும் உள்ள, போர் செய்யவல்ல ஆனேற்றை ஊர்தியாகக்
கொண்ட சிவபெருமான் நிலைபெற்று விளங்கி வீற்றிருக்கும், பல பதிகளுக்கும் சென்று வணங்கி, தமிழ் மாலைகளையும் சாத்தி வரும் எங்கும்
நிறைந்த புகழையுடைய அவர், மேலும் சென்று அளவற்ற
தொண்டர்கள் பலரும் வந்து எதிர்கொள்ளச், செங்கண்
விடையையுடைய இறைவரின் திருவானைக்கா என்ற பதியின் அருகே சென்று சேர்ந்தார்.
திருப் பழையாறை வடதளியில்
இருந்து திருவானைக்காவிற்குச் செல்லும் வரையிலும் பொன்னியின் இருகரைகளிலும் உள்ள
திருப்பதிகளை வணங்கிச் சென்றார் என ஆசிரியர் குறித்தருளுகின்றார். அத்திருப்
பதிகளாவன:
1. திரு இன்னம்பர்:
(அ) `விண்ணவர்` (தி.4 ப.72) - திருநேரிசை.
(ஆ) `மன்னும்மலை` (தி.4 ப.100) - திரு விருத்தம்.
(இ) `என்னிலாரும்` (தி.5 ப.21) - திருக்குறுந்தொகை.
(ஈ) `அல்லிமலர்` (தி.6 ப.89) – திருத்தாண்டகம்.
2. திருப்புறம்பயம்: `கொடிமாட` (தி.6 ப.13) - திருத்தாண்டகம்.
3. திருவிசயமங்கை: `குசையும்` (தி.5 ப.71) - திருக்குறுந்தொகை.
4. திருவாப்பாடி: `கடலகம்` (தி.4 ப.48) - திருநேரிசை.
5. திருப்பந்தணை
நல்லூர்: `நோதங்கம்` (தி.6 ப.10) - திருத் தாண்டகம்.
6. திருக்கஞ்சனூர்: `மூவிலைநல்` (தி.6 ப.90) – திருத்தாண்டகம்.
7. திருமங்கலக்குடி: `தங்கலப்பிய` (தி.5 ப.73) திருக்குறுந்தொகை.
8. தென்குரங்காடு துறை: `இரங்கா` (தி.5 ப.63) - திருக்குறுந்தொகை.
9. திருநீலக்குடி: `வைத்தமாடும்` (தி.5 ப.72) - திருக்குறுந்தொகை.
10.திருக்கருவிலிக்
கொட்டிட்டை: `மட்டிட்ட` (தி.5 ப.69) - திருக்குறுந்தொகை.
11.திரு
அரிசிற்கரைப்புத்தூர்: `முத்தூரும்` (தி.5 ப.61) - திருக்குறுந்தொகை.
12.திருச்சிவபுரம்: `வானவன்காண்` (தி.6 ப.87) - திருத்தாண்டகம்.
13.திருக்கானூர்: `திருவின் நாதனும்` (தி.5 ப.76) - திருக்குறுந் தொகை.
14.திருஅன்பில்ஆலந்துறை:
`வானம் சேர்` (தி.5 ப.80) -திருக்குறுந்தொகை
15.திருஆலம்பொழில்: `கருவாகி` (தி.6 ப.86) - திருத்தாண்டகம்.
16.மேலைத்திருக்காட்டுப்பள்ளி:
`மாட்டுப்பள்ளி` (தி.5 ப.84) - திருக்குறுந்தொகை.
5. 072 திருநீலக்குடி திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
வைத்த
மாடும் மனைவியும் மக்கள்,நீர்
செத்த
போது செறியார், பிரிவதே,
நித்த
நீலக் குடியர னைந்நினை
சித்த
மாகில் சிவகதி சேர்திரே.
பொழிப்புரை : தேடிவைத்த செல்வமும் , மனைவியும் , மக்களும் நீர் செத்தபோது உம்மைச்
செறியார் ; பிரிவதே இயல்பாம் ; நாள் தோறும் நீலக்குடியரனை நினையும்
சித்தம் ஆகின்சிவகதி சேர்வீர் .
பாடல்
எண் : 2
செய்ய
மேனியன், தேனொடு பால்தயிர்
நெய்அது
ஆடிய நீலக் குடியரன்
மைய
லாய்மற வாமனத் தார்க்குஎலாம்
கையில்
ஆமல கக்கனி ஒக்குமே.
பொழிப்புரை : சிவந்த
திருமேனியனாய்த் தேனும் , பாலும் , தயிரும் , நெய்யும் கொண்டு திருமுழுக்காடும்
நீலக்குடி அரனின்மேல் காதல் கொண்டு மறவாத மனத்தினர்க்கெல்லாம் உள்ளங்கை நெல்லிக்
கனி போல அப்பெருமான் புலப்பட்டு அருள்புரிவான் .
பாடல்
எண் : 3
ஆற்ற
நீள்சடை ஆயிழை யாள்ஒரு
கூற்றன், மேனியில் கோலமது ஆகிய
நீற்றன், நீலக் குடியுடை யான்,அடி
போற்றி
னார்இடர் போக்கும் புனிதனே.
பொழிப்புரை : நீலக்குடி உடைய
பெருமான் , கங்கையாற்றுடன் கூடிய
நீண்ட சடையையுடையவன் . உமாதேவியை ஒரு கூற்றிற் கொண்ட இயல்பினன் . திருமேனிக்கு
அழகு தருவதாகிய திருநீற்றை உடையவன் . திருவடி போற்றினார் இடர்களைப் போக்கும்
புனிதன் .
பாடல்
எண் : 4
நாலு
வேதியர்க்கு இன்னருள் நன்னிழல்
ஆலன், ஆலநஞ் சுஉண்டகண்
டத்துஅமர்
நீலன், நீலக் குடியுறை
நின்மலன்,
காலன்
ஆருயிர் போக்கிய காலனே.
பொழிப்புரை : நான்கு
முனிவர்களுக்கு இன்னருள் புரிய ஆலமரத்தின் நன்னிழலின் கீழ் இருந்தோன் ; ஆலகால நஞ்சு உண்ட கண்டத்துடன் பொருந்திய
நீலநிறம் உடையவன் . நீலக்குடி உறையும் மலமற்றவன் ; காலன் உயிர் போக்கிய கடவுள் .
பாடல்
எண் : 5
நேச
நீலக் குடியர னே, எனா
நீச
ராய்,நெடு மால்செய்த
மாயத்தால்
ஈசன்
ஓர்சரம் எய்ய எரிந்துபோய்
நாசம்
ஆனார் திரிபுர நாதரே.
பொழிப்புரை : `நேசத்துக்குரிய நீலக்குடி அரனே !` என்னாத கீழ்மை உடையவராய் நெடுமால் செய்த
மாயத்தால் திரிபுரத்து அசுரர்கள் ஈசன் ஓரம்பு எய்ய எரிந்து சாம்பலாய்ப் போய்
நாசமாயினர் .
பாடல்
எண் : 6
கொன்றை
சூடியை, குன்ற மகளொடும்
நின்ற
நீலக் குடிஅர னே, எனீர்,
என்றும்
வாழ்வுஉகந் தேஇறு மாக்குநீர்
பொன்றும்
போது நுமக்குஅறிவு ஒண்ணுமே.
பொழிப்புரை : என்றும் பொய்யாகிய
உலக வாழ்வை உகந்து இறுமாப்பு அடைகின்ற நீர் இறக்கும்போது நுமக்கு அறியவொண்ணுமோ ? ஒண்ணாதாதலால் கொன்றை சூடும் கடவுளுமாகிய
மலை மகளோடும் நின்ற நீலக்குடி அரனே என்று உரைப்பீர்களாக !
பாடல்
எண் : 7
கல்லி
னோடுஎனைப் பூட்டி, அமண்கையர்
ஒல்லை
நீர்புக நூக்க, என் வாக்கினால்
நெல்லு
நீள்வயல் நீலக் குடிஅரன்
நல்ல
நாமம் நவிற்றி உய்ந் தேன்அன்றே.
பொழிப்புரை : கல்லினோடு என்னைச்
சேர்த்துக்கட்டி அமண் ஒழுக்கமுடையவர்கள் விரைந்து கடல் நீரிற் புக - நூக்கிவிட , என் வாக்கினால் நெல்வளம் உடைய நீண்ட
வயல் சூழ்ந்த நீலக்குடி அரனுடைய நல்ல நாமத்தைச் சொல்லி நன்றே உய்ந்தேன் .
பாடல்
எண் : 8
அழகி
யோம்இளை யோம்எனும் ஆசையால்
ஒழுகி, ஆவி யுடல்விடு
முன்னமே,
நிழல்
அதுஆர்பொழில் நீலக் குடிஅரன்
கழல்கொள்
சேவடி கைதொழுது உய்ம்மினே.
பொழிப்புரை : ` யாம் அழகியவர்கள் ; இளையவர்கள் ` எனும் ஆசையால் ஒழுகி , உயிர் உடலைவிட்டுப் பிரிந்துபோவதற்கு
முன்பே , நிழல் உடையதாய்ச்
செறிந்த பொழில்களையுடைய நீலக்குடி அரனுடைய கழலணிந்த சேவடிகளைக் கைகளால் தொழுது
உய்வீர்களாக .
பாடல்
எண் : 9
கற்றைச்
செஞ்சடைக் காய்கதிர் வெண்திங்கள்
பற்றிப்
பாம்புடன் வைத்த பராபரன்,
நெற்றிக்
கண்ணுடை நீலக் குடிஅரன்
சுற்றித்
தேவர் தொழுங்கழல் சோதியே.
பொழிப்புரை : கற்றையாகிய
செஞ்சடையில் , குளிர்ந்த கதிர்களை
வீசும் வெண்திங்களைப்பற்றிப் பாம்புடன் வைத்த கடவுளாகிய நெற்றிக்கண்ணுடைய
நீலக்குடி அரன் , தேவர் சுற்றிவந்து
தொழும் கழலணிந்த சோதிவடிவினன் ஆவன் .
பாடல்
எண் : 10
தருக்கி
வெற்புஅது தாங்கிய வீங்குதோள்
அரக்கன்
ஆருடல் ஆங்கொர் விரலினால்
நெரித்து, நீலக் குடியரன்
பின்னையும்
இரக்க
மாய்அருள் செய்தனன் என்பரே.
பொழிப்புரை : நீலக்குடி அரன்
தருக்கடைந்து திருக் கயிலையைத் தாங்கிய செறிந்த தோளை உடைய இராவணன் உடலை ஓர் திரு
விரலால் நெரித்துப் பின்னையும் இரக்கமாகி அருள் புரிந்த கருணைத் திறம் உடையவன்
என்பர் .
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment