பாடல் 14 - வெம்புவாள்




வெம்புவாள் விழுவாள் பொய்யே
     மேல் விழுந்து அழுவாள் பொய்யே
தம்பலம் தின்பாள் பொய்யே
     சாகிறேன் என்பாள் பொய்யே
அம்பிலும் கொடிய கண்ணாள்
     ஆயிரம் சிந்தையாளை
நம்பின பேர்கள் எல்லாம்
     நாயினும் கடையாவாரே.                       14.

     கூர்மை பொருந்திய அம்பைக் காட்டிலும் கொடுமையை உடைய கண்களைக் கொண்ட பரத்தை ஆனவள், (ஆடவரை மயக்கி, அவருடைய பொருளைக் கொள்ள வேண்டி, அவருக்குத் துனபம் உண்டான போது) மனம் வெதும்புவாள். தானும் துன்புற்றது போல அயர்ந்து விழுவாள். இவை பொய்யான செய்கைகளே ஆகும்.

     மேலும், அந்த ஆடவர் மீது விழுந்து, (அவருடைய துன்பத்திற்கு வருந்துபவள் போல) அழுவாள். இதுவும் பொய்யான செய்கையே ஆகும்.

     ஆடவர் வாயில் வைத்துத் தின்ற எச்சில் தம்பலத்தை, (அருவருப்புக் காட்டாது தனது வாயில்) வாங்கித் தின்பாள். (இது அன்பின் பால் பட்டது அல்ல.) பொய்யே.

     (நீங்கள் இல்லை என்றால் நானும் இல்லை. நீங்கள் இறந்து விட்டால்) நானும் உங்களுடன் சாகின்றேன் என்று சொல்லுவாள். இதுவும் பொய்யே.

     கண நேரத்தில் உறுதி இல்லாமல், ஆயிரம் எண்ணங்களை மனதில் கருதும் இந்தப் பரத்தையை நம்பினவர்கள், பிறப்பால் மனிதராக இருந்தாலும், அவர்கள் நாயினும் கடைப்பட்ட பிறப்பினை உடையவர் ஆவர்.

     (பரத்தையருடைய செயல்கள் பற்றி, அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் விரிவாகக் காண்க.)

No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...