சுவாமி மலை - 0224. நிலவினிலே இருந்து





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

நிலவினிலே (சுவாமிமலை)

சுவாமிநாதா! 
வஞ்சகனாகிய என்னை ஆண்டு அருள்

தனதன தான தந்த தனதன தான தந்த
     தனதன தான தந்த ...... தனதான


நிலவினி லேயி ருந்து வகைமல ரேதெ ரிந்து
     நிறைகுழல் மீத ணிந்து ...... குழைதாவும்

நிகரறு வேலி னங்கள் வரிதர வாச கங்கள்
     நினைவற வேமொ ழிந்து ...... மதனூலின்

கலபம னோக ரங்க ளளவற வேபு ரிந்து
     கனியித ழேய ருந்தி ...... யநுராகக்

கலவியி லேமு யங்கி வனிதையர் பால்ம யங்கு
     கபடனை யாள வுன்ற ...... னருள்கூராய்

உலகமொ ரேழு மண்ட ருலகமு மீசர் தங்கு
     முயர்கயி லாய மும்பொன் ...... வரைதானும்

உயிரொடு பூத மைந்து மொருமுத லாகி நின்ற
     உமையரு ளால்வ ளர்ந்த ...... குமரேசா

குலைபடு சூர னங்க மழிபட வேலெ றிந்த
     குமரக ணோர வெங்கண் ...... மயில்வாழ்வே

கொடுமுடி யாய்வ ளர்ந்து புயனிலை போலு யர்ந்த
     குருமலை மீத மர்ந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


நிலவினிலே இருந்து, வகை மலர் அதே தெரிந்து,
     நிறை குழல் மீது அணிந்து, ...... குழைதாவும்

நிகர் அறு வேல் இனங்கள் வரி தர, வாசகங்கள்
     நினைவு அறவே மொழிந்து, ...... மதனூலின்

கலப மனோகரங்கள் அளவு அறவே புரிந்து,
     கனி இதழே அருந்தி, ...... அநுராகக்

கலவியிலே முயங்கி, வனிதையர் பால் மயங்கு
     கபடனை ஆள உன்தன் ...... அருள்கூராய்.

உலகம் ஒர் ஏழும், அண்டர் உலகமும், ஈசர் தங்கும்
     உயர் கயிலாயமும், பொன்- ...... வரை தானும்,

உயிரொடு பூதம் ஐந்தும் ஒரு முதல் ஆகி நின்ற
     உமை அருளால் வளர்ந்த ...... குமரேசா!

குலைபடு சூரன் அங்கம் அழிபட வேல் எறிந்த
     குமர! கடோர வெம்கண் ...... மயில்வாழ்வே!

கொடு முடியாய் வளர்ந்து, புயல்நிலை போல் உயர்ந்த
     குருமலை மீது அமர்ந்த ...... பெருமாளே.
 

பதவுரை

       உலகம் ஒரு ஏழும் --- ஏழு உலகங்களும்,

     அண்டர் உலகமும் --- தேவர் உலகமும்,

     ஈசர் தங்கும் உயர் கயிலாயமும் --- சிவபெருமான் உறையும் உயர்ந்த கயிலாயமும்,

     பொன்வரை தானும் --- பொன் மேருமலையும்,

     உயிரொடு பூதம் ஐந்தும் --- உயிர்களும் ஐந்து பூதங்களும் ஆகி,

     ஒரு முதலாகி நின்ற --- இவைகட்கு எல்லாம் ஒரு முதல் பொருளாகி விளங்கும்

     உமை அருளால் வளர்ந்த குமர ஈசா --- உமாதேவியின் திருவருளால் வளர்த்த குமாரக் கடவுளே!

குலைபடு சூரன் அங்கம் அழிபட --- நடுக்கம் அடைந்த சூரபன்மனுடைய உடம்பு அழியுமாறு,
  
வேல் எறிந்த குமர --- வேலாயுதத்தை விடுத்தருளிய, இளம்பூரணரே!

      கடோர வெம் கண் மயில் வாழ்வே --- கடுமையும் வெப்பமான கண்ணும் உடைய மயிலின் மீது வரும் வாழ்வே!

      கொடு முடியாய் வளர்ந்த --- மலைச்சிகரமாய் விளங்கும்,

     புயல் நிலை போல் உயர்ந்த --- மேகங்கள் தங்கும் இடம்போல உயர்ந்த

     குருமலை மீது அமர்ந்த பெருமாளே --- சுவாமி மலைமேல் எழுந்தருளியுள்ள பெருமையில் சிறந்தவரே!
        
         நிலவினிலே இருந்து --- நிலவில் இருந்து

     வகை மலரே தெரிந்து --- வகை வகையான மலர்களைத் தெரிந்து எடுத்து

     நிறை குழல் மீது அணிந்து --- நிறைந்துள்ள கூந்தலில் அணிந்து,

     குழைதாவும் --- காதில் உள்ள குழையளவும் நீண்டுள்ள

     நிகர் அறு வேல் இனங்கள் வரிதர --- ஒப்பற்ற வேல்கள் போன்ற கண்களின் ரேகைகள் விளங்க

     வாசகங்கள் நினைவு அறவே மொழிந்து --- நினைவு இல்லாமலேயே வார்த்தைகள் சொல்லி,

     கலப மனோகரங்கள் --- கலவியின் மனோரஞ்சிதமான செயல்கள்,

     அளவு அறவே புரிந்து --- கணக்கில்லாத வகையில் செய்து,

     கனி இதழே அருந்தி --- கொவ்வைக் கனிபோன்ற இதழ் ஊறலை உண்டு,

     அநுராக கலவியிலே முயங்கி --- மிகுந்த மோகத்துடன் சேர்க்கையிலே ஈடுபட்டு

     வனிதையர் பால் மயங்கு கபடனை ஆள --- மாதர்களிடத்திலே மயங்குகின்ற வஞ்சகனாகிய அடியேனை ஆட்கொள்ள

      அருள் கூர்வாய் --- உமது திருவருளை மிகுதியாகத் தருவீர்.

பொழிப்புரை

         ஏழு உலகங்களும், தேவருலகமும், சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கயிலாய மலையும், பொன்மேரு கிரியும், உயிர்களும் ஐம்பெரும் பூதங்களுமாகி, அவற்றின்முதற்பொருளாக விளங்கும் பார்வதியம்மை வளர்த்த குமாரக் கடவுளே!

         நடுக்கம் கொண்ட சூரபன்மனுமடைய உடம்பு அழியும்படி வேலை விடுத்தருளிய இளம்பூரணரே!

         உக்கிரமும் வெப்பமான கண்களும் உடைய மயிலின் மீது வரும் பெருவாழ்வே!

     கொடு முடியாகி வளர்ந்து, மேகம் தங்கும் இடமாகி உயர்ந்த சுவாமிமலை மீது அமர்ந்துள்ள பெருமிதம் உடையவரே!

         நில வொளியில் இருந்து, விதவிதமான மலர்களைத் தெரிந்து எடுத்து, நிறைந்த கூந்தலில் சூட்டி, காதுவரை நீண்டுள்ள ஒப்பற்ற வேல் போன்ற கண்களில் ரேகைகள் விளங்க, நினைவு இன்றி சொற்களைக் கூறி, காம நூலில் கூறியபடி மனோகரமான கணக்கற்ற செயல்களைச் செய்து, கனிவாய் ஊறலுண்டு, அதிக ஆசையுடன் கலவி புரிந்து மாதர்களிடம் மயங்கும் கபடனாகிய அடியேனை தேவரீர் ஆட்கொள்ளத் திருவருள் புரிவீராக.
   
விரிவுரை

நிலவினிலே இருந்து ---

எல்லாவுயிர்கட்கும் இன்பத்தைத் தருவது தேன் போல் விளங்கும் வான் நிலா. நிலா முற்றத்தில் அன்பர்களுடன் இருந்து உண்பதும் உரையாடுவதும் பெருமகிழ்ச்சியைத் தரும்.

வகை மலரே தெரிந்து நிறைகுழல் மீதணிந்து ---

காமுகர் தாம் விரும்பிய பெண்களின் கூந்தலில் விதவிதமான மலர்களைத் தேர்ந்து, வண்ண மலர்களை அழகுறப் பிணைத்துச் சூட்டி மகிழ்வார்கள்.

குழைதாவும் நிகரறு வேலினங்கள் வரிதர ---

பெண்களின் கண்கள் நீண்டிருப்பது உயர்ந்த இலக்கணம். அது காதுவரை நீண்டு குழைமீது தாவுவது போல் இருக்குமாம்.

செங்கயல் குழைகள் நாடும் திருமுனைப்பாடி நாடு”

என்று சேக்கிழர் பெருமானும் கூறுவர்.

வேலினங்கள் என்றது உவமை ஆகுபெயராகக் கண்களைக் குறிக்கின்றது; வேலைப்போன்ற கூரிய கண்கள்; வேல் பகைவரை வெட்டித் துணிப்பது போல் கண்களும் இளைஞரது உள்ளத்தை வெட்டிப் பிளக்க வல்லது.

வாசகங்கள் நினைவறவே மொழிந்து ---

மாதர்பால் மயக்கமுற்றோர் என்ன சொல்கிறோம் என்ற நினைவு சிறிதும் இன்றிப் பேசுவார்.

கபடனை ஆள உன்தன் அருள்கூர்வாய் ---

கபடன் - வஞ்சகன் “முருகா! வஞ்சகனாகிய அடியேனை ஆட்கொள்ளத் திருவருள் புரிவாய்”

உலகமொரேழும்..........ஒருமுதலாகி நின்ற உமை ---

இந்த இரண்டு அடிகளால் உமாதேவியின் வியாபகத்தை உரைத்தருளினார். அம்பிகை எல்லாமாய் எங்கும் நிறைந்திருக்கின்றனர். எல்லாம் சக்தி மயம்.

கொடுமுடியாய் வளர்ந்து ---

சுவாமிமலை கயிலை மலையின் கொடு முடிகளில் ஒன்று என்று அத் தலபுராணம் கூறுகின்றது.

கருத்துரை

உமா சுத! மயில் வாகன! மாதர் மயக்கமற அருள் புரிவாய்

No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...