திரு வாட்போக்கி





திரு வாட்போக்கி
(ஐயர்மலை, ரத்னகிரி, சிவாயமலை)

         சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலங்களுள் முதலாவது திருத்தலம்.

          இத்திருத்தலம் தற்போது மக்கள் வழக்கில் ஐயர்மலை என்று வழங்கப்படுகிறது.

          குளித்தலையிலிருந்து மணப்பாறை செல்லும் வழியில் இத்தலம் உள்ளது.


இறைவர்                  : ரத்னகீரீசர், அரதனாசலேசுவரர்,                                                                 மாணிக்கஈசர், முடித்தழும்பர்.

இறைவியார்               : சுரும்பார்குழலி.

தீர்த்தம்                     : காவிரி.

தேவாரப் பாடல்கள்         : அப்பர் - கால பாசம் பிடித்தெழு.

          மாணிக்கம் வேண்டி வந்த ஆரிய மன்னன் ஒருவனுக்கு, இறைவன் தொட்டி ஒன்றைக் காட்டி காவிரி நிரால் நிரப்பச் சொன்னார், அது எப்படியும் நிரம்பால் இருக்கக் கண்டு, கோபங் கொண்ட அரசன், உடைவாளை ஓச்ச, இறைவனும் மாணிக்கத்தைத் தந்து அருளினார். மனம் திருந்திய அரசன் அதை விரும்பாது, சிவப்பணி செய்து முக்தி பெற்றான் என்பது வரலாறு. அம்மன்னன் வெட்டியதால் சுவாமிக்கு முடித்தழும்பர் என்றும் பெயர் பெறலாயிற்று. இன்றும் சிவலிங்கத்தின் மேற்புறத்தில் வெட்டப்பட்ட வடுவைக் காணலாம்.

          இடையன் ஒருவன் சுவாமிக்காகக் கொண்டு சென்ற பாலைக் கவிழ்த்த காகம் எரிந்து போனதால், இம்மலையில் காகங்கள் உலவுவதில்லை என்பது செவிவழிச் செய்தி. "காகம் அணுகாமலை" என்பர். "காகம் மேவுறில் கடுந்தழல் வீசிடும் பரம்பு " என்பது நாகைக் காரோணப் புராணத் தொடர்.

          அருகில் உள்ள கடம்பர் கோயில், வாட்போக்கி, ஈங்கோய்மலை ஆகிய மூன்று தலங்களையும் ஒரே நாளில் முறையே காலை, நண்பகல், அந்தியில் தரிசித்தல் சிறப்பு என்பது மரபு.

          இரத்தினகிரி, மாணிக்கமலை, சிவாயமலை, அரதனசலம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாகும்.

          அகத்தியர் இங்குச் சுவாமியை நண்பகலில் தரிசித்து அருள் பெற்றமையால் இங்கு நண்பகல் தரிசனம் விசேஷம். இதனால் இவ்விறைவன் மத்தியான சுந்தரர் என்றும் வழங்குகிறார்.

          மூலவர் சுயம்பு மூர்த்தி. கோயில் மலைமேல் மிக உயரத்தில் உள்ளது. அழகாக அமைக்கப்பட்டுள்ள 1140 படிகளைக் கடந்து ஏறிச் செல்லவேண்டும்.

          சிவராத்திரி நாளில் அல்லது முன்பின் நாள்களில் சூரியஒளி, சுவாமிக்கு நேரே அமைக்கப்பட்டுள்ள சாளரம் வழியாக வந்து சுவாமி மீது படுகிறது.

          சிவலிங்கத்தின் முன்பு பொய்வாசிக் கொப்பரை என்னும் நீர்த்தொட்டி உள்ளது.

          இப்பெருமானுக்கு நாடொறும் அருகிலுள்ள காவிரியிலிருந்து 10 குடங்களில் நீர்கொண்டு வரப்பட்டு உச்சிக்கால அபிஷேகம் செய்யப்படுகிறது. (இன்றும் இப்பொறுப்பை "பன்னிரண்டாம் செட்டியார் " என்னும் மரபினர் ஏற்றுக்கொண்டு, குருக்கள் மூலம் நடத்துவிக்கின்றனர்.)

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "ஓங்காது நாள் போக்கி நிற்கும் நவை உடையார் நாட அரிது ஆம் வாட்போக்கி மேவுகின்ற வள்ளலே" என்று போற்றி உள்ளார்.



திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 303
மற்றுஅப் பதிகள் முதலான
         மருங்குஉள் ளனவும் கைதொழுது,
பொற்புஉற்று அமைந்த திருப்பணிகள்
         செய்து, பதிகம் கொடுபோற்றி,
உற்ற அருளால் காவிரியை
         ஏறி, ஒன்னார் புரம்எரியச்
செற்ற சிலையார் திருப்பைஞ்ஞீ
         லியினைச் சென்று சேர்கின்றார்.

         பொழிப்புரை : திருப்பராய்த்துறையை வணங்கியவராய், மேலும் அத்திருப்பதியின் அருகிலுள்ள பிறபதிகளையும் வணங்கி, அழகமைந்த கைத்தொண்டுகளையும் ஆற்றி, திருப்பதிகம் பாடிப் போற்றித், திருவருளால் காவிரியாற்றைக் கடந்து, முப்புரங்களும் அழியுமாறு எரித்த இறைவர் வீற்றிருக்கும் திருப்பைஞ்ஞீலியைச் சென்று சேர்கின்ற நாவரசர்.

         அருகிலுள்ள பிறபதிகள்:
1.    திருக்கடம்பந்துறை: `முற்றிலா` (தி.5 ப.18) – திருக்குறுந்தொகை.
2.    திருவாட்போக்கி: `காலபாசம்` (தி.5 ப.86) - திருக்குறுந்தொகை.



5. 086   திருவாட்போக்கி               திருக்குறுந்தொகை
                           திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
கால பாசம் பிடித்துஎழு தூதுவர்
பால கர்விருத் தர்பழை யார்எனார்
ஆல நீழல் அமர்ந்தவாட் போக்கியார்
சீலம் ஆர்ந்தவர் செம்மையுள் நிற்பரே.

         பொழிப்புரை : காலபாசத்தைப் பிடித்தெழும் யமதூதுவர்கள் இவர் பாலகர் , இவர் விருத்தர் , இவர் பழையவர் என்று கூறிவிட்டுச் செல்லார் ; கல்லால் நிழற்கீழ் அமர்ந்த வாட்போக்கியாரது சீலம் நிறைந்தவரே செம்மையுள் நின்று சிவகதிபெறுவர் .


பாடல் எண் : 2
விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப்
படுத்த போது பயன்இலை பாவிகாள்,
அடுத்த கின்னரம் கேட்கும்வாட் போக்கியை
எடுத்தும் ஏத்தியும் இன்புறு மின்களே.

         பொழிப்புரை : பாவிகளே ! எமன் விடுத்த தூதுவர்கள் வந்து வினைக்குழியிலே படுவித்தபோது கதறிப் புலம்பிப் பயன் இல்லை ; அடுத்த கின்னர இசை கேட்கும் வாட்போக்கியை எடுத்தேத்தி இன்புறுவீர்களாக .


பாடல் எண் : 3
வந்துஇவ் வாறு வளைத்துஎழு தூதுவர்
உந்தி ஓடி நரகத்து இடாமுனம்
அந்தி யின்ஒளி தாங்கும்வாட் போக்கியார்
சிந்தி யாஎழு வார்வினை தீர்ப்பரே.

         பொழிப்புரை : வந்து இவ்வாறு வளைத்தெழுகின்ற எமதூதுவர்கள் மனம் உந்துதலால் ஓடி நரகத்து இடுவதன் முன்னம் அந்தியின் செவ்வொளி தாங்கிய மேனியராகிய வாட்போக்கியிறைவர் தம்மைச் சிந்தித்து எழுவார்களின் வினை தீர்ப்பர் .


பாடல் எண் : 4
கூற்றம் வந்து குமைத்திடும் போதினால்
தேற்றம் வந்து தெளிவுறல் ஆகுமே
ஆற்ற வும்அருள் செய்யும்வாட் போக்கிபால்
ஏற்று மின்விளக் கைஇருள் நீங்கவே.

         பொழிப்புரை : எமன் வந்து அழித்திடும்போதில் முடிவு வந்து தெளிவுறல் ஆகாதன்றோ ? மிகவும் அருள்செய்யும் வாட்போக்கி இறைவர்பால் விளக்கை இருள் நீங்க ஏற்றுவீராக .


பாடல் எண் : 5
மாறு கொண்டு வளைத்துஎழு தூதுவர்
வேறு வேறு படுப்பதன் முன்னமே
ஆறு செஞ்சடை வைத்தவாட் போக்கியார்க்கு
ஊறி ஊறி உருகும்என் உள்ளமே.

         பொழிப்புரை : மாறுபாடுகொண்டு வளைத்தெழும் எமதூதுவர் உடல் வேறு உயிர் வேறு படுப்பதன்முன்பே , கங்கையைச் சிவந்த சடையில் வைத்த வாட்போக்கி இறைவர்க்கு என் உள்ளம் ஊறி ஊறி உருகும் .


பாடல் எண் : 6
கானம் ஓடிக் கடிதுஎழு தூதுவர்
தான மோடு தலைபிடி யாமுனம்
ஆன்அஞ்சு ஆடி உகந்தவாட் போக்கியார்
ஊனம் இல்லவர்க்கு உண்மையில் நிற்பரே.

         பொழிப்புரை : இடுகாட்டிற்கு ஓடி , விரைந்து எழுந்த எம தூதுவர் இடத்தோடு தலையைப்பிடிப்பதற்கு முன்பே , பஞ்சகவ்வியம் ஆடுதலை உகந்த வாட்போக்கி இறைவர் , குற்றமற்றவர்க்கு உண்மையில் முன்னின்றருள்வர் .


பாடல் எண் : 7
பார்த்துப் பாசம் பிடித்துஎழு தூதுவர்
கூர்த்த வேலால் குமைப்பதன் முன்னமே
ஆர்த்த கங்கை அடக்கும்வாட் போக்கியார்
கீர்த்தி மைகள் கிளர்ந்துஉரை மின்களே.

         பொழிப்புரை : பார்த்துப் பாசம் பிடித்தெழுந்த எமதூதுவர் கூரிய வேலாற்குத்தி வருத்துவதன் முன்பே , ஆரவாரித்த கங்கையைச் சடையில் அடக்கும் வாட்போக்கி இறைவர் புகழ்த்தன்மைகளை உள்ளம் கிளர்ந்து உரைப்பீராக .


பாடல் எண் : 8
நாடி வந்து நமன்தமர் நல்இருள்
கூடி வந்து குமைப்பதன் முன்னமே
ஆடல் பாடல் உகந்தவாட் போக்கியை
வாடி ஏத்தநம் வாட்டம் தவிருமே.

         பொழிப்புரை : எமனைச் சார்ந்தோராகிய தூதுவர் நாடிவந்து, நள்ளிருளில் தாம் பலராய்க் கூடிவந்து வருத்துவதன் முன்பே , ஆடல் பாடல் உகந்த வாட்போக்கி இறைவரை வாடி வழிபட நம்வாட்டம் தீரும் .


பாடல் எண் : 9
கட்டு அறுத்துக் கடிதுஎழு தூதுவர்
பொட்ட நூக்கிப் புறப்படா முன்னமே
அட்ட மாமலர் சூடும்வாட் போக்கியார்க்கு
இட்டம் ஆகி இணைஅடி ஏத்துமே.

         பொழிப்புரை : கட்டுக்களை அறுத்து விரைந்து எழுந்த எம தூதுவர்கள் புறப்படுவதற்கு முன்பே , எட்டுப் பூக்களைச் சூடும் வாட் போக்கி இறைவர்க்கு விருப்பம் உடையவராகித் திருவடி ஏத்துவீராக .

 
பாடல் எண் : 10
இரக்கம் முன்அறி யாதுஎழு தூதுவர்
பரக்க அழித்தவர் பற்றுதன் முன்னமே
அரக்க னுக்குஅருள் செய்தவாட் போக்கியார்
கரப்ப துங்கரப் பார்அவர் தங்கட்கே.

         பொழிப்புரை : இரக்கமென்பதை முன்னும் அறியாது எழுந்த எமதூதுவர்கள் பரவிவந்து அழித்துப் பற்றிக்கொள்வதற்கு முன்பே, இராவணனுக்கு அருள்செய்த வாட்போக்கி இறைவர் அவர்கட்கு அகப்படாமல் தம்மடியாரை ஒளிக்கவும் ஒளிப்பர் .

                                             திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...