திரு ஈங்கோய் மலை




திரு ஈங்கோய்மலை
(திருவிங்கநாதமலை)

     சோழ நாட்டு, காவிரி வடகரையில் உள்ள பாடல் பெற்ற திருத்தலங்களுள் இது கடைசித் திருத்தலம்.

     இதற்குநேர் எதிரில், காவிரி தென் கரையில் உள்ள முதல் திருத்தலமான வாட்போக்கி உள்ளது.

     திரு "ஈங்கோய்மலை" என்பது தற்போது மக்கள் வழக்கில், "திருவிங்கநாத மலை" என்று வழங்கப்படுகின்றது.

         திருச்சி - கரூர் சாலை வழியிலுள்ள குளித்தலை என்ற ஊரிலிருந்து காவிரி ஆற்றைக் கடந்து சென்றால் காவிரியின் வடகரையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

இறைவர்              : மரகதாசலேசுவரர், மரகத நாதர்.

இறைவியார்           : மரகதவல்லி.

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - வானத்துயர்தண் மதிதோய் 

     முன்னர் ஆதிசேடனும் வாயுவும் தத்தம் வல்லமையை நிலை நாட்டிடக் கடும் போரில் ஈடுபட்டனர். அச்சமயம் ஆதிசேடனால் முழுவதுமாக மூடப்பட்டிருந்த மேரு மலையிலிருந்து வைரம், சிவப்பு மணி, மரகதம், மாணிக்கம் மற்றும் நீலம் ஆகியவை சிதறி விழுந்தன. அவ்வாறு மரகதம் வீழ்ந்த இடமே திருஈங்கோய்மலை என்பர். இதன் காரணமாகவே இங்குள்ள மூலவர் மரகதாலேசுவரர் ஆனார். ஏனைய மணிகள் வீழ்ந்த இடங்களும் சிவத்தலங்களே: வைரம் திருப்பாண்டிக் கொடிமுடியிலும், மாணிக்கம் திருவாட்போக்கியிலும் (இது திரு ஈங்கோய் மலைக்கு அருகிலேயே உள்ளதாகும்), நீலம் பொதிகை மலையிலும், சிவப்புக் கல் திருவண்ணாமலையில் வீழ்ந்தனவாம்.

         சோழ நாட்டுத் தலங்களுள் காவிரியின் வடகரையில் உள்ள திருமுறைத் தலங்களுள் இது கடைசித்தலம். தமிழ்நாட்டிலுள்ள கரூர் மாவட்டத்தில் குளித்தலை அருகில் இருக்கும் மூன்று திருத்தலங்களையும் ஒரே நாளில் காலை, பகல் மற்றும் மாலை வேளைகளில் சென்று வணங்கினால் புண்ணியம் என்று கூறப்படுகிறது. கார்த்திகை மாதத்து திங்கட்கிழமையன்று இவ்வாறு தரிசனம் செய்தால் அது மேலும் சிறப்பு. இவற்றுள் திருஈங்கோய்மலை காவிரி வடகரைத் தலம். மற்ற இரண்டு தலங்களான திருவாட்போக்கியும், கடம்பந்துறையும் காவிரி தென்கரைத் தலங்கள். அவ்வகையில் திருஈங்கோய்மலை தலத்தில் உள்ள மரகதாசலேசுவரரை மாலையில் வழிபடுவது மிகவும் பலனுடையது என்று கருதப்படுகிறது. காலையில் கடம்பர் கோயிலையும் (கடம்பந்துறை), நண்பகலில் வாட்போக்கியையும் வழிபட வேண்டும். இவ்வாறு ஒரே நாளில் தரிசிப்பதற்கு எல்லா நாள்களும் ஏற்றவை எனினும், கார்த்திகைச் சோமவாரம் சிறப்பான நாளாகச் சொல்லப்படுகிறது.

         சிவபெருமானின் பாடல் பெற்ற தலங்களில், மலை மீது இருக்கும் கோயில்கள் மிகக்குறைவு. அவற்றில் ஒன்று திருச்சி மாவட்டம் காவிரி வடகரைத் தலமான ஈங்கோய்மலை. அகத்தியர் ஈ உருவத்தில் இங்குள்ள இறைவனை வழிபட்டதால் ஈங்கோய்மலை என்று பெயர் வந்தது. அம்பாள் இறைவனை வழிபட்ட இடமாதலின் இத்தலத்திற்கு சிவசக்திமலை என்றும் பெயருண்டு. இத்தலத்து இறைவன் ஒரு சிறிய குன்றின் மீது அமர்ந்திருக்கிறார். திருவாட்போக்கி மலையைப் போன்று அவ்வளவு உயரமில்லை. சுமார் 500 படிகள் ஏறினால் கோயிலை  வந்து அடையலாம். மலை ஏறும் படிகள் சுமாராக அமைந்திருப்பதாலும், வழியில் இளைப்பாற ஒரே ஒரு மண்டபத்தைத் தவிர வேறு வசதி இல்லாததாலும், நிதானமாகத் தான் மலையேற வேண்டும். ஏறும் வழியில் நிழல் தரும் மரங்களும் இல்லை.

     மலை அடிவாரத்தில் கொங்கு நாட்டுத் தலங்களுக்கே உரித்தான கல் விளக்குத் தூண் இங்கு காணப்படுகிறது. போக முனிவர் சந்நிதியும் அடிவாரத்திலுள்ளது. சிவபெருமானின் சந்நிதியில் உள்ள தீபம் காற்று பட்டாலும் அசையாத கொழுந்துடன் விளங்குகிறது. அதனால் சுவாமிக்கு அசல ஈசுவரர் என்ற பெயரும் உண்டு.

     கோயிலுள் நுழையும் போது தட்சிணாமூர்த்தி, விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. வலமாக வரும்போது கோயிலின் விசாலமான பழைமையான திறந்தவெளி அமைப்பைக் காண முடிகிறது. உள் பிரகாரத்தில் விநாயகர், முருகர், நவக்கிரகம், நால்வர் முதலிய சந்நிதிகள் உள்ளன. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோயில் விமானங்கள், கொடிமரங்கள் உள்ளன. பால தண்டாயுதபாணி சந்நிதி தனியே உள்ளது.

         மூலவர் மரகதாசலேசுவரர் பெயருக்கு ஏற்றாற் போல மரகதம் போன்று பச்சை நிறத்தில் அமைந்துள்ளார். சிவராத்திரி நாளின் முனபின் நாட்களில் சூரிய ஒளி இத்தல இறைவன் மீது படுகிறது. அச்சமயம் இலிங்கம் பல வண்ணத்தில் காட்சி அளிப்பதைக் காணலாம். சிவனுக்கு தீபாராதனை காட்டும்போது லிங்கத்தில் ஜோதி ஜொலிப்பதைக் காணலாம். சங்ககாலப் புலவர் நக்கீரர் இத்தல இறைவன் மீது ஈங்கோய் எழுபது என்ற் பாமாலை பாடியுள்ளார். அம்காள் கருவறை கோஷ்டத்தில் மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கையும், மற்றொரு துர்க்கை சாந்தமாகவும் உள்ளனர். ஒரே இடத்தில் துர்க்கையின் இரண்டு வடிவங்களையும் காண்பது அரிதான ஒன்று.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "நீச்சு அறியாது ஆங்கு ஓய் மலைப் பிறவி ஆர்கலிக்கு ஓரு வார் கலமாம் ஈங்கோய் மலை வாழ் இலஞ்சியமே" என்று போற்றி உள்ளார்.

         காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.



திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 321
நீடு திருஆச் சிராமம் மன்னும்
         நேர்இழை பாகத்தர் தாள்வணங்கி,
கூடும் அருளுடன் அங்குஅமர்ந்து,
         கும்பிடும் கொள்கைமேல் கொண்டுபோந்தே,
ஆடல் பயின்றார் பதிபிறவும்
         அணைந்து, பணிந்து,அடி போற்றிஏகி,
சேடர்கள் வாழுந் திருப்பைஞ்ஞீலிச்
         சிவபெருமானை இறைஞ்சச் சென்றார்.

         பொழிப்புரை : என்றும் அருள் நீடுகின்ற திருப்பாச்சிலாச்சிராமத்தில் நிலையாய் எழுந்தருளியிருக்கும் உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட இறைவரின் திருவடிகளை வணங்கி, பெருகிவரும் சிவபெருமானின் அருளுடனே அங்கிருந்த பிள்ளையார், மேலும் பல பதிகளை வணங்கும் திருக்குறிப்பால் சென்று, ஆடலில் மகிழ்வுடைய இறைவரின் திருப்பதிகள் பலவற்றையும் அடைந்து வணங்கித் திருவடிகளைப் போற்றி, மேலும் சென்று அறிவால் சிறந்தவர் உறைகின்ற `திருப்பைஞ்ஞீலிச்' சிவபெருமானை வணங்குவதற்காகச் சென்றருளினார்.


பெ. பு. பாடல் எண் : 322
பண்பயில் வண்டினம் பாடும்சோலைப்
         பைஞ்ஞீலி வாணர் கழல்பணிந்து,
மண்பர வும்தமிழ் மாலைபாடி,
         வைகி, வணங்கி, மகிழ்ந்து, போந்து,
திண்பெரும் தெய்வக் கயிலையில்வாழ்
         சிவனார் பதிபல சென்றுஇறைஞ்சி,
சண்பை வளம்தரு நாடர்வந்து
         தடந்திரு ஈங்கோய் மலையைச்சார்ந்தார்.

         பொழிப்புரை : பண்களைப் பயிலும் வண்டினங்கள் பாடுதற்கு இடனான சோலைகள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலி இறைவர் திருவடிகளை வணங்கி, உலகத்தவர் போற்றும் தமிழ் மாலையான திருப்பதிகத்தைப் பாடி, அத்திருப்பதியில் தங்கி வணங்கி மகிழ்ந்து, மேற்சென்று, திண்ணிய பெரிய தெய்வத் தன்மை வாய்ந்த திருக்கயிலை மலையில் வாழ்கின்ற சிவபெருமானின் பதிகள் பலவற்றையும் சென்று வணங்கி, வளம் தருகின்ற சீகாழிப் பதிக்குத் தலைவரான பிள்ளையார், `திரு ஈங்கோய்' மலையைச் சார்ந்தார்.


பெ. பு. பாடல் எண் : 323
செங்கண் குறவரைத் தேவர்போற்றும்
         திகழ்திரு ஈங்கோய் மலையின்மேவும்
கங்கைச் சடையார் கழல்பணிந்து,
         கலந்த இசைப்பதி கம்புனைந்து,
பொங்கர்ப் பொழில்சூழ் மலையும்மற்றும்
         புறத்துஉள்ள தானங்கள் எல்லாம்போற்றி,
கொங்கில் குடபுலம் சென்று அணைந்தார்
         கோதுஇல் மெய்ஞ்ஞானக் கொழுந்து அனையார்.

         பொழிப்புரை : சிவந்த கண்களை உடைய குறவரைத் தேவர்கள் வந்து வணங்குவதற்கு இடனான, `திருஈங்கோய்\' மலையில் வீற்றிருக்கும் கங்கையைச் சடையில் கொண்ட சிவபெருமானைப் பணிந்து, இசையுடன் பொருந்திய திருப்பதிகத்தைப் பாடி, பெருகிய சோலைகள் சூழ்ந்த மலையையும் மற்றும் அயலில் உள்ள இடங்கள் எல்லாவற்றையும் வணங்கிக் கொங்கு நாட்டின் மேல்பகுதியில், குற்றம் இல்லாத மெய்ஞ்ஞானக் கொழுந்தனைய ஆளுடைய பிள்ளையார் சென்று சேர்ந்தார்.

         இவ்விடத்துப் பாடியருளியது, `வானத்துயர் தண்' (தி.1 ப.70) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணிலமைந்த பதிகம் ஆகும்.

     இங்கு மலை எனக் குறிப்பது திருவாட்போக்கி (ஐயர் மலை) யாகலாம். ஆனால் இதனைப் பின்னர் வந்து வணங்குவதாக ஆசிரியர், 339ஆம் பாடலிலும் குறிக்கின்றார்.


பெ. பு. பாடல் எண் : 339
செல்வக் கருவூர்த் திருவா னிலைக்கோயில் சென்றுஇறைஞ்சி
நல்லிசை வண்தமிழ்ச் சொல்தொடை பாடிஅந் நாடுஅகன்று
மல்கிய மாணிக்க வெற்பு முதலா வணங்கிவந்து
பல்கு திரைப்பொன்னித் தென்கரைத் தானம் பலபணிவார்.

         பொழிப்புரை : செல்வ வளம் பொருந்திய கருவூரில் `திருவானிலை' என்ற கோயிலில் சென்று வணங்கி, நல்ல இசையுடன் கூடிய வளமான தமிழ்ச் சொல் மாலையான திருப்பதிகத்தைப் பாடி, கொங்கு நாடான அதைவிட்டு அகன்று, பொருந்திய மாணிக்கமலை (இரத்தினகிரி) எனும் `திருவாட்போக்கியினை\' முதலில் வணங்கி, மேற்சென்று, பெருகும் அலைகளை உடைய காவிரியின் தென்கரைப் பதிகள் பலவற்றையும் வணங்குபவராய்,

         திருக்கருவூர்த் திருவானிலையில் அருளிய பதிகம் `தொண்டெலாமலர்' எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

     பொன்னித் தென்கரைத் தானங்கள் என்பன கருவூருக்கும் திருவாட்போக்கிக்கும் (இரத்தினகிரிக்கும்) இடைப்பட்ட திருப்பதிகளாகும். இவை எவையென அறியக் கூடவில்லை. திருவாட்போக்கியில் அருளிய பதிகமும் கிடைத்திலது.


திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

1.070    திருஈங்கோய்மலை                   பண் - தக்கேசி
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
வானத்துஉயர்தண் மதிதோய்சடைமேல் மத்த மலர்சூடி,
தேன்ஒத்தனமென் மொழிமான்விழியாள் தேவி பாகமாக்
கானத்துஇரவில் எரிகொண்டுஆடுங் கடவுள், உலகுஏத்த
ஏனத்திரள்வந்து இழியுஞ்சாரல் ஈங்கோய் மலையாரே.

         பொழிப்புரை :வானத்தில் உயர்ந்து விளங்கும் குளிர்ந்த சந்திரன் தோயும் சடைமுடிமேல் ஊமத்தம் மலர்களைச் சூடித் தேன்போன்ற இனிய மொழிகளையும் மான் விழிபோலும் கண்களையுமுடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டு சுடுகாட்டில் இரவில் எரி யேந்தி ஆடும் இறைவர் உலகமக்கள் உணர்ந்து போற்றுமாறு பன்றிகள் பலகூடி இறங்கிவரும் சாரலையுடைய திருவீங்கோய்மலையில் எழுந்தருளியுள்ளார்.

பாடல் எண் : 2
சூலப்படைஒன்று ஏந்திஇரவில் சுடுகாடு இடமாகக்
கோலச்சடைகள் தாழக்கு ழல்யாழ் மொந்தை கொட்டவே,
பால்ஒத்துஅனைய மொழியாள்காண ஆடும் பரமனார்,
ஏலத்தொடுநல் இலவங்கமழும் ஈங்கோய் மலையாரே.

         பொழிப்புரை :முத்தலைச் சூலம் ஒன்றைத் தமது படைக்கலனாக ஏந்தி இரவில் சுடுகாட்டை இடமாகக் கொண்டு அழகிய சடைகள் தாழ்ந்து தொங்கவும், குழல் யாழ் மொந்தை ஆகிய இசைக்கருவிகள் முழங்கவும், பால் போன்று இனிய மொழியினை உடைய பார்வதிதேவி காண ஆடும் பரமர் ஏலம் நல்ல இலவங்கம் முதலியன கமழும் திருவீங்கோய்மலையின்கண் எழுந்தருளியுள்ளார்.

பாடல் எண் : 3
கண்கொள்நுதலார் கறைகொள்மிடற்றார்
         கரியின் உரிதோலார்
விண்கொண்மதிசேர் சடையார்விடையார்
         கொடியார் வெண்ணீறு
பெண்கொள்திருமார்பு அதனில்பூசும்
         பெம்மான் எமைாள்வார்
எண்கும்அரியும் திரியுஞ்சாரல்
         ஈங்கோய் மலையாரே.

         பொழிப்புரை :கண் ஒன்றைக்கொண்ட நுதலினரும், விடக்கறை பொருந்திய கண்டத்தினரும், யானையின் தோலை உரித்துப் போர்த்தவரும், வானில் விளங்கும் மதியைச்சூடிய சடையினரும், விடைக் கொடியினரும், ஒருபாகமாக உமையம்மையைக் கொண்டுள்ளவரும் திருவெண்ணீற்றைத் திருமேனியின் மார்பகத்தே பூசுபவரும் ஆகிய எமை ஆள்பவராகிய பெருமான் கரடிகளும், சிங்கங்களும் திரியும் சாரலை உடைய திருவீங்கோய்மலையில் எழுந்தருளியுள்ளார்.


பாடல் எண் : 4
மறையின்இசையார் நெறிமென்கூந்தல்
         மலையான் மகளோடும்
குறைவெண்பிறையும் புனலும்நிலவும்
         குளிர்புன் சடைதாழப்
பறையுங்குழலும் கழலும்ஆர்ப்பப்
         படுகாட்டு எரிஆடும்
இறைவர்சிறைவண்டு அறைபூஞ்சாரல்
         ஈங்கோய் மலையாரே.

         பொழிப்புரை :சிறகுகளையுடைய வண்டுகள் ஒலிக்கும் அழகிய சாரலை உடைய திருவீங்கோய்மலை இறைவர் வேதங்களை இனிய இசையோடு பாடுபவர். வளைவுகளோடு கூடிய மென்மையான கூந்தலையுடைய மலையரையன் மகளாகிய பார்வதி தேவியோடு, கலைகள் குறைந்த வெண்மையான பிறையும் கங்கையும் விளங்கும் குளிர்ந்த மென்மையான சடைகள் தாழ, பறை குழல் இவற்றோடு காலிற்கட்டிய கழலும் ஆரவாரிக்கப் பிணங்களை எரிக்கும் சுடுகாட்டுள் எரியேந்தி ஆடுபவராவார்.


பாடல் எண் : 5
நொந்தசுடலைப் பொடிநீறுஅணிவார்
         நுதல்சேர் கண்ணினார்
கந்தமலர்கள் பலவுந்நிலவு
         கமழ்புன் சடைதாழப்
பந்துஅண்விரலாள் பாகமாகப்
         படுகாட்டு எரிஆடும்
எந்தம்அடிகள் கடிகொள்சாரல்
         ஈங்கோய் மலையாரே.

         பொழிப்புரை :நறுமணங்களைக் கொண்டுள்ள சாரலையுடைய திருவீங்கோய்மலை இறைவர், இறந்தார் உடலை எரிக்கும் சுடலையில் விளைந்த சாம்பற்பொடியைத் திருநீறாக அணிந்தவர். நெற்றியைச் சார்ந்துள்ள விழியையுடையவர். மணம் பொருந்திய மலர்கள் பலவும் விளங்கும் மணங்கமழ் செஞ்சடைகள் தாழ்ந்து தொங்கப்பந்து சேரும் கைவிரல்களையுடைய உமையம்மை ஒருபாகமாக விளங்கச் சுடுகாட்டில் எரியாடுபவர்.


பாடல் எண் : 6
நீறுஆர்அகலம் உடையார்நிரையார்
         கொன்றை அரவோடும்
ஆறுஆர்சடையார் அயில்வெங்கணையால்
         அவுணர் புரமூன்றும்
சீறாஎரிசெய் தேவர்பெருமான்
         செங்கண் அடல்வெள்ளை
ஏறுஆர்கொடியார் உமையாளோடும்
         ஈங்கோய் மலையாரே.

         பொழிப்புரை :உமையம்மையோடு திருவீங்கோய்மலையில் எழுந்தருளியுள்ள இறைவர் திருநீறு அணிந்த மார்பினையுடையவர். சரஞ்சரமாக வரிசையாய் மலரும் கொன்றை மாலைபாம்பு கங்கை ஆகியவற்றை அணிந்த சடைமுடியை உடையவர். கூரிய கொடியகணையால் அசுரர்களின் முப்புரங்களையும் சினந்து எரித்த தேவர்தலைவர். சிவந்த கண்களையும் வலிமையையும் உடைய வெண்மையான விடையேற்றுக் கொடியினை உடையவர்.


பாடல் எண் : 7
வினைஆயினதீர்த்து அருளேபுரியும்
         விகிர்தன், விரிகொன்றை
நனைஆர்முடிமேல் மதியஞ்சூடும்
         நம்பான், நலமல்கு
தனையார்கமல மலர்மேல்உறைவான்
         தலையோடு, அனல்எந்தும்
எனைஆள்உடையான் உமையாளோடும்
         ஈங்கோய் மலையாரே.

         பொழிப்புரை :உமையம்மையோடு திருவீங்கோய்மலையில் எழுந்தருளிவிளங்கும் இறைவர். வினைகளானவற்றைத் தீர்த்து அருளையே வழங்கும் விகிர்தர். விரிந்து தழைத்த கொன்றை அரும்புகள் சூடிய முடிமீது பிறைமதியையும் சூடும் நம்பர். அழகு நிறைந்ததும் தலைமை உடையதுமான தாமரை மலர்மேல் உறையும் பிரமனின் தலையோட்டுடன் அனலையும் ஏந்தி என்னை அடிமையாகக் கொண்டருளுபவர்.


பாடல் எண் : 8
பரக்கும்பெருமை இலங்கைஎன்னும்
         பதியில் பொலிவுஆய
அரக்கர்க்குஇறைவன் முடியும்தோளும்
         அணிஆர் விரல்தன்னால்
நெருக்கிஅடர்த்து, நிமலா,போற்றி
         என்று நின்றுஏத்த
இரக்கம்புரிந்தார் உமையாளோடும்
         ஈங்கோய் மலையாரே.

         பொழிப்புரை :உமையம்மையாரோடு எழுந்தருளியுள்ள ஈங்கோய்மலை இறைவர், எங்கும் பரவிய பெருமையை உடைய இலங்கை என்னும் நகரில் புகழோடு விளங்கிய அரக்கர்களுக்குத் தலைவனாகிய இராவணன் தலைகளையும் தோள்களையும் தமது அழகு பொருந்திய கால்விரலால் நெருக்கி அடர்த்து, பின் அவன் `நிமலா போற்றி` என்று ஏத்த இரக்கம் காட்டி அருள்புரிந்தவராவார்.


பாடல் எண் : 9
வரிஆர்புலியின் உரிதோல்உடையான்,
         மலையான் மகளோடும்
பிரியாதுஉடனாய் ஆடல்பேணும்
         பெம்மான், திருமேனி
அரியோடுஅயனும் அறியாவண்ணம்
         அளவுஇல் பெருமையோடு
எரியாய்நிமிர்ந்த எங்கள்பெருமான்
         ஈங்கோய் மலையாரே.

         பொழிப்புரை :ஈங்கோய்மலை இறைவர் வரிகளோடு கூடிய புலித் தோலை உடையாகக் கட்டியவர். மலையரையன் மகளாகிய பார்வதிதேவியோடு பிரியாது அவளுடனாக இருந்து ஆடுதலை விரும்பும் தலைமை சான்றவர். தம்திருமேனியின் அடிமுடிகளைத் திருமாலும் நான்முகனும் அறியாதபடி அளவற்ற பெருமை உடையவராய் எரிஉருவத்தோடு ஓங்கிநின்ற எங்கள் பெருமான் ஆவார்.


பாடல் எண் : 10
பிண்டிஏன்று பெயராநிற்கும்
         பிணங்கு சமணரும்,
மண்டைகலனாக் கொண்டுதிரியும்
         மதிஇல் தேரரும்,
உண்டிவயிறார் உரைகள்கொள்ளாது,
         உமையோடு உடன்ஆகி
இண்டைச்சடையான் இமையோர்பெருமான்
         ஈங்கோய் மலையாரே.

         பொழிப்புரை :அருகதேவன் வீற்றிருக்கும் அசோகமரம் என அம் மரத்தின் பெருமை கூறிப்பெயர்ந்து செல்லும் மாறுபட்ட சமயநெறியில் நிற்கும் சமணர்களும், பிச்சை ஏற்கும் மண்டை என்னும் பாத்திரத்தைக் கையில் ஏந்தித்திரியும் அறிவற்ற புத்தரும் உண்டு பருத்த வயிற்றினராய்க் கூறும் உரைகளைக் கொள்ளாது, உமையம்மையாரோடு உடனாய், இண்டை சூடிய சடைமுடியினனாய், இமையோர் தலைவனாய், ஈங்கோய் மலையில் எழுந்தருளியுள்ள எம்பெருமானைச் சென்று வழிபடுவீராக.


பாடல் எண் : 11
விழவுஆர்ஒலியும் முழவும்ஓவா
         வேணு புரந்தன்னுள்
அழல்ஆர்வண்ணத்து அடிகள்அருள்சேர்
         அணிகொள் சம்பந்தன்
எழில்ஆர்சுனையும் பொழிலும்புடைசூழ்
         ஈங்கோய்மலை ஈசன்
கழல்சேர்பாடல் பத்தும்வல்லார்
         கவலை களைவாரே.

         பொழிப்புரை :திருவிழாக்களின் ஓசையும் முழவின் ஓசையும் நீங்காத வேணுபுரம் என்னும் சீகாழிப்பதியில் அழல் வண்ணனாகிய சிவபிரானின் அருள்சேரப் பெற்ற அழகிய ஞானசம்பந்தன் எழிலார்ந்த சுனையும் பொழிலும் புடைசூழ்ந்து விளங்கும் திருவீங்கோய்மலை ஈசனின் திருவடிகளைப் பரவிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர்கள் கவலைகள் நீங்கப் பெறுவர்.

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...