பழநி - 0199. விரை மருவு





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

விரை மருவு (பழநி)

பழநியப்பா! 
உமது திருவடியை எனது தலையில் சூட்டி
 திருப்புகழ்ப் பாடி உய்யுமாறு அருள்.

தனதனன தனன தந்த தனதனன தனன தந்த
     தனதனன தனன தந்த ...... தனதான


விரைமருவு மலர ணிந்த கரியபுரி குழல்ச ரிந்து
     விழவதன மதிவி ளங்க ...... அதிமோக

விழிபுரள முலைகு லுங்க மொழிகுழற அணைபு குந்து
     விரகமயல் புரியு மின்ப ...... மடவார்பால்

இரவுபக லணுகி நெஞ்ச மறிவழிய வுருகு மந்த
     இருளகல வுனது தண்டை ...... யணிபாதம்

எனதுதலை மிசைய ணிந்து அழுதழுது னருள்வி ரும்பி
     யினியபுகழ் தனைவி ளம்ப ...... அருள்தாராய்

அரவில்விழி துயில்மு குந்த னலர்கமல மலர்ம டந்தை
     அழகினொடு தழுவு கோண்டல் ...... மருகோனே

அடலசுர ருடல்பி ளந்து நிணமதனில் முழுகி யண்ட
     அமரர்சிறை விடுப்ர சண்ட ...... வடிவேலா

பரவைவரு விடம ருந்து மிடறுடைய கடவுள் கங்கை
     படர்சடையர் விடைய ரன்ப ...... ருளமேவும்

பரமரரு ளியக டம்ப முருகஅறு முகவ கந்த
     பழநிமலை தனில மர்ந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


விரைமருவு மலர் அணிந்த, கரிய புரி குழல் சரிந்து
     விழ, வதன மதி விளங்க, ...... அதிமோக

விழி புரள, முலை குலுங்க, மொழி குழற, அணை புகுந்து,
     விரகமயல் புரியும் இன்ப ...... மடவார்பால்,

இரவு பகல் அணுகி, நெஞ்சம் அறிவு அழிய உருகும் அந்த
     இருள் அகல, உனது தண்டை ...... அணிபாதம்

எனது தலை மிசை அணிந்து, அழுது அழுது, உன் அருள் விரும்பி
     இனிய புகழ் தனை விளம்ப ...... அருள்தாராய்.

அரவில் விழி துயில் முகுந்தன், அலர் கமல மலர் மடந்தை
     அழகினொடு தழுவு கொண்டல் ...... மருகோனே!

அடல் அசுரர் உடல் பிளந்து, நிணம் அதனில் முழுகி அண்ட,
     அமரர்சிறை விடுப்ர சண்ட ...... வடிவேலா!

பரவை வரு விடம் அருந்து மிடறு உடைய கடவுள், கங்கை
     படர்சடையர், விடையர், ன்பர் ...... உளமேவும்

பரமர் அருளிய கடம்ப! முருக! அறுமுகவ! கந்த!
     பழநிமலை தனில் அமர்ந்த ...... பெருமாளே.
    
 
பதவுரை
 

      அரவில் --- ஆதிசேடன் மீது,

     விழி துயில் முகுந்தன் --- அறிதுயில் புரிகின்றவரும் முத்தியைத் தருபவரும்,

     அலர் கமல மலர் மடந்தை --- மலர்ந்த தாமரை மலரில் எழுந்தருளியுள்ள இலக்குமி தேவி,

     அழகினொடு தழுவு கொண்டல் --- அழகோடு தழுவுகின்ற நீலமேக வண்ணரும் ஆகிய நாராயணரது,

      மருகோனே --- திருமருகரே!

      அடல் அசுரர் உடல் பிளந்து --- வலிமை நிறைந்த அசுரருடைய உடல்களைப் பிளந்து,

     நிணம் அதனில் முழுகி --- அவ்வுடலின் கொழுப்பில் முழுகி,

     அண்ட அமரர் சிறை விழு --- விண்ணுலக வாசிகளாகிய தேவர்களது சிறையை விடுவித்த

     பிரசண்ட வடிவேலா --- மிகுந்த வேகமும் கூர்மையும் உடைய வேலாயுதரே!

      பரவை வரு விடம் அருந்தும் --- கடலில் தோன்றிய ஆலகால நஞ்சினையுண்ட,

     மிடறு உடைய கடவுள் --- நீலகண்டத்தையுடைய கடவுளும்,

     கங்கை படர் சடையர் --- கங்கா நதி பரந்துள்ள சடை முடியுடையவரும்,

     விடையர் --- இடப வாகனத்தை யுடையவரும்,

     அன்பர் உளம் மேவும் --- அன்பு நிறைந்த அடியவர்களது உள்ளக் கோயிலில் இருப்பவரும்,

     பரமர் --- பெரிய பொருளும் ஆகிய சிவபெருமான்,

     அருளிய கடம்ப --- பெற்றருளிய கடப்ப மலர் மாலையினரே!

      முருக --- முருகக் கடவுளே!

      அறுமுகவ --- ஆறுமுகப் பெருமானே!

      கந்த --- கந்தவேளே!

      பழநிமலை தனில் அமர்ந்த --- பழநிமலை மீது எழுந்தருளியுள்ள,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

      விரை மருவு மலர் அணிந்த --- மணங் கமழும் மலர்களை அணிந்த,

     கரிய புரிகுழல் சரிந்து விழ --- கரிய சுருளுடன் கூடிய கூந்தல் சரிந்து விழவும்,

     வதன மதி விளங்க --- முகம் சந்திரனைப் போல விளங்கவும்,

     அதிமோக விழி புரள --- மிகுந்த மோகத்தைத் தரவல்ல கண்கள் புரளவும்,

     முலை குலுங்க --- முலைகள் அசையவும்,

     மொழி குழற --- சொற்கள் தழு தழுக்கவும்,

     அணை புகுந்து --- படுக்கையில் சென்று,

     விரக மயல் புரியும் --- காமச் செயல்களைப் புரிகின்ற,

     இன்ப மடவார் பால் --- இனிய விலைமகளிரிடம்,

     இரவு பகல் அணுகி --- இரவும் பகலும் நெருங்கிச் சென்று,

     நெஞ்சம் அறிவு அழிய --- உள்ளமும் உணர்வும் தன்னிலை கெடுமாறு,

     உருகும் அந்த இருள் அகல --- உருகுகின்ற அந்த அறியாமையாகிய இருள் என்னை விட்டு நீங்குமாறு,

     உனது தண்டை அணி பாதம் --- தேவரீருடைய தண்டையணிந்த திருவடிகளை,

     எனது தலைமிசை அணிந்து --- அடியேனுடைய தலையின் மீது தரித்து,

     அழுது அழுது உன் அருள் விரும்பி --- (அன்பின் மிகுதியால்) அழுது அழுது உமது திருவருளை விரும்பி,

     இனிய புகழ்தனை விளம்ப --- இனிமையான உமது திருப்புகழைப் பாட,

     அருள் தாராய் --- திருவருளைத் தருவீராக.


பொழிப்புரை


         பாம்பணையின் மீது அறிதுயில் புரிகின்றவரும் முத்தியைத் தரவல்லவரும், மலர்ந்த தாமரை மலர்மீது அமர்ந்திருக்கின்ற திருமகளை அழகாகத் தழுவுகின்றவரும், நீலமேக வண்ணரும் ஆகிய திருமாலின் திருமருகரே!

         வறிய அசுரர்களுடைய உடம்பைப் பிளந்து அவ்வுடலில் உள்ள கொழுப்பில் குளித்து, விண்ணுலக வாசிகளாகிய தேவர்களின் சிறையை விடுவித்த வேகமும் கூர்மையும் உடைய வேலாயுதத்தை ஏந்தியவரே!

         கடலில் தோன்றிய ஆலகால விடத்தையுண்ட நீலகண்டரும், எல்லாவற்றையும் கடந்தவரும், கங்காநதி பரந்துள்ள சடைமுடியுடையவரும், இடபவாகனத்தின் மீது வருபவரும், அன்புடைய அடியார்களது உள்ளக் கோயிலில் உறைபவரும், பரம்பொருளும் ஆகிய சிவபெருமான் பெற்ற கடப்பமாலை அணிந்தவரே!

         முருகக் கடவுளே!

         ஆறுமுகப் பெருமாளே!

         கந்தவேளே!

         பழநிமலை மீது எழுந்தருளியுள்ள பெருமிதமுடையவரே!

         நறுமணங் கமழ்கின்ற மலர்களை யணிந்த கரிய சுருளுடன் கூடிய கூந்தல் சரிந்து விழவும், முகமாகிய சந்திரன் விளக்கமுறவும், மிகுந்த மோகத்தைச் செய்யும் கண்கள் புரளவும், தனங்கள் அசையவும், சொற்கள் குழறவும், படுக்கையிற் புகுந்து காமலீலைகளைச் செய்கின்ற, இன்பத்தையுடைய விலைமாதர்களிடம், இரவு பகலாக நெருங்கிச் சென்று உள்ளமும் உணர்வும் தன்னிலை கெடுமாறு உருகுகின்ற இந்த அறியாமையிருள் நீங்குமாறு, உமது தண்டையணிந்த திருவடிகளை அடியேனுடைய தலையில் சூட்டி, அழுது அழுது உமது திருவருளை விரும்பி இனிய திருப்புகழைப் பாடி உய்யுமாறு உமது திருவருளைத் தருவீராக.


விரிவுரை


இரவு பகல் அணுகி நெஞ்சம் அறிவு அழிய உருகும் அந்த இருள் அகல ---

விலைமாதரிடம் அறுபது நாழிகையும் ஒழிவின்றி நெருங்கியிருந்து, அதனால் உள்ளமும் அறிவும் தத்தம் செயலினின்றும் நிலைகெட்டழியுமாறு அவர்களை நினைத்து விடபுருடர்கள் உள்ளம் உருகுவார்கள். இறைவனை நினைந்து உருகார்.

இது அறியாமையால் நிகழ்கின்றது. பொருளை விளங்கப் புரியாது, குழியும் வழியும் தெரியவொட்டாது இருள் நம்மை மயக்கும். அதுபோல அறியாமை யாகிய இருள், எது இன்பம், எது துன்பம் என்ற தெளிவை மறைக்கும். முருகப் பெருமான் திருவடி நூறு கோடி சூரியவொளியுடன் கூடியது.

  உத்தியிடை கடவுமர கதஅருண குலதுரக
    உபலளித கனகரத சதகோடி சூரியர்கள்
  உதயம்என அதிகவித கலபகக மயிலின் மிசை
    உகமுடிவின் இருள்அகல ஒரு சோதி வீசுவதும்”       ---  சீர்பாத வகுப்பு

ஒளியுண்டாகுமாயின் இருளைப் பிடித்துத் தள்ள ஆள் தேடவேண்டாமே? அதுபோல ஞான பண்டிதனுடைய ஞானமேயான திருவடியின் ஒளி வீசுமாயின் அஞ்ஞான இருள் தானே அகன்று ஒளியும்.

தண்டை அணி பாதம் எனது தலைமிசை அணிந்து ---

தண்டையணி பாதம் என்றதனால் இளமை மாறாத திருவடி என உணர்க. தண்டை - குழந்தைகள் அணிகின்ற அணிகலன். முருகர் என்றும் இளமையுடையவர்; அதனால் அவருடைய திருவடியைச் சிற்றடியென்றே அருணகிரிநாதர் பல இடங்களில் குறிப்பிடுகின்றார்.

  சிற்றடியும் முற்றிய பனிருதோளும்”  ---  (பக்கரை) திருப்புகழ்

  சேவடி நீட்டும் பெருமான் மருகன்தன் சிற்றடியே”     ---  கந்தர் அலங்காரம்.

அயன் கையெழுத்தை அழிக்கின்ற, " ரப்பர்" முருகன் திருவடி என உணர்க.

சேல்பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில், தேம் கடம்பின்
மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம், மா மயிலோன்
வேல்பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும், அவன்
கால்பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே.
                                                                             --- கந்தர் அலங்காரம்.

இத்திருப்புகழில் அருணகிரிநாதர் முருகப் பெருமானுடைய திருவடியைத் தனது சென்னிமேல் சூட்டுமாறு விண்ணப்பம் புரிகின்றார். அரியவற்றுள் எல்லாம் அரிய பெரிய பேறு இறைவன் திருவடிசூடப் பெறுதல். அத்திருவடி தேவருக்கும் மூவருக்குங் கிடைத்தற்கு அரியது.

அரிப் பிரமர் அளப்பரிய பதக் கமலம்”             ---  (குறிப்பறிய) திருப்புகழ்

அரிய சமயம் ஒருகோடி அமரர் சரணர் சதகோடி
   அரியும் அயனும் ஒரு கோடி            இவர்கூடி
அறிய அறிய அறியாத அடிகள்”                   ---  (சுருதிமறை) திருப்புகழ்

அண்டத்து இறைவன் பொன்முடிக்கும்
   அமலக் கமலன் மணிமுடிக்கும்
அமரர் முனிவர் தலைகளுக்கும்
   அணியப் பணியக் கிடையாத
தண்டைப் பதம்”                              ---  திருமலை முருகன் பிள்ளைத் தமிழ்

இத்தகைய முருகப் பெருமானுடைய திவ்ய சரணார விந்தத்தைத் தன் தலை மீது சூட்டியருளுமாறு சுவாமிகள் வேலவனை வேண்டி நின்றனர். வேண்டிய போகமது வேண்டியபோதடியார் வேண்டவொறாதுதவு பெருமாளாகிய முருகர், அருணகிரியாருடைய முடிமீது அடிமலர் சூட்டியருளினார்.

  சாடுந் தனிவேல் முருகன் சரணம்
  சூடும்படி தந்தது சொல்லும் அதோ”        ---  கந்தர் அநுபூதி.

 சேல்பட்டு அழிந்தது செந்தூர் வயல்பொழில், தேங் கடம்பின்
மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம், மா மயிலோன்
வேல்பட்டு அழிந்தது வேலையும், சூரனும், வெற்பும்! அவன்
கால்பட்டு அழிந்தது இங்கு, என் தலை மேல், அயன் கையெழுத்தே!!
                                                                             ---  கந்தர் அலங்காரம்.

திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் அப்பர் சுவாமிகள் வேண்ட, சிவபெருமான் அவருடைய சென்னிமேல் திருவடியைச் சூட்டியருளினார். அந்த அருள் திறத்தை அப்பரடிகள் கூறுகின்றனர்.

நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
   நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினந்திருகு களிற்றுஉரிவைப் போர்வை வைத்தார்
   செழுமதியந் தளிர் வைத்தார் சிறந்து வானோர்
இனந்துருவி மணிமகுடத் தேறத்துற்ற
   இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பிலகி
நனைந்தனைய திருவடிஎன் தலைமேல் வைத்தார்
   நல்லூர்எம் பெருமானார் நல்லவாறே.


அழுது அழுது உன் அருள் விரும்பி ---

இறைவனுடைய திருவருளைப் பெறுவதற்குச் சிறந்த எளிய வழி அப் பெருமானுடைய திருவடிகளை நினைந்து உள்ளங் குழைந்து உருகி, கண்ணீர் ஆறாய்ப் பெருக அழுவதேயாம்.

அழுது அடியடைந்த அடிகளாம் மணிவாசகப் பெருந்தகையார். “அழுதால் உன்னைப் பெறலாமே” என்கின்றார்.

ஒழியாப் பிறவி எடுத்து ஏங்கி ஏங்கி உழன்ற நெஞ்சே!
அழியாப் பதவிக்கு அவுடதம் கேட்டி, அநாதியனை,
மழுமான் கரத்தனை, மால்விடை யானை மனத்தில்உன்னி,
விழியால் புனல்சிந்தி, விம்மி அழு, நன்மை வேண்டுமென்றே.   ---  பட்டினத்தார்

அழுது அழுது ஆட்பட முழுதுமலர்ப் பொருள் தந்திடாயோ”    ---  (விரகற) திருப்புகழ்

இனிய புகழ்தனை விளம்ப அருள்தாராய் ---

முருகனுடைய திருப்புகழ் மிகமிக இனிமையானது. சர்க்கரைப் பாகு செய்து அதில் தானே உதிர்ந்த மாம்பழம், மாதுளம்பழம், திராட்சைப்பழம், பலாப்பழம், ஆரஞ்சுப்பழம், முதலிய பழங்களைப் பிழிந்து, அதில் நெய்யும் பாலும் விட்டுக் காயச்சி இறக்கிவைத்து இளஞ்சூட்டில் கொல்லிமலைத் தேனையும் விட்டுக் கிண்டி வைத்தால் அது எப்படியிருக்குமோ அதைவிட மதுரமானது முருகன் திருப்புகழ்.

எதிரும் புலவன் வில்லிதொழ
   எந்தை உனக்குஅந் தாதிசொல்லி
ஏழைப்புலவர் செவிக்குருத்தோடு
   எறியும் கருவி பறித்தெரிந்த,
அதிரும் கடல்சூழ் பெரும்புவியில்
   அறிந்தார் அறியார் இரண்டுமில்லார்,
ஆரும் எனைப்போல் உனைத் துதிக்க
   அளித்த, அருண கிரிநாதன்
உதிரும் கனியை நறும்பாகில்
   உடைத்துக் கலந்து, தேனைவடித்து
ஊற்றி அமுதின் உடன்கூட்டி,
   ஒக்கக் குழைத்த ருசிபிறந்து
மதுரம் கனிந்த திருபுகழ்ப்பா
   மாலை புனைந்தான் வருகவே!
வரதச் சரதத் திருமலையின்
   மழலைக் குழவி வருகவே!          ---  திருமலை முருகன் பிள்ளைத் தமிழ்

அரவில் விழி துயில் முகுந்தர் ---

திருமால் அரவணையில் அறிதுயில் புரிகின்றார். அரவு-ஆதிசேடன்; அது வெண்பாம்பு; சுழுமுனை என்ற நாடி வெள்ளைநரம்பு. அதில் பிராணவாயுவைச் செலுத்தி நிற்கும் சிவயோகச் செயலை அறிவிக்கின்றது இந்தப் பகுதி.

கடவுள் ---

கடவுதல்-செலுத்துதல், உடம்புக்குள் உயிரும் உயிருக்குள் இறைவனும் நின்று செலுத்துவதனால் இறைவன் கடவுள் எனப்பட்டனன்.

செலுத்துதல் என்னுஞ் சொல்லே கடவுதல், எனச்செந் நூல்கள்
பலத்துடன் உரைக்கும் ஆற்றால், பசுக்களின் உளத்தே நின்று
செலுத்து உளமாம் குகற்குக் கடவுள் என் திருப்பேர் ஒன்று எத்-
தலத்தரும் இறும்பூது எய்தத் தமிழினில் ஏய்ந்ததாமே.     ---  பாம்பன் சுவாமிகள்

மேலும் சகல கருவிகரணங்களையும் சகல உலகங்களையுங் கடந்து நின்றது கடவுள்.

அன்றி, பிறவிப் பெருங்கடலைக் கடக்கச் செய்வது கடவுள். கடந்து நின்று நம்மைக் கடக்கவைக்குங் கருணைப் பெருங்கடல் கடவுள்.

அன்பர் உளமேவும் பரமர் ---

இறைவன் அங்கங்கெனாதபடி எங்கும் பூரணமாய் நிறைந்திருக்கின்றான் எனினும், நினைந்துருகும் அடியவர் மனத்தைக் கோயிலாகக் கொண்டிருக் கின்றான்.

நினைப்பவர் மனங் கோயிலாகக் கொண்டவன்”         --- அப்பர்

கூற்றறியாத பெருந்தலைவர் உள்ளக்
 கோயிலிருந்த குணப்பெருங் குன்றே”     --- திருஅருட்பா

நினையாதார் உள்ளத்திலும் இறைவன் உதிக்கின்றான். நினைப்பவர் உள்ளத்திலும் இருக்கின்றான். ஆனால் இரண்டுக்கும் வேற்றுமையுண்டு. நினையாதார் நெஞ்சில் பாலில் நெய் போல் மறைந்திருக்கிறான். நினைப்பவர் நெஞ்சில் கடைந்த தயிரில் வெண்ணெய் போல் திரண்டு உருண்டு காட்சி தந்து நிற்கின்றான் இறைவன்.

சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்”  --- மாணிக்கவாசகர்

வானத்தான் என்பாரும் என்க, மற்று உம்பர்கோன்
தானத்தான் என்பாரும் தாம் என்க, - ஞானத்தான்
முன் நஞ்சத்தால் இருண்ட மொய்ஒளிசேர் கண்டத்தான்
என் நெஞ்சத்தான் என்பன் யான்.       ---  காரைக்காலம்மையார்

தானவரும் மாலும் சதுமுகனும் மற்றுமுஉள்ள
வானவரும் தேடி மயங்கவே-ஞானமுடன்
நேயம் பெறும்அடியார் நெஞ்சினுள்ளே நிற்பது அது,ன்ன
மாயம் சிதம்பரதே வா.                ---  குருநமசிவாயர்

அறுமுகவ ---

சிவபெருமானுடைய பழைய வடிவு ஆறுமுக வடிவு என்பதைத் ‘தனது தொல்லைத் திருமுகம் ஆறுங் கொண்டான்’ என்ற கந்தபுராண வாக்கால் அறிக. “பழைய வடிவாகிய வேலா” என்று திருப்புகழில் அருணகிரிநாத சுவாமிகள் கூறுகின்றார்.

ஈசானம், தற்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்ற ஐந்து முகத்தோடு - அதோமுகமும் சேர்ந்தது ஆறுமுக சொரூபம். மேல், கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு, கீழ் என்ற ஆறு பக்கங்களிலும் நோக்கியவை ஆறுமுகம் என அறிக. அது எழுத முடியாதது. “எழுதரிய ஆறுமுகம்” என்று கூறுகின்றார். எல்லாப் பக்கங்களிலும் எம்பெருமான் பார்க்கின்றான் எனவுணர்க. ஆகவே சண்முகமூர்த்தியே உண்முகமாகித் தண்முகமாக அருள் புரிவது.


கருத்துரை


திருமால் மருகா! சிவகுமாரா! பழநியப்பா! உனது திருவடியை என் சிரமேல் வைத்துத் திருப்புகழ் பாட அருள்புரிவாய்.





No comments:

Post a Comment

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...