பழநி - 0198. விதம் இசைந்து




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

விதம் இசைந்து (பழநி)

பழநியப்பா! 
மாதர் மயலில் அடியேன் வாடாமல், திருவடியைத் தந்து ஆட்கொள்.

தனன தந்தன தானன தானன
     தனன தந்தன தானன தானன
          தனன தந்தன தானன தானன ...... தனதான


விதமி சைந்தினி தாமலர் மாலைகள்
     குழல ணிந்தநு ராகமு மேசொலி
          விதர ணஞ்சொலி வீறுக ளேசொலி ...... யழகாக

விரிகு ரும்பைக ளாமென வீறிய
     கனக சம்ப்ரம மேருவ தாமதி
          விரக மொங்கிய மாமுலை யாலெதி ...... ரமர்நாடி

இதமி சைந்தன மாமென வேயின
     நடைந டந்தனர் வீதியி லேவர
          எவர்க ளுஞ்சித மால்கொளு மாதர்கண் ....வலையாலே

எனது சிந்தையும் வாடிவி டாவகை
     அருள்பு ரிந்தழ காகிய தாமரை
          இருப தங்களி னாலெனை யாள்வது ...... மொருநாளே

மதமி சைந்தெதி ரேபொரு சூரனை
     யுடலி ரண்டுகு றாய்விழ வேசின
          வடிவு தங்கிய வேலினை யேவிய ...... அதிதீரா

மதுர இன்சொலி மாதுமை நாரணி
     கவுரி யம்பிகை யாமளை பார்வதி
          மவுந சுந்தரி காரணி யோகினி ...... சிறுவோனே

பதமி சைந்தெழு லோகமு மேவலம்
     நொடியில் வந்திடு மாமயில் மீதொரு
          பவனி வந்தக்ரு பாகர சேவக ...... விறல்வீரா

பருதி யின்ப்ரபை கோடிய தாமெனும்
     வடிவு கொண்டருள் காசியின் மீறிய
          பழநி யங்கிரி மீதினில் மேவிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


விதம் இசைந்து, னிதா மலர் மாலைகள்
     குழல் அணிந்து, நுராகமுமே சொலி,
          விதரணம் சொலி, வீறுகளே சொலி, ...... அழகாக

விரி குரும்பைகள் ஆம்என வீறிய,
     கனக சம்ப்ரம மேரு அது ஆம், தி
          விரகம் ஒங்கிய மாமுலையால் எதிர் ......அமர்நாடி

இதம் இசைந்து, னம் ஆம் எனவே, இன
     நடை நடந்தனர், வீதியிலே வர
          எவர்களும் சித மால் கொளும் மாதர்கண் .......வலையாலே,

எனது சிந்தையும் வாடி விடாவகை
     அருள் புரிந்து, ழகாகிய தாமரை
          இருபதங்களினால் எனை ஆள்வதும் ......ஒருநாளே?

மதம் இசைந்து எதிரே பொரு சூரனை
     உடல் இரண்டு குறாய் விழவே, சின
          வடிவு தங்கிய வேலினை ஏவிய ...... அதிதீரா!

மதுர இன்சொலி, மாது, மை, நாரணி,
     கவுரி, அம்பிகை, யாமளை, பார்வதி,
          மவுந சுந்தரி, காரணி, யோகினி ...... சிறுவோனே!

பதம் இசைந்து எழு லோகமுமே வலம்
     நொடியில் வந்திடு மாமயில் மீது, ரு
          பவனி வந்த க்ருபாகர! சேவக! ...... விறல்வீரா!

பருதியின் ப்ரபை கோடி அது ஆம் எனும்
     வடிவு கொண்டு அருள் காசியின் மீறிய,
          பழநி அம் கிரி மீதினில் மேவிய ...... பெருமாளே.


பதவுரை


      மதம் இசைந்து எதிரே பொரு சூரனை --- செருக்குடன் எதிர்த்துப் போர் புரிந்த சூரபன்மனை,

     உடல் இரண்டு குறாய் விழ --- இரண்டு கூறாகி உடல் விழுமாறு,

     சின வடிவு தங்கிய --- கோபத்தின் வடிவங் கொண்ட,

     வேலினை ஏவிய --- வேலாயுதத்தை விடுத்த,

     அதி தீரா --- மிகுந்த தைரியமுள்ளவரே!

      மதுர இன்சொலி --- மிக்க இனிமையான மொழிகளை உடையவர்,

     மாது உமை --- அழகிய உமையம்மை,

     நாரணி --- குளிர்ச்சியுடையவர்,

     கவுரி --- பொன்னிறம் படைத்தவர்,

     அம்பிகை --- அம்பிகை;

     யாமளை --- சியாமள நிறமுடையவர்,

     பார்வதி --- பருவத ராஜனுடைய குமாரி,

     மவுன சுந்தரி --- மொளனத்தை மேற்கொண்ட அழகிய,

     காரணி --- எல்லாவற்றுக்குங் காரணி,

     யோகினி --- தவமுடையவர் என்ற தேவியின்,

     சிறுவோனே --- திருக்குமாரரே!

      பதம் இசைந்து --- தக்க சமயத்தில்,

     ஏழுலோகமுமே வலம் நொடியில் வந்திடு --- ஏழு உலகங்களையும் ஒரு நொடிப்பொழுதில் வலமாக வந்த,

     மாமயில் மீது ஒரு பவனி வந்த --- அழகிய மயிலின் மீது ஒப்பற்ற உலா வந்த,

     க்ருபை ஆகர --- கருணைக்கு உறைவிடமானவரே!

      சேவக --- ஆற்றல் படைத்தவரே!

      விறல் வீரா --- வெற்றி வீரரே!

      பருதியின் ப்ரபை --- சூரியனுடைய ஒளி,

     கோடியது ஆம் எனும் --- கோடிக்கணக்காம் என்னும்படி,

     வடிவுகொண்டு அருள் --- திருமேனி கொண்டு அருள் புரிகின்ற,

     காசியின் மீறிய – காசி அம்பதியிலும் சிறந்த,

     பழநி அம் கிரி மீதினில் மேவிய --- அழகிய பழநிமலையில் கண் எழுந்தருளிய,

     பெருமாளே --- பெருமையின் மிகுந்தவரே!

      விதம் இசைந்து --- பல விதங்களாக,

     இனிதா --- இனிதாக,

     மலர் மாலையும் சூழல் அணிந்து --- கூந்தலில் மலர் மாலைகளை அணிந்து,

     அநுராகமே சொலி --- மிகுந்த ஆசை வார்த்தைகளைக் கூறி,

     விதரணம் சொலி --- தமது விவேகத்தை சொல்லியும்,

     வீறுகளே சொலி --- தம் சிறப்புக்களைக் கூறியும்,

     அழகு ஆக விரி குரும்பைகள் என ஆம் --- அழகாக விரிந்து வளர்ந்த தென்னங் குரும்பைகள் என்னும்படி

     வீறிய --- ஓங்கி விளங்கும்,

     கனக சம்ப்ரம் மேரு அது ஆம் --- பொன்மயமாய் நிரம்பும் மேரு மலைமேல்,

     அதி விரகம் ஓங்கிய --- மிகுந்த ஆசையை விளைவிக்கும் மாமுலையால்,

     எதிர் அமர் நாடி --- அழகிய தனங்களால் எதிர்த்து காமப் போரை நாடி,

     இதம் இசைந்து --- இன்பத்துடன்,

     அனம் ஆம் என --- அன்னம் என்று கூறுமாறு,

     இன நடை நடந்தனர் --- விதம் விதமான நடை நடப்பவராய், 

     வீதியில் வர --- தெருவில் வந்து,

     எவர்களும், சி(த்)த மால் கொளும் --- எவர்கட்கும் உள்ளத்தில் மயக்கம் கொள்ள வைக்கும்,

     மாதர் கண் வலையாலே --- பொதுமகளிருடைய கண்ணாகிய வலையினால்,

     எனது சிந்தையும் --- அடியேனுடைய மனமும்,

     வாடிவிடா வகை அருள் புரிந்து --- வாடிப் போகாத வண்ணம் தேவரீர் அருள் செய்து,

     அழகு ஆகிய தாமரை --- அழகிய தாமரை போன்ற,

     இருபதங்களினால் --- இரு திருவடிகளினால்,

     எனை ஆள்வதும் ஒரு நாளே --- அடியேனை ஆட்கொள்ளுகின்ற நாள் ஒன்று உளதோ?

பொழிப்புரை


         செருக்குடன் எதிர்த்துப் போர் புரிந்த சூரபன்மனுடைய உடம்பு இரு பிளவாகி விழுமாறு, கோப உருவாகித் திகழும் வேலாயுதத்தை விடுத்த மிகுந்த தீரரே!

         இனிய மதுர மொழியுடையவரும், அழகிய உமாதேவியாரும், குளிர்ந்தவரும், பொன்னிறம் படைத்தவரும், அம்பிகையும், சியாமள நிறமுடையவரும், மலையரையன் மகளாரும், மவுன சுந்தரியும், எல்லாவற்றுக்கும் காரண பூதரும், தவமாதும் ஆகிய எம்பிராட்டியாரின் திருக்குமாரரே!

         ஏற்ற சமயத்தில் ஏழு உலகங்களையும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வருகின்ற மயிலின்மீது ஏறி ஒப்பற்ற உலா வருகின்ற கருணைக்கு உறைவிடமானவரே!

         ஆற்றலுடையவரே!

         வெற்றி வீரரே!

         கோடி சூரியப்பிரகாசமான திருமேனி கொண்டு அருள் புரிகின்றவரே!

         காசியம்பதியினும் பெருமையால் மிகுந்த அழகிய பழநி மலைமீது எழுந்தருளிய பெருமிதம் உடையவரே!

         மலர் மாலைகளைப் பலவிதமாகக் கூந்தலில் அணிந்து, அதிக ஆசையை விளைக்கும் வார்த்தைகளைச் சொல்லி, தங்கள் சாமர்த்தியத்தையும் பெருமைகளையும் கூறி, அழகாக விரிந்து வளர்ந்த இளநீரைப் போலவும், ஓங்கியுள்ள பொன் மேரு மலை போலவும் விளங்கி, மோகத்தைத் தரும் அழகிய முலைகளைக் கொண்டு காமப் போரை விரும்பி, இன்பத்துடன் அன்னம்போல் தெருவில் விதம் விதமாக நடந்து எல்லோரையும் உள்ளம் மயக்கங் கொள்ளுமாறு செய்யும் விலைமாதர்களுடைய விழி வலையால் அடியேனுடைய மனமும் வாடிவிடாத வண்ணம், திருவருள் புரிந்து, அழகிய தாமரை மலர்போன்ற இரு சரணங்களினால் அடியேனை ஆட்கொள்ளுகின்ற நாள் ஒன்று உளதோ?

விரிவுரை


முதல் நான்கு அடிகளில் இருமனப் பெண்டிரின் செயல்களைக் கூறி, அதனால் மனம் மயங்காமல் காத்தருளுமாறு சுவாமிகள் வேண்டிக் கொள்கின்றார்.

இரு குறாய் ---

கூறாய் என்ற சொல் சந்தத்தை நோக்கிக் குறுகி நின்றது. சூரபன்மனுடைய வச்சிரயாக்கையை முருகவேள் இரு கூறாகப் பிளந்தருளினார்.

கடற் சலந்தனிலே ஒளி சூரனை
  உடற் பகுந்துஇரு கூறெனவே,அது
  கதித்து எழுந்துஒரு சேவலு மாமயில் விடும்வேலா”  ---  (மனத்திரைந்) திருப்புகழ்

மதுர இன்சொலி ---

அம்பிகையின் இனிய மதுரமொழி எல்லா நலன்களையும் அருளவல்லது.

தேனொக்கும் கிளிமழலை உமை கேள்வன்”       --- அப்பர்

யாமளை ---

யாமளம் ஒரு வகையான பச்சை நிறம், “சியாமளாம்பிகை”

மவுன சுந்தரி ---

அம்பிகை இறைவனை விரும்பி மவுனமாக இருந்து தவம் புரிந்தனள். அதனால் அப்பெருமாட்டி மூகாம்பிகை என்று பேர் பெற்றனள். கொல்லாபுரம் என்ற மூகாம்பிகை தலம் மிகப் பிரசித்தி பெற்றது. கன்னட தேசத்தில் உள்ளது.

எழு லோகமுமே வலம்  நொடியில் வந்திடு மாமயில் ---

ஏழு உலகங்களையும் மயில் ஒரு நொடியில் வலம் வரும் வேகமுடையது.

விநாயகன் முதல் சிவனை வலம்வரும் அளவில் உலகு அடைய
 நெடியில் வரு சித்ரக் கலாப மயிலாம்”              மயில்விருத்தம்

பருதியின் ப்ரபை கோடி தாமெனும் வடிவு கொண்டருள் ---

முருகப் பெருமானுடைய திருவடியின் ஒளி கோடி சூரிய ஒளியினும் மிஞ்சியது. ஞானவொளி வீசும் அருள் மயமானது.

உததியிடை கடவுமர கதஅருண குலதுரக
  உபலளித கனகரத சதகோடி சூரியர்கள்
உதயம்என அதிகவித கலபகக மயிலின் மிசை
   உகமுடிவின் இருள்அகல ஒருசோதி வீசுவதும்”  --- சீர்பாத வகுப்பு.

காசியின் மீறிய பழநியங்கிரி ---

காசி -ஆக்ஞை. அது புருவ நடு. அங்கு வீற்றிருப்பவர். சதாசிவமூர்த்தி. அவர் பழம் நீ என்று சுட்டிக் காட்டிய மூர்த்தி ஞான தண்டாயுதபாணி. எனவே ஆக்ஞையில் அமர்ந்த சதாசிவப் பெருமான் பழநி என்று உணர்த்தியதால் பழநி காசியினும் மேம்பட்டது எனவுணர்க.

கருத்துரை

உமைபாலா! பழநியப்பா! உமது திருவடியால் அடியேனை ஆட்கொள்வாய்.


                 

No comments:

Post a Comment

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...