அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
வாரணந் தனை (பழநி)
பழநியப்பா!
மாதர் மயக்கம்
மாயையே என்பது தெளிய, என் உள் இருந்து அருள்.
தான
தந்தன தானான தாதன
தான தந்தன தானான தாதன
தான தந்தன தானான தாதன ...... தனதான
வார
ணந்தனை நேரான மாமுலை
மீத ணிந்திடு பூணார மாரொளி
வால சந்திர னேராக மாமுகம் ...... எழில்கூர
வார
ணங்கிடு சேலான நீள்விழி
யோலை தங்கிய வார்காது வாவிட
வான இன்சுதை மேலான வாயிதழ் ......ழமுதூறத்
தோர
ணஞ்செறி தார்வாழை யேய்தொடை
மீதில் நின்றிடை நூல்போலு லாவியெ
தோகை யென்றிட வாகாக வூரன ...... நடைமானார்
தோத
கந்தனை மாமாயை யேவடி
வாக நின்றதெ னாஆய வோர்வது
தோணி டும்படி நாயேனுள் நீயருள் ......
தருவாயே
கார
ணந்தனை யோராநி சாசரர்
தாம டங்கலு மீறாக வானவர்
காவ லிந்திர னாடாள வேயயில் ...... விடும்வீரா
கார்வி
டந்தனை யூணாக வானவர்
வாழ்த ரும்படி மேனாளி லேமிசை
காள கண்டம காதேவ னார்தரு ...... முருகோனே
ஆர
ணன்றனை வாதாடி யோருரை
ஓது கின்றென வாராதெ னாவவ
னாண வங்கெட வேகாவ லாமதில் ...... இடும்வேலா
ஆத
வன்கதி ரோவாது லாவிய
கோபு ரங்கிளர் மாமாது மேவிய
ஆவி னன்குடி யோனேசு ராதிபர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
வாரணம்
தனை நேர் ஆன மாமுலை
மீது அணிந்திடு பூண் ஆரம் ஆர்ஒளி
வால சந்திரன் நேராக மாமுகம் ...... எழில்கூர,
வார்
அணங்கிடு சேல்ஆன நீள்விழி,
ஓலை தங்கிய வார் காது வாவிட,
ஆன இன்சுதை மேலான வாய்இதழ் .....அமுதுஊறத்
தோரணம்
செறி தார் வாழை ஏய் தொடை
மீதில் நின்று இடை நூல்போல் உலாவியெ
தோகை என்றிட வாகு ஆக ஊர்அன ......நடை,மானார்
தோதகம்
தனை மாமாயையே வடி-
வாக நின்றது எனா ஆய ஓர்வது
தோணிடும்படி நாயேன்உள் நீஅருள் ......தருவாயே.
காரணம்
தனை ஓரா நிசாசரர்
தாம் அடங்கலும் ஈறாக, வானவர்
காவல் இந்திரன் நாடு ஆளவே அயில் ......விடும்வீரா!
கார்
விடம் தனை ஊணாக, வானவர்
வாழ் தரும்படி மேல் நாளிலே மிசை,
காளகண்ட மகா தேவனார் தரு ...... முருகோனே!
ஆரணன்
தனை வாதாடி ஓர் உரை
ஓதுகின்றென, வாராது எனா, அவன்
ஆணவம் கெடவே காவலாம் அதில் ......இடும்வேலா!
ஆதவன்
கதிர் ஓவாது உலாவிய
கோபுரம் கிளர் மாமாது மேவிய
ஆவினன்குடியோனே! சுர அதிபர் ...... பெருமாளே.
பதவுரை
காரணம் தனை ஓரா நிசாசரர் தாம் அடங்கலும்
--- முருகக் கடவுள் படையுடன் போருக்கு வந்த காரணம் இன்னது என்று ஆராயாத அசுரர்கள்
எல்லாரும்,
ஈறாக --- முடிவு பெற்று அழியவும்.
வானவர் காவல் இந்திரன் நாடு ஆள ---
தேவர்களுக்குக் காவலாக நிற்கும் இந்திரன் தனது நாட்டை ஆளும் பொருட்டும்,
அயில் விடும் வீரா --- வேலாயுதத்தை
விடுத்தருளிய வீரரே!
கார் விடம் தனை ஊண் ஆக --- கரிய நஞ்சினை
உணவாக,
வானவர் வாழ்தரும்படி --- தேவர்கள் வாழுமாறு,
மேல் நாளிலே மிசை --- முன்னாளில் உருண்டருளிய,
காளகண்ட --- கருமையான கழுத்தையுடைய,
மகாதேவனார் தரும் --- சிவபெருமான் தந்தருளிய,
முருகோனே --- முருகக் கடவுளே!
ஆரணன் தனை --- பிரமதேவனை,
வாது ஆடி --- வாது புரிந்து,
ஓர் உரை ஓதுக இன்று என --- ஒரு சொல்லுக்கு
உரை இன்று கூறுக என்று வினாவுதலும்,
வாராது எனா --- அதன் பொருள் எனக்கு வராது
என்று கூற,
அவன் ஆணவம் கெடவே --- அப்பிரமனுடைய ஆணவங்
கெடுமாறு,
காவலாம் அதில் இடும் வேலா --- சிறைச்சாலையில்
அடைத்த வேலாயுதக் கடவுளே!
ஆதவன் கதிர் ஓவாது உலாவிய ---
சூரியனுடைய ஒளி ஒயாது வீசுகின்ற,
கோபுரம் கிளர் --- கோபுரம் விளங்குவதும்,
மாமாது மேவிய --- மகாலட்சுமி உறைவதுமாகிய,
ஆவினன்குடியானே --- திருவாவினன்குடியில்
எழுந்தருளியிருப்பவரே!
சுர அதிபர் பெருமாளே --- தேவர்களின்
தலைவர் போற்றும் பெருமையிற் சிறந்தவரே!
வாரணம் தனை நேர் ஆன --- யானையை நிகர்த்த,
மாமுலைமீது அணிந்திடு --- பெரிய முலைகளின்
மேலே அணிந்துள்ள,
பூண் ஆரம் ஆர் ஒளி --- அணிகலனாகிய முத்து
மாலையின் அரிய ஒளியும்,
வால சந்திரன் நேராக மாமுக எழில் கூர ---
இளஞ்சந்திரனுக்குச் சமானமான சிறந்த முகம் அழகு மிகுந்து விளங்கவும்,
வார் --- நீண்டும்,
அணங்கு இடு --- (காண்போர்க்குத்) துன்பம் புரிவதும்,
சேல் ஆன நீள்விழி --- சேல்மீன்
போன்றதும் ஆகிய நீண்ட கண்கள்,
ஓலை தங்கிய வார்காது வாவிட --- பொன்னோலை
பூண்டுள்ள நீண்ட காதுகளைத் தாவி நிற்கவும்,
வான இன்சுவை மேலான வாய் இதழ் அமுது ஊற ---
தேவரது இனிய அமுதத்தினும் மேலான வாயிதழில் அமுதம் ஊறவும்,
தோரணம் செறி தார் வாழை ஏய் --- தோரணத்துக்கு
பயன்படும் குலை தள்ளிய வாழையை யொத்த,
தொடை மீதில் நின்ற இடை நூல் போலும் --- தொடை
மேலே விளங்கும் இடையானது நூல் போல் விளங்கவும்,
உலாவிய --- மெல்ல அசைந்து உலாவி,
தோகை என்றிட --- மயில் என்று சொல்லுமாறு,
வாகு ஆக ஊர் ஆன நடைமானார் --- அழகாக ஊர்ந்து
செல்லும் அன்னத்துக்கு ஒப்பான நடையுடைய மாதர்களின்,
தோதகந்தனை --- வஞ்சகச் செயலை,
மாமாயையே வடிவு ஆக நின்றது எனா --- மகா மாயை
வடிவு கொண்டு நிற்கின்றது என,
ஆய ஓர்வது தோணிடும்படி --- ஆய்ந்து அறியும்
அறிவு எனக்கு விளங்கும்படி,
நாயேனுள் --- அடியேனுடைய உள்ளத்தில்,
நீ அருள் புரிவாயே --- தேவரீர்
அருள்புரிவீர்.
பொழிப்புரை
முருகவேள் தம் மீது படை எடுத்துப் போர்
புரிய வந்த காரணம் யாது என்பதை ஆராயாது அசுரர்கள் முழுவதும் முடியுமாறும் தேவர்கட்குக்
காவலாக நிற்கும் இந்திரன் பொன்னுலகத்தை ஆளுமாறும் வேலை விடுத்த வீரமூர்த்தியே!
கரிய நஞ்சை உணவாக வானவர் வாழுமாறு
முன்னாள் உண்டருளிய நீலகண்டராகிய மகாதேவர் தந்தருளிய முருகக் கடவுளே!
பிரமனுடன் வாது புரிந்து பிரணவ மொழிக்குப்
பொருள் சொல் என்று வினாவுதலும்,
“வாராது”
என்று அவன் கூற, அவனுடைய ஆணவம்
அழியுமாறு சிறையில் இட்ட வேலாயுதரே!
சூரியனுடைய ஒளி ஒழியாது வீசுகின்ற
கோபுரம் விளங்குவதும், மகாலட்சுமி விரும்பி
உறைவது மாகிய, திருவாவினன்குடியில்
எழுந்தருளியிருப்பவரே!
தேவர் தலைவர் போற்றும் பெருமிதம் உடையவரே!
யானையை ஒத்த பெரிய முலைகளின் மீது
அணிந்துள்ள அணிகலமாகிய முத்து மாலை அரிய ஒளி வீசவும், இளந்திங்களை ஒத்த சிறந்த முகத்தில் அழகு
மிகுதியாக விளங்கவும், காண்பவர்க்கு
இன்னலைத் தரும் சேல்மீன் போன்ற நீளமான கண்கள் பொன்னோலை தங்கிய நீண்ட காதுகளைத்
தாவி நிற்கவும், தேவ அமுதம் போன்ற
வாயிதழில் அமுதம் ஊற்றெடுக்கவும்,
தோரணத்திற்கு
உதவும் குலையுடன் கூடிய வாழையை ஒத்த தொடை மீது நின்ற இடை நூல் போல இருக்கவும், மயில் என்னுமாறு உலாவி அழகிய அன்னம்
போன்ற நடையுடைய பெண்களின் வஞ்சனைச் செயலை மகாமாயையே உருவங்கொண்டு நிற்கின்றது என்று
ஆய்ந்து அறியும் அறிவு உண்டாகுமாறு அடியேனுடைய உள்ளத்துள் தேவரீர் அருள் புரிய
வேண்டும்.
விரிவுரை
மானார்
தோகம் தனை மாமாயையே வடிவாக நின்றது ---
முத்தி
நலம் பெற விழைவார்க்கு ஆசை தடையாக நிற்பது. அந்த ஆசையில் பெண்ணாசை பிறவிதொறும்
இடைவிடாது தொடர்ந்து வந்து பற்றுவது. மேலும் விலைமகளின் மேல் உள்ள ஆசை மிகப் பெரிய
கேட்டினைப் புரியவல்லது. அது மாயையின் வடிவே என்ற திருவருள் துணையால் தேர்ந்து, தெளிந்து, அறவே நீக்கி, உய்வு பெற வேண்டும். கடல்
கடப்பார்க்குத் தோணி துணை புரிதல் போல, காமக்கடல்
கடப்பார்க்கும் முருகன் கருணை புனையாகும். அருணகிரியார் இந்தக் காமக் கடலை
கடந்தவர்.
கடத்தில்
குறத்திப் பிரான் அருளால் கலங்காத சித்தத்
திடத்தில்
புனைஎன யான் கடந்தேன், சித்ர மாதர் அல்குல்
படத்தில்
கழுத்தில் பழுத்தசெவ் வாயில் பனையில் உந்தித்
தடத்தில்
தனத்தில் கிடக்கும் வெங்காம சமுத்திரமே. --- கந்தரலங்காரம்
காரணம்
தனை ஓரா நிசாசரர் ---
தாய்
தந்தையர்கட்கு மக்கள் அனைவரிடமும் பட்சம் ஒன்று போல் இருக்கும். ஒரு பிள்ளைமேல்
விருப்பு, மற்றொரு பிள்ளைமேல்
வெறுப்பு இருக்காது. அதுபோல் இறைவனுக்கு வானவரும் தானவரும் மக்கள் தானே. வானவர்
பொருட்டு தானவரை அழிப்பது பட்சபாதம் ஆகாதா என்ற ஐயம் எழுவது இயல்பு.
மெலிந்த
மகனை வலிந்த மகன் அடிப்பானாயின் தந்தை மெலிவுற்ற மகன் பக்கம் சார்ந்து வலிவுற்ற
மகனைத் தண்டிப்பார். அது பட்சபாதம் ஆகாது. வன்மை குறைந்த வானவர்களை சூரபன்மன்
நெடிது காலம் அளவுக்கு மேல் சிறையில் அடைத்துத் தண்டித்தான். சிவகுமாராகிய
முருகவேள் தேவர் சிறை மீட்குமாறு வந்தருளினார். நான் என்ற அகந்தையால் கண்மூடப்
பெற்ற சூரபன்மன் அக்காரணம் அறியாது. விமலன் வேற்படையால் விரைந்து அழிந்தான்.
கார்விடந்தனை.................மகாதேவனார் ---
சிவபெருமானுடைய
அளப்பருங் கருணையை இந்த அடி இனிது வெளிப்படுத்துகின்றது.
தேவர்கள்
பாற்கடல் கடைந்தார்கள். அங்ஙனம் கடையுமுன் தேவதேவராகிய சிவபெருமானிடம்
அறிவிக்காமலும், அவருடன்
ஆலோசிக்காமலும், அமுதம் வேண்டிப்
பாற்கடலைக் கடைந்தார்கள். எதிர்பார்த்தது அமுதம்; அதில் வெளிப்பட்டது ஆலகாலவிடம்.
எல்லோரும் பிடித்தார்கள் ஓட்டம். மனத்தில் ஏற்பட்டது பெரிய வாட்டம். அருகில் சென்ற
நாராயணர் திருமேனி கருகி விட்டது. ஒருவரையொருவர் பின் தள்ளிக்கொண்டு ஓடினார்கள்.
கைலையை நாடினார்கள். இறைவனுடைய புகழைப் பாடினார்கள். இறைவன் அமரரை அப்போது
முனியாது, இனி யாதுங்
குறையில்லை யென்று அவர்கள் அகமகிழுமாறு, அவ்விடத்திலேயே
அவ்விடத்தையுண்டு அமரர்கட்கு அமுதம் அருளி, அவர்கட்கு வந்த கண்டத்தை நீக்கிக் காள
கண்டராக விளங்கினார்.
மால்எங்கே? வேதன்உயர் வாழ்வுஎங்கே? இந்திரன்செங்
கோல்எங்கே? வானோர் குடிஎங்கே?-கோலஞ்செய்
அண்டம்எங்கே? அவ்வவ் அரும்பொருள் எங்கே? நினது
கண்டம்அங்கே
நீலம்உறாக் கால் ---
வள்ளலார்
ஆரணன்
தனை வாதாடி
---
ஆரணன்-பிரமதேவன்; வேதத்திலே சில பகுதிகள் ஆரண்யத்தில் ஓத
வேண்டியவைகாளக விருப்பதனால், அது ஆரணம்
எனப்பட்டது. பிர்ஹதாயண்யகம் முதலிய பகுதிகளை நோக்குக. வேதத்தில்
வல்லவன் பிரமதேவன். அப்பிரமாவுக்கு ஒரு சமயம் ஆணவம் மேலிட்டது. பதவியில்
உள்ளவர்களை அப் பதவி மோகம் சில சமயம் அவ்வாறு மயக்கும், பிரமதேவன் தருக்குற்று நின்ற சமயம், கந்த நாயகன் "ஓம்" என்னும்
தனி மந்திரத்தின் தத்துவப் பொருளை விளக்கிக் கூறுமாறு கேட்டருளினார். அதனைக் கூற
அறியாது வேதன் வேதனை உற்றான். நாலு தலைகளும் நாலு தலைகளாமாறு (நாலுதல்-தொங்குதல்)
குட்டிச் சிறையிருத்தி, முத்தொழில்களையும்
முருகவேளே புரிந்து, மூவர்க்கும்
முத்தொழில்களுக்குந் தாமே தனிப்பெருந் தலைவர் என்பதை உலகம் உணர்ந்து உய்ய
உணர்த்தியருளினார்.
கருத்துரை
சூரசங்காரரே! சிவகுமாரரே! திருவாவினன்குடித்
தேவதேவரே! மாதர் மயக்கம் தெளிய அருள்புரிவீர்.
No comments:
Post a Comment