பழநி - 0196. வாதம் பித்தம்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

வாதம் பித்தம் (பழநி)

பழநியப்பா!
அடியாரொடு கூட்டி அருள்.

தானந் தத்தன தானன தானன
     தானந் தத்தன தானன தானன
          தானந் தத்தன தானன தானன ...... தனதான


வாதம் பித்தமி டாவயி றீளைகள்
     சீதம் பற்சனி சூலைம கோதர
          மாசங் கட்பெரு மூலவி யாதிகள் ......    குளிர்காசம்

மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி
     யோடுந் தத்துவ காரர்தொ ணூறறு
          வாருஞ் சுற்றினில் வாழ்சதி காரர்கள் ...... வெகுமோகர்

சூழ்துன் சித்ரக பாயைமு வாசைகொ
     டேதுஞ் சற்றுண ராமலெ மாயைசெய்
          சோரம் பொய்க்குடி லேசுக மாமென ......இதின்மேவித்

தூசின் பொற்சர மோடுகு லாயுல
     கேழும் பிற்பட வோடிடு மூடனை
          தூவஞ் சுத்தடி யாரடி சேரநின் ......       அருள்தாராய்

தீதந் தித்திமி தீதக தோதிமி
     டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு
          சேசெஞ் செக்கெண தோதக தீகுட ......    வெனபேரி

சேடன் சொக்கிட வேலைக டாகமெ
     லாமஞ் சுற்றிட வேயசு ரார்கிரி
          தீவும் பொட்டெழ வேயனல் வேல்விடு ...... மயில்வீரா

வேதன் பொற்சிர மீதுக டாவிந
     லீசன் சற்குரு வாயவர் காதினில்
          மேவும் பற்றிலர் பேறரு ளோதிய ......    முருகோனே

வேஷங் கட்டிபி னேகிம காவளி
     மாலின் பித்துற வாகிவி ணோர்பணி
          வீரங் கொட்பழ னாபுரி மேவிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


வாதம், பித்தம், மிடாவயிறு, ஈளைகள்,
     சீதம், பற்சனி, சூலை, மகோதரம்,
          மாசு அம் கண், பெரு மூல வியாதிகள், .....குளிர்காசம்,

மாறும் கக்கலொடே, சில நோய், பிணி-
     யோடும், தத்துவ காரர் தொணூறு அறு-
          வாரும் சுற்றினில் வாழ் சதிகாரர்கள், ......வெகுமோகர்,

சூழ் துன் சித்ர கபாயை, மு ஆசைகொடு
     ஏதும் சற்று உணராமலெ மாயைசெய்,
          சோரம் பொய்க் குடிலே சுகமாம் என, ......இதின்மேவித்

தூசின் பொன் சரமோடு குலாய், உலகு
     ஏழும் பிற்பட ஓடிடு மூடனை,
          தூ அம் சுத்த அடியார் அடி சேர,நின் ......அருள்தாராய்.

தீதந் தித்திமி தீதக தோதிமி
     டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு
          சேசெஞ் செக்கெண தோதக தீகுட ......எனபேரி

சேடன் சொக்கிட, வேலை கடாகம்
     எலாம் அஞ்சு உற்றிடவே, அசுரார், கிரி
          தீவும் பொட்டு எழவே, அனல் வேல்விடு ....மயில்வீரா!

வேதன் பொன் சிர மீது கடாவி, நல்
     ஈசன் சற்குருவாய், அவர் காதினில்
          மேவும் பற்றிலர் பேறு அருள்ஓதிய ...... முருகோனே!

வேஷங் கட்டி பின் ஏகி மகா வளி
     மாலின் பித்து உறவாகி, விணோர் பணி
          வீரம் கொள் பழனாபுரி மேவிய ...... பெருமாளே.


பதவுரை

      தீதந் தித்திமி தீதக தோதிமி டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு சேசெஞ் செக்கண தோதக தீகுட என பேரி ---- தீதந் தித்திமி...தீகுட என்ற ஒலியுடன் பேரி என்ற வாத்தியம்,

     சேடன் சொக்கிட --- ஆதிசேடன் மயக்கம் உறவும்,

     வேலை, கடாகம் எலாம் அஞ்சு உற்றிட --- சமுத்திரம், அண்ட கோளகைகள் யாவும் அச்சமெய்தவும்,

     அசுரர் கிரி தீவும் பொட்டு எழவே --- அசுரர்கள் வாழ்ந்திருந்த மலைகளும் தீவுகளும் பொடி படுமாறு,

      அனல் வேல் விடும் --- நெருப்பைக் கொப்பளிக்கும் வேலாயுதத்தை விடுத்தருளிய,

     மயில் வீரா --- மயில் வீரரே!

      வேதன் பொன் சிர மீது கடாவி --- பிரமதேவனுடைய அழகிய தலையில் குட்டி,

     நல் ஈசன் சற்குருவாய் --- நல்ல சிவபெருமானுக்குச் சற்குருவாக அமைந்து,

     அவர் காதினில் --- அவருடைய திருச்செவியில்,

     மேவும் பற்று இலர் பெறு அருள் --- நன்மையை நாடி ஒன்றிலும் பற்று இல்லாதவர் பெரும் அருளாகிய பிரணவப் பொருளை,

     ஓதிய முருகோனே --- உபதேசித்த முருகக் கடவுளே!

      வேஷம் கட்டி --- வேடக் கோலமும், வளையல்காரச் செட்டி வடிவும், வேங்கை மர வேடமும், கிழ முனிவர் வேடமும் கொண்டு,

     பின் ஏகி --- பின்னர் தினைப்புனத்துக்குச் சென்று,

     மகா வளி மாலின் பித்து உறவு ஆகி --- சிறந்த வள்ளிநாயகியின் மீது அன்பினால் பித்துக்கொண்டு மணந்து,

     விணோர் பணி --- தேவர்கள் பணிய,

     வீரம் கொள் --- வீரம் வாய்ந்து,

     பழனா புரி மேவிய --- பழநியென்னும் பதியில் எழுந்தருளியுள்ள,

     பெருமாளே --- பெருமையின் மிகுந்தவரே!

      வாதம் --- வாயு நோய்கள்,

     பித்தம் --- பித்த நோய்கள்,

     மிடா வயிறு --- மிடாய் போன்ற பெருவயிறு,

     ஈளைகள் --- கோழை மிகுதியால் வரும் க்ஷயம் இருமல் முதலிய நோய்கள்,

     சீதம் --- சீத மலநோய், 

     பல் --- பல்நோய்,

     சனி --- சன்னி நோய்,

     சூலை --- சூலை வலி,

     மகோதரம் --- பெரு வயிற்று நோய்,

     மாசு அம் கண் --- அழகிய கண்ணில் மாசுபடும் கண்ணோய்,

     பெரு மூலவியாதிகள் --- பெரிய மூலநோய்கள்,

     குளிர் --- குளிர் காய்ச்சல்,

     காசம் --- சுவாசகாசம்,

     மாறும் கக்கல் --- அடுத்தடுத்து வரும் வாந்தி,

     சில நோய் பிணியோடும் --- மற்றும் சில துன்பத்தைச் செய்யும் நோய்களுடன்,

     தத்துவக்காரர் தொணூறு அறுவாரும் --- தொண்ணூற்றாறு தத்துவக் கூட்டத்தாரின்,

     சுற்றினில் வாழ் சதிகாரர்கள் --- சூழலில் வாழ்கின்ற வஞ்சகர்களும்,

     வெகு மோகர் --- மிகுந்த ஆசையாளரும்,

     சூழ் --- சூழ்ந்துள்ள,

     துன் சித்திர கபாயை --- கொடிய விசித்திரமான தேகத்தின் மீதுள்ள ஆசையால்,

     மூவாசை கொடு --- மண் பெண் பொன் என்ற மூவாசைகளைக் கொண்டு,

     ஏதும் சற்று உணராமல் --- எதனையும் சிறிதேனும் உணராமல்,

     மாயை செய் --- மாயையைச் செய்கின்ற,

     சோரம் பொய் குடிலே சுகம் ஆம் என --- கள்ளமும் பொய்யும் நிறைந்த இந்த உடம்பே சுகம் எனக் கருதி,

     இதில் மேவி --- இந்த உடலை விரும்பி,

     தூசின் --- நல்ல ஆடை,

     பொன் சரமோடு குலாய் --- பொன்னாரம் இவற்றைப் பூண்டு,

     உலகு ஏழும் பின்பட ஓடிடு மூடனை --- ஏழு உலகங்களும் பிற்படுமாறு ஆங்காங்கு ஓடிப் பிறந்து பிறந்து வருகின்ற மூடனாகிய அடியேன்,

     தூ அம் சுத்த அடியார் அடி சேர --- தூய்மையும் அழகும் வாய்ந்த பரிசுத்த அடியார்களுடைய திருவடியைச் சேர,

     நின் அருள் தாராய் --- தேவரீருடைய திருவருளைத் தருவீராக.

பொழிப்புரை


     தீதந் தித்திமி தீதக தோதிமி டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு சேசெஞ் செக்கண தோதக தீகுட என்ற ஒலியுடன் பேரி வாத்தியமானது முழங்கவும், ஆதிசேடன் மயங்கவும், கடலும் அண்டங்கள் யாவும் அஞ்சவும், அசுரர்கள் வாழ்ந்த மலைகளும், தீவுகளும், பொடியாகுமாறு, நெருப்பையுமிழ்கின்ற வேலாயுதத்தை விடுத்தருளிய மயில் வீரரே!

         பிரம தேவனுடைய அழகிய தலையில் குட்டி, நல்ல சிவபிரானுக்குச் சற்குருவாகி, அவருடைய திருச்செவியில் உண்மையை நாடும் பற்றற்றவர் பெறும் பொருளாகிய பிரணவத்தை உபதேசித்த முருகப் பெருமானே!

         (பலவகையான) வேடத்துடன் தினைப்புனஞ் சென்று சிறந்த வள்ளிநாயகியிடம் அன்பினால் பித்துக்கொண்டு மணந்து, தேவர்கள் பணிய வீரங்கொண்டு பழநி மலையில் எழுந்தருளிய பெருமிதம் உடையவரே!

         வாத நோய்கள், பித்த நோய்கள், மிடாவைப் போன்ற பெரிய வயிறு, ஈளைகள், சீதபேதி, பல்வலி, சன்னி, சூலநோய், மகோதரம், கண்ணோய், பெரிய மூலநோய்கள், குளிர் காய்ச்சல், காசநோய், மாறி மாறி வரும் வாந்தி முதலிய நோய்களோடும், தொண்ணூற்றாறு தத்துவக் கூட்டங்கள் சூழ, வஞ்சனையாளர்கள் பேராசைக்காரர்கள் சூழ, விசித்திரமான உடம்புடன் மூவாசை கொண்டு, நன்மையை ஒரு சிறிதும் உணராமல், மாயையைச் செய்கின்ற, களவும் பொய்யும் குடியிருக்கும் இந்த உடம்பே சுகம் என்று இவ்வுடம்பை விரும்பி, ஆடை அணிகலங்களுடன் உலாவி, ஏழு உலகங்களும் பிற்படுமாறு ஆங்காங்கு பிறந்து பிறந்து உழலும் மூடனாகிய அடியேன், தூய்மையும் அழகும் உடைய பரிசுத்த அடியாருடன் சேருமாறு உமது திருவருளைத் தந்தருளுவீராக.

விரிவுரை

வாதம் ---

அண்டவாதம், பட்சவாதம், கீல்வாதம், பீனசவாதம், முதலிய வாத நோய்கள்; பிடிவாதமாக வீடு தங்காமல் திரிந்து பலப் பல மகளிர் உறவு பூண்பார்க்கு எய்தும்.

பித்தம் ---

பித்தத்தால் வரும் மஞ்சள் காமாலை, மயக்கம், சுரம் முதலிய நோய்கள்.

மிடா வயிறு ---

மிடா-பானை; பானைபோல் வயிறு பருத்து அதனால் வரும் நோய்.
  
ஈளைகள் ---

கோழை மிகுந்து வரும் க்ஷயம், ஆஸ்துமா, இருமல் முதலிய நோய்கள்.

பற் சனி ---

பல் சனி - பல் நோய், சன்னி நோய்.

சூலை ---

வயிற்றில் கொடிய வேல் நுழைந்தது போல் குடல் சுருட்டிச் சுருட்டிப் புரள வரும் பொல்லாத நோய்.

மகோதரம் ---

வயிறு மிகவும் பெருத்து, இருக்கவோ நிற்கவோ முடியாதபடி துன்புறுத்தும் நோய்.

மாசங்கண் ---

மாசு அம் கண்; அங்கண் மாசு எனக் கொள்க. கண்ணோய்.

பெருமூல வியாதிகள் ---

ஆசனத் தொளையில் வரும் நோய்கள்; ரத்த மூலம்,  சீழ் மூலம், பவுத்திரம் முதலிய நோய்கள்.

குளிர் காசம் ---

குளிரால் உடம்பு நடுங்கும் குளிர் காய்ச்சல்; காசம், சுவாசகாசம், இளைப்பு, இழுப்பு முதலிய நோய்கள்.

தத்துவக்காரர் தொண்ணூற்றாறுவரும் ---

தொண்ணூற்றாறு தத்துவங்களுடன் கூடியது இவ்வுடம்பு. அதன் விவரம் வருமாறு.

ஆன்ம தத்துவம் 24, நாடி 10, அவத்தை 5, மலம் 3, குணம் 3, மண்டலம் 3, பிணி 3, விகாரம் 8, ஆதாரம் 6, தாது 7, வாயு 10, கோசம் 5, வாயில் 9, ஆக தொண்ணூற்றாறு தத்துவங்கள் (பூதம் 5, புலன் 5, ஞானேந்திரியம் 5, கன்மேந்திரியம் 5, காரணம் 4, ஆகிய 24- உம் ஆன்ம தத்துவம்)

சித்ர கபாயை ---

கபாய்-கவசம். உயிருக்கு கவசமான இந்த உடம்பைக் குறிக்கின்றது.

ஏதும் சற்று உணராமல் ---

பக்தி, ஞானம், ஜபம், தவம், தியானம் முதலிய நலங்களில் ஒன்றையும் சிறிதேனும் உணராமல் திரிபவர்.

சோரம் பொய்க் குடிலே சுகமாமென இதில் மேவி ---

களவும் பொய்யும் நிறைந்த இந்த அசுத்தமான உடம்பையே பரமசுகம் என்று கருதி வழிபாடுகள் ஒன்றும் இன்றி, காலந்தவறாதும், பிறருக்கு ஈயாமலும், வயிறு புடைக்க உண்டு, நியதியாக உறங்கி, வாணாளை வீணாளாக்கி மடிவர்.


தூசின் பொற்சரமோடு குலாவி ---

இந்த உடம்புக்கு அழகு செய்யுமாறு பட்டாடை பொன்னாபரணம் முதலியன அணிந்து மகிழ்ச்சியுடன் உலாவி உழன்று திரிவர்.

உலகேழும் பிற்பட ஓடிடு ---

ஏழு உலகங்களும் தனக்குப் பிற்படுமாறு ஒடியோடி அங்கங்கு பல்வேறு பிறப்பெடுத்து உயிர்கள் உழல்கின்றன.

தூவஞ் சுத்த அடியார் அடி சேர ---

தூ அம் சுத்த அடியார்-தூய அழகிய பரிசுத்த அடியார். அடியார் இணக்கமே பெறுதற்குரிய பேறு ஆகும். அடியார் உறவு முத்தி நலத்தை எளிதில் தரவல்லது.

வேதன் பொற் சிர மீது கடாவி---                 

கடாவுதல்-செலுத்தல், பிரணவப் பொருளறியாத பிரமனது தலையில் கரத்தைச் செலுத்தி ஓங்கி குமாரக் கடவுள் குட்டியருளினார்.

எட்ட ஒணாத அக் குடிலையின் பயன் இனைத்து என்றே
கட்டுரைத்திலன் மயங்கலும், இதன் பொருள் கருதாய்,
சிட்டி செய்வது இத் தன்மையதோ எனா, செவ்வேள்
குட்டினான், அயன் நான்குமா முடிகளுங் குலுங்க,       --- கந்தபுராணம்

பற்றிலர் பேறருளோதிய ---

பற்றற்ற பரமஞானிகள் பெறுகின்ற பொருள் பிரணவப் பொருளேயாம். அதனை முருகவேள் தந்தையாருடைய செவியில் உபதேசித்தருளினார். பெறு அருள்-பேரருள்.

வேஷங் கட்டி ---

முருகவேள் தன்னை நினைந்து தவஞ்செய்த தவக் கொடியாகிய வள்ளி பிராட்டியாருக்கு அருள்புரியும் பொருட்டும், அவருக்குப் பக்குவம் வரும் பொருட்டும், வேடனாகவும், வேங்கை மரமாகவும், விருத்த வேதியனாகவும், வளையல்காரச் செட்டியாகவும் வேஷங்கட்டிச் சென்றார்.

கருத்துரை
  
மயில்வீரா! பழநியாண்டவா! அடியாரோடு இணங்க அருள் செய்வாய்!
                 


No comments:

Post a Comment

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...